> குருத்து: February 2014

February 28, 2014

காசு, புகழ் உள்ளவர்களுக்கு பரோல்! இல்லாதவனுக்கு மகள் செத்தால் கூட பரோல் இல்லை!

சினிமா நட்சத்திரங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் பரோல் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கும் மகாராஷ்டிர அரசு, ஏன் மற்றவர்களுக்கு அந்த சலுகையை வழங்க முன்வரவில்லை? என்று மும்பை நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு எதிரான வழக்கில், மற்றொரு குற்றவாளியான நாகுல் தனது மகள் இறப்புக்கு செல்ல அனுமதி கேட்டும் அதன் மீது நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
பரோல் கோரி நகுல் தாக்கல் செய்த மனு மும்பை உயர் நீதிமன்ற நாகபுரி கிளை நீதிமன்றத்தின் நீதிபதிகள் பூஷண் கவாய், அதுல் சந்துர்கர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை குறிப்பிட்ட நீதிபதிகள், "உயிரிழந்த தனது மகளை பார்ப்பதற்கு கூட பரோல் மறுக்கப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. உங்களுக்கு (அரசு) மனிதாபிமானம் கிடையாதா? அல்லது சினிமா நட்சத்திரங்களுக்கும் மட்டும்தான் மனிதாபிமான சலுகை பெறுவதற்கு தகுதி உண்டா?' என்று கேள்வி எழுப்பினர். 
பின்னர் நகுலுக்கு பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். முன்னதாக பரோல் கேட்டு நகுல் சார்பில் வழக்குரைஞர் மீர் நாக்மன் அலி ஆஜராகி வாதிடும்போது, "உயிரிழந்த தனது மகளைப் பார்ப்பதற்கு நகுல் பரோல் கேட்டு பிப்ரவரி 14ஆம் தேதி நாகபுரி மண்டல ஆணையரிடம் விண்ணப்பித்திருந்தார். 10 நாள்கள் ஆகியும் இதுவரை எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை' என்று குற்றம்சாட்டினார்.

- நன்றி : தினமணி 

February 20, 2014

தமிழக மக்கள் நடத்திய போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி!


தில்லைக் கோயில் மீட்பு மாநாடு - நக்கீரன்

தில்லைக் கோயிலை தீட்சிதர்களிடமே ஒப்படைத்து அநியாயத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்தச் சூழலில், தில்லைக் கோயில் மீட்பு ஆலயத் தீண்டாமை ஒழிப்பு மாநாடு ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளின் பங்கேற்புடன் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் கடந்த 16.02.2014 அன்று சிதம்பரத்தில் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக இம்மாநாட்டின் நோக்கத்தை விளக்கி சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் முழுக்க புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் பேருந்துப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், குடியிருப்புப் பிரச்சாரம், சுவரெழுத்துப் பிரச்சாரம் என விரிவான அளவில் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டனர்.
சிதம்பரம் நகரில் திரும்பிய பக்கமெல்லாம் விவாதத்தைத் தூண்டும் முழக்கங்களுடன் மாநாட்டு அறிவிப்பு சுவரெழுத்துக்கள் விரிவான அளவில் செயப்பட்டிருந்தன.
 ஜி.எம். வாண்டையார் மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு தலைமைமேற்றுப் பேசிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சி.ராஜூ, சாதித் தீண்டாமைக்கு எதிராகவும், ஆலயத் தீண்டாமைக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியத்தை விளக்கிப் பேசினார்.
 அடுத்து வாழ்த்துரை வழங்கிய, முன்னாள் இந்து சமய அறநிலையத்துறைய அமைச்சர்  வி.வி.சாமிநாதன், சோழர்கள் காலத்தில் கண்காணிப்பு சபை அமைக்கப்பட்டு அரசு கட்டுப்பாட்டில்தான் ஆலயங்கள் இருந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அவர், கனகசபையின் முன் நின்று தமிழில் பாடியதற்கான ஆதாரங்களை பட்டியலிட்டு, நடராசனுக்கும் சமஸ்கிருதத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை நிறுவினார்.
 அடுத்துப் பேசிய, அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர் சங்கத் தலைவர் மதியழகன், தில்லைக் கோயிலை அரசே ஏற்று நடத்துவதற்கேற்ப தனிச்சட்டத்தை இயற்ற வேண்டும்; அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கப்பட வேண்டும் என்றார்.
 சைவ சமய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியின் தலைமையாசிரியர் புலவர் மூ.சோக்கப்பன் பேசுகையில், அர்ச்சகர் பயிற்சி பெறும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு செமுறை பயிற்சியளிப்பதற்காக அரசு அனுமதியுடன் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றதையும், பார்ப்பனர் அல்லாதவர்கள் என்பதற்காகவே கோயிலுக்குள் நுழைய விடாமல் பார்ப்பனர்களால் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதையும் குறிப்பிட்ட அவர் ஆலயங்களில் பார்ப்பனர்கள் கடைபிடிக்கும் ஆலயத்தீண்டாமையின் பல்வேறு பரிமாணங்களை தம் சோந்த அனுபவத்திலிருந்து விளக்கினார்.
 இதனைத் தொடர்ந்துப் பேசிய, சிவனடியார் ஆறுமுகசாமி, தமிழ்ல பாடினா சாமி செத்துடும்னு சோல்றான் தீட்சிதன். தமிழ் தமிழ்னு பேசுறவனெல்லாம், தமிழ் அறிஞர்களெல்லாம் எங்கேப் போனான்? ஒரு தீட்சிதனையாவது கேள்விகேட்டானா? தமிழை இழிவுப்படுத்துற ஒரு தீட்சிதனையாவது அடிச்சானா? அயரை பார்த்து கிலி கொண்டு நிக்கிறான். தீட்சிதன் கழுத்தப்புடுச்சி தள்ளினாலும், தள்ளாடுற வயசுல நானே கனகசபை மேலேறி தமிழ்ல பாடுறேன். தமிழ்னு பேசுறவனெல்லாம் கீழே நின்னு கேட் கம்பியை புடிச்சிகிட்டே தேவாரம் பாடுறான். தீட்சிதன் சாபம் விட்ருவான்னு பயப்படுறான். வம்பு தும்புனு பன்னுனாதான் பிரச்சினை தீரும்" என்றார் அவர்.
 மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த மாங்குடி மோகன், கட்சி பேதமின்றி சிதம்பரம் கோயிலின் 4 வீதிகளிலும் முற்றுகைப்போராட்டம் நடத்தப்பட வேண்டும். அதுவே இறுதிப் போராட்டமாக இருக்க வேண்டும்" என்றார்.
 மாநாட்டு வாழ்த்துரைகளைத் தொடர்ந்து, மாநாட்டின் காலை அமர்வு தொடங்கியது. போராடிப் பெற்ற வழிபாட்டு உரிமையை பார்ப்பனியத்திடம் பறிகொடுப்பதா" என்ற தலைப்பில் பேசிய மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சென்னை மாவட்ட செயலர் தோழர் வாலசா வல்லவன், 1872 இல் ஆலயத்தில் நுழைய முயன்ற 2000 நாடார்கள் படுகொலை செயப்பட்டது; 1917இல் சிதம்பரம் கோயிலின் 4 ராஜவீதிகளிலும் தாழ்த்தப்பட்டோர்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றக்கோரி நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டம்; குத்தூசி குருசாமி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டம்; திருவண்ணாமலை கோயில் நுழைவுப் போராட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரமை பட்டியலிட்டு, இவ்வாறு போராடிப் பெற்ற உரிமையை மீண்டும் பார்ப்பனியத்திடம் பறிகொடுப்பதா என்றுக் கேள்வி எழுப்பிய அவர், நீதிமன்றத்தை மட்டுமே நாடியிருக்காமல் மக்கள் போராட்டமாக மாற்றப்பட வேண்டும் என்றார்.
 காலை அமர்வின் இறுதியாக உச்சிக்குடுமி மன்றத் தீர்ப்பும் தில்லைக் கோயில் மீட்பும்" என்றத் தலைப்பில் பேசிய, உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ரா.சகாதேவன், 1877 தொடங்கி இன்று வரையில் அதிகாரத் தாழ்வாரங்களில் முன்குடுமியைக் காட்டியே கீழ்த்தரமான முறையில் தீட்சிதர்கள் தமக்கு சாதகமான உத்தரவுகளை எவ்வாறெல்லாம் பெற்று வந்திருக்கின்றனர் என்பதை வரலாற்று ஆதாரங்களிலிருந்தும் இவ்வழக்கிற்காக தாம் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய சோந்த அனுபவத்திலிருந்தும் அம்பலப்படுத்திப் பேசினார். மேலும், இந்த வழக்கிற்காக நாங்கள் சட்டப்புத்தகத்தைப் பயன்படுத்தி வாதிட்டதைவிட பெரியாரின் எழுத்துக்களைத்தான் அதிகம் மேற்கோள்காட்டி வாதிட்டிருக்கிறோம்" என்ற அவர், இனி நீதிமன்றத்தை நம்பிப்பயனில்லை, ஒரு வழக்குரைஞராகவும் இந்த வழக்கில் வாதிட்ட அனுபவத்தி லிருந்தும் இதனைச் சோல்கிறேன். மக்கள் போராட்டங்களின் மூலம்தான் இந்த சமூகக் கொடுமைக்கு முடிவு கட்ட முடியும்." என்று அறைகூவி அமர்ந்தார் அவர்.
 விழுப்புரம்  தமிழர் நய்யாண்டி மேளத் தப்பாட்டக்குழுவின் அரங்கம் அதிரும் பறைமுழக்கத்தோடு தொடங்கியது மதிய அமர்வு. கோயில்கள் - மடங்கள் உள்ளிட்ட எல்லா மத நிறுவனங்களின் சோத்துக்களையும் மக்கள் உடமையாக்கு!" என்ற தலைப்பில் பேசிய ம.உ.பா.மையத்தின் மாநில துணைச் செயலர் வழக்குரைஞர் வாஞ்சிநாதன், அம்பானி, டாடா, பிர்லாக்களிடம் இருக்கும் சோத்துக்களின் மதிப்பையும் பத்மனாபா சுவாமி கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில், சாயிபாபா, சங்கர மடங்கள், மதுரை ஆதினங்களிடம் கோடிக்கணக்கில் செல்வங்கள் கொட்டிக் கிடப்பதையும் ஒப்பிட்டு பட்டியலிட்டார். இராஜராஜ சோழன் காலத்தில் மட்டும் 400 விதமான வரிகள் வசூலிக்கப்பட்டதை குறிப்பிட்ட அவர் இது போன்று மக்களிடமிருந்து வரியாகப் பறித்து சேர்த்தவைதான் இந்த கோயில் சோத்துக்கள் என்பதை ஆதாரங்களுடன் நிறுவினார். இந்தச் சோத்துக்களையெல்லாம் அரசின் உடமையாக்கப்பட வேண்டும் என்றார்.
 மதிய அமர்வின் இறுதியாக முதல் ஆலய நுழைவுப் போராளி நந்தனாரும் சாதித் தீண்டாமை ஒழிப்பும்" என்ற தலைப்பில் பேசிய ம.க.இ.க.வின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன், கி.பி.16ம் நூற்றாண்டில் முதன் முதலில் தில்லை மண்ணிலிருந்துதான் தீண்டாமைக்கெதிரான குரல் எழுந்திருக்கிறது. பார்ப்பன மனுநீதி கோலோச்சிய அந்தக் காலகட்டத்தில் கோபுர தரிசனத்தைத் தவிர வேறு உரிமையற்ற நந்தன் தன்னந்தனியாக தில்லைக்கோயிலுக்குள் நுழைந்தது சாதாரண விசயமில்லை. தமிழகத்திற்கு மட்டுமே உரிய மரபு இது. இத்தகையத் தீண்டாமை எதிர்ப்புப் பாரம்பரியம் கொண்ட தமிழகம் இன்று தீட்சிதனிடம் தோற்றிருக்கிறது. தமிழ் வழிபாட்டுரிமையை இழந்திருக்கிறது. இது வெட்கக்கேடு!" என்றார்.
 ஆலயத்தீண்டாமைக்கு முடிவு கட்ட வேண்டும்; நந்தன் நுழைந்த சிதம்பரம் கோயிலின் தெற்குவாயிலை அடைத்து நிற்கும் தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிய வேண்டும் என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள், மாநாட்டு அரங்கில் பலத்த கரவொலிகளுக்கிடையே நிறைவேற்றப்பட்டன.
 சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி பேரணிக்கு  அனுமதி வழங்க மறுத்துவிட்டது, சிதம்பரம் நகரப் போலீசு. மாநாடு நடைபெற்ற ஜி.எம்.வாண்டையார் மண்டபத்திலிருந்து பொதுக்கூட்டத் திடலான அனந்தீஸ்வரன் கோயில் தெருவை சென்றடைய இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். பயணக்களைப்பையோ, அரைநாள் அரங்கில் அமர்ந்திருந்த சோர்வையோ பொருட்படுத்தாமல், ஒருவர் பின் ஒருவரா அணிவகுத்துச் சென்றனர், தோழர்கள். இதனை, அறிவிக்கப்படாத பேரணி என்றே சோல்ல வேண்டும்.
 இதனைத் தொடர்ந்து, வி.வி.மு.வின் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர் தலைமையில் தொடங்கியது பொதுக்கூட்டம். தமிழையும் தமிழர்களையும் இழிவுப்படுத்தும் பார்ப்பனக் கும்பலை அம்பலப்படுத்திப் பேசினார் பு.ஜ.தொ.மு.வின் மாநிலப் பொதுச்செயலர் தோழர் கலை. மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துப்பிரிவு உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி ஆலயத் தீண்டாமைக்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார் பு.மா.இ.மு.வின் விழுப்புரம் மாவட்ட செயலர் தோழர் செல்வக்குமார்.


 நந்தனார் ஆவு மையத்தைச் சேர்ந்த தோழர் காவியச் செல்வன் பேசுகையில், ம.உ.பா.மையமும் அதன் ஒருங்கிணைப்பில் புரட்சிகர அமைப்புகள் பங்கேற்று நடத்தும் அனைத்துப் போராட்டங்களுக்கும் தமது ஆவு மையம் துணைநிற்கும் என்றார்.
 தில்லைக்கோயில் பிரச்சினைக்காக தி.க.வீரமணியும் தி.மு.க.வும் ஏன் வாதாட வில்லை எனக் கேள்வி எழுப்பிய சிதம்பரம் முன்னாள் நகர் மன்றத்தலைவர் வி.எம்.எஸ். சந்திர பாண்டியன், காவிரி பிரச்சினையில் கர்நாடாகவும், முல்லைப்பெரியாறு பிரச்சினையில் கேரளாவும், சோத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காத போது, நாம் மட்டும் இந்த உச்சுக்குடுமிமன்றத் தீர்ப்புக்கு ஏன் கட்டுப்பட வேண்டும் என்றுக் கேள்வி எழுப்பினார்.
 உழைக்கும் மக்களுக்கு எதிரானத் தீர்ப்பு என்றுச் சாடிய எழுத்தாளர் இமயம், எனது காலத்தில் ஏதாவது நன்மை செதுவிட்டு செல்கிறேன்" என்று தில்லைவழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பேசியதைக் குறிப்பிட்டு  பிறப்பின் அடிப்படையில் நீதிமுறை நடைபெறும் நிலையில் இத்தகைய நீதிமன்றங்கள் அவசியமா? என்றுக் கேள்வி எழுப்பினார்.
 பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு மட்டுமின்றி, மாநாடு நடைபெற்ற ஜி.எம்.வாண்டையார் மண்டப நிர்வாகிகளை மிரட்டிய சிதம்பரம் நகரப் போலீசின் அடாவடித்தனத்தை அம்பலப்படுத்திய ம.உ.பா.மை யத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜூ, மக்கள் போராட்டத்தின் மூலம் உச்சநீதிமன்றத்தீர்ப்பை செல்லாததாக்க வேண்டும் என்று அறைகூவினார்.
 சமூகம், இலக்கியம், இசை என பல்வேறு தளங்களிலும் தமிழகம் கண்டிருந்த பார்ப்பன எதிர்ப்பு மரபைப் பட்டியலிட்டுப் பேசிய ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழர் துரை.சண்முகம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போல சிறப்புப் புரோகித மண்டலங்களாக பார்ப்பன ஆதிக்கத்தின் கீழுள்ள கோயில்கள் மாறிவருவதையும், தமிழ்மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு பார்ப்பன மயமாக்கப்படும் அபாயத்தையும் அம்பலப்படுத்திப் பேசினார்.
 சோரணையற்றுக்கிடக்கும் தமிழனைத் தட்டியெழுப்பிய எப்ப உனக்கு சோரணை வரும்" என்ற பாடல்; தீட்சிதர்களை அம்பலப்படுத்திய சிவன் சோத்து குலநாசம்" என்ற பாடல்; தில்லானா மோகனாம்பாள் வைத்தி கதாபாத்திரத்துடன் சு.சாமியை ஒப்பிட்டுப் பாடிய சு.சாமி... சப்ளை அண்ட் சர்வீஸ்" என்ற பாடல்; நீதிமன்றத்தை அம்பலப்படுத்திய நீதிமன்றமா? பார்ப்பன சாதி மன்றமா?" என்ற பாடல்; மற்றும் தமிழகத்தை நெருங்கும் பார்ப்பன அபாயத்தை அறிவித்த நெருங்குதடா இருள் நெருங்குதடா.." பாடல் என பார்வையாளர்களின் உணர்வைத் தட்டியெழுப்பியது என ம.க.இ.க.வின் புரட்சிகர கலைநிகழ்ச்சி.
 தில்லைக்கோயிலை தீட்சிதனுக்கே பட்டா போட்டுக் கொடுத்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒருபுறம்; இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து அனைத்துக் கோயில்களும் விடுவிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கையை முன்வைக்கும் சு.சாமி மற்றும் இன்னபிற பார்ப்பனக் கும்பலின் கூப்பாடு மறுபுறம் என தமிழகத்தில் மீண்டும் பார்ப்பனக் கும்பல் தலையெடுக்கத்துணியும் இந்தப் பின்புலத்தில் அவற்றுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடைபெற்றுள்ள இம்மாநாடு, பார்ப்பனியத்தை எதிர்த்து வீழ்த்துவதற்கான நம்பிக்கையான தொடக்கம்.
 தோழர் மருதையன் தனது மாநாட்டு உரையில் சுட்டிக்காட்டியதைப் போல, இது கோயில் விவகாரம் அல்ல; அரசியல் ரீதியில் பாசிச அபாயத்தை எதிர்கொண்டிருக்கிறோம். திருப்பித் தாக்குவதொன்றுதான் நம் முன் உள்ள ஒரே வழி". தில்லைக் கோயில் மீட்பு ஆலயத் தீண்டாமை ஒழிப்பு மாநாடு உணர்த்தும் செய்தியும் அதுதான்!

 - இளங்கதிர்

February 14, 2014

இ;எஸ்.ஐ (ESI)- தொழிலாளியை தொல்லைப்படுத்துகிறது!

சமீபத்தில் ஒரு தொழிலாளி தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். 

கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  இ.எஸ்.ஐ. பணம் அவருடைய சம்பளத்திலிருந்து மாதந்தோறும் பிடிக்கப்பட்டு வருகிறது. அவர், அவருடைய துணைவியார், குழந்தை மூவருக்கும் ஹோமியோபதி மருத்துவம் பார்த்து வருகிறார்.  இ.எஸ். ஐ. பக்கம் போவதேயில்லை.  வயதான அம்மாவிற்காக தான் இ.எஸ்.ஐ யே அவர்களுக்கு பயன்படுகிறது

கடந்த 20 நாட்களுக்கு முன்பு, அவருடைய அம்மாவிற்கு சர்க்கரை அதிகமாகியும், வயிறும் வலித்து இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பெட்டில் சேர்த்து இருக்கிறார்கள்.  ஒரு வாரம் ஆகிறது.  வயிறு வலி எதனால் வருகிறது என கண்டுபிடிக்க்க, ஸ்கேன் எடுத்திருக்கிறார்கள்.  அதுவும் இ.எஸ்.ஐயில் இல்லாமல், மதுரை இராஜாஜி மருத்துவமனைக்கு போகச்சொல்லி எடுத்திருக்கிறார்கள்.  அதில் ஒன்றும் தெரியவில்லை. ஒரு வாரம் ஆகியும் வலியும் நிற்காததால், அட்வான்ஸ்டு ஸ்கேன் எடுக்க முடிவெடுத்து உள்ளனர்.  மீண்டும் ராஜாஜி மருத்துவமனையில் எடுக்க வேண்டுமென்றால் 12 நாட்கள் கழித்து தான் அப்பாயிண்ட்மெண்ட் தருகிறார்கள். அதனால், வெளியே தனியாரில் எடுக்க வேண்டுமென்றால், இ.எஸ்.ஐ யிலிருந்து தகுதி சான்றிதழ் (Eligible Certificate) வாங்கித்தர கேட்டிருக்கிறார்கள்.

தொழிலாளி அந்த சான்றிதழை கேட்க போக, கடந்த மே 2013 லிருந்து உங்க முதலாளி இ.எஸ்.ஐக்கு பணம் கட்டவில்லை.  அதனால், சான்றிதழ் தரமுடியாது என சொல்லியிருக்கிறார்கள். இஎஸ்.ஐ இப்படி சொல்வதை முதலாளியிடம் போய் கேட்டிருக்கிறார். அவரும் உடனே பணத்தைக் கட்டுவதாக சொன்னவர், இன்றைக்கு வரைக்கும் பணம் கட்டவில்லையாம்.  இப்பொழுது அவருடைய அம்மா மதுரை இராஜாஜி மருத்துவமனையில் 12 நாட்கள் கழித்து ஸ்கேன் எடுக்க வயிற்றுவலியுடன் காத்திருக்கிறார். 

இ.எஸ்.ஐ. தலைமை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம் வரை எங்க முதலாளி மாதம் மாதம் சரியாக என் சம்பளத்திலிருந்து பணம் பிடித்துவிட்டார்.  மாதம் மாதம் முதலாளி பணம் கட்டிவிட்டாரா என சோதிப்பது ஒரு தொழிலாளிக்கு சாத்தியமானதா! அவரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது உங்கள் வேலை இல்லையா! என கேட்டதற்கு, பணம் கட்டச்சொல்லி உங்க முதலாளியிடம் கேளுங்கள்! என சொல்லி போனை கட் பண்ணிவிட்டார்களாம்.

தொழிலாளர்களின் மருத்துவ பாதுகாப்பிற்காக என இ.எஸ்.ஐ.யை உருவாக்கினார்கள்.  அவர்களுக்கு வேலை முதலாளிகளை கண்காணித்து, தொடர்ந்து பணம் கட்டுகிறார்களா என சோதிப்பதும், தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சையை உத்தரவாதப்படுத்துவதும் தான்!  பணத்தை தொடர்ச்சியாக கட்டாத சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஒரு நோட்டீசு அனுப்பினால் பாதி முதலாளிகள் கட்டிவிடுவார்கள். மீதி கட்டாத நபர்களிடம் அவர்களுடைய வங்கி கணக்கிலிருந்து அவர்களுடைய அனுமதி இல்லாமலேயே பணம் எடுப்பதற்கு இ.எஸ்.ஐக்கு அதிகாரம் இருக்கிறது!  ஆக, இ.எஸ்.ஐ. முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளிகளுக்கு விரோதமாகவும் இருந்து வருவது அப்பட்டமாகிறது!

February 11, 2014

பெப்சி குடித்து சிறுமி துடிதுடித்து மரணம்!

நெய்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஞாயிறு இரவு ஒரு தொழிலாளி தன் குடும்பத்தினருக்காக ஒரு அரை லிட்டர் பெப்சி பாட்டிலை வாங்கி கொண்டு போய், தன் நான்கு பிள்ளைகளுக்கு தருகிறார்.  குடித்த சில நிமிடங்களில் கடுமையாக வயிறு வலித்தும், வாந்தி எடுத்தும் பெற்றோர்களின் கண்ணெதிரே சுரண்டு விழுகிறார்கள்.

மருத்துவமனையில் சேர்த்தும் 8 வயதான அபிராமி இறந்துபோகிறாள்.  10 வயது லலிதா உயிருக்கு போராடுகிறார்.  மற்ற இரண்டு குழந்தைகளும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்கள்.

உடனடியாக, அரசு நிர்வாகம் ‘சுறுசுறுப்பாகி’ பெப்சி விற்ற கடைக்காரரை சிறைக்குள் தள்ளிவிட்டது.  உணவு கட்டுப்பாட்டு அதிகாரி சுத்துப்பட்டு கடையில் உள்ள குளிர்பானங்களை கைப்பற்றிவிட்டார்.  வீட்டில் குடித்துவிட்டு மிச்சம் வைத்திருந்த பெப்சி பாட்டிலை சோதனைக்கு அனுப்பி இருக்கிறார்கள். சோதனையின் முடிவு வந்த பிறகு, நடவடிக்கை எடுப்பார்களாம்.  இப்பொழுது தமிழகம் தழுவிய அளவில் காலாவதியாகி போன பொருட்களை, கலப்பட பொருட்களை கைப்பற்ற சுறுசுறுப்பாக இயங்கி, கல்லா கட்ட தயாராகிவிட்டார்கள்.

பெப்சி, கோக் வகைகள் குறித்து பல சமயங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.  இருப்பினும் தங்களது பணபலத்தாலும், அரசியல் பலத்தாலும் எல்லாவற்றையும் சரிகட்டுகிறார்கள். இந்த சாவு பெப்சியினாலேயே இருந்தாலும் கூட அதிகார வர்க்கத்தினரை கைக்குள் போட்டுக்கொண்டு, லஞ்சத்தால் அடித்து, தங்களை காப்பாற்றிக்கொள்வார்கள். நாம் ஒன்றிணைந்து இவர்களை இந்த மண்ணிலிருந்து விரட்டும் வரை, அரசும், அதிகார வர்க்கமும், இவர்களை காப்பாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

இதே போல, 2004ஆம் ஆண்டு, ஒரு தனியார் பள்ளியில் தீப்பற்றி காற்றோட்டம் இல்லாமலும், தகுந்த தப்பிக்கும் வழிகள் இல்லாமலும் 94 குழந்தைகள் கும்பகோணத்தில் கொல்லப்பட்டார்கள். அதற்கு பிறகு, அரசு சுறுசுறுப்பாகி, பள்ளியென்றால், இவ்வளவு இடம் வேண்டும். இன்னின்ன வசதிகள் வேண்டும் என விதிமுறைகளை உருவாக்கியது.  கடந்த வாரம் வந்த செய்தி, அதிர்ச்சியாக இருந்தது.  தனியார் பள்ளிகள், இப்பொழுது நிலத்தின் விலை எல்லாம் எகிறிவிட்டது. அதனால், அரசு விதிமுறைகள்ப்படி பள்ளிகள் கட்டுவது இயலாத காரியம். அதனால், விதிகளை தளர்த்த வேண்டும் என உயர்நீதிமன்றத்திற்கு போனார்கள். இப்பொழுது அரசும் இந்த ‘நியாய கோரிக்கையை’ ஏற்று, விதிகளை தளர்த்த தயாராகிவிட்டது.  அப்பொழுது, குழந்தைகளின் கதி என்னவாகும்? நாம் கும்பகோணத்தை மறந்துவிட்டோம்! அவர்கள் நமது மறதியில் வாழ்கிறார்கள்.

February 3, 2014

காலத்தை வென்ற கையூர்த் தோழர்கள்! - நினைவுகள் அழிவதில்லை!

காதலுக்காகத் தியாகம் செய்த காவிய நாயகர்களுண்டு. போரில் எதிரிகளைத் கொன்றொழித்து மாண்ட வீரர்களுண்டு. மதத்தைக் காப்பதற்குத் தீப்புகுந்து மாண்ட துறவியர்கள் உண்டு. தாய்நாட்டை,தாய்மொழியைக் காக்கும் விடுதலைப் போரில் ஈடுபட்டு, சிறைசென்று தூக்குமேடை ஏறிய வீரத்தியாகிகளுண்டு. ஆனால் 'அடிமைப்பட்ட பாரதத்தின் இருளடைந்த கேரளத்தில்' உழவர்களின் உரிமைகளுக்காக உழைக்கும் மக்களை அணிதிரட்டிப் போராடிப் பச்சிளம் வயதிலேயே தூக்குமேடை ஏறிய மடத்தில் அப்பு, அபுபக்கர், சிருகண்டன்,குஞ்ஞம்பு நாயர் ஆகிய நால்வரின் தியாகம் முற்றிலும் வேறுபட்டது.அவர்களின் தியாகத்தின் பின்னே ஏழை எளிய மக்களின் ஏக்கங்கள் நிரம்பியிருந்தன. அபிலாசைகள் நிறைந்திருந்தன, உரிமை முழக்கங்கள் அடங்கியிருந்தன. உழைப்பாளிகளின் ஜனநாயக வேட்கைகள் ததும்பி வழிந்தன.

பசிப்பிணியும், வறுமைத்துயரமும் மொழி கடந்து , நாடுகள் கடந்து அது உலகமெங்கும் நிறைந்திருக்கின்ற இருளாகும். அந்த இருளை விரட்ட இந்நால்வரும் தங்கள் தலைகளை விலைகளாகத் தந்தனர். தூக்குமேடையேறிய இவர்களின் தியாகம் இலக்கியமாகி, மொழி கடந்த பயணத்தை மேற்கொண்டு காலத்தையும் வென்று நிற்கிறது.

இன்றைய கேரள மாநிலம் (அன்றைய 'சென்னை ராஜதானி') காசர்கோடு வட்டத்தில் 1938-1944 ஆம் ஆண்டுகளில் எழுச்சிபெற்ற உழவர் போராட்டத்தில் பூத்துக் செழித்தவர்கள்தான் மடத்தில் அப்பு. அபுபக்கர், சிருகண்டன்,குஞ்ஞம்பு நாயர் ஆகிய இளந்தளிகள் , 1941 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதியன்று நடைபெற்ற விவசாயிகள் ஊர்வலத்தை இவர்கள் வழிநடத்திச் சென்றபோது 'ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்திய போலீஸ் கான்ஸ்டபிளோடு அந்த ஊர்வலம் கைகலந்தது. அதன் விளைவாக அந்தப் போலீச்காரன் உயிர் துறந்தான்.

அந்தப் போலீஸ்காரனை அடித்துக் கொன்றவர்கள் இந்தக் கோர்ட்டின் முன் இல்லாமல் இருக்கலாம். ஆயினும் அவனுடைய மரணத்திற்கு இவர்களும்தான் பொறுப்பாளிகள் என்று கூறி செஷன்ஸ் ஜட்ஜ்,அவர்களுக்கு தூக்குதண்டனை விதித்தார். சென்னை உயர்நீதிமன்றமும் அந்த்த் தண்டனையை ஊர்ஜிதம் செய்தது.

இந்நால்வர் தூக்குமேடை ஏறக் காரணமாக இருந்த விவசாய இயக்கத் கதையைக் கன்னடத்தின் புகழ்மிக்க எழுத்தாளர் நிரஞ்சனா கன்னட மொழியில் 1955 இல் 'சிரஸ்மரணா' எனும் பெயரில் புதின இலக்கியத்தில் பதியம் செய்தார். மலையாள மண்ணில் மலையாள மொழியில் நடந்த கதை முதன் முதலாக மொழி கடந்து கன்னடத்தைக் பற்றி உலுக்கியது. கதைக்களமான கையூர் கேரளத்தின் வடமேற்குக் கடைகோடியில், கர்நாடாகத்தின் தெற்கு எல்லையிலும் அமைந்த ஊர்.

கன்னடத்திலிருந்து மலையாளத்திற்குப் போய் மலையாளத்திலிருந்து தமிழில் இந்திராவின் நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் போது தலைமறைவு நாட்களில் பி.ஆர்.பரமேஸ்வரன் மொழிபெயர்த்தார்.

நினைவுகள் அழிவதில்லை எனும் பெயரில் 1977 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக தமிழில் வெளிவந்தது.

- நிரஞ்சனா
தமிழில்  : பி.ஆர்.பரமேஸ்வரன்
 

சவுத் விஷன் வெளியீடு    
விலை ரூ 40   

கிடைக்குமிடம் : 
கீழைக்காற்று
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.


நன்றி : புத்தகப்பிரியன்