> குருத்து: November 2022

November 29, 2022

அனல் மேலே பனித்துளி (2022)



நாயகி சென்னையில் விளையாட்டுத் துறை சம்பந்தமான பொருட்கள் விற்கும் ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். அவருக்கு தன் காதலனுடன் திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது. இந்த சமயத்தில் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு சொந்த ஊரான கொடைக்கானல் அருகே திருமணம் நடக்கிறது. அங்கு தனியாக போகிறார்.

திருமணத்தில் கலந்துகொண்ட பிறகு, கிடைத்த நேரத்தில் கொடைக்கானலில் சில இடங்களை சுற்றிப் பார்க்கலாம் என செல்லும் பொழுது, மூன்று பேரால் பலவந்தமாக தூக்கிச் செல்லப்பட்டு, பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார். தட்டுத்தடுமாறி நடந்து வந்து அருகே உள்ள போலீஸ் ஸ்டேசனில் வந்து புகார் தருகிறார். அவள் சொன்னதன் அடிப்படையில் சந்தேகம் கொண்ட ஆட்கள் மீது விசாரணை தொடர்கிறது. விசாரணை நடந்துகொண்டிருக்கும் பொழுதே யார் இதை செய்தது என்பதை அறிந்து அதிர்ந்து போகிறாள். மேலும் மேலும் அவளுக்கு நெருக்கடி முற்றுகிறது.

பாலியல் வன்புணர்வு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடிந்ததா? என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு எளிய கதை. நிறைய மனிதர்கள். நிறைய சம்பவங்கள் இல்லை. ஆணாதிக்க வக்கிர குணம் கொண்டவர்கள் ஒரு பெண்ணை சூறையாடுகிறார்கள். அவளுடைய உடலை படம்பிடித்து, அவளுக்கு எதிராகவே அதை பயன்படுத்துகிறார்கள். மானத்துக்கு பயந்து, அமைதியாக ஒதுங்கி இருப்பதா, துணிந்து வெளியே சொல்லி, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதா என்பதில் ஒரு பெண் தனக்குள்ளே நடக்கும் உளவியல் சிக்கலை நன்றாக படம் பதிவு செய்திருக்கிறது. நம் உடலை பாலியல் வன்புணர்வு செய்தவர்களே எப்படி ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்பதில் உள்ள அபத்தத்தை உணர்ந்து, தண்டனை வாங்கித் தரும் முடிவை எடுத்தது சரியான முன்நகர்வு.

படத்தை இயக்கிய கெய்சர் ஆனந்த் அவர்களுக்கும், தயாரித்த இயக்குநர் வெற்றிமாறனுக்கும் வாழ்த்துகள். ஆண்ட்ரியா, அழகம்பெருமாள், இளவரசு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்ணை நிலைமையின் சிக்கலை உணர்ந்தும், அந்த பெண் போலீஸ் அதிகாரி நாயகியை போலீஸ் ஸ்டேசனிலேயே அந்த நள்ளிரவில் அம்போவென விட்டு செல்வது ஒட்டவேயில்லை. சின்ன சின்ன குறைபாடுகள் இருந்தாலும் பார்க்கவேண்டிய வேண்டிய படம்.

மற்றபடி, படத்தில் புகாரை பதிவு செய்து, தண்டனை கிடைப்பது எல்லாம் வேகமாக நடைபெறுவது போல காண்பித்திருக்கிறார்கள். நடைமுறையில் அப்படி சாத்தியமில்லை. இங்கு பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண்ணோ, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணோ ”அவமானத்திற்கு” பயந்துகொண்டு தன் சொந்த பந்தங்களை மீறி, புகார் கொடுப்பது என்பது பெரிய சவால் தான். அப்படியே புகார் கொடுக்க முடிவெடுத்தாலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது புகார் கொடுப்பது என்பது இன்னும் சவால். போலீசு எப்பொழுதும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சார்பாகவே நடந்துகொள்ளும். புகாரை பதிவு செய்வதற்கே நீதிமன்றத்தில் முறையிட்டு, போராடி ஒரு உத்தரவை வாங்கி வந்தாலும், அதை மதித்து போலீசு புகாரை பதிவு செய்யும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இலட்சக்கணக்கான நீதிமன்ற உத்தரவுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இப்படியெல்லாம் போராடி… வழக்கை போலீசு பதிவு செய்தாலும், வழக்கு என்பது பல ஆண்டுகளாக இழு, இழுவென இழுத்தடித்தக்கப்பட்டு.. தீர்ப்பு வெளிவரும் பொழுது… வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் சிலர் வயதாகி செத்துப் போயிருப்பார்கள். சிலர் அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்று உச்ச பதவிகளில் ஜம்மென உட்கார்ந்து கொண்டு இருப்பார்கள்.

இந்த எதார்த்த நிலையில் தான் இந்தியாவில் பாலியல் வன்புணர்வு (Rape) வழக்குகள் 2016ல் 38947 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதை யோசித்தால், எத்தனை வன்புணர்வுகள் மறைக்கப்படுகின்றன என்பதின் தீவிரத்தன்மயை உணரமுடியும். 2021ல் 31677 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக 100 பேர். ஒரு மணி நேரத்திற்கு நான்கு பேர். இந்த கட்டுரை எழுதி முடிப்பதற்குள் நான்கு பேர் என்பதை கணக்கிடும் பொழுது பதறுகிறது. இது தான் இன்றைய இந்தியாவின் எதார்த்த நிலையாக இருக்கிறது. நாம் நாகரிக சமூகம் என்பதை நிரூபிப்பதற்கு இன்னும் பல படிகள் முன்னேற வேண்டியிருக்கிறது.

தில்லியில் ”நிர்பயா” கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் உலகெங்கிலும் எதிரொலித்தது. தில்லியில் மக்கள் போராட்டத்தால் பல நாட்கள் அதிர்ந்தது. நிலைமையை சமாளிக்க ஒன்றிய அரசு நீதிபதி வர்மா தலைமையில் கமிசனை நியமித்தது. மிகப்பெரும்பாலான மாநில அரசுகள் வர்மா கமிசனுக்குத் தம் கருத்துகளை, பரிந்துரைகளை, அறிக்கைகளை அனுப்பவேயில்லை. அதற்காக வர்மா கமிசன் தெரிவித்த கண்டனங்களையும் கண்டுகொள்ளவேயில்லை. பெண்களின் மீதான ஒன்றிய அரசின், மாநில அரசுகளின் அக்கறையின் லட்சணம் இவ்வளவு தான்.

ஒவ்வொரு மார்ச் 8 பெண்கள் தினம் அன்று “பெண்கள் நாட்டின் கண்கள்” என வெறும் வாயால் சல்லியடிக்காமல், உண்மையிலேயே பெண்களின் முன்னேற்றத்துக்கு ஆக்கப்பூர்வமான செயல்களை முன்னெடுத்தால் மட்டுமே நிலைமையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தமுடியும். இல்லையெனில் நடக்கிற எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்து புலம்புகிற அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம்.

Sony Livல் வெளிவந்திருக்கிறது. பாருங்கள்.

500 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன!


உத்திரப்பிரதேசத்தில் முதல்வர் யோகியின் சொந்தக்காரர்களான இந்துத்துவ சாமியார்கள், கங்கா புத்திரர்கள், கரகர ஹரஹர மகாதேவ் ஆட்களில் பலரும் கஞ்சா குடித்து தான் எப்பொழுதும் போதையில் அம்மணமாக திரிகிறார்கள்.

****

உத்திரப்பிரதேசத்தில் 386, 195 கிலோ என இரண்டு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கிட்டத்தட்ட 600 கிலோ கஞ்சாவை போலீசு தங்களுடைய பாதுகாப்பு கிட்டங்கியில் பாதுகாத்து வைத்திருந்தார்கள். நான்கு நாட்களுக்கு முன்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் பொழுது, கஞ்சாவை சமர்ப்பிக்க சொல்லி நீதிபதி கேட்கும் பொழுது, காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “எலி தொல்லை இல்லாத இடமே அந்த காவல் நிலையத்தில் இல்லை. உருவத்தில் சின்னதாக இருந்தாலும், எலிகளுக்கு போலீஸ் என்ற பயமே (!) சுத்தமாக இல்லை. போலீசாராலும் எலித்தொல்லையை தீர்க்க முடியவில்லை. பெரும்பாலான கஞ்சாவை எலிகள் தின்று தீர்த்துவிட்டன. மிச்சமிருந்த கஞ்சாவை அதிகாரிகள் அழித்துவிட்டனர்” என்று வாதாடியிருக்கிறார்.

எலிகள் தின்று தீர்த்ததாக சொன்ன கஞ்சாவின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 60 லட்சம் என கணக்கிடுகிறார்கள். கஞ்சாவை எலிகள் தான் சாப்பிட்டன என்பதற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். எப்பொழுதும் போலீசு தொலைந்து போனதை கணக்கில் காட்ட, திருடுவதை தொழிலாக கொண்டவர்களை கைது செய்து, பொய் வழக்கைப் போட்டு கணக்கை தீர்த்துவிடுவார்கள். இப்பொழுது தங்கள் பாதுகாப்பில் இருந்த கஞ்சாவை விற்று தின்றதை மறைப்பதற்கு, எலிகள் மீது பழியை போட்டுவிட்டார்கள். பாவம் எலிகள்.

இப்படி பதில் அளிப்பது முதன் முறையல்ல! ஏற்கனவே 2020ல் இதே போலீஸ் ஸ்டேசனில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 400 கிலோ கஞ்சாவை இதே கிட்டங்கியில் வைத்திருந்தார்கள். நீதிபதி சமர்ப்பிக்க கோரும் பொழுது, இப்பொழுது சொன்னது போல அப்பொழுதும் ”எலிகள் தின்று தீர்த்துவிட்டன” என்ற பதிலை சொல்லியிருக்கிறார்கள். இப்படி எலிகள் தின்று தீர்த்தது உண்மை (!) என்றே வைத்துக்கொண்டாலும், அதற்கு பிறகாவது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கவேண்டும். செய்யவில்லை. யோகி ஆதித்யநாத் ஆள்கிற “புண்ணிய பூமி” அல்லவா! ஆகையால் இப்படி கூசாமல் பொய் சொல்ல துணிகிறார்கள். உத்திரப்பிரதேசத்தில் முதல்வர் யோகியின் சொந்தக்காரர்களான இந்துத்துவ சாமியார்கள், கங்கா புத்திரர்கள், கரகர ஹரஹர மகாதேவ் ஆட்களில் பலரும் கஞ்சா குடித்து தான் எப்பொழுதும் போதையில் அம்மணமாக திரிகிறார்கள். இப்பொழுது உத்திரப்பிரதேச அரசு கஞ்சாவை ஆய்வு செய்ய சொல்லி இருக்கிறதாம். ஒருவேளை அதில் மருத்துவ குணம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கவும் ஆலோசனை செய்யக்கூடும்.

இது போல இன்னொரு பிரபல வழக்கு ஒன்று உள்ளது. 2017ல் பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் முழு மது விலக்கு அமல்படுத்தப்பட்ட சமயம். அங்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை அவ்வப்போது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி பிடித்து வந்தனர். இந்த வகையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 9 லட்சம் லிட்டர் மதுவகைகளை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இவ்வாறு பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த பாட்டில்களைத் திறந்து மதுவை எலிகள் குடித்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். மாநில காவல்துறையினர் ஆலோசனை கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் சில மதுவகைகளை போலீசார் அழித்துவிட்டதாகவும், மீதமிருந்ததை எலிகள் குடித்துவிட்டன என்று பதில் அளித்தார்கள். இது குறித்து விசாரணை நடத்த பாட்னா மண்டல ஐஜி விசாரணை நடத்த உத்திரவிட்டார். பிறகு அந்த வழக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இது போல தென்னமெரிக்க அர்ஜெண்டினாவின் ஒரு சிறிய நகரத்தில், 6000 கிலோ கஞ்சாவை (Weed) கைப்பற்றி போலீசின் கிட்டங்கியில் பாதுகாத்ததில், 540 கிலோவை எலிகள் தின்றுவிட்டன என போலீசு பதில் அளித்திருக்கிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எட்டு அதிகாரிகளையும் கூண்டோடு வேலையிலிருந்து தூக்கிவிட்டனர்.

நம்ம இந்தியாவில் மட்டுமல்ல! உலகம் முழுவதுமே போலீசு பொய் கேசு எழுதுவதிலும் கதை சொல்வதிலும் பெரிய கேடிகளாகத் தான் இருக்கிறார்கள்.

November 25, 2022

கொசு தொல்லை தாங்க முடியலை!



உலக அளவில் கொசுவால் ஆண்டுக்குப் பத்து லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். கொசுக்கடியால் பரவும் மலேரியா, டெங்கு போன்றவை நம்மை மட்டுமல்ல உலக நாடுகளையே பயமுறுத்திவருகின்றன.


****


வீட்டில் ஒரு வேலையை நிம்மதியாக செய்யமுடியவில்லை. ஆழ்ந்து… மன்னிக்கவும் நிம்மதியா தூங்கவே முடியவில்லை. ஒழுங்காக தூங்காததால் அலுவலகம் போனால் நாள் முழுவதும் சோர்வாக இருக்கிறது. கடிக்கும் கொசுக்களை ஷாக் அடிக்க வைத்து பழிவாங்குவோம் என கொசு பேட் வாங்கினோம். கொசு கடிக்கிறது. ஆனால் கொசுவை அடிக்க முடியவில்லை. கண்ணில்படாத அளவிற்கு மிகச் சிறியதாக இருக்கிறது. ஓடோமஸ் தடவினால், ஒரு அரை மணி நேரம் தான் தாங்குகிறது. லிக்யூட் வாங்கி மாட்டலாம் என்றால், நமக்கு அலர்ஜி பிரச்சனை இருக்கிறது.

எங்கள் பகுதி பரவாயில்லை. வேலை நிமித்தமாக வேறு வேறு பகுதிகளுக்கு போனால், அங்கெல்லாம் கொசுக்கள் பெரிது பெரிதாக வளர்ந்திருக்கின்றன. ஒரு கொசு கடித்தால், சில நிமிடங்களுக்காவது சுளீரென வலிக்கிறது. பகுதியில் இருக்கும் பூங்காவிற்கு படிக்க போனால், கொசுப் படையே வந்து கடிக்கிறது. பத்து நிமிடத்திற்கு மேல் வேறு வழியே இல்லாமல் ஓடியே வந்துவிட்டேன். வயதானவர்கள் என்ன செய்வார்கள். குழந்தைகள் என்ன ஆவார்கள். டெங்குக்கு மருந்து இல்லை எனவும் சொல்லி பதறவைக்கிறார்கள்.

இதோ தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிந்ததும், வடகிழக்கு பருவ மழை என்பது கனமழையாக தொடர்ச்சியாக பெய்துவருகிறது. டெங்கு காய்ச்சல் பரவுவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

கொசுக்களில் 3 முக்கியமான வகைகள் உள்ளன. மலேரியா நோய் பரப்பும் ‘அனோபிலிஸ் ஸ்டீபன்சி’ இந்தக் கொசு நன்னீரில் இனப்பெருக்கம் செய்கிறது. அதிகாலையிலும், மாலை நேரத்திலும் மனிதர்களைக் கடித்து ‘பிளைஸ்மோடியம்’என்ற நோய்க் கிருமியைப் பரப்பி, நோய் உண்டாக்குகிறது. மலேரியா நோய் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் மற்றும் ரத்தசோகை ஏற்படுகிறது.

இரண்டாவது ‘ஏடிஸ் இஜிப்டி’ கொசு. இது தேங்கியுள்ள தண்ணீரில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த கொசு கடிப்பதால், வைரஸ் நோய்க் கிருமிகள் மனித உடலுக்குள் பரவி, டெங்கு, சிக்குன் குன்யா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

மூன்றாவது ‘கியூளக்ஸ் குன்கிபேசியேட்டஸ்’ கொசு. இது சாக்கடைக் கழிவுநீரில் இனப்பெருக்கம் செய்கிறது. இவை நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழைந்து கடிக்கத் தொடங்குகின்றன. அப்போது நுண்ணிய நாடாப்புழுவை வெளியிடுகின்றன. அவை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவி, யானைக்கால் நோயை உருவாக்குகிறது. பகலில் இந்த நாடாப்புழுக்கள் மனிதர்களின் முதுகெலும்பில் ஒளிந்துகொண்டு, இரவில் மனிதர்களின் ரத்த ஓட்டத்தில் கலப்பதால் நோய் உண்டாகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்கள் வீங்கி, மரக்கட்டைபோல காணப்படும்.

கடந்த 2020-ல் தமிழகத்தில் 2,410 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2021-ம் ஆண்டில் 6,039 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் இந்த வருடம் ஆகஸ்டு வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பகுதியில் சுகாதார ஊழியர் தொடர்ச்சியாக கொசுவை கட்டுப்படுத்துவதற்காக பினாயில் போல ஒரு மருந்தை வாரத்திற்கு ஒருமுறை வந்து, கிணற்றில், நீர்த் தொட்டியில் ஊற்ற தருவார். போன மாதம் அவரிடம் ”நீங்கள் கொடுப்பதை நானும் தொடர்ந்து ஊற்றிக்கொண்டே இருக்கிறேன். கொசு அதிகமாகி கொண்டே போகிறதே! மருந்து ரிவர்சில் வேலை செய்கிறதோ” என கிண்டலாகத்தான் கேட்டேன். ”சென்னை மாநகராட்சி தளத்தில் புகார் செய்யலாம் என நினைக்கிறேன்” என சொன்னதும், சுதாரித்து, ”அந்த புகார் எங்க சுகாதார அதிகாரிக்கு தான் வரும். அவரிடமே பேசுங்களேன்” என மொபைல் எண் தந்தார். உருப்படியான பதில் எதுவும் சொல்லப்போவதில்லை என அழைக்கவேயில்லை.

வழக்கம் போல இந்த வாரமும் வீட்டுக்கு வந்த பொழுது, ”கொசு அதிகமாகி கொண்டே போகிறதே மாநகராட்சி சார்பில் என்ன செய்கிறீர்கள்?” என கேட்டேன். “வெளிப்படையாக சொல்கிறேன் சார். இந்த மருந்தெல்லாம் சும்மா சார். ஏகப்பட்ட கமிசன். இந்த மருந்துக்கு எல்லாம் கொசு கட்டுப்படாதுன்னு எங்களுக்கே தெரியும். மக்களிடம் எதையாவது கொடுத்தால் தானே, பேச முடியும். ஒவ்வொரு வீடாக ஏறி தண்ணீர் தேங்குகிற மாதிரி எதையாவது வைத்திருக்கிறார்களா என சோதித்துத்தான் வருகிறேன்.” என்றார். இப்படி சொல்கிறவர் எங்க வீட்டிற்கு மாடியில் வந்து சோதித்ததே இல்லை. யார் வீட்டிலும் ஏறி நான் பார்த்ததும் இல்லை.

சென்னை மாநகராட்சி சாலைகளில் தண்ணீர் தேங்குவதை எல்லாம் இப்போதைக்கு கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமில்லை என புரிந்துகொண்டு எல்லோருக்கும் கொசுவலை கொடுப்பது என முடிவு செய்து, துவக்கமாக நீர்நிலைகளை ஒட்டி வாழும் மக்களுக்கு விலையில்லாமல் கொசுவலைகள் தந்துகொண்டிருக்கிறார்கள். பிறகு மற்ற பகுதிகளுக்கும் தரப்போவதாக சொல்கிறார்கள்.

இது தமிழகம் தழுவிய பிரச்சனை மட்டுமில்லை! இந்திய அளவிலும் இருக்கிறது. சமீபத்தில் திகார் ஜெயிலில் உள்ள ஒரு கைதி ”கைதிகள் அனைவருக்கும் கொசுவலை தரவேண்டும்” என உச்சநீதிமன்றம் வரைக்கும் போய் கேட்டால், ”அதெல்லாம் கொடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டார்கள். நம் சிறைகளில் காசு கொடுத்தால் ”சகலமும்” கிடைக்கும். ஊர் அறிந்த விசயம் தான். காசு இல்லாதவர்கள் கொசுக்கடியில் சிக்கி, டெங்கு வந்து சாகவேண்டியது தான்.

உலக அளவில் கொசுவால் ஆண்டுக்குப் பத்து லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். கொசுக்கடியால் பரவும் மலேரியா, டெங்கு போன்றவை நம்மை மட்டுமல்ல உலக நாடுகளையே பயமுறுத்திவருகின்றன. மக்கள் கொசுவிடமிருந்து தற்காலிகமாக தப்பிக்க பேட், ஓடோமஸ், ஆல் அவுட் போன்ற கெமிக்கல்களை பயன்படுத்துகிறார்கள். கொசுவை ஆக்கப்பூர்வமாக கட்டுப்படுத்துவதற்கு முதலாளித்துவ உலகம் முயல்கிறதோ இல்லையோ, கொசுவை வைத்து பல்லாயிரம் கோடி கல்லாக் கட்டுவதில் கவனம் செலுத்துகிறது. இந்த கொசுவர்த்தி புகை, ஆயில் கெமிக்கல்கள் பயன்படுத்துவதால், 75 சிகரெட் புகைத்தால் எவ்வளவு கேடு வருமோ அவ்வளவு கேடுகளை மனிதனுக்கு உண்டாக்குகின்றன என்கிறார் பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயி வேங்கடபதி.

அவரே தற்காலிக தீர்வாக, ”கொசுக்களைக் கட்டுப்படுத்த ரசயானங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக தாவர பூச்சிக்கொல்லி போன்றவற்றைப் பயன்படுத்துவது சிறந்தது என்கிறார்கள். தாவரப்பூச்சி கொல்லி என்றாலே, நமக்கு நினைவுக்கு வருவது இந்திய பாரம்பரியம் கொண்ட வேப்பமரம். மருத்துவக் குணம் கொண்டதாகவும், இயற்கை பூச்சிக்கொல்லியாகவும் உதவுகிறது. வேப்பமரத்தின் இலை, காய்கள், பழங்கள், கொட்டை, பட்டை, வேர் போன்ற அனைத்தும் பூச்சிக்கொல்லியாக விளங்குகின்றன. வேப்ப எண்ணெயிலும் கொசுவை ஒழிக்கும் தன்மை உள்ளது. வேப்ப எண்ணெயை தண்ணீரில் தெளிக்கும்போது, இதனுடைய மூலக்கூறுகள் கொசுக்களை ஊடுருவி, தாக்கி அழிக்கிறது. தும்பை, துளசி போன்ற மூலிகைச் செடிகளும் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டவை. நெல்லிச்சாறு, முருங்கைச்சாறு போன்றவற்றையும் தண்ணீரில் தெளிக்கும்போது, கொசுப்புழுக்கள் அழிக்கப்படுவது மட்டுமின்றி, தண்ணீரில் உள்ள வைரஸ், பாக்டீரியா, பூஞ்சாணம் போன்ற நுண்கிருமிகளும் அழிந்து, தண்ணீரும் தூய்மையாகிறது. கொசுக்களை வேப்ப இலை, தும்பை துளசி, பேய் முரட்டி போன்ற இலைகளைக் கொளுத்தி, புகை எழுப்பி, விரட்டலாம். ஒரு சொட்டு வேப்ப எண்ணெய் மற்றும் பத்து சொட்டு தேங்காய் எண்ணெயியை உடம்பில் தேய்த்து, கொசுக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். வேப்பங்கொட்டைச்சாறு தெளித்தும், கொசுக்களின் வாழ்க்கை சுழற்சியை அழிக்கலாம்.” என ஆலோசனை சொல்கிறார்.

கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கான விஞ்ஞான ஆய்வுகள் ஒருபுறம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அதில் ஆண் கொசுக்களைப் பிடித்து மலட்டுத் தன்மையை உருவாக்கி மீண்டும் வெளியே உலவ விடுவதன் மூலம் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள். இப்படி செய்வதன் மூலம் பின்விளைவுகள் என்ன ஆகும் என்பதையும் சூழலியலாளர்கள் கவலை கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சோதனை முயற்சிகளையும் ஆப்பிரிக்காவின் பின் தங்கிய நாடுகளில் செய்ய முயல்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டும் இருக்கின்றன.

கொசு பிரச்சனை குறித்து சூழலியலாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்… “சமீபகாலங்களில் கொசுக்கள் அபரிமிதமாக பெருகியிருப்பதற்கு சூழலியலாளர்கள் பல காரணங்களை முன்வைக்கின்றனர். நீர்நிலைகளில் கலக்கும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் கொசுக்களையும் அவற்றின் லார்வாக்களையும் உண்டுவாழும் நீர்நிலவாழ் உயிரினங்களை அழித்தது கொசுக்களின் பெருக்கத்துக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமன்று புவி வெப்பமாதலும் கொசுக்களின் பெருக்கத்துக்கு சாதகமானதாக ஆய்வாளர்களால் முன்வைக்கப் படுகிறது. கொசுக்களை கட்டுப்படுத்தவோ அல்லது முழுவதுமாக ஒழிக்கவோ உலகெங்கும் பலவிதமான ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால் இதுவரை எங்கும் முழுமையான சூழலுக்கும் மனிதர்களுக்கும் பாதுகாப்பான வெற்றிகரமான முறைகள் என எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரத்தில் கொசுக்களையோ அல்லது பூச்சிகளையோ ஒழிப்பது என்பது சாத்தியமற்றது என்று சூழலியலாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக என்னதான் வயலில் பூச்சிகளை ஒழிக்க தினமும் புதுப்புதுவிதமான பூச்சிக் கொல்லிகளை உருவாக்கினாலும் நம்மால் இதுவரை எந்தப் பூச்சியினங்களையும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை என்பதோடு அவை நாளுக்குநாள் வீரியமடைந்து வருகின்றன. அதுமட்டுமின்றி அந்த பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளைவிட பெரிய அபாயமாக மாறியிருக்கின்றன. கொசுக்களை கட்டுப்படுத்துவது அவசியமே எனினும் அவற்றை அழிப்பதுபோன்ற முயற்சிகள் பல்லுயிரின சமநிலையை வெகுவாக பாதிக்கும். கொசுக்களை முக்கிய உணவாகக் கொள்ளும் பூச்சிகள் அவற்றை உண்ணும் பறவைகள் விலங்குகள் ஆகியவற்றின் நலம் நமது சூழலைக்காக்க மிகவும் அவசியம்.” என்கிறார்கள்.

ஆக ஒன்று புரிகிறது. ஒன்றை தொட்டு, ஒன்றை தொட்டுத் தான் சமூகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது. மொத்த உலகமும் சுற்றுச் சூழலை சமூக அக்கறையோடு இயங்கினால் தான், கொசுவை கூட கட்டுப்படுத்த முடியும் என புரிகிறது. உலகம் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் ஆட்சி செய்வது முதலாளித்துவ சர்வாதிகாரம் தான். முதலாளித்துவம் தான் எதிர்கால கண்ணோட்டம் இல்லாமல், அறிவியல்பூர்வமான அணுகுமுறை இல்லாமல் இயற்கை சூழலை கடுமையாக சிதைக்கிறது. ஆக கொசுவை கட்டுப்படுத்தி உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் நிம்மதியாக வாழவேண்டுமென்றால் கூட, காலாவதியாகிப் போன முதலாளித்துவத்தை சவக்குழிக்குள் அனுப்பினால் தான் சாத்தியம் என்கிற முடிவுக்கு தான் வரமுடிகிறது.



November 21, 2022

மனித வாழ்க்கையின் வரவு, செலவு


“அழிந்த பிறகு” நாவலில் இருந்து...!


”மனித வாழ்க்கையின் வரவு, செலவு. மனிதன் சமூகத்திற்கு கடமைப்பட்டவனாக இருக்கிறான். அந்தக் கடனிலேயே வளர்கிறான். இறக்கும் போது தான் பெற்றதை விட அதிகமாகத் திருப்பி தராவிட்டால் அவனுடைய பிறவி பயனற்றதாகிறது. அவன் பிறந்ததால் சமுதாயத்திற்கு இழப்பே என்பது என் கருத்து. பணம் காசு முதலியவை எல்லாம் இந்த நோக்கில் பார்த்தால் மிகவும் அற்பமானவையாகும். ஆனால் அவையும் வாழ்க்கை நடத்துவதற்கு இன்றியமையாது வேண்டிய பொருள்கள் ஆகும்”. - பக். 27.-

- சிவராம் காரந்த்
“அழிந்த பிறகு” நாவலில் இருந்து...!

நேரம் தவறாமை


நாம் ஒரு கூட்டத்தை பத்து மணிக்கு திட்டமிட்டால்... கூட்டத்தை ஏற்பாடு செய்கிற ஆட்கள் மட்டும் வந்து காத்திருப்பார்கள். மக்கள் ஆற அமர வர ஆரம்பிப்பார்கள். இது பொது நிகழ்ச்சி என்றால் கூட ஏதும் பிரச்சனையில்லை. பிறகு வருகிறவர்கள் வரட்டும் என கூட்டத்தை துவங்கிவிடலாம்.


ஒரு குறிப்பிட்ட விசயம் குறித்து ஐவரோ, பத்து பேரோ கூடி விவாதித்து ஒரு முடிவு எடுக்கவேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட அனைவரும் ஒரே நேரத்தில் வந்து சேர வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த நேரத்திற்காக வர போராடி... ஏதும் நெருக்கடியில் மாட்டிக்கொண்டு, தாமதமானால் முறையாக தெரிவித்துவிடலாம். ஆனால், பத்து நிமிடம், 15 நிமிடம் தாமதமாக செல்வது என்பது பெரும்பாலோரிடம் வழமையான பண்பாக இருக்கிறது. இது தவறு தானே!

அந்த கூட்டத்தின் நேரத்தை நாம் எல்லோரிடமும் பேசித்தான் செயலரோ/தலைவரோ தீர்மானித்து இருப்பார். நாம் ஏற்றுக்கொண்ட நேரம். அந்த நேரத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன்பாக போய் இருந்து. குறிப்பிட்ட நேரத்திற்கு கூட்டத்தை துவங்க ஒத்துழைப்போம் என்ற பொறுப்புணர்வு குறைவாக இருக்கிறது.

சமீபத்தில், நடிகர் நாசர் தன் அனுபவம் ஒன்றை பகிர்ந்தார். நாசர் நடிக்க துவங்கிய காலத்தில் இயக்குநர் பாலச்சந்தர் படத்தில் நடித்துக்கொண்டிந்த சமயம். ஒருநாள் தாமதமாகி அடிச்சு பிடிச்சு அரைமணி நேரம் தாமதமாக போய் சேர்ந்திருக்கிறார். ”ஒரு அரை மணி நேரம் தாமதமாக வந்துவிட்டேன். மன்னியுங்கள்” என்றாராம். ”உன் அரைமணி நேர தாமதம் மட்டும் தான் நீ கணக்கு பண்ணுவியா! இந்த யூனிட்டில் 30 பேர் இருக்கிறோம். எல்லோருடைய அரை மணி நேரமும் வீணாய் போயிருக்கிறதே! அது உனக்கு கண்ணில்படவில்லையா?!” என சொல்லியிருக்கிறார். அதற்கு பிறகு எந்த படப்பிடிப்பிற்கும் தாமதமாக செல்வதில்லை என நாசர் தெரிவித்தார்.

இந்த கண்ணோட்டம் நம்மில் பலருக்கும் இருக்காது. அவரவர் தாமதத்தை மட்டுமே கணக்கிடுவார்கள். மற்றவர்களின் நேரத்தையும் வீணாக்குகிறோம் என்ற உணர்வு பெரும்பாலோருக்கு குறைவு தான்!

#நேரம்
#நேரம்தவறாமை

அவர் மூஞ்சில கரி பூசுவோம்!


வகுப்பில் பக்கத்துல பக்கத்துல பேசுறாங்கன்னு, பாடத்தில் கவனம் குறையுதுன்னு ஒரு ஆசிரியர் யோசித்து... பசங்க எல்லோரையும் இடம் மாத்தி உட்கார வைத்துவிட்டார். ஆனால் நன்றாக படிக்கும் பசங்களை மாற்றாமல் விட்டுவிட்டார். (மாத்தி கீத்தி படிக்காம போயிட்டாங்கன்னா?!)


மாத்தப்பட்ட பசங்க தன் சகாக்களை இழந்ததால் பயங்கர கடுப்பாயிட்டாங்க!

அதில் ஒரு பையன் கோபமாய்...

”நாமளும் நல்லா படிச்சு... அவர் மூஞ்சில கரி பூசுவோம்!”

இன்னொரு பையன் (இவன் என்னா கோபத்தில கன்னா பின்னான்னு இப்படி பேசுறான்னு சுதாரிச்சு...)

“நாம நல்லா படிச்சா அவர் எதுக்காக இந்த வேலையை செஞ்சாரோ அதுல அவருக்கு வெற்றி கிடைச்சிரும். நாம அவர் பாடத்தில பெயிலாவோம். அப்பத்தான் அவர் முகத்துல கரி பூசமுடியும்!”
🙂

#Based_on_True_Events 🙂

November 18, 2022

19 (1) (A) (2022) மலையாளம்



பேச, எழுத, கருத்துக்களை பகிர சுதந்திரம் வேண்டும்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா. அங்கு நாயகி அப்பாவுடன் வாழ்கிறார். சின்ன ஜெராக்ஸ் கடையை நடத்தி வருகிறார். முற்போக்கு எழுத்தாளர் ஒருவர் வந்து தான் எழுதியதை பிரதி எடுத்து வையுங்கள். மாலை வருகிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். அன்றிரவு அவர் சுடப்பட்டு கொல்லப்படுகிறார்.

தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்ததும், வருத்தப்படுகிறார். கொலை செய்தது யார் என விசாரணை நடைபெறுவதாக தொலைக்காட்சியில் சொல்கிறார்கள். பிறகு அந்த கையெழுத்து பிரதியை அந்த எழுத்தாளருடைய புத்தகங்களை தொடர்ந்து வெளியிடும் ஒரு பதிப்ப உரிமையாளரை சந்திக்க செல்கிறார். அங்கு போலீசு விசாரிக்க வருவதால் பின்வாங்குகிறார்.

அந்த கையெழுத்து பிரதியில் என்ன பிரச்சனையை எழுதியிருந்தார்? அவர் பத்திரமாக அதை சேர்த்தாரா? என்பதை ஆற, அமர சொல்லியிருக்கிறார்கள். இடையிடையே எழுத்தாளர் குறித்த சில நிகழ்வுகள் வந்து போகின்றன.

ஒரு சிறுகதை அளவு தான் கதை. இப்படியும் சொல்லலாம். குறும்படம் அளவிற்கு தான் கதை. அதை விரித்து சொல்லாமல் அப்படியே முழு நீளப்படமாக்கினால் என்னவெல்லாம் நிகழும்? ஆமை போல மெல்ல நகரும். நகர்கிறது. எந்த கதாப்பாத்திரத்தையும் விரிவாக சொல்லாது. சொல்லவில்லை. பெரிய திருப்பமோ, அதிர்வுகளோ இருக்காது. இல்லை. ஆக மொத்தத்தில் படம் சுமாராகிவிட்டது.

மேற்கு வங்கத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் மகா சுவேதா தேவி எழுதிய ”1084ன் அம்மா” என நாவல். ஒரு மேல் தட்டு குடும்பம். அதன் வாரிசுகளில் ஒரு இளைஞர் நக்சலைட்டு இயக்கத்தில் செயல்படுவான். ஆளும் அரசு நக்சலைட்டு இயக்கத்தை ஒடுக்கியதில், வங்கத்தின் தெருக்களில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பல நூறு இளைஞர்களில் அவனும் ஒருவன். அம்மா பிள்ளை அவன். அவன் இறப்பு செய்தி தெரிந்ததும்... மொத்த குடும்பமும் தன் குடும்பத்தின் பெயர் செய்திகளில் வரக்கூடாது என்பதில் கவனமாய் இருப்பார்கள். அந்த அம்மா மட்டும் துக்கத்துடன் தன் மகன் பழகிய மனிதர்களை தேடிப்போவார். அதன் வழியாக தன் மகனையும், அவன் கொண்டிருந்த லட்சியத்தையும், சமூகத்தையும் புரிந்துகொள்வார். கோவிந்த் நிகாலனி இயக்கிய அருமையான படம். யூடியூப்பில் கிடைக்கிறது.

கர்நாடகத்தில் கெளரி லங்கேஷ் என பெண் பத்திரிக்கையாளர் இருந்தார். 2000 ஆம் ஆண்டுவரை ஆங்கிலம் மட்டுமே தெரிந்த பத்திரிக்கையாளராக தில்லியில் பிரபல ஊடகங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். கவிஞரும், எழுத்தாளருமான அவருடைய அப்பா ‘லங்கேஷ்’ என்ற முற்போக்கு பத்திரிகையை தொடர்ந்து நடத்தி வந்தார். அவருடைய இறப்புக்கு பிறகு பத்திரிக்கையை நடத்துவதா வேண்டாமா என பரிசிலீத்த பொழுது பணிபுரியும் ஊழியர்கள் கொடுத்த உற்சாகத்தால் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். கன்னடம் விரைவாக கற்றார். அவரே கன்னடத்தில் எழுதவும் துவங்குகிறார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் ஏழைகளின் சாவுக்கே வழிவகுத்தது. மோடியின் ஆட்சி துக்ளக் தர்பார் என சாடினார். பாபாபுடன் கிரி என்ற இடத்தை மீண்டும் ஒரு அயோத்தியாக மாற்ற முயன்ற காவி கும்பலை களத்தில் நின்று எதிர்த்தார்.

இன்னொரு குஜராத்தாக கர்நாடகத்தை மாற்றுவதற்கு இந்துத்துவ சக்திகள் குவிந்து வேலை செய்த பொழுது ஜனநாயக சக்திகளோடு அறிவுத் தளத்தில் மட்டுமல்ல களத்திலும் உறுதியாக நின்றார். “தான் ஒரு எழுத்தாளர் என்ற முறையில் உண்மையை எழுதுகிறேன் அது என்னுடைய கடமை” என்றார் அருந்ததிராய். கௌரி அவர்களும் பத்திரிக்கையில் உண்மையை எழுதியதற்காக தொடர்ந்து பல வழக்குகளை எதிர்கொண்டார்.

கௌரி லங்கேஷ்க்கு இரண்டு தெரிவுகள் இருந்தது. ஒன்று வசதியான வாழ்க்கைப் பாதை. இன்னொன்று அநீதிக்கு எதிராக போராடும் கடினமான பாதை. இரண்டாவதை துணிந்து தேர்ந்தெடுத்தார். இந்துத்துவ பயங்கரவாத கும்பல் மிரட்டிப் பார்த்தார்கள். கௌரி லங்கேஷ் பணியவில்லை. இந்து சனாதனத்தை கருத்து தளத்தில் நின்று சண்டை செய்ய முடியாத கோழைகள், தங்களது ஸ்லீப்பர் செல்களை வைத்து 2017ல் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். கெளரி நடிகர் பிரகாஷ் ராஜின் குடும்ப நண்பர். இந்த அநீதியான கொலைக்கு பிறகு தான், பா.ஜனதாவிற்கு எதிராக மிக வெளிப்படையாக பேச ஆரம்பித்தார்.

இந்தப் படத்தில் அந்த எழுத்தாளரின் பெயர் கெளரி சங்கர். படத்திலும் சுடப்பட்டு இறக்கிறார். ஆகையால் அந்த கதையை தொட்டு எழுதியிருப்பார்கள் என ஆர்வமாய் தேடிப்பிடித்து பார்த்தேன். இயக்குநர் இந்து ஏமாற்றிவிட்டார். ஒரு சமூக அக்கறை கொண்ட நல்ல படத்தை அடுத்து அவரிடமிருந்து எதிர்பார்ப்போம்.

மற்றபடி நித்யா, விஜய் சேதுபதிக்கு இது இரண்டாம் மலையாள படம். இருவரும் கொடுத்தப் பாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார்கள்.

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இருக்கிறது.

போலீசு பட கிளிஷேக்கள்


சமீபத்தில் போலீஸ் படம் ஒன்றைப் பார்த்தேன். போலீஸ் படங்களுக்கென்றே அளவெடுத்து தைத்த சம்பிரதாய சட்டைகள் அத்தனையும் ஒன்றுகூட மிஸ்ஸாகிவிடாமல் நிறைந்திருந்தன. இந்தப்படம் மட்டுமல்ல சினிமா போலீஸுக்கென்று ஓர் இலக்கணம் உண்டு.


1 - டீகிளாஸ்களோடு நுழைகிற பையன். அவனை பின்தொடரும் கேமிரா, ஸ்டேஷன் அறிமுக காட்சி. அவன் ஒவ்வொரு டேபிளாக டீ கொடுத்தே தீரவேண்டும். குழந்தை தொழிலாளர் முறையை அரசாங்கமே ஒழித்துக்கட்டினாலும் டீகிளாஸ் பையன் மட்டும் காவல்நிலையத்துக்கே வேலைக்கு சென்றுகொண்டே இருக்கிறான். காவல்நிலையத்தில் யாருக்குமே அது உரைப்பதில்லை. நமக்கும்தான். அந்த பையன் எப்போதும் அதே பழுப்பு நிற கையில்லா சல்லடையான ஓட்டை பனியன்தான்! அவனுடைய பணிகளில் முக்கியமானது ஸ்டேஷனில் இருக்கிற பாத்திரங்களை ஆடியன்ஸுக்கு அறிமுகப்படுத்துதல். சில நேரங்களில் அந்தப்பையனே நாயகனுக்கு துப்பு துலக்க உபயோகப்படுவான். அந்தப்பையனை ஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வைக்கவேண்டும் என யாருக்குமே எண்ணம் வரலை.

2 – நல்ல ரைட்டர். இவரு போலீஸ் ரைட்டர். இவர் ஒரு நல்ல குணம் கொண்ட வயதான ஏட்டு லெவல் சீனியராக இருப்பார். காதோரம் நரைத்து கண்ணாடி போட்டிருப்பார். சாதுவாக பட்டை போட்டுக்கொண்டு சோப்ளாங்கியாக நோஞ்சானாக இருப்பார். பெரும்பாலும் அவருக்கு ரிட்டையர்மென்ட்டுக்கு இன்னும் ஒரு மாசம்தான் இருக்கும். அவர் எவ்வளவுக்கு எவ்வளவு நல்லவராக இருக்கிறாரோ அந்த அளவுக்கு ஒட்டுமொத்த ஸ்டேஷனும் கொடூரமானவர்களால் நிறைந்திருக்கும். சார் இது தப்பு சார் வேண்டாம் சார், இத்தனை வருஷத்துல இதையெல்லாம் பாத்து பாத்து மரத்துப்போயிடுச்சுப்பா… ரிடையர் ஆகறதுக்குள்ள ஒருவாட்டியாச்சும் இந்த உடுப்புக்கு நேர்மையா நடந்துடணும் என அவருக்கு வசனங்கள் வரிசையாக இருக்கும். அவருடைய பர்ப்பஸ் நாயகனுக்கு உதவப்போய் உயிரையே கொடுப்பது. உயிரை விடுவதற்கு முன்பு கூட கடமைதவறாமல் நாயகனுக்கு சல்யூட் வைப்பது. ஒரே ஒருமுறை தன் உயர் அதிகாரியை எதிர்த்துபேசிவிட்டு கடமை ஆற்றி நாயகனுக்கு உதவுவது.

3 - கொடூரமான இன்ஸ்பெக்டர். அவர் அர்த்த ராத்திரியில் சட்டை போடாமல் அல்லது எல்லா பட்டன்களையும் கழட்டிப்போட்டுவிட்டு பனியனோடு வியர்க்க வியர்க்க அமர்ந்திருப்பார். அவருக்கு முன்னால் நியூஸ்பேப்பரில் பந்திவைத்த ஒரு பிரியாணி பொட்டலம் கட்டாயம் இருக்கவேண்டும். அதில் கட்டாயம் லெக்பீஸ் இடம்பெறும். அள்ளி அள்ளி பிரியாணி தின்றபடிதான் அமர்ந்திருப்பார். அவர் பிரியாணி திங்கும்போதுதான் அந்த பாவப்பட்ட புகார் கொடுப்பவர் வந்து நிற்பார். பாதி பிரியாணியை வாயில் வைத்துக்கொண்டே ம்ம் என்ன என்று மிரட்டினாலே நமக்கு தெரிந்துவிடும் இவரு பயங்கரமான வில்லன் போலடோய் என்று. மழை பெய்யும் நள்ளிரவுகளில் அவர் அவராகவே இருக்கமாட்டார், அந்த நேரம் பாத்துதான் பெண்கள் புகார் கொடுக்கவருவார்கள்.

4 - கட்டாயம் இரண்டு காமெடி அக்யூஸ்டுகள் எப்போதும் லாக்அப்பில் இருப்பார்கள். அவர்கள் கட்டாயம் லுங்கி கட்டிக்கொண்டு குத்தவைத்துதான் அமர்ந்திருப்பார்கள். பேன்ட் போட்ட யாரும் குற்றம் செய்வதில்லை. அந்தகாலத்தில் ஓகே இப்போதும் கூட இதே டைப் லுங்கி குற்றவாளிகள்தான். இந்த குற்றவாளிகள் பெரும்பாலும் நல்லவர்களாகவே இருப்பார்கள். நன்றாக ஆறுதல் சொல்லுவார்கள், ஸ்டேஷனில் இருக்கிற மற்ற போலீஸ்கார்ர்களோடு ஹவுஸ் ஓனரிடம் பேசுவது போல உரிமையாக பேசுவார்கள். சிலநேரங்களில் முக்கிய குற்றவாளியிடமிருந்து உண்மையை வாங்குவதற்காக இவர்கள் அடிபடுவார்கள்.

5 - ஐஜி அல்லது கமிஷனர். அவருடைய ஒரே வேலை, நாயக இன்ஸ்பெக்டரை கூப்பிட்டு மேலிடத்து உத்தரவை சொல்லி மிரட்டுவதுதான். நீ தேவையில்லாம இந்த கேஸ்ல தலையிடாத, நீ இனிமே இந்த கேஸ் பாக்க வேண்டாம், என்னைய்யா நினைச்சிட்டிருக்க உன் மனசுல நீ பாட்டுக்கு ஆக்ஷன் எடுக்குற, அவன் or அவரு யாரு தெரியுமா என பத்து வசனங்களைதான் திரும்ப திரும்ப பேசுவார். அச்சம்தான் அவருடைய அடிப்படையான எமோஷன். எல்லாத்துக்கு பயப்படுற இவர் எப்படி ஐஜி ஆனார் என்று டவுட்டு வரும். கிளைமாக்ஸில் அவர் துரோகி என்பது தெரியவரும் அல்லது அவர் திருந்தி நாயகனுக்கு உதவி செய்து நாயகனுக்கு விருது வழங்குவார்.

5 - ஸ்டேஷனில் இரண்டுவகை பெண் காவலர்கள்தான். ஒருடைப் கருப்பாக குண்டாக இருக்கிற கெட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர் குடிப்பவராக பான்பராக் போடுபவராக இருப்பார். அவர் எப்போதும் ஆண்களின் காலிடுக்கு பந்துகளை தவறாமல் உதைக்கிறவர். ஹேய் நான் பொம்பளைனு நினைச்சியா என்று கத்தி கேட்பார். ஒருமுறை கூட மோசமான பெண் போலீஸ் வெள்ளையாக இருக்கமாட்டார்.

6 - இன்னொரு வகை ஒல்லிகுச்சியான வெளுத்த கான்ஸ்டபிள் பெண்கள். இவர்கள் நாயகனை காதலிக்கவே பிறந்தவர்கள். வேறெந்த வேலையும் பார்க்க மாட்டார்கள். தலையிலும் கூட குறுதிப்புனல் கமல் போல சைடுவாங்கின துணி தொப்பி போட்டிருப்பார்கள். பாவப்பட்ட நாயகிக்கான கோட்வோர்ட் அந்த தொப்பிதான். நாயகனுக்கு காவல்நிலையத்தில் இருந்து எதாவது தகவல்களை கொடுத்து உதவி செய்வார்கள். ஸ்டேஷனில் நடக்கும் அநீதிகளை கண்டு எதுவும் செய்யமுடியாமல் மனம் வெதும்பி இரண்டாவது பாராவில் வருகிற அந்த வயதான நல்ல ரைட்டரிடம் புலம்புவார்கள். அவருடைய கற்புக்கு எந்த நேரத்திலும் சீனியர்களால் ஆபத்து நேரலாம் என்கிற சஸ்பென்ஸ் இருக்கும்.

7 - ஹீரோ நேர்மையான போலீஸாக இருந்தால், அவருக்கு துணையாக அதே கேடரில் இன்னொரு மத்திய வயது போலீஸ் இருப்பார். அவர் யாரென்றால் சின்ன வயதில் வீராவேசத்தோடு கடமையாற்ற வந்து இந்த சிஸ்டத்தால் பாதிக்கப்பட்டு எல்லா போலீஸ் மாதிரியும் ஆகி தன் வாழ்க்கையை தொலைத்தவராக இருப்பார். இந்த சிஸ்டத்தை மாத்தமுடியாதுப்பா, இங்கே எதுவுமே மாறாது என மனம் நொந்து பேசுவார். கடைசியில் நாயகனுடைய திறமையை பார்த்து சல்யூட் அடித்து தன் உயிரையே கொடுத்து தியாகம் பண்ணுவார். இவரு இல்லாம போலீஸ் படமே எடுக்கமுடியாது.

8 – போலீஸ் ஹீரோ கூலான ஆளாக காட்ட எளிதான வழி அவர் வாயில் பபிள்கம் போட்டு பசுமாடுபோல மெல்லவிடுவது. அதை படம் முடியும்வரை துப்பவிடக்கூடாஉ. அவர் எப்போதும் டிஷர்ட் ஜீன்ஸில் குளிர்கண்ணாடி அணிந்திருப்பார். ஆர்ம்ஸ் தெரியும்படி டைட் டிஷர்ட் நல்லது. அவர் எப்போதுமே யுனிபார்மே போடமாட்டார். அவருக்கு துணையாக வருகிற போலீஸ் பேன்ட் மட்டும் காக்கி போட்டிருப்பார்.

- திஷா வினோத்
ஊடகவியலாளர்

நித்தம் ஒரு வானம் (2022)


மிகவும் சுத்தம் பார்க்கிற (OCD Problem?), சக மனிதர்களோடு ஒட்டாத நாயகன். பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறான். அவருக்கு திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்தை நெருங்கும் பொழுது, அந்த பெண் சண்டையிட்டு பிரிந்த காதலனுடன் சமரசமாகி போய்விடுகிறாள்.

நாயகன் பெரிய மன அழுத்தத்தில் சிக்கிக்கொள்கிறான். அதனால் தினசரி நடவடிக்கைகள் கூட சிக்கலாகிறது. மருத்துவரைப் பார்க்கிறான். ஒரு மாறுதலுக்கு ஊர் சுற்றி வா! என்கிறார். மறுக்கிறான். அவனை மருத்துவமனையில் தங்க வைத்து, மருத்துவர் எழுதிய இரண்டு கதைகளை படிக்க தந்துபோகிறார்.


கதைகள் படிக்கும் பொழுது தன்னை நாயகனாக நினைத்துப் படிப்பது அவனுடைய வழக்கம். ஒரு கதையை படிக்க ஆரம்பிக்கிறான். காட்சிகளாக விரிய ஆரம்பிக்கின்றன. அதன் முடிவு எழுதிய சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. பதட்டமாகி, கேட்கும் பொழுது, இன்னொரு கதையையும் படி, முடிவு தெரியும் என்கிறார். அந்த கதை வேறு புதிய மனிதர்களோடு பயணிக்கிறது. இறுதியில் அதன் முடிவு எழுதிய பக்கங்களும் கிழிக்கபட்டிருக்கின்றன.

மீண்டும் மருத்துவரிடம் கேட்கும் பொழுது, அவை இரண்டும் கதைகள் இல்லை. நான் பார்த்த உண்மைச் சம்பங்கள். அந்த கதையில் சம்பந்தப்பட்டவர்கள் இந்தியாவின் வட மாநிலங்களில் வாழ்கிறார்கள். அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நேரடியாக போய் பார்த்துவா! என்கிறார்.

வேறு வழியில்லாமல் கிளம்பி போகிறான். அவர்களுக்கு என்ன ஆயிற்று? அதனால் இவன் கற்றுக்கொண்ட பாடம் என்ன என்பதை முழு நீளப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

****

அசோக் செல்வன், ரித்து வர்மா, அபர்ணா, காளி வெங்கட் என பலரும் நடித்தப் படம். பிரதான கதை சுவாரசியமில்லை. ஒட்டவேயில்லை. படத்திற்குள் கிளைக்கதைகளாக சொல்லப்பட்ட இரண்டு கதைகளும் பிரதான கதையாக சொல்லப்பட்ட கதையை விட பரவாயில்லை. ஆனால், அவைகளும் பழைய கதைகளாக தான் இருக்கின்றன. புதுமையாய் இல்லை. பெரிய பேனர். நல்ல ஒளிப்பதிவு. எல்லாம் இருந்தும் திரைக்கதை பலவீனம். வீணாய் போய்விட்டது.

பயணம் செய்கிற (Travel Movie) படம் என யாரோ காத்துவாக்கில் சொன்னதை கேட்டு, ஏமாந்து போய் இந்தப் படத்தில் மாட்டிக்கொண்டேன். படம் வந்த நான்காவது நாள். சென்னை பாடியில் உள்ள கிரீன் சினிமாஸ்.

டிக்கெட் வாங்கும் பொழுது, ”கூட்டம் குறைவு என காட்சி ரத்து செய்யும் வழக்கம் உங்களிடம் உண்டா!” எனக் கேட்டேன். ”குறைந்தப்பட்சம் பத்து பேர் வந்துவிட்டால்...படத்தை ஓட்டிவிடுவோம். குறைந்தால் ரத்து செய்வோம்” என்றார். ”நான் எத்தனையாவது நபர்?” என கேட்டேன். ”நீங்கள் ஒன்பதாவது நபர்” என்றார். எனக்கு அடுத்து ஒருவர் வந்துவிட்டார் போல! படம் போட்டுவிட்டார்கள்.

சுமாரான படம். விரைவில் ஓடிடிக்கு வந்துவிடும். நான் சொல்வது சரி தானா என்பதை பார்த்துவிட்டு சொல்லுங்கள்!

November 15, 2022

Rorschach (2022) மலையாளம்


Neo-noir psychological supernatural action


மலையாளியான நாயகன் துபாயில் இருந்து கேரளா வருகிறார். போலீசு ஸ்டேசனில் புகார் தருகிறார். தானும் தன் கர்ப்பிணி மனைவியும் காட்டை கடந்து காரில் வந்ததாகவும், ஒரு விபத்து ஏற்பட்டதாகவும், இவர் கொஞ்சம் மயங்கிவிட, தன் மனைவியை காணவில்லை என புகார் தருகிறார். போலீசும் மக்களும் தேடுகிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை.

திரும்பவும் ஊருக்கு கிளம்பாமல், அந்த ஊரிலேயே தங்கி தேட ஆரம்பிக்கிறார். காட்டிற்குள் ஒரு வீட்டை விலைக்கு வாங்குகிறார். இவரிடம் விற்றுவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு சென்றவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். பணமும் காணாமல் போகிறது.

உள்ளூரில் முந்திரி பருப்பு பேக் செய்து விற்கும் சின்ன தொழிற்சாலை சிக்கலாகிறது. பணம் கொடுத்து பங்குதாரராகிறார். அதன் பங்குதாரரான ஒரு விதவைப் பெண்ணை திருமணம் செய்கிறார். அவருடைய நடவடிக்கைகள் எல்லாம் போலீசுக்கும், சுற்றி இருப்பவர்களுக்கும் சந்தேகமாக இருக்கிறது.

அவர் ஏன் இதை எல்லாம் செய்கிறார்? அவரின் நோக்கம் என்ன என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

***

படம் வழக்கமான கதை தான். அதை எடுத்த விதத்தில் வித்தியாசப்படுத்தியிருக்கிறார்கள். திரைக்கதை, குறைவான வசனங்கள், ஒளிப்பதிவு, குறிப்பாக இசை எல்லாம் பக்கபலமாக இருக்கிறது. படத்தில் வருகிற மூன்று படங்கள் இங்கிலீஷ் பாடல்கள் தான்.

படம் துவங்கி கடைசி காட்சி வரை சஸ்பென்ஸை காப்பாற்றியிருக்கிறார்கள். ஒருபக்கம் கொஞ்சம் சோர்வு இருந்தாலும், இறுதிவரை நம்மை இழுத்து செல்வதற்கு அது உதவி செய்கிறது.

நாம் வழக்கமாக பார்க்கும் மலையாளப் படமில்லை இந்தப்படம். இப்பொழுது எல்லாம் நிறைய மல்டி ப்ளெக்ஸ் திரையரங்குகள் வந்துவிட்டதால், பலருக்கு புரியும்படி படம் எடுக்கிற காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. அதுவும் நல்லது தான். குறிப்பாக ஒரு துறை குறித்தோ, ஒரு சமூக நிகழ்வு குறித்தோ படம் வருவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.

மம்முட்டி தான் மொத்தப் படத்தையும் தாங்குகிறார். மற்றவர்கள் துணை நின்றிருக்கிறார்கள். கதைப் பிடித்துப்போனதால், மம்முட்டியே தயாரித்தும் இருக்கிறார்.

படத்தில் சில லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. அது மண்டையை குடைகிறது. நாயகனின் பொண்டாட்டியை காணோம் என தேடும் போலீசு ஏன் அதை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் அப்படியே அம்போவென விட்டுவிட்டது. நாயகன் மீண்டும் துபாய்க்கே சென்றுவிட்டார் என்றால் கூட பரவாயில்லை. உள்ளூரிலேயே இருக்கிறார். அவரின் செயல்கள் போலீசை சங்கடப்படுத்தி கொண்டும் இருப்பதாக போலீசே பேசுகிறார்கள். பொண்டாட்டி காணோம் என தேடும் பொழுதே இன்னொரு பெண்ணை திருமணம் செய்கிறார். சட்டப் பிரச்சனை ஏதும் இல்லையா! அந்த குடும்பம் எப்படி அதை ஒத்துக்கொள்கிறது. ஆச்சர்யம்.

பார்க்கலாம். பாருங்கள்.

November 13, 2022

சினம் (2022)


நாயகன் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர். ஒரு பெண்ணை காதலித்து திருமணமாகி ஐந்து வயது பெண் குழந்தையுடன் சந்தோசமாய் வாழ்கிறார். சென்னையை ஒட்டிய செங்குன்றத்தில் உதவி ஆய்வாளராக இருக்கிறார். மேல் அதிகாரியான ஆய்வாளர் லஞ்ச பேர்வழியாக இருப்பதால், இருவருக்கும் வேலைகளில் முட்டிக்கொள்கிறார்கள்.


நாயகனின் கொழுந்தியாவின் நிச்சயத்திற்கு அழைக்கிறார்கள். நாயகனுக்குள்ள வேலை நெருக்கடியில், மனைவி குழந்தையை மட்டும் வெளியூருக்கு அனுப்பிவைக்கிறார். அங்கு குழந்தையை விட்டுவிட்டு, தனியாக சென்னை வந்து சேர்கிறார். இவர் செங்குன்றத்தில் காத்திருக்க... கோயம்பேட்டிலிருந்து வரவேண்டிய மனைவியை காணவில்லை. செங்குன்றத்தில் ஆண், பெண் என இரண்டு பேர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் வருகிறது. போய் பார்த்தால், நாயகனின் மனைவி கொடூரமாக சிதைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு கிடக்கிறார். அருகிலேயே ஒரு இந்திகார இளைஞனின் உடலும் இருக்கிறது.

ஆய்வாளர் நாயகனின் மேல் உள்ள கடுப்பில் எக்குத் தப்பாக கேள்விகள் கேட்க, நாயகன் அவரின் கையை உடைத்துவிடுகிறார். மேலும் ஊடகங்களுக்கு ”கள்ளக்காதல்” எனவும் பேட்டியளிக்கிறார். கையை உடைத்தற்காக தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்படுகிறார்.

மீண்டும் பணியில் சேர்ந்து, தன் மனைவியை இப்படி சிதைத்தவர்கள் யார் என கண்டுபிடிப்பது தான் மீதி முழு நீளக்கதை.
***

பேருந்தில் ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த ஒரு நபரை நாயகன் கடுமையாக அடிப்பார். ”ஏன் சார் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்?” என கேட்பார் தலைமை காவலர். ”பெண்கள் விசயத்தில் இப்படி மோசமாக நடந்துகொள்பவர்கள் மீது எல்லோரும் இப்படித்தான் கோபப்படவேண்டும். அதை சகித்துக்கொண்டு போகக்கூடாது என்பது படம் சொல்லும் செய்தி. சரியான கருத்து தான். வரவேற்போம்.

சமூகத்தில் இருந்து, ஒரு குடும்பத்தில் இருந்து தான் பாலியல் வெறியுடன் நடந்துகொள்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டும் போதுமா? பிரச்சனை முடிந்துவிடுமா என கேள்வி வருகிறது.

இன்றைக்கும் ஆண்கள் பயன்படுத்தும் அத்தனை பொருட்களுக்கும் பெண்களை அரைகுறை ஆடைகளுடன் விளம்பரம் எடுக்கிறார்கள். திரைப்படங்களில் இன்னும் பெண்களை சதைப் பிண்டங்களாக தானே காண்பிக்கப்படுகிறார்கள். இன்னும் நிலைமை சரியாகவில்லையே.

90 களில் எங்கோ ஒரு மூலையில் மோசமான திரையரங்கில் போர்னே படங்கள் வெளியாகும். இப்பொழுது இணையத்தில் போர்னே படங்களும், காணொளிகளும் கொட்டி கிடக்கின்றன. போதை மருந்து தாராளமாக கிடைக்கிறது. தெருவிற்கு நான்கு சாராய கடைகள். இப்படி பல அம்சங்கள் பாலியல் வெறியை தூண்டிவிடுகின்றன. அவர்களை எல்லாம் எப்படி தண்டிப்பது? இதையெல்லாம் தடுக்காமல் வேடிக்கைப் பார்க்கும் அரசுக்கு என்ன தண்டனை? கடிக்கும் கொசுக்களை கொன்றுவிடலாம். கொசுக்களை உற்பத்தி செய்யும் சாக்கடையை சுத்தப்படுத்துவது எப்பொழுது?

மற்றபடி, இந்த கொலையையும் வட சென்னை கணக்கில் எழுதுவதை எப்படிப் பார்ப்பது? சென்னையின் வேறு பகுதிகளில் இப்படிப்பட்ட கொலைகள் நடப்பதில்லையா? நமது இயக்குநர்கள் சங்கத்தில் அப்படி ஏதும் தீர்மானம் போட்டிருக்கிறார்களா என்ன? வன்மையான கண்டனங்கள்.

படத்தில் இன்னொரு விசயம். தன் மனைவி பற்றி ஊடகத்தில் கொடுக்கும் பேட்டி பற்றியது. ஒரு சம்பவம், கொலை, கலவரம் நடந்துவிட்டால், போலீசுகாரர்கள் அவர்கள் சொந்த, ஆள்பவர்களின், அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பப்படி தான் திரைக்கதை எழுதுகிறார்கள். அதை விசாரித்து எழுதவேண்டிய பொறுப்பு கொண்ட ஊடககாரர்களில் பெரும்பாலோர் அப்படியே தான் வாந்தி எடுக்கிறார்கள். நாயகனின் சொந்த வழக்கு என்பதால், மேலதிகாரியின் கையை உடைத்துவிடுகிறார். மக்கள் அப்படி உடைக்க முடியுமா? என்ற கேள்வியும் வருகிறது.

மற்றபடி, படம் நன்றாக இருக்கிறது. விசாரணையை இயல்பாக எடுத்திருக்கிறார்கள். அருண் விஜய், காளிவெங்கட், பலக் லால்வாணி (Palak Lalwani) என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் குமாரவேலன் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கியிருக்கிறார்.

நெட் பிளிக்சில் இருக்கிறது. பாருங்கள்.

***

முகநூலில் நான் எழுதிய பார்வைக்கு, படம் குறித்து ஒருவர் எழுதிய பின்னூட்டம் இது.

நான் எவ்வளவு மிருதுவாக எழுதியிருக்கிறேன் என ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள். 😊

இந்த படத்தில் லாஜிக் என்றால் கிலோ எவ்வளவு என்பார்கள் போல...
கேங் ரேப் செய்யப்பட்ட பெண்ணோட உடல் பார்த்தவுடன் தெரிந்து விடும்...
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை எல்லாம் இஷ்டத்துக்கு மாற்ற முடியாது
சொந்தகதை சோகக் கதையைச் சொல்லிவிட்டு மெயின் கதைக்கு இண்டர்வெலுக்கு அப்புறம் தான் வருகிறார்கள் படம் 1Hour ;55 minutes தான் சின்னப்படம் Investigation. னிலும் புதுசா எதுவும் இல்லை டோட்டலா கருத்துச் சொல்ல அரசு எடுத்த விளம்பரப்படம் போல இருக்கு ...ட்விஸ்ட் அன் டேர்ன்ஸ் இந்த மாதிரி படங்களுக்கு அவசியம் அப்படியில்லாமல் எதிர்பார்த்த மாதிரியே போய் முடிகிறது க்ளைமேக்ஸ் க்கு நான் மகான் அல்ல படத்தை தூக்கிப் போட்டு முடிச்சிட்டார் வேண்டா வெறுப்பா புள்ளயப்பெத்து காண்டா மிருகம்னு பேர் வைச்சது மாதிரி இருக்கு...

November 12, 2022

Cook up a storm (2017)



விதவிதமாய் வண்ணமயமாய் சமைக்கிற படம்.

சீனாவின் ஹாங்காங். அங்கு வகை வகையான சுவையான உணவுகளுக்கு பிரபலமான பகுதி. அங்கு ஒரு உணவகத்தில் நாயகன் சமையல் கலை நிபுணராக (Chef) வேலை செய்கிறார். அவர் வேலை செய்யும் உணவகத்திற்கு எதிரே போட்டியாக ஒரு புதிய உணவகத்தை தொடங்குகிறார்கள். அங்கு கொரியாவைச் சேர்ந்த ஒரு சமையல் நிபுணர் பிரெஞ்ச் ஸ்டைலில் சமைப்பதில் தேர்ந்தவராக உள்ளவரை அங்கு வேலைக்கு நியமிக்கிறார்கள்.


எதிரெதிரே உணவகம் என்பதால், ஒரு நல்ல மீனை வாங்குவதில் இருந்து, வாகனங்களை நிறுத்துமிடம் என வேறு வேறு விசயங்களுக்காக மோதிக்கொள்கிறார்கள். அதே போல சமையலிலும்! ஒரு பிரபல சமையல் போட்டி நடக்கிறது.

இந்த தேர்ந்த இரு கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள். இதில் இருவரும் இணையான மதிப்பெண்கள் பெற்றாலும், சமைப்பது, அதை ஈர்க்கும் விதமாக படைப்பது, மணம் என்பவற்றில் பிரெஞ்ச் ஸ்டைலில் சமைக்கும் கொரியாக்காரர் ஜெயிக்கிறார். அது தான் இப்பொழுது உணவு தொழிலுக்கு அவசியம் எனவும் நடுவர் சொல்கிறார். இனி அடுத்து இதைவிட மிகப்பெரிய போட்டியில் கலந்துகொள்ளவேண்டும். கொரியக்காரருக்கு உப்பு சுவை அறிவதில் அவருக்கு குறைபாடு ஏற்படுகிறது.

இடையில் சில சில பஞ்சாயத்துகளில், இருவரும் ஒன்றிணைகிறார்கள். அந்த போட்டியில் பரஸ்பரம் இணைந்து சமைத்து, வெற்றி பெறுகிறார்கள். நாயகனுக்கு சமையலில் பெரிய ஆளான தன் அப்பாவோடு குமரன் சன் ஆப் மகாலெட்சுமி போல ஒரு பழைய தகராறு இருக்கிறது. நாயகன் அந்த தகராறை தீர்த்தாரா? என்பதை வண்ணமயமாக சமைத்தும், உணர்வுபூர்வமாகவும் முடித்திருக்கிறார்கள்.
****

1841ல் ஹாங்காங் தீவை பிரிட்டன் கைப்பற்றியது. ஒப்பந்தப்படி 1997ல் சீனாவிற்கு கைமாற்றிவிட்டது. 2047 வரை ஹாங்காங்கில் முதலாளித்துவ கொள்கை தான் கடைப்பிடிக்கவேண்டும் என ஒப்பந்தவிதி சொல்கிறதாம்.

முதலாளித்துவ உலகம் நுகர்வு பண்பை தூண்டிக் கொண்டே இருக்கக்கூடியது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் என்ற சிந்தனை இருக்காது. லாபம் தான் அதன் பிரதான குறிக்கொள். ஆகையால், வசதி உள்ள வாடிக்கையாளர்களை எப்படி எப்படி விதவிதமாக நுகர வைக்கலாம். அவர்களிடமிருந்து எப்படி துட்டை கறக்கலாம் என்பதை விடாமல் சிந்தித்துக்கொண்டே இருக்கக்கூடியது.

அது போல சமையலிலும், புதிது புதிதாக வண்ணமயமாக சமைத்து உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். விதவிதமாய் சாப்பிடுவதற்காக ஊர் ஊராக பயணம் செய்கிற ஆட்களும் உலகத்தில் பெருகிகொண்டே வருகிறார்கள்.

அதனுடைய தொடர்ச்சியில் தான் தொலைக்காட்சிகளில் புதிது புதிதாக சமைக்கிற ஆட்கள் தோன்றினார்கள். விதவிதமாய் சமைத்தார்கள். சமைக்கிறார்கள். சமையல் கலையையும் நகைச்சுவையும் இணைந்து கொடுத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி தமிழகத்தில் மிகப்பிரபலமானது.

அதன் தொடர்ச்சியில் தான் இந்தப் படமும் உருவாகியிருக்கிறது. படத்தை ஏனோ தானோ என எடுக்காமல், படத்தில் ஒவ்வொரு முறையும் சமைக்கும் பொழுது விசேச கவனம் கொடுத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

படம் பார்த்து முடிக்கும் பொழுது, எப்படியெல்லாம் விதவிதமாய் சமைக்கிறார்கள். சாப்பிடுகிறார்கள் என்ற எண்ணம் தான் மேலோங்குகிறது. படத்தில் நடித்த பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

படம் மாண்ட்ரின் மொழி. இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் நெட் பிளிக்சில் இருக்கிறது. வாய்ப்பு இருக்கிறவர்கள் பாருங்கள்.