> குருத்து: April 2020

April 29, 2020

சிசிடியை முன்வைத்து...(2)


நேற்று மிஷ்கின் பேட்டி ஒன்று கண்ணில்பட்டது. சிசிடிவி லாஜிக் குறித்து மிஷ்கினிடம் கேள்வி கேட்கும் பொழுது...

"வண்டியை பார்க்கிங் பண்ணும் பொழுது, ஹெல்மெட்டை வண்டிக்குள்ள வைச்சு பூட்டுவீங்க! அது போல லாஜிக் கேட்கிற உங்க கேள்விகளையும் வண்டியில் வைச்சு பூட்டிட்டு வாங்க! (மூளையை கழட்டி வைச்சிட்டு வாங்க என்கிறார்). நான் ஒரு கதை சொல்றேன். அன்பு கதை. உங்க இதயம் கொண்டு பாருங்கள். புழுக்களா இருக்கிற ஒவ்வொரு கதாப்பாத்திரமும் எப்படி கடவுள்களா மாறின கதையை பாருங்க!" என்கிறார்.

மேலும் " சிசிடிவி இல்லாத இடத்தில இப்படி பண்றான்னு வாய்ஸ் ஓவர் போடனுமா! அல்லது சிசிடிவியை உடைப்பதை காட்டனுமா? (ஜெயம் ரவி நவீன தொழில்நுட்பத்தை வைத்து சிசிடிவியை ஏமாத்துவாறே! அதுபோல செய்யனுமா!) அதெல்லாம் காட்டுனா மக்களுக்கு போரடிச்சிறாது! 10 அடிக்கு ஒரு சிசிடிவி இருக்கிற லண்டனில் இன்னும் பல கடத்தல்களும், கொலைகளும் நடந்திட்டுத்தான் இருக்கு" என்கிறார்.

மிஷ்கினுக்கு ஒண்ணு புரியல! மக்கள் சிசிடிவி மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். பலர் தங்கள் வீடுகளிலேயே சில ஆயிரம் செலவழிச்சு சிசிடிவியை பொருத்தியிருக்கிறார்கள். அரசும், போலீசும் நைச்சியமா பேசி, சில இடங்களில் மிரட்டி கூட திரையரங்கில், பொது இடங்களில், தொழிற்சாலைகளில் என பொருத்திக்கொண்டே வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில்...மக்கள் மனநிலை என்னவென்றால்..
"சைக்கோ ஒரு பொண்ணை தூக்கியிரலாம். இரண்டு தடவை கூட தூக்கியிரலாம். அதெப்படி வரிசையா இத்தனை பெண்களை தூக்கியிறமுடியும். அப்புறம் நாங்க இத்தனை சிசிடிவி வைச்சிருக்கிறதுக்கு என்ன மதிப்பு இருக்கு?"

மிஷ்கின் அன்பை போதிக்கிறேன். சக மனிதர்களை அன்போட அணுகுங்க! சைக்கோ உருவாவதையே தடுத்திறலாம்னு பேசறார்.

"நாங்க சொந்த பிள்ளை தப்பு பண்ணுனாலே தூக்கிப்போட்டு மிதிப்போம். எதிர்த்த வீட்டுகாரனோ அல்லது எவனோ ஒருத்தன் தப்பு பண்ணுனா கொன்னுற மாட்டோம்" என்பது தான் பலருடைய மனநிலை.

சிசிடிவியை முன்வைத்து...


சைக்கோ படத்தில் வரிசையாக நடக்கும் கொலைகளில் சிசிடிவியை கண்டுகொள்ளவே இல்லை என பலரும் கொந்தளிக்கிறார்கள்.
மிஷ்கினின் தொடர்ச்சியான படங்களைப் பார்த்தவர்கள் இந்த படத்தின் தவறுகள் அறியாமல் செய்த தவறுகள் அல்ல! தெரிந்தே செய்த தவறுகள் என புரியும்.

செல்பேசி வந்து, மக்களிடம் பரவலாக கைக்கு வந்ததற்கு பிறகு கூட, சில இயக்குநர்கள் தங்கள் படங்களில் செல்பேசியை பயன்படுத்தவேயில்லை. காரணம் - திரைக்கதையில் காட்சிகளை நகர்த்த முடியாது. சிந்தனை நொண்டியடிக்கும். ஆகையால், கவனமாய் தவிர்த்தார்கள்.
அது போலத்தான், மிஷ்கினும் சிசிடிவி லாஜிக் தெரிந்து கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

என்னைக் கேட்டால், ஒன்று பார்வையாளனின் கேள்விக்கு மிஷ்கின் நேர்மையாக பதில் சொல்லவேண்டும். இல்லையா! அல்லது கடுமையாக உழைத்து, கதை செய்யவேண்டும் அல்லது சில்லுக்கருப்பட்டி போன்ற வாழ்க்கை குறித்த கதையாடல்களை எடுக்க கற்றுக்கொள்ளவேண்டும்.
 
#மக்களுக்கு ஒரு கேள்வி:

மிஷ்கினிடம் ஒரு படைப்பு குறித்து இவ்வளவு கோபமாய் கேட்கிறீர்கள். சரியானது.

அதே வேளையில் சுவாதி கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட இராம்குமார் மின்வயரை கடித்து செத்தான் என சிறை நிர்வாகம் திரைக்கதை எழுதிய பொழுது... சிசிடிவி காட்சிகள் எங்கே என ஏன் நாம் கேள்வி கேட்கவில்லை?

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது குழந்தைகளோடு குடும்பம், குடும்பமாக லட்சக்கணக்கில் திரண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடிய பொழுது, அரசு திட்டமிட்டு கொலைகளை நடத்தியதே! அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் எங்கே போனது என நம்மில் பலர் கேட்கவில்லை.

 பொங்க வேண்டிய இடங்களில் எல்லாம் பொங்குங்கள் என அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

C/o. Kancharapalem (2017) தெலுங்கு.


"Love has no boundaries or any limitations"

கதை. 9 வயது பள்ளி மாணவன் தன்னுடன் படிக்கும் பெண்ணிடம் பிரியம் மிகுந்த நட்பு பாராட்டுகிறான்.

அடிதடி வேலைகளில் ஈடுபடும் இளைஞர் ஒருவர், ஒரு பெண்ணுடன் மோதலில் துவங்கும் உறவு பிறகு காதலாய் மாறுகிறது.
ஒயின் ஷாப்பில் வேலை செய்யும் 33 வயது இளைஞன், தன்னுடலை விற்கும் பெண்ணுடன் ஏற்படும் காதல்.

ஒரு அரசு அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக வேலை செய்யும் திருமணமாகாத 49வயதுகாரர், அங்கு உயரதிகாரியாய் வேலை செய்யும் ஒரு (widow) பெண்ணுடன் ஏற்படும் காதல்.

இந்த நான்கு உறவுகளிலும் சாதி, மதம், சமூகம் எந்த அளவிற்கு தலையிட்டு சிக்கலை உருவாக்கிறது என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

*****

Love has no boundaries or any limitations. இந்த மேற்கோள் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் நம்மை போன்ற பின்தங்கிய நாட்டில் சாதி, மதம், ஏற்றத்தாழ்வுகள் என பல அம்சங்கள் தான் உறவுகளை தீர்மானிக்கின்றன. அதை இயல்பாகவும் அருமையாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

நான்கு கதைகளுக்கும் ஒரு இணைப்பை படத்தின் இறுதியில் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் இயல்பாக பொருந்திபோகிறது.
நூறு, இருநூறு பேரை அடித்து துவைக்கும் தெலுங்கு பிராந்தியத்தில் இருந்து இப்படி ஒரு படமா என இன்னும் ஆச்சர்யத்தில் இருக்கிறேன்.

படத்தினுடைய பெண் தயாரிப்பாளரே தன்னுடலை விற்கும் கதாபாத்திரத்தில் வருவது ஆச்சரியம். கதை தந்த தைரியம். பாகுபலி வில்லன் ராணா, படம் பிடித்துப்போய் விநியோகம் செய்திருக்கிறார்.

படத்தில் நடித்த அனைவருமே புதியவர்கள். வேலை முடிந்து இரவு எட்டு மணிக்கு மேல் 11 மணி வரை தான் பயிற்சி (Rehearsal) . புதிய முயற்சி. இப்படிப்பட்ட படைப்புகள் தொடர்ந்து வெற்றிபெறவேண்டும். வாழ்த்துக்கள்.
C/o காதல் என தமிழில் எடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள். கொஞ்சம் சினிமாத்தனம் கலந்தாலும், படம் சொதப்பிவிடும். பார்க்கலாம்.
யூடியூப்பில் கிடைக்கிறது. பாருங்கள்.

அறிவின் சாபம்


குவாண்டம் மெக்கானிக்ஸ் பற்றி அரை மணி நேரம் விவரித்த பின்னரும் கேட்டவருக்கு ஒரு எழவும் புரியவில்லை என்றால் ‘இது கூட புரியாதா’ என்று பேசியவருக்கு கோபம் வருகிறது. எக்ஸல் ஷீட்டில் போன மாத விற்பனை டேட்டாவை ஏற்றி கம்பெனி யின் டீலர்கள் செயல்பாட்டை டிசெண் டிங் ஆர்டரில் தயாரிக்கும் விதத்தை எக்சல் தெரியாத ஊழியரிடம் விளக்கி அதை அவர் சரியாய் செய்யாத போது அவரை பெஞ்சில் நிற்க வைத்து பிரம்பால் அடிக்கத் தோன்றுகிறது.

இந்த கோபங்களுக்குக் காரணம் ஒரு சாபம். கேட்டவர்களுக்கு அல்ல. கூறியவர்களுக்கு. பெயர் ‘அறிவின் சாபம்’ (Curse of Knowledge).

நமக்குத் தெரிந்த ஒன்று மற்றவருக்குத் தெரியாமல் இருக்கும் போது அதைப் பற்றி நமக்குத் தெரியாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை மறக்கிறோம் பாருங்கள், அதுதான் அறிவின் சாபம். இந்த வியாதியினால் உங்களுக்கு தெரிந்த ஒன்றைப் பற்றி மற்றவரின் கோணத்திலிருந்து பார்க்க மறுக்கிறீர்கள். அதை அவருக்கு புரியும்படி கூற தவறுகிறீர்கள். அறிவின் சாபத்தால் உங்களுக்குத் தெரிவது மற்றவருக்கும் தெரிந்திருக்கும் என்று கருதி நீங்கள் சொல்வது அவருக்குப் புரியும், புரிந்துவிடும் என்று முடிவு செய்கிறீர்கள். அவருக்குப் புரியாத போது அவர் மீது கோபம் கொண்டு சபிக்கிறீர்கள். சாபம் உங்கள் அறிவைத் தான் பீடித்திருக்கிறது என்பதை மறந்து!

காலின், ஜார்ஜ் மற்றும் மார்டின் என்ற பொருளாதார நிபுணர்கள் தான் ‘Journal of Political Economy’ என்ற ஜர்னலில் ‘The Curse of Knowledge in Economic Settings’ என்ற கட்டுரையில் இக்கோட்பாட்டை முதலில் படைத்தார் கள். தங்கள் பொருளின் அதிக தரத்தை அறிந்திருக்கும் கம்பெனிகள் அதன் தரத்திற்கேற்ப அதிக விலை நிர்ணயிக் கிறார்கள். தங்களுக்குத் தெரிந்திருக்கும் தரம் வாங்குபவர்களுக்கும் தெரியும், சொன்னால் புரியும் என்று நினைக் கிறார்கள். ஆனால் அதை உணராது விலை அதிகம் என்று அப்பொருளை வாடிக்கையாளர்கள் ஒதுக்கும் போது கம்பெனிக்காரர்கள் கோபப்படுவதை அறிவின் சாபம் என்று வர்ணித்தார்கள்.

அதே போல் தரம் குறைந்த பொருளை விற்கும் போது கம்பெனிகள் விலையை குறைத்து விற்பதும் அறிவின் சாபத்தால். பொருள் விலை அதன் தரத்தையும் அதை தெரியாதவர்கள் அறியாமையையும் சார்ந்து அமைகிறது என்கிறார்கள்.
மனதில் ஆழமாய் பதிந்த உண்மை நிகழ்வை உணர்ச்சி பொங்கும் கதை யாக்கி, உணர்வோடு திரைக்கதை எழுதி ஒவ்வொரு சீனையும் செதுக்கி சிலை போல் வடித்து பெரும் எதிர் பார்ப்புடன் திரையிட்ட படத்தை மக்களும் விமர்சகர்களும் ஒதுக்கித் தள்ளும் போது படத்தின் இயக்குனருக்கு ஏற்படும் கோபமும் அறிவின் சாபமே.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்ட பின் அது தெரியாமல் இருந்த மன நிலையை மீண்டும் நினைத்துப் பார்க்க முடிவதில்லை. இதுவே அறிவின் சாபத்திற்கு ஆதாரம்!

இதை ஆய்வு மூலம் விளக்கி பிஎச்.டி பெற்றார் ஸ்டான்போர்டு பல் கலைக்கழகத்தின் ‘எலிசபெத் நியூடன்’. ஆய்வில் கலந்துகொண்டவர்களை ‘தட்டுபவர்’, ‘கேட்பவர்’ என்று இரண் டாகப் பிரித்தார். தட்டுபவரிடம் பிரபல பாடல் ஒன்றை மனதிற்குள் பாடிக் கொண்டே டேபிளில் அதற்கேற்ப தாளம் போடச் சொன்னார். கேட்பவரிடம் தட்டப் படும் தாளத்தை கொண்டு அது எந்த பாடல் என்பதை கூறுங்கள் என்றார். பாடல் என்றால் பாடாவதி படத்தில் யாருக்கும் தெரியாத பாடல் அல்ல. ரொம்பவே பாப்புலரான பாடல்கள்.
ஆய்வில் கலந்துகொண்டவர்கள் மொத்தம் 120 பேர். அனைவரும் மனதில் பாடலை பாடிக்கொண்டே டேபிளில் தாளம் போட அது எந்த பாடல் என்று சரியாய் கூறியவர்கள் மூன்று பேர் மட்டுமே! 120க்கு மூன்று. அதாவது 2.5% முறை தான் சரியான விடையளிக்கப்பட்டது.

தாளம் போடும் போது அதற்கான பாடல் தட்டுபவர் மனதில் மட்டுமே ஒலிக்கிறது. கேட்பவருக்குத் தாளம் தான் கேட்குமே ஒழிய பாடல் கேட்பதில்லை. டேபிளில் தட்டும் ஓசை அவருக்கு யாரோ கதவை தட்டுவது போல்தான் இருக்கிறது. மிஞ்சிப் போனால் ‘யாருப்பா வாசல்ல’ என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் மனதில் பாடிக்கொண்டே தட்டுபவருக்கு இத்தனை ஈசியான பாட்டு தெரியாதா என்று கோபம் வருகிறது. ‘செவிட்டுப் பொணமே, நான் தட்ற பாட்டு தெரியல? உன் மூஞ்சியில தொங்கறது காதா, காஞ்சு போன கருவாடா’ என்று கத்தத் தோன்றுகிறது.

இது ரொம்பவே குழந்தைத்தனமான ஆய்வு போல் தெரிகிறதா? யாராவது உங்களிடம் சிக்கினால் நீங்களும் மனதில் பாடிக்கொண்டே தாளம் போட்டு பாருங்கள். கேட்டவர் என்ன பாடல் என்று தெரியாமல் முழிக்கும் போது உங்களுக்கும் அசாத்திய கோபம் வருவதை உணர்வீர்கள்.

பாடலை மனதில் பாடும் நமக்கு அது என்ன பாடல் என்று தெரியவில்லை என்றால் மற்றவருக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பதில்லை. நினைத்துப் பார்க்கவும் முடிவதில்லை. நம் அறிவே நமக்கு சாபம் இடுகிறது. நமக்குத் தெரிந்த அறிவை மற்றவருடன் பங்கிட முடிவதில்லை. ஏனெனில் நம் மனநிலையை அவர் மனதில் உருவாக்க நம்மால் முடிவதில்லை.
இந்த தட்டுபவர்-கேட்பவர் கதை தினம் நம் வாழ்க்கையிலும் வியாபாரத் திலும் வெகு விமரிசையாக நடக்கிறது. பள்ளியில் டீச்சர் தட்டும் தாளம் மாண வர்களுக்கு புரிவதில்லை. விளம்பரத் தில் மார்க்கெட்டர் தட்டும் ஒசை வாடிக்கையாளர்களுக்குப் புரிவ தில்லை. அலுவலகத்தில் மேலாளர் தட்டும் ஒலி ஊழியர்களுக்குப் புரிவதில்லை. இவ்வளவு ஏன், வாராவாரம் இப்பகுதியில் நான் தட்டுகிறேன், உங்களுக்கு ஏதாவது புரிகிறதா!

இக்கோட்பாட்டை இன்னமும் கூட எளிமையாக விளக்குகிறார் உளவியாளர் ‘டாம் ஸ்ட்ரேஃபோர்ட்’. ‘உங்கள் மனதின் எழும் எண்ணங்களை எழுதி விட்டு அதை சரி பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் எழுதிய வார்த்தைகளில் தவறு இருந்தால் அது உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. ஏனெனில் நீங்கள் எழுதியதை படிக்கும் போது அதன் அர்த்தம் மட்டுமே உங்கள் அறிவில் படுகிறதே ஒழிய வார்த்தைகளில் இருக்கும் தவறுகள் கண்ணில் படுவதில்லை.!

வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் வெறுமனே டேபிளில் தட்டிக்கொண்டே இருந்தால் பத்தாது. கேட்பவரின் காதுகளாக உங்கள் காதுகளை பாவியுங்கள். அறிவின் சாபத்திலிருந்து மீள நம் அறிவை சாபம் பீடித்திருக்கும் என்பதை உணருங்கள்.

போதையில் இருப்பவனை ஸ்டெடியாய் இருக்கிறோம் என்று எப்படி அவன் போதையே அவனை தவறாய் நினைக்க வைத்து வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு போய் சேரும் அசட்டு தைரியத்தை தந்து அவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கிறதோ அதே போல் நம் அறிவும் அதை பீடித்திருக்கும் சாபமும் நம் கண்களை மறைக்கும் என்பதை உணருங்கள். இதை உணர்ந்தாலே பாதி சாப விமோசனம் கிடைக்கும். மீதிக்கு மட்டுமே கொஞ்சம் மெனெக்கெட வேண்டியிருக்கும்!

- சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

Oops Noah is gone (2015)


கதை. அப்பா, பிள்ளை இருவரும் நெஸ்டிரியன்ஸ். குறைவான நேரத்தில் அழகாக வீடு கட்டுகிறார்கள். சாது. ஆபத்து, பயம் வந்தால், பர்பிள் வண்ணத்தில் வாயுவை வெளிவிட்டு தப்பிக்கிறார்கள்.

அப்பா தங்களுக்கான வாழ்விடத்தை தேடிக்கொண்டே இருக்கிறார். பையனுக்கோ இடம் மாறுவதால், நண்பர்களை இழப்பது பெரிய வருத்தம்.
மிகப்பெரிய வெள்ளம் வர இருப்பதால், நோவா என்பவர் ஒரு கப்பலை உருவாக்குகிறார். அதில் ஏறி எல்லா மிருகங்களும் தப்பிக்க நினைக்கிறார்கள்.
கப்பலுக்கு கேப்டன் சிங்கம். பாதுகாப்பு வேலைகளை கொரில்லா குரங்குகள் செய்கிறார்கள். நோவா ஒரு பட்டியல் தந்து அந்த விலங்குகளுக்கு மட்டுமே அனுமதி என்கிறார்கள். அந்த பட்டியலில் நெஸ்டிரியன்கள் இல்லை. ஏமாற்றம் அடைந்தாலும், மாறுவேடத்தில், அம்மாவும், மகளுமான பூனை குடும்பத்தோடு உள்ளே நுழைந்துவிடுகிறார்கள்.

பூனைகள் சாதுரியர்களாய், கோபாக்காரர்களாய் இருக்கிறார்கள். இரண்டு குடும்பங்களும் எதிரெதிர் குணங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இரண்டு பிள்ளைகளும் வேடிக்கைப் பார்க்க போன பொழுது, பெரும்வெள்ளம் வருகிறது. கப்பலை விட்டு தரைக்கு வந்து
விடுகிறார்கள்.

கப்பல் தூரமாய் போய்விடுகிறது. அம்மாவும், அப்பாவும் கப்பலில்! பிள்ளைகள் தரையில்!

கேப்டன் சிங்கத்திடம் கப்பலை திருப்ப சொன்னால், நம் பிரதமரை போல அலட்சியப்படுத்துகிறார்.

ஏகப்பட்ட களேபரங்களோடு ஒன்றாக சேர்ந்தார்களா என்பது முழுநீளக்கதை!

****
எதிரெதிர் கதாபாத்திரங்களை கொண்டு, ஒரு எளிய கதையை சுவாரசியமாய் அனிமேசனில் சொல்லியிருக்கிறார்கள்.

நெஸ்டிரியன்ஸ் கட்டும் கூடு அத்தனை அழகாக, ரசனையாக இருக்கிறது. இரவானால், அதன் உடல் ஜொலி ஜொலிக்கிறது. சாதுவாக இருக்கிறது. இதனின் நட்பால் பூனையிடம் ஏற்படும் மாற்றம் அழகு.

கப்பலில் ஏன் சில விலங்குகளை ஏற்க மறுக்கிறார்கள் என்பதை இறுதியில் அறியும் பொழுது அட! என ஆச்சர்யம் ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கு ஏற்ற நல்லபடம். தமிழிலும் நன்றாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஜெர்மனி, அமெரிக்கா என சில நாடுகள் இணைந்து தயாரித்திருப்பதால் இதே படத்திற்கு பல பெயர்களில் கண்ணில்படுகிறது.

இந்த படத்திற்கு ஏன் ஐஎம்டிபில் 5.8 என ஆச்சர்யம் வருகிறது. 7 புள்ளிகள் வாங்குகிற அளவுக்கு தரமான படம்.

 யூடியூப்பில் கிடைக்கிறது. பாருங்கள்.

April 28, 2020

'அவர்களின்' கண்களில் பயம் தெரிகிறது


'அவர்களே' எதிர்பார்க்காத
இரண்டாவது வெற்றியை கண்டு ஆச்சர்யமடைந்தார்கள்.


படை, ஆயுதம், நீதி என
அனைத்தையும் பயன்படுத்தினார்கள்.
 

தன் நீண்ட வருட கனவுகளை
ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்தார்கள்.


எதிர்ப்பவர்களை
வசை மொழிந்தார்கள்.

பக்கத்து நாட்டுக்கு
போய்விடு என்றார்கள்.

சிறையில் அடைத்தார்கள்.
கொல்லவும் செய்தார்கள்.

'வெற்றிகள்' தந்த மமதையில்
கோடிக்கணக்கான மக்களை
தன் சொந்த மண்ணிலேயே
அகதிகளாக்க துணிந்தார்கள்.

மாணவர்களின் கூட்டில்
கல் எறிந்தார்கள்.
வங்கிகளில் கால்வலிக்க நின்றவர்கள்
தொழில் முடக்கப்பட்டவர்கள்
ஆலைகளில் இருந்து
துரத்தப்பட்டவர்கள்
உரிமைகள் கேட்டதற்காக
நசுக்கப்பட்டவர்கள் என எல்லோரும்
தெருக்களில் அலைஅலையாய்
வந்துகொண்டே இருக்கிறார்கள்.

ஒருமித்த குரலில் முழங்குகிறார்கள்.
துப்பாக்கிகள் சுட்டாலும்
வந்துகொண்டே இருக்கிறார்கள்.
'அவர்களின்'
படைகள் பின்வாங்குகின்றன.

குரலில் நடுக்கம் தெரிகிறது.
கண்களில் பயம் தெரிகிறது.
நாம் மேலும் மேலும்
முன்னேறுவோம்.
சமூகத்தின் அத்தனை
அழுக்குகளையும்
துடைத்தெறிவோம்.

#NoCAA
#NoNRC
#IndiaagainstCAA

- முகநூலில்... 21/12/2019

காளிதாஸ் (2019)

கதை. ஒரு உயரமான அபார்ட்மெண்டில் இருந்து ஒரு பெண் விழுந்து இறக்கிறாள். நாயகனான இன்ஸ்பெக்டர் விசாரணையை துவங்குகிறார். அடுத்து இதேபோல இன்னொரு மரணம். தற்கொலை இல்லை.
கொலைகள் என உறுதியாகிறது.

நாயகன் வேலை வேலை என வீட்டில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார். மாடியில் புதிதாக வந்த இளைஞன் மெல்லமெல்ல நாயகனின் துணையை நெருங்குகிறான்.

கொலையாளிகளை கண்டுபிடித்தார்களா? இந்த கொலைகள் எதற்காக என்பதையும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்கிறார்கள்.

****

ஒரு இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல விசாரணை படம். படத்தின் சஸ்பென்ஸை இறுதிவரை உடைக்காமல் சாமர்த்தியமாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.

ஒரு பிரச்சனை என்றால், அதை தைரியமாக எதிர்கொள்ளவேண்டும். அதிலிருந்து தப்பிக்க நினைத்தால், மேற்கொண்டு இடியாப்ப சிக்கல்தான் ஆகும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்.

கொலைக்கான காரணம் குடும்ப பெண்களிடம் இருக்கக்கூடிய செல்போன் மோகம், சபலம் என்று மட்டும் விவரிக்கும் பொழுது உறுத்துகிறது.

ஒரு நீண்ட காலத்திற்கு பிறகு பரத்திற்கு நல்ல படம். பரத் இது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் இன்னும் ஒரு ரவுண்டு வரலாம். மற்றவர்களும் நன்றாக செய்திருக்கிறார்கள். பார்க்க வேண்டிய படம்.

ஒரு கேள்வி

இன்றைய தினகரனில் ஒரு செய்தி படிச்சேன். கொழும்புல இருந்து இரண்டு பேர் ஏர் இண்டியா விமானத்தில சென்னைக்கு வர்றாங்க! பிறகு மெட்ரோ ரயில்ல போவதற்காக, பேக்கை ஸ்கேன் செய்ய வைக்கிறாங்க! உள்ளே வைச்சிருந்த தங்கத்தை காட்டிக்கொடுக்குது! உடனே போலீசுக்கு தெரியப்படுத்தி, கடத்தல் தங்கம்னு வந்து புடிச்சிட்டு போயிட்டாங்க!

அவங்கள விசாரிச்சதுல இன்னும் இரண்டு பேர் தங்கம் கடத்தி வர தகவலை சொல்றாங்க! அவங்களையும் பிடிச்சு சோதிச்சதுல, மொத்தம் நாலு பேர்கிட்ட இருந்தும் ஒரு கோடிக்கு மேலே தங்கத்தை கைப்பத்திட்டாங்க!
இதிலிருந்து என்ன தெரியுது?

சர்வதேச விமான நிலையத்தில கண்டுபிடிக்க முடியாத தங்கத்தை, மெட்ரோ ரயில் ஸ்கேன் கண்டுபிடிச்சுருச்சு!

உள்ளே லஞ்சம் கொடுத்து தப்பிச்சுட்டாங்க! வெளியே லஞ்சம் கொடுக்காததால மாட்டிக்கிட்டாங்கன்னு சொல்லலாமா? :)




- முகநூலில் ‍ 09/12/2019

San Andreas (2015)


கதை. நாயகன் அமெரிக்காவில் தீயணைப்புத் துறையில் ஹெலிகாப்டரில் மீட்புப்பணி செய்யும் வேலையில் இருக்கிறார்.

அவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள். அதில் இளைய மகள் ஒரு விபத்தில் இறக்கிறாள். அதில் அவருக்கும் துணைவியாருக்கும் மனக்கசப்பு ஏற்படுகிறது. ஆகையால் அவருடைய துணைவி பிரிய முடிவெடுக்கிறாள்.
இந்த சமயத்தில் சான் ஆன்ட்ராஸில் ஒரு மிகப்பெரிய பூகம்பம் ஏற்படுகிறது. முதலில் போராடி தன் துணைவியாரை காப்பாற்றுகிறார்.

பின்பு இருவரும் இணைந்து பூகம்பத்திலும், சுனாமியிலும் வேறு பகுதியில் சிக்கி கொண்ட தன் மகளை காப்பாற்றினார்களா என்பது முழுநீளக்கதை.

*****

2012 படத்திற்கு பிறகு ஒரு பூகம்பத்தை, சுனாமியை மிகப்பெரியதாக திரையில் அருமையாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை வந்த பூகம்பங்களில் அதிகப்பட்சம் ரிக்டர் அளவு கோலில் 9.3 வரை தொட்டிருக்கிறது. 2004ல் தமிழ்நாட்டை கலங்கடித்த சுனாமி வந்த பொழுது...பதிவான அளவு 9.3 தான்.

உலகத்தில் 1960ல் சிலியில் வந்தது தான் அதிகப்பட்சமானது என்கிறார்கள். பதிவான அளவு 9.6. படத்தில் 9.6 தான் வந்ததாக கதை சொல்லியிருக்கிறார்கள்.

நாயகன் ட்வைன் ஜான்சனும் மற்றவர்களும் நன்றாக செய்திருக்கிறார்கள்.
திரைக்கதை தான் பலவீனம். தீயணைப்புத்துறையில் பணியாற்றும் நாயகன் ஹெலிகாப்டரை ஓட்டிக்கொண்டு தன் துணைவியாரையும், தன் மகளை மட்டுமே காப்பாற்றுவதில் கவனமாய் இருக்கிறார். அவர் வேலை செய்யும் கடமை என்ன? அதில் என்ன போராட்டம் என்பது எங்குமே இல்லை. மொத்த நகரமும் சீட்டுக்கட்டு சரிந்தது போல உருக்குலையும் பொழுது, அதற்கு நாயகன் காட்டும் உணர்ச்சி இருக்கிறதே! அட! அட!

இந்தப்படம் வெற்றிப்பெற்றதால், இரண்டாம் பாகம் எடுப்பதாக சொல்கிறார்கள். டிரைலர் பார்த்தேன்.

(போலி) என்கவுன்டர்களை ஆதரிக்க முடியுமா?


"இதுதொடர்பாக ஆந்திர பிரதேச முன்னாள் காவல்துறை ஆணையர் ஸ்வரான்ஜித் சென் கூறும்போது, பொதுமக்களின் கொந்தளிப்பே போலீசாரை இதுபோன்ற முடிவு எடுக்க வைத்துள்ளது. இது முற்றிலும் சரியானது இல்லையென்றாலும், இது தான் எதிர்பார்க்கப்பட்டது என்று நான் நினைக்கிறேன். இதுபோன்ற ஏதாவது நடக்கப்போகிறது என்று எனக்கு தெரியும் என்று அவர் கூறியுள்ளார்."

- NDTV தமிழ், 06/12/2019

சமீபத்தில் தெலுங்கானாவில் ஒரு பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து, எரித்து கொன்றவர்கள் என நான்கு பேரை கைது செய்தார்கள்.
நாடு முழுவதும் பேசப்பட்ட இந்த கொலையை விரைந்து விசாரிக்க விரைவு கோர்ட் ஏற்றுக்கொண்டதாக இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி படித்தேன்.
இந்த சூழ்நிலையில்... இப்பொழுது அந்த நான்கு பேரும் விசாரணைக்கு அழைத்து வரும் வேளையில் தப்பி ஓடியதாகவும், போலீசு சுட்டு கொன்றதாகவும் செய்திகள் வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் இதை ஆதரித்து சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
கொலை குற்றம் சாட்டப்பட்டு போலீசு கைது செய்கிறவர்களே, குற்றவாளிகள் என எப்படி முடிவு செய்யமுடியும்?

அதில் போலீசு காசு வாங்கி கொண்டு ஏகப்பட்ட குளறுபடிகள் செய்யும். வேறு நபர்களை கூட கைது செய்யும்.

எழும்பூரில் குடித்துவிட்டு 2000 கோடி சொந்தக்காரன் பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி கொலை செய்தான். ஒரு சிறுமி படுகாயமுற்றாள்.

அதில் பணக்காரனிடம் காசு வாங்கி விட்டுவிட்டு அந்தாளிடம் வேலை செய்பவரை கைது செய்தார்கள்.

பிறகு போராடியதால்... அந்த பணக்காரனை கைது செய்தார்கள்.
போலீசும், அரசும் செய்கிற எல்லா அயோக்கியத்தனங்களையும், மக்களுக்கு வெறுப்பு இருப்பது தெரிந்துகொண்டு, இப்படி கொலை செய்வது மூலம்
நாயகனாக்கி கொள்ள முயல்கிறார்கள்.

இப்படி போலி என்கவுண்டரில் போட்டுத்தள்ளுவதன் மூலம் உண்மையை உலகுக்கு மறைத்துவிடுவார்கள். உதாரணம் : சுவாதி கொலையில் சிறையில் கொல்லப்பட்ட ராம்குமார்.

ஆகையால், எளிய மக்கள் உணர்ச்சிவயப்பட்டு ஆதரிக்கலாம்.

 ஆனால், உணர்ச்சிவயப்படாமல்... கொஞ்சம் நிதானமாக யோசித்தால் சமூகத்திற்கு நல்லது.

- 05/12/2019 - முகநூலில்...

Passengers (2016)


கதை. பூமியிலிருந்து வேற்று கிரகத்துக்கு ஒரு விண்வெளி கப்பல் கிளம்புகிறது. அதில் 5000 பயணிகள், 250 தொழில்நுட்ப குழுவினர் இருக்கிறார்கள்.

பயண காலம் 120 வருடங்கள். விஞ்ஞானத்தின் உதவியுடன் தூக்கத்தில் கடப்பதால் அடுத்தநாள் காலையில் இறங்குவது போல அதே வயதில் இறங்குவார்கள்.

இப்படி பயணிக்கும் பொழுது... 30 வருடத்தின் முடிவின் பொழுதே.. நாயகனை தவறுதலாக எந்திரம் எழுப்பிவிட்டுவிடுகிறது. வேறு யாரும் எழவில்லை. மீண்டும் தூக்கத்தில் பயணிக்க தொழில்நுட்பம் இல்லை. உதவுவதற்கும் யாரும் இல்லை.

தீவில் தனித்துவிடப்பட்ட cast away நாயகன் போல விண்வெளி கப்பலில் ஆகிவிடுகிறான். அவன் தொழில் அடிப்படையில் ஒரு மெக்கானிக். தனக்கு தெரிந்த எல்லா வழிகளிலும் முயல்கிறான். தோல்வி. அங்கு பாரில் இருக்கும் மனித வடிவில் உள்ள ரோபா தான் ஒரே பேச்சுத் துணை.

சில மாதங்கள் ஓடிவிடுகிறது. இனி தன் வாழ்வு வயதாகி இந்த விண்வெளி கப்பலிலேயே முடிந்துவிடும் சிந்தனையே அவனை நம்பிக்கையிழக்க வைக்கிறது. தற்கொலைக்கு முயல்கிறான். அவனே அதிலிருந்து மீண்டும்விடுகிறான்.

துணைக்கு தனது சக பயணியான ஒரு இளம் பெண் எழுத்தாளரை எழவைத்துவிடலாம் என யோசிக்கிறான். அப்படி எழுப்பினால்... அது நிச்சயமாய் ஒரு கொலை தான். அவளும் இந்த சூழலில் மாட்டிக்கொள்வாள்.
சில மாதங்கள் யோசித்து, யோசித்து, யோசித்து மண்டை காய்ந்து...கடும் மன உளைச்சலாகிறான். ஒரு வருட முடிவில்... ஒரு நாள் துணிந்து எழுப்பிவிடுகிறான்.

அதன் பிறகு என்ன ஆனது என்பது முழு நீளக்கதை.

****

படத்தின் பெயர் Passengers. ஆனால், படத்தில் பாரில் வேலை செய்யும் மனித வடிவில் உள்ள ரோபாவையும் சேர்த்து மொத்தமே நான்கு கதாபாத்திரங்கள் தான்.

விண்வெளி, விண்வெளி கப்பல் என்ற புதிய சூழலில் ஒரு காதல் கதை. உணர்வுபூர்வமான கதை தான்.

அவெஞ்சஸ்ரில் வரும் கிரிஸ் பிராட், ஜெனிபருக்கு படம் சொன்னால் கோபித்துக்கொள்வீர்கள். இருவரும் மொத்தப்படத்தையும் தாங்கியிருக்கிறார்கள்.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் எப்போதும் கற்பதற்கு தயாராக இருக்க வேண்டும். கற்றுக்கொள்ள தயாராக இருப்பவர்கள்தான் ஆசிரியராகவும் இருக்க முடியும். கற்றுக்கொள்வதை நிறுத்தும்போது அவர் ஆசிரியராக இருப்பதற்கான தகுதியையும் இழக்கிறார்.

- மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன்
ஒரு நேர்காணலில்...

#படித்ததில்_பிடித்தது

வரலாறு


பிரிட்டனில் வரலாற்றை சொல்லித் தருகையில் மாணவனது குடும்ப பின்னணி வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ள சொல்லுவார்கள். பாட்டன், முப்பாட்டன் என எந்தளவு செல்ல சாத்தியமோ அதுவரை தன் குடும்ப வரலாற்றை ஆராய சொல்வார்கள். அதில் ஒரு மாணவன் தன் மூதாதையர் செருப்பு தைக்கும் தொழில் செய்தார்கள் என்பதைக் கூட தெரிந்து கொள்வான். இப்படி தன்னைப் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்வதில் இருந்துதான் வரலாற்றை அங்கு கற்றுத் தரத் துவங்குவார்கள்.

- மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன்
ஒரு நேர்காணலில்...
 
#படித்ததில்_பிடித்தது

கூட்டுப்பண்ணை


“பருத்திச் செடிகள் அங்கே ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்தன. அளவில் இவ்வளவு பெரிய பருத்தியை இதற்கு முன் நான் கண்டதில்லை. எனவே, உள்ளே புகுந்து ஒன்றை பறிக்க முனைந்தேன். உடனே ஏதோ கத்திக்கொண்டு வேகமாக என்னைத் தடுத்தார் ஒரு உழவர். அவர் என்ன சொல்கிறார் என்று உடன் வந்த சோவியத் எழுத்தாள நண்பரிடம் கேட்டேன்.

‘பருத்திக்காய் இன்னும் முதிரவில்லையாம், பறித்து வீணாக்கிவிடாதீர்கள் என்று சொல்ல வந்தார்’ என்றார்.

நான் திகைத்து போனேன். ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள பெரிய தோட்டம் அது. நான் பறிக்கப்போனதோ ஒரே ஒரு பருத்தி. அதுவோ கூட்டுப்பண்ணையை சேர்ந்தது. கூட்டுப்பண்ணையைத் தம் சொந்தப் பண்ணையாக ஏற்றுக்கொள்ளாத ஒருவரால் எப்படி அவ்வாறு பதறி இருக்க முடியும்? நாட்டின் சொத்தை தனது சொந்த சொத்தைப்போல் மதித்து பாதுகாக்கும் பண்பை ஒரு சாதாரண கிராமவாசியிடம் அங்கே கண்டதை என்னால் மறக்க முடியவில்லை”

சோவியத் நாட்டில்: பயண நூல், எழுத்தாளர் அகிலன், பக்கம் 52
 
#படித்ததில்_பிடித்தது

முகநூலில் நான்காண்டுகள்


இன்றைக்கு முகநூல் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறேன் என்பதைச் சொல்லி வாழ்த்து தெரிவித்தது.

கடந்து வந்த நான்கு ஆண்டுகளை ஒரு பறவைப் பார்வை பார்த்தால்...
சொந்தமாக தான் எழுத வேண்டும். வேறு எதையும் பகிரக் கூடாது என்ற தீர்மானத்தை 90% கடைப்பிடித்து உள்ளேன். சிறந்தவையாக இருக்கும் பொழுதுதான் அந்த 10% கூட பகிர்ந்திருக்கிறேன். அதனால் மன்னிக்கலாம்.

மொக்கையாக, லைக், கமெண்ட்டுக்காக எழுதி மற்றவர்களின் நேரத்தை வீணாக்க கூடாது என்ற தீர்மானத்தை கடைப்பிடித்து உள்ளேன்.
யார் நன்றாக எழுதினாலும் பாராட்ட வேண்டும் என்பதையும் கடைப்பிடித்து உள்ளேன். சில பதிவுகளை பாராட்டவில்லையே என கேட்டால்... வேலைமிகுதியில் கண்ணில்படாமல் போயிருக்கும் அல்லது அந்த பதிவில் எனக்கு உடன்பாடு இருக்காது.

புத்தகம், திரைப்படம் பொருளாதாரம் மூன்றும் பிடித்தமானவை. கடந்த காலங்களில் நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தி உள்ளேன். நல்ல திரைப்படங்களை அறிமுகப்படுத்தி உள்ளேன். பொருளாதாரம் தான் எழுதவில்லை. அதை எழுத நிறைய படிக்க வேண்டியிருக்கிறது. வரும் நாட்களில் எழுதுவேன் என நம்புகிறேன்.

முகநூலில் விவாதம் என்பது ஆரோக்கியம் இல்லாமல் இருக்கிறது. கிடைத்த சில அனுபவங்களும் 'விவாதிக்காதே' என கற்றுத் தந்திருக்கின்றன.
மற்றபடி... யாரும் வராமல் நாம் மட்டும் டீ ஆத்தி என்ன ஆகப்போகிறது? நண்பர்கள், முகநூல் நண்பர்கள் நன்றாக எழுதினால் தொடர்ந்து உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு இந்நாளில் நன்றி சொல்ல நிறைய கடமைப்பட்டுள்ளேன்.

நன்றி.

- முகநூலில், 19/11/2019

ஓ பேபி (2019)


கதை. 18 வயதில் திருமணம். 7 மாதம் வயிற்றில் குழந்தை இருக்கும்பொழுது கணவன் இறந்துவிட, தனித்து வாழ்ந்து வாழ்க்கையை பல்வேறு சோதனைகளுடன் எதிர்கொள்கிறாள்.

தற்போது 70 வயதில் தன் நண்பனுடன் ஒரு உணவகம் நடத்துகிறாள். மகன் ஒரு நல்ல வேலையில் இருக்கிறார். மருமகள், பேரன், பேத்தி என வாழ்ந்தாலும் கடந்த கால துயர வாழ்க்கை அவளிடம் ஒரு கடுகடுப்பை தந்துவிடுகிறது. அதனால் மருமகள் வருந்துகிறாள். மற்றவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்.

மருமகளுக்கு மாரடைப்பு வர, வீட்டை விட்டு வெளியேற வேண்டியதாகிவிடுகிறது. தனக்கு சோதனை மேல் சோதனை தரும் கடவுளை எப்போதும் போல சபிக்கிறாள்.

திடீரென 'கடவுளின் ஆசியால்' 23வயதுக்கு திரும்பி விடுகிறாள். தான் இழந்த வாழ்வை வாழ்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. ஏகப்பட்ட கலாட்டாக்களுக்கு பிறகு என்ன ஆனது என்பது முழுநீள கதை.

****

Miss Granny என்ற தென்கொரிய படத்தின் கதையை முறையாக அனுமதி வாங்கி, மாற்றும் பொழுது 'தெலுங்கு மசாலா எதையும் தூவவில்லை' என்பது ஒரு மிகப்பெரிய ஆறுதல். தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

70 வயது பாட்டி லட்சுமி, இளமை காலத்தில் சமந்தா என இருவரும் மொத்த படத்தையும் தாங்கியிருகிறார்கள். மற்ற நடிகர்களும் நன்றாக செய்திருக்கிறார்கள்.

"வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றால் நாம் பால்யத்தை இழந்து விடுவோம்" ஒரு இடத்தில் சொல்வார்கள். உண்மை. அம்மாவை இழந்த பிறகு ஊருக்குப் போகும் போதெல்லாம் அதை உணருகிறேன்.

படம் சொல்லும் செய்தி இதுதான். "கடந்த காலத்தின் கசப்புகள் நிகழ்காலத்தின் இனிப்பை கொன்றுவிடக் கூடாது". கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை தான்.

பீல் குட் மூவி. ஒருமுறை நிச்சயம் பார்க்கலாம்.

மனிதாபிமானம் என்பது அழுவது அல்ல; போராடுவது

மனிதாபிமானம் என்பது அழுவது அல்ல; போராடுவது; போர்க்குணம் மிக்கது"

- எழுத்தாளர் கார்க்கி.

நிலா


நானும் என் பொண்ணும் பைக்கில் போய்க்கொண்டிருந்தோம்.

"நிலா ஏன் நம்ம கூடவே வருது?" என்றாள்.

"நீ சின்ன பொண்ணா இருக்கும் பொழுது... இதே கேள்விய கேட்ப!

யாரையாவது நிலாவிற்கு பிடிச்சுப் போச்சுன்னா பின்னாடியே வரும்னு சொல்வேன். உடனே ரெம்ப சந்தோசமா 'என் பின்னாடியே வருதுப்பா!' என சொல்வாய். 'அப்ப உன்னை நிலாவிற்கு பிடிச்சுப்போச்சு' என்பேன். ரெம்பவும் பூரித்துப்போவாய்."

இதைக் கேட்டு சின்னதாய் புன்னகைத்துவிட்டு... மீண்டும் அதே கேள்வியை கேட்டாள்.

"நிலா ஏன் நம்ம கூடவே வருது?"

"தெளிவா தெரியல! நான் கொஞ்சம் படிச்சுட்டு சொல்லவா!" என்றேன்.

"சரி" என்றாள்.



யாருக்காவது பதில் தெரியும்? தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க! நான் விஞ்ஞானத்தில் கொஞ்சம் வீக்!

"சார் ஸ்கூல்ல பாம் வைச்சுட்டாங்க!"

அவசர போலீஸ் 100 கட்டுப்பாட்டு அறை!

"சார் ஸ்கூல்ல பாம் வைச்சுட்டாங்க!"

"ஸ்கூல்ல பாம் வெச்சுட்டுங்களாம்!" என போனில் கேட்டு பதறும் புதிய நபரை...

மூத்த அதிகாரி

"பதறாதீங்க! அவங்க ஸ்கூல் என்னன்னு கேளுங்க!"

ஸ்கூல் பெயரை சொன்னதும்...

'பெயர் குமாரான்னு கேளுங்க"

கேட்டதும்... "நம்மளை யாருன்னு கண்டுபிடிச்சிட்டாங்கடா" என ஒரு மாணவன் போனை விட்டுவிட்டு ஓடிவிடுவான்.

அந்த மூத்த அதிகாரி கூலாக சொல்வார்.

"அந்த பையன் நம்ம ரெகுலர் காலர் (Caller) தான்! எக்ஸாம் நடக்கும் சமயங்களில் இந்த மாதிரி அடிக்கடி பசங்க போன் பண்ணுவாங்க. பதறாதீங்க" என்பார்.
 
#அதர்வா நடித்த 100 படத்திலிருந்து...

பசங்களுக்கு பள்ளி மீதும் தேர்வு மீதும் எவ்வளவு வெறுப்பு இருந்தால்... இப்படி போன் செய்வார்கள்?

இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை பாளையங்கோட்டையில் யூனிபார்மோடு வெளியில் சுற்றி இரண்டு குழுவாக பிரிந்து சண்டை போட்டுக்கொண்ட 40க்கும் மேற்பட்ட மாணவர்களை பிடித்து, ஒரு இன்ஸ்பெக்டர் பெற்றோர்களை வரவழைத்து, பசங்களை 1330 குறளை எழுதி தரச்சொல்லி, பிறகு எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.

மாணவர்களின் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறத

காடு களைந்தோம் - பாரதிதாசன் பாடல்


குறிப்பு : இன்று நவம் 7 - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். முதலாளித்துவம் உலகம் முழுவதும் ஆண்டு, பெரும்பாலான மக்கள் துன்பம், துயரங்களில் துவண்ட பொழுது, வரலாற்றில் முதன்முதலாய் உழைப்பாளிகள் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த நாள்.

உழைப்பாளிகளுக்கு ஆளத்தெரியாது என்ற முதலாளித்துவ பிரச்சாரத்தை சில பத்தாண்டுகள் சிறப்பாக ஆண்டு முறியடித்தார்கள். அந்த சாதனைகளை இன்றுவரை முதலாளித்துவத்தால் முறியடிக்க முடியவில்லை.

இந்த நாளை கடந்த 102 வருடங்களாக உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்.

நாமும் கொண்டாடுவோம்.

இந்த பாடலை மகஇக தோழர் பாடகர் கோவன் பாடியுள்ளார்.
ஒருமுறை கேளுங்கள்.

****

காடு களைந்தோம் - நல்ல
கழனி திருத்தியும் உழவு புரிந்தும்
நாடுகள் செய்தோம் - அங்கு
நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம்
வீடுகள் கண்டோம் - அங்கு
வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்
பாடுகள் பட்டோம் - புவி
பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.
மலையைப் பிளந்தோம் - புவி
வாழவென்றே கடல் ஆழமும் தூர்த்தோம்
அலைகடல் மீதில் - பல்
லாயிரங் கப்பல்கள் போய்வரச் செய்தோம்
பலதொல் லையுற்றோம் - யாம்
பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம்
உலையில் இரும்பை - யாம்
உருக்கிப்பல் யந்திரம் பெருக்கியுந் தந்தோம்.
ஆடைகள் நெய்தோம் - பெரும்
ஆற்றை வளைத்துநெல் நாற்றுக்கள் நட்டோம்;
கூடை கலங்கள் - முதல்
கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம்
கோடையைக் காக்க - யாம்
குடையளித்தோம் நல்ல நடையன்கள் செய்தோம்
தேடிய பண்டம் - இந்தச்
செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம்.
வாழ்வுக் கொவ்வாத - இந்த
வையத்தில் இந்நிலை எய்தப் புரிந்தோம்
ஆழ்கடல் காடு - மலை
அத்தனை யிற்பல சத்தை யெடுத்தோம்.
ஈழை அசுத்தம் - குப்பை
இலைஎன்னவே எங்கள் தலையிற் சுமந்தோம்.
சூழக் கிடந்தோம் - புவித்
தொழிலாளராம் எங்கள் நிலைமையைக் கேளீர்.
கந்தை யணிந்தோம் - இரு
கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்.
மொந்தையிற் கூழைப் - பலர்
மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்
சந்தையில் மாடாய் - யாம்
சந்ததம் தங்கிட வீடுமில் லாமல்
சிந்தை மெலிந்தோம் - எங்கள்
சேவைக் கெலாம் இது செய்நன்றி தானோ?

https://www.youtube.com/watch?v=lWVoFAUMmto&feature=youtu.be&fbclid=IwAR2kFOldNxac4F1SERhXJj7URZZk_T4AO4N_Gti4iUkspdb2mmDpNkRjiCk

#எனக்குப்பிடித்த_பாடல் 9

50 First Dates (2004)

கதை. ஒரு ஜாலியான கால்நடை மருத்துவர். ஒரு பெண்ணை உணவகத்தில் எதேச்சையாக சந்திக்கிறார். ரொம்பவும் பிடித்துவிடுகிறது. பழகுகிறார். அடுத்த நாள் அவளிடம் இன்னும் நெருங்கலாம் என போய் பேசினால்... "யார் நீங்கள்?" என்கிறாள். அதிர்ச்சியாகிறார்.

அவளும் அவள் அப்பாவும் ஒரு கார் விபத்தில் சிக்கியதில் விபத்துக்கு முந்திய நினைவுகள் மட்டும் தான் அவளுக்கு இருக்கும். அதற்கு பிந்திய நாட்களின் நினைவுகள் எதுவும் இராது.

மருத்துவர் அவளின் நிலையை அறிந்தும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அறிமுகமாகி பழகுகிறார்.

ஒரு கட்டத்தில் "இப்படிப்பட்ட நிலையில் உனக்கு நான் செட் ஆக மாட்டேன்" என நாயகி நாயகனிடம் உறுதியாக சொல்லிவிடுகிறாள். பிரிந்துவிடுகிறார்கள்.

அவளின் நினைவுகள் விடாமல் துரத்துகின்றன. பிறகு அவர்கள் இணைந்தார்களா என்பது மீதிக்கதை.

****

என்னுடைய நண்பர் ஒருவர் ஆசிரியருக்காக படித்திருந்தார். அருமையாக பாடம் நடத்த கூடியவர்.

ஒருநாள் உடல்நலம் சரியில்லாமல் மயங்கி விழுந்து, எழும்போது எதிரிலிருந்த துணைவியாரை கூட அவருக்கு அடையாளம் தெரியவில்லை. மெல்ல மெல்ல எல்லா நினைவுகளும் வந்து இயல்புநிலைக்கு திரும்ப மூன்று மாதங்களுக்கும் மேலானது.

ஆண்டுகள் பல கடந்தும் இன்றும் கூட்டல் கழித்தல் கூட பிரச்சனையாகிவிட்டது. விளைவு - ஒரு நல்ல ஆசிரியர் இப்பொழுது வாழ்க்கைத் தேவைக்காக செக்யூரிட்டி வேலை செய்கிறார்.

யோசித்தால்...வாழ்க்கை என்பது நினைவுகள்தான். ஒரு மனிதன் தன் நினைவுகளை தொலைத்து விட்டால் என்ன ஆவது? நினைத்துப் பார்க்கவே சிரமமாக இருக்கிறது.

ஜாலியான படம். தமிழில் அப்படியே எடுத்து இருந்தால் கூட வெற்றிபெறக்கூடிய படம்தான்.

இந்த படத்தின் கதையை கொஞ்சம் தொட்டுத்தான் 2007-ல் இயக்குநர் எழில் ஜெயம் ரவி, பாவானாவை வைத்து 'தீபாவளி' என்ற உணர்வுபூர்வமான ஒரு காதல் படத்தை தந்தார்.

நல்ல படம். நிறைய எதிர்பார்ப்போடு பார்க்காதீர்கள். படத்தை இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்திருக்க கூடிய கதை என எனக்கு தோன்றியது.

சுற்றல்!


திடீரென இரண்டு நாட்கள் தலைச்சுற்றலை உணர்ந்தேன்.

கருப்பு தேநீர் தொடர்ந்து குடிப்பதால்... பித்தம் எகிறிடிச்சோன்னு நினைச்சு தேநீரை நிப்பாட்டினேன்.

ஐந்து நாட்கள் சுற்றல் இல்லாமல் இருந்தது. ஆனால் மீண்டும் வந்தது.
அலட்சியம் செய்யக்கூடாது என மருத்துவரைப் பார்த்தேன். கையை அழுத்தமாக கட்டி, ரத்த அழுத்தம் பார்த்து "நார்மல்" என்றார்.
சர்க்கரைக்கு ஏதாவது மருந்து எடுக்கிறீர்களா? என்றார். இவ்வளவு சின்ன வயதில் இப்படி கேள்விக் கேட்டுவிட்டாரே என விசனப்பட்டேன்.

இப்பெல்லாம் குழந்தையை கூட இரக்கமே இல்லாமல் சர்க்கரை தாக்குகிறதே என மனதை தேத்திக்கொண்டு.... 'இல்லை' என்றேன்.

ஒருவேளை இப்ப வந்திருக்கலாம் அல்லவா! சந்தேகம் கொண்டு... சோதனைக்கு எழுதிக்கொடுத்தார்.

சாப்பிடாமல் ஒருமுறையும், சாப்பிட்டு ஒருமுறையும் ரத்தம் எடுத்தார்கள். சர்க்கரை 'நார்மல்' என முடிவு சொன்னார்கள்.

மருத்துவர் கொஞ்சம் யோசித்து, ENT (காது, மூக்கு, தொண்டை) மருத்துவருக்கு பரிந்துரை செய்தார்.

பொதுவாக நாம் நடப்பது காலால் அல்ல! காதால் என்பார்கள். திரும்ப, குனிய, நடக்க, ஓட என காது தான் மூளைக்கு தகவல் அனுப்பி கட்டுப்படுத்துகிறது. ஆகையால் தலைச்சுற்றலுக்கு காரணம் 80% காது தான் என ஒரு மருத்துவர் நிறைய நுட்பமாக ஒரு இதழில் நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். கொஞ்சம் தலைச்சுற்றலுடன் படித்து முடித்தேன்.

ENT மருத்துவர் தலையில் ஒரு விளக்கை மாட்டியிருந்தார். கொஞ்சம் பெரிய நெற்றிக்கண் போல இருந்தது. இரண்டு காதையும் திரும்ப, திரும்ப சோதித்தார். காதில் பிரச்சனை இருப்பது போல தெரியவில்லை.
காது கேட்கும் திறனை சோதித்து வர எழுதி தந்தார்.

சோதிக்கும் இடத்தில் அந்த பெண் மிக சத்தமாக கேள்விகேட்டார். அங்கு வருபவர்கள் பெரும்பாலும் காது கேட்காமல் வருவார்கள் போல! நான் மெதுவாக 'எனக்கு நன்றாக காது கேட்கும்' என்றேன். புன்னகைத்தார்.
காதில் ஹெட்போனை மாட்டியதும் ஏற்ற இறக்கங்களுடன் பீப் சத்தம் வந்தது. அந்த சத்தத்தை விட அந்த அறையின் ஏசி இயந்திரத்திலிருந்து அதிக சத்தம் வந்தது. சொன்னேன். அதை கண்டுகொள்ளாதீர்கள் என்றார்.

சோதித்து, காது கேட்கும் திறன் 'நார்மல்' என அறிக்கை தந்தார்கள்.

ENT மருத்துவர் சோர்வாகி, நரம்பியல் மருத்துவருக்கு பரிந்துரை செய்தார்.
அவரைப் பார்த்தேன். இதுவரைக்குமான சோதனைகளை சொன்னேன். அவர் சில அடிப்படை கேள்விகளை கேட்டு, சோதித்துவிட்டு, 'நார்மல்' என அறிக்கை தந்தார்.

அடுத்து, அவர் Neurotology மருத்துவருக்கு பரிந்துரைத்தார். "செய்கிற சோதனைகளினால் கொஞ்சம் தலைச்சுற்றல் வரும்" என்றார்.
15 நிமிடம் பல்வேறு சோதனைகள் செய்ததில் அவர் சொன்னபடியே வந்தது.
இருப்பினும், அவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. "பல் மருத்துவரையும், கண் மருத்துவரையும், மூன்று விதமான ரத்த பரிசோதனைகள் செய்துவிட்டு வாருங்கள்" என எழுதி தந்தார்.

கண் மருத்துவரிடம் எல்லா விவரத்தையும் சுருக்கமாக விவரித்தேன். கண்ணில் மூன்று முறை மருந்து ஊற்றி, கலங்கலாக்கி அரை மணி நேரத்திற்கும் மேலாக சோதித்தார். கண்ணில் அழுத்தம் நார்மலாக இருக்கிறது. ரெட்டினாவும் நன்றாக இருக்கிறது. கண்ணுக்கும் தலைச்சுற்றலுக்கும் சம்பந்தமில்லை என உறுதியாய் சொன்னார். வெளியில் வந்தேன். மருந்தின் விளைவால்.. எல்லா விளக்குகளும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பளிச் பளிச்சென தெரிந்தன. ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்தேன்.

இதற்கிடையே மூன்று ரத்த பரிசோதனைகளில் மூன்றில் இரண்டின் முடிவுகள் வந்தன. இரண்டு பரிசோதனைகளிலும் இருபது அயிட்டங்கள் இருந்தன. மருத்துவர் ஒவ்வொன்றாக கவனமாக பார்த்து 'நார்மல்' என்றார்.
அடுத்து பல் மருத்துவரைப் பார்த்தேன். சோதித்துவிட்டு, தாடையை எக்ஸ்ரே எடுக்க சொல்லி எழுதிக்கொடுத்தார்.

வரிசை நீளமாக இருந்தது. அந்த இடைவெளியில் தான் இந்த பதிவை எழுதுகிறேன்.

எனக்கென்னவோ எல்லா டிபார்மென்ட்டும் சுற்றி வந்து... எல்லா சோதனைகளும் செய்துவிட்டு, இறுதியாக மருத்துவர் இப்படித்தான் எழுதி தருவார் என நம்புகிறேன்.

"சமூக வலைத்தளங்களில் உலா வராதீர்கள். கண்டிப்பாக வாட்சப் செய்திகள், காணொளிகளை பார்க்காதீர்கள். தலைச்சுற்றல் தானாக சரியாகிவிடும்."

April 23, 2020

100 (2019)


கதை. போலீசில் சேர்ந்து ஏகமாய் சாதிக்க ஆர்வமாய் இருக்கிறார் நாயகன். ஆனால் கிடைப்பதோ அவசர போலீஸ் 100ல் மக்களின் அழைப்பை ஏற்று பேசும் வேலை. 'அடச்சே!' என்றாகிவிடுகிறது.

இளம்பெண்களை விபச்சாரத்திற்கு கடத்தும் கும்பல் குறித்து துப்பு கிடைக்கிறது. அந்த கும்பலிடம் தனது பால்ய நண்பனின் தங்கையும் மாட்டிக்கொள்கிறாள்.

பெண்களை கடத்தும் அந்த கும்பலை கண்டுபிடித்தாரா என்பது முழு நீள கதை!

***

வாங்கி வைத்திருந்து பல நாட்கள் கழித்து தூக்கம் வராத நேற்று இரவு தான் பார்த்தேன்.

பொள்ளாச்சி மற்றும் இன்னபிற சம்பவங்களால் சமீபகாலங்களில் நாயகர்கள் பெண்களைக் காக்க புறப்பட்ட தெறி, அடங்க மறு, தேவராட்டம் போன்ற தொடர்ச்சியான படங்களில் இதுவும் ஒன்று.

நிஜத்தில் பொள்ளாச்சி சம்பவங்களில் கைதாகி, போலீசாரால் சார்ஜ் சீட் சரியாக போடப்படாததால் அவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு, ஜாமீனில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியே வந்துவிட்டார்கள். நிழலிலோ நமது கதாநாயகர்கள் படங்களில் குற்றவாளிகளை போட்டு தள்ளி "நீதியை" நிலைநாட்டுகிறார்கள்.

இளைய தலைமுறையினர் எப்பொழுதும் செல்லும் கையுமாக அலைகிறார்கள். நுகர்வு கலாச்சாரம் பெருகப்பெருக இளம் தலைமுறையினரில் சிலர் துணிந்து குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். சமீபத்தில் ஒரு செயின் அறுக்கும் ஒரு இளைஞனோடு ஒரு கல்லூரி மாணவியும் சிக்கினார். போதை இருவரையும் இணைத்திருக்கிறது.
'ஈஸி மணி' என்னும் வெறியோடு அலையும் ஒரு மாணவன் தான் படத்தின் பிரதான வில்லன்.

மற்றபடி வழக்கமான நாயகனாக அதர்வா. நாயகி ஹன்ஷிகாவிற்கு வேலையே இல்லை. இயக்குனர் ஏற்கனவே காமெடி பேய் படமான 'டார்லிங்' படத்தை இயக்கியவர். வழக்கமான தமிழ் படங்களில் ஒன்று.

வால் பையனுக்கு அஞ்சலி!


சில ஆண்டுகளுக்கு முன்பு வலைப்பதிவுகள் (blogspot, WordPress) எல்லாம் மிகப்பிரபலம்.

ஆயிரக்கணக்கான வலைப்பதிவர்களை எல்லாம் ஒருங்கிணைத்த பிரபல வலைத்திரட்டி #தமிழ்மணம். இன்றும் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது.
ஆயிரக்கணக்கான பதிவர்கள் கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் என எழுதிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களில் சிலர் பிரபலமானவர்களாக வலம் வந்தார்கள். அதற்கு அவர்கள் கொடுத்த உழைப்பும், நேரமும் மிக அதிகம். அவ்வளவு பதிவுகள். அவ்வளவு வாதங்கள். அனல் பறக்கும்.

அதில் ஒருவர் ஈரோட்டைச் சேர்ந்த #வால்பையன். அடிப்படையில் அவர் நாத்திகவாதி. பல்வேறு தளங்களில், தலைப்புகளில் நன்றாக எழுதக்கூடியவர்.
அவரே ஒரு இடத்தில் பதிவுலகில் தான் ஆறாவது இடத்தில் இருந்ததாக சொல்கிறார். நானெல்லாம் பலர் எழுதுவதையும் படித்து, விவாதிக்க கூடிய ஒரு நபர். அவ்வளவே!

பின்னாட்களில் வலையுலகம் செல்வாக்கு மங்கி... முகநூல், டுவிட்டர் என மாறிவிட்டது. அதில் பலரையும் தொலைத்ததில் வால் பையனையும் தொலைத்துவிட்டேன்.

உடல்நலக் குறைவினால் வால்பையன் என்கிற Arun Raj இறந்துவிட்டதாக முகநூலில் இன்று பலரும் எழுதுகிறார்கள். அவர் பக்கத்தை பார்க்கும் பொழுது, மருத்துவமனையில் இருக்கும் பொழுதே நவம். 2 தேதி வரை முகநூலில் எழுதிக்கொண்டு இருந்திருக்கிறார்.

டாஸ்மாக் எவ்வளவோ மக்களை சிதைத்துக் கொண்டிருக்கிறது. அதில் வால் பையனும் ஒருவராகிவிட்டார் என்ற செய்தி கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது.

அவருடைய வயது 42 என்கிறார்கள். எவ்வளவோ அரசியல் பேசுகிறோம். விவாதிக்கிறோம். அரசு திட்டமிட்டு மக்களை கொல்கிற டாஸ்மாக்கை விட்டு தள்ளி நிற்க முடியாதா? என்பது கேள்வியாக இருக்கிறது. என் அனுபவத்தில் தனிநபர்களாக இருக்கும் பொழுது இப்படி சீரழிவது இயல்பாக இருக்கிறது. தான் சரியென நம்புகிற ஒரு அமைப்பில் இணைந்து வேலை செய்யும் பொழுது இவற்றையெல்லாம் எளிதில் கடந்துவிடமுடியும் என நம்புகிறேன்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது அஞ்சலி! :(

விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்!

விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்!
- கவிஞர் மகுடேசுவரன்

அது ஒரு மழைநாள். சென்னைக்கும் கோவைக்கும் இடையில் அப்போதுதான் சாயிருக்கைகள் கொண்ட தனியார்ப் பேருந்துகள் இயங்கத் தொடங்கியிருந்தன. தொண்ணூறுகளின் தொடக்கம் என்று நினைவு. சென்னையிலோ கோவையிலோ அத்தகைய பேருந்துகள் ஒன்பது மணிக்கு மேல் கிளம்பும்.

பேருந்தில் ஏறியமர்ந்ததும் ஒரு முழுப் படத்தைப் போடுவார்கள். அது முடிவதற்கு நள்ளிரவு பன்னிரண்டுக்கு மேலாகிவிடும். அப்படம் முடிகையில் பயணிகளில் பெரும்பாலோர் உறங்கத் தொடங்கியிருப்பர். பிறகு பேருந்தின் மென்னுறுமல் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும்.

இப்போதுள்ளதுபோல் அப்போது கைப்பேசி நோண்டல்களுக்கு வாய்ப்பில்லை என்பதால் அந்தப் படத்தை எல்லாருமே பார்த்தபடி செல்வோம். என்ன படம் போட்டாலும் விரும்பிப் பார்ப்போம். புதுப்படம் பழைய படம் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை.

அந்த மழைநாளில் நான் சென்னையில் அப்படிப்பட்ட ஒரு சொகுசுப் பேருந்தில் ஏறியமர்ந்தேன். எனக்குக் காலதர் (சன்னல்) ஓரத்தில் வாகான முன்னிருக்கை தரப்பட்டது. எனக்கு முன்னே தொலைக்காட்சிப் பெட்டி. வெளியே அடங்காமல் அதிராமல் தொடர்ச்சியான மழைத்தூறல். மழைச்சாலை என்பதால் பேருந்தினை விரைந்து செலுத்தவும் முடியாது. மெல்லிய நகர்த்தலோடு அது சென்றுகொண்டிருக்க ஒரு படத்தைப் போட்டார்கள். என் வாழ்க்கையில் அப்படியொரு 'திரைப்பட மனநெகிழ்ச்சியை' நான் அடைந்ததேயில்லை. அந்தப் படம் 'கிளிஞ்சல்கள்'.

தமிழில் எடுக்கப்பட்ட மிக நல்ல காதல் படங்களில் கிளிஞ்சல்களுக்குக் கட்டாயம் இடமுண்டு. அதன் மூலக்கதை ஒரு மலையாளப் படமாக இருக்கக் கூடும் என்பதற்கான தடயங்கள் அப்படத்தில் இருந்தன. ஆனாலும் தமிழில் அது மிகக் கச்சிதமான வடிவத்தில் எடுக்கப்பட்டிருந்தது. காலத்தை வென்று நிற்கும் காதல் படம் அமையவேண்டுமானால் அதன் நாயகனும் நாயகியும் அன்றலர்ந்த பூப்போன்றதாக, புதுத்தளிராக இருக்க வேண்டும். மோகனும் பூர்ணிமாவும் அப்படத்தில் புத்தெழிலோடு இருந்தனர்.

இயக்குநர் துரையை அவருடைய 'பசி' என்னும் திரைப்படத்திற்காக நினைவு கூர்வார்கள். பசி மிக அருமையான படம்தான். அதில் மாற்றுக் கருத்தில்லை. பிறழ்ச்சியான காதலுறவால் தாயுற்ற கர்ப்பத்தைத் தானுற்றதாய்ப் பழியேற்கும் ஒரு பெண்ணின் கதைதான் பசி. அது வேறொரு வகைமைத் திரைப்படம். ஆனால், கிளிஞ்சல்கள் திரைப்படத்தால் நாமடையும் உணர்ச்சித் தளம் சிறப்பானது.

இன்றைக்கு அந்தப் படத்தைப் பார்த்தால் இவ்வளவு புகழ்ச்சிக்குத் தகுதியுள்ளதுதானா என்று நினைக்கத் தோன்றலாம். ஆனால், அத்திரைப்படம் வந்த காலகட்டத்தோடு அது ஏற்படுத்திய விளைவை நினைத்துப் பார்க்க வேண்டும். ஓர் அச்சுக்கூடம் நடத்தி வருபவரின் மகனுக்கும் அவ்வூரின் ஆசிரியர் மகளுக்கும் இடையே தோன்றும் காதல்தான் கிளிஞ்சல்களின் கதை. இருவரும் இளமையின் முதற்படிகளில் நிற்கும்போது ஏற்படும் இதயத்துடிப்பைக் காதலாக்கி மடைமாற்றம் செய்து வானத்தில் பறப்பார்கள். இருவர்க்குமிடையே மதம் குறுக்கே நிற்கும். வழக்கமான செவ்வியல் காதல் கதைகளில் நிகழும் பிரித்துவைப்பு நிகழ்ச்சிகள் இங்கும் நடக்கும். இறுதியில் இருவரும் மயானத்தில் பிணமாக ஒன்று சேர்வார்கள். செத்த உடல்களாய் அவர்கள் தழுவிக்கிடப்பார்கள். "அவர்களை வாழவிட்டிருக்கலாமே..." என்ற தவிப்பைப் பார்வையாளர்கள் அடைவார்கள்.

நான் அந்த மழையிரவில் மெல்ல நகரும் பேருந்தில் அந்தப் படத்தைக் கண்டுவிட்டு உறக்கமிழந்தேன். காதலின் பல்வேறு நுண்ணடுக்குகள் எனக்கு விளங்கினாற்போல் இருந்தது. காதலுக்கு என்றும் நடுத்தூணாய் நிற்பது பெண்ணின் உள்ளம்தான் என்பதை அன்று தெரிந்துகொண்டேன். தன் பெண்ணின் காதல் மனத்தைப் பிழையிழைக்காமல் பிசகுபடாமல் பேணுவதொன்றே காதலில் விழும் ஒவ்வோர் ஆணும் செய்ய வேண்டிய கடமை என்றுணர்ந்தேன். இங்கே வாழ்கின்ற காதல்கள் அனைத்துக்கும் பெண்ணின் வழாஅநிலையே காரணம். கிளிஞ்சல்கள் அப்படிப்பட்ட ஒரு காதல் படம்.

கதையைச் சிக்கல் சிடுக்குகளின்றிக் கூறிச்சென்றாலே அது தெளிவான திரைப்படமாக இருக்கும். கிளிஞ்சல்கள் படத்தில் அந்தத் தெளிவைக் காணலாம்.

கிளிஞ்சல்கள் என்றதும் 'ஜூலி... ஐ லவ் யூ' என்னும் ஜாலி ஆப்ரஹாமின் குரல் நினைவுக்கு வரவேண்டும். 'விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்..,' என்னும் அந்தப் பாடலைக் கேளாத செவிகள் இருக்கின்றனவா என்ன? அந்தப் படத்திற்குப் பாடல்களை எழுதி இசையமைத்தவர் டி. ராஜேந்தர் என்பது இன்னொரு செய்தி. டி. ராஜேந்தர் எழுதிய பாடல்களில் இந்தப் பாட்டுக்குத்தான் உறுத்தலில்லாத மயக்கச் சொற்கள் கூடி வந்திருக்கின்றன.

'மைதடவும் விழியோரம்
மோகனமாய் தினமாடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்...
மன வீணையிலே நாதம் மீட்டி கீதமாக்கி நீந்துகின்ற தலைவா...
இதழ் ஓடையிலே வார்த்தையெனும் பூக்களாகி மிதக்கின்ற பாட்டா...'
என்று எழுதிய கைகளா அவருடையவை?

இளமையில் எல்லாருமே கலைவேகத்தில் கனிந்து மலர்ந்திருக்கின்றனர். காலம் செல்ல செல்லத்தான் ஏதோ ஒரு செக்குமாட்டுச் சூழலில் சிக்கிக்கொள்கின்றனர். நான் உதகையிலிருந்து மகிழுந்தை ஓட்டியபடி கீழிறங்கிய ஒரு நாள் 'விழிகள் மேடையாம்' பாடலை மட்டும் மீண்டும் மீண்டும் ஒலிக்கவிட்டபடி வந்தேன். ஜானகியம்மாவின் குரலும் இசையும் பாட்டு வரியும் மேகத்திலிருந்து இறங்கி வருவதைப் போன்ற ஒரு மாயத்தன்மையைத் தோற்றுவித்தன.

சில ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் துரையின் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றைப் பார்த்தேன். தாம் ஆக்கிய படங்கள் குறித்து அவர் மிதமிஞ்சிய பெருமையெல்லாம் கொள்ளவில்லை. அப்போதைய சூழலில் எவ்வாறு அப்படங்களை ஆக்க முடிந்தது என்பதைப்பற்றிய நினைவுகளை மட்டும் பகிர்ந்தார். தமிழ்த் திரையுலக வரலாற்றில் அவர்க்கென்று ஒரு தனிப்பக்கம் உண்டு. பசி, கிளிஞ்சல்கள், துணை என்னும் மூன்று திரைப்படங்கள் அவருடைய பெயரை எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும். எண்பதுகளின் வறுமை எத்தகையது, அவற்றிடையே அடித்தட்டு மக்கள் அவ்வாறு வாழ்ந்தனர், அவர்களுடைய காதலும் பாசமும் பிழைப்பும் எவ்வாறிருந்தன என்பதை உணர வேண்டுமானால் துரையின் பசி திரைப்படத்தைச் சான்றாக்கிக் காட்டலாம். 'பசி'யை எடுத்த துரைதான் 'நீயா' திரைப்படத்தையும் இயக்கினார் என்பது காலம் செய்த கோலம்தானேயன்றி வேறென்ன? எப்படி விழிகள் மேடையாம் பாடலை எழுதியவர்க்கு "இது அந்தப் புலி அது இந்தப் புலி" என்று சொல்ல நேர்ந்ததோ அதுதான் துரைக்கும் நேர்ந்திருக்க வேண்டும். கனவுகளோடு வரும் எந்தக் கலைஞனும் தன் கனவுகளை விட்டுக்கொடுக்காத இலட்சியப் பாதையில் எப்போதுமே நடக்க முடிவதில்லை.

****

பின்குறிப்பு : "எப்பொழுதுமே நடக்க முடிவதில்லை" என கவிஞர் ஒரு ஆதங்கத்தில் முடிக்கிறார் என்றே கருதுகிறேன்.

விட்டுக்கொடுக்காத இலட்சியப் பாதையில் இறுதிவரை வாழ்ந்த அப்படிப்பட்ட கலைஞர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து இருப்பதற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன.

#எனக்குப்பிடித்த_பாடல் 8

The Weather Man (2005)


கதை. நாயகன் சிக்காகோவில் ஒரு தொலைக்காட்சியில் காலநிலை (weather Report) அறிவிப்பாளராக இருக்கிறார். இளைஞர்களில் சிலர் அவ்வப்பொழுது அவர் மீது மில்க் ஷேக்கையோ, கெட்டு போன சிக்கனையோ தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார்கள். ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என புரிந்துகொள்ள முடியவில்லை.

கணவன் மனைவிக்குள் உள்ள கருத்து வேறுபாடால் 15 வயது பையன், 12 வயது பெண் பிள்ளையுடன் மனைவி தனித்து வாழ்கிறார். விரிசலை சரிசெய்வதற்கான முயற்சிகளிலும் நாயகன் சொதப்புகிறார்.

அப்பா ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். அவரை புற்றுநோய் தாக்குகிறது. இன்னும் சில மாதங்களில் இறந்துவிடுவார் என்கிறார் மருத்துவர். தனக்கு இருக்கிற ஒரு நல்ல ஆதரவையும் இழக்கப்போவது நிறைய கவலையளிக்கிறது.
நியூயார்க்கில் ஒரு புகழ்பெற்ற தொலைக்காட்சியில் வேலைக்கு வாய்ப்பு வருகிறது. அங்கு வேலை கிடைத்துவிட்டால் பொருளாதார பிரச்சனை, குடும்ப பிரச்சனை தீர்ந்துவிடும் என நம்புகிறார்.

என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
*****

தொலைக்காட்சியில் மழை பெய்யும் சொன்னா, பெய்யாது. பெய்யாது சொன்னா மழை பெய்யும் என சின்ன வயதில் இருந்தே கிண்டலடித்தது இன்னும் நன்றாக நினைவில் நிற்கிறது.

காலநிலை மாற்றம் என்பது கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலகம் முழுக்க பேசுபொருளாகவும் இருந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு கேரளாவில் ரெட் அலர்ட் என்றார்கள். இப்பொழுது திரும்ப பெற்றிருக்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க நமது கடுப்பை எல்லாம் காலநிலை அறிவிப்பாளர் மீது காட்டினால் எப்படி?

அமெரிக்க வாழ் சராசரி மனிதன் தனது பலத்தோடும் பலவீனத்தோடும் எப்படி போராடுகிறான் என்பதே கதை. எனக்கு பிடித்திருந்தது.

Nicolas Cage தான் நாயகன். அருமையாக பொருந்தியிருக்கிறார். மற்றவர்களும் அப்படியே! 'Pirates of Caribbean' படங்களை இயக்கியவர் தான் இந்த படத்தின் இயக்குநரும்!

தமிழிலும் கிடைக்கிறது. பாருங்கள்.

பெட்ரோமாக்ஸ் (2019)


கதை. மலேசியாவில் வாழும் ஒருவருடைய அம்மா அப்பா கேரள வயநாட்டில் வெள்ளத்தில் இறக்கிறார்கள். சென்னையில் இருக்கும் பூர்வீக வீட்டை விற்றுவிட்டு மலேசியாவிலேயே செட்டில் ஆகலாம் என நினைக்கிறார்.

ஆனால் அந்த வீட்டில் தமன்னாவுடன் வேறு சிலரும் பேயாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வீட்டை உரிய விலையில் விற்பதற்கு அது தடையாக இருக்கிறது.

வெவ்வேறு பிரச்சனைகளில் சிக்கிய நால்வர் பணத்தேவைக்காக அந்த வீட்டில் நான்கு நாட்கள் வசித்து பேய் இல்லை என்பதை நிரூபிக்க முயல்கிறார்கள்.

நால்வர்களும் பேய்களிடம் சிக்கி என்ன ஆனார்கள்? பேய்கள் அந்த வீட்டில் வசிப்பதற்கு என்ன காரணம் என்பதையும் கலகலப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.

****
Anando Brahma - என தெலுங்கில் வெளிவந்து வெற்றிபெற்ற ஒரு தெலுங்கு படத்தின் தமிழாக்கம் தான் இந்த படம். அங்கே தாப்ஸி. இங்கே தமன்னா. தமன்னாவை வைத்து பட வியாபாரம் செய்திருப்பார்கள் போல! ஆனால் தமன்னா பிரதான பாத்திரம் அல்ல. முனீஸ்காந்த் தான் பிரதான பாத்திரம்.
நான்கு பேருடைய பணச் சிக்கலை சொல்லும் பிளாஷ்பேக் காட்சிகள் எதுவுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிரிக்கவும் முடியவில்லை. பேய் படங்கள் என்றால் லாஜிக் தேவையில்லை என நினைக்கிறார்கள்.
இதே காட்சிகள் தான் தெலுங்கிலும் இருந்தனவா என தெரியவில்லை. இருந்திருக்கலாம். தெலுங்கு வெர்ஷன் வேறு! கதாநாயகன் அங்கு 200 பேரோடு சண்டை செய்கிறார். ஆனால் தமிழில் இன்னும் 20 பேரை தாண்டவில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம். ஆகையால் தமிழுக்கு மாற்றும் பொழுது லாஜிக்கோடு காட்சிகள் வைப்பது தான் சரியானது.
இடைவேளைக்கு பிறகு முனிஸ்காந்த் கொண்ட நால்வர் குழு பேய்களோடு மல்லுக்கட்டும் காட்சிகள் மட்டும் கலகலப்பாக இருக்கிறது. படத்தின் இறுதி காட்சிகள் உணர்வுபூர்வமாய் இருக்கின்றன.

படம் ஒரு வாரத்தை தாண்டியும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்போடு போனால் மிகவும் ஏமாந்து போவீர்கள்.

பெட்ரோமாக்ஸ் என்ற பெயருக்கும் படத்திற்கும் சம்பந்தமே இல்லை.

'அழகிய' சுவர்கள்!




சென்னை மெட்ரோ நிலைய தூண்களில் சுவரொட்டி ஒட்டி 'அழகை' கெடுக்கிறார்களாம். ஒட்டக்கூடாது என 2017ல் சட்டம் போட்டும் மதிக்கவில்லையாம். ஆகையால் மதிக்காத 10 பேர் மீது போலீசில் புகார் கொடுத்துவிட்டார்கள். 'அழகை' பாதுகாக்க ஒரு படை உருவாக்கிவிட்டார்கள். இரவு 12 மணியிலிருந்து விடிகாலை 4 மணி வரை தூண் தூணாக சுற்றிவருவார்களாம். இன்றைய தினசரிகளில் அறிவித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே சென்னை மாநகராட்சி எழில்மிகு சென்னையை உருவாக்க சபதம் பூண்டு, பல ஆண்டுகளாகிவிட்டன. மேலே சொன்னது போல தடைச் சட்டமும் போட்டுவிட்டார்கள்.

முக்கிய வீதிகளில் உள்ள பல சுவர்களில் தமிழ் மன்னர்களின் 'கொடை வள்ளல்' மற்றும் இன்னபிற சிறப்புகள், தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறார்கள்.

சென்னையை 'அழகுப்படுத்துதல்' பற்றியே நாம் தனியாக பேச வேண்டும். இப்பொழுது நான் சொல்ல வருவது வேறு.



சுவர்களை வெறும் சுவர்களாக பார்த்தவர்களா நீங்கள்? எனக்கு அப்படி இல்லை. இந்த சமூகம் ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கின்றன? ஏன் இத்தனை கோளாறுகள்? இதை சரி செய்ய முடியாதா? சரி செய்வது என்றால் எப்படி என்று தேடுதலோடு திரிந்து கொண்டிருந்தேன். தேடுதலோடு திரிந்த என்னை, பாதைக்காட்டி அழைத்துச் சென்றது சுவர்கள் தான்.
நான் வாழ்ந்த பகுதியில், பட்டிமன்றமா? வழக்காடு மன்றமா? கலை நிகழ்ச்சியா அல்லது பொதுக்கூட்டமா? எல்லாவற்றையும் எனக்கு தெரிவித்தவை சுவர்கள் தான். தினம் ஒரு நிகழ்ச்சி. இன்றைக்கு ஒரு சரியான அமைப்பை வந்தடைய உதவியவை இந்த 'அசுத்தமான' சுவர்கள் தான்.
சுவர்களை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள்?

வாக்கு அரசியல் கட்சிகள். கொள்கை இல்லாது போனதால், தன் தலைவர்களின், தளபதிகளின் மூஞ்சிகளை வரைந்து வைக்கிறார்கள். இன்னும், விளம்பர சுவரொட்டிகள் மற்றும் மாற்று அரசியலை மக்களிடையே கொண்டு செல்லும் ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர அமைப்புகள்.
இப்படி சுவர்களை தடை செய்வதின் மூலம், யாருக்கு உண்மையிலேயே இழப்பு? வாக்கு அரசியல் கட்சிகள் இப்பொழுது தனித்தனியாகவே தொலைக்காட்சி அலைவரிசையை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அவ்வளவு வசதியில்லை என்றாலும், பத்திரிக்கைகளை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். தன் சரக்குகளை விற்பனை செய்யும் முதலாளிகள் வேறு ஊடகங்களுக்கு எளிதாக நகர்ந்துவிடுவார்கள். பணம் கொஞ்சம் கூடுதலாக செலவழியும். அவ்வளவு தான்.
 
உண்மையில் பாதிப்பு என்பது ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர சக்திகளுக்கு தான்! தனது நிகழ்ச்சி நிரலை பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால், தேசிய நீரோட்டத்தில் கலந்து அவர்களோடு அந்த ஜனநாயக சகதியில் படுத்து உருண்டால் தான், சின்ன செய்திகளை கூட வெளியிடுவார்கள். இல்லையென்றால், இருட்டடிப்பு தான்.

இதனால் தான், அரசு, தன்னைப் பார்த்து கேள்வி எழுப்புகிற, குடைச்சலை தருகிற சுவர்களை, 'அழகிய' ஓவியங்கள் மூலம் தடை செய்கிறது. மக்களை 'அழகு' என்ற சொல்லால் ஏற்க வைக்கிறது.

எதார்த்தத்தில் அரசுக்கு எதிராக எந்த சுவரொட்டியும் பிரிண்ட் பண்ணக்கூடாது என அதன் உரிமையாளர்களை ஏற்கனவே கடுமையாக மிரட்டி வைத்திருக்கிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர அமைப்புகள் சமூக வலைத்தளங்களை சுவர்களாக பயன்படுத்துகிறார்கள்.
அரசுக்கு அதுவும் மண்டையை குடைகிறது. அதனால் சமூக வலைத்தளங்களை மிரட்டுகிறது. கட்டுப்பாடுகள் விதிக்கிறது. தூத்துக்குடியில், காஷ்மீரில் இணயத்தையே சில நாட்கள் தடை செய்கிறது.
சமூக வலைத்தளத்தில் பயனாளர்களின் ஆதாரை இணைக்க சொல்லி, இப்பொழுது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அநேகமாக இப்பொழுது உள்ள நெருக்கடியான காலத்தில் அரசு வெற்றிபெற்றுவிடும்.

சீப்பை எடுத்து ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்று போகும் என நினைக்கிறார்கள்.

முகநூலில்....19/10/2019

எழுத்தாளர் இராஜேஷ்குமாருக்கு 50 ஆண்டு வாழ்த்துக்கள்!


நாலாம் வகுப்பு படித்த பொழுது காலையில் தேநீர் கடையில் தேநீர் வாங்க போன பொழுது, தினத்தந்தியில் சித்திரக்கதை கன்னித்தீவு படிக்கத் துவங்கினேன். இன்றும் தன் காதலிக்காக அடர்ந்த காடுகளிலும், மலைகளிலும் மந்திரவாதி மூசாவை தேடி அலைந்து கொண்டிருப்பார் என நினைக்கிறேன். (இன்றும் வருகிறது

பிறகு பள்ளி முடிந்து வீடு திரும்பும் வேளையில் ஒரு கடையில் வாடகைக்கு வாங்கி ஜேம்ஸ்பாண்ட், இரும்புகை மாயாவி, துப்பாக்கி வீரர்களின் சாகசம் என காமிக்ஸ் சாகசம் படிக்க துவங்கினேன். 

பிறகு, அதே கடையில் அம்புலிமாமா, பாலாமித்ராவிற்கு தாவினேன். இப்படி சில வருடங்கள் ஓடின.

ஒரு நாள் முடிவெட்டும் கடையில் இராஜேஷ்குமார் எழுதிய ஒரு க்ரைம் நாவல் எதைச்சையாய் தட்டுப்பட, பரபரவென முழுக்க படித்துவிட்டு தான் வீடு போய் சேர்ந்தேன்.

தொடர்ச்சியாய் படிக்க அதற்கும் ஒரு கடையை கண்டுபிடித்து வைத்திருந்தேன். தினம் ஒரு நாவல் வாடகைக்கு வாங்கி வாசிப்பேன். இராஜேஷ்குமாரிலிருந்து துவங்கி, பட்டுக்கோகோட்டை பிரபாகர், சுபா என கிரைம், கடத்தல், கொலை, துப்பறிதல் என சில ஆண்டுகள் ஓடின. இராஜேந்திரகுமார் நாவல்கள் அந்த வயதில் கிளுகிளுப்பூட்டின. பிறகு பாலகுமாரனின் எழுத்தில் கொஞ்ச காலம் மயங்கி கிடந்தேன்.

பிறகு, உள்ளூர் நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்தேன். சுஜாதா நிறையவே ஈர்த்தார். தேடித்தேடி படித்தேன்.

பிறகு, சேர்க்கை 'சரியில்லாமல்' போனதால், கார்க்கி, கணேசலிங்கன், சோவியத் நாவல்கள் என சமூகம் குறித்து சீரியசாக எழுதும் எழுத்தாளர்கள் பக்கம் வந்து சேர்ந்தேன்.

கொஞ்சம் வாழ்க்கையை திரும்ப பார்த்தால்... படித்ததில் என்னுடைய வளர்ச்சி சரியாகத்தான் இருந்திருக்கிறது.

படிப்பதும் சமூக செயல்பாடுகளும் தான் என் வாழ்க்கையை செம்மை செய்திருக்கின்றன என்பதையும் உணரமுடிகிறது.

35, 40 வயதிலும் இராஜேஷ்குமாரிடமே டேரா போட்டு நிற்கும் ஒரு சிலரைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். என்னைக் கேட்டால், அவரைத் தாண்டி வந்துவிடவேண்டும்.

நான் படித்து வந்த பாதையில்... இராஜேஷ்குமார் அவர்கள் 50 ஆண்டுகளைத் தாண்டியும் இன்றும் எழுதிக்கொண்டு இருக்கிறார்.

அவருக்கு பாராட்டுவிழா சமீபத்தில் எடுத்திருக்கிருக்கிறார்கள். தாமதமாக தான் தெரிந்தது. முன்பே தெரிந்திருந்தால் கலந்தும் கொண்டிருந்திருக்கலாம்.
மீசை முளைத்த வயதில்... விவேகமாக துப்பறிந்த விவேக் இன்னும் மனதில் நிற்கிறார். இன்னும் அதே இளமையோடு, இராஜேஷ்குமார் கதைகளில் விவேக் துப்பறிந்து பல வழக்குகளின் முடிச்சுக்களை சுவாரசியமாக அவிழ்த்துக்கொண்டிருப்பார் என்றே நம்புகிறேன். திறமையான ஆபிசை என்பதால் எழுத்தாளர் அவருக்கு பதவி உயர்வு கொடுத்தாரா என அறிய ஆவலாய் இருக்கிறேன்.

இராஜேஷ்குமார் அவர்களுக்கு ஒரு வாசகனாக எனது அன்பு வாழ்த்துக்களும் நன்றிகளும்!

பொருளாதார நெருக்கடியும் பெருமழையும்!


சென்னையின் புறநகர் பகுதி. மாலை 4 மணி. மெல்ல மெல்ல இருட்டிக்கொண்டு வந்தது. நேற்று இந்த பகுதியில் நல்ல மழை பெய்ததாக சொன்னார்கள். மழையில் மாட்டிக்கொள்ளக்கூடாது. எவ்வளவு விரைவாக கிளம்பவேண்டுமோ, கிளம்பிவிடவேண்டும் என நினைத்தேன்.

அந்த சிறுநிறுவனத்திற்குள் நுழைந்தேன். கடந்த பிப்ரவரிக்கு பிறகு இபோழுது தான் வருகிறேன். கடந்த மார்ச் மாதத்திலிருந்து அந்த நிறுவனம் ஜி.எஸ்.டி கட்டவில்லை. நிறுவனம் பெரும் பொருளாதார சிக்கலில் இருந்தது. முன்பு, ஜாப் வேலை (Job work) செய்பவர்களுக்கு, வரி இல்லாமல் இருந்தது. ஆகையால், வேலையை செய்து பணம் வரும்பொழுது வாங்கிக்கொண்டு செலவுகளை எதிர்கொண்டார்கள்.

ஜாப் வேலைக்கும் ஜிஎஸ்டி வரி போட்ட பிறகு, மாதம் மாதம் பணம் வரி கட்ட வேண்டியதாகிவிட்டது. வேலை தருபவரோ பணத்தை தாமதமாக தரும் பொழுது, பணம் கட்ட முடியாத சிக்கலுக்கு போய்விடுகிறார்கள். தாமதமாக கட்டினால், ஒரு நாளைக்கு 50ரூபாய் தாமதக்கட்டணமும் கட்டவேண்டியவர்களாகிவிடுகிறார்கள்.

இந்த நிறுவனம் ஆட்டோமொபைல் தொழில் சார்ந்தது தான். ஆறு மாதத்திற்கு முன்பு வந்த வேலை கூட இப்பொழுது வருவதில்லை. ஆகையால், மாதாந்திரம் எதிர்கொள்ளும் வாடகை, மின்கட்டணம், சம்பளம் போன்ற அடிப்படை செலவுகளை கூட எதிர்கொள்ளமுடியவில்லை. ஆகையால், கூடுதல் வருமானத்திற்காக ஒரு ஸ்டேசனரி கடை போடலாம் என்ற எண்ணத்தில், இந்த பகுதியிலேயே ஒரு கடையை வாடகைக்கு எடுத்திருப்பதாக சொன்னார்..” அதற்கும் ஜி.எஸ்.டி எடுக்கனுமா?” என்றார். ”வேண்டியதில்லை. இரண்டு மூன்று மாதம் கடையை நடத்துங்கள். அதன் விற்பனை, ஜி.எஸ்.டி எடுக்கலாமா? வேண்டாமா?” என்பதை தேவையிலிருந்து பிறகு முடிவு செய்யுங்கள்” என்றேன். சரி என்றார்.

இவருடைய நிலை மட்டும் இப்படியில்லை. என்னுடைய வாடிக்கையாளர்கள் (Clients) சிலரின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் கிட்டத்தட்ட 100 பேர் வரை வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். பி.எப் இன்ஸ்பெக்சன் முடித்த பிறகு, அவரிடம் மிக குறைந்த கட்டணத்தைக் கேட்டு பில்லை நீட்டினால், ”நீங்கள் கடந்த 10 நாட்களாக வேலை செய்தீர்கள். சரி தான். ஆனால், கம்பெனியை இழுத்துமூடலாமா? என்ற யோசனையில் இருக்கிறேன். வேலை செய்த இடங்களில் எல்லாம், பணம் வரமாட்டேன் என்கிறது. வேலை செய்பவர்களுக்கு சம்பளத்தை கூட மாதம் இருமுறை தான் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். அவ்வளவு நெருக்கடி!” என புலம்பித்தள்ளினார். "எனக்கும் அதே பிரச்சனை தான். ஆகையால், இப்பொழுது இந்த பில்லை வாங்கிக்கொள்ளுங்கள். பணம் வரும் பொழுது வாங்கிக்கொள்கிறேன்” என சொல்லிவிட்டு வந்தேன்.

மீண்டும் வந்த வேலைக்கு வருவோம். மார்ச் மாதத்திலிருந்து, ஒவ்வொரு மாதமாக கணக்குப் பார்த்து வந்தேன். ஜூலை மாதம் வருவதற்குள் அவர் வங்கியில் வைத்திருந்த பணம் மொத்தமும் தீர்ந்துவிட்டது. அவர் கட்டிய 80000 பணத்திற்கு ரூ. 20000த்திற்கும் மேல் தாமதக்கட்டணம் மட்டுமே செலுத்தினார். இப்பொழுது தாமதமாக வரியைக் கட்டியதற்கு வட்டி (Interest) கூடுதலாக பின்பு கட்டவேண்டியிருக்கும். அது தனி.

நிறுவனத்தை மூடிவிட்டு, வண்டியை இருவரும் எடுக்கும் பொழுது, மழை லேசாக துவங்கியிருந்தது. அவர் எனக்கு ஜனவரியிலிருந்தே கட்டணம் தரவேண்டும். வேலை செய்த பொழுது, என்னுடைய நிலையை கேட்டார். நானும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதை சொல்லியிருந்தேன். இப்போதைக்கு ரூ. 10000 தருகிறேன். பிறகு மீதியை தருகிறேன் என்றார். வேறு வழியில்லை. ஏற்றுக்கொண்டேன்.

போக போக மழை கொஞ்சம் பெரிதாக விழத்துவங்கியது. மழையில் நனைவது எனக்கு எப்பொழுதுமே பிரச்சனை. படுக்க வைத்துவிடும். இரண்டு நாட்கள் வேலை எதுவும் செய்யமுடியாது. ஆனால், இப்பொழுது இவரை விட்டுவிட்டால், நாளை காலையில் “வேறொன்றுக்கு பணம் செலவாகிவிட்டது. இரண்டு நாட்களில் பணம் ஏற்பாடு செய்து, தருகிறேன்” என்பார். பின்பு பணம் வாங்குவது பெரிய சிரமமாகிவிடும் எனப்பட்டது. இன்னும் வாடகை, பலசரக்கு கடைக்கு கொடுக்காதது எல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தது.

அவரை தொடர்ந்து என் வண்டியில் போகும் பொழுதே, மோடியின் ஆட்சி, பொருளாதார நெருக்கடி, அவருடைய மந்திரிகளின் உளறல்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது. பெருமழை பெய்தது. தெப்பலாய் நனைந்துவிட்டேன். அவரே பாலத்திற்கு அடியே ஓரங்கட்டி நின்றார். சில நிமிடங்களில். அவரே “முழுக்க நனைந்துவிட்டோம். போய்விடலாமா” என்றார். “நானும் அதைத்தான் நினைத்தேன்” என்றேன். இருவரும் கிளம்பினோம்.

மூன்று கிலோ மீட்டர் போனதும், மழையே எங்கள் மீது இரக்கப்பட்டு நின்றது. சாரல் மட்டும் வீசியது. ஏ.எடி.எம்மை பார்த்து நிறுத்தி உள்ளே நுழைந்தார். பணம் எந்தவித பிரச்சனை இல்லாமல் வந்துவிடவேண்டும் என 'பிரார்த்தனை' செய்தேன். பணத்தை கொண்டு வந்து கையில் தந்தார். நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன். மீண்டும் மெலிதாய் மழை பெய்ய துவங்கியது. வீடு வந்து சேர்வதற்குள் இரவு 10 மணிக்கு மேலாகிவிட்டது.

வாழ்க்கைக்கு தேவையானதை சம்பாதிப்பதற்கு எப்படி எல்லாம் சிமரப்பட வேண்டியிருக்கிறது என நினைத்துக்கொண்டே தூங்கினேன். பல லட்சம் பேருக்கு வேலை இல்லை. வேலை செய்பவர்களும் சிரமப்பட்டு வாழ்கிறார்கள். மக்கள் பித்துப்பிடித்துப் போய் அடுத்த ஆட்சியிலும் மோடிக்கே வாக்களிக்கிறார்கள். பதறிப்போய் எழுந்தேன். கனவு என அறிந்து ஆறுதலடைந்தேன். இருப்பினும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள வெகுநேரம் ஆனது.

- முகநூலில் .... (17/10/2019  )

National Treasure (2004)


புதையல் வேட்டை குறித்த முக்கிய படங்களில் ஒன்று!

கதை. நாயகன் குடும்பம் சில தலைமுறைகளாக வரலாற்று வழியில் உருவாக்கப்பட்ட ஒரு புதையலை தேடிக்கொண்டே இருக்கிறது. நாயகனின் அப்பாவோ தன் இளமை காலம் முழுதும் தேடிப்போய் சோர்ந்து, கடுப்பாகி விட்டுவிடுகிறார். நாயகனுக்கு இப்பொழுது ஒரு (வில்லன்) குழு ஆதரவு தர, பனிப்பிரதேசத்தில் மூழ்கி கிடக்கும் ஒரு கப்பலுக்குள் ஒரு துப்பு (Clue) கிடைக்கிறது.

அடுத்த துப்பு அமெரிக்க சுதந்திர பிரகடனத்தின் பின்னால் இருப்பதாக அறிகிறார்கள். ஆய்ந்து பார்க்க அமெரிக்க அரசு அனுமதிக்காது. ஆகையால் வில்லன் திருடுவோம் என்கிறான். அரசின் முக்கியமான வரலாற்று ஆவணம். ஆகையால், நாயகன் வேண்டாம் என மறுக்கிறான். இருவரும் சண்டை போட்டு பிரிந்துவிடுகிறார்கள்.

வில்லன் குழு திருடிவிட்டால், ஆவணத்தை அழித்துவிடுவார்கள். ஆகையால், அதைக் காப்பாற்ற நாமே திருடுவோம் என நாயகன் தன் நண்பனுடன் முடிவெடுக்கிறான். பல்வேறு பாதுகாப்பு, கட்டுப்பாடு, களேபரங்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக நாயகன் திருடியும் விடுகிறான், ஒருபக்கம் வில்லன் குழு துரத்த, இன்னொரு பக்கம் அமெரிக்க போலீஸ் (FBI) துரத்த, நாயகன் குழு புதையலை கண்டுபிடித்தார்களா என்பதை பரபரப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.

*****

புதையலை தேடி வந்த ஹாலிவுட் படங்கள் அதிகம். அதில் சுவாரசியமாகவும், வெற்றிப் பெற்ற படங்களும் மிக குறைவு தான். புதையல்னா சும்மாவா! அதில் முக்கியமான படம் இது என்கிறார்கள்.

ஒரு துப்பு. அதைத் தொடர்ந்து போனால், இன்னொரு துப்பு. போங்கய்யா நீங்களும் உங்க துப்பும். ”என் வாழ்க்கையை போச்சு” என நாயகனின் அப்பா சொல்வதை தான்… படத்தில் ஒன்றைத் தொட்டு, இன்னொன்றை தொட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். சுவாரசியமாக தான் இருக்கிறது.
சுதந்திர பிரகடனத்தின் முக்கியத்துவத்தை பலமுறை சொல்வதால், நமக்கே ஒரு கட்டத்தில் அதற்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என பதட்டப்படுகிறோம்.

துப்பு ஒரு பக்கம் சுவாரசியம் என்றால், வில்லன், FBI துரத்தலும் ஒரு ஆக்சன் படமாகவும் ஆக்கிவிடுகிறது.

நாயகன் நிக்கோலஸை முன்பு 8MMல் பார்த்தேன். அதற்கு பிறகு இந்த படம். மற்றவர்களும் அருமை. புதையல் குறித்தான படங்களை சொல்லும் பொழுது இந்தப் படத்தையும் பலரும் சொல்கிறார்கள். ஆனால், தமிழில் யாராவது எழுதியிருக்கிறார்களா என தேடினால், காணோம். ஏன்? புரியவில்லை.
படத்தின் தயாரிப்பாளருக்கு இந்த படம் ஒரு புதையல் தான். இரண்டாம் பாகம் எடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். மூன்றாவது பாகம் இந்தா, அந்தா என இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள். நிக்கோலஸ்க்கு வயதாகிவிடும் போலிருக்கிறது. இப்பொழுதே 55-ல் இருக்கிறார்.

 2004ல் வந்த படம். இப்பொழுது பார்த்தாலும் புதிதாக தான் இருக்கிறது. தமிழிலும் கிடைக்கிறது. பாருங்கள்.

பாடலாசிரியர் ராபர்ட் ரங்கா சாப்பாட்டுக்கடை!

நேற்று மதியம் 3.30 மணியளவில் கோடம்பாக்கம் பக்கம் வேலை விஷயமாக சுற்றிக் கொண்டிருந்தேன். சாப்பிட கடை தேடினேன்.

டிரஸ்ட்புரம், புலியூர் முதன்மை சாலையில் ஒரு சின்ன கடையில் "#முதியவர்களுக்கு சாப்பாடு இலவசம்! #மாற்றுத் திறனாளிகளுக்கு பாதி விலை" என போர்டு போட்டிருந்தது.

இப்படி எழுதியிருப்பதால், மோசமான சாப்பாடாக இருக்காது என்ற நம்பிக்கை வந்தது. சாப்பாடு தீர்ந்து போனதால் மீண்டும் சூடாக வடித்து கொண்டிருந்தார்கள்.

சாப்பாடு, சாம்பார், குழம்பு, பீட்ரூட் பொரியல், காராமணி கூட்டு நன்றாக இருந்தது. விலையும் அதிகமில்லை 40 ரூபாய் தான்.

சாப்பிட்டுக் கொண்டே கேட்டேன் "இப்படி போடு வெச்சிருக்கீங்களே தினமும் நிறைய பேரு வந்துட்டா என்ன செய்வீங்க!" என்றேன்.

"கடவுள் நம்மல அந்தளவுக்கு சோதிக்கலை! தினம் ஒரு ஆளு, இரண்டு ஆளு அனுப்பி வைக்கிறார்" என்றார்.

"நம்ம ஊர்ல ஆதரவற்ற வயசானவங்க அதிகமாச்சே! இலவசம்னா தொடர்ந்து வருவார்களே!" என்றேன்.

"அவங்களுக்கு ஒரு தெளிவு இருக்குது. ஒரு படத்துல (பாய்ஸ்) செந்தில் சொல்வாரே எங்கெல்லாம் இலவசமா சாப்பாடு தருவாங்களோ! அவங்களுக்கு தெரியுது. ஒருத்தர் இன்னைக்கு வர்றார்னா ரெண்டு மாசம் கழிச்சு தான் திரும்ப வருவார்" என்றார்.

"எத்தனை வருஷமா இந்த கடைய நடத்துறீங்க?

"2002ல் இருந்து நடத்துறேன் தம்பி" என்றார்.

"எப்படி இப்படி உதவனும்னு தோணுச்சு?"

"நமக்கும் கீழே உள்ளவர் கோடி! நினைத்துப்பார்னு கடவுள் சொல்றாரே!"

"நீங்க எந்த சாமி கும்பிடுறீங்க!"

"நாங்க சபையில் இருக்கோம்"

"சபைன்னா பெந்தகோஸ்தேங்களா"

"ஆமாம் தம்பி"

அவரின் துணைவியாரும் கடையில் இருந்தார்.

"உங்களுக்கு எத்தனை பசங்கம்மா?"

'நாலு பசங்க. மூணு பசங்க வேலைக்கு போறாங்க. ஒரு பையன் படிக்கிறான்"

"மூத்தவருக்கு என்ன வயசு என்றேன்?"

"28 ஆயிருச்சு!"

"இன்னுமா கல்யாணம் செய்யல!"

"பொண்ணு பக்கத்திலேயே கிடைக்குது! நாங்க கொஞ்சம் தள்ளி பெருங்களத்தூர், செங்கல்பட்டுன்னு தேடுறோம்."

"பக்கத்தில் இருந்தா நல்லது தானே!"

"பொசுக்குன்னு பொண்ணுங்க அம்மா வீட்டுக்கு கிளம்பி போயிருவாங்க. அதுக்குத்தான்" என்றார்.

புன்னகை தான் வந்தது.

இடையில் வெளியே போனவர் திரும்ப வந்தார்.

"சினிமாவில இரண்டு பாட்டு எழுதியிருக்கேன் தம்பி. இவைகள் தான்!" என தட்டச்சு செய்து இருந்ததை காண்பித்தார்.

"என்ன படம்?"

"அளவுகோல்" னு ஒரு படம். சிங்கப்பூர் இசையமைப்பாளர். புதுமுகம் ஹீரோ"
"படத்தில் என்ன பின்னணியில் இந்த பாட்டுக்கள் வருகிறது?"

"ஒரு பாடல் - மனிதன் படத்தில் " வானத்தைப் பார்த்தேன். பூமியைப் பார்த்தேன் போல!

இன்னொரு பாடல் - மலையடிவாரத்தில் சாலை போடும் தொழிலாளர்கள் ஓய்வு நேரத்தில் சந்தோசமாக பாடும் பாடல்"

பாடல்களைப் படித்துப் பார்த்தேன். அவரும் ராகமாய் பாடிக்காண்பித்தார். நன்றாக இருந்தது. அவரிடமும் சொன்னேன்.



"படம் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கு?"

"80% வளர்ந்திருச்சு. சீக்கிரம் முடிஞ்சு வெளிவந்திரும்"

"இவ்வளவு வயசு வரை ஏன் காத்திருந்தீங்க?"

"இளவயசுல பசங்க சின்ன பசங்க! குடும்பத்துக்காக உழைக்க வேண்டியிருந்ததால சினிமால கவனம் செலுத்த முடியல! பசங்க வளர்ந்திட்டாங்க! இப்ப ப்ரீ ஆயிட்டேன். முயற்சி செய்றேன்" என்றார் முக மலர்ச்சியுடன்!

"வாழ்த்துக்கள். தொடர்ந்து இந்த சாப்பாடு உதவியை செய்யுங்கள். தொடர்ந்து பாட்டு எழுதுங்கள்"

ஒரு புகைப்படம் எடுக்கட்டுமா? என்றேன். புன்னகைத்துக் கொண்டே போஸ் கொடுத்தார்.

வீட்டிற்கு வந்து யூடியூப்பில் தேடிப்பார்த்தேன். படம் குறித்து ஒரு பாடலை விளம்படுத்தியிருந்தார்கள்.