> குருத்து: April 2022

April 28, 2022

பீஸ்ட் இயக்குநர் செக்யூரிட்டி தொழிலாளர்களை இழிவுப்படுத்துகிறார்.



”பாதுகாப்பு வேலைகளை செய்யும் செக்யூரிட்டி தொழிலாளர்களின் சம்பளம், வேலை நேரம், வேலை செய்யும் இடம் என எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்த வேண்டிய அரசுகள் கவலைப்படாமல் இருக்கிறார்கள். சிவில் சமூகமும் குறைவான சம்பளத்திற்கு ஆட்கள் கிடைத்தால் போதுமென கமுக்கமாய் பயன்படுத்திக்கொள்கிறது. சமூகத்தைப் பற்றி அறிவற்ற நெல்சன் போன்ற இயக்குநர்கள் கேலி, கிண்டல் செய்கிறார்கள். ”

*****

படத்தில் இந்திய உளவுத்துறையில் வேலைப் பார்த்து, வேலையை விட்டு வந்த நாயகனுக்கு செக்யூரிட்டி அலுவலகத்தில் வேலை வாங்கித்தர அழைத்துவருகிறார் நாயகி. அந்த முதலாளி வயதான தொழிலாளர்களை வைத்து நிறுவனத்தை நடத்துகிறார். நாலு வயதான தொழிலாளர்களைப் பார்த்து ”முதல்ல ஜிப்பை போடுங்கய்யா!” என்கிறார். வேலையை ஒழுங்காக செய்யவில்லை என விதவிதமாய் திட்டுகிறார். படத்தில் ஆங்காங்கே ஒரு வயதான செக்யூரிட்டியை வைத்து கேலி செய்துகொண்டே இருக்கிறார்.


இது என்ன வகையான மனநிலை? இயக்குநர் நெல்சனின் நகைச்சுவை குமட்டுகிறது. ஒரு மனிதன் வேலை செய்வதற்கான வயது என்பது 58 என சட்டம் தீர்மானித்திருக்கிறது. இந்தியர்களின் சராசரி வயது 70 என வரையறுக்கிறார்கள். 40லிலும் ஒரு மனிதன் சாகலாம். எங்க பாட்டி 95 வரைக்கும் வாழ்ந்தார். இறப்பவர்களின் வயதை, எண்ணிக்கையை கணக்கிட்டு தான் 70 வயதை சராசரி என்கிறார்கள்.

ஆக சராசரியாக ஒரு மனிதன் 20 வயதில் உழைக்க துவங்குகிற மனிதன் சமூகத்தில் ஏதோ ஒரு உற்பத்தி கண்ணியில் தன்னை இணைத்துக்கொண்டு 38 வருடங்கள் உழைக்கிறான். அதற்கு பிறகு அவனுக்கு கண் மங்கும். காது மங்கும். நோய்கள் வாட்டும். மருந்துகளின் கட்டுப்பாட்டில் இருப்பான். அதனால் செயல்படுவதின் வேகம் குறையும். ஆகையால், அதற்கு பிறகும் வேலை வாங்குவது சரியல்ல என்று தான் ஓய்வு தருகிறது. அவர் தனக்கு பிடித்தமான வேலைகளை செய்யட்டும் என அனுமதிக்கிறது. இப்படி சமூகத்திற்காக உழைத்த மூத்தவர்களை மதிப்பது தான் நாகரிக சமுதாயத்தின் அடையாளம்.

58 வயதுவரை வேலை என்பது அரசு வேலைகளுக்கும், பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு தான் இந்த கட்டுப்பாடு எல்லாம் நடைமுறையில் அமுலாகிறது. தங்கள் குடும்பத்தின் தேவைக்காக பெரும்பாலான உழைக்கும் மக்கள், சாகும்வரைக்கும் வேலை செய்யவேண்டியிருப்பது மிகப்பெரிய அவலம். அதற்காக இந்த மக்களை ஆளும் அரசு தான் வெட்கப்படவேண்டும்.

மற்ற வேலைகளை விட செக்யூரிட்டி வேலை என்பது கொஞ்சம் சிக்கலானது. சென்னையில் பல விளம்பரங்களை பார்த்து இருக்கிறேன். சில நிறுவனங்களின் செக்யூரிட்டி பில்லை பார்த்திருக்கிறேன். பெரும்பாலான செக்யூரிட்டி வேலை என்பது 12 மணி நேரம் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. என்ன ஒரு அநியாயம். இந்த வேலையில் மட்டும் இப்படி ஒரு மாற்றத்தை யார் ஏற்படுத்தியது? அதிலும் பெரும்பாலானவர்கள் ஏதொவொரு வேலைப் பார்த்து 58 வயதை கடந்திருப்பவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை வைத்து 12 மணி நேரம் வேலை வாங்குவது என்ன ஒரு நியாயம்? பகல் சிப்ட் என்றால் கூட சமாளித்துவிடுவார்கள். காலை 7 மணியிலிருந்து இரவு 7 வரை ஒரு சிப்ட். இரவு 7 துவங்கி காலை 7 மணி வரை ஒரு சிப்ட். பகலில் கூட சமாளித்துவிடலாம். இரவில் எப்படி 12 மணி நேரம் தூங்காமல் தொடர்ச்சியாக வேலை செய்யமுடியும்?

செக்யூரிட்டி வேலை செய்யும் நண்பர் ஒருவர் இருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களாக செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். ஒரு நிறுவனத்தில் இரண்டு மாதங்கள் வேலை செய்தார். தூங்காமல் இருப்பதை கண்காணிக்கிறேன் என ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு சிசிடிவி முன்பு தனது இருப்பை உறுதிசெய்யவேண்டும். செய்தார். இப்படி எல்லாம் வேலை செய்த பிறகு, இரண்டு மாதமும் சம்பளம் தரவில்லை. இழுத்தடித்துக்கொண்டே இருந்தார்கள். பிறகு நமக்கு தெரிந்த ஒரு வழக்கறிஞர் நண்பரை அழைத்துக்கொண்டு கேட்டதற்கு, ஒரு வாரத்தில் தருகிறோம் என்றவர்கள், அலுவலகத்தை மூடிவிட்டு காணாமல் போய்விட்டார்கள். இப்பொழுது அவர்களை தேடிக்கொண்டு இருக்கிறார்.

சென்னையில் எல்லா பகுதிகளிலும் கடுமையான கொசுத்தொல்லை உண்டு. அதிலிருந்து தப்பிக்க ஒரு பாதுகாப்பாக ஒரு வேலை செய்யும் இடத்தை உருவாக்கி தந்திருக்கிறார்களா? என்றால் இல்லை. பல இடங்களில் பார்க்கிறோம். ரெம்ப பெருந்தன்மையோடு ஒரு இரும்பு சேர் தந்துவிடுவார்கள். இப்படி எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் வேலை செய்வது, அவர்களின் ஆயுளை வெகுவாக குறைந்துவிடுகிறது.

இப்படி பார்க்கும் 12 மணி நேர வேலைக்கு பெரும்பாலோர் தரும் சம்பளம் 10000, 12000 தான் தருகிறார்கள். தொழிலாளர்களின் சமூக நலத் திட்டமான இ.எஸ்.ஐ, பி.எப் கூட பெரும்பாலோர் கட்டுவதில்லை. வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்தால், ஒருநாள் ஓய்வு தரவேண்டும் என சட்டம் சொல்கிறது. சட்டத்தை எல்லாம் இவர்கள் மதிப்பதேயில்லை. ஏழு நாளும் வேலை செய்யவேண்டும். மாதத்தில் ஒரு நாள் போகாவிட்டாலும், சம்பளத்தில் பிடித்துக்கொள்வார்கள்.

வங்கியில் துப்பாக்கியோடு காவல் இருக்கிறார்கள். பணத்தை ஏடிஎம் மிஷினில் உள்ளே பொருத்துகிறவர்கள் துப்பாக்கியோடு வருகிறார்கள். சில லட்சங்களை போட்டுவிட்டு, ஒரு செக்யூரிட்டியை எந்தவித ஆயுதம் இல்லாமல் நிறுத்திவிட்டு போவது என்ன லாஜிக்? இந்தியா முழுவதும் ஏடிஎம் கொள்ளை நடக்கும் பொழுதெல்லாம் செக்யூரிட்டிகள் கழுத்தை அறுத்தோ, தலையில் அடித்தோ கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். ஏடிஎம்மில் மட்டுமில்லை. பல இடங்களில் கொலை செய்யப்படுகிறார்கள். செக்யூரிட்டி கொலை என தேடிப்பாருங்கள். இணையம் கொட்டுகிறது. ஒவ்வொரு செக்யூரிட்டி சாகும் பொழுதும், ஒரு குடும்பம் ஆதரவு இல்லாமல் தெருவுக்கு வருகிறது.

செக்யூரிட்டி தொழிலாளர்கள் இப்படி இரவும் பகலும் அயராமல் உழைப்பதால் தான் பல பங்களாக்களிலும் பெரிய பெரிய அபார்ட்மெண்ட் வீடுகளிலும் நிம்மதியாக தூங்குகிறார்கள். நகரமும், நாடும் அமைதியாக உறங்குகிறது.

பாதுகாப்பு வேலைகளை செய்யும் செக்யூரிட்டி தொழிலாளர்களின் சம்பளம், வேலை நேரம், வேலை செய்யும் இடம் என எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்த வேண்டிய அரசுகள் கவலைப்படாமல் இருக்கிறார்கள். சிவில் சமூகமும் குறைவான சம்பளத்திற்கு ஆட்கள் கிடைத்தால் போதுமென கமுக்கமாய் பயன்படுத்திக்கொள்கிறது. சமூகத்தைப் பற்றி அறிவற்ற நெல்சன் போன்ற இயக்குநர்கள் கேலி, கிண்டல் செய்கிறார்கள். நமது வன்மையான கண்டனங்களை இங்கு பதிவு செய்வோம். இயக்குநர் நெல்சனை எங்குப் பார்த்தாலும், மூத்த தொழிலாளர்களை இப்படி இழிவுப்படுத்தலாமா என்ற கேள்வியை எழுப்புவோம்.

April 26, 2022

கூட்டை மாற்றியிருக்கிறோம்


வீடு என்பது நிறைய உறவுகளையும், நண்பர்களையும் பார்த்திருக்கிறது. நிறைய சந்தோசங்களை பார்த்திருக்கிறது. அதனாலேயே உணர்வுபூர்வமானதாய் இருக்கிறது.

***

இலக்கியா பிறந்து இருபது நாள் கைக்குழந்தை. அத்தை வீடு அருகே வீடு மாறினோம். அரசு கட்டி, விற்ற வீடுகள். சிங்கிள் பெட்ரூம் தான். அடுத்தவீட்டில் மோட்டார் போட்டால், எங்கள் வீட்டு மோட்டார் ஓடுவது போல அதிரும். அக்கம் பக்கத்து வீடுகளில் என்ன கொழம்பு வைத்தாலும், எங்களையும் தொந்தரவு செய்யும். ஒவ்வொரு வீடும் அத்தனை நெருக்கம்! நல்லா பழகியிருந்தால், நமக்கும் கொடுத்திருப்பார்கள். பெரும்பாலும் வெளியே சுற்றிக்கொண்டிருப்பதால், கொழம்போ, பொரியலோ வாங்கும் அளவிற்கு நெருக்கமாக முடியவில்லை. அவங்க பேசும் பொரணியிலும் பங்கெடுக்கமுடியவில்லை. இதுக்கெல்லாம் இவர்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள் என நினைத்துவிட்டார்கள்.

🙂

பதினாறு வருடங்கள். ஒரே வீட்டில் இருந்தது சென்னையில் சாதனை தான். அத்தைக்கு ராயப்பேட்டையில் பழக்கமான ஒருவருடைய வீடு தான் அது. தரைத்தளம் மட்டும் தான். பிறகு மொட்டை மாடி. அவ்வளவு தான். நாலைந்து வருடத்திற்கு ஒருமுறை தான் வீட்டை வந்து பார்த்து வீட்டு செல்வார். வீடு அங்கேயே இருக்கிறதா! ஏதும் கொஞ்சம் நகர்த்தி கொண்டு போயிருக்கிறார்களா? என்பதை சோதிக்க வருவார். நல்ல வீட்டு ஓனர். ஆனால், கொரானா காலத்தில் எல்லா மாதங்களிலும் கறாராக வாடகை வசூலித்துவிட்டார்.
🙂

பகுதியில் உள்ள கோவில் வரி கேட்டால், பொது விசயத்திற்கு வாருங்கள். தருகிறோம் என மறுத்துவிடுவோம். ஆனால், சாமி கும்பிட்டு எல்லா வீட்டுக்கும் பிரசாதம் தரும் பொழுது எங்களுக்கும் தருவார்கள். நாங்க வரி கொடுக்கவில்லையே என நினைவுப்படுத்தினால், பரவாயில்லை! என்பார்கள். வரி கொடுக்கவிட்டாலும், ”கடவுள் ஆசி” நமக்கு உண்டு. 🙂

சாமி கும்பிட மாட்டோம் என தெரிந்தாலும், கெங்கை அம்மனுக்கு கூழ் காய்ச்சினால், பக்கத்து வீட்டுக்காரர்கள் அன்போடு தருவார்கள். விசேச நாட்களில் சின்ன சின்ன பலகாரங்களும் வரும். லெனின் பிறந்தநாளில், ரசிய புரட்சி நாளன்று அந்த நாட்களின் சிறப்பைச் சொல்லியே இனிப்பு கொடுக்கவேண்டும் என நினைப்போம். ஆனால், அந்த நாட்களில் தான் மற்ற எந்த நாளையும் விட அதிகமான வேலைகளில் ஓடிக்கொண்டு இருப்போம். இரவு பதினோரு மணிக்கு வீடு வந்து சேருவோம். 🙁

தேர்தல் சமயங்களில் வாக்குக்கு பணம் தந்தால் எங்கள் வீட்டுக்கு தப்பித்தவறி கூட வரமாட்டார்கள். மக்கள் ஏதோவிதத்தில் நம்மை புரிந்துவைத்திருக்கிறார்கள். இன்னும் கவனம் கொடுத்து சுற்றி உள்ள மக்களோடு பழகியிருக்கவேண்டும் என கருதுகிறேன்.

எங்கள் வீட்டு மொட்டை மாடி. அந்த பகுதி பிள்ளைகளுக்கு பிடிக்கும். எங்கள் தெருவில் உள்ள மொட்டை மாடிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். மேலே மேலே வீடுகளை எடுத்து கட்டிவிட்டார்கள். அப்படியே இருந்தாலும், விளையாட அனுமதிக்கமாட்டார்கள். எதிர்த்த வீட்டு கஞ்சர் அவர் மொட்டை மாடியில் விளையாட அனுமதிக்கமாட்டார். (கஞ்சனா இருந்தாலும் பக்கத்துவீட்டுக்காரர் என்பதால் மரியாதை) நீங்க இல்லாத பொழுது இப்படி விளையாடினார்கள். அப்படி சேட்டை செய்தார்கள் என நாங்கள் வரும் வரை காத்திருந்து போட்டுக்கொடுப்பார். பிள்ளைகள் என்றால் அப்படித்தான். பார்த்துக்கலாம் என்பேன். கடுப்பாயிடுவார். வாசலில் விளையாடுவார்கள். தண்ணீர் வேண்டுமென்றால் உள்ளே வந்து கேட்பார்கள். குடிப்பார்கள். அங்கு இருக்கும் ஸ்நாக்ஸ் டப்பாவை பார்த்து கைநீட்டுவார்கள். தருவோம். சந்தோசமாய் சாப்பிட்டுவிட்டு ஓடிப்போய் விளையாடுவார்கள். 🙂


எங்கள் வீட்டு வாசலில் முருங்கை மரம் ஒன்று இருந்தது. இலக்கியா அப்பா, கடைக்காரர் இளைய மருமகன் என அழைப்பது போல முருங்கைமரத்து வீட்டுக்காரர்கள் எனவும் பெயரும் உண்டும். எங்களுக்கு முன்னாடி குடியிருந்த அண்ணி வைத்துவிட்டு போன மரமிது. வருடத்திற்கு நாலைந்து சீசனில் கொத்துகொத்தாய் காய்க்கும். காய்கள் நல்ல நீளமாய் இருக்கும். சுவையாகவும் இருக்கும். எங்கள்வீடு, அத்தை வீடு, அண்ணி வீடு தேவை போக அத்தை இருக்கும் வரையில் அவர் வீட்டைச் சுற்றி உள்ளவர்களுக்கு குறைவான விலைக்கு தருவார். மிஞ்சியதை கடையில் போட்டு விற்பனை செய்வார். மரம் என்பது எப்பொழுதும் இலைகளை உதிர்த்துக்கொண்டே இருக்க கூடியது. எங்களை போலவே பக்கத்து வீட்டுக்காரர்களும் பொறுமையாக கூட்டி பெருக்கி அள்ளுவார்கள். ஆகையால், சுற்றி உள்ள மக்களுக்கு மட்டும் ஒவ்வொரு சீசனிலும் காய்கள் விலையன்றி தருவோம். அயர்ன் கடைக்காரர், தெருவில் இருப்பவர்கள், பக்கத்து தெருவில் இருந்து வந்து கேட்டாலும் கீரையும் தருவோம். காய்கள் இருந்தாலும் தருவோம். ஒரு நாளும் நாங்கள் காசு வாங்கியதேயில்லை.

அந்த வீட்டில் இத்தனை ஆண்டுகள் இருந்ததற்கு முக்கிய காரணம். அடுத்த தெருவில் குடியிருக்கும் எங்க அத்தை, மாமா தான். நாங்கள் இருவரும் வேலைகள் என போய்விட்டால், இலக்கியாவை மிகுந்த அக்கறையோடு கவனித்துக்கொண்டது அவர்கள் தான். வீட்டில் என்ன சமைத்தாலும் எங்களுக்கும் வந்து தருவார். அப்படிப்பட்ட அத்தை கொரானாவின் இரண்டாவது அலையில் நாலைந்து தெருக்களில் கொரானா அறிகுறியே இல்லாத பொழுது கொரானாவால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு சென்றவர். முப்பது நாட்களுக்கும் மேலாக கடுமையாக போராடியவர், அவர் உடல் தான் இறுதி மரியாதைக்காக வீடு வந்து சேர்ந்தது. 🙁

வீடு என்பது நிறைய உறவுகளையும், நண்பர்களையும் பார்த்திருக்கிறது. நிறைய சந்தோசங்களை பார்த்திருக்கிறது. அதனாலேயே உணர்வுபூர்வமானதாய் இருக்கிறது. புதிய வீட்டிற்கு போவதின் அவசியம் கூட அத்தை இறந்ததால், மாமாவை பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதால் தான் நகர்கிறோம். தூரமாக இல்லை. அடுத்த தெருவிற்கு தான்.

வீட்டில் அத்தியாவசிய பொருட்களை தவிர எதுவும் இல்லாததால், ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்றிவிட்டோம். வீட்டில் உள்ள பொருட்களை விட, புத்தகங்களின் எண்ணிக்கை தான் அதிகம். ஆகையால், அதுவும் சுமையாக தெரியவில்லை. மாற்றுவதற்கு அக்கா மகன் முத்துசெல்வமும், தோழர்களும் பெரிதும் உதவினார்கள்.

ஆகையால், நண்பர்களும், உறவினர்களுக்கும் இதையே தகவலாக சொல்லிக்கொள்கிறேன். பழைய வீட்டுக்கு தவறியே போனாலும் கூட புதிய வீட்டுக்கு அவர்களே வழிகாட்டுவார்கள். புதிய வீட்டிற்கும் தெரிந்த ஒரு குடும்பம் தான் வருகிறது.

போலீசு துறை எப்படிப்பட்டது தெரியுமா?


ஆயுதப்படை வீரர்களுக்கு பல ஆண்டுகளாக பயிற்சி அளிக்கும் அவர் சொல்வார்.

“கீழே இருக்கிற மரத்துக்கு கீழே ஒரு கார்டு (Guard) நிற்கிறான் இல்லையா? அவன் எதுக்கு நிற்கிறான்னு தெரியுமா? கந்தசாமின்னு ஒரு கமாண்டண்ட் (Commandant) இருந்தார். ரெம்ப பக்தியான மனுசன். ரோட்ல ஒரு கல்லைப் பார்த்தாலே கடவுள்னு கையை எடுத்து கும்பிடற ஆள். ஒரு நாள், இங்க லெட்சுமிகடாட்சமா ஒரு வேப்ப மரம் இருந்தா நல்லா இருக்கும்ல! என சொல்லி என்னை ஒரு கன்றை நடச் சொன்னார். நானும் நட்டேன். ஆடு வந்து இரண்டு முறை தின்னுட்டு போயிருச்சு! கடுப்பாகி, ஒரு ஆளை பாதுகாப்புக்கு போடுங்க!ன்னு ஒரு உத்தரவு போட்டார். கன்று வளர்ந்து மரமாயிருச்சு! அவரும் செத்துப்போய் பன்னிரெண்டு வருசமாச்சு! அதிகாரி உத்தரவுன்னு அதுக்கு பிறகு வந்த யாரும் அந்த உத்தரவை திரும்ப வாங்கவில்லை. அந்த கார்டுக்கு ஏன் அங்க நிற்கிறோம்னு தெரியாது! கார்டு போடுறவனுக்கு ஏன் போடுறோம்னு தெரியாது! இவங்கள எந்த கேள்வியும் கேட்கமுடியாது. கேட்டாலும் பதிலும் கிடைக்காது. இது தான் போலீசு துறை!” என்பார்.

- "டாணாக்காரன்" படத்தில் ஒரு காட்சி.

இராணுவச் செலவினத்தில் இந்தியா மூன்றாம் இடம்! ஏகாதிபத்திய ரசியாவே ஐந்தாம் இடம் தான்!

 


இராணுவச் செலவினத்தில் இந்தியா மூன்றாம் இடம்! ஏகாதிபத்திய ரசியாவே ஐந்தாம் இடம் தான்!

ஒருபக்கம் கல்வி, மருத்துவம், உணவு என அடிப்படையானவைகளுக்கு எல்லாம் மான்யங்களை வெட்டுகிற இவர்கள்தான், இராணுவம் போன்ற செலவினங்களுக்கு தாராளமாய் செலவழிக்கிறார்கள்.

****

ராணுவத்திற்கான செலவுகள் செய்வதில் அமெரிக்கா முதலிடம். சீனா இரண்டாமிடம். மூன்றாமிடத்தில் இந்தியா என சர்வதேச அமைதி ஆய்வுமையம் அறிவித்துள்ளது. கொரானா தொற்றிய நாடு, லட்சக்கணக்கான மக்களை பறிகொடுத்து கலகலத்த நாடுகள் என உலகம் நினைத்துகொண்டிருக்கிறது.

அமெரிக்கா ஒரு உலக ரவுடி. தன் கெத்துக்கு செலவு செய்யலைன்னா அழிஞ்சுபோவான்.  சீனா வளர்ந்துவரும் ரவுடி. அவன் உலகத்துக்கே பொருட்களை ஏற்றுமதி செய்றான். செலவழிக்கிறான்.

இந்திய ராணுவத்தில் 14 லட்சம் பேர் நிறைந்திருக்கிறார்கள்.  ”ஒழுங்கான சாப்பாடு இல்லை, அடிப்படை வசதி இல்லை” என கறார் விதிகளை எல்லாம் தூரப்போட்டு, காணொளியில் எல்லையிலிருந்து கதறுவது வைரலாகிறது. ”குளிரில் விறைத்துப்போய் நிற்கும் எல்லையோர இராணுவத்தினரை நினைத்துப் பாருங்கள்!” என அடிக்கடி சங்கிகள் கண்ணீர் வடிப்பார்களே! அவர்களின் வாழ்வை எல்லாம் உயர்த்திவிட்டார்களா? என நினைத்தீர்கள் என்றால் நாமெல்லாம் அப்பாவி!

சில அமெரிக்க பத்திரிக்கைகள், சில இந்திய பத்திரிக்கைகள் அவ்வப்பொழுது இந்திய இராணுவத்தின் ஏவுகணைகள், போர்விமானங்களின் நிலையை பக்கத்தில் இருக்கும் சீனாவுடனும், பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு, ஒப்பிட்டு உசுப்பேற்றுகிறார்கள். இராணுவ கொள்முதலில் நன்றாக காசு பார்க்கலாம் என முடிவு செய்து, ஏகாதிப்பத்திய ஆயத உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, கார்ப்பரேட்டுகளையும் கூட்டு சேர்ந்துகொண்டு, வகை தொகையில்லாமல் களவாடுகிறார்கள்.

மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி எட்டு ஆண்டுகளில் பக்கத்து பக்கத்து நாடுகளில் எல்லாம் வம்பிழுத்து நல்லா இருந்த உறவை கூட கெடுத்துதான் வைத்திருக்கிறார்கள்.

ஒருபக்கம் கல்வி, மருத்துவம், உணவு என அடிப்படையானவைகளுக்கு எல்லாம் மான்யங்களை வெட்டுகிற இவர்கள்தான், இராணுவம் போன்ற செலவினங்களுக்கு தாராளமாய் செலவழிக்கிறார்கள். நேரடியாக பாதிக்கப்படும் நாம் தாம் விழிப்புணர்வுடன் இருந்து கேள்வி கேட்கவேண்டும். தொடர்ந்து கேட்போம்.

April 25, 2022

ஜூலியஸ் அசாஞ்சேவை கொலைகார அமெரிக்காவிடம் ஒப்படைக்காதே!


ஆப்கானிலும், ஈரானிலும் மக்களை கொன்று குவித்த அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை ஜூலியஸ் அசாஞ்சே உலகுக்கு அம்பலப்படுத்தினார். கொலைவெறியோடு அவரை விடாமல் துரத்தியது.

2019ல் ஈக்வடார் தூதரகத்தில் இருந்து அவரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றது லண்டன் போலீசு.

சிறையில் கடுமையாக சித்திரவதை செய்தார்கள். ஆறுமாதம் கழித்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பொழுது, அவரை சுற்றி என்ன நடக்கிறது என்பதையே புரிந்துகொள்ள முடியவில்லை.

ஐநாவின் சிறப்பு பிரதிநிதி நேரில் ஆய்வு செய்து, சித்திரவதை செய்ததை உறுதிப்படுத்தினார்.

உரிய சிகிச்சை தரவில்லை என்றால் சிறையிலேயே செத்துவிடுவார் என 60 மருத்துவர்கள் கூட்டு அறிக்கையாக வெளியிட்டார்கள்.

இப்பொழுது அமெரிக்காவிடம் அவரை ஒப்படைப்பதற்கான வேலைகளை வேகமாக செய்துவருகிறார்கள்.

லண்டன் நீதிமன்றம் "அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம். இறுதி முடிவை உள்துறை செயலர் முடிவெடுப்பார்" என அறிவித்துவிட்டது.

உலக ரவுடி அமெரிக்காவின் கொடூர முகத்தை நன்றாக உணர்ந்தும் கூட மக்கள் மீதான மாறாத அன்பால் தான் அம்பலப்படுத்தினார்.

அமெரிக்காவிடம் ஒப்படைத்தால், 175 ஆண்டுகள் வரை தண்டனை கொடுத்து சிறையிலேயே கொன்றுவிடுவார்கள்.

இப்பொழுது மக்களும் ஜனநாயக சக்திகளும் அவருக்காக ஒரே குரலில் ஒலிக்கவேண்டும்.

"கொலைகார அமெரிக்காவிடம் ஒப்படைக்காதே!
ஜூலியஸ் அசாஞ்சேவை விடுதலை செய்!"

April 20, 2022

ஒரு செயல் எந்த சமயத்தில் சடங்காகிவிடுகிறது?


ஒரு காரணத்தோடு ஒரு காரியம் செய்கிறோம். ஒரு கட்டத்தில் காரணம் காணாமல் போய், காரியம் மட்டும் மிஞ்சும் பொழுது சடங்காகிவிடுகிறது.


ஒரு குட்டிக்கதை சொல்லட்டுங்களா?

ஒரு குரு தன் பள்ளியில் சீடர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். ஒரு பூனை குறுக்கும் நெடுக்குமாய் ஓடி விளையாடிக்கொண்டிருந்தது. அதனால் மாணவர்களின் கவனம் பிசகியது. கோபமாய் “அந்த பூனையை இந்த தூணில் கட்டிப்போடுங்க!” என்றார். உடனே கட்டினார்கள்.

பாடம் எடுக்கும் பொழுது எல்லாம் பூனை தொல்லை செய்வதும், கட்டிப்போடுவதும் தொடர்ந்தது. ஒருநாள் உடல் நலமில்லாமல் குரு இறந்துபோனார்.

புதிய குரு வந்தார். பாடம் எடுக்க துவங்கினார். கூட்டத்தில் இருந்த ஒருத்தர் அதட்டலாய் சொன்னார். ”பாடம் எடுக்கும் பொழுது இங்கு ஒரு பூனையை கட்டனும்னு மறந்துபோச்சா! வந்து கட்டுங்கப்பா!” என்றார். எங்கேயோ தன் நண்பர்களுடன் சந்தோசமாய் விளையாடிக்கொண்டிருந்த அந்த பூனையை தூக்கிவந்து பொறுப்பாய் அந்த தூணில் கட்டினார்கள். குரு பாடம் எடுக்க துவங்கினார்.

"டாணாக்காரன்" படத்தில் ஒரு காட்சி.

ஆயுதப்படை வீரர்களுக்கு பல ஆண்டுகளாக பயிற்சி அளிக்கும் அவர் சொல்வார்.

“கீழே இருக்கிற மரத்துக்கு கீழே ஒரு கார்டு (Guard) நிற்கிறான் இல்லையா? அவன் எதுக்கு நிற்கிறான்னு தெரியுமா? கந்தசாமின்னு ஒரு கமாண்டண்ட் (Commandant) இருந்தார். ரெம்ப பக்தியான மனுசன். ரோட்ல ஒரு கல்லைப் பார்த்தாலே கடவுள்னு கையை எடுத்து கும்பிடற ஆள். ஒரு நாள், இங்க லெட்சுமிகடாட்சமா ஒரு வேப்ப மரம் இருந்தா நல்லா இருக்கும்ல! என சொல்லி என்னை ஒரு கன்றை நடச் சொன்னார். நானும் நட்டேன். ஆடு வந்து இரண்டு முறை தின்னுட்டு போயிருச்சு! கடுப்பாகி, ஒரு ஆளை பாதுகாப்புக்கு போடுங்க!ன்னு ஒரு உத்தரவு போட்டார். கன்று வளர்ந்து மரமாயிருச்சு! அவரும் செத்துப்போய் பன்னிரெண்டு வருசமாச்சு! அதிகாரி உத்தரவுன்னு அதுக்கு பிறகு வந்த யாரும் அந்த உத்தரவை திரும்ப வாங்கவில்லை. அந்த கார்டுக்கு ஏன் அங்க நிற்கிறோம்னு தெரியாது! கார்டு போடுறவனுக்கு ஏன் போடுறோம்னு தெரியாது! இவங்கள எந்த கேள்வியும் கேட்கமுடியாது. கேட்டாலும் பதிலும் கிடைக்காது. இது தான் போலீசு துறை!” என்பார்.

என்னோட பதினைந்து வயசுல, சொந்த பந்தங்கள் சாமி, சடங்கு, சம்பிராதயம்னு ஏதாவது கூடும் பொழுது, இந்த சடங்கு ஏன் செய்யிறீங்கன்னு ஒவ்வொண்ணா கேட்பேன்.

வெள்ளந்தியா இருக்கிறவங்க ”காலம் காலமா செய்துகிட்டு வர்ற சடங்கு” என பெருமிதமாய் சொல்வார். இன்னும் கொஞ்ச விவரக்காரர் “முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை” என்பார். கொஞ்சம் அடாவடியான ஆளா இருந்தா அதற்கான விளக்கம் கொடுக்காம இப்படியெல்லாம் கேட்க கூடாதுன்னு அதட்டுவார். காரணத்தோடு செயல் செய்ய ஆரம்பித்து காரணம் காணாமல் போய் பல பத்து ஆண்டுகள் ஆன பிறகு வெற்று சடங்குகிற்கு எப்படி காரணத்தை சொல்லமுடியும்?

சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா, சிறந்த தொகுப்பாளர் லெனின், சிறந்த படத்தொகுப்பு துப்பாக்கி



மக்களின் மனநிலையை ஒரு படத்தொகுப்பாளர் நிச்சயம் அறிந்திருக்கவேண்டும். ஆகையால் மக்களோடு மக்களாக அவ்வப்பொழுது படம் பார்க்கிறேன்.


ஒரு நகைச்சுவை காட்சி முடிகிறது என்றால், தொகுப்பாளர் மக்கள் சிரிப்பதற்கு கொஞ்சம் இடம் கொடுக்கவேண்டும். அடுத்தக் காட்சி சீரியசாக இருந்தால், சிரிக்க முடியாமல் போய்விடும்.

இந்தியாவில் சிறந்த தொகுப்பாளர் எடிட்டர் லெனின். நல்ல சிறப்பான எடிட்டிங் அமைந்த படம் துப்பாக்கி. துவக்கத்தில் இருந்து கடைசி வரை சிறப்பாக அமைந்தது. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் இளையராஜா. தேவையான இடத்தில் இசை. தேவையான இடத்தில் மெளனம் இருக்கும். படத்தை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்தி தருவார்.

ஒரு இயக்குநர் துவக்கத்தில் கதை சொல்வார். எப்படி எடுக்கப்போகிறேன் என்பதையும் சொல்வார். ஆனால் அதை எடுக்கும் பொழுது, காலநிலை மாற்றங்கள். பட்ஜெட் பிரச்சனை, நடிகர்களின் தேதி பிரச்சனை என பல நடைமுறை பிரச்சனைகளை எதிர்கொள்வார். மொத்த குழுவின் ஆற்றலையும் பயன்படுத்தி, அவர் சொன்னதில் 50% எடுத்து வந்தால் ஆச்சர்யம். என்னிடம் சொன்னதைப் போல 75% எடுத்து வந்து ஆச்சர்யப்படுத்தியவர் ”கற்றது தமிழ்” இராம்.

பொதுவாக கதை, திரைக்கதை, வசனம் எழுத சில மாதங்கள். அதை எடுப்பதற்கு சில மாதங்கள் செலவழிக்கிறார்கள். ஆனால், பின்னணி இசை, ஒலிப்பதிவு, படத்தொகுப்புக்கு போதுமான நேரம் தருவதில்லை. இந்த பகுதி தான் படத்தை மிகவும் செழுமை செய்யும் பகுதி. தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வேகப்படுத்தும் பொழுது, அவசர, அவசரமாய் வேலைகளை முடிக்கும் பொழுது அதற்குரிய தரத்துடன் தான் வெளிவருகிறது. ஒரு இயக்குநர் பல மாதங்கள் அதில் உழன்று கொண்டிருப்பதால், சரி என தோன்றும் காட்சிகள் கூட நிதானமாய் அவரே தன் படத்தை பார்த்தால், மாற்ற தோன்றும். இயக்குநர் மணிரத்னம் ஒரு இடைவெளி விட்டு அவரே தன் படத்தைப் பார்த்து, தேவையான மாற்றங்கள் செய்வார்.

தமிழில் ஒரே படத்தில் நிறைய விசயங்களை சொல்லவேண்டும் என நினைக்கிறார்கள். பட்ஜெட் நீண்டுவிடுகிறது. மலையாளத்தில் ஒரு எளிய கதையை எடுத்துக்கொண்டு வாழ்வியலோடு எடுக்கும் பொழுது, பட்ஜெட் அவர்கள் கைகளுக்குள் இருக்கிறது. விரைவாகவும் எடுத்து முடித்துவிடுகிறார்கள்.

முன்பெல்லாம் பிலிம் விலை அதிகம். ஆகையால், காட்சிகளை சிக்கனமாக எடுப்பார்கள்.. இப்பொழுது டிஜிட்டல் என்பதால், ஒரு காட்சியையே வேறு வேறு கோணத்தில் எடுத்துவந்து தருகிறார்கள். நிறைய இருக்கிறது என ஒரு காட்சியில் தேவையில்லாமல் நிறைய கோணத்தை மாற்றிக்கொண்டே இருக்ககூடாது. பார்வையாளர்களை சிரமப்படுத்தும். எவ்வளவோ நம் முன் இருந்தாலும், வயிற்றின் அளவிற்கு தானே சாப்பிடமுடியும்.

சிஜி என சொல்லப்படும் கணிப்பொறி தொழில்நுட்பம் இன்னும் நமக்கு தேவையான அளவிற்கு இந்தியாவில் வளரவில்லை. வளரவேண்டும்.

முன்பு படத்தயாரிப்பு நிறுவனங்கள் செல்வாக்கில் இருந்த பொழுது, இயக்குநர் படம் இயக்குவதற்கு முன்பு படத்தொகுப்பு சில மாதங்கள் கற்றுக்கொள்ள வலியுறுத்துவார்கள். இயக்குநர்களும் கற்றுக்கொள்வார்கள். அது நல்ல பலனைத் தந்தது.

- திரைப்பட தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்,
ஏழு தேசிய விருதுகளை வென்றவர்

நன்றி : Chai_With_Chitra

April 17, 2022

ஏழு தேசிய விருதுகளை வென்ற படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் – சில குறிப்புகள்



ஒரு நல்ல எடிட்டிங் செய்த படம் எது என்றால், படம் பார்க்கும் பொழுது எடிட்டிங் நினைவுக்கு வரக்கூடாது. நல்ல படம் என்ற உணர்வு தான் வரவேண்டும். பிறகு அசைபோடும் பொழுது நன்றாக தொகுத்து இருக்கிறார்கள் என உணரவேண்டும்.


இந்தி திரையுலகில் கார்ப்பரேட் எடுக்கும் படங்களுக்கு ஒரு திட்டமிடலோடு வேலை செய்கிறார்கள். முன்கூட்டியே கதை, திரைக்கதை, வசனத்துடன் தயார் செய்து வாங்கிவிடுகிறார்கள். எவ்வளவு பட்ஜெட், ஷீட்டிங்குக்கு எவ்வளவு நாட்கள் தேவைப்படும், மற்ற பின்னணி இசை, தொகுப்பு வேலைக்கு எவ்வளவு நாட்கள் என தெளிவாக கேட்டுக்கொள்கிறார்கள். இவ்வளவு தான் பட்ஜெட். இவ்வளவு நாள் தான் ஷீட்டிங் – இதற்கு மேல் கிடையாது என்பதை விவாதித்து தெளிவாக பேசி முடிக்கிறார்கள். எல்லாவற்றையும் கணக்கிட்டு வெளியாகும் தேதி என்பதை அறிவித்துவிட்டு, வேலையில் ஈடுபடுகிறார்கள். இது நல்ல பலன் கொடுக்கிறது.

இந்தியில் சில படங்களை எடுத்த பிறகு, 18 முதல் 25 வயது வரை, 25 முதல் 35 வரை என பிரித்துக்கொண்டு, அவர்களுக்கு குறிப்பிட்ட பணம் கொடுத்து வரவழைத்து, வெளியே படத்தைப் பற்றி பேசக்கூடாது என கையெழுத்து போடவைத்து, படம் பார்க்கவைக்கிறார்கள். வேறு வேறு இந்திய நகரங்களில் இப்படி திரையிடுகிறார்கள். ”தலைவி ப்ரியங்காவிற்கு ஒரு பாட்டு வைக்காமல் இருந்தது ரெம்ப தவறு!” “படம் குழப்பமா இருக்கே!” என அவர்கள் சொல்லும் எல்லா கருத்துக்களையும் குறித்துக்கொள்கிறார்கள். சரி தவறு பரிசீலித்து எடிட்டிங்கில் மாற்றியோ, மீண்டும் சில காட்சிகளை எடுத்து இணைத்தோ திரையிடுகிறார்கள்.

#Chai_With_Chitra


மோடியின் நண்பராய் இருந்தால் பில்லினியர்களாகிறார்கள்


மோடியின் நண்பராய் இருந்தால் பில்லினியர்களாகிறார்கள்

எதிர்ப்பவர்கள் சிறையில் வதைபடுகிறார்கள்

ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த ருச்சி நிறுவனம் தொழில்முறை பிரச்சனைகளால் வீழ்ந்தது. மஞ்சகடுதாசி கொடுத்தது. பதஞ்சலி ஓடிவந்து ருச்சியை அடிமாட்டு விலைக்கு வாங்கியது. வாங்குவதற்கு வங்கிகளே கடன்களை சந்தோசமாய் தந்தார்கள். குறுகிய காலத்திலேயே வங்கிக் கடனை அடைத்துவிட்டதாக பதஞ்சலியை புகழ்கிறார்கள்.

பதஞ்சலியின் ஆராய்ச்சி நிறுவனத்தை துவங்க மோடி ஹெலிகாப்டரில் பறக்கிறார். ஒன்றிய அமைச்சர் யோகாவை ”வளர்க்க” ராம்தேவ்க்கு அந்தமான் அருகே தீவையே பரிசாக தருகிறார். இராணுவ கேண்டினில் நெல்லிக்காய்சாறு விற்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் ரேசன்கடையில் பதஞ்சலி பொருட்களை பொறுப்பாக விற்றுதருகிறார்கள்.

பதஞ்சலி ஆண்டுக்கு முப்பதாயிரம் கோடிகளுக்கும் மேலாக லாபமாக கொழிக்கிறார்கள். சர்வதேச சந்தைக்கு விரைவில் நகர இருக்கிறார்கள். ”எங்களுக்கு நடக்க தெரியாது. ஓடத்தெரியும்” என பஞ்ச் டயலாக் அடிக்கிறார்கள்.

இப்பொழுது தலைப்பை மீண்டும் படியுங்கள்.

பாஜனதாவின் ஊழல் சந்தி சிரிக்கிறது


கர்நாடகாவில் அரசு ஒப்பந்ததாரர் தற்கொலை!

பாஜனதாவின் ஊழல் சந்தி சிரிக்கிறது.

அரசு ஒப்பந்ததாரரான சந்தோஷ் பாட்டீல் பா.ஜனதா கட்சியிலும் இருக்கிறார். செய்து முடித்த நாலு கோடி வேலைக்கு, மாநில அமைச்சர் 40% கமிசன் லஞ்சமாக கேட்டதாக ஊடகங்களிடம் தெரிவித்தார். ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் வழியாக பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சருக்கும் புகார் அனுப்பினார்.

தீடீரென சந்தோஷ் ”காணாமல்” போனார். பிறகு ஹோட்டலில் ”தற்கொலை” செய்துகொண்டதாக போலீசு உடலை கண்டெடுத்தது. அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

ராஜினாமா செய்ய மறுத்தார் அமைச்சர். மக்களும், எதிர்கட்சிகளும் தொடர்ந்து போராடியதால் வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்துள்ளார்.

2018 மாநில தேர்தலின் பொழுது, காங்கிரசை ”10% கமிசன் அரசு” என மோடி கிண்டல் செய்தார். நான்கே வருடத்தில் 40% கமிசன் அரசாக வளர்ச்சியடைந்து பா.ஜனதா சாதனை படைத்திருக்கிறது.

April 14, 2022

ஒரு ஜி.எஸ்.டி அதிகாரியின் அனுபவம்!



 உங்களுக்கு பணம் வரலைன்னு என்னைய பிளாக் பண்ணிட்டிங்க. எனக்கு பணம் வரலைன்னு நான் என்னோட கஸ்டமருங்கல பிளாக் பண்ண முடியுமா?

*****


ஒரே நாடு, ஒரே வரி என்ற கோஷத்துடன் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பானது இந்தியாவின் தேசிய தொழில்கள் அனைத்தையும் முடக்கியது.

கோடிக்கணக்கான மக்கள் பங்கெடுக்கும் சிறு, குறு தொழில்களை நாசமாக்கியது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு வருவதற்கு உகந்த வகையில் சில்லறை வர்த்தகர்கள் மீது கடும் வரிகளை விதிப்பதன் மூலம்  தானாகவே சிறு கடைகளை மூடுவதற்கு வழிவகுத்தது.

அத்தனை கொடூரங்களையும் உள்ளடக்கிய ஜிஎஸ்டி வரி பற்றி அதனுடன் நேரடியாக பரிச்சயமான ஒருவரின் ரத்த சாட்சி இதோ!

000

ஜி.எஸ்.டி என்பது சின்ன சின்ன தொழில் செய்பவர்களை தொழிலிருந்து விரட்டுகிறது.  ஒவ்வொரு மாதமும் பில் போடுகிறார்கள். அடுத்த மாதமே   20தேதிக்குள் கட்டச்சொல்லி ஜி.எஸ்.டி சொல்கிறது. இல்லையெனில் சரக்கை  கொண்டு செல்லும்  இ வே பில்லை (E waya Bill) ஜி.எஸ்.டி முடக்குகிறது.. மீறி பொருளை எடுத்துச்செல்லும் பொழுது, அதிகாரிகளிடம் மாட்டினால், இரண்டு மடங்கு அபராதம் செலுத்தவேண்டும். இல்லையெனில் அதிகாரிகளை கணிசமாக கவனிக்கவேண்டும்.

ஆனால்,  அந்த முதலாளிக்கு பில் போட்டதற்கான பணம் ஒவ்வொரு கிளைண்ட்டுக்கு ஏற்ப ஒரு மாதமோ, இரண்டு மாதமோ, அதிகப்பட்சம் நான்கு மாதங்கள், ஐந்து மாதங்கள் கூட  தராமல் இழுத்தடிக்கிறார்கள். இதைச் செய்வது சிறுமுதலாளிகள் அல்ல! பெரும் முதலாளிகள்.

ஆகையால்,  சம்பந்தப்பட்ட சிறுமுதலாளியின் தொழிலை நடத்தி செல்வதற்கான மூலதனம் (Working Capital) கடுமையாக அடிவாங்குகிறது.

விளைவு. துவக்கத்தில் வட்டிக்கு கடனை வாங்கி சமாளிக்கிறார். முன்பை போல இல்லாமல், தொழிலில் இலாபமும் வெகுவாக குறைந்திருக்கிறது. ஓடுகிற வரை இந்த ஓட்டம் ஓடி, ஒரு நாளில் தொழில் படுத்துவிடுகிறது.

அந்த சிறுமுதலாளியின் சிரமம் பற்றிய எந்த  கவலையும் இன்றி ஒவ்வொரு மாதமும் இத்தனை கோடிகள் வசூலனாது என்பதை பெருமையாக அறிவித்துக்கொண்டு இருக்கிறது அரசு.

ஒரு ஜி.எஸ்.டி அதிகாரியின் அனுபவம்


லுவலகத்திற்கு இன்று நண்பகல் ஒரு Tax payer வந்தார். 50 வயதைக் கடந்தவர். உடன் ஒரு இளைஞர். வரி நிலுவையில் இருந்ததால் அவரது நிறுவனத்தின் GST பதிவை ரத்து செய்துவிட்டோம். வரித்தொகையை வசூலிப்பதற்காக அவருடைய வங்கி கணக்கையும் முடக்கி விட்டோம். நிலுவை வரியை வட்டியோடு செலுத்தினால் (தாமதமாக ரிடர்ன் file செய்வதற்கு late fee தனி) மட்டுமே வங்கிக் கணக்கை விடுவிப்போம். எல்லாம் மொத்தமாக லட்சங்களில் இருந்தது. தொகையை செலுத்திய ரசீதுகளை எடுத்துக்கொண்டு அலுவலகம் வந்திருந்தார்.

அவருடைய பேச்சிலிருந்து தொழிலைத் தவிர GST சம்மந்தமாக வேறொன்றையும் அறியாதவர் என்பது விளங்கியது. ரிடர்ன் file செய்வது எல்லாம் உடன் வந்த அவரது உறவுக்கார பையன்.  அந்த மனிதர் அங்கிருப்பதை அருவருப்பாக உணர்ந்தார் என்று சொல்ல முடியும். அவர் என்னை வெறுத்தார். என் மேசையில் இருந்த கோப்புகள், கணிப்பொறி, ஸ்டேஷ்னரிகளை வெறுத்தார், என் அலுவலகத்தை வெறுத்தார், என் துறையை வெறுத்தார். அவர் அங்கே இருந்தார், ஆனால் இல்லை. எல்லாம் அவர் உடல்மொழியில் விளங்கியது.

நான் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து அந்தப் பையனுடன் மட்டுமே பேசினேன். “ரிடர்ன்ஸ் எல்லாம் பெண்டிங் வைக்காம அப்பப்போ கட்டியிருந்தா, இவ்வளவு தொல்லை இருக்காதில்லையா ?” என்று எவ்வளவு கரிசனத்தோடு கூற முடியுமா அவ்வளவோடும் கூறினேன். கேள்வியாக அல்ல. ஒரு அறிவுரையாக. அந்த மனிதர் “சப்ளை பண்றோம். வாங்குன கம்பெனி பணம் போட்டா நாங்களும் பணம் கட்டிருவோம். உங்களுக்கு பணம் வரலைன்னு என்னைய பிளாக் பண்ணிட்டிங்க. எனக்கு பணம் வரலைன்னு நான் என்னோட கஸ்டமருங்கல பிளாக் பண்ண முடியுமா? பண்ணா நான் தொழில் பண்ண முடியுமா?”  என்று உச்சமாக குரல் எழுந்து, நான்கு வரியை பேசுவதற்குள் வாய் கோணி அழும் நிலைக்கு போய்விட்டார்.

உடன் வந்திருந்த பையன் “தப்பா நினைச்சுக்காதிங்க சார். அடுத்த வாரம் அவர் பொண்ணுக்கு கல்யாணம். நகைக்கு வச்சிருந்த காச எடுத்து சலான் கட்டி எடுத்து வர்றோம்” என்றார். பெரும் பெரும் பாவங்கள் என் தலையில் வந்து இறங்குவதைப் போல் சிறுமையாக உணர்ந்தேன். அதைக் கேட்டதிலிருந்து பதட்டமாக இருந்தது.

“இவர் வரி கட்டவில்லை, இவரது வங்கிக் கணக்கை முடக்குங்கள்” என்று propose செய்பவர் ஒரு அலுவலர். அதை பரிசீலனை செய்து நான் என் உயர் அதிகாரிக்கு பரிந்துரை செய்வேன். அவர் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பி முடக்குவார். சம்மந்தப்பட்டவர் நிலுவைத் தொகையை செலுத்திவிட்டு எங்களிடம் வந்தால் மீண்டும் அதே நடைமுறைதான். Propose செய்தவர் ரசீதுகளை சரி பார்த்து எனக்கு ரிப்போர்ட் அனுப்ப வேண்டும். நான் என் உயர் அதிகாரிக்கு அதன் பேரில் பரிந்துரை செய்வேன். அவர் நோட்டீஸை திரும்பப் பெறுவார். அரசு அலுவலக நடைமுறைகளை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. எல்லாம் standard operating procedures. அவரது பணியை நான் செய்ய முடியாது. என் பணியை அவர் செய்ய முடியாது.

வழக்கமாக இப்படி முடக்கப்பட்ட கணக்குகள் எல்லாம் சரியாக இருந்தால் மீட்பதற்கு இரண்டு நாட்கள் ஆகும். நாளையிலிருந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் என் உயர் அதிகாரி மதிய உணவு முடிந்ததும் சொந்த ஊருக்குக் கிளம்ப இருந்தார். அவரை பொறுக்க சொல்லிவிட்டு , range officer இருந்த தளத்திற்குச் சென்று , ரசீதுகளை நானே சரிபார்த்து , அவர் தர வேண்டிய ரிபோர்ட்டை நானே தட்டச்சு செய்து அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு, என் சீட்டிற்கு வந்து நோட்டீஸை திரும்பப் பெரும் தபாலை தயார் செய்து உயர் அதிகாரியிடம் கையெழுத்து வாங்கிவிட்டேன். மற்றொரு பிரிச்சனை அலுவலக தபால்களை Register post ல் தான் அனுப்புவார்கள் ( அது வேறு பிரிவு). இன்று அனுப்பினால் என்று போகுமோ (சென்னை கிளை) . அதனால் வங்கி மேலாளருக்கு போன் செய்து மெயில் அனுப்புகிறேன், பின்னால் தபால் வருகிறது என்று பேசி சம்மதம் வாங்கி , இரண்டு மணி நேரங்களில் கணக்கை மீட்டுக் கொடுத்துவிட்டேன். கரிசனம் ஏற்படுவதற்காக சொல்லவில்லை. எல்லாம் சுபமாக முடிந்த பிறகுதான் நான் மதிய உணவு சாப்பிடவில்லை என்பது உரைத்தது. நேரம் கடந்து விட்டதால் அதற்கு மேல் சாப்பிடவும் தோன்றவில்லை.

இடையில் மலைபோல் குவிந்து விட்ட என் வழமையான வேலைகளை முடித்து வீடு திரும்புவதற்கு இரவு பத்து ஆகிவிட்டது.  ஒரே நாளில் அவமானமாகவும் ஆசுவாசமாகவும் உணர்ந்தேன். இப்படி எத்தனை பேருடைய துன்பங்களுக்கு நான் காரணமாக இருந்திருப்பேனோ என்று நினைக்கும்பொழுது மனதில் சன்னமான ஓலம் எழுகிறது. மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டுத்தான் இந்த வேலையை செய்ய வேண்டியிருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெற்று விட வேண்டும் என்று துடிப்பாக இருக்கிறது.

கேள்விகளால் ஆன இரவு


 'பேராசை இல்லாத விறகுவெட்டி' கதை சொல்லி

தூங்கவைக்க முயற்சித்தேன் என் மகளை.
எங்கிருந்துதான் வருமோ
இத்தனை கேள்விகள்!
அவர் ஏன் மரத்தை வெட்றாரு?
வெட்டினா வலிக்காதா?
'கோடாலி'னா என்னப்பா?
'ஆறு'னா சிக்ஸ் தானே?
'தங்கம்'னா நான் தானே?
நான் எப்படி கோடாலி ஆவேன்?
கோடாலி ரொம்ப வெயிட்டா இருக்கும்லனு
சொன்னேல்லே,
அப்படின்னா மூணு கோடாலியைத்
தூக்கி அவரு எப்படி வெட்டுவாரு?
எனக்கு ஒரு கோடாலி வாங்கித் தர்றாயா?
நாளைக்கு வாங்கித் தாரேன் மீனாட்சி...
நாளைக்கு எப்பப்பா வரும்?
நீ இன்னைக்குத் தூங்கி எழுந்து பாரேன்,
நாளைக்கு வந்திருக்கும்.
சரிப்பா... குட் நைட் பா.
ஐந்து விநாடிகள் இடைவெளியில்...
அப்பா, நான் தூங்கி எந்திரிக்கிறப்பெல்லாம்,
'இன்னைக்கு' ஏன்ப்பா 'நாளைக்கு' ஆகிருது?

- மூர்த்தி

கன்னித்தீவு



 ”நீங்க என் கடனை எப்பொழுது திரும்ப தருவீங்க?”

“தினத்தந்தியில் கன்னித்தீவு கதை முடிஞ்சதும் தந்துவிடுகிறேன்”
****

நாலாம் வகுப்பு படிக்கும் பொழுது, கடைக்கு காபி வாங்க வருவேன். தினந்தந்தியில் வரும் கன்னித்தீவு சித்திரக் கதை படங்களில் இருக்கும். அதைப் படித்துவிட்டு, தினத்தந்தியில் செய்திகளை விட நிறைய இருக்கும் சினிமா போஸ்டர்களை பார்த்துவிட்டு, வீடு போய் சேரும் பொழுது அம்மா திட்டுவார். “ஒரு தலைவலி சொல்லி, காபி வாங்க சொன்னா… எப்ப போயிட்டு எப்படா வர்றே?”

இப்படிதான் கன்னித்தீவு வாசகனானேன். அதற்கு பிறகு வயது ஏற ஏற காமிக்ஸ் புத்தகங்கள், அம்புலி மாமா, பாலமித்ரா, பிறகு இராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா என மேலே போய்க்கொண்டே இருந்தேன்.

கன்னித்தீவு கதை இது தான். அழகான இளவரசிகளை எல்லாம் கடத்தி வந்து, தீவில் வைத்துவிடுவான். அப்படி ஒரு அழகான இளவரசி லைலா. அவளை மீட்பதற்காக சிந்துபாத் கிளம்புவான். மந்திரவாதி மூசா நிறைய சக்தி வாய்ந்தவன். மந்திரம் தந்திரம் தெரிந்தவன். அவனிடம் ஒரு மாயக்கண்ணாடி இருக்கும். அவன் நினைத்த ஆளை, இடத்தை அந்த மாயக்கண்ணாடி காட்டும். அப்படி தனக்கு எதிராக திரும்பும் எதிரிகளுக்கு தீய சக்திகளை ஏவிக்கொண்டு இருப்பான். நாயகன் சிந்துபாத் மூசா தரும் அத்தனை தொல்லைகளையும், ஆபத்துகளையும் தன் திறமையால் முறியடிப்பான். சில வருடங்களுக்கு நானே சோர்ந்து போய்விட்டுவிட்டேன். ஆனால் சிந்துபாத் முயற்சியில் தளரா விக்ரமாதித்தன் போல தன் காதலியான லைலாவை மீட்க முயன்றுகொண்டே இருப்பான்.

இப்பொழுதும் எப்போதாவது கனவில் லைலா வருவார். சிந்துபாத் ஒரு பெரிய சிங்கத்துடன் கட்டிப்புரண்டு சண்டைப் போட்டுக்கொண்டிருப்பார். இது வரை என் கதை.

கன்னித்தீவின் கதை என்னவென்று பார்த்தால். எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன் படத்தில் இடைவேளைக்கு பிறகு கன்னித்தீவு என அறிமுகப்படுத்தியிருப்பார். அந்தப் பெயர் நன்றாக இருக்கிறதே தினத்தந்தி ஆசிரியர் அதையே சூட்டிவிட்டார்.

ஆகஸ்ட் 4, 1960ல் துவங்கியுள்ளது. ஓவியர் கணேசன் என்பவர் கதைக்கு உயிர்கொடுத்துள்ளார். கதையை அவரே எழுதுவாரா? அதற்கென ஆசிரியர் குழு இருக்கிறதா என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட 61 வருடங்களுக்கு மேலாக வந்துகொண்டிருக்கிறது. 15 செப்டம்பர் 2013லிருந்து கன்னித்தீவு வண்ணத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. இடையில் ஓவியர் கணேசனுக்கு உடல்நல குறைவு ஏற்பட, ஓவியர் தங்கம் என்பவர் நான்கு மாதங்கள் வரைந்து இருக்கிறார்.

இப்பொழுதுள்ள தலைமுறை காணொளிகள் வழியாக வளர்கிற தலைமுறை என்பதால், கன்னித்தீவை எத்தனைப் பேர் படிக்கிறார்கள் என தெரியவில்லை. ஆனால், தினந்தந்தியின் ஒரு அடையாளமாக கன்னித்தீவு மாறிப்போனது.

உங்களில் எத்தனைப் பேர் கன்னித்தீவு படித்திருக்கிறீர்கள்? தெரிந்து வைத்திருக்கிறீர்கள்?

டாணாக்காரன்



”இந்த அமைப்பு ஈஸ்வரமூர்த்தி ஆட்கள் போல ஆட்கள் நிரம்பினால், மக்களின் நிலைமை என்ன ஆவது? இந்த நிலைமையை மாற்றவேண்டும். யார் மாற்றுவார்கள்?

****

நேர்மையான போலீஸ் ஆகவேண்டும் என்ற ஆசையுடன் 1998ல் தேர்வாகி நெல்லைக்கு போலீஸ் பயிற்சிக்கு வருகிறார் நாயகன். 1983ல் தேர்வாகியும், பயிற்சி பெற முடியாமல், நீதிமன்றத்தில் அலையாய் அலைந்து வழக்கில் வெற்றி பெற்று நடுத்தர வயதுடைய 100 பேரும் பயிற்சிக்கு வந்து சேர்கிறார்கள்

அங்கு வந்து சேர்ந்திருக்கும் அனைவரும் அதிகாலையிலேயே பயிற்சிக்கு வரவேண்டும். நான்கே நான்கு கக்கூஸ்கள் மட்டும் ஒதுக்கப்படுகின்றன. மேலதிகாரி குறை ஏதும் இருக்கிறதா என ஒரு பேச்சுக்கு கேட்கும் பொழுது, ஒருவர் இயல்பாய் வேண்டுமென்றே மூடிவைக்கப்பட்டிருக்கும் கக்கூஸ்களை திறந்துவிட கோருகிறார். அவர் கடுமையாக திட்டுகிறார். மாணவர்களிடம் அதிகாரிகள் லஞ்சமாய் பணம் வசூலிக்கிறார்கள். நாயகன் உட்பட சிலர் எதிர்க்கிறார்கள்.

கேள்விக்கே இடமில்லாத தங்களது எல்லையற்ற அதிகாரத்தை கேள்வி கேட்டவர்களையும், லஞ்சம் தர மறுத்தவர்களையும் கட்டம் கட்டுகிறார்கள். தண்டனை என்கிற பெயரில் மிக கடுமையான பயிற்சி தந்து மைதானத்திலேயே விழுந்து சாகும்படி செய்கிறார்கள். எல்லா சிரமங்களையும், தடங்கல்களையும் தாண்டி, கட்டம் கட்டப்பட்டவர்கள் போலீசானார்களா என்பதை உணர்ச்சிபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

முதன் முதலில் வர்க்கங்கள் தோன்றிய பிறகு, ஆளும் வர்க்கங்களாய் தங்களை உயர்த்திக்கொண்ட பிறகு பெரும்பாலோரை ஒடுக்குவதற்கு ஆயுதமேந்திய ஆட்களை கொண்ட தனிவகைப் படைகளை உருவாக்கிக்கொண்டார்கள் என்பது வரலாறு. இதையே நடைமுறை வார்த்தையில் சொல்வதென்றால், போலீசும், இராணுவமும் ஆளும் வர்க்கங்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டப்பூர்வ கிரிமினல் கும்பல்கள் தான்.

ஆளும் வர்க்கத்திற்கு விசுவாசவான சேவையும், பெரும்பாலான மக்களையும் அடக்கி, ஒடுக்கி வைப்பதற்கான படை/போலீசு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதை பயிற்சியின் பொழுதே “ஒழுங்கமைத்து”க்கொள்கிறார்கள். எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிகாரத்திற்கு கீழ்படிபவர்களை விட்டுவிடுகிறார்கள். கேள்விக்கேட்பவர்களை மிரட்டுகிறார்கள். கதறவிடுகிறார்கள். தண்டிக்கிறார்கள். அதையும் மீறினால் நுட்பமாக கொன்றுவிடுகிறார்கள்.

ஒருவர் தன்னை கெட்ட வார்த்தையால் திட்டிய ஒரு மேலதிகாரியை அடித்துவிடுகிறார். அதற்கு பிறகு அவருக்கு பதவி உயர்வு தராமலே 20 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கிறார்கள். மோசமாக இழிவுப்படுத்துகிறார்கள். மேல்விசாரணையில் உயர் மேலதிகாரி அதைவிட மோசமாக திட்டி “உன்னை அதிகாரி திட்டுனா அடிப்பியோ! இப்ப நான் திட்டுறேன். என்னை அடி பார்க்கலாம்” என அவமானப்படுத்துகிறார். தன் குடும்ப சூழ்நிலையால், வேலையை விட்டு போக முடியாமல் புலம்பிக்கொண்டே வாழ்க்கையை தள்ளுகிறார்.

அங்கு பயிற்சி தரும் கொடூர பயிற்சியாளருக்கு பக்கபலமாய் எல்லா உயரதிகாரிகளும் நிற்கிறார்கள். அதை இறுதியில் அந்த தலைமை உயரதிகாரி “இந்தப் பக்கம் ஈஸ்வர மூர்த்தி. அந்தப் பக்கம் என் பையன்” என்றால், நான் ஈஸ்வரமூர்த்தியைத் தான் ஆதரிப்பேன். ஈஸ்வரமூர்த்தி என்பது ஒரு ஆள் அல்ல! இந்த சிஸ்டத்தின் ஒரு பகுதி. நாங்க எல்லோரும் சேர்ந்தது தான் ஈஸ்வரமூர்த்தி” என சொல்வதின் மூலமும் பளிச்சென புரிந்துகொள்ளலாம்.

மற்ற போலீசு படங்களை விட இந்த படத்தின் சிறப்பு இன்னும் நிஜத்திற்கு நெருக்கமாய் போலீசின் அவலட்சணங்களை நமக்கு பளிச்சென காட்டுகிறது. இதில் இன்னொரு குரலும் கேட்கிறது. இந்த சிஸ்டத்தின் பல அநீதிகளையும் பார்த்துக்கொண்டு, மனம் வெதும்பி நிற்கும் நாயகனிடம் ஒரு நேர்மையான அதிகாரி ”இந்த அமைப்பு ஈஸ்வரமூர்த்தி ஆட்கள் போல ஆட்கள் நிரம்பினால், மக்களின் நிலைமை என்ன ஆவது? இந்த நிலைமையை மாற்றவேண்டும். யார் மாற்றுவார்கள்? மக்களை நேசிக்கிற உன்னை போன்றவர்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும்.” என ஆறுதல் சொல்கிறார். அவர் பேச்சில் ஒரு முரண் இருப்பதை கவனிக்கலாம். தான் நடத்தும் சட்ட வகுப்பில் புரட்சி என்பார். பிறகு இந்த சிஸ்டத்தில் நம்மை போன்ற நல்லவர்கள் இருக்கவேண்டும் என்பார். புரட்சி என்பது இருக்கும் சிஸ்டத்தில் மாற்றம் கொண்டு வருவதல்ல! புதிதாய் ஒன்றை கட்டியமைப்பது!

அதே அதிகாரி சொல்வார். “இந்த அமைப்பு முரட்டு வெள்ளைக்காரனுக்கும், முட்டாள் அரசியல்வாதிகளுக்கும் பிறந்தது” அதை திருத்தமாக இப்படி சொல்வோம். இந்த அமைப்பு என்பது ஆளுகின்ற கார்ப்பரேட்டுகளையும், காவி பாசிஸ்டுகளையும் காத்துநிற்க கூடியது. இந்தப் போலீசும், இராணுவமும் அவர்களுக்குத் தான் விசுவாசமாக வேலை செய்யும். இதில் நேர்மையானவர்கள் பெரும்பாலோருக்கு நடக்கும் எல்லா அநீதிகளையும் பார்த்து ஒன்றும் செய்யமுடியாமல், குற்ற உணர்வில் அவதிப்படுவார்கள். எதிர்த்து கேள்விகள் கேட்டால் அடக்கப்படுவார்கள். தற்கொலைக்கு தள்ளப்படுவார்கள். இல்லையெனில் பழி சொல்லி சிறையில் வதைக்கப்படுவார்கள். அதிகப்பட்சம் கொலை செய்யப்படுவார்கள். இப்போதைய நடப்பு நிலைமையே இதற்கு சாட்சி.

நிலவுகிற இந்த முதலாளித்துவ சமூகத்தில் ”ஜனநாயகம்” அனைவருக்கும் ”வாக்குரிமை”, தேர்தல் என எத்தனை பூச்சுகள் இருந்தாலும், மூகமூடி தரித்த முதலாளித்துவ சர்வாதிகாரம் தான் என்கிறார் ஆசான் லெனின். சீழ்பிடித்து, அழுகி நாறும் இந்த முதலாளித்துவ பாடியை எவ்வளவு நாளைக்குத் தான் மக்கள் தலையில் சுமப்பது? பாடியை அடக்கம் செய்யும் வேலைகளை வேகமாக நகர்த்தலாம்.

புரட்சியின் மூலம் உழைக்கும் வர்க்கம் ஆட்சி செய்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் கடந்த நூற்றாண்டில் உலகம் பார்த்திருக்கிறது. அதன் நன்மைகளையும் அனுபவித்திருக்கிறது. பெரும்பாலோருக்கு ஜனநாயகம், பிற்போக்கு சக்திகள் மீது சர்வாதிகாரம் என்பது தான் அதன் கோட்பாடு. அதை நடைமுறைக்கு கொண்டு வர பாடுபடலாம்.

இயக்குநர் பாலுமகேந்திரா பயிற்சி பட்டறைலிருந்து இன்னுமொரு இயக்குநர் தமிழ். உண்மையை, அழுத்தமாக பதிவு செய்யும், அரசியல் அறிந்த இன்னுமொரு இயக்குநர். உருவாகியிருக்கிறார்.
வாழ்த்துக்கள்
.
நடிகர் லால், எம்.எஸ். பாஸ்கர், மதுசூதனன், விக்ரம் பிரபு, பிரகதீஸ்வரன், போஸ் வெங்கட் என படத்தில் நடித்த அத்தனைப் பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. அவசியம் பாருங்கள்.