> குருத்து: August 2022

August 22, 2022

சென்னை : இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!


மதுரையை சுத்திய கழுதை வேறு எங்கும் போகாது என்பார்கள். முப்பது வயது வரை மதுரையில் தான் சுற்றிக்கொண்டிருந்தேன். அப்படியே இருந்துவிடுவேன் என நம்பிக்கொண்டிருந்தேன். பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்து சேர்ந்தேன்.


சிலர் சென்னை முதலில் வாட்டும். பிறகு நல்ல வாழ்க்கை தரும் என்கிறார்கள். வந்தநாள் முதல் இன்றைய நாள் வரை எப்பொழுதும் வாட்டியதேயில்லை. நன்றாகவே கவனித்துக்கொண்டது. இந்த மண் எனக்கு வாழ்வையும், நிறைய நல்ல தோழர்களையும், மனிதர்களையும், சொந்தங்களையும் தந்திருக்கிறது.

பிறந்த ஊர் பெருமையெல்லாம் பேசுவதில்லை. ஏதோ ஒரு வார்த்தையில், பேசும் தொனியில் யாரேனும் உற்றுப்பார்த்து சொந்த ஊரை சொல்லி கேட்கும் பொழுது, மண்டையாட்டுவதோடு சரி. தொழிலாளிக்கு வாழும் ஊர் தான் சொந்த ஊர். ஆக சென்னை தான் நமக்கு சொந்த ஊர்.

383 வயது. வந்தவர்களை எல்லாம் சென்னை வரவேற்கிறது. வாழவைக்கிறது. அத்தோடு நல்ல காற்று, நல்ல தண்ணீர், நல்ல உணவு தர கொஞ்சம் திணறித்தான் போகிறது. ஒரு மனிதன் உண்ணும் உணவு என்பது செரித்து, சத்துக்களாக மாறி, உடல் முழுவதும் சீராக சென்று சேரவேண்டும். அது தான் ஆரோக்கியம். அது தான் வளர்ச்சி. சத்துக்கள் எல்லாம் தோள்பட்டையில் மட்டும் சேர்ந்தால், அதன் பெயர் வளர்ச்சி அல்ல! கட்டி. உடனே அறுவைச் சிகிச்சை செய்து சரி செய்யப்படவேண்டும்.

அது சென்னையின் பிரச்சனையில்லை. ஆள்பவர்களின் பிரச்சனை, பின்னால் இருந்து ஆட்டுபவர்களின் பிரச்சனை. அதனால் தான் சென்னையில் வாழ்ந்த பூர்வகுடிகளை, அதன் அஸ்திவாரத்திற்கு உழைக்கிற உழைக்கும் மக்களை நகருக்கு வெளியே தூக்கி எறிகிறார்கள். நாம் எப்பொழுதும் ஆளப்படுகிறவர்களின் பக்கம் நின்று தோள்கொடுப்போம். நம்ம சென்னையை நாம் பாதுகாப்போம்.

சென்னைக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்
!

August 21, 2022

யானை டாக்டர் தெரியுமா?அன்றைக்கு வேலை முடிந்து வீட்டுக்கு போனதும், தன்னுடைய பாடப்புத்தகத்தில் ‘யானை டாக்டர்” கதை இருப்பதை என் மகள் இலக்கியா சொன்னாள்.


அவள் எப்பொழுதும் கட கடவென பேசுவதில்லை. “இந்தக் கதையை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? யார் எழுதியது?” என மெதுவாய் துவங்குவாள்..

இலக்கியான்னு பேர் வைச்சியே! உனக்கு எவ்வளவு இலக்கியம் தெரியும்?ன்னு சோதிப்பது போல இருக்கும் அந்த கேள்விகள்.

”இந்தக் கதையை கேள்விப்பட்டிருக்கிறேன். மிகவும் புகழ்பெற்ற கதை. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியது. இப்படி கேள்விப்பட்டு, நழுவிப்போன கதைகளில் இதுவும் ஒன்று!” என்றேன்.

அந்த சிறுகதை பாடப்புத்தகத்தில் நான்கு பக்கங்களை தாண்டவில்லை. அதுவும் கொட்டெழுத்துக்களில் இருந்தது.

”ஜெயமோகன் இயல்பில் நிறைய எழுதுகிறவர். இவ்வளவு சின்னதாய் எழுத வாய்ப்பே இல்லை இலக்கியா” என்றேன்.

உடனே புத்தகத்தை எடுத்து பார்த்தால், இறுதி வார்த்தையாக சுருக்கப்பட்ட வடிவம் என எழுதப்பட்டிருந்தது. ஜெயமோகன் நம்ம நம்பிக்கையை பொய்த்துபோய்விட செய்யவில்லை.

வீட்டு நூலத்தில் இருந்த ஜெயமோகனின் ஒரு சிலப்புத்தகங்களில் இதுவும் இருந்தது. அன்றிரவு படிக்க துவங்கிவிட்டேன். இலக்கியாவிற்கு படிக்க சொன்னால், தேர்வு என தப்பிப்பாள்.

இணையத்தில் தேடினேன். நிறைய பேர் அந்த கதையை வாசித்து யூடியூப்பில் வைத்திருந்தார்கள். அதில் பவா செல்லத்துரை 45 நிமிடம் இந்தக் கதையை ஒரு அரங்கில் பேசியிருந்தார். இருவரும் கேட்டோம்.

டாக்டர் K என செல்லமாய் அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி. கதையை படிக்க படிக்க ’யானை டாக்டர்’ மனதில் ஆழமாய் பதிந்துவிட்டார். காட்டின் மீதான பிரியமும் கூடிவிட்டது. படிக்க படிக்க…. இப்பொழுது அவர் இல்லை. அவர் இடத்தை யாரால் நிரப்பமுடியும்? வாய்ப்பே இல்லையே என கவலை மிகுந்துவிட்டது.

விலங்குகளுக்கான மருத்துவராய், வீட்டு விலங்குகள் அல்ல! காட்டு விலங்குகளுக்கான மருத்துவராய் வாழ்ந்திருக்கிறார். அவருடைய வாழ்வில் தொடர்ந்து செயல்பட்டதில் யானைகளுக்கான பிரத்யேக மருத்துவராய் மாறிவிட்டிருக்கிறார்.

அவருடைய மருத்துவ அனுபவமும், காட்டின் அனுபவமும் நீண்ட நெடியது. நிறைய எழுதியிருக்கிறார். அவருடைய பரிந்துரைகளில் ஒன்று தான் கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளை வருடத்திற்கு ஒருமுறை புத்துணர்ச்சி முகாம் ஏற்பாடு என்கிறார்கள். அவரைப் பற்றி இன்னும் நிறைய தேடி தெரிந்துகொள்ளவேண்டும்.

அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியவர். படியுங்கள். பவா செல்லத்துரை உரையை கீழே சுட்டியில் தருகிறேன். நிச்சயம் கேளுங்கள்.

https://www.youtube.com/watch?v=ZR_Xmckmet8

She Hulk (2022) Attorney at Law - TV சீரிஸ்


முதல் சீசனின் முதல் அத்தியாயம்

ப்ரூஸ்ஸும், வழக்கறிஞராக இருக்கும் அவனின் உறவுக்கார பெண்ணும் ஒரு காரில் பயணிக்கிறார்கள். தீடீரென கார் விபத்துக்குள்ளாகுகிறது. இதில் ப்ரூஸ்ஸூன் ரத்தம் அவள் உடம்பிலும் கலந்துவிடுகிறது. அவளும் ஹல்காகிவிடுகிறாள்.

ஒரு ஹல்க்காக இருப்பதற்கு எத்தகையை பயிற்சிகள் தேவைப்படும். நன்மை, தீமை என்ன என்பதை அவளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். தான் எதிர்கொண்ட எல்லா சிக்கல்களையும் அவளும் எதிர்கொள்ளக்கூடாது என அவளிடம் சொன்னால்… அவள் ”ஆத்தா வைய்யும்! காசு கொடு” என்பது போல ஆளை விடுப்பா! இயல்பு வாழ்க்கைக்கு போறேன் என அடம்பிடிக்கிறாள். ”சரி போய்த்தொலை! உதவி தேவைப்பட்டால் அழை” என்கிறார்.

இது தான் முதல் அத்தியாயத்தின் சாரம். அதை சீரியசாக கொண்டு செல்லாமல், நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள். இனி எப்படி சுவாரசியமாக கொண்டு செல்லப்போகிறார்கள் என பார்ப்போம்.

disney +ல் வெளியாகி இருக்கிறது. தமிழ் டப்பிங்கிலும் இருக்கிறது.

August 18, 2022

சரியான முட்டைகள் (Perfect Eggs)அவளின் மூன்று பிள்ளைகளில் மூத்தவன் அவன். பத்து வயது தாண்டாதவன். அந்த பெட்டியில் இருக்கும் மக்களின் மனுக்களில் ஒன்றை எடுத்துப் பார்க்கிறான்.

சோபாவில் அயர்ந்து படுத்திருக்கும் அவனின் அம்மா “அதெல்லாம் முக்கியமான ஆவணங்கள். கவனம்!” என்கிறாள்.

அதில் உள்ளதை படித்து பார்த்துவிட்டு, “இவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிற பையனுக்கு என் வயது தானேம்மா ஆகுது!” என்கிறான் சன்னமாய்!

ஆமாம் என்பதாய் தலையாட்டுகிறாள்.

அந்த ஆவணத்தை எடுத்த இடத்திலேயே பொறுப்பாய் வைத்துவிட்டு…. “சரி நான் கடைக்கு போயிட்டு வருகிறேன். முட்டைகள் வாங்கிவரவா?” என்கிறான்.

”ஆமாம்! வாங்கிட்டு வா!” என சொல்லிவிட்டு… அவன் போன பிறகு, தனக்கு தானே சொல்லிக்கொள்கிறாள். “Perfect Eggs”

ஒரு கார்ப்பரேட் நிறுவனம் செய்த பெரும் அலட்சியத்தால், அந்த தொழிற்சாலை இருந்த பகுதியில் வாழ்ந்த பெரும்பாலான மக்களுக்கு பலவிதமான அபாயகரமான நோய்கள் தொற்றிக்கொள்கின்றன. மக்கள் கடுமையாக அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதை ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்யும் நாயகி தற்செயலாய் கண்டுபிடிக்கிறார்., அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து எல்லோருக்கும் இழப்பீடு வாங்கித்தருவது தான் Erin Brockovich  கதை.

அவளின் மூன்று பிள்ளைகளில் மூத்தவன் அவன். பத்து வயது தாண்டாதவன். அந்த பெட்டியில் இருக்கும் மக்களின் மனுக்களில் ஒன்றை எடுத்துப் பார்க்கிறான்.

சோபாவில் அயர்ந்து படுத்திருக்கும் அவனின் அம்மா “அதெல்லாம் முக்கியமான ஆவணங்கள். கவனம்!” என்கிறாள்.

அதில் உள்ளதை படித்து பார்த்துவிட்டு, “இவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிற பையனுக்கு என் வயது தானேம்மா ஆகுது!” என்கிறான் சன்னமாய்!

ஆமாம் என்பதாய் தலையாட்டுகிறாள்.

அந்த ஆவணத்தை எடுத்த இடத்திலேயே பொறுப்பாய் வைத்துவிட்டு…. “சரி நான் கடைக்கு போயிட்டு வருகிறேன். முட்டைகள் வாங்கிவரவா?” என்கிறான்.

”ஆமாம்! வாங்கிட்டு வா!” என சொல்லிவிட்டு… அவன் போன பிறகு, தனக்கு தானே சொல்லிக்கொள்கிறாள். “Perfect Eggs”

ஒரு கார்ப்பரேட் நிறுவனம் செய்த பெரும் அலட்சியத்தால், அந்த தொழிற்சாலை இருந்த பகுதியில் வாழ்ந்த பெரும்பாலான மக்களுக்கு பலவிதமான அபாயகரமான நோய்கள் தொற்றிக்கொள்கின்றன. மக்கள் கடுமையாக அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதை ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்யும் நாயகி தற்செயலாய் கண்டுபிடிக்கிறார்., அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து எல்லோருக்கும் இழப்பீடு வாங்கித்தருவது தான் Erin Brockovich  கதை.

பொது நீதிக்காக போராடுபவர்கள் தனக்கென எந்தவித பொருளாதார நலன்களையும் எதிர்பார்க்காமல், தங்களது சொந்த நலன், சொந்த பிள்ளைகளை கவனித்துக்கொள்ள முடியாமல் பாதிக்கப்படுவது தெரிந்தும் தெருக்களில் இறங்கி போராடியும், நீதிமன்றங்களில் பல ஆண்டுகள் போராடிக்கொண்டும் இருக்கிறார்கள். பொதுத்தளத்தில் ஜனநாயக உணர்வுகொண்டவர்கள், மனிதாபிமானம் கொண்டவர்கள் அவர்களை புரிந்துகொள்கிறார்கள். அவர்களை அங்கீகரிக்கிறார்கள். பாராட்டவும் செய்கிறார்கள். தங்களால் சாத்தியமான அளவிற்கு அந்த போராட்டங்களுக்கு துணையும் நிற்கிறார்கள்.

ஆனால், இப்படி போராடுபவரின் சொந்த குடும்பம் பொதுநலன்களுக்காக போராடுவது குறித்து பலருடைய குடும்பத்தினர் புரிந்துகொள்வதில்லை என்பது பெரிய துயரம். அதனால் தாங்கள் இழக்கும் இழப்புகளை பெரிதாக நினைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கென ஒரு வாழ்க்கை கண்ணோட்டம் இருக்கும். அதெல்லாம் சீர்குலைந்ததாக கவலைப்படுகிறார்கள். அதனால் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் வெறுப்பை காட்டுகிறார்கள்.

நாயகியும் இப்படி சமூக விசயங்களில் ஆர்வத்தோடு இருப்பவளில்லை. கணவன் இல்லை. மூன்று பிள்ளைகள். மூவரும் சிறியவர்கள். தன்னை நிரூபிப்பதற்காக போராடுபவள். அந்த நிறுவனம் செய்த தவறை கண்டுப்பிடித்து, பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசி, உறவாடும் பொழுது, தான் செய்வது பெரிய வேலை என்பதை புரிந்துகொள்வாள். மக்கள் அவளை மரியாதையுடனும், அன்புடன் நடத்துகிறார்கள். அதனால், அதில் எத்தனை சோதனைகள் வந்தாலும் எதிர்கொள்கிறாள்.

அந்த நிறுவனம் செய்த தவறை நிரூபிப்பதற்கான கடுமையான வேலைகளுக்கு நடுவே தான் அந்தக் காட்சி வந்துபோகும். ”Perfect Eggs” என சொல்வதில்… நீதிக்காக போராடும் தன் போராட்டத்தை தன் மகன் கொஞ்சம் புரிந்துகொண்டான் என்பதில் தான் அவளுக்கு அத்தனை ஆசுவாசம். அதே போல வழக்கில் வெற்றி பெற்ற பிறகு, அந்த மகிழ்ச்சியான செய்தியை சொல்வதற்கு கவனமாக தன் (புதிய) துணைவரையும் அழைத்துக்கொண்டு செல்வாள். பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி அவளை அன்புடன் வரவேற்பதும், வழக்கில் ஜெயித்த விவரத்தை சொன்னதும், பெரு மகிழ்ச்சி கொள்வதும், கண் கலங்குவதும், அவளை அன்போடு கட்டிப்பிடித்து பாராட்டுவதும், அவர்களை உபசரிப்பதும் அருமையாக இருக்கும். பொது வேலைகளை செய்வது போலவே, நமது குடும்பத்தினருக்கும் நாமே புரிய வைப்பதற்கான வேலைகளையும் செய்யவேண்டும்.

மற்றபடி படம் குறித்து குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்….

பசிபிக் கேஸ் அண்ட் எலக்ட்ரிக் நிறுவனம், ஹிங்க்லியில் உள்ள தனது உற்பத்தி நிலையத்தின் கொள்கலன்களைக் குளிர்விப்பதற்காகப் பெருமளவு தண்ணீரைப் பயன்படுத்தி வருகிறது. ஆனால் பிரச்னை இதுவல்ல. அந்தக் கொள்கலன்கள் துருப்பிடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, குரோமியம் என்ற கனிமம் பயன்படுத்தப்பட்டிருப்பதுதான். அதுவும் மனிதனுக்கு விஷமாக இருக்கக் கூடிய ஹெக்சாவாலண்ட் குரோமியமான குரோமியம் 6 பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஹெக்சாவாலண்ட் குரோமியம் கலந்த தண்ணீர் சுத்திகரிக்கப்படாமல் மீண்டும் நிலத்தில் கொட்டப்பட்டதன் விளைவு ஹிங்க்லி நகரம் முழுவதும் உள்ள தண்ணீர் விஷமாக மாறியிருக்கிறது. இந்தத் தண்ணீர்தான் அங்குள்ள மக்களுக்கு ஆஸ்துமா, குழந்தையின்மை, மலட்டுதன்மை, புற்றுநோய் என அனைத்து நோய்களும் வந்ததற்கு காரணம். இது பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் இருந்ததால் ஏறக்குறைய 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதோடு, அந்த நோயைக் காரணம் காட்டியும், அவர்களது ஏழ்மையைக் காரணம் காட்டியும், பணம் கொடுப்பதாகச் சொல்லி அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

90களில் நடந்த உண்மை நிகழ்வு. அமெரிக்காவில் அந்த காலக்கட்டத்தில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்த்து போராடி வெற்றி பெற்று, 28 பில்லியன் டாலர் தொகை மக்களுக்கு இழப்பீடாக பெற்ற புகழ்பெற்ற வழக்கு. அதுவரை அவ்வளவு பெரும் தொகை அதற்கு முன்பு கொடுக்கப்பட்டதில்லை. அதை அடிப்படையாக கொண்டு தான் Erin Brockovich  2000ல் வெளிவந்தது. எரின் படம் பார்த்துவிட்டு, 98% உண்மைக்கு நெருக்கமாய் எடுத்துவிட்டார்கள் என சான்றிதழ் தந்திருக்கிறார். பல விருதுகளை வென்ற படம். நெட் பிளிக்சில் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் இருக்கிறது. அவசியம் பார்க்கவேண்டிய படம்.

இந்த ஆலை, விஷம், மக்கள் கடுமையாக பாதிப்பு, போராட்டம், நீதிமன்றம் என எல்லாவற்றையும் படித்தால், நம் ஊரிலும் இப்படி ஒரு ஆலை இருப்பது நினைவுக்கு வரும். ஆட்சியில் இருப்பவர்கள் எத்தனை ஆதரவாக இருந்தாலும், மக்கள் விடாப்பிடியாக போராடினால் நிச்சயம் நிரந்தரமாய் மூட வைக்கமுடியும். இழப்பீடும் பெறமுடியும்.


August 15, 2022

75வது ”சுதந்திர” தினம் : சில குறிப்புகள்


ஒரு பக்கம் கொரானா துரத்தியது.

இன்னொரு பக்கம் அரசு
வேடிக்கைப் பார்த்தே கொன்றது.

சுதந்திரதினக்கொண்டாட்டங்களில்
அரசு பரபரவென இருக்கிறது.
சீழ்ப்பிடித்த புண்களை
மறைக்கப் பார்க்கிறது.

அவர்கள் வசதியாய் மறந்து போகலாம்.
நாம் மறக்ககூடாது.
நினைவுப்படுத்திக்கொண்டே இருப்போம்.

ராம்கிர்பால். 65 வயது.
மும்பை துவங்கி
உத்திரபிரதேச காசிலாபாத் வரை
1600
கிமீ தூரம் நடந்தே கடந்தார்.
பிறந்த மண்ணை தொட்டதும்
கீழே விழுந்துவிட்டார்.
சோதித்ததில் செத்துவிட்டார்.

ஆசிப். 22 வயது.
கேரளாவில் செங்கல்சூளை தொழிலாளி.
வேலையும் இல்லை; சோறுமில்லை.
ஊருக்குப்போக வழியும் இல்லை.
தன்னைத்தானே கொன்றுவிட்டான்.
மேற்குவங்கம் முர்ஷிடாபாத் வரை
2900
கிமீ ஆம்புலன்சில் சொந்த ஊரை அடைந்தான்.
ஊர்க்காரர்கள் வசூலித்து
1,30,000
கொடுத்தார்கள்.

 அந்த குட்டிப்பெண் ஜோதி

பெருமைமிகுதலைநகர் தில்லியில்
ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.
காலில் அடிப்பட்ட அப்பாவை வைத்து
1200
கிமீ பயணித்து
பீகாரின் தர்பாங்காவை
ஏழே நாளில் வந்தடைந்தாள்.

அம்ரித் 24 வயது இளைஞன்.
மோடியின் பெருமைமிகு குஜராத்தில் இருந்து
யோகி ஆதித்யநாத்தின் உத்திரப்பிரதேசம்
பஸ்தி மாவட்டம் வரை
1460
கிமீ பயணிக்கவேண்டும்.
மத்திய பிரதேசம் அடைந்த பொழுது
சோர்வானான்.
கோவிட்டுக்கு பயந்து
வழியிலேயே இறக்கிவிடப்பட்டனர்.
நண்பனின் தோளில்
அரை மயக்கத்தில் சாய்ந்திருந்த படம்
வைரலான பொழுது
அம்ரித் இறந்துவிட்டான்.

சாலையில் சென்றால்
போலீசு உதைத்தார்கள்.
முகாம்களில் வதைத்தார்கள்.
கஞ்சியோ, சாவோ
சொந்த ஊரில் என
தண்டவாளங்களிலே நடந்தார்கள்.
சோர்வான பொழுது தூங்கினார்கள்.
கோவிட் சிறப்பு ரயில்
எல்லோரையும்
நிரந்தர நித்திரையில் ஆழ்த்திவிட்டது.

இவையெல்லாம்
பல லட்சக்கணக்கான துயர கதைகளில்
ஊடகங்களில் வெளிவந்தவை.

பேரரசரும் அவரது சகாக்களும்
வேடிக்கைப் பார்த்தே கொன்றார்கள்.
மன்னர்கள் அமைதி காத்தார்கள்.
நடப்பவர்களை
தடுத்து நிறுத்தவா முடியும்?” என
மைலார்டுகளின் குரல் எதிரொலித்தது.

அவர்கள் வசதியாய் மறந்து போகலாம்.
நாம் மறக்ககூடாது.
நினைவுப்படுத்திக்கொண்டே இருப்போம்.

கொரானாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்தார்கள்.
நின்று கொல்லும் அரசுக்கு?

இசையில் ஒரு சந்தேகம்!


காலையில் "கன்னியாகுமரி" என தெலுங்கு பாடலை கேட்டேன். நல்ல ஜாலியான பாட்டு. இளையராஜா இசையமைத்து இருக்கிறார். அந்த பாட்டின் இடையே வரும் ஒரு இசையை தமிழில் எங்கோ கேட்டிருக்கிறேன் என நினைவு சொல்லியது. அது மாதிரி வந்து, பிறகு வேறு ஒன்றானதாக மாறியது போலவும் இருந்தது.

ஒரு கட்டுரை எழுதுகிறோம். போன வருடம் ஒரு கட்டுரையில் என்ன வார்த்தைகள் எழுதினோம், மூன்று வருடங்களுக்கு முன்பு என்ன எழுதினோம் என்பதும் மறந்துவிடுகிறது. இன்று எழுதும் பொழுது, ஒரு குறிப்பிட்ட விசயம் குறித்து எழுதும் பொழுது பழைய வார்த்தைகளோ, ஒரு பத்தியோ கூட வரலாம்.
இளையராஜா 40 வருடங்களுக்கு மேலாக இசையமைத்து வருகிறார். இயக்குநர் சுகா இளையராஜாவோடு நெருங்கி பழகுகிறவர். சுகா இளையராஜாவுடன் பேசும் பொழுது, ஒரு ராகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படி பாடல் இசைத்து இருக்கிறீர்கள் என சில பாடல்களை சொல்லும் பொழுது, அப்படியா? என கூலாக கேட்டிருக்கிறார்.
மறக்காமல் இருந்தால், அதை தவிர்த்து விட்டு வேறு மாதிரி இசையமைத்துவிடலாம். அல்லது அதற்கென ரிக்கார்ட் செய்து வைத்திருந்தால், சரிப்பார்த்து கொள்ளலாம். மறந்து போனால், பழைய ரிக்கார்டை கேட்காமல் போனால் ஏற்கனவே இசையமைத்து போலவே இசையமைத்து விடக்கூடும் அல்லவா! இப்படி நேராமல் எப்படி சரி செய்து கொள்கிறார்கள்?
போன வருடம் இசையமைத்து, பாடல் ஹிட்டாகி, அடுத்த வருடமே அதே டூயூனை இசையமைக்கிற ஆட்களும் நம்மிடத்தில் இருக்கிறார்கள். அவர்களை இந்த கேள்வியில் இருந்து தவிர்த்துவிடலாம்.

***

முகநூலில் இப்படி ஒரு கேள்வி கேட்டதற்கு, ஒருவர் பதில் கீழ்க்கண்டவாறு பதில் அளித்து இருந்தார். பொருத்தமான பதில் தான்.

இல்லை...அவர் மறந்துவிடுகிறார் (அதுதான் இயல்பு) என்பதை, அவருடன் பழகிய பலரும் கூறியிருக்கினறனர். கங்கை அமரன் அவர்களும் இதைக் குறிப்பிட்டதுண்டு. அமர் அவர்களுடைய இசையமைப்பில் வெளியான பல பாடல்களைத் தன்னுடையதுதானோ என்று கேட்டு, அமர் அவர்கள் அதை மறுத்து அவருக்கு விளக்கம் தந்த சூழல்களும் உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கனவே போட்ட சில இசைத்துணுக்குகளின் சாயல் பலபாடல்களில் நாமே கேட்டிருப்போம். அது ஆயிரக்கணக்கான பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைப்பில் ஈடுபட்டுள்ளவருக்கு இயல்பானதுதான். ஹாலிவுட் படங்களில் கவனித்துப்பார்த்தால், எல்லாப் படங்களின் பின்னணி இசையும், பல காட்சிகளில், கிட்டத்தட்ட ஒன்றுபோலவே தோன்றும். இத்தனைக்கும் அங்கு ஒரு இசையமைப்பாளர் வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களைத்தான் செய்கின்றனர். இசைஞானிக்கு அடுத்து நான் பெரிதும் விரும்பும் பின்னணி இசை ஜேம்ஸ் ஹா(ர்)னர் அவர்களுடயது. தீம் இசையில் மன்னன். கேட்டவுடன் என்ன படம் என்பதைக் கூறிவிடலாம். படங்களின் எண்ணிக்கையோ இசைஞானியுடன் ஒப்பிடுகையில் வெகுசொற்பம். ஆனாலும் இந்த ரிப்பிட்டிஷன் நன்றாகத் தெரியும். இத்தனைக்கும் பெரிய இசைமேதை. அத்துடன் ஒப்பிடுகையில் இசைஞானியின் படங்களின் எண்ணிக்கை மற்றும் இந்த ரிப்பிட்டிஷனின் விகிதம் (ரேஷியோ) மிகமிகக் குறைவு என்றுதான் கொள்ளவேண்டும்.

இசைஞானியே குறிப்பிட்டதுபோல, "ஏழு ஸ்வரங்களுக்குள்ளாகத்தான் நாங்கள் பயணப்படமுடியும். அவற்றை வெவ்வேறு காம்பினேஷன்களில் புதிதாக உருவானதைப்போல ஒரு தோற்றத்தை உருவாக்கி உங்களை ஏமாற்றுகிறோம்" என்பதுதான் யதார்த்தமும்கூட. உதாரணத்துக்கு எம்எஸ்வி மற்றும் தான் இசையமைத்த பழைய பாடல்கள் எப்படி வேறொரு பாடலாக உருக்கொண்டன என்பதை விளக்கியும் இருக்கிறார்.

இந்த "மறந்துவிடுவது" என்கிற அம்சத்தை வலுவாக்கும் விதமாக இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாம். 80களின் ராஜா திரும்ப வரமாட்டாரா எனும் ஏக்கம் நான் உட்பட அவரது ரசிகர்களில் பலருக்கும் உண்டு. நான் முதலில் நினைத்திருந்தது, ட்ரெண்ட் மாறி இசையமைத்தாலும் 70, 80, மற்றும் 90களின் ராஜா வெர்ஷன் அவருக்குள் அப்படியே இருக்கும் என்றே. ஆனால் அது உண்மையில்லை என்பதை அவருடைய இசையமப்பில் வெளியான "Gundello Gothaari" (Telugu) திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் நிறூபித்தன. 80களின் கதையம்சம். ஆனால் இசை அவரது 80களின் சாயலில் அமையவில்லை. அவரே பின்னாளில் ஒரு பேட்டியில் இதைக் குறிப்பிட்டிருந்தார் "அந்த காலகட்ட இசை போனது போனதுதான். திரும்ப வராது. கிடைக்காது".
- Chandrasekar

தேஜாவு (2022) ஒரு பார்வை!


ஒரு எழுத்தாளர் தான் எழுதுவதெல்லாம் ‘நிஜத்தில்’ அச்சுபிசகாமல் நடக்கிறது. அதனால் தன்னை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்கள். தனக்கு பாதுகாப்பு வேண்டும் என போலீசிடம் கோருகிறார். அவர் ஏதோ உளறுகிறார் என அலட்சியம் செய்கிறது.


அவர் எழுதியது போலவே தமிழகத்தின் டிஜிபியின் மகள் கடத்தப்படுகிறாள். எழுத்தாளர் மீதே சந்தேகம் வருகிறது. தேடி வந்து அவரை கைது செய்து உண்மையை சொல்ல வைக்க முயல்கிறார்கள். தேர்தல் நேரம் என்பதால், ‘எந்தவித’ களேபரமும் நடந்துவிடக்கூடாது என்பதில் அமைச்சர் போலீசுத்துறையை எச்சரிக்கை செய்திருக்கிறார்..

ஆகையால், மகள் கடத்தப்படவில்லை என ஊடகத்திடம் தெரிவித்துவிட்டு, ஒரு போலீசு அதிகாரியான நாயகனை வெளிமாநிலத்தில் இருந்து வரவழைக்கிறார். அவர் மெல்ல மெல்ல நூல் பிடித்து அந்த கடத்தலை ஆராய்ந்தால், அதன் பின்பு ஒரு பெரிய அதிர்ச்சியான சம்பவம் சம்பந்தப்பட்டிருக்கிறது. பிறகு என்ன ஆனது என்பதை திரில்லராக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நாட்டில் சட்டத்தை மதிக்காத ஆட்கள் முதலில் யார் என பட்டியலிட்டால், குற்றவாளிகள் முதலில் வருவார்கள் என உங்கள் மனதில் தோன்றினால், அழித்துவிடுங்கள். முதலில் போலீசு தான் அதில் முதல் இடம் பிடிக்கும். சட்டம் எல்லாம் மக்களுக்கு தான். தங்களுக்கு இல்லை என்பதை உண்மையிலேயே நம்புவது அவர்கள் தான். அதனால் தான் சட்டம் என்ன எழுதி வைத்திருந்தாலும், நடைமுறையில் கடைப்பிடிப்பதேயில்லை.

கைது செய்து, குற்றத்தை பதிவு செய்து, உதைக்காமல், வதைக்காமல் நீதிபதி முன்பு ஒப்படைத்து, சிறையில் ஒப்படைப்பது தான் போலீசின் வேலை. ஆனால் கையை, காலை உடைப்பார்கள். தான் எழுதிய கற்பனைக் கதையை கிளிப்பிள்ளை போல சொல்லவில்லை என்றால் உயிர்போகும் வரை அடிப்பார்கள்.

அப்படி கடந்த 20 வருடங்களில் போலீசு காவலில் இருந்த பொழுது கொல்லப்பட்டவர்கள் மொத்தம் 1888 பேர். இது எண்ணிக்கையாக தெரியும் பொழுது, இதன் வீரியம் நமக்கு தெரியாமல் போகலாம். தன் குடும்பத்தில் ஒருவரை இழந்த ஒவ்வொரு குடும்பமும் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தால், இதன் முழுப் பரிமாணத்தையும் நம்மால் புரிந்துகொள்ளமுடியும். இத்தனை கொலைகளில் தண்டிக்கப்பட்ட போலீசின் எண்ணிக்கை 26 பேர் மட்டும் தான். சதவிகித கணக்கில் 1.3%. அநியாயம்.

அது போல தான், மோதல் கொலைகளும்! (Encounter murder). 2014 துவங்கி 2019 வரை 837 கொலைகள் போலீசால் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்திரப்பிரதேசம் தான் முன்னிலையில் இருக்கிறது. எதிர்த்தா புல்டோசரை விட்டு இடி. நிறைய குடைச்சல் கொடுத்தா, போலி என்கவுன்டரில் ஆளைப் போடு.

இப்படி போலீசே கொல்லும் கொலைகளில் 99% போலி மோதல் கொலைகள் தான். பல கொலைகளை ஆய்வு செய்த உண்மை அறியும் குழுக்கள் ஆதாரத்துடன் அதைத்தான் உறுதி செய்கின்றன. ஒவ்வொரு என்கவுன்டருக்கு பின்பும் போலீசின், அதிகார வர்க்கத்தின் நிறைய இலாப கணக்குகள் உண்டு.

மக்களும் இதன் பின் உள்ள அபாயம் அறியாமல், பாலியல் பலாத்காரம் போன்ற மிகவும் உணர்வுபூர்வமான விசயங்களில் போலீசின் என்கவுன்டரை ஆதரித்து நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டி தள்ளிவிடுகிறார்கள். மக்களின் உளவியலை புரிந்துகொண்டு போலீசும் போட்டுத்தள்ளுகிறார்கள்.

இந்த போலி மோதல் கொலைகளை எல்லாம் ஆய்ந்து எழுதவேண்டிய ஊடகங்கள், போலீசு என்ன எழுதி தருகிறதோ அதையே வாந்தி எடுக்கிறார்கள். ஆகையால் ஒரு என்கவுன்டர் நடந்தது என எழுதும் பொழுதே, அவர் வழிப்பறி செய்தார். கொள்ளையடித்தார். கொலை செய்தார். அவர் மீது இத்தனை வழக்குகள் இருந்தன என்பதை சேர்த்து எழுதும் பொழுது, இவர் கொல்லப்பட வேண்டியவர் தான் மக்களின் மனநிலையை ஏற்பதற்கு தயார்ப்படுத்திவிடுகிறார்கள். இந்த பொழப்புக்கு! கேவலம்.

தேஜாவு என்றால்… ஒரு இடத்திற்கு முதல்முறையாக போகிறோம். ஆனால் ஏற்கனவே வந்த மாதிரியே இருக்கும். இதை தேஜாவு என்கிறார்கள். ஒவ்வொரு என்கவுன்டர் நடக்கும் பொழுது இப்படித்தானே 30 வருடத்திற்கு முன்பு நடந்தது. 10 வருடத்திற்கு முன்பும் இப்படித்தானே நடந்தது. நேற்றும் இப்படித்தானே கொன்றார்கள்? என நமக்கும் தோன்றிக்கொண்டே தான் இருக்கிறது.

அப்படி நடந்த ஒரு போலி மோதல் கொலைகளையும், அதன் பின்பு உள்ள ஆளும், அதிகாரத்தின் உள்ளவர்களின் இலாப கணக்குகளைத் தான் படம் பேசுகிறது. அருள்நிதி, மதுபாலா. காளி வெங்கட், மைம் கோபி என பலரும் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் அரவிந்த் சீனிவாசனுக்கு முதல்படம். பத்திரிக்கையாளராக இருந்து இயக்குநராக மாறியிருக்கிறார் என்கிறார்கள். அரசியல் படமாக முன்வைக்காமல், ஒரு திரில்லராக முன்வைத்திருக்கிறார். திரையரங்குகளில் சமீபத்தில் வெளிவந்தது. விரைவில் ஓடிடிக்கு வரும். பாருங்கள்.