> குருத்து: May 2009

May 31, 2009

ஒப்பந்த தொழிலாளியைப் பாதுகாக்க சட்டம் இல்லை! தீர்வு?

இந்த பதிவில்....

//ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்க பாராளுமன்றத்தில் தீர்வு இல்லை. சுதந்திரம் வந்ததா சொல்றான்! 60 ஆண்டு காலமாக 12 தேர்தல். பல பிரதம மந்திரிகள். பல தொழிலாளர் மந்திரிகள், ஆனால், ஒப்பந்த தொழிலாளியை பாதுகாக்க இதுவரை விவாதமும் நடத்தவுமில்லை. சட்டமும் இல்லை. சமூக நீதியோ, சட்ட பாதுகாப்போ இல்லை.//

//தீர்வு தான் என்ன?

சங்கமாக சேர்! சங்கத்தை வலுப்படுத்து! போராடு! சண்டையிடு!
அடி! (கைத்தட்டல்)

- வழக்கறிஞர் பாலன், உயர்நீதி மன்றம், பெங்களூர்.

*****

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தரப்படும் கூலி எவ்வளவு? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?

ஒப்பந்த தொழில் செய்யும் நகரச் சுத்தி தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ. 63. ஹெச்.ஏ.எல். ல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ரூ. 118 கூலி. BSNL – ல் வெலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ. 30 கூலி. இந்த கூலியை பெற்று, எந்த மாதிரி வாழ்க்கை நடத்த முடியும்?

அவர்கள் எங்கு வாழ்கிறார்கள்?

சென்னை, பெங்களுர், மும்பை, கல்கத்தா போன்ற இடங்களில் குடிசைப் பகுதியில் வீடு வேண்டும் என்றால் கூட ரூ. 1500 கூலி. போக்குவரத்து, பிள்ளைகளுக்கு கல்வி செலவு, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழக்கூடிய தொழிலாளர்கள்.

இவர்கள் சங்கமாக திரள முடியாது. சங்கமாக திரண்டால் உடனே நிர்வாகம் வேலை நீக்கம் செய்துவிடும்.

வேலை நீக்கம் செய்தால்... நீதிமன்றத்துக்கு போகணும். தொழிலாளர் துறைக்கு கன்சுலேசன் போடணும். எல்லாம் சரி! எங்கே சட்டம்? ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டம் எங்கே? ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டம் இதுவரைக்கும் வரவில்லை. Contract workers regulation and abolition act என்று இருக்கிறது. பல்லே இல்லாதது. கடிக்காது.

சட்டம் எங்கே? சட்டம் இல்லை. கன்சுலேசன் போட்டால்.. ஒண்ணும் பண்ண முடியாது சார்! நீங்க அப்படியே அட்ஜட்ஸ் பண்ணிகிட்டு போங்க! என நம்மிடம் சொல்கிறான்.
டிஸ்பூட் எழுப்பி நிர்வாகத்துக்கு (Management) நோட்டீஸ் அனுப்பினால், கன்சுலேசன் அதிகாரி முன்பு அவன் வருவதில்லை. எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறான்.

நிரந்தர தொழிலாளிக்கு தான் சங்கம் இருக்கிறது. அதை அங்கீகரிச்சுருக்கோம். காண்டிராக்ட் தொழிலாளர் சங்கம் என்ற சங்கமே கிடையாது. அதனால நாங்க வர்றதில்ல! என்கிறான்.

கன்சுலேசன் ஆபீசர் சொல்கிறார் “ஒண்ணும் பண்ண முடியாது?” நிர்வாகத்தின் மேலே நடவடிக்கை எடுக்கிறதுக்கு எங்கே சட்டம்?

சரி! பெயிலுர் அறிக்கையை தில்லிக்கு அனுப்பு! தில்லிக்கு போய் ‘பஞ்சப்படி கொடு’ என ஒரு கன்சுலேசன். ‘போனஸ் கொடு’ என ஒரு கன்சுலேசன். அங்கிருந்து பல காலம் கழித்து நமக்கு பதில் வருகிறது.
உங்களுக்கு
பஞ்சப்படி இல்லை.
போனசு இல்லை.
குறைந்தபட்ச ஊதியம் இல்லை
வேலை நேரம் இல்லை


“ரிஜக்ட்டடு” (Rejected)

அதுக்கு மேலே நீதிமன்றத்துக்கு போக முடியாது. ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்க பாராளுமன்றத்தில் தீர்வு இல்லை. சட்டம் இல்லை. சுதந்திரம் வந்ததா சொல்றான்! 60 ஆண்டு காலாமாக 12 தேர்தல். பல பிரதம மந்திரிகள். பல தொழிலாளர் மந்திரிகள், நிதி அமைச்சர்கள், எம்பிக்கள். ஆனால், ஒப்பந்த தொழிலாளியை பாதுகாக்க இதுவரை விவாதமும் நடத்தவுமில்லை. சட்டமும் இல்லை. அதனால் பாராளுமன்றத்தின் மூலமாக இந்த தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. சமூக நீதியோ, சட்ட பாதுகாப்போ இல்லை.
சட்டம் இல்லை.
சட்டம் இருந்தால் தான் நீதிமன்றம்
(சட்டம், நீதிமன்றம் இருந்தாலே, நிர்வாகம் மதிக்கமாட்டான்.) இரண்டும் இல்லையென்றால், நிர்வாகத்தினரிடமும் போகமுடியாது. எங்கே போவது?

தீர்வு தான் என்ன?

சங்கமாக சேர்! சங்கத்தை வலுப்படுத்து! போராடு! சண்டையிடு!
அடி! (கைத்தட்டல்)
நிர்வாகத்தின் கேட்டை மூடு! நிர்வாகத்தினர் எவனும் கார்ல போக கூடாது. காரை வழிமறி! எச்சரிக்கை கொடு!
உதை! (கைத்தட்டல்)
அடித்தால் திருப்படியடி!
போலீசு தாக்கினால் திருப்பித் தாக்கு! (கைத்தட்டல்)

தனிமனித தீவிரவாதத்தை சொல்லவில்லை. உன்னுடைய உரிமை. நீ உழைக்கிறாய். உனக்கு சம வேலைக்கு சமகூலி கொடு.

நான் டிரைவர். அவனும் டிரைவர்.
நான் கணிப்பொறியில் வேலை செய்பவன்.
அவனும் கணிப்பொறியில் வேலை செய்பவன்.
நான் பெயிண்டர். அவனும் பெயிண்டர்.

அவனுக்கு 20000 சம்பளம். எனக்கு ரூ. 2000 சம்பளம். சம வேலைக்கு சம கூலி கொடு. இதைத்தான் இந்திய அரசியல் சாசன சட்டம் சொல்கிறது. சட்டத்தின் ஷரத்துப் படி தான் நான் கேட்கிறேன். என்னை வஞ்சிப்பவன் யார்? ஒரு முதலாளி. அவன் நிர்வாகி. சட்டத்தை மீறுபவன் அவன். நானல்ல!

நமக்கு நடைமுறை அனுபவங்கள் இருக்கிறது. ஒரு மத்திய தொழிற்சாலையில்....

... மீதி அடுத்த பதிவில் தொடரும்.

****

பின்குறிப்பு : கடந்த ஜனவரி 25-ம் தேதியன்று, சென்னனயில் நடந்த முதலாளித்துவ பயங்கரவாத மாநாட்டில் வழக்கறிஞர் தோழர் பாலன் பேசிய உரையின் மூன்றாவது பகுதி இது. முதல் பகுதியைப் படிக்க... கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.

உரையின் முதல் பகுதி

உரையின் இரண்டாவது பகுதி
****

நன்றி : மாநாட்டின் உரைகளை தொகுத்து, எம்பி3 வடிவில்...டிவிடி-யை ரூ. 30க்கு வெளியிட்டிருக்கிறார்கள். வாங்கி கேளுங்கள். புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் அனுமதியுடன் இங்கு பதிவிடுகிறேன்.

May 30, 2009

‘அண்ணன்’ அழகிரி அமைச்சர் அழகிரி ஆகிவிட்டார்!


முதலில் நமது வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோம். மதுரையில் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இனிப்புகள் வழங்கப்படுகின்றன. மதுரை அமர்க்களப்படுகிறதாம்.

மதுரையை ‘கூடல் மாநகரம்’. கோவில் மாநகரம்’ என்றும், அந்த மண்ணை அன்னை மீனாட்சி ஆள்கிறாள் என்பார்கள். அதெல்லாம் பக்தியில் திளைப்பவர்களும், அரசியல் வாடை சிறிதும் இல்லாத பாமர ஜனங்கள் சொல்வது. மதுரையை ‘அண்ணன்’ ஆள ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டன.


அதனால் தான் தேர்தலில் ஜெயித்து, மந்திரி பதவி கிடைத்ததும், ‘அண்ணனின்’ அன்பு தம்பிகள் மதுரையை ‘அழகிரியார் மாவட்டமாக’ அறிவித்து போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.

பிரதமரும், சோனியாவும் ‘திறமையான’ ஆட்களுக்கு தான் மந்திரி பதவி கொடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த வார்த்தை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ! ‘அஞ்சாநெஞ்சன்’ அழகிரிக்கு கச்சிதமாய் பொருந்தும். கேபினட் மந்திரி பதவி இப்பொழுது தந்ததற்காக வாழ்த்துக்களை சொல்வதை விட, தாமதமாய் தந்ததற்காக நாம் கண்டனம் தான் தெரிவிக்க வேண்டும்.

ஓட்டு சீட்டு அரசியலுக்கு எப்பேர்ப்பட்ட திறமையானவர் ‘அண்ணன்’ அழகிரி. காண்டிராக்டா? கட்ட பஞ்சாயத்தா? அடிதடியா? கொலையா? தேர்தலில் ஜெயிக்க வேண்டுமா? – இப்படி வார்த்தைகளில் ‘அண்ணன்’ அழகிரியின் அருமை பெருமைகளை விளக்குவது அவரை சிறுமைப்படுத்துவதாகும். மதுரையில் அவரின்றி ஓர் அணுவும் அசையாது. அவ்வளவு தான். எதிர்கட்சிகள் இன்றைக்கும் அவரை ‘ரவுடி’ என்று தான் அழைக்கின்றனர்.

“அழகிரிக்கு சொத்து பிரச்சனையில்லை. அதிகாரத்தை நிறைய ருசித்தவர் (!). ஆகவே, ஓட்டு சீட்டு அரசியல்வாதிக்கே உரிய முதிர்ச்சி பெற்று, திருந்திவிடுவார்’ – என தினமணி தலையங்கம் எழுதுகிறது.

திருமாவளவன் முன்பு தேர்தல் புறக்கணிப்பில் இருக்கும் பொழுது “வாய் வழியாக அமிர்தமே உள்ளே போனாலும், வெளியே வரும் பொழுது .வி.....யாக வரும்”. அது போல தான், எவ்வளவு நல்லவராக இருந்தாலும் இந்த சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் பங்கேற்றால் கழிசடையாக தான் உருமாறிப்போவார்” என்றார்.

‘அண்ணன்’ அழகிரியோ உள்ளே போகும் பொழுதே, வி....யாக தான் உள்ளே போகிறார். தினமணி நம்பட்டும்.

அண்ணனுக்கு கேபினட், தம்பிக்கு துணை முதல்வர். மற்றவர்களுக்கும் உரிய, உயரிய பதவிகள். இனி, கருணாநிதி தன் மீளாத் தூக்கத்தை நிம்மதியாக துவங்குவார்.

ஆனால், நிம்மதியை காவு கேட்கும் டிராகுலாக்களை மக்கள் தான் எப்படி சமாளிக்க போகிறார்களோ!

May 28, 2009

அமைப்பு சாரா தொழிலாளியின் அவல நிலை!

- வழக்கறிஞர் பாலன், உயர்நீதி மன்றம், பெங்களூர்.

குறிப்பு : கடந்த ஜனவரி 25ம் தேதியன்று அம்பத்தூரில் முதலாளித்துவ பயங்கரவாத மாநாடு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பால் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் பேசிய உரையை, சம்பந்தப்பட்ட அமைப்பின் அனுமதியுடன் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
*****
யாரிந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள்? ஏனெனிந்த நிலைமை? அவர்கள் எந்தெந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற கான்டிராக்ட் கலாச்சாரம் இந்த நாட்டில் கொண்டுவரப்பட்டது. கான்டிராக்ட் முறை என்றால் என்ன? வெள்ளைக்காரன் ஆட்சி செய்யும் பொழுது, கங்காணிமுறை என்றிருந்தது. பர்மா, இலங்கை, பினாங்க்கு தோட்ட தொழிலில், காடுகளில் வேலை செய்ய தமிழ்நாட்டிலிருந்தும், கேரளாவிலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் ஆட்களை கொண்டு சென்றார்கள். அந்த முறைக்கு பெயர் தான் கங்காணி முறை.

சுதந்திரத்திற்கு பிறகு சிறுக சிறுக ஒப்பந்த தொழிலாளர்களை மத்திய, மாநில அரசு துறைகளிலும், மற்றும் பெல், லிக்னெட் கார்ப்பரேசன், உர நிறுவனம், எண்ணெய் நிறுவனங்களில் நியமிக்க தொடங்கினார்கள். அரசு என்பது ஒரு முன்மாதிரி வேலைதருபவராக (Model Employer) நடந்து கொள்ள வேண்டும் என்பது விதி. ஆனால், அரசே இங்கு ஒப்பந்த தொழிலாளர்களை அமர்த்தி தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுகிறது.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி ரூ. 3000. நிரந்தர தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலி ரு. 12,000. நான்கில் ஒரு பங்கு தான் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி.

ஒப்பந்த தொழிலாளியின் முதலாளி யார்?

ஒப்பந்த தொழிலாளி வேலை செய்யும் இடம் பொதுத்துறை நிறுவனம். தொழிலாளியிடம் வேலை வாங்குபவன் பொதுத்துறையை சேர்ந்த மேனேஜர்ஸ், ஆபிஸர்ஸ். அந்த தொழிலாளி அந்த துறையில் உற்பத்தி பிரிவில்.. வெல்டராக (Welder) வேலை செய்வான்.

அவனருகிலேயே அதே வேலை, வேலையின் அளவு செய்யும் நிரந்தர தொழிலாளிக்கு சம்பளம் ரூ. 12,000. ஒப்பந்த தொழிலாளிக்கு சம்பளம் ரூ. 3000 மட்டும்.

நிரந்தர தொழிலாளிக்கு

போக்குவரத்து படி உண்டு
கேன்டின் வசதி உண்டு
வீட்டு வசதி உண்டு
பிள்ளைகளுக்கு கல்வி வசதி உண்டு
சங்கம், சங்க அலுவலகம் அனுமதி உண்டு
ஸ்டாண்டிங் ஆர்டர் உண்டு.

இதில் எந்த சலுகையும் ஒப்பந்த தொழிலாளிக்கு கிடையாது. ஒப்பந்த தொழிலாளியை எப்பொழுது வேண்டுமென்றால் பணியில் அமர்த்தலாம். வேண்டாம் என்றால் தூக்கியெறியலாம்.

சமூக பாதுகாப்பும், சட்ட பாதுகாப்பும், வாழ்வதற்கு போதிய ஊதியமும் இல்லாமல் வாழ்பவன் ஒப்பந்த தொழிலாளி.

ஒப்பந்த தொழிலாளி தொழிலாளிக்கான உரிமையை கூட கேட்க முடியாது. சங்கமாக சேரக்கூடாது. அப்படியே சங்கமாக சேர்ந்தாலும் நிர்வாகம் அச்சங்கத்தை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதில்லை.

ஒப்பந்த தொழிலாளி கூலி உயர்வு கேட்டால்... நிர்வாகம் “நீ என்னுடைய தொழிலாளி அல்ல” என்பான். கான்டிராக்டரிடம் போய் கேட்டால், நிர்வாகம் என்ன குடுக்கிறானோ அதை தான் உன்னிடம் கொடுக்கிறேன். கூடுதலாய் வேண்டுமென்றால், நிர்வாகத்தைப் போய்க்கேள் என்பான். இங்கே கேட்டால் அங்கே கேள்! அங்கு கேட்டால் இங்கே கேள்! என்கிறான்.

கான்டிராக்ட் முறை என்பதே அரசு தெரிந்தே செய்யும் மோசடி. யாரை மோசடி செய்கிறது இந்த அரசு? பாகிஸ்தானியனையோ, இலங்கைகாரனையோ அல்ல! இந்த நாட்டின் குடிமகன்களை மோசடி செய்கிறான். இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லக்கூடிய அரசு வஞ்சிக்கிறது.

ஒப்பந்த தொழிலாளர்கள் தரப்படும் கூலி எவ்வளவு? அதைக் கொண்டு அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?

மீதி அடுத்த பதிவில் தொடரும்.

****

பின்குறிப்பு : கடந்த ஜனவரி 25-ம் தேதியன்று, சென்னனயில் நடந்த முதலாளித்துவ பயங்கரவாத மாநாட்டில் வழக்கறிஞர் தோழர் பாலன் பேசிய உரையின் இரண்டாவது பகுதி. முதல் பகுதியைப் படிக்க... கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.

உரையின் முதல் பகுதி

****

மேலும் சில குறிப்புகள்

வழக்கறிஞர் பாலன் சொல்வது பல பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களைப் பற்றி சொல்கிறார். ஆனால், தனியார் துறை நிறுவனங்களில் தான் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும், பாலன் அவர்கள் சொல்வதை விட அவலங்களும் நிரம்பியது. அவருடைய உரையின் பின்பாதியில் அதை பற்றியும் விவரிக்கிறார். தொடந்து படித்து வாருங்கள். நன்றி.

May 27, 2009

யோகா அனுபவம் (3)யோகா பயிற்சியின் அனுபவங்களை எழுதும் தொடர்ச்சியில்... இந்த பதிவு.

யோகா செய்வதால் எனக்கு கிடைக்கும் பலன், பிறகு இந்தந்த தொல்லைகளுக்கு யோகா நல்லது என நான் பட்டியலிடுவதைக் காட்டிலும், தொல்லைகளிலிருந்து விடுப்பட்டவர்களே… அவர்களுடைய சொந்த வார்த்தைகளில் சொல்வது என்பது இன்னும் அழுத்தமாய் இருக்கும். மேலும், ஆண்கள் யோகா செய்வது எளிது. பெண்களுக்கு சிரமம் என பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அதற்கும் இந்த பதிவு விளக்கம் தருகிறது.

நான் செல்லும் யோகா மையத்தில் மூன்று மாதங்களுக்கொருமுறை யோகாவால் உள்ள பலன்களை சொல்லுங்கள் என யோகா ஆசிரியர் கோருவார்.

சிலர் சொன்னார்கள். நீங்களும் கேளுங்கள்.

ஆங்கில பள்ளி ஆசிரியை – வயது 38

‘கடந்த மூன்றரை ஆண்டுகளாக யோகா வகுப்புக்கு வருகிறேன். மூச்சிரைப்பு பிரச்சனையால் எனக்கு பல ஆண்டுகளாக தொந்தரவு. இதனால் தினசரி வேலைகள் செய்வதற்கே மிகச் சிரமப்பட்டேன். மாதத்தில் பாதிநாள்கள் மருத்துவமனைக்கு சென்றுவருவேன். மருந்தின் துணையோடு தான் வாழ்ந்து வந்தேன்.

யோகா பயிற்சிக்கு பின், மூச்சிரைப்பு கட்டுப்பட்டிருக்கிறது. மருத்துவரை மாதம் ஒரு முறை அளவில் தான் பார்க்கிறேன். முன்பு முகம் எப்பொழுதும் வாடியிருக்கும். இப்பொழுது மலர்ச்சியாக இருக்கிறது.

ஆங்கில பள்ளி ஆசிரியை – வயது 35

கடந்த 8 மாத காலமாக வகுப்புக்கு வருகிறேன். இடுப்பு வலி மிக அதிகமாக இருந்ததால்... என்னால் உட்கார, நிற்க என்பது மிக சிரமமானதாக இருந்தது. இப்பொழுது 2 மணி நேரம் என்றாலும் வலி இல்லாமல் உட்காரவோ, நிற்கவோ முடிகிறது. 5கிலோவிற்கும் மேலே எடை குறைந்திருக்கிறேன். தொப்பை நன்றாக குறைந்துவிட்டது. 5 வயது குறைந்த மாதிரி இருக்கு. நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது.

52 வயது பெண்மணி – வீட்டில் இருப்பவர்

கடந்த 4 ½ வருடமாக யோகா வருகிறேன். தைராய்டு பிரச்சனையால் அவதிப்பட்டேன். யோகா தொடர்ந்து செய்வதால், கட்டுப்பட்டிருக்கிறது(பேலன்ஸ்சிங்). யோகா செய்வதை விட்டுவிட்டால் தைராய்டு பிரச்சனை செய்கிறது.

33 வயது பெண்மணி – வீட்டில் இருப்பவர்

2 வருடமாக யோகா வகுப்புக்கு வருகிறேன். வருவதற்கு முன்பு எனக்கு தைராய்டு பிரச்சனை, ஒற்றை தலைவலி, முதுகுவலி இருந்தது. அதிகமான கோபம் வரும். தொடர்ந்து வகுப்புக்கு வருவதால் இப்பொழுது ஒற்றை தலைவலியும், முதுகுவலியும் இல்லை. முக்கியமாக எதற்கெடுத்தாலும் கோபப்படுவேன். வீண்பயமும், சந்தேகமும் இருந்து கொண்டே இருக்கும். இது ஒரு மன வியாதியோ என நினைத்து கொண்டேயிருந்தேன். இப்பொழுது முற்றிலும் குணமாகிவிட்டேன். இப்பொழுது மனசும் உடம்பும் லேசாக இருக்கிறது.

34 வயது – ஆண் - மேனேஜர்

எனக்கு தொடர்ச்சியாக முதுகுவலியும், கழுத்து வலியும் இருந்தது. மேலும், உடல் கனத்து, நிறைய சோம்பறித்தனத்துடன் இருந்து வந்தேன். இப்பொழுது 6 மாத காலமாக யோகா செய்வதால்... முதுகுவலியும், கழுத்துவலியும் இல்லை. உடல் லேசாக இருக்கிறது.

35 வயது – ஆண் - மேனேஜர்

அலர்ஜி பிரச்சனையால், அடிக்கடி ஜலதோசம் பிடித்து வந்தது. அதன் வளர்ச்சியில், ஆஸ்துமாவில் கொண்டு வந்து நிறுத்தியது. தொடர்ச்சியான மருந்து, மாத்திரைகள். அதனால், நரம்பு தளர்ச்சியே வந்துவிட்டது. ஒரு சமயத்தில், இயங்குவதோ, நன்கு சிந்தித்து வேலை செய்வதே சிரமமாகி போனது. நம்பிக்கையிழந்து சோர்வுற்று இருந்தேன். யோகா – கடந்த 9 மாத காலமாக தொடர்ச்சியாக செய்து வருகிறேன். நல்ல முன்னேற்றம். ஜலதோசம் பிடிப்பது நின்றது. உடலும், மனசும் லேசாக ஆனது. மருந்து, மாத்திரைகள் எப்பொழுதாவது தான் சாப்பிடுகிறேன். இப்பொழுது 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறேன்.

.....

இப்படி இன்னும் பலர் சொன்னார்கள். சுருக்கமாய்...

7ம் வகுப்பு படிக்கிற பையன்... வகுப்பில் நிறைய பேசுவதாய் என் மேல் கம்ளைன்ட். இப்பொழுது குறைவாக பேசுவதாக சொல்கிறார்கள்.

27 வயது – வேலைக்கு செல்லும் பெண். முன்பெல்லாம், எப்பொழுதும், உடலிலும், மனதிலும் ஒரு பதட்டம் இருந்து கொண்டேயிருக்கும். இரண்டு மாத காலமாக யோகா செய்வதால்.. இப்பொழுது பதட்டம் குறைந்து இருக்கிறது.

37 வயது – விற்பனை பிரதிநிதி - ஆண் - யோகா செய்வதால்... என்னால் ஒழுக்கமாக இருக்க முடிகிறது. நாள் முழுவதும்...சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.

******

இன்னும் எழுதுவேன்.

******

மேலும் படிக்க...

முந்தைய பதிவுகள்

யோகா அனுபவம் – 1
யோகா அனுபவம் - 2

குறைந்தபட்ச ஊதியமில்லை! தொழிற்சங்க உரிமையில்லை!

வேலை நேரத்திற்கு வரம்பில்லை!
குறைந்தபட்ச ஊதியமில்லை!
தொழிற்சங்க உரிமையில்லை!
உரிமைகளை ஒழிக்கும் உலகமயம்!


வழக்கறிஞர் தோழர் சி.பாலன், கர்நாடக உயர்நீதி மன்றம், பெங்களூர்.

கடந்த ஜனவரி 25ம் தேதியன்று அம்பத்தூரில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் இணைந்து ‘முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு” ஒன்றை சிறப்பாக நடத்தினார்கள். அதில் காலை அமர்வில்.. மேலே குறிப்பிட்ட தலைப்பில் வழக்கறிஞர் தோழர் பாலன் அருமையானதொரு சிறப்புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சிகளைத் தொகுத்து, இப்பொழுது எம்.பி. 3 வடிவில் ரூ. 30 க்கு டிவிடி வெளியிட்டிருக்கிறார்கள். அவருடைய உரையில்... சம்பளம் என்றால் என்னென்ன அம்சங்கள் அடங்கியது. அமைப்புச் சார்ந்த தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள், அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பின்மை, ஒப்பந்தகாரர்கள் என்றால் யார்?, தொழிலாளர் நலனில் அரசின் போக்கு, போராட்ட அனுபங்கள் என அரிய தகவல்கள் இருந்தன.

அதை பலருடன் பகிர்ந்து கொள்ளலாமே என தோன்றியது. சம்பந்தப்பட்ட அமைப்பின் அனுமதியுடன் பதிவிடுகிறேன். என்ன தான் எழுத்தில் பதிவிட்டாலும், இந்த உரையை அவர் குரலில் கேட்கவேண்டும். உரை வீச்சில் இருந்த கோபம், எழுச்சி நம்மை தொற்றிக்கொள்ளக்கூடியது. நம்மை இயங்க வைக்க கூடியது.

அவருடைய உரை 1 மணி நேரம் என்பதால்... மூன்று, நான்கு பதிவுகளாக இடலாம் என்றிருக்கிறேன்.

நன்றி : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் சகோதர அமைப்புகளுக்கு.

****

தோழர்களே!

உழைப்பின் பலன், உழைப்பாளன் பெறவேண்டும் என்பது உழைப்பாளனின் உரிமை. இது யாரோ கொடுக்கும் நீதியுமல்ல! தானமும் அல்ல! தொழிலாளர்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு, தொழிலாளியின் உரிமைகள் சில சட்டமாக்கப்பட்டன. வரையறுக்கப்பட்டன. தொழிற்சங்கம் வைத்துக்கொள்ளும் சட்டம், தொழிற் தகராறு சட்டம், தொழிற்சாலை சட்டம், ஊதிய சட்டம் என பல சட்டங்கள் போடப்பட்டடன.

ஊதியம் என்றால் என்ன?

ஊதியம் என்றால் அடிப்படை சம்பளம், பஞ்சப்படி, சிப்ட் படி, கல்விபடி, கேண்டின்படி, மருத்துவபடி, இந்த படிகள் எல்லாம் சேர்ந்தது தான் சம்பளம். 7 லிருந்து 10 அம்சங்கள் கொண்டது தான் சம்பளம்.

இந்த சம்பளத்தை தான், அமைப்பு சார்ந்த தொழிலாளர்களான வங்கி ஊழியர்கள், இன்சூரன்ஸ் ஊழியர்கள், மத்திய மாநில ஊழியர்கள் ரூ. 8000 லிருந்து ரூ. 10,000, ரூ. 15000, ரூ. 25,000 என சம்பளம் பெறுகிறார்கள். இவையெல்லாம் போராடி பெற்ற ஊதியம்.

ஊதியத்தை பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

நமது அரசியல் சாசன சட்டப்படி, ஷரத்து 43, ஷர. 39 படி தொழிலாளர்கள் வாழ்வதற்காக நாட்டின் வளங்கள் பகிர்ந்து அளிக்கப்படும். ஷர. 43 – வாழ்வதற்கான ஊதியம், வாழ்வதற்கான சூழல், இது நம்முடைய அரசியல் சாசன சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது.

ஜெர்மனியில்... உற்பத்தியில் ஈடுபடும் ஒரு தொழிலாளிக்கு கொடுக்கப்படும் ஊதியம் ஒரு மணி நேர உழைப்புக்கு 32 டாலர்.
(இந்திய பண மதிப்பில்) ரூ. 1600. 8 மணி நேர உழைப்பு. ஒரு மாத ஊதியம் ரூ. 3,84,000.

ஜப்பானில்... ஒரு மணி நேரத்திற்கு ரூ. 24 டாலர். மாத ஊதியம் ரூ. 2 லட்சத்துக்கு மேல்.

அமெரிக்காவில் – ஒரு மணி நேரத்திற்கு ரூ. 17 டாலர். மாத ஊதியம் ரூ. 2,07,000

நமது நாட்டிலும் இப்படி வரையறுக்கப்பட்டுள்ள ஊதியம் எத்தனை பேருக்கு கிடைக்கிறது?

தொழிலாளர் நலச்சட்டத்தால் வரையறுக்கப்பட்ட ஊதியம்

1980ம் ஆண்டு - 20% தொழிலாளர்களுக்கு
1990ம் ஆண்டு - 10% தொழிலாளர்களுக்கு
2005ம் ஆண்டு – 5% தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் சலுகைகள் பெறாத தொழிலாளர்களின் எண்ணிக்கை

1990ம் ஆண்டில் – 29 கோடி தொழிலாளர்கள்.
2000ம் ஆண்டில் – 37.5 கோடி தொழிலாளர்கள்

இந்த நாட்டில் மொத்தம் உள்ள (2005ம் ஆண்டு கணக்கின் படி) 45 கோடியே 97 லட்சம் தொழிலாளர்களின் எண்ணிக்கையில்...இந்த சட்டங்கள் சலுகைகள் எல்லாம் அமைப்பு சார்ந்த தொழில் 2 கோடியே 60 லட்சம் பேருக்கு மட்டும் தான். மீதமுள்ள 43 கோடியே 30 லட்சம் தொழிளார்களுக்கு ஊதிய சலுகைகள் இல்லை. சட்ட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, வாழவதற்கான ஊதியம் என எதுவுமே இல்லை.

நான் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவன். அங்கு
அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 18 லட்சம்.
அமைப்பு சாராத தொழிலாளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 18 லட்சம் பேர்.

தமிழகத்திலும் இந்த நிலைமை தான் இருக்கும். சில லட்சம் தொழிலாளர்களுக்கு அனைத்து சலுகைகளும். கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு சலுகைகளே இல்லை. இது தான் இந்த நாட்டின் எதார்த்த நிலை.

யாரிந்த அமைப்பு சாராத தொழிலாளர்கள்?

- அடுத்த பதிவில் தொடரும்.

May 5, 2009

நிஜமும்! நிழலும்!


சமீபத்தில் மும்பை சென்றிருந்த பொழுது, அங்கு சென்ட்ரல் ஸ்டேசன் அருகே மராத்தா மந்திர் என ஒரு திரையரங்கு.. அங்கு தான் இந்திய திரைவானில் பல ரிக்கார்டுகளை உடைத்து வெற்றிகரமாக "தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே" என்ற படம் 1995ல் வெளிவந்த நாளிலிருந்து 700 வாரங்களைத் தாண்டி, அதாவது 14 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படம், நடிப்பு, பாட்டு, இயக்கம் என 10 வகைகளில் பிலிம்பேர் அவார்டுகளை அள்ளியது. 96 ஆம் ஆண்டில் வெகுஜனங்களை கவர்ந்த படம் என்ற தேசிய விருதும் பெற்றது.

கதை என்ன? சிம்பிள் கதை. லண்டனில் வசிக்கிற ஒரு ஐரோப்பிய சுற்றுலா பயணத்தில் நாயகனும், நாயகியும் சந்திக்கிறார்கள். மோதல். பிறகு, காதலில் விழுகிறார்கள். தன் காதலை நாயகியால் சொல்ல முடியவில்லை. காரணம் தன் சொந்த மண்ணாகிய இந்தியாவை நிறைய நேசிக்கும் அப்பா, அங்கு தன் நண்பனின் பஞ்சாபி பையனை நிச்சயித்துவிடுகிறார்.

பிறகு, நாயகி வீட்டை விட்டு வந்து விடுகிறேன். நாம் கல்யாணம் செய்துகொள்வோம் என கதாநாயகனை வற்புறுத்த... நாயகன் மறுக்கிறார். எல்லோருடைய சம்மதத்துடன் நாம் கல்யாணம் முடிப்போம். அதுவரை போராடுவோம் என சொல்லி, இறுதியில் அடிதடி, சோகம், பாசம் என கலவையில், குடும்பத்தின் அனைவருடைய அன்பை ஜெயித்து, குறிப்பாக பிடிவாத அப்பாவின் சம்மதம் வாங்கி திருமணம் முடிக்கிறார். படத்தின் பெயரே கதையின் சாரத்தைச் சொல்லும். வீரமான ஆண்மகன் காதலியின் கைப்பிடிப்பான்.

இந்த படம் வெளியிட்ட இடமெல்லாம், வெள்ளிவிழா. இப்பொழுதும், இந்த படத்தை சொன்னால், காதல் தேவதை கஜோல், அழகு நாயகன் சாருக்கான். என்னே அருமையான படம்! என சிலாகித்து பேசுகிறார்கள். இப்படி இந்த படத்தை தலையில் வைத்துக் கொண்டாடுகிற இந்தியாவில்...

இதே மாதிரி காதல். அதே சீன். காதலி வீட்டை விட்டு வந்துவிடுகிறேன் என சொல்ல... நாயகன் ஆறுதல் சொல்லி, வீட்டுக்கே போய், அப்பாவிடம் பெண் கேட்கிறார். அவர் தன் மகன் மற்றும் உறவினர்களோடு அந்த பையனின் வீட்டிற்கு தேடிப்போய், அந்த பையனை கடப்பாரையாலும், மம்மட்டியாலும் அடித்தே கொன்றுவிடுகிறார்கள். இது கடந்த வாரம் திருச்சியில் நடந்த உண்மை சம்பவம்.

ஏன் இவ்வளவு கொலைவெறி? வர்க்கமும், சாதியும் தான் முக்கிய காரணங்கள். தில்வாலேவில் ஏற்றுக்கொண்டதற்கு காரணம் - காதலன் - லண்டன் ரிட்டர்ன்! திருச்சி நாயகன் - கொத்தனார். தில்வாலேவில்... ஒரே சாதி. திருச்சி நாயகன் - தாழ்த்தப்பட்டவராக இருக்கலாம். ஏன் இருக்கலாம் என சொல்கிறேன் என்றால்.... பிற்படுத்தப்பட்டவராக இருந்தால், இவ்வளவு கொலைவெறி வராது. வீடேறி அடித்தே கொல்லப்பட வேண்டுமென்றால், சாதிதான் பிரதான காரணமாக இருக்கமுடியும்.

இன்று மார்க்ஸ் பிறந்தநாள்!


காரல் மார்க்ஸ் : இன்றைய காலத்திற்கேயுரிய வழிகாட்டி

இன்று மார்க்ஸ் பிறந்தநாள் - மே 5, 1813

ரசியாவிலும், சீனாவிலும் நிகழ்ந்த சோசலிச கட்டுமான வீழ்ச்சிக்குப் பிறகு, அவ்வளவு தான் மார்க்சியம் செத்துவிட்டது. இனி எழவே எழாது குதூகலிப்புடன் முதலாளித்துவம் பிரச்சாரத்தை பலமாக செய்தது.

இதோ! மேலை உலகம் இப்பொழுது மார்க்ஸ்-ன் மூலதனத்தை படிக்க கையில் எடுத்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. காரணம் - 1929 நிகழ்ந்த கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு, பொருளாதார சூதாடிகளால் (நிதி மூலதன கும்பல்களால்) உலகம் கடுமையான பொருளாதார பின்னடைவை சந்தித்திருக்கிறது.

உலக ரவுடி அமெரிக்கா, தன் தேசத்திலேயே 1.5 கோடி அமெரிக்கர்கள் அதாவது 10% மக்கள் வேலையில்லாமல், வீடில்லாமல் அல்லாடுகிறார்கள். உலகமய கொள்கை தவறு என பதவி ஏற்ற சமயத்தில் ஒபாமா தனது அறிக்கையின் வாயிலாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
மார்க்சியம் தோற்காது. ஏனென்றால் அது விஞ்ஞானம்.

May 2, 2009

வாக்காள‌ன்!


எங்க‌ள் தெருவின் முனையில்
அம்ம‌ன் கோவில் ஒன்று.
கோவிலென்று சொல்லிட‌ முடியாது
ஐந்த‌டி உய‌ர‌த் திண்டு ‍- ம‌த்தியில்
இரும்பாலான சூல‌ம் ஒன்று
மூன்று முனைக‌ளிலும்
மூன்று எலுமிச்ச‌ம்ப‌ழ‌ங்க‌ள்
'ப‌ழ‌ங்க‌ள்' என‌ சொல்லிட‌முடியாது
ச‌தைக‌ள‌ற்ற‌ வெறும் கூடுக‌ள்.

வைகாசி மாதம்
ஒரு மாலையில்
கூட்டம் கூடி, விவாதிக்கப்படும்.
அடுத்த வாரம் ‍ எல்.ஆர். ஈஸ்வரி
ஒலிபெருக்கியில் பக்தி பாடலால்
தூக்கம் கலைப்பார்
தெருக்களின் முனைகளில்
வேப்பிலைத் தோரணங்கள்
காற்றில் படபடக்கும்.

ஐந்தடி திண்டின் மேல் நேர்த்தியாக‌
கூரை மேயப்பட்டு .... அழகான‌
அம்மன் சிலை எழுந்தருளியிருக்கும்
பின்புறம் சூலம் நிற்கும்.

இளசுகள் வேலைகளில்
பம்ப‌ரமாய் ஈடுபடும்.
பெரிசுகள் கண்ணும் கருத்துமாய்
வசூலில் இருக்கும்.

முளைப்பாரி செழித்து வ‌ள‌ர‌
வார‌ம் முழுவ‌தும்
பெண்க‌ளும் குழ‌ந்தைக‌ளும்
தூக்க‌ம் தொலைத்து
வ‌ட்ட‌வ‌ட்ட‌மாய்
கும்மி கொட்டுவார்க‌ள்

ஏழாம் நாள் திருவிழா
வாழைத் தோர‌ண‌ங்க‌ள்
ம‌கிழ்ச்சியாய் வ‌ர‌வேற்கும்
பிரமாண்ட க‌ட் அவுட் அம்ம‌னுக்கு
யானைக‌ள் ப‌ல்புக‌ளான‌
வ‌ண்ண‌ பூக்க‌ள் அள்ளி வீசும்!

வ‌ண்ண‌ வண்ண‌ காகித‌ தோர‌ண‌ங்க‌ளால்
தெருவின் நிற‌ம் மாறி நிற்கும்
தெருவில் ஓடும் சாக்க‌டைக‌ள் - த‌ற்காலிக‌மாய்
ம‌ண் போட்டு ச‌ரிசெய்ய‌ப்ப‌டும்
விள‌க்குக‌ளால்
தெருக்க‌ள் பிர‌காசிக்கும்.

தீச்சட்டிகள், பால்குடங்கள்
சாரை சாரையாய் வரும்.
பக்தி பிரவாகத்தின் அதிர்வில்
உடல் நடுங்கும்

பாலாபிசேகம், சந்தனாபிசேகம்,
விதவிதமான அபிசேக‌ங்கள்
அம்மனை குளிப்பாட்டும்.
ஆடுகள், சேவல்கள்
பலியிடப்படும்.
பழைய வேண்டுதல்கள்
புதுப்பிக்கப்படும்.
புதிய வேண்டுதல்கள்
கோரப்படும்.

அலங்காரங்களுடனும்

ஆர்ப்பாட்டத்துடனும்
ஆட்டம் பாட்டங்களுடனும்
ஊர்வலமாய் போய் ஆற்றில்
முளைப்பாரி கரைக்கப்படும்.

மறுநாள் சிரிப்பு பட்டிமன்றம்
மறுநாள்
நவீன ரிக்கார்ட் டான்ஸ்
திரையுலக ஜாம்பவான்களின்
தளபதிகளின் போலிகள்
ஆட்டம் போடுவார்கள்.
மறுநாள் இன்னிசை நிகழ்ச்சி.

பரபரவென பத்துநாட்கள்
பறந்துவிடும்
ப‌தினோராம் நாளில்
திடீரென‌ தோன்றிய‌தெல்லாம்
காணாம‌ல் போகும்

இருப‌தாம் நாளில்
கோவிலின் க‌ரும்ப‌லகை
க‌ட‌ந்த‌ ஆண்டு கையிருப்பு ரூ. 840
வீடுக‌ள் மூல‌ம் வ‌சூல் ரூ. 364700
ந‌ன்கொடை மூல‌ம் ரூ. 115000
மொத்த‌ம் ரூ. 480540
அனைத்து செல‌வுக‌ள் ரூ. 480400
கையிருப்பு ரூ. 140 என
செய்தி அறிவிக்கும்.

மீண்டும்...அதே ஐந்த‌டி உய‌ர‌த்திண்டு
கொஞ்ச‌ம் இளைத்துப்போன‌
சூல‌ம்.
புதிய‌ மூன்று
எலும்பிச்சம் ப‌ழ‌ங்க‌ள் ‍- அதில்
கொஞ்ச‌ம் குங்குமம் என
வெயிலிலும், மழையிலும்
'அம்ம‌ன்' வ‌ருட‌ம் முழுவ‌துக்குமான‌
த‌ன் பய‌ண‌த்தைத் தொட‌ரும்!

****

தலைப்புக் குறித்த பின்குறிப்பு :

கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு தெருக்கோடி அம்மனும், 'ஜனநாயகத்தை'
காப்பாற்றும் பரிதாப வாக்காளனும் சமமாக தான் நடத்தப்படுகிறார்கள். நீங்கள்
என்ன சொல்கிறீர்கள்?