> குருத்து: June 2013

June 29, 2013

The Boy in the Striped Pyjamas - 2004 - அருமையான படம்! பாடம்!

life is beautiful, Schindler's List , The Pianist - நாஜிக்களின் வதை முகாம் பற்றிய படங்களில் இதுவும் முக்கிய படம் தான்

ஜெர்மனி. இரண்டாம் உலகப்போர் காலகட்டம். 9 வயது புரூனோ பள்ளி விட்டு சந்தோசமாய் நண்பர்களுடன் வீட்டை நோக்கி ஓடிவருகிறான்.  அப்பா இட்லரின் நாஜிப்படையில் ஒரு முக்கிய அதிகாரி.  பதவி உயர்வு கொடுத்து, வேறு ஊருக்கு மாற்றல் செய்யப்படுகிறார். பள்ளியை, நண்பர்களை விட்டு வர புரூனோவுக்கு மனம் வரவில்லை. அப்பா ஆறுதல் சொல்லி அழைத்துப்போகிறார்.

போனால், அது ஊருக்கு ஒதுக்குப்புறமான தனியான பங்களா. சுற்றிலும் வீடுகள் இல்லை. பள்ளி இல்லை.  புரூனோவின் அப்பா, புரூனோவிற்கும், அவனின் அக்காவிற்கும் வீட்டில் வந்து சொல்லித்தரும் ஒரு ஆசிரியரை ஏற்பாடு செய்கிறார்.  பள்ளி இல்லாமல், நண்பர்கள் இல்லாமல் அவனுக்கு எதுவும் பிடிக்கவேயில்லை. தனிமையில் வாடுகிறான்.

வீட்டை விட்டு கொஞ்சம் தள்ளி வேலியிடப்பட்ட நாஜிக்களின் வதைமுகாம் ஒன்று இருக்கிறது.  அங்கு சிறைப்பட்டிருக்கும் யூத மக்களுடன் ஒரு யூத சிறுவனும் வேலை செய்கிறான். அவனக்கும் புரூனோவின் வயது தான்.

வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் பின்பக்கமாக ஜன்னலேறி குதித்து, வெளியே செல்லும் புரூனோ முகாம் சிறுவனை எதைச்சையாக சந்திக்கிறான். தொடர்ச்சியாய் பேசி நெருங்குகிறார்கள்.  புரூனோ தின்பண்டங்கள் கொண்டு வந்து அவனுக்கு தருகிறான். நட்பு வளர்கிறது.

வீட்டில் ஒருவர் உதவியாளராக இருக்கிறார். அவர் ஒரு யூத டாக்டர். வீட்டிற்கு வரும் நாஜிஅதிகாரிகள் அவரை மிக மோசமாக நடத்துகிறார்கள்.  புரூனோ இதையெல்லாம் பார்க்கிறான்.  யூதர்கள் கெட்டவர்கள் அவர்கள் ஒழித்துக்கட்டப்பட வேண்டியவர்கள் என ஆசிரியர் பாடம் பயிற்றுவிக்கும் பொழுது, பரிதாபமான யூத மருத்துவரும், முகாம் நண்பனும் நினைவுக்கு வருகிறார். மனம் ஏற்க மறுக்கிறது.

முகாமில் தொடரும் யூத வதைகள், கொலைகள் புரூனோவின் அம்மாவிற்கு தெரியவர, அவள் பதட்டமாகிறாள். அங்கிருந்து சொந்த ஊருக்கு செல்ல கணவனை வற்புறுத்துகிறாள். கணவனோ மறுக்கிறான்.  தொடர்ந்து போராடுகிறாள்.

(வதை) முகாம்கள் யூதர்களை நல்லபடியாக தான் நடத்துகின்றன என்பதை உலகை நம்ப வைக்க (ராஜபக்சே சொல்லும் பொய்களை போல) ஒரு படம் எடுக்கிறார்கள். அந்த படம் பார்த்து புரூனோ சந்தோஷமடைகிறான். அம்மாவின் தொடர் வற்புறுத்தலால், புரூனோவின் அப்பா மூவரையும் ஜெர்மனுக்கே அனுப்ப முடிவு செய்கிறார்.

கிளம்புவதற்கு முதல்நாள், முகாம் நண்பன் தன் அப்பாவை காணவில்லை என கவலையுடன் தெரிவிக்கிறான். முகாமில் உடுத்தும் ஆடையை போல, எனக்கு ஒன்று நாளை எடுத்துவா! இருவரும் சேர்ந்து தேடலாம் என இருவரும் பேசிக்கொள்கிறார்கள்.

ஊருக்கும் கிளம்பும் நாள். கிளம்புவதற்கான பரபரப்பில், யாருக்கும் தெரியாமல் வெளியேறி நண்பனை சந்திக்க கிளம்புகிறான்.  வேலியை தாண்டி உள்ளே நுழையும் அவன், ஆடையை மாற்றிக்கொண்டு இருவரும் உள்ளே போகிறார்கள்.

அன்று கொல்வதற்காக கூட்டம் கூட்டமாக யூதர்களை நகர்த்தி ஒரு அறைக்கு கொண்டு செல்கிறார்கள். கூட்டத்திற்கு நடுவே இருவரும் மாட்டிக்கொள்கிறார்கள். இதற்கிடையில் புரூனோவை காணவில்லை என அனைவரும் தேட ஆரம்பிக்க, முகாமிற்குள் உள்ளே புகுந்ததை கண்டுபிடிக்கிறார்கள். வேகவேகமாய் உள்ளே வந்து பார்க்கும் பொழுது, எல்லாமும் முடிந்துவிடுகிறது.

இட்லர் வரலாற்றில் பல லட்சகணக்கான யூதர்களை கொன்றுகுவித்தான். அதன் ரத்த சாட்சிகளாய் நிறைய படங்கள், நாவல்கள் வெளிவந்திருக்கின்றன.  இன்னும் வரும்.  அப்படி எழுதப்பட்ட ஒரு நாவலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

வதை முகாமில் கூட்டம் கூட்டமாய் யூதர்களை கொன்று குவிக்கும் பொழுது, தன் பையனுக்காக அந்த அதிகாரி துடிக்கிற காட்சி எத்தனை முரண்!  உங்களுக்கு வந்தா ரத்தம்! எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா! என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

புரூனோவின் வழியே கதை பயணிப்பதால் வதை முகாம் சித்ரவதைகள் எதுவும் காண்பிக்கப்படவில்லை.  ஆனால், அதன் தீவிரத்தை படம் முழுவதும் நாம் உணரமுடியும். நாஜிக்களின் அதிகாரிகள், இளம் அதிகாரிகள் எல்லோரும் ஒருவித மன இறுக்கத்துடனே காணப்படுவார்கள்.

படத்தில் அனைவருமே அருமையாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக அந்த இரு சிறுவர்களும் இயல்பாக பொருந்தியிருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு எல்லாமும் பட்த்தின் சிறப்புக்கு உதவி செய்திருக்கின்றன.

படத்தில் ஒரு காட்சி.  முகாம் சிறுவன் வீட்டில் சாப்பாடு தட்டுக்களை சுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறான். புரூனோ அவனிடம் பேசிக்கொண்டிருக்கிறான். மேஜையில் தின்பண்டங்கள் நிறைய இருக்கும்.  வேண்டுமா என கேட்டு, புருனோ எடுத்துக்கொடுப்பான். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு நாஜி இளம் அதிகாரி திடீரென உள்ளே வந்து பார்த்துவிடுவான்.  திருடி தின்கிறாயா என மிரட்டுவான். புரூனோவை எனக்கு தெரியும் அவன் தான் கொடுத்தான் என்பான். புரூனோவோ பயத்தில் இவனை தெரியாது என சொல்லிவிடுவான். அந்த பையன் கடுமையாக தண்டிக்கப்படுவான்.

அடுத்த நாள் புரூனோ அவனை சந்திக்கும் பொழுது, பயத்தில் தெரியாது என சொல்லிவிட்டதற்காக மன்னிப்பு கேட்பான். அகதி என்றால் அவமானத்தை தாங்க பழகி கொள்ள வேண்டும் என்பான்.  உண்மையான வார்த்தைகள். ஈழத்தமிழ அகதிகள் கூட இங்கு தமிழ்நாட்டில் எத்தனையோ அவமானங்களை தாங்கித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 30 ஆண்டுகள் இங்கு குடியிருந்தால் கூட குடியுரிமை கிடைக்காது! எப்பொழுதும் சட்டவிரோத குடியேறிகள் தான். ஒரு குற்றப் பரம்பரையை போலத்தான் நடத்தப்படுகிறார்கள். அதனால், தான் உயிருக்கு துணிந்து ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்கிறார்கள்.

மற்றபடி, இந்த படங்கள் எல்லாம் இனத்தூய்மை, சாதித்தூய்மை பேசுபவர்களை எல்லாம் அரசியல் அரங்கில் இருந்து ஒழித்துக்கட்டவேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும் பாடங்கள். இதோ சிறுபான்மைகளை திட்டமிட்டு கொன்று குவித்த மோடி, இன்று பிரதம வேட்பாளராக முன்நிறுத்தப்படுகிறார்.  சாதித்தூய்மை பேசும் இராமதாசு அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களை சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்க முயல்கிறார். நாம் விரைந்து செயல்பட வேண்டிய காலமிது!

June 28, 2013

டாஸ்மார்க்கை வைக்க கூடாதுன்னு சொல்றவங்க தீவிரவாதிங்களா?

டாஸ்மார்க் புதிய கடையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்!

பல்லாவரம் புதுவை நகரில் மக்கள் குடியிருப்பு பகுதியில் டாஸ்மார்க் கடையை அரசு திறக்க இருக்கிறது.

அந்த பகுதியில் அருகே ஒரு ரேஷன் கடை இல்லை. நூலகம் இல்லை. இப்படி அத்தியாவசிய தேவைகள் எல்லாம் தூரம் தூரமாய் இருக்க டாஸ்மார்க்கை மட்டும் அக்கறையாய் மிக அருகில் கொண்டு வந்து வைக்கிறது அரசு.

ஏற்கனவே டாஸ்மார்க்கை இழுத்து மூடுவோம் என போராடிக்கொண்டிருக்கும் 'பெண்கள் விடுதலை முன்னணி' தோழர்களுடன் கைகோர்த்து அந்த பகுதி வாழ்மக்கள் தங்கள் போராட்டத்தை துவங்கியிருக்கிறார்கள்.

வெயில் அதிகம் என ஒரு சாமியானா பந்தல் போட்டு அமர்ந்தால், காவல்துறை "பந்தலை பிரித்துவிடுங்கள். இல்லையெனில் நடப்பதே வேறு!" வந்து மிரட்டுகிறது. கடை அங்கு வைத்தால், காவல்துறைக்கு வருமானம் கொட்டும் அல்லவா! அதற்கு தான் அவ்வளவு விசுவாசம்.

அந்த பகுதியில் போராடும் மக்களில் ஒரு வியாபாரியிடம், "நீங்க நக்சலைட்டுகளை எல்லாம் போராட துணைக்கு வைத்திருக்கிறீர்கள்" என பயமுறுத்தியதாம்.

போராடுகிற மக்களிடம் வந்து அதை பகிர்ந்து கொள்ளும் பொழுது..

உடனே அங்கிருந்த ஒரு நடுத்தர வயது அம்மா "குடும்பங்களை சீரழிக்கிற டாஸ்மார்க்கை வைக்கிற இவங்க நல்லவங்க! வைக்காதேன்னு போராடுற பெண்கள் விடுதலை முன்னணி தீவிரவாதிங்களா!" என பளிச்சென்னு பதில் சொன்னார்.

நேற்று இந்த போராட்ட செய்தி பல தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பினார்கள்.

குடியிருப்பு பகுதியில் டாஸ்மார்க்கை அனுமதிக்க மாட்டோம்னு போராடும் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். போராட்டம் வெற்றியடைய நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்!

June 23, 2013

முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்! - ‍பிரச்சார இயக்கம்


மத்திய மாநில அரசுகளே!

பணிநிரந்தரச் சட்டம், கான்டிராக்ட் முறை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமுல்படுத்து!

தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடு!

புதிய தொழிற்சங்கம் துவங்க விண்ணபித்த  நாட்களுக்குள் பதிவு செய்! முதலாளிகள் கையாளுகின்ற "ஒர்க்கர்ஸ் கமிட்டி' என்கிற சதியினை தடை செய்!

எல்லா தொழில்களிலும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 15000 நிர்ணயம் செய்!

பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், ஊதிய சமத்துவமும் வழங்கு!

தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்கிற மக்கள் விரோத மறுகாலனியாக்க கொள்கைகளை கைவிடு!

மக்களை உளவு பார்க்கும் ஆதார் அடையாள அட்டையை ரத்து செய்!

தோழர் அ. முகுந்தன்,
110/63, மாநகராட்சி வணிக வளாகம்,
என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 600 024.
பேச : 94448 34519

June 21, 2013

ம.க.இ.க குறித்து அவதூறு பிரச்சாரம் : இந்து முன்னணிக்கு கண்டனம்!

இந்துமுன்னணி அமைப்பு எங்களைக் குறித்து அவதூறுப் பிரசாரம் செய்து வருகிறது, இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று மக்கள் கலை இலக்கியக் கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று அந்த அமைப்பின் சார்பில் மக்கள் கலை இலக்கியக் கழக பொதுச்செயலர் மருதையன் வெளியிட்ட அறிக்கையில்,
மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற எமது அமைப்பு 1980 முதல் தமிழகத்தில் செயல்பட்டு வரும் பொதுவுடைமைப் பண்பாட்டு அமைப்பாகும். எமது செயல்பாடுகளும் புதிய கலாச்சாரம் என்ற எமது பத்திரிகையும், தமிழக மக்களும் எல்லா அரசியல் இயக்கங்களும் அறிந்தவை. எமது தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சமச்சீர் கல்விக்கான போராட்டத்தையும் தனியார் கல்விக் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தையும் தமிழகம் முழுவதும் நடத்தி வரும் அமைப்பு. விவசாயிகள் விடுதலை முன்னணி முல்லைப்பெரியார் போராட்டத்திற்கு மக்களை அணி திரட்டிய அமைப்பு.

எமது அமைப்பு சமூக மாற்றத்துக்காகவும் புரட்சிக்காகவும் போராடும் அமைப்பு. நக்சல்பாரி புரட்சியாளர்களைப் பற்றிய எமது நிலையை, அரசு ஒடுக்குமுறை பற்றிய எமது கண்டனத்தை எங்கள் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருகிறோம். இதை தமிழகமே அறியும்.

அவ்வாறிருக்கையில் எமது அமைப்பினைப் பற்றிய பொய்களையும், அவதூறுகளையும் இந்து முன்னணி கூறி வருகிறது. அதுவும், நாங்கள் இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் என்பதனால் இத்தகைய அவதூறுகளை இந்து முன்னணி நீண்ட நாட்களாகவே பரப்பி வருகிறது.

1993 இல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை நாங்கள் நடத்திய போது அதற்கு 90 இலட்சம் ரூபாய் பாகிஸ்தானிலிருந்து பணம் வந்தது என்று கூசாமல் பொய் பிரச்சாரம் செய்தது இந்து முன்னணி. பின்னர் சிதம்பரம் கோயிலின் சிற்றம்பலத்தில் தமிழ் பாடும் போராட்டத்தை நாங்கள் நடத்திய போதும், அக்கோயிலில் நடைபெறும் முறைகேடுகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைத்து அதனை அறநிலையத்துறை ஏற்க வழக்கு தொடுத்தபோதும், எமக்கு எதிர் அணியில் இருந்தது இந்து முன்னணி.

தற்போது அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்கள், பிறப்பின் காரணமாக அர்ச்சகராக முடியாமல் தடுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் நாங்கள்தான் வழக்காடுகிறோம். இறுதி விசாரணை நிலையில் உள்ள இந்த வழக்கில் மாணவர்களை அச்சுறுத்தி விரட்டும் பல நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் இன்று இந்து முன்னணி எங்களைக் குறித்து வெளியிட்ட அவதூறு அறிக்கை என்று சந்தேகிக்கிறோம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

- என்று கூறியுள்ளார்.

-தினமணி,  06, June 2013

June 19, 2013

தந்தீ!

'இது உங்கப்பா செத்துப்போய்ட்டாருன்னு உங்கம்மா கொடுத்த தந்தி!
இது உங்கம்மா செத்துப்போய்ட்டாங்க‌ன்னு உங்கப்பா கொடுத்த தந்தி!
குடும்பமே குளோஸ்'

- என அன்பேவா படத்தில் மனோரமாவை கலவரப்படுத்துவார் நாகேஸ்.

இத்தனை ஆண்டுகாலமாக, நமது துக்கத்தையும், மகிழ்ச்சியையும் நம் உறவுகளுக்கு கொண்டு சேர்ந்த 'தந்தி' நம்மிடமிருந்து ஜூலை 15 விடைபெற இருப்பதாக பி.எஸ்.என்.எல் இந்த மாதம் அறிவித்திருக்கிறது.

இப்பொழுது மின்னஞ்சலும், செல்பேசியும் தகவல் பரிமாற்றத்தை எளிதாக்கிவிட்டன. இதெல்லாம் இல்லாத காலத்தில், தந்தி தான் எல்லா தகவல்களையும் கொண்டு சேர்த்து நமக்கு உதவியது.

சொல்லத்தக்க சுவாரசியமான என்னுடைய தந்தி அனுபவம் என்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு, நண்பர்களுடன் இரவு படத்திற்கு போகும்பொழுது,  தோழியின் பிறந்தநாள் அடுத்த நாள் என‌ நினைவுக்கு வந்தது. வாழ்த்து அட்டை அனுப்புவதற்கு நாள்கள் இல்லாததால், போகிற போக்கில் ஒரு வாழ்த்து தந்தி அனுப்பிவிட்டு படத்திற்கு போய்விட்டேன்.

சில நாள்களுக்கு பிறகு, இன்னொரு தோழியை சந்தித்த பொழுது, "நீ அனுப்பிய தந்தி எவ்வளவு கலவரப்படுத்திவிட்டது தெரியுமா!  அந்த பகுதிக்கு தந்தி என வந்தால், யாராவது இறந்த செய்தி தான் வரும். உன் தந்தியை கேள்விப்பட்டதும், ஒரு அழுகை. பிறகு, 'வாழ்த்து செய்தி' என தெரிந்ததும், வாழ்த்து செய்தியை யாராவது தந்தி அனுப்புவார்களா! என அன்றைக்கு முழுவதும், அந்த பெண்ணுக்கு பிறந்தநாளில் ஒரே அர்ச்சனை! அனுப்பிய உனக்கும் அர்ச்சனை!" என்றார்.

இன்றைய தலைமுறைக்கு தந்தி குறித்த செய்திகள் ஆச்சரியமாக தான் இருக்கும். அன்றைக்கு இரவு, பகல், தூரம் பாராது அவசர செய்திகளை பல சிரமங்களை மேற்கொண்டு சேர்த்த தந்தி ஊழியர்களை இந்த நாளில் நாம் நன்றியுடன் நினைவுகூறவேண்டும்.

இந்தியாவில் இன்றைக்கும் கூட செல்பேசிகளும், இணையமும் நமது குக்கிராமங்களையும், பழங்குடி மழைவாழ் கிராமங்களையும் சேர்ந்திருக்க வாய்ப்பேயில்லை. தொலை தொடர்புகளில் கவனம் செலுத்துகிற தனியார் நிறுவனங்கள் நிறைய‌ கல்லா கட்டும் பெருநகரங்களிலும், நகரங்களிலும் தான் கவனம் செலுத்துகிறார்கள்.

இன்றைய அரசுக்கு 'சேவை' என்ற வார்த்தை பிடிக்காததாகி, 'லாப‍‍நட்ட கணக்கு' பார்க்கும் அரசாக மாறிவிட்டது. அதனால், அந்த மக்களுக்காக தந்தி சேவையை பாதுகாக்கவேண்டும். நம் அனைவரும் ஒரு தந்தி கொடுத்து நமது எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்.

June 16, 2013

அப்பாவின் நினைவாக!ஏட்டுக்குரிய தொந்தியுடனும்
ஏட்டுக்குரிய அசமந்தத்துடனும்
தோற்றம் கொண்டவர்.

அப்பா – அன்பான அப்பா
பிள்ளைகளை ஒருநாளும்
அடித்தவரில்லை.
வீட்டுல ஒரு (அம்மா) ஆள்
அடிச்சா போதும்! என்பார்.

அப்பா கைப்பிடித்து
நடக்கும் வேளைகளில்
நான் கேட்கும்
ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு
சளைக்காமல் பதில் சொல்வார்.

அம்மா படிக்காதவர்.
கைநாட்டாய்
இருக்கக்கூடாது என
கையெழுத்துப் போட – அம்மாவுக்கு
சொல்லிகொடுத்தவர்.
இப்பொழுதும் - மணியார்டரில்
அம்மா கையெழுத்தை
பார்க்கும் பொழுது
அப்பா நினைவுக்கு வருகிறார்.

அப்பா – கும்பகர்ணனுக்கு
தூரத்துச் சொந்தம்
ஆறு மாதம்
மிக சாதுவான மனிதராய்
உலாவருவார்.
வார்த்தைகளை எண்ணி
பேசுவார்.
மறு ஆறுமாதம்
அவரே - வலிந்து
பேசுவார், பாடுவார்

அப்பா - பாதி நாத்திகர்
கையெடுத்து சாமி
கும்பிட்டவரில்லை
அம்மாவின் வற்புறுத்தலால்
தன் வாழ்வின் இறுதிவரை
இடுப்பில் தாயத்தோடு திரிந்தவர்

அப்பா ஊர்சுற்றி
கட்டிய வேட்டி, சட்டை
ஒரு துண்டோடு
இரண்டு வருடத்திற்கொருமுறை
இரண்டுமாதம்
காணாமல் போய்விடுவார்

கடும் தலைவலி என சொல்லி
கோமாவில் விழுந்தார்
நினைவு திரும்பாமலே
உயிர் துறந்தார்.
மோசமான சிகிச்சையால்
தன் நோயிலிருந்து
விரைவில் விடுபட
அரசு மருத்துவமனை
அவருக்கு உதவி செய்தது.

நிறைய வருடங்கள்
உயிரோடு இருப்பார் என்ற
நம்பிக்கையில்
அப்பாவுடன் சண்டைகள் போட்டே
நாட்களை கடத்திவிட்டேன்.

இன்று
அப்பாவின் நினைவுநாள்
20.08.1999

அப்பாக்கள் தினமாம் நேற்று! இந்த நாட்கள் கடைப்பிடிப்பதில் எனக்கு அத்தனை அக்கறை இல்லை. சிலர் அப்பா குறித்த நினைவுகளை பகிர்ந்ததால், அப்பா குறித்த நினைவுகள் மேலெழும்பின. 5 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது இது! இப்பொழுது அப்பாவாக இருப்பதால், இன்னும் கொஞ்சம் கூடுதலாக சொல்லியிருக்கலாம் என தோன்றுகிறது.  :)

June 14, 2013

ஊத்தி சீரழிக்கிற கேடு கெட்ட அரசு!


இரண்டு நாள்களுக்கு முன்பு, ரயிலில் வந்துகொண்டிருந்தேன். மூன்று பெண் தோழர்கள் ரயிலில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியதை உங்களுடன் பகிர்கிறேன்.

****

அன்பார்ந்த பொதுமக்களே!

நாங்கள் புரட்சிகர பெண்கள் அமைப்பான 'பெண்கள் விடுதலை முன்னணி' அமைப்பிலிருந்து வருகிறோம்.

இந்த நாட்டுல குடிமக்களுக்கு நல்ல குடிநீர் தர அரசுக்கு கவலையில்லை.  எல்லா நோயும் தண்ணியில இருந்து வருவதால், நோய்க்கு பயந்துகிட்டு, கேன் தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கிறோம்!

பிள்ளைகளுக்கு கல்வி தரவேண்டியது அரசோட பொறுப்பு. தெருவுக்கு தெரு புற்றீசல் போல தனியார் பள்ளிகளை தொறக்கிறான். பல ஆயிரத்தை கட்டிட்டு, ஒரு ரசீது கூட தரமாட்டேன்கிறான்.  அரசு கல்வி கொடுக்குற பொறுப்பிலிருந்து கழண்டுகிடுச்சு!

உடம்புக்கு முடியலைன்னா அரசு மருத்துவமனை எதுவும் பக்கத்துல இல்ல!  தனியார் டாக்டரை பார்த்தா 200 ரூ. பீஸ். மருந்து மாத்திரை ரூ.200 க்கு எழுதிதர்றார். மருத்துவம் கொடுக்குற பொறுப்பும் அரசுக்கு இல்லை!

ஆனா, குடிமக்களுக்கு ஊத்திக்கொடுக்கிற வேலையை மட்டும் செய்ஞ்சா இந்த அரசு எவ்வளவு கேடு கெட்ட அரசு!

ஆக, மக்களோட அத்தனை அடிப்படை உரிமைகளையும் கண்டுக்காத அரசு ஊத்திக்கொடுக்குதுன்னா என்ன அர்த்தம்?

மக்கள் நிதானத்துல இருந்த மோசமான அரசை எதிர்த்து கேள்வி கேட்பான். தெருவுல இறங்கி போராடுவான்.  அதனால், மயக்கத்தில வைச்சிருந்தா தான் நமக்கு நல்லதுன்னு அரசு நினைக்குது!

மக்களை சீரழிக்கிற, போதையில் ஆழ்த்துகிற டாஸ்மார்க் கடைகளை இழுத்து மூடனும்!

அதற்காக போராடுகிற 'பெண்கள் விடுதலை முன்னணி' எடுத்திருக்கிற போராட்டத்தை ஆதரியுங்கள்!

காசு இல்லாதவனுக்கு ஒரு நீதி! இருப்பவனுக்கு ஒரு நீதி!

கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சென்னையில் நள்ளிரவில் ஒரு கோடிசுவர முதலாளி குடித்துவிட்டு, தாறுமாறாக வண்டியை ஓட்டி பேருந்து நிலைமேடையில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றினான். ஒரு சிறுவன் மோசமான காயத்தினால் செத்துபோனான். ஒரு சிறுமிக்கு கை முழுவதும் பாதிப்பு. இன்னும் சிலருக்கும் கடுமையான பாதிப்பு.

பாதிக்கப்பட்டவர்கள் ஓட்டிய முதலாளியை காவல்துறையிடம் பிடித்துக்கொடுத்தார்கள். அந்த முதலாளி குடும்பம் காவல்துறையை 'கவனித்த‌தும்' காரில் உடன் பயணித்த அவரிடம் வேலை செய்த‌ தொழிலாளி மீது வழக்கு போட்டனர். பிறகு, சில‌ போராட்டங்களுக்கு பிறகு, முதலாளி ஷாஜியை தப்பவிட்டது அம்பலமானது.

முன் ஜாமீன் கேட்டான். கிடைக்கவில்லை. காவல்துறையிடம் சிக்காமல் இருக்க‌ நாடு நாடாக ஓடிக்கொண்டிருந்தான்.  அவன் நிறுவன ஊழியர்களிடம், உறவினர்களிடம்  காவல்துறை விசாரணை செய்து கொண்டிருந்தது.  ஷாஜியின் அப்பா 'விசாரணை' செய்து தொந்தரவு செய்வதாக வழக்கு போட்டார்.

ஒரு வழியாக நேற்று ஷாஜி கொச்சின் வந்த பொழுது, காவல்துறை கைது செய்திருக்கிறது.

‍‍ இது ஒரு வழக்கு!

நேற்று சிரிபெரும்தூரில் பாணிப்பூரி விற்கும் ஒருவரின் பெண்ணை இளைஞர் ஒருவர் காதலித்து, அழைத்து சென்றுவிட்டார். கடத்தியதாய் காவல்துறை வழக்கு போட்டது.  காவல்துறை பையனின் அப்பாவையும், இன்னொரு சொந்தத்தையும் பிடித்து உள்ளே வைக்க, பயந்து போன பையன் பெண்ணை அப்பாவிடமே ஒப்படைத்துவிட்டார். காவல்நிலையம் செல்லவேண்டாம் என கேட்டுக்கொண்டனாம். பெண்ணை அழைத்துக்கொண்டு காவல்நிலையம் செல்வதை பார்த்த பையன் பயந்துபோய் பெட்ரோல் ஊத்தி எரித்து செத்தும் போனான்.

இது ஒரு காதல் விவகாரம்.  இதற்கே, அப்பாவையும் உறவினரையும் உள்ளே வைக்கிறார்கள்.

அந்த வழக்கிலோ ஒரு குடித்து விட்டு பொறுப்பில்லாமல் ஒரு பையனை கொன்று, பலரையும் கடுமையாக பாதிப்படைந்த விவகாரம்.

காசு இல்லாதவனுக்கு ஒரு நீதி! இருப்பவனுக்கு ஒரு நீதி!

தொடர்புடைய சுட்டிகள் :

ஆடம்பர கார்களின் வக்கிர கொலைகள்  - வினவு

June 12, 2013

ம.க.இ.க வெளியிட்டுள்ள 12-வது பாடல் ஒலிப்பேழை - முள்வேலி!
சில ஆண்டுகளுக்கு பிறகு,

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புதிய ஒலிப்பேழை! புதிய பண்பாட்டு ஆயுதம்!

இனி பட்டி தொட்டியெங்கும் துரோகிகளை அம்பலப்படுத்தும்! உழைக்கும் மக்களை புரட்சிகர அணியில் ஒன்றுப்படுத்தும்!

ம.க.இ.க வெளியிட்டுள்ள 12-வது பாடல் ஒலிப்பேழை!
-----------------முள்வேலி!---------------

ஈழத்தமிழர் பிரச்சனையின் மையப்புள்ளியை புரிந்து கொள்ள உதவும் பாடல் ஆவணம் என்றே சொல்லலாம்!

குறிப்பாக....

"காங்கிரஸ் என்றொரு கட்சி....
அவன் கருமாதி எழவுக்கு காலம் வந்தாச்சு...
வாய்ச்சானே மன்மோகன் சிங்கு
அவன் வாயத் தொறந்தாலே சுடுகாட்டு சங்கு
தமிழ் இனத்தையே எரித்திட்ட கங்கு
இவன் சோனியா சொன்ன ஆடும் கொரங்கு...

அமைதிப்படையின்னு நின்ன
கையில் அகப்பட்ட மக்களை புலியின்னு சொன்ன
வட்டமிட்டு தமிழ் பெண்ணை
கூடி வல்லுறவு பண்ணி இனத்தையே கொன்ன...
- என்று காங்கிரசை ஒழித்துகட்ட அறைகூவும் பாடல்...

மற்றும்...

"வைகோ, நெடுமா, சீமா.
கெளம்பிட்டாங்க டீமா...
ஊரறிய உங்களைத்தான் உள்ளே வச்சா
உங்க குருப்புல யாரத்தான் உட்டு வச்சா
ஈழமுன்னு சொன்னாலே கேசப்போட்டு கொன்னாலே
தின்ன களி வாசம் மறந்து போச்சா...
ஒன்ன நம்பி வரும் தமிழனுக்கு சொல்லு ராசா...

அன்று cm பதவிக்கு ராஜிவு பாடி
இன்று pm ஆக பாலச்சந்திரன் பாடி
ஆதரவு வேஷம் போட்டு எதிர்ப்புன்னு கோசம் போட்டு
ஈழ ஆதரவு வேஷம் போட்டு எதிர்ப்புன்னு கோசம் போட்டு
ஆட்டைய போடுது கன்னிங் லேடி
இதுக்கு ரூட்டு போட்டு தரான் நாலு தேங்கா மூடி.... "
-என்று தமிழினவாத பிழைப்பு வாதிகளை அம்பலப்படுத்தும் கேலியும், நையாண்டியும் நிறைந்த பாடல்... என்று மொத்தம் ஐந்து பாடல்களும் சிறப்பான பாடல்களாக வெளிவந்துள்ளது.

டிவிடி கிடைக்கும் இடங்கள்:
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
கீழைக்காற்று, 10, ஔலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2
தொலைபேசி – 044-2841 2367

புதிய கலாச்சாரம்
16, முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக்நகர்,
சென்னை – 600083

தொலைபேசி – 044 – 2371 8706, 99411 75876