> குருத்து: September 2009

September 30, 2009

கைவிடப்பட்டவன்! ( Cast Away)
தனிமை

'இது தெரியாதா உனக்கு?'
சங்கடப்படுத்தும் கேள்விகள்
வருவதில்லை.

வலிந்து
புன்னகைக்க வேண்டியதில்லை

செய்யும் செயலுக்கு
விளக்கம் சொல்ல தேவையில்லை.

என்னை அறிந்த
நான்.

பல விதங்களில்
தனிமையில்
செளகரியமாக உணர்கிறேன்.

தனிமை பிடிக்கும்!
தனிமையை மட்டுமல்ல!

****

நான்கு ஆண்டுகளாக நீங்கள் மனிதர்களற்ற ஒரு குட்டித் தீவில் தனியாக மாட்டிக்கொண்டால் என்ன ஆவீர்கள்? அநேகமாய் பைத்தியம் பிடிக்குமா? இல்லையெனில் நம்பிக்கைகளையும், முயற்சிகளையும் ஒன்றாய் திரட்டி தப்பித்து விடுவீர்களா?

இனி இந்த படம் பற்றி நான் சொல்வதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்! நீங்கள் ஒருமுறை படம் பாருங்கள்.

கதையெனப் பார்த்தால்...

உலக அளவில் தனது கிளைகளைப் பரப்பியுள்ள ஒரு தனியார் கூரியார் நிறுவனத்தில் நாயகன் அதிகாரியாக (system analyst) பணிபுரிகிறார். பணி நிமித்தமாக வேறு நாட்டுக்கு விமானத்தில் கிளம்புகிறார். வழியனுப்ப வரும் தன் காதலிக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறார்.

விமானம் பரந்த பசிபிக் கடலில் மேலே பறக்கும் பொழுது, புயலும், மழையும் சுழற்றியடித்து, மோசமாக விபத்துக்குள்ளாகி, கடலில் மூழ்கிறது. உடன் வந்த விமானிகள் இறந்து போக, ஆபத்துக்கு உதவ வைத்திருக்கும் ஒரு மிதக்கும் படகு மூலம் மயக்க நிலையிலேயே பல மைல்கள் கடந்து, ஒரு குட்டித் தீவில் ஒதுங்குகிறார்.

தீவை ஒட்டி, எந்த விமானமும், கப்பலும் கடந்து போகாத நிலையில்... நாலு ஆண்டுகள் தனியாக வாழ்கிறார். இறுதியில்... கிடைத்த பொருட்களை கொண்டு, ஒரு படகு (!) போல ஒன்றை செய்து, பல நாட்கள் பயணித்து... ஒரு சரக்கு கப்பல் அவரை காப்பாற்றுகிறது.

தன் நாடு திரும்பினால்... அங்கே அவருக்கு அடுத்த அதிர்ச்சி. உயிருக்கு உயிராய் காதலித்த தன் காதலி இன்னொருவரின் மனைவியாக, ஒரு குழந்தைக்கு தாயாகவும் இருக்கிறார்.

தீவிலும் தனிமை. ஒருவழியாய் தப்பித்து கரை வந்தால்... சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும், தனிமை. புதிய நாட்டுக்கு, புதிய வாழ்க்கை தேடி பயணிக்கிறார். படம் முடிகிறது.

ஒரு மேலை நாட்டைச் சேர்ந்த சகல வசதிகளையும் கொண்டு வாழ்ந்த ஒரு மனிதன், அந்த தீவில் ஒதுங்கிய பிறகு, பரமபத விளையாட்டில், பாம்பு கொத்தி, துவங்கிய கட்டத்திலேயே தள்ளப்பட்டுவிடுகிறான். மனிதன் துவக்க காலங்களில் எதிர்கொண்ட எல்லா சிரமங்களையும், போராட்டங்களையும் எதிர்கொள்கிறான்.

தீயை மூட்ட எவ்வளவு முயற்சிகள்? அப்படி பல சிரமங்களுக்கு பிறகு, தீயை உருவாக்கிய பின்பு, அவன் ஆடும் சந்தோச ஆட்டம் இருக்கிறதே! அடடா! துவக்கத்தில் ஒரு சின்ன மீனை பிடிக்க கூட திணறும் நாயகன், பிறகு, நாலு ஆண்டுகளில் வேட்டையாட திறன் பெற்றுவிடுகிறான். பச்சையாகவும் தின்கிறான்.

இந்த மண்ணில் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது, இந்த மொத்த சமூகமும் உற்பத்தியில் ஈடுபட்டு, வசதியாக வாழ தேவையான அனைத்து பொருட்களையும், வசதிகளையும் உள்ளங்கையில் தயாராக தருகிறது. ஆனால், இது புரியாமல் சில ஜென்மங்கள் காசு கொடுத்தால், இங்கு எல்லாம் கிடைக்கும்! நான் ஏன் மற்றவர்களை மதிக்க வேண்டும் என பேசுகின்றன! இந்த மாதிரி ஆட்களை அந்த தனித்தீவிற்கு நாமே ஒரு கோடி ரூபாய் பணத்துடன் 6 மாததிற்கு அனுப்பி வைக்கவேண்டும். அங்கே போனதும், அந்த பணமெல்லாம் மதிப்பில்லாத தாள்களாக உருமாறிவிடும். பணத்தை எரித்து, குளிர் காய்வதற்கு ஒருவாரத்திற்கு பயன்படலாம்.

நாலு ஆண்டுகளில் அவன் போட்டிருந்த ஆடை எல்லாம் கிழிந்த நிலையில் இலை தழைகளை தான் ஆடையாக கட்டியிருப்பதைப் பார்க்கும் பொழுது,

"நமக்கான ஆடையை நாம் தாம் தயாரிக்க வேண்டுமெனில்,
இன்னும் மனிதன் இலை தழையை தான் கட்டித்திரிய வேண்டும்" என்று அப்துல்ரகுமான் சொன்னது நினைவுக்கு வருகிறது.

யாருமற்ற தீவில், யாரிடம் பேசுவது? அந்த வெறுமையை நாயகன், அவனோடு கரை ஒதுங்கிய ஒரு பந்தை வில்சன் என நண்பனாக உருவகப்படுத்தி கொள்கிறான். எல்லாவற்றையும் அந்த பந்திடம் விவாதிக்கிறான். கோபித்து கொள்கிறான். எல்லாவற்றையும் அமைதியாக (!) கேட்டுக்கொள்கிறது! இறுதியில் தப்பித்து போகும் பொழுது, நடுக்கடலில் பந்து அவனை விட்டு பிரிந்துவிடுகிறது. ஒரு நல்ல நண்பனை இழந்த ஒருவன் எவ்வளவு கதறுவானோ அந்த அளவுக்கு கதறுகிறான்!

பெருநகரங்களில் பலரும் நிறைய பேசுகிறார்கள். கேட்க பலருக்கு பொறுமை இருப்பதில்லை. தன் பிரச்சனைகளை காதுகொடுத்து கேட்கும் மனிதருக்காக பலரும் ஏங்குகிறார்கள். நாயகனுக்கு கிடைத்த பந்து போல, நானும் பலருக்கும் பயன்பட்டிருக்கிறேன்.

இன்னும் சில மனிதர்கள் இருக்கிறார்கள். எதிரில் உள்ள எல்லோரையும் இந்த பந்து போல நினைத்து கொண்டு, தன் சுய புராணங்களை பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த படம் பார்த்ததும் அவர்கள் தான் நினைவுக்கு வந்தார்கள். அவர்களையும் ஒரு 6 மாதத்திற்கு இந்த தீவிற்கு கடத்த வேண்டும்.

படம் 2000ல் வெளிவந்தது. டாம் காங்ஸ் (Tom Honks) - நாயகன். இந்த படத்திற்காக ஆஸ்காருக்காக பரிந்துரைக்கப்பட்டு, கிளேடியேட்டர் நாயகனுக்கு கிடைத்ததால், ஆஸ்காரை தவறவிட்டுவிட்டார். அருமையான நடிப்பு. இவரை ஏற்கனவே Saving private riyan, Forrest Gump - இரண்டு படங்கள் மூலம் அறிந்திருக்கிறேன். நல்ல நடிகர்.

நல்ல படம். பாருங்கள்!

மேலும் சில தகவல்கள்!

தனித்தீவில்...

கேஸ்ட் அவே - விக்கிபீடியா

September 25, 2009

பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும்! - பாகம் 2


அப்படியென்றால், பணத்தின் மதிப்பு எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?

அந்த மதிப்பு என்பது சம்பந்தபட்ட பொருளை உற்பத்தி செய்வதற்குச் செலவாகும் மனிதர்களின் உழைப்பை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இந்த உழைப்பின் மதிப்பே சமுதாய மதிப்பாக தீர்மானிக்கப்படுகிறது.

இப்படி மனிதனால் உற்பத்தி செய்யப்படும் பொருளை வாங்கவும் விற்கவும் ஒரு பொருள் ஊடகமாக தேவைப்படுகிறது. அதுதான் பணம். (அதாவது மனிதர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதற்கு எப்படி ஒரு மொழி தேவைப்படுகிறதோ அதை போன்றே) இதன் மதிப்பு என்பது நீண்ட நாள் நீடித்து இருக்ககூடிய - மாறாமல் இருக்கக் கூடிய - தகுதி வாயந்ததாகவும் இருக்கக் கூடிய பொருளைத்தான் பயன்படுத்த துவங்கினர். இதை கணக்கில் கொண்டு தான் தங்கத்தை உலக நாடுகள் அனைத்தும் பொருட்களை வாங்கவும், விற்கவும் பரிமாற்றிக் கொள்ளவும் ஒரு பொருளாக ஊடகமாகப் பயன்படுத்த துவங்கினர்.

துவக்கத்தில் தங்க காசுகளைத்தான் நாணயமாக தயாரித்து வணிகத்திற்கு பயன்படுத்தினர். அதாவது ஒரு அரசு தனது நாட்டில் உள்ள தங்கம் முழுவதையும் தன்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுகிறது. பின்பு ஒரு தங்க காசுக்கு (நாணயத்திற்கு) 1/4 அவுன்ஸ்-க்கான தங்க மதிப்பாக தயாரிக்கிறது.

அதாவது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் மதிப்பு ரூ. 1000 என்றால் 1/4 அவுன்ஸ் தங்கத்தின் மதிப்பு ரூ. 250 என்று வைத்துக்கொள்வோம். அரசு 1/4 அவுன்ஸ் தங்க நாணயத்தை மக்களிடம் கொடுத்து அதற்கானப் பொருளைப் பெற்றுக்கொள்கிறது. இந்த அடிப்படையில் காசுகளை தயாரித்து மக்களிடம் புழக்கத்தில் விடுகிறாது.

புழக்கத்தில் விட்ட தங்க காசுகளை வரி மூலம் திரும்ப பெற்று அரசின் தங்கத்தின் கையிருப்பை உறுதி செய்கிறது. அதாவது எவ்வளவு தங்கம் கையிருப்பு இருக்கிறதோ, அதற்கேற்ப தான் நாணயம் தயாரிக்க முடியும் என்பது நியதி.

உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால்..

நாட்டின் மொத்த உற்பத்தியைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப தங்க நாணயங்களை தயாரித்து புழக்கத்தில் விடுதல். அதாவது 500 டன் தங்கத்தின் மதிப்பிற்கு பொருள்களின் உற்பத்தி இருக்கும் பட்சத்தில் 500 டன் தங்கத்தின் மதிப்பிற்கு 1/4 அவுன்ஸ் எடை கொண்ட தங்க காசுகளை தயாரித்து வெளியிடுவர்.

அதாவது,

1/4 அவுன்ஸ் எடை கொண்ட (ரூ. 250 மதிப்புள்ள) தங்க காசிற்கு ஒரு பசு மாட்டை வாங்க முடியுமென்றால், ஒரு பசுவின் விலை ரூ. 250. (பழைய லண்டனின் நாணயம் 1/4 அவுன்ஸ் - ஒரு தங்க காசு)

அரசினால் தங்கத்தை அதிகரிக்க முடியாத சூழலில், பொருளுற்பத்தியை அதிகரிக்க முடியாத சூழலில் அல்லது வேறு சில காரணங்களால் அரசானது தங்க காசுகளை (நாணயங்களை) அதிகரிக்க நினைக்கிறது. அப்பொழுது புழக்கத்திலுள்ள 500 டன் எடையுள்ள தங்கத்திற்கேற்ப 1/4 அவுன்ஸ் எடையுள்ள தங்க காசுகளை 1/8 அவுன்ஸ் எடையுள்ள தங்க காசுகளாகத் தயாரித்து வெளியிடும்.

இதன் விளைவு, தங்க காசின் மதிப்பு 50% குறைந்து விட்டதால், ஒரு காசு கொடுத்து வாங்கிய பசுவை இனி இரண்டு தங்க காசுகளைக் கொடுத்து வாங்க வேண்டியது வரும்.

இது முந்தைய காலங்களில்... நவீன காலங்களில் எப்படி?

அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும்! - பாகம் 1

September 20, 2009

தில்லை நடராஜர் கோவிலில் இரட்டை சாவி முறை!தில்லை தீட்சிதர்கள் நடராஜர் கோவிலை அரசுடைமையாக்கியதை எதிர்த்து, உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்கள். நீதிமன்றம் தீட்சிதர்களின் நம்பிக்கையை கவிழ்த்து விட்டது. அடுத்து, உச்ச நீதி மன்றத்தை நோக்கி ஓடியிருக்கிறார்கள். மனித உரிமை பாதுகாப்பு மையமும் இனி தில்லி கிளம்பும்.

வழக்கை தள்ளுபடி செய்ததன் மூலம்... இப்பொழுது கோவில் அரசு கட்டுப்பாட்டுக்கு முழுமையாக வந்திருக்கிறது. நேற்று இந்து அறநிலைய துறை ஆணையர் கோவிலுக்கு வந்து வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நிர்வாக பணிகள் குறித்தும் சில அறிவிப்புகள் செய்திருக்கிறார்.

அதில் முக்கியமானது. தீட்சிதர்களிடம், செயல் அலுவலரிடமும் இரண்டு சாவிகள் இருக்க ஏற்பாடு நடக்கிறதாம்.

லாக்கர் சிஸ்டம் மாதிரி, இரு பூட்டுகள். இருவரும் சேர்ந்து திறந்தால் தான் திறக்கமுடியும் என்ற முறை இருக்க வேண்டும் அதில்லாமல், ஒரு பூட்டு, இரு சாவி என்றால்... இதில் ஒரு அபாயம் இருக்கிறது. தீட்சிதர்கள் ஏற்கனவே நிறைய வசூல், நகைகளில் ஏக தில்லு முல்லு வேலைகள் செய்திருக்கிறார்கள். இப்பொழுது இரண்டு பேரிடமும் சாவி இருப்பது, ஏதாவது செய்துவிட்டு அலுவலர் பெயரில் பழி போட வாய்ப்பிருக்கிறது.

மேலும், கோவில் நிலங்களை மற்றும் அதிலிருந்து வரும் வருமானத்தை கணக்கிட வேலைகள் துவங்கப் போகின்றன. இப்பொழுது, உள்ள கணக்கு படி... 2594 ஏக்கர் நஞ்சை, 895 ஏக்கர் புஞ்சை என 3489 ஏக்கர் சொந்தமாக இருக்கிறது. இதில் கோவிலின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் 467 ஏக்கரும், மற்றவை குத்தகைகாரர்களிடம் இருந்துவருகிறதாம். இனி ஆணையரின் அனுமதியின்றி எந்த நிலமும் விற்கமுடியாது.

இந்த நிலங்களை பற்றி அதிகாரிகள் நேர்மையாக ஆய்வு செய்தாலே போதும். பல நிலங்களை பலரிடம் விற்று தின்று தீர்த்த கதைகளெல்லாம் வண்டி வண்டியாக வரும். பிறகு, இரட்டை சாவி முறையே தேவைப்படாது.

மேலும், இப்பொழுது, நாலு உண்டியல்கள் தான் இருக்கின்றனவாம். அதனால், மேலும், பல உண்டியல்கள் வைக்க ஏற்பாடு நடந்துவருகிறதாம். இரண்டாம் நிலையிலுள்ள இந்த கோவிலை முதல் நிலைக்கு நகர்த்த வேலைகள் துவங்க இருக்கின்றனவாம். அதற்கு நிதிக்குழுவிடம் 38 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்கள். வந்ததும் வளர்ச்சி பணிகள் துவங்கப்படுமாம்.

இனி வங்கியில் கோவில் பெயரில் ஒரு கணக்கு துவங்கி... தீட்சிதர் செயலர், அரசு செயல் அலுவலர் இருவரும் கையெழுத்திட்டால் தான் பணம் எடுக்க முடியும் என்று அறிவித்திருக்கிறார்
.

தினமலர் இந்த செய்தியை வெளியிட்டு, கடந்த 6 மாதங்களில் 6 லட்சத்திற்கும் மேலாக வசூலாகியிருக்கிறது. ஆனால், இதுவரை ஒரு வாஷ்பேசின் மட்டும் தான் வைத்திருக்கிறார்கள் என வருத்தப்பட்டிருக்கிறது.

கடந்த பல வருடங்களாக ஆண்டுக்கே 39,000 தான் வசூலே ஆனது என தீட்சிதர்கள் கணக்கு காட்டும் பொழுது, தினமலர் எங்கே போனது?

அந்த கோவிலுக்கு போனவர்கள் அறிவார்கள். கோவில் பராமரிப்பு இல்லாமல் கேவலமாக இருக்கும். வருடம் முழுவதும் கோவிலிருந்து வசூலில் லட்சம் லட்சமாக தின்று தீர்த்தவர்கள் ஏன பராமரிக்க கூட இல்லை என்று கேட்க தினமலரால் முடியவில்லை.

எல்லாவற்றையும் திரும்பி பார்த்தால், நடராஜரை தீட்சிதர்களிடமிருந்து, பக்தர்களுக்கு நாத்திகர்கள் தான் மீட்டு கொடுத்திருக்கிறார்கள்.

September 16, 2009

பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும்!


முன்குறிப்பு : மூலதன சூதாடிகளால் உலகம் மிகப்பெரிய பொருளாதார மந்தத்தை சந்தித்திருக்கிறது. வல்லரசு நாடுகளே என்ன செய்வது என்பது தெரியாமல் திரு திரு வென விழிக்கிறார்கள். முதலாளித்துவத்துக்கு மிகப்பெரிய நெருக்கடி இது. இதை தொழிலாளர்கள் தலையில் அப்படியே தலையில் வைக்கிறார்கள். விளைவு - வல்லரசு அமெரிக்காவிலேயே 10% வேலை இழப்பு. மற்ற நாடுகளை பற்றி சொல்லவே வேண்டாம். படு மோசம்.

முதலாளித்துவம் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு மூளையை பிசைகிறார்கள். நாம் சொல்கிற தீர்வு - சோசலிசம் தான் மாற்று. அதை விஞ்ஞான பூர்வமாக புரிந்து கொள்ள, பொருளாதாரம் குறித்தான அடிப்படைகளை நாம் கற்க வேண்டும். நாம் ஏற்கனவே சில தலைப்புகளில் இது பற்றி விவாதித்திருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இந்த கட்டுரையும்!

சமீபத்தில் ஒரு தோழர் மூலமாக இந்த கட்டுரை கிடைத்தது. கட்டுரையின் நீளம் கருதி சில பகுதிகளாக தருகிறேன்.

****

பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்பது மக்களின் வழக்கு மொழி இதற்கு அர்த்தம் என்னவெனில் பணம் அந்த அள்விற்கு நம்முடைய வாழ்க்கையை பாதிக்கிறது என்பது தான்.

பணம் என்பது மனிதர்களுக்கு இடையில் பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒரு கருவி. ஒரு பொருள்.

இது இரண்டு காரியங்களைச் செய்கிறது.

உழைப்புச் சக்தியை வாங்கி பணத்தை தருகிறது.
அப்பணத்தில் உழைப்பவர்கள் தங்களுடைய குடும்பத்திற்குத் தேவையான பொருளாதார தேவைகளுக்குப் பயன்படுத்தி கொள்கின்றனர்.

அப்படியென்றால் பணம் நம்முடைய பொருளாதாரத்தோடு தொடர்புடையது என்பதை மறுக்க முடியாது.

பணமும் பொருளாதாரமும் பின்னிப் பிணைந்து இருப்பதால் தான் ஒன்று இல்லாமல் ம்ற்றொன்று இருக்க முடியாது என்பது உண்மை, அதனால் தான் ஒன்றையொன்ற் பாதிக்கிறது.

பொருளாதாரம் என்பதை பொருள் + ஆதாரம் என்பார்கள்.


அதாவது, நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான உண்ண உணவு, இருக்க வீடு, உடுக்க உடை போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஆதாரமாக இருப்பதால் தான் இதை பொருளாதாரம் என்கின்றனர். இந்த பொருள்களை வாங்குவதற்கு பணம் மிகவும் அவசியம்.

பொருளாதாரம் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்து இருக்கிறதோ அந்த அளவிற்கு பணத்தின் மதிப்பும் அதிகரிக்கும். பொருளாதாரம் வீழ்ச்சியடையும் பொழுது பணத்தின் மதிப்பும் குறையும்.

இதைத்தான் எதுவும் அளவோடு இருந்தால் அது வளர்ச்சி இல்லாவிட்டால் அது வீக்கம் என்கிறோம்.

அப்படியென்றால், பணத்தின் மதிப்பு எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?

அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

September 11, 2009

காமென்வெல்த் விளையாட்டு போட்டியும்! இந்திய பிச்சைகாரர்களும்!


பராசக்தி படத்தில் ரங்கூனிலிருந்து வந்து, டாக்ஸியில் இருந்து கிளம்பும் பொழுது, பணக்கார இளைஞன் சிவாஜி சொல்வாரே! "தமிழ்நாட்டின் முதல்குரலே பிச்சைக்குரலா?

இதே போல காமென்வெல்த் போட்டி தலைநகர் தில்லியில் 2010-ல் துவங்க இருக்கும் இவ்வேளையில் சிவாஜியை போல வெளிநாட்டினர் யாரும் வல்லரசு இந்தியாவை நாக்கு மேல பல்லை போட்டு, கேவலமாக சொல்லிவிடக்கூடாது என்பதற்காக, தில்லியை சுத்தப்படுத்தும் வேலையில், முதல் வேலையாக பிச்சைகாரர்களை ஒழிக்க தில்லி அரசு ஒரு "அருமையான" திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறார்கள்.

அந்த திட்டம் பிச்சைகாரர்களை ஒழிப்பது. இதற்காக பிச்சைகாரர்கள் எத்தனை பேர் என்பதை
ஆள்விட்டு எண்ணியதில்... 60,000 பேர் இருக்கிறார்களாம்.

ஒழிப்பது என்றால்? அநியாயமாக பிச்சைகாரர்களை போட்டுத் தள்ளுவதா? அல்லது ஆக்கப்பூர்வமாக தொழில் வாய்ப்புகளை அல்லது கைத்தொழில் கற்றுத்தருவதா? அல்லது ஆந்திர அரசு செய்வது போல பாதுகாப்பு இல்லங்களை உருவாக்கி பராமரிப்பதா? இதில் எதுவும் இல்லை.

நாய் பிடிக்கும் வண்டிகள், சில உதவியாளர்கள், சில போலீசு, நீதிபதி - என குழு தயார் செய்து.... பிச்சைகாரர்களை லபக்கென்று பிடித்ததும், உள்ளே இருக்கும் நீதிபதி (விளையாட்டு போட்டிகள் முடியும் வரை) சில மாதங்கள் சிறைக்குள் தள்ள தீர்ப்பு எழுதுவார். பிறகு போலீசுகாரர் உள்ளே தள்ளுவார்.

இந்த பிச்சைகாரர்கள் எல்லாம் எங்கிருந்து வந்தார்கள்? வானத்திலிருந்து குதித்தார்களா? அல்லது முந்தைய காலத்தில் நாடு கடத்தப்படுவார்களே! அதுமாதிரி நாடு கடத்தப்பட்டு இங்கு
வந்தவர்களா? இந்த பிச்சைகாரர்கள் எல்லாம் இந்திய குடிமகன்கள் தானே? சமூக ஏற்ற தாழ்வுகள், அரசின் மோசமான பொருளாதார கொள்கைகள் மூலம் உருவானவர்கள் தானே இவர்கள்! இவர்களும் மரியாதையுடனும், மானத்துடன் வாழ வழி வகை செய்வது இந்திய அரசின் கடமையல்லவா? சிறைக்குள் தள்ளினால் பிரச்சனை தீர்ந்துவிடுமா என்ன?

இன்றைக்கு யாரும் கண்டு கொள்ளப்படாத பிச்சைகாரர்கள்! நாளை பிளாட்பார வாசிகள்! அடுத்த நாள் சேரிவாசிகள்! - என சிறைக்குள் தள்ளுவதை தொடர மாட்டார்களா?

போராட்டங்கள் எழாத வரை இவர்கள் யாரை வேண்டுமென்றாலும், உள்ளே தள்ளுவார்கள்.