> குருத்து: January 2019

January 4, 2019

சூப்

தேநீர் கடைகள் தெருவிற்கு இரண்டு இருக்கின்றன. சூப், பருத்திப்பால் என மாற்றாக கிடைப்பது சிரமமாக தான் இருக்கின்றன.

மாலை வேளைகளில் அசைவ சூப் கூட சில கடைகளில், உணவகங்களில் கிடைத்துவிடுகின்றன. எனக்கு சில சமையல் பொருட்களில் ஒவ்வாமை இருப்பதால், அசைவ சூப் கடைகளில் குடிப்பதை நிறுத்திவிட்டேன்.

ஒருநாள் கோடம்பாக்கம் லிபர்டி பாலத்திலிருந்து, அம்பேத்கர் சிலைக்கு முன்பாக இடது பக்கம் வரும் வளைவில் ஒரு சூப் கடை இருக்கிறது.

வல்லாரை, மூலிகை, முருங்கை, வாழைத்தண்டு, காய்கறி என 10 வகை சூப்புகளில் தினம் மூன்று வகை என பட்டியலிட்டு விற்பனை செய்கிறார்கள். எனக்கு பிடித்தது மிர்த்தானியா.

சூப்புகளின் சுவை அருமை. உடன் சாப்பிட தரும் சிறு அரிசி முறுக்குகளும் தனிச்சுவை தான். மாலை நாளை நான்கு மணிக்கு மேல் கிடைக்கிறது. எப்பொழுதும் நான்கு, ஐந்து பேர் குடித்துக்கொண்டு இருப்பார்கள். சாண்ட்விச்சுகள் கூட கிடைக்கிறது. ஒருநாளும் நான் சாப்பிட்டதில்லை. இங்கு சூப் சாப்பிட்டால் எனக்கு ஒவ்வாமையும் ஏற்படுவதில்லை. ஒரு சூப்பின் விலை ரூ. 20.

ஒரு குடும்பாக கடையை நடத்தி வருகிறார்கள். ஒருநாள் போயிருந்த பொழுது, சூப் பரிமாறுகிறவரும் சூப் குடித்துக்கொண்டிருந்தார். கேசியர், சூப் ஊற்றித்தருகிறவர் என அந்த கடையில் இருப்பவர்கள் எல்லோரும் ஒருவித இறுக்கத்தோடு தான் இருக்கிறார்கள்.

எனக்கு என்ன பயம்னா அந்த பக்கம் போகும் பொழுதெல்லாம் சூப் அருந்துகிறேன். சூப் பாக்கெட்களிலும் விற்கிறார்கள். அதையும் வாங்கிப்போய் வீட்டில் குடிக்கிறோம். தொடர்ச்சியா இங்க சூப் குடிச்சா நாமளும் அவங்கள போல ஆகிவிடும்னு ஒரே சம்சயமாக இருக்கிறது. 

புத்தாண்டும் புதிய தீர்மானங்க‌ளும்!

உலகம் புதிய ஆண்டை வரவேற்பதற்கு தயாராகி கொண்டு இருக்கிறது. வாட்சப்பில் புத்தாண்டு வாழ்த்துக்களை ஒவ்வொரு நண்பர்களும், சொந்தங்களும் அனுப்பி வருகிறார்கள்.

பதின் பருவத்தில் இரண்டு ஆண்டுகள் பீர் அடித்து, உடம்புக்கு ஒத்துவராமல், பிறகு ஒரு புத்தாண்டில் ஒயின் குடித்த பொழுது உடம்பு சந்தோசமாய் ஏற்றுக்கொண்டது. அரை மயக்கத்தில், பயங்கர‌ உற்சாகத்தில் புத்தாண்டு ஆட்டம், பாட்டத்துடன், மக்களுடன் கொண்டாடியது மங்கலாய் நினைவுக்கு வருகிறது.

பிறகு, நமது 'சகவாசம்' சரியில்லாமல் போய், முற்போக்கு வட்டத்தோடு இணைந்து ஓவ்வொரு ஆண்டும் இறுதியிலும் புத்தக கடைகளுக்கு போய் தள்ளுபடி விலையில் புத்தகம் வாங்கியது எல்லாம் நினைவுக்கு வருகிறது.

இன்றைக்கு கூட தமிழகம் முழுவதும் புத்தக பதிப்பகங்களும், கடைகளும் தள்ளுபடி விலையில் புத்தகங்களை விற்பதற்கு அறிவிப்பு செய்திருக்கின்றன.

இதெல்லாம் காலமாற்றத்தில் நிறைய மாற்றங்கள் நடைபெற்றுகொண்டிருக்கிறது. ஆனால், எல்லா காலங்களிலும் புதிய ஆண்டில் தீர்மானங்கள் ஏற்பதும், சில மாதங்களில் அதெல்லாம் மங்கி, மண்ணாய் போவதும் பல ஆண்டுகள் நடந்துவருவது தான்!

பல சமயங்களில் தேர்வு எழுதிவிட்டு, எழுதியது சரியா? என்னென்ன தவறு செய்துள்ளோம் என வீடு வந்து சோதிக்கும் வழக்கம் எனக்கு இருப்பதில்லை. அது போல மனநிலைதான், கடந்த ஆண்டில் நமது செயல்பாடுகள் மீதான மதிப்பீடும், தவறுகள் குறித்த படிப்பினையும் மீதும்!

ஆகையால், எத்தனை கிண்டல், கேலிகள் இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல புதிய தீர்மானங்களை ஏற்போம்! அதை கண்ணாடி போல மாதம் ஒருமுறை பார்த்துக்கொண்டு, முழுசுமாய் நிறைவேற்ற சண்டை போடுவோம்!

பெருமழை நாளில் மகள்

சென்னையில் விடாமல் மழை பெய்துகொண்டிருந்தது. எல்லா இடங்களிலும் நீர் குளமாய் தேங்கியிருந்தது.

குழந்தை பிறப்பதற்கு மருத்துவர் குறித்த நாளும் நெருங்கி கொண்டிருந்தது. சுகப்பிரசவம் தான். சிக்கல் ஏதும் இல்லை என மருத்துவர் சொல்லியிருந்தார்.

திடீரென பனிக்குடம் உடைந்துவிட்டது. குழந்தையை உடனே வெளியே கொண்டுவரவேண்டும். ஆகையால் சிசேரியன் என சொல்லிவிட்டார்கள். பதட்டமாகிவிட்டது!

11.11.2006 மதியம் 1.28 மணியளவில் மகள் பிறந்தாள். துணைவியார் மயக்கத்தில் இருந்தார். குழந்தை உடம்பு முழுவதும் ஒரு மாவு அப்பியிருந்தது. பக்கத்து அறையில் தொட்டிலில் படுக்க வைத்திருந்தார்கள்.

முதன் முதலாய் மகளைப் பார்த்தேன். ஒருவித பரவசத்தில் இருந்தேன்.

வெளியே மழை விடாமல் பெய்துகொண்டிருந்தது. உள்ளேயும் பெய்துகொண்டிருந்தது!

Chicken Run (2000)

ஒரு கோழி பண்ணை. ஜிஞ்சர் என்ற புத்திசாலி கோழி தன் கூட்டத்தோடு தப்பி சுதந்திரமாக வாழ வேண்டும் என ஆசைப்படுகிறது. அதற்காக பல்வேறு வழிகளில் தப்ப முயற்சிகளை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது.

அந்த பண்ணையை நடத்துகிற பெண்மணி பேராசை பிடித்தவர். முட்டைகளை சேகரித்து சிறுக சிறுக பணம் சம்பாதிப்பது பிடிக்காமல் ஒரு எந்திரத்தை வரவழைத்து ஒரே நாளில் எல்லா கோழிகளையும் கொன்று மாமிச உணவாக மாற்றிவிட வேண்டும். அதன் மூலம் பெரும் பணம் கிடைக்கும் என அதற்கான எந்திரத்தை வரவழைக்கும் வேலைகளை செய்கிறார்.

அங்கிருந்து உடனடியாக தப்பிக்க வேண்டும். இல்லையென்றால் மரணம் என்ற சூழலில் எதேச்சையாக 'பறந்து' வந்து சேருகிறது ஒரு சேவல். 'தங்களுக்கு பறக்க கற்றுக் கொடு நாங்கள் தப்பிக்க வேண்டும் என கோழிகள் மன்றாடுகின்றன. பறக்க கற்றுக் கொண்டார்களா? அந்த பண்ணையில் இருந்து தப்பித்தார்களா? என்பதை ஏகப்பட்ட கலாட்டாக்களுடன் முழுநீள கதையில் சொல்கிறார்கள்.
*****

ஸ்டாப்மோஷன் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்பட வரிசையில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

ஒருமுறை மதுரை மீனாட்சி பவனில் சாப்பிட போயிருந்தோம். அங்கு சுதந்திரப் போராட்டம் குறித்து பல்வேறு கருப்பு வெள்ளை படங்களை அழகாக பிரேம் செய்து மாட்டி இருந்தார்கள்.

அங்கு காதல் பறவைகளை கூண்டில் அடைத்து வைத்திருந்தார்கள். அங்கு வைத்திருந்த குறிப்பு நோட்டில் "மனிதர்களின் சுதந்திரம் பற்றி பேசும் நாம் பறவைகளின் சுதந்திரம் பற்றி குறித்தும் கொஞ்சம் கவலைப்படலாம்" என எழுதி வைத்து வந்தேன்.

அடுத்த முறை போன பொழுது காதல் பறவைகளின் கூண்டை காணவில்லை. ஒரு தொட்டியில் நிறைய வண்ண வண்ண மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. பறவைகள் தப்பித்துக் கொண்டன மீன்கள் மாட்டிக்கொண்டன. 🙂

சுதந்திரத்தின் சுவை அறிந்தவர்கள் எல்லா சமூக அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுகிறார்கள். எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டேன் என்று வாழ்பவர்களுக்கு எடப்பாடியும் பன்னீருமே போதுமானவர்கள்.

Love, Rosie (2014)

’பிரியாத வரம் வேண்டும்’ பிரசாந்த் ஷாலினி போல ரோசியும் அலெக்ஸ்யும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். பால்யத்திலிருந்தே நண்பர்கள். பதின் பருவத்தில் இருவருக்குள்ளும் ஒரு ஈர்ப்பு வருகிறது. அலெக்ஸ் அதை வெளிப்படுத்துகிறான். ஆனால் ரோசி “நாம் இருவரும் நல்ல நண்பர்கள்” என சொல்லிவிடுகிறாள்.

பத்து வருடங்களுக்கும் மேலாக இருவர் மண வாழ்க்கையிலும் நிறைய கசப்பான அனுபவங்கள். இறுதியில் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதை முழு நீளக்கதையில் சொல்கிறார்கள்.
****

இந்திய மனங்களுக்கு இந்த படம் ஆச்சர்யமானது தான். பத்தே ஆண்டுகளில் இருவர் மண வாழ்க்கையிலும் எத்தனை மாற்றங்கள்? அதை எளிதாக கடந்து செல்வது போல காண்பிக்கிறார்கள். வளர்ந்த நாடுகளே என்றாலும், ஒவ்வொரு உறவின் முடிவிலும் வலி இருக்கத்தான் செய்யும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

காதலனுடான உறவில் கான்டம் பிரச்சனையில் குழந்தை பெற்றுகொள்ளும் நெருக்கடியில் மாட்டும் பொழுது, நமது குடும்பத்தின் மனநிலை அந்த பெண்ணை அதிகபட்சமாக தற்கொலை வரைக்கும் தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். அந்த குடும்பம் அவள் தவறை மன்னித்து குழந்தையையும் கவனமாக பார்த்துக்கொள்கிறார்கள். நமது சமூகம் நிறைய முன்னேறவேண்டும் என்பதை உணரமுடிகிறது.

திருமணம் ஆகாத உறவில், பெண் என்பவள் தனக்கு பிடித்த கல்வி, தொழில் என பலவற்றை இழக்கிறாள். ஆண்களுக்கு அந்த பாரங்கள் இல்லை என்பதையும் படம் சொல்லி செல்கிறது.

மண உறவுகள் கசந்து அதில் திசைவிலகல்கள், கொலைகள் வரை சென்றாலும், நமது சமூகத்தில் வாழ்வின் கடைசிவரை இழுத்துக்கொண்டு செல்கிறோம். அந்த சமூகத்தைப் பார்க்கும் பொழுது, ரெம்பவும் கசந்தால், பிரிவதும், அவரவர்களுக்கு பிடித்தமானவர்களோடு இணைந்து வாழ்க்கை செல்வது தானே சரி என்றும் தோன்றுகிறது! சரி தானே?

இந்திய கலாச்சாரம், பண்பாடு காப்பாற்றப்படவேண்டும் என விவாதத்திற்கு வந்துவிடாதீர்கள். நான் சொன்னதை கொஞ்சம் எதார்த்தமாய் யோசியுங்கள்.

இந்த படம் தமிழிலேயே கிடைக்கிறது. நண்பர் ஒருவர் பென் டிரைவில் தந்தார். ஒருமுறை நிச்சயம் பார்க்கலாம்.

மழை குன்று

மதுரை மாவட்டத்தில் பேரையூர் அருகில் ஒரு கிராமம். கோயில் திருவிழா சமயத்தில் நண்பனின் ஊருக்கு 15 பேருக்கு மேல் சென்றிருந்தோம்.

அது ஒரு குன்று. மழையோடு வேகமான காற்றும் கைகோர்த்திருந்தது. எங்கும் சிறு சிறு செடிகள் தான். மரங்கள் எதுவும் இல்லை. ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது.
கொடுக்கப்படும் இன்ஸ்டண்ட் தலைப்பில் ஒவ்வொருவரும் மூன்று நிமிடம் உரையாற்றவேண்டும். பேசுகிறவருக்கு கதகதப்பாக இருக்கும். கொடுக்கப்பட்ட காலத்தை விட அதிகமாக பேசுவார். அமர்ந்து கேட்கும் மற்றவர்களுக்கு குளிர் வாட்டும். அவர்களோ சீக்கிரம் முடி! என விரட்டுவார்கள்.

எல்லோரும் பேசி முடித்த பொழுது, மழை ஒருவாறு நின்றிருந்தது!

மழை நினைவுகள் - 1

மூன்றாவது வகுப்பு பயணம் (1969)

வங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தான் பிறந்த குக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் ஊர்களைத் தவிர வேறு ஊர்களைப் பார்த்ததேயில்லை. சண்டையும், சச்சரவுகளோடு வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். ஆகையால், அவர்களுக்கு பரந்த இந்தியாவை அறிமுகப்படுத்தப்படவேண்டும் என நினைக்கிறார். அதற்கான பயண ஏற்பாட்டை செய்கிறார். அவரோ நோயில் இரண்டு மாதத்தில் இறந்துவிடுவார். இறந்தும்விடுகிறார்.

அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்றும்விதமாக 44 பேரை அழைத்துக்கொண்டு கிளம்புகிறார்கள். சாப்பாடு, உடல்நிலை பிரச்சனை என பல சோதனைகளை எதிர்கொண்டு இந்தியா முழுவதும் சுற்றி, பல அனுபவங்களை பெற்று வேறு மனிதர்களாக தங்கள் ஊர் வந்து சேர்கிறார்கள்.

அவர்களுடன் பயணித்து இந்த அனுபவங்களை எழுத்தாளர் ஹூதர் வுட் எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தை எஸ். இராமகிருஷ்ணன் அருமையாக அறிமுகப்படுத்தி எழுதியுள்ளார்.

இப்பொழுது இதைப் படிக்கலாம் என இணையத்தில் தேடினால், அமேசானில் விலை ரூ. 20319. தள்ளுபடி போக விலை ரூ. 6786. இலவசமாக பிடிஎப் கிடைக்குதா என தேடினால் கிடைத்தது. நான் படிக்க துவங்கிவிட்டேன். உங்களுக்கும் அறிமுகப்படுத்தலாமே என யோசித்து இந்த பதிவு. சுட்டி எல்லாம் கேட்காதீர்கள். கூகுளில் தேடினாலே கிடைக்கிறது!

http://www.sramakrishnan.com/?p=2870&fbclid=IwAR2HCoeyozJBDUcQi-dUZns6cgwbKPqQ6LDY_FyFd4-Y9lAvTQ91ENgxakc