> குருத்து: January 2010

January 29, 2010

ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது - இறுதி பாகம்!


பாகம் 1
பாகம் 2
பாகம் 3

தனியார்மயத்தின் கீழ் நீடித்த, நிலையான வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை துபாய் நெருக்கடி மீண்டும் நிரூபித்திருக்கிறது.

ஆனால், கடந்த ஓராண்டாகவே நெருக்கடிகள் முற்றி வந்தன. குடியிருப்புகளின் வாடகைகள் பாதியளவுக்குக் குறைந்த போதிலும், பெரும்பாலும் அவை காலியாகவே கிடந்தன. துபாய் மட்டுமின்றி, மத்திய கிழக்கு நாடுகளது மன்னர்கள்-அமீர்களது பொருளாதார நிலை பற்றி எந்த விவரமும் உலகுக்குத் தெரிவிக்கப் படுவதில்லை. இதனால் நெருக்கடியின் பரிமாணத்தை எவராலும் மதிப்பிட முடியவுமில்லை.

இந்தக் கூட்டமைப்பில் இன்று அபுதாபி மட்டுமே எண்ணெய் வளமும் பொருளாதார பலமும் கொண்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சியால் துபாய் திவாலாகி விழும் வரை உதவ மறுத்த அபுதாபி, இப்போது கடனளிக்க முன்வந்துள்ளது. துபாயைப் போல மேற்கத்திய கலாச்சாரத்தைக் கொண்டிராமல், இஸ்லாமிய அடிப்படைவாதக் கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் அபுதாபி, துபாய் பிராந்தியத்தை தனது இரும்புப் பிடி ஆட்சியின்கீழ் கொண்டுவந்து மேலாதிக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

1997-இல் தென்கிழக்காசிய நாடுகள் திவால், 2001-இல் அர்ஜெண்டினா திவால், கடந்த ஆண்டில் அமெரிக்கா திவால் என்று உலக முதலாளித்துவம் அடுத்தடுத்து குப்புற விழுந்து கிடக்கிறது. இது தொடக்கம்தான். ஆனால், இந்நெருக்கடிக்கான முடிவு எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை.

லெமென் பிரதர்ஸ் என்ற நிதி நிறுவனம் திவாலாகிச் சரிந்தபோது, அது துபாயைப் பாதிக்கவில்லை என்று கூறி, உலக முதலாளித்துவ நெருக்கடி என்பது வேறு, துபாய் வேறு என்று நம்பச் சொன்னார்கள். ஆனால், துபாய் நெருக்கடி கசியத் தொடங்கியதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிதிச் சந்தைகள் ஆட்டங்காணுகின்றன. ஐரோப்பிய வங்கிளும் குறிப்பாக, பிரிட்டனைச் சேர்ந்த ஹெச்.எஸ்.பி.சி. ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, பர்க்லேஸ், ஏ.பி.என்.அம்ரோ முதலான வங்கிகள் பல்லாயிரம் கோடிகளுக்கு மேல் பெருத்த இழப்பைச் சந்தித்துள்ளன. இந்தியாவின் பாங்க் ஆஃப் பரோடா 5,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இது தவிர, பல இந்தியக் கட்டுமான நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்துள்ளன. பிரிட்டனும் ஜெர்மனியும் கடன் பத்திரங்களைப் பெருமளவில் வாங்கியுள்ளதால், அவற்றின் நிதியமைப்புமுறையே கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. வீட்டு விலைகள் உயரும் என எதிர்பார்த்துக் கடனை வாரியிறைத்துவிட்டு, இப்போது என்ன செய்வது என்று புரியாமல் அவை தவிக்கின்றன.

அரசாங்கத்தின் தலையீடோ, கட்டுப்பாடோ இல்லாமல் தாராளமயம் சுதந்திரமாகச் செயல்பட்டால், முதலாளித்துவம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி, பொருளாதாரம் பூத்துக் குலுங்கும் என்று ஏகாதிபத்தியவாதிகள் உபதேசித்து, அதைத் தீவிரமாகச் செயல்படுத்தினர். ஆனால், கட்டுப்பாடற்ற நிதியாதிக்கக் கும்பல்களின் சூறையாடல், துபாயின் பொருளாதாரத்தையே மீளமுடியாத பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது. துபாய் மட்டுமின்றி இதர நாடுகளிலும் கட்டுமானத் துறையும் வீட்டுமனைத் தொழிலும் நொறுங்கிச் சரியும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. அதி விரைவில் கிரீசும் அயர்லாந்தும் சரிவது நிச்சயமாகிவிட்டது. அனைத்துலக முதலாளித்துவம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கி மரணப்படுக்கையில் முனகுகிறது.

கோடீஸ்வர நாடான துபாயே ஆடிக்காற்றில் அம்மியாகப் பறக்கும்போது, ஏழை நாடுகளின் கதி இனி என்னவாகும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. திவாலாகும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து முட்டுக் கொடுத்து முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்துவது என்ற கொள்கையைத்தான் அமெரிக்கா முதல் துபாய் வரை எல்லா அரசுகளும் பின்பற்றுகின்றன. நிதியாதிக்கக் கும்பல்களின் சூறையாடலை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி ஆதரிக்கும் இக்கேடுகெட்ட முதலாளித்துவக் கொள்கையால், எந்த நாடும் இனி மீளவே முடியாது என்பதைத்தான் துபாய் அனுபவமாக உணர்த்துகிறது.

- நன்றி - புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010

January 28, 2010

இந்திய ஐ.டி. துறைக்கு பாதிப்பு: வெளிப்பணி ஒப்படைப்புக்கு வரிச்சலுகை ரத்து!


வாஷிங்டன், ஜன.28: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கொண்டு வந்துள்ள புதிய மசோதாவால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை பெருமளவு பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.


ஏற்கெனவே சர்வதேச தேக்க நிலை காரணமாக பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆள்குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்நிலையில் அதிபர் பராக் ஒபாமா தனது ஓராண்டு பதவி நிறைவை ஒட்டி நிகழ்த்திய உரையில் வெளிப்பணி ஒப்படைப்பு (பிபிஓ) மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.


வெளிப்பணி ஒப்படைப்பு (பிபிஓ) பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படும். காப்பீடு, மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ன் போன்ற பணிகளை பிபிஓ முறையில் நிறைவேற்றும் நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்புகள் குறையும்.


அமெரிக்காவில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதற்காகவே வரிச் சலுகை ரத்து செய்யப்படுகிறது என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.


தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேலை வாய்ப்பு தொடர்பான மசோதாவில் இப்புதிய கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் வேலையின்றி தவிப்பவர்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை. எனவே வேலைவாய்ப்பு மசோதா மூலம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க அரசு தீவிரமாக உள்ளது. இதைப் போல மேலும் சில பரிந்துரைகளை அளிக்குமாறு செனட் சபையை ஒபாமா கேட்டுக் கொண்டார்.


உலகிலேயே அதிக அளவில் வெளிப்பணி ஒப்படைப்புப் பணியை மேற்கொள்ளும் நாடாக இந்தியா விளங்குகிறது. அமெரிக்க அதிபரின் புதிய உத்தரவால் இத்துறை பெரிதும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.


2008-09-ம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்கு 5.8 சதவீதமாகும். 1997-98-ம் நிதி ஆண்டில் இது 1.2 சதவீதமாக இருந்தது.


அமெரிக்க நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக பணிகளை வேறு நாடுகளுக்குக் கொண்டு சென்றன. இதில் ஆங்கிலப் புலமை மிகுந்த இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தகவல் தொழில்நுட்பம் பெற்றவர்களின் விகிதம் அதிகமாக இருந்ததால் இங்கு அதிக அளவில் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.


தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையால் உண்மையிலேயே கடந்த சில ஆண்டுகளில் இழந்த 70 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது என்றும் ஒபாமா குறிப்பிட்டார். தற்போதைய நடவடிக்கையால் ஏற்கெனவே 20 லட்சம் அமெரிக்கர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.


2010-ம் ஆண்டில் அரசின் முன்னுள்ள பிரதான பிரச்னைகளில் முக்கியமானது வேலை வாய்ப்பை உருவாக்குவதே ஆகும் என்று ஒபாமா சொன்னார்.


புதிய வேலைவாய்ப்பு மசோதா மூலம் வால் ஸ்டிரீட்டில் உள்ள வங்கிகள் திரும்பச் செலுத்திய 3,000 கோடி டாலர் தொகையைக் கொண்டு சமுதாய வங்கிகள் உருவாக்கப்பட்டு சிறு வணிகத்துக்கு கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் வர்த்தகத்தை பிரதானமாகக் கொண்டே புதிய மசோதா அமையும். அத்துடன் அரசும் வர்த்தகம் பெறுக தேவையான உதவிகளை அளிக்கும். இதன் மூலம் ஏராளமானோர்க்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்றும் ஒபாமா சுட்டிக் காட்டினார். மனித வள மேம்பாடு மற்றும் கல்வியில் அதிக முதலீடு செய்ய அரசு தீவிரமாக உள்ளது.


தற்போது வழங்கப்படும் உயர்நிலைப் பள்ளி கல்வியானது வேலை வாய்ப்பைப் பெறுவதற்கானதாக அமையவில்லை. அனைவரும் கல்லூரி படிப்பைத் தொடரும் வகையில் அளிக்க அரசு முயன்றுள்ளது. மக்கள் செலுத்தும் வரிப் பணம் வங்கிகளுக்கு மானியமாக அளிக்கப்பட்டு அது மாணவர்களுக்கு கல்விக் கடனாக வழங்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.


அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஏற்றுமதியை இரட்டிப்பாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஒபாமா கூறினார்.


இதன் மூலம் இறக்குமதியை மட்டுமே அமெரிக்கா நம்பியிருக்காது என்ற மறைமுக தகவலை சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி : தினமணி - 29/01/2010

January 27, 2010

இந்தியாவின் இதயத்தின் மீதான போர் - அருந்ததிராய்


The heart of India is under attack' - 31, அக்டோபர், 2009 கார்டியன் இதழில் வெளியான ஆங்கிலக் கட்டுரையை சிறப்பாக தமிழாக்கம் செய்து, நூல் வடிவில் வெளிவந்திருக்கிறது.

நூலிலிருந்து...

// நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், ஊர் பேர் தெரியாத நிறுவனங்கள் முதல், உலகின் மாபெரும் சுரங்க மற்றும் இரும்பு நிறுவனங்களான மிட்டல், ஜிண்டால்.... வேதாந்தா வரை அனைவரும் பழங்குடி மக்களின் தாயகத்தை அபகரித்துக் கொள்வதற்குப் போட்டி போட்டுக்கொண்டு பாய்கின்றனர்.

ஒவ்வொரு மலையின் மீதும், ஒவ்வொரு நதியின் மீதும், காட்டின் பசும்புற் திட்டுகள் மீதும், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது"// பக். 23

// "சொல்லிக் கொள்ளப்படும் இந்தச் சுதந்திரம் இந்தியாவுக்கு கிடைத்து அறுபதாண்டுகளுக்குப் பின்னரும், கல்வி, மருத்துவம் அல்லது சட்டப்படியான நிவாரணங்கள் என எதுவுமே கிடைக்க பெறாத மக்கள் அவர்கள். பல்லாண்டுகளாக அவர்கள் ஈவிரக்கமின்றி சுரண்டப்பட்டவர்கள்; கந்து வட்டிக்காரர்களும், சிறு வியாபாரிகளாலும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டவர்கள்; போலிசும், வனத்துறை அதிகாரிகளும் தமது உரிமை போல் கருதி பழங்குடிப் பெண்களை வல்லுறவு கொண்டனர். அப்பழங்குடி மக்கள் தம் கண்ணியத்தை சிறிதளவேனும் மீளப் பெற்றார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்களுடன் பல்லாண்டுகளாக வாழ்ந்து, அவர்க்ளுடன் தோளோடு தோள் நின்று போராடிய மாவோயிஸ்டு கட்சியின் அணிகள்தான்."// பக். 7.

//" நான் தாண்டேவாடா சென்றிருந்த போது, தனது ' பசங்களால்' கொல்லப்பட்ட 19 மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களைக் காவல்துறைக் கண்காணிப்பாளர் என்னிடம் காட்டினார். "இவர்கள் மாவோயிஸ்டுகள் தான் என்று நான் மற்றவர்களுக்கு எப்படிச் சொல்ல முடியும்" என்று கேட்டேன். "பாருங்க மேடம், இவுங்க கிட்ட மலேரியா மாத்திரை, டெட்டால் பாட்டில் எல்லாம் இருந்துச்சு.... இதெல்லாம் வெளியில இருந்து வந்த விச்யங்களில்லையா?" என்றார்" // பக். 11

// "தாண்டேவாடாவில் ஹிமான்ஷூ குமார் என்பவரால் நடத்தப்படும் வன்வாசி சேத்னா ஆஸ்ரம் எனும் காந்திய ஆசிரமம், சில மணி நேரங்களில் புல்டோசர்களைக் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அந்த ஆசிரமம் தான் போர்க்களப் பகுதி துவங்குமிடத்திற்கு முன்னால் அமைந்திருந்த ஒரே ஒரு நடுநிலைப் புகலிடம். இப்பகுதிக்கு வேலை செய்ய வரும் பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை செயல்வீரர்கள், ஆய்வாளர்கள், உண்மை அறியும் குழுவினர் ஆகியோர் தங்கிச் செல்வதற்கு எஞ்சியிருந்த ஒரே இடம்." // பக். 11

// அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதில் பழங்குடி மக்கள் தமக்கென ஒரு நீண்ட, நெடிய வீரஞ்செறிந்த பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், அந்தப் பாரம்பரியம் மாவோயிசம் பிறப்பதற்கும் முந்தையது என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது" //


விலை ரூ. 15/- பக்கங்கள் - 32.

வெளியீடு :

மக்கள் கலை இலக்கிய கழகம்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.
பெண்கள் விடுதலை முன்னணி.
விவசாயிகள் விடுதலை முன்னணி

நூல் கிடைக்குமிடங்கள் :
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர், சென்னை - 83
தொலைபேசி : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110/63, என்.எஸ். கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 24
தொலைபேசி : 94448 34519

தொடர்புடைய பதிவுகள் :

ஆபரேசன் கிரீன் ஹண்ட் எதிர்ப்பியக்கம்!

பினாயக்சென் விடுதலை : அரசை எதிர்த்ததால் இரண்டாண்டு சிறைவாசம்

January 20, 2010

துபாய் நெருக்கடி : ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது! பாகம் 3


பாகம் - 1
பாகம் - 2

தனியார்மயத்தின் கீழ் நீடித்த, நிலையான வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை துபாய் நெருக்கடி மீண்டும் நிரூபித்திருக்கிறது.

முன்குறிப்பு : 'முதல் நாள் வரை சொர்க்கம். அடுத்த நாள் நரகம்" என மாறி நிற்கிறது துபாய். வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை 50% தொடும் என்கிறார்கள். துபாயின் நெருக்கடியில் வேலை இழந்தவர்களின் கதி என்ன? 'சொர்க்கத்தை' எண்ணி வங்கிகளில் கடன் வாங்கியவர்களின் கதி என்ன? என்பதையும், "வாயை திறந்து உண்மையை பேசவே கூடாது" என ஊடகங்களுக்காக ஒரு சட்டமே போடப்பட்டிருப்பதையும் இந்த பகுதி விவரிக்கிறது.

****

எல்லாம் இன்று குப்புற விழுந்துவிட்டது. பல நூறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் அரைகுறையாக எலும்புக்கூடுகளாக நிற்கின்றன. ஆடம்பர வீடுகளுக்காக உருவாக்கப்பட்ட செயற்கைத் தீவுகள் பலவும் கடலுக்குள் கொட்டப்பட்ட குப்பை மேடுகளாகக் காட்சியளிக்கின்றன. இவையெல்லாம் கட்டி முடிக்கப்படுமா, அல்லது கைவிடப்படுமா என்று யாருக்கும் தெரியாது. ஆனால், கடன் கொடுத்த வங்கிகள் சும்மாயிருக்குமா? கடனை கட்டாமல் தப்பிக்க முடியாது என்று எச்சரித்து வசூல் வேட்டையைத் தீவிரப்படுத்துகின்றன.

மறுபுறம், குப்புற விழுந்துவிட்ட பொருளாதாரத்தால் துபாயில் வேலை இழப்பு தீவிரமாகியுள்ளது. இலட்சகணக்காணோர் வேலை இழந்துள்ளனர் என்று அதிகாரபூர்வமற்ற செய்திகள் வருகின்றன. துபாய் சட்டப்படி, வேலையிழந்தவர்களின் தொழில் விசா ரத்து
செய்யப்படும். ஒருமாத இடைவெளியில் அவர்கள் வேறு வேலை தேடிக்கொண்டால் அந்நாட்டில் இருக்க முடியும். இல்லையேல், வெளியேற்றப்படுவர். இதனால் இந்தியா, பாகிஸ்தான், வங்கத்தேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து நாடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் அரைச் சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர். பணி நிரந்தரம் என்ற நம்பிக்கையில் கட்டட வடிவமைப்பாளர், பொறியாளர் முதலானோர் வீடு வாங்கும் ஆசையில் வங்கியில் கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்த வழி தெரியாமல் தவிக்கின்றனர்.

துபாயில் கடனை அடைக்க முடியாதவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். வாழ்நாள் முடுவதும் அடிமையாக வெலை செய்துதான் கடனை அடைக்கவேண்டும். இதனால் கடனை அடைக்க வழிதெரியாத பலர் நாட்டை விட்டுத் தப்பியோடுகின்றனர். எஞ்சியிருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு, எவரிடமும் விற்கமுடியாத தமது விலையுயர்ந்த கார்களையும் உடைமைகளையும் அங்கேயே போட்டுவிட்டு ஓடுகின்றனர். துபாய் விமான நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில் கைவிடப்பட்டு யாரும் உரிமை கோராத கார்கள் மலை போல குவிந்து கிடக்கின்றன். வீடுகள் காலியாகி, வீட்டுமனை விலை சரிந்து ஆளரவமற்ற தெருக்கள் பெருகி வருகின்றன.

"இருப்பினும் இது தற்காலிக நெருக்கடி தான். நிலைமை படிப்படியாக மாறி வருகிறது. அபுதாபி அமீரகம் கடன் கொடுத்து மீட்டுவிட்டது. துபாயின் கனவுலகம் மீண்டும் ஒளிரும்" என்று ஊடகங்கள் ஆரூடம் கூறி வருகின்றன. துபாய் அரசாங்கம் புதிய ஊடக சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பதே இதற்குக் காரணமாகும். இச்சட்டத்தின்படி, துபாயில் பொருளாதார நெருக்கடி நிலவுவதாக எந்த ஊடகமும் செய்தியை வெளியிடக்கூடாது. மீறினால், இலட்சகணக்கில் அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும். எனவே, எல்லா ஊடகங்களும் வதந்திகளையே பரப்பி வருகின்றன.

தொடரும்..

நன்றி : புதிய ஜனநாயகம் - ஜனவரி 2010

January 17, 2010

வெள்ளி விருது : நன்றிகளும்! வாழ்த்துகளும்!தமிழ்மண விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஒரு பிரிவில் குருத்து தளத்திற்கு இரண்டாம் பரிசு வெள்ளி கேடயம் அளித்திருக்கிறார்கள். வாக்களித்தவர்களுக்கு நன்றியும், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

குருத்து தளத்திலிருந்து..

பெண்கள் பிரச்சனைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள்... பிரிவில்..

"என் பெயர் பிரேமா" - ஒரு உண்மை கதை

செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் பிரிவில்

ஜகதீஷ் டைட்லர் விடுதலையும்! சிதம்பரத்தின் மீது ஷீ வீச்சும்!

மேற்கண்ட இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன். பொதுவாக போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வம் எப்பொழுதுமே இருப்பதில்லை. அதனால் தான் 2008-ம் ஆண்டு போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிப்பது: எழுதிய பதிவுகளில் "தேறுவதை" கண்டுபிடிப்பது போன்ற "சிரமமான" வேலைகள் தான் காரணம்.

பொதுவாக எழுதும் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. படிக்கிறவர்கள் மனதிற்குள் திட்டுகிறார்களா? அல்லது உருப்படியா எழுதறான்யா! என பாராட்டுகிறார்களா என்பதை அறிய முடிவதில்லை. ஹிட்ஸ்-ஐ வைத்து படிக்கிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த போட்டியில் கலந்து கொண்டால்... பலரும் படிப்பார்கள். நம் எழுத்தின் தரத்தை உரசிப்பார்க்கலாம் என்ற எண்ணத்தில் தான், இறுதி நேரத்தில் விண்ணப்பித்தேன். முதல் சுற்றில் பதிவர்கள் வாக்களித்து இரண்டு பிரிவுகளிலும் பத்தில் ஒன்று என்ற முன்னிலைக்கு வந்ததும், ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆரோக்கியமாக எழுதும் பதிவுகளுக்கு மக்கள் ஆதரவு தருகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன்..

இன்றைக்கு வெள்ளி கேடயம் பரிசு கிடைத்திருப்பது, நான் பற்றி பிடித்திருக்கின்ற "மார்க்சியம்" என்ற சித்தாந்தத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக புரிந்து கொள்கிறேன்.

பதிவுலகில் தினந்தோறும் புதியவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட தமிழ்மண விருதுகள் ஆரோக்கியமாக எழுதுவதை கண்டிப்பாக உற்சாகப்படுத்தும். இதற்காக தமிழ்மணத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துகொள்கிறேன்.

January 9, 2010

துபாய் : ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது! - பாகம் 2!


பாகம் 1
தனியார்மயத்தின் கீழ் நீடித்த, நிலையான வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை துபாய் நெருக்கடி மீண்டும் நிரூபித்திருக்கிறது.

முன்குறிப்பு : இந்த நெருக்கடி குறித்து இணையத்தில் தமிழில் தேடிய பொழுது கிடைத்த செய்திகள் மிக குறைவாகவே இருந்தன. ஆங்கிலத்தில் கிடைத்தன. பணிச்சுமையில் என்னால் எழுத முடியவில்லை. இப்பொழுது புதிய ஜனநாயகம் ஜனவரி 2009 இதழில் விரிவான கட்டுரை வெளிவந்துள்ளது. அவர்களுக்கு நன்றி சொல்லி, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீளம் கருதி மூன்று அல்லது நான்கு பாகங்களாக பகிர்கிறேன்.
****

ஏழு பெருநகர அமீராட்சியும் தனித்தனி பட்ஜெட்டும் கொண்டுள்ள ஐக்கிய அரபுக் குடியரசில் ரஸ் அல் கைமாஹ், அபுதாபியைப் போல துபாயில் எண்ணெய் வளம் இல்லை. பெட்ரோலியம் உறிஞ்சி எடுக்கப்பட்டு வற்றத் துவங்கிவிட்டதால், வீட்டுமனைத் தொழில் மற்றும் சுற்றுலா துறையில் துபாய் அதிக அழுத்தம் கொடுத்தது.

கொளுத்தும் வெயிலில் பாலைவனத்தின் நடுவேயுள்ள முகாம்களில் வாழும் ஏழை நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், தொழிற்தேர்ச்சி பெற்று அதிக சம்பளம் வாங்கி நகரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடும்பத்தோடு வாழும் நடுத்தர வர்க்கத்தினர், கோடானு கோடிகளை முதலீடு செய்துள்ள உலகின் பணக்கார வர்த்தகர்கள் எனப் பல்வேறு பிரிவு வெளிநாட்டவர்கள் துபாயில் குடியேறியுள்ளனர். துபாயின் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் ஏறத்தாழ 80 சதவீதம். துபாயில் கட்டப்படும் ஆடம்ப்ர வீடுகளை வாங்குபவர்களுக்கு, அந்நாட்டில் நிரந்தரமாக வாழ்வதற்கான அனுமதிப் பத்திரம் அளிக்கப்படும் என்று அரசு ஆசை காட்டியது. இதனால் நடுத்தர வர்க்கமும் பெரும் வர்த்தகர்களும் உல்லாசிகளும் இத்தகைய புதிய ஆடம்பர வீடுகளை வாங்கப் போட்டி போட்டனர். நடுத்தர வர்க்கத்தினர் வங்கியில் கடன் வாங்கியாவது வீடு வாங்க முண்டியடித்தனர்.

கடல் நடுவே பேரீச்சை மர வடிவில், உலக வரை பட வடிவில் என்றெல்லாம் செயற்கைத் தீவுகளை உருவாக்கி, அவற்றில் ஆடம்பர அடுக்குமாடி வீடுகளைக் கட்டித்தரும் திட்டங்களை பன்னாட்டுக் கட்டுமானக் கம்பெனிகள் அறிவித்தன. கட்டடங்களை எழுப்பும் முன்னரே வீடுகளை விற்கும் திட்டம் தொடங்கியது. முன்கூட்டியே வீடுகளை விற்கும் திட்டம் தொடங்கியது. முன்கூட்டியே பணத்தைத் தவணை முறையில் செலுத்த வேண்டும். ஆனால், குடியேறுவதற்கு ஆண்டுகணக்கில் காத்திருக்க வேண்டும். நம்ம ஊரில் தேக்குப் பண்ணைத் திட்டம் என்ற பெயரில் ஒரு மோசடித் திட்டத்தை அறிவித்து, இதோ உங்கள் தேக்கு கன்று வளர்ந்து வருகிறது என்று ஒரு புகைப்படத்தை அனுப்பி ஏய்த்ததைப் போலத்தான், வெறும் கட்டடப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு கற்பனை வீட்டுக்காகப் பலரும் பணத்தைக் கட்டினர். நடுத்தர வர்க்கத்தினர் வங்கிகளில் கடன் வாங்கிக் கட்டினர்.

"இன்றைய உலகில் வீட்டுமனை-கட்டிடத் தொழிலில் முதலீடு செய்வது தான் பாதுகாப்பானது. வீடுகளின் விலை குறைந்ததாக வரலாறில்லை" என்ற பங்குச் சந்தை சோதிடர்கள் கூறும் அருள்வாக்கை பலரும் நம்பினர். பங்குச் சந்தையில் செயற்கையாக ஊதிப் பெருக்கப்பட்டு வீட்டுமனை விலைகள் தாறுமாறாக உயர்ந்தன. பங்குச் சந்தை சூதாட்டத்தில் முதலீடு செய்த அனைத்துலக ஏகபோக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கோடிகோடியாகக் கொள்ளையடித்த பிறகு, உண்மை மதிப்பு வீழ்ச்சியடையத் தொடங்கியது. முதலீடு செய்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வரப் போகும் வீழ்ச்சியை அறிந்து முன்கூட்டியே தமது முதலீடுகளை திரும்ப எடுத்து சென்றன. இதனால், கடன் சுமை அதிகரித்து துபாய் வேர்ல்டு என்ற அரசு சார்பு நிதி நிறுவனம் திவாலாகியது.

தொடரும்..

January 5, 2010

துபாய் நெருக்கடி : ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது!

தனியார்மயத்தின் கீழ் நீடித்த, நிலையான வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை துபாய் நெருக்கடி மீண்டும் நிரூபித்திருக்கிறது.

முன்குறிப்பு :
துபாயில் பொருளாதார நெருக்கடி என ஊடகங்களில் செய்திகள் வர ஆரம்பித்தன. வழக்கம் போல இந்த நெருக்கடியால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என அடுத்தடுத்து அறிக்கைகள் வெளியிட்டனர்.

துபாயில் வேலை செய்யும் ஆசிய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகம். பக்ரீத் மற்றும் விடுமுறைக்கு சொந்த ஊர் வந்தவர்களுக்கெல்லாம்... "வீட்டிலேயே இருங்கள். வந்துவிடாதீர்கள்" என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மெயில் அனுப்பின; தொலைபேசியில் செய்தி சொல்லின.

இந்த நெருக்கடி குறித்து இணையத்தில் தமிழில் தேடிய பொழுது கிடைத்த செய்திகள் மிக குறைவாகவே இருந்தன. ஆங்கிலத்தில் கிடைத்தன. பணிச்சுமையில் என்னால் எழுத முடியவில்லை. இப்பொழுது புதிய ஜனநாயகம் ஜனவரி 2009 இதழில் விரிவான கட்டுரை வெளிவந்துள்ளது. அவர்களுக்கு நன்றி சொல்லி, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீளம் கருதி மூன்று அல்லது நான்கு பாகங்களாக பகிர்கிறேன்.
****

புர்ஜ் துபாய் என்ற உலகின் மிக உயர்ந்த கட்டடம், துபாய் மால் என்ற உலகின் மிகப் பெரிய பேரங்காடி, புர்ஜ் அல் அரப் என்ற உலகின் முதல்தர ஏழு நட்சத்திர தகுதி கொண்ட உல்லாச விடுதி, உலகின் எட்டாவது அதிசயம் எனப்படும் "ஜுமெரா பாம்" எனப்படும் ஈச்சமர வடிவத் தீவு, ஜபேல் அலை ஏற்றுமதி மையம் - எனக் கனவுலகை கண்முன்னே காட்டிய துபாய் இன்று கடனாளியாக நிற்கிறது. ஆரவாரம் அடங்கிவிட்டது. எங்கும் மயான அமைதி. எல்லோருடைய முகத்திலும் பீதி. அடுத்த என்ன நடக்குமோ என்று புரியாத குழப்பத்தில் உறைந்து கிடக்கிறது அந்நாடு.

ஐக்கிய அரபுக் குடியரசு எனப்படும் அமீரக சமஷ்டி கூட்டமைப்பிற்குள் ஒரு அங்கம் தான் துபாய். கடலில் மணலைக் கொட்டி, விரிந்த ஈச்சமர வடிவில் ஒரு தீவை உருவாக்கி, அதில் அடுக்கு மாடி குடியிருப்புகள்; இந்த உல்லாசத் தீவில் வீடு வாங்குவது ஒரு தனிச் சிறப்பான அந்தஸ்து என்ற மாயையில் உலக மகா கோடீஸ்வரர்கள் அதில் முதலீடு செய்யப் போட்டியிட்டனர்.

ஈச்சமர வடிவத் தீவுத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, "துபாய் வேர்ல்ட்" என்ற புதிய வீட்டுமனைத் திட்டத்தை துபாய் அரசு கொண்டு வந்தது. உலகப் பட வடிவில் உருவாக்கப்படும் இப்புதிய தீவில் அடுக்குமாடி ஆடம்பரக் குடியிருப்புகள் கட்ட, கட்டுமானக் கழகங்களும் நிதி நிறுவனங்களும் போட்டி போட்டன. நகீல் என்ற அரசின் துணை நிறுவனம் இத்திட்டத்திற்கான கடன் பத்திரங்களை "சுகுக் பாண்டுகள்" என்ற பெயரில் 2004-ல் வெளியிட்டது. அது 2009-ல் முதிர்வடைவதால் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தரவேண்டும் ஆனால், நகீல் நிறுவனத்தால் கடனைத் திருப்பித் தர முடியவில்லை.

துபாய் அரசுக்குச் சொந்தமான துபாய் வேர்ல்டு கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் 80 பில்லியன் டாலர் (ஏறத்தாழ 4 லட்சம் கோடி ரூபாய்) கடன் சுமையால் தத்தளிக்கிறது. பணக்கார நாடாகச் சித்தரிக்கப்படும் துபாய், இந்தக் கடனையும் அதற்கான வட்டியையும் கட்ட முடியாமல் அனைத்துலக நாடுகளிடம் ஆறு மாத கால அவகாசம் கேட்டுள்ளது.

இந்தச் செய்தி பரவி, பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்கத் தொடங்கியதும் தட தட வென ஆரம்பித்து விட்டது சரிவு. ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் தமது முதலீடுகளை அவசரமாக திரும்ப எடுத்துச் செல்ல தொடங்கின. முதலீடுகளை மறுமதிப்பீடு செய்யும் பொழுது மீண்டும் சரிவு ஏற்பட்டது.

தொடரும்..

January 1, 2010

வலையுலக படைப்பாளிகள் - தினமணி - சில குறிப்புகள்!

பதிவுலகம், படைப்பாளிகள் குறித்து எம். மணிகண்டன் என்பவர் தினமணியில் இன்று (01/01/2010) அன்று நடுப்பக்க (துணைக்) கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார். அநேகமாக அவரும் ஒரு பதிவர் என்றே நினைக்கிறேன். பதிவர்களின் பெயர்களை பட்டியலிட்டு எழுதியிருக்கிறார்.

கட்டுரையில்... வலையுல படைப்பு சுதந்திரம், துணிச்சலாக, வித்தியாசமாக எழுதுவது, தேசம் கடந்து நட்பு பாராட்டுவது, துறைவாரியாக பலர் எழுதுவது, பெண்கள் பலர் எழுதுவது என வலையுலகம் ஊடகங்களின் நவீன பரிமாணமாக உருவெடுத்திருப்பது குறித்தும், அமெரிக்கா தேர்தலில் ஒபாமாவை வெற்றி பெற செய்ததில், வலைப்பதிவர்களின் பங்கு அதிகம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். (அதற்கான சுட்டி இதோ!)

இந்த கட்டுரை நாமும் ஒரு பதிவர் என பெருமைப்பட்டுகொள்ளும்படி இருக்கிறது. இந்த கட்டுரையை படித்துவிட்டு எதிர்ப்பார்ப்புடன் வலைப்பூக்களின் உலகில் புதிதாக ஒருவர் நுழைந்து பார்த்தால்.. ஏமாற்றம் வருவது தவிர்க்க முடியாதது.

கட்டுரையில் குறிப்பிட்ட படி, இந்த கட்டற்ற சுதந்திரத்தை பயன்படுத்தி, ஆரோக்கியமான, சமூக அக்கறையுடன், பொறுப்புணர்வுடன் எழுதுகிற பல பதிவர்கள் பதிவுலகில் சிறுபான்மையினராகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் எல்லொரும் திருவிழா கூட்டத்தில் காணாமல் போனவர்களாக, தேடி கண்டுபிடிக்க வேண்டியவர்களாக தான் இருக்கிறார்கள். மொக்கை, கும்மி, அரட்டை என பரந்துபட்ட வலையை குட்டிச்சுவராக தான் பலர் பயன்படுத்துகிறார்கள். இது கவலைக்குரிய விசயம்.

ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

ஒருமுறை குன்றக்குடி அடிகளார் நடுவராக பட்டிமன்றம். ஒரு பேராசிரியர் அவருடைய சுற்றில்...சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் பேசுவது போல... ஆறு அறுவை ஜோக், இரண்டு கருத்து என்கிற அளவில் பேசிவிட்டு அமர்ந்தார். குன்றக்குடியார் "இவர் நன்றாக பேசக்கூடியவர். இன்றைக்கு இப்படி பேசியது வருந்ததக்கது என்றார். அடுத்த சுற்றுக்கு வந்த அதே பேராசிரியர் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, அருமையான கருத்துக்களையும் முன்வைத்தார். அடிகளார் பாராட்டினார்.

இந்த நிகழ்வு போல... பல பதிவர்களுக்கு இலக்கிய அறிமுகம், எழுத்து திறன், சமூக பார்வை இருந்தாலும் வெட்டி அரட்டைகளில், தங்களது அருமையான நேரத்தை வீணடிக்கிறார்கள்.

இந்தியாவில் புதிய பொருளாதார கொள்கைகளின் இரண்டாம் தலைமுறை சீர்திருத்தங்கள் தொடங்கிவிட்டன. முன்பை விட சமூக, பண்பாட்டு, பொருளாதார தளங்களில்... மோசமான தாக்குதல்கள் நடைபெற்று வரும் பொழுது இப்படி சமூக அக்கறையற்று எழுதுவது...ரோம் எரிந்து கொண்டிருந்த பொழுது... நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்தது போல தான்.

சமூகம் நம்மிடம் நிறைய எதிர்பார்க்கிறது. புரிந்து கொண்டு, பொறுப்புணர்ச்சியுடன் புதிய ஆண்டில், பயணத்தை துவங்குவோம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.