மோடி எட்டு ஆண்டுகளில் செய்த ”சாதனையை” மக்கள் வரிப் பணத்திலேயே ஏகப்பட்ட பணத்தை செலவழித்து, பிரச்சாரம் செய்கிறார்கள். 2024 மக்களவை தேர்தலுக்கு தயாராக காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டார்கள். நாம் எப்படி சும்மா இருக்கமுடியும். நம்ம பங்குக்கு நாம் எட்டு ஆண்டு “சாதனையை” சொல்லவேண்டியது காலத்தின் அவசியமாகிறது.
June 14, 2022
8 வருடத்தில் மோடி உடைத்த பர்னிச்சர்கள்
மோடி எட்டு ஆண்டுகளில் செய்த ”சாதனையை” மக்கள் வரிப் பணத்திலேயே ஏகப்பட்ட பணத்தை செலவழித்து, பிரச்சாரம் செய்கிறார்கள். 2024 மக்களவை தேர்தலுக்கு தயாராக காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டார்கள். நாம் எப்படி சும்மா இருக்கமுடியும். நம்ம பங்குக்கு நாம் எட்டு ஆண்டு “சாதனையை” சொல்லவேண்டியது காலத்தின் அவசியமாகிறது.
April 17, 2022
மோடியின் நண்பராய் இருந்தால் பில்லினியர்களாகிறார்கள்
மோடியின் நண்பராய் இருந்தால் பில்லினியர்களாகிறார்கள்
April 14, 2022
ஒரு ஜி.எஸ்.டி அதிகாரியின் அனுபவம்!
உங்களுக்கு பணம் வரலைன்னு என்னைய பிளாக் பண்ணிட்டிங்க. எனக்கு பணம் வரலைன்னு நான் என்னோட கஸ்டமருங்கல பிளாக் பண்ண முடியுமா?
*****
ஒரே நாடு, ஒரே வரி என்ற கோஷத்துடன் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பானது இந்தியாவின் தேசிய தொழில்கள் அனைத்தையும் முடக்கியது.
கோடிக்கணக்கான மக்கள் பங்கெடுக்கும் சிறு, குறு தொழில்களை நாசமாக்கியது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு வருவதற்கு உகந்த வகையில் சில்லறை வர்த்தகர்கள் மீது கடும் வரிகளை விதிப்பதன் மூலம் தானாகவே சிறு கடைகளை மூடுவதற்கு வழிவகுத்தது.
அத்தனை கொடூரங்களையும் உள்ளடக்கிய ஜிஎஸ்டி வரி பற்றி அதனுடன் நேரடியாக பரிச்சயமான ஒருவரின் ரத்த சாட்சி இதோ!
000
ஜி.எஸ்.டி என்பது சின்ன சின்ன தொழில் செய்பவர்களை தொழிலிருந்து விரட்டுகிறது. ஒவ்வொரு மாதமும் பில் போடுகிறார்கள். அடுத்த மாதமே 20தேதிக்குள் கட்டச்சொல்லி ஜி.எஸ்.டி சொல்கிறது. இல்லையெனில் சரக்கை கொண்டு செல்லும் இ வே பில்லை (E waya Bill) ஜி.எஸ்.டி முடக்குகிறது.. மீறி பொருளை எடுத்துச்செல்லும் பொழுது, அதிகாரிகளிடம் மாட்டினால், இரண்டு மடங்கு அபராதம் செலுத்தவேண்டும். இல்லையெனில் அதிகாரிகளை கணிசமாக கவனிக்கவேண்டும்.
ஆனால், அந்த முதலாளிக்கு பில் போட்டதற்கான பணம் ஒவ்வொரு கிளைண்ட்டுக்கு ஏற்ப ஒரு மாதமோ, இரண்டு மாதமோ, அதிகப்பட்சம் நான்கு மாதங்கள், ஐந்து மாதங்கள் கூட தராமல் இழுத்தடிக்கிறார்கள். இதைச் செய்வது சிறுமுதலாளிகள் அல்ல! பெரும் முதலாளிகள்.
ஆகையால், சம்பந்தப்பட்ட சிறுமுதலாளியின் தொழிலை நடத்தி செல்வதற்கான மூலதனம் (Working Capital) கடுமையாக அடிவாங்குகிறது.
விளைவு. துவக்கத்தில் வட்டிக்கு கடனை வாங்கி சமாளிக்கிறார். முன்பை போல இல்லாமல், தொழிலில் இலாபமும் வெகுவாக குறைந்திருக்கிறது. ஓடுகிற வரை இந்த ஓட்டம் ஓடி, ஒரு நாளில் தொழில் படுத்துவிடுகிறது.
அந்த சிறுமுதலாளியின் சிரமம் பற்றிய எந்த கவலையும் இன்றி ஒவ்வொரு மாதமும் இத்தனை கோடிகள் வசூலனாது என்பதை பெருமையாக அறிவித்துக்கொண்டு இருக்கிறது அரசு.
ஒரு ஜி.எஸ்.டி அதிகாரியின் அனுபவம்
அலுவலகத்திற்கு இன்று நண்பகல் ஒரு Tax payer வந்தார். 50 வயதைக் கடந்தவர். உடன் ஒரு இளைஞர். வரி நிலுவையில் இருந்ததால் அவரது நிறுவனத்தின் GST பதிவை ரத்து செய்துவிட்டோம். வரித்தொகையை வசூலிப்பதற்காக அவருடைய வங்கி கணக்கையும் முடக்கி விட்டோம். நிலுவை வரியை வட்டியோடு செலுத்தினால் (தாமதமாக ரிடர்ன் file செய்வதற்கு late fee தனி) மட்டுமே வங்கிக் கணக்கை விடுவிப்போம். எல்லாம் மொத்தமாக லட்சங்களில் இருந்தது. தொகையை செலுத்திய ரசீதுகளை எடுத்துக்கொண்டு அலுவலகம் வந்திருந்தார்.
அவருடைய பேச்சிலிருந்து தொழிலைத் தவிர GST சம்மந்தமாக வேறொன்றையும் அறியாதவர் என்பது விளங்கியது. ரிடர்ன் file செய்வது எல்லாம் உடன் வந்த அவரது உறவுக்கார பையன். அந்த மனிதர் அங்கிருப்பதை அருவருப்பாக உணர்ந்தார் என்று சொல்ல முடியும். அவர் என்னை வெறுத்தார். என் மேசையில் இருந்த கோப்புகள், கணிப்பொறி, ஸ்டேஷ்னரிகளை வெறுத்தார், என் அலுவலகத்தை வெறுத்தார், என் துறையை வெறுத்தார். அவர் அங்கே இருந்தார், ஆனால் இல்லை. எல்லாம் அவர் உடல்மொழியில் விளங்கியது.
நான் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து அந்தப் பையனுடன் மட்டுமே பேசினேன். “ரிடர்ன்ஸ் எல்லாம் பெண்டிங் வைக்காம அப்பப்போ கட்டியிருந்தா, இவ்வளவு தொல்லை இருக்காதில்லையா ?” என்று எவ்வளவு கரிசனத்தோடு கூற முடியுமா அவ்வளவோடும் கூறினேன். கேள்வியாக அல்ல. ஒரு அறிவுரையாக. அந்த மனிதர் “சப்ளை பண்றோம். வாங்குன கம்பெனி பணம் போட்டா நாங்களும் பணம் கட்டிருவோம். உங்களுக்கு பணம் வரலைன்னு என்னைய பிளாக் பண்ணிட்டிங்க. எனக்கு பணம் வரலைன்னு நான் என்னோட கஸ்டமருங்கல பிளாக் பண்ண முடியுமா? பண்ணா நான் தொழில் பண்ண முடியுமா?” என்று உச்சமாக குரல் எழுந்து, நான்கு வரியை பேசுவதற்குள் வாய் கோணி அழும் நிலைக்கு போய்விட்டார்.
உடன் வந்திருந்த பையன் “தப்பா நினைச்சுக்காதிங்க சார். அடுத்த வாரம் அவர் பொண்ணுக்கு கல்யாணம். நகைக்கு வச்சிருந்த காச எடுத்து சலான் கட்டி எடுத்து வர்றோம்” என்றார். பெரும் பெரும் பாவங்கள் என் தலையில் வந்து இறங்குவதைப் போல் சிறுமையாக உணர்ந்தேன். அதைக் கேட்டதிலிருந்து பதட்டமாக இருந்தது.
“இவர் வரி கட்டவில்லை, இவரது வங்கிக் கணக்கை முடக்குங்கள்” என்று propose செய்பவர் ஒரு அலுவலர். அதை பரிசீலனை செய்து நான் என் உயர் அதிகாரிக்கு பரிந்துரை செய்வேன். அவர் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பி முடக்குவார். சம்மந்தப்பட்டவர் நிலுவைத் தொகையை செலுத்திவிட்டு எங்களிடம் வந்தால் மீண்டும் அதே நடைமுறைதான். Propose செய்தவர் ரசீதுகளை சரி பார்த்து எனக்கு ரிப்போர்ட் அனுப்ப வேண்டும். நான் என் உயர் அதிகாரிக்கு அதன் பேரில் பரிந்துரை செய்வேன். அவர் நோட்டீஸை திரும்பப் பெறுவார். அரசு அலுவலக நடைமுறைகளை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. எல்லாம் standard operating procedures. அவரது பணியை நான் செய்ய முடியாது. என் பணியை அவர் செய்ய முடியாது.
வழக்கமாக இப்படி முடக்கப்பட்ட கணக்குகள் எல்லாம் சரியாக இருந்தால் மீட்பதற்கு இரண்டு நாட்கள் ஆகும். நாளையிலிருந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் என் உயர் அதிகாரி மதிய உணவு முடிந்ததும் சொந்த ஊருக்குக் கிளம்ப இருந்தார். அவரை பொறுக்க சொல்லிவிட்டு , range officer இருந்த தளத்திற்குச் சென்று , ரசீதுகளை நானே சரிபார்த்து , அவர் தர வேண்டிய ரிபோர்ட்டை நானே தட்டச்சு செய்து அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு, என் சீட்டிற்கு வந்து நோட்டீஸை திரும்பப் பெரும் தபாலை தயார் செய்து உயர் அதிகாரியிடம் கையெழுத்து வாங்கிவிட்டேன். மற்றொரு பிரிச்சனை அலுவலக தபால்களை Register post ல் தான் அனுப்புவார்கள் ( அது வேறு பிரிவு). இன்று அனுப்பினால் என்று போகுமோ (சென்னை கிளை) . அதனால் வங்கி மேலாளருக்கு போன் செய்து மெயில் அனுப்புகிறேன், பின்னால் தபால் வருகிறது என்று பேசி சம்மதம் வாங்கி , இரண்டு மணி நேரங்களில் கணக்கை மீட்டுக் கொடுத்துவிட்டேன். கரிசனம் ஏற்படுவதற்காக சொல்லவில்லை. எல்லாம் சுபமாக முடிந்த பிறகுதான் நான் மதிய உணவு சாப்பிடவில்லை என்பது உரைத்தது. நேரம் கடந்து விட்டதால் அதற்கு மேல் சாப்பிடவும் தோன்றவில்லை.
இடையில் மலைபோல் குவிந்து விட்ட என் வழமையான வேலைகளை முடித்து வீடு திரும்புவதற்கு இரவு பத்து ஆகிவிட்டது. ஒரே நாளில் அவமானமாகவும் ஆசுவாசமாகவும் உணர்ந்தேன். இப்படி எத்தனை பேருடைய துன்பங்களுக்கு நான் காரணமாக இருந்திருப்பேனோ என்று நினைக்கும்பொழுது மனதில் சன்னமான ஓலம் எழுகிறது. மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டுத்தான் இந்த வேலையை செய்ய வேண்டியிருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெற்று விட வேண்டும் என்று துடிப்பாக இருக்கிறது.
April 9, 2022
2022 - 2023 நிதியாண்டும் சில ஆலோசனைகளும்!
இந்தியாவைப் பொருத்தவரை ஏப்ரல் 1 என்பது ஒரு நிதியாண்டில் முதல் நாள் என்பதால் இதனை நிதிப் புத்தாண்டு என்று கூறலாம்.
ஒரு நிதியாண்டில் நீங்கள் செய்ய வேண்டிய நிதித் திட்டங்களை இந்த முதல் நாளில் வகுத்துக்கொண்டு செயல்படும்போது மிகச்சிறந்த நிதி வெற்றியைப் பெற முடியும்.
December 4, 2018
தற்கொலைகளும் வங்கிகள் மீதான நம்பிக்கையின்மையும்!
ஒவ்வொரு வருடமும் தீபாவளி நெருங்கும் வேளையில் பத்திரிகைகளில் சில தற்கொலைகள் கண்ணில் படுகின்றன.
இரண்டு நாட்களுக்கு முன்பு கொரட்டூர் பகுதியில் அம்மாவும் மகனும் ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் பணத்தை வாங்கி, பங்குச்சந்தையில் முதலீடு செய்ததில் 15 லட்சம் வரை நஷ்டமடைந்து விட்டது என இருவரும் தூக்கிலிட்டு இறந்துவிட்டனர். தான் வளர்த்த நாயை கவனிக்க ஆள் இல்லாததால் விசம் வைத்தும் கொன்று விட்டனர்.
இன்று மதுராந்தகம் பகுதியில் சில கோடிகளை வசூல் செய்து தலைமறைவாகிவிட்டனர்.
கடந்தாண்டு மதுரை மாவட்டம் வண்டியூரில் ஏலச்சீட்டு நடத்தி பணத்தை திரும்பக் கொடுக்க முடியாமல் குடும்பத்தில் உள்ள எட்டு பேரும் தற்கொலைக்கு முயன்றதில், வீட்டிலேயே 6 பேர் வரை இறந்துவிட்டனர்.
மக்கள் தங்களுடைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக சிறுக, சிறுக சேமிப்பதற்காக பண்டு, ஏலச்சீட்டு என தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தனி நபர்களை நம்பி பணத்தை கட்டுகின்றனர்.
பணத்தை வாங்கிய அந்த நபர்கள் தெரிந்த சிறுவியாபாரிகளுக்கு, தொழிலாளிகளுக்கு, சிறு தொழில் செய்பவர்களுக்கு பணத்தின் அளவுக்கு தகுந்த மாதிரி இரண்டு சதவிகித வட்டி, மூணு வட்டி, கந்து வட்டி என்ற அளவில் கடன் தருகிறார்கள். அந்தப் பணம் சரியாக திரும்ப வரும் வரைக்கும் பிரச்சினையில்லை. வாங்குகின்ற நபர்கள் இறந்துவிட்டாலோ, ஊரை விட்டு ஓடிவிட்டாலோ, நொடித்துப் போய் விட்டாலோ, தனது ஊதாரித்தனத்தாலோ நெருக்கடியில் சிக்கிவிடுகின்றனர்.
சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு அமல்ராஜ் (50) தான் நடத்தும் ஏலச்சீட்டில் ஆட்டோ ஓட்டுனரை சேர்க்கிறார்.
சில மாதங்கள் பணத்தை கட்டுகிறார். ஏலச்சீட்டு பணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்தில் எடுக்கிறார். அதற்குப் பிறகு தான் கட்டவேண்டிய பணத்தை கட்ட மறுக்கிறார். போலீசிடம் பஞ்சாயத்து போகிறது. சமரசம் பண்ணி விடுகிறார்கள். அதற்குப் பிறகும் பணத்தை தர மறுக்கிறார்.
அமல்ராஜ் பெட்ரோலை வாங்கி கொண்டு போய் சண்டையிடுகிறார். சண்டையின் முடிவில் பணத்தை கொடுத்தவரும் இறந்துவிடுகிறார். பணத்தை வாங்கியவரும் இறந்துவிடுகிறார். கூடுதலாக பணத்தை வாங்கிய அவருடைய துணைவியாரையும் நெருப்பு பற்றி விடுகிறது.
இப்படி பல ஆண்டுகளாக பல பகுதிகளில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இதை எப்படி தவிர்க்கலாம்? பெரும்பாலான மக்களுக்கு வங்கி நடவடிக்கைகள் அன்னியமாகத் தான் இருக்கிறது. படிப்பறிவு இல்லாத பெரும்பாலான மக்களுக்கு ஏடிஎம்-ல் பணம் எடுப்பதே மலைப்பாக தான் இருக்கிறது.
கிராமப் பகுதிகளில் வங்கிகளின் தூரம் அதிகம். மேலும் வங்கி தரும் வட்டி விகிதம் குறைவானது என்பதும் ஒரு காரணம்.
சமீபத்தில் உறவினர் ஒருவர் புதிதாக வீடு வாங்கினார். எப்படி இத்தனை லட்சம் என விசாரித்தால்... நெருங்கிய உறவினர்கள் பலரும் நடுத்தரவர்க்க பிரிவினர்கள். வங்கியில் நிரந்தர வைப்பு (Fixed Deposit) வைத்திருந்தார்கள்.
மோடி அரசு நிரந்தர வைப்புகளை எடுக்கவிடாமல் செய்யப்போகிறது என்ற பேச்சு அடிபட்டது. உடனே நிரந்தர வைப்புகளை எடுத்து நெருங்கிய உறவினருக்கு கடனாக கொடுத்து விட்டனர்.
அரசு வங்கிகளும் தனியார் வங்கிகளை போலவே எல்லாவற்றுக்கும் சேவை கட்டணத்தை அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். சேவைத்துறை என்ற கண்ணோட்டத்திலிருந்து, வருவாய் ஈட்டும் துறையாக மாறி பலகாலமாகிவிட்டது! எஸ்.பி.ஐ வங்கி சில மாதங்களுக்கு முன்பு சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் ரூ. 5000 இருக்கவேண்டும் என அறிவித்தது. கிராம பகுதிகளுக்கு ரூ. 3000 என அறிவித்தது. இதையே காரணம் காட்டி என்னுடைய சேமிப்பு கணக்கை ரத்து செய்ய விண்ணப்பித்தேன். அதற்கான கட்டணம் ரூ. 625 என்றார்கள். பொதுத்துறை வங்கிகளை ஒழித்துக் கட்டுவதற்காக தான் வேலை செய்கிறீர்களா என வங்கி மேலாளரிடம் சண்டையிட்டேன்.
வங்கியில் தகராறு செய்தால் பிற்காலத்தில் வீட்டுக் கடன் தனிநபர் கடன் வாங்க முடியாது என பல நடுத்தர வர்க்கத்தினர் எவ்வளவு கட்டணம் என்றாலும், அமைதியாக கட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள். நீங்கள் தான் சண்டை போடுகிறீர்கள் என்றார் மேலாளர். இறுதியில் வங்கி கணக்கை ரத்து செய்யாமலே மொத்தப் பணத்தையும் தந்தார்கள்.
வங்கிகள் பெருமுதலாளிகளுக்கு கடன்களை அள்ளித் தருகின்றன. அவர்கள் ஒன்று கட்ட மறுக்கிறார்கள். அல்லது நாட்டை விட்டு அரசு பாதுகாப்போடு ஓடிவிடுகிறார்கள். அல்லது அரசே வராக்கடனாக மாற்றிவிடுகிறது அல்லது ரத்து செய்துவிடுகிறது.
வங்கிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. பொதுத்துறை வங்கிகளை இணைத்துக்கொண்டே செல்கிறார்கள்.
இப்பொழுது மோடி 59 வினாடிகளில் சிறு தொழில்களுக்கு ஒரு கோடி வரை கடன் என அறிவித்திருக்கிறார். என்ன திட்டத்தில் அறிவித்திருக்கிறார் என தெரியவில்லை. காத்திருந்து பார்க்கலாம்.
August 28, 2013
அமெரிக்கா கூட காடு வெட்டிதான்! :)
நண்பரின் நண்பர் வேலை நிமித்தமாக அமெரிக்கா ஒரு மாதம் சென்று வந்தார். போய் வந்ததற்காக, பாப்பாவிற்கு ஒரு பரிசு தரும் பொழுது சொன்னார்.
அமெரிக்காவில் சில பொருட்கள் வாங்க போயிருந்தேன். ஒரு நல்ல காட்டன் சாக்ஸ் எடுத்து பார்த்தேன். அதில் "இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக" இருந்தது. எல்லா பருத்தி சம்பந்தமானவைகளும் இந்தியா, பாகிஸ்தான் என இருந்தன. அதன்பிறகு, எடுத்த பல பொருட்களும் "சீனாவில் தயாரிக்கப்பட்டதாக' வே இருந்தது என்றார்.
நாமெல்லாம் எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்தாலும், டாலரை கொடுக்க வேண்டியிருக்கிறது. சர்வதேச செலாவணி டாலராக இருப்பதால், அமெரிக்கா எவ்வளவு வேண்டுமென்றாலும் இறக்குமதி செய்ஞ்சுட்டு, காட்டில் மரங்களை வெட்டி வெட்டி டாலராக அச்சடிச்சுட்டு தர்றான்! சீனா மட்டுமே தான் கையில் வைத்திருக்கிற டாலர் கையிருப்பை அமெரிக்காகிட்ட கொடுத்து, இதுக்கு பதிலா தங்கமா கொடுன்னு சொன்னா, அமெரிக்கா திவால்னு மஞ்ச நோட்டீஸ் கொடுத்திருவான்!
May 3, 2013
இ.பி.எஃப். ஓய்வூதியம் போதாது!
February 6, 2013
''இந்தியா பணக்கார நாடு இந்தியர்கள் ஏழைகள்"
உலக மக்கள் தொகையில் 8.1% உள்ளவர்கள் மொத்த செல்வத்தில் 82.3% ஐ தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்கின்றனர்.
உலக மக்கள் தொகையில் 4.46% உள்ள அமெரிக்கர்கள் மொத்த உற்பத்தி மதிப்பில் 21.56% அனுபவிக்கின்றனர்.
செல்வ வளத்தில் வளர்ந்த 10 நாடுகள் மொத்த உற்பத்தி மதிப்பில் 53.78% பெறுகின்றனர். இந்த நாடுகளின் மக்கள் தொகை 14.33% தான்.
உலக மக்கள் தொகையில் 17.73% உள்ள இந்தியா உலக செல்வத்தில் 2.64% அனுபவிக்கிறது.
அம்பானி மும்பையில் கட்டியுள்ள 27 மாடி பங்களாவின் மதிப்பு 5500 கோடிகளுக்கும் மேல். வீட்டை பராமரிக்க 600 முழு நேர ஊழியர்கள் தேவைப்படுகிறார்களாம்.
ஜெய்ப்பூர் ராயல் பேலஸில் உள்ள ஹோட்டலில் ஒரு சூட்டில் தங்க ஒருநாள் வாடகை சுமார் ரூ. 25 லட்சம்.
இதிலிருந்து தெரிவது 'இந்தியா பணக்கார நாடு. ஆனால் இந்தியர்கள் ஏழைகள்'
- பி.எம்.எஸ்.ராவ், தினமணி, 05/02/13
January 29, 2013
மகளிர் தொழிற்பூங்காவில் மகளிர் நிலை!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பணி நிமித்தம் காரணமாக அந்த பகுதிக்கு கிளம்பும் பொழுது, நிறைய பெண் தொழிலதிபர்களை சந்திக்கலாம் என்ற ஆவலோடு கிளம்பினேன். கிட்டத்தட்ட 100 நிறுவனங்களுக்கும் மேலாக சிறிதும், கொஞ்சம் நடுத்தரமானதாய் நிறைய நிறுவனங்கள் இயங்கி கொண்டிருந்தன. காலையிலிருந்து மாலை வரை பல நிறுவனங்களுக்கும் ஏறி இறங்கி பார்த்தால், ஒரு பெண் முதலாளியை கூட காணவில்லை. முதலாளியை விடுங்கள். ஒரு பெண் தொழிலாளியை கூட காணவில்லை. அது தான் அதிர்ச்சியாக இருந்தது.
பிறகு, அங்கு கொஞ்ச காலம் பணியாற்றிய பொழுது தான் அறிந்தேன். எல்லா இடங்களையும் பெண்கள் பெயரில் தான் சிட்கோ ஒதுக்கி தந்திருக்கிறது. ஆனால், அதை இயக்குவது பெரும்பாலும் கணவன்மார்கள் தான். பொதுவாக ஆண்கள் தான் இடம் வாங்க, வங்கியில் கடன் வாங்க என அலைவார்கள். இப்பொழுது எல்லா வேலைகளையும் அலைந்து திரிந்து முடித்துவிட்டு, இறுதியில் மனைவியை கையெழுத்திட அழைத்து செல்கிறார்கள். ஆயதபூஜை போன்ற விசேஷ காலங்களில் மனைவிமார்களை கணவன்மார்கள் நிறுவனத்திற்கு அழைத்துவருகிறார்கள்.
கையெழுத்திட்டால் மட்டும் போதும் என்ற அளவில் நின்றால் பரவாயில்லை. கணவன்மார்கள் முதலாளி என்ற அளவில், தொழிலில் செய்யும் எல்லா திருட்டுத்தனங்களுக்கும் மனைவியும் பொறுப்பாளியாகிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தில் 50 பேர் வேலை செய்கிறார்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அதில் 20 பேருக்கு தான் மருத்துவ காப்பீடுக்கான (இ.எஸ்.ஐ.) பணத்தைக் கட்டுகிறார்கள். இது தான் பரவலான நிலை. மீதி 30 பேரும் பாதுகாப்பாக வேலை செய்தால் பரவாயில்லை. இதில் ஒருவருக்கு வேலை செய்யும் பொழுது, விபத்து ஏற்பட்டு, உயிர் இழந்துவிட்டால் பெரிய பிரச்சனை. பொதுவாக, காவல்துறை உட்பட சகல துறைகளுக்கும் பணம் பாய்ந்து சரிகட்டிவிடுவார்கள். சரிகட்டமுடியவில்லை என்றால், அதிகபட்சம் சிறை செல்ல வேண்டியிருக்கும். ஒரு கையெழுத்து போட்டதற்கு சிறையா என்ற அளவில் தான் மனைவிமார்கள் வருத்தம் கொள்ள வேண்டியிருக்கும்.
சமீபத்தில் மீண்டும் அந்த பகுதிக்கு சென்றிருந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் இன்னும் நூறு நிறுவனங்கள் உருவாகியிருக்கிறது. முன்பு சிட்கோவிற்கு பேருந்து உள்ளே வராது. போக்குவரத்து உயரதிகாரியை 'தனியாக' கவனித்ததால், இப்பொழுது காலை, மாலை இருவேளையிலும் பேருந்து உள்ளே வந்து செல்கிறது. சில நிறுவனங்களில் பெண் தொழிலாளர்கள் கண்ணில் பட்டார்கள்.
இப்பொழுது கணவன்மார்கள் நிறுவனத்தில் தன்னையும் ஒரு தொழில் பார்ட்னராக சேர்த்துக்கொண்டுவிட்டார்கள். இப்பொழுது கையெழுத்திற்கு கூட மனைவியிடம் வாங்குவதில்லை.தமிழ்நாட்டில் மகளிரை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின் நிலை இதுதான்!
August 26, 2011
ஊழலை ஒழிக்குமா, லோக்பால்? பி. சாய்நாத்
முன்குறிப்பு : இன்று நாடுமுழுவதும் ஊழல் குறித்தான விவாதம் முன்னணிக்கு வந்து இருக்கிறது. ஊழல் குறித்தான தனது நிலைப்பாடை பத்திரிக்கையாளர் சாய்நாத் முன்வைக்கிறார். ஊழலின் வேரை சுட்டிக்காட்டுவது முக்கியமானது.
****
ஜூலை 8, 2011 அன்று 'தி இந்து' பத்திரிக்கையில் பி. சாய்நாத் எழுதிய கட்டுரையின் சாரம்
"எது எப்படி இருந்தாலும் நமது பிரதமர் மிகவும் நேர்மையானவர்" என்று பெருமையாகவும் பிறகு தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்ளவும் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், சமீபத்தில் இந்த வாக்கியம் நம் காதிற்கு வருவதில்லை. ஏனெனில், மிக நேர்மையான நம் பிரதமர் வரலாறு காணாத ஊழல் நிறைந்த அரசுக்கு தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
இந்த ஊழலுக்கான காரணங்களை பற்றி பலர் பல கருத்துக்களை சொல்கிறார்கள். ஆனால், முக்கியமான இந்த மூன்று விசயங்களை ஆராயாவிட்டால் இந்திய ஊழலை பற்றிய எந்த ஆய்வும் முழுமை கிடையாது.
1. இந்திய சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு, பணமும், வசதியும் ஒரு இடத்தில் குவிப்பது. வர்க்கம் மற்றும் சாதிகளினாலான ஏற்றத்தாழ்வு மற்றும் பல.
2. இந்த ஏற்றத்தாழ்வுகலை வலுப்படுத்தி, அதை நியாயப்படுத்தும் இந்திய பொருளாதாரக்கொள்கை.
3. பல விதிவிலக்குகள், தனிச்சையான முடிவெடுக்கும் தன்மை மற்றும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத கலாச்சாரம். இவற்றினால் பணம், பதவி உள்ளவர்கள் எதை வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் எனும் நிலைமை. ஆளும் வர்க்கத்தை பகைத்துக் கொள்ளாமல் இருந்தால், எந்த வரிச்சட்டத்தையும் உடைத்து வரி காட்டாமலேயே சமாளித்துவ்ட முடியும் என்கிற நிலைமை.
ஊழலை அதன் அடிப்படையிலிருந்து சரி செய்ய தவறுவது, குழாய் திறந்திருக்கும் பொழுது தரையை துடைத்து ஈரத்தை போக்க முயற்சிப்பது போல் ஆகும்.
கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வரும் பொருளாதார கொள்கையினால் இந்திய அரசு கம்பெனிகளை மேலும் செல்வச் செழிப்புமிக்கவைகளாக்கும் கருவியாய் குறுகிவிட்டது. தனியார் முதலீட்டுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவே அரசு இயங்கி வருகிறது.
கடந்த 6 பட்ஜெட்களில் மட்டும் ரூ. 21 லட்சம் கோடி அரசு, வரிவிலக்கு என்ற பெயரில் கம்பெனிகளுக்கு நன்கொடை வாரிவழங்கியிருக்கிறது. அதே காலகட்டத்தில் உணவு மற்றும் விவசாயத்திற்கான மானியங்களும் பெருவாரியாக குறைக்கப்பட்டுள்ளன.
புதிய பொருளாதார கொள்கை, கம்பெனிகளின் தேவைகளை மிக விசுவாசமாக பூர்த்தி செய்யும் பணியாளராக அரசை மாற்றியுள்ளது. அதுவும் மக்கள் வரிப்பணத்தில். நிலம், தண்ணீர், அலைவரிசை போன்ற இந்தியாவின் வளங்களை கொண்டு தனியார் கம்பெனிகளின் லாபத்தை அதிகரிக்க அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது.
இந்து மாநிலங்களில் கடந்த மே மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 825 எம்.எல்.ஏக்கள் வெளியிட்ட தகவ்ல் படி அவர்களது மொத்த சொத்து மதிப்பு ரூ. 2128 கோட். இவர்கள் வெளியிடாத சொத்து மதிப்பு இன்னும் எவ்வளவோ? தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் 825 பேர் இதே பணத்தை சம்பாதிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா? வெறும் 2000 ஆண்டுகளே. இதை 10,000 பேர் சேர்ந்து சம்பாதித்தால் கூட 170 ஆண்டுகளாகும். இது தான் நம் நாட்டை சூறையாடிக்கொண்டிருக்கும் ஏற்றத்தாழ்வு.
நாட்டின் பல இடங்களில் தன்னுடைய வலமான நிலங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுதல், கட்டாயமாக வளமான நிலங்களை கையகப்படுத்துதல் போன்ற அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். ஊழலை எதிர்த்து போராட வேண்டுமா? அதற்கு லோக்பால் மட்டும் போதாது.
சமுதாய ஏற்றத்தாழ்வு, பொருளாதார கொள்கை போன்ற போராட்டங்களுடன் ஊழல் எதிர்ப்பை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு சின்ன லோக்பால் கூட்டம் செய்துவிடமுடியாது. மக்களின் மிகப்பெரிய போராட்டமாக இது அமையும்.
- மொழிபெயர்ப்பாளர் : திரு. பாலாஜி
ஆகஸ்ட் மாத தோழமை இதழிலிருந்து.
August 24, 2011
அமெரிக்காவில் பெட்ரோல் விலை ரூ. 42.82 சென்னையில் ரூ. 67.20
புது தில்லி, ஆக.23: ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 23.37, ஆனால் அதற்கு விதிக்கப்படும் வரியோ ரூ. 40.33. இத்தகைய வரி விதிப்பு வேறெந்த நாட்டிலும் அல்ல. இந்தியாவில்தான் பொருளின் உற்பத்தி விலையை விட அதிக வரி விதிக்கப்படுகிறது. அமெரிக்காவை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்தார். தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 63.70-க்கு விற்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 42.82 என்று அவர் குறிப்பிட்டார். இதேபோல இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம். பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 41.81, இலங்கையில் ரூ. 50.30, வங்கதேசத்தில் ரூ. 44.80, நேபாளத்தில் ரூ. 63.24-க்கு விற்கப்படுகிறது. இருப்பினும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைவு என்று அவர் குறிப்பிட்டார். பிரான்ஸில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 94.97, ஜெர்மனியில் ரூ. 95.99, இங்கிலாந்தில் ரூ. 96.39, இத்தாலியில் ரூ. 96.79-க்கு விற்பனையாகிறது. இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு அதிகப்படியான வரி விதிப்பு முக்கியக் காரணமாகும். வரி விதிப்பின்றி பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டால் ஒரு லிட்டர் ரூ. 23.37-க்கு விற்பனை செய்ய முடியும். தில்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 41.29. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை விடக் குறைவானதாகும். ஆனால் இலங்கை, வங்கேதசம் ஆகிய நாடுகளை விட அதிகமாகும். வரி விதிப்பின்றி ஒரு லிட்டர் டீசலை ரூ. 24.90-க்கு விற்பனை செய்ய முடியும். அமெரிக்காவில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 45.84. பிரான்ஸில் ரூ. 69.87, ஜெர்மனியில் ரூ. 72.54, இங்கிலாந்து ரூ. 82.93, இத்தாலியில் ரூ. 74 விலையில் விற்பனையாகிறது. பாகிஸ்தானில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 46.70, நேபாளத்தில் ரூ. 45.38, இலங்கையில் ரூ. 34.37, வங்கதேசத்தில் ரூ. 27.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொது விநியோக முறையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ. 14.83-க்கு விற்கப்படுகிறது. இப்பிராந்தியத்தில் இது மிக மிகக் குறைவான விலையாகும். பாகிஸ்தானில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ. 44.06, இலங்கையில் ரூ. 24.67, வங்கதேசத்தில் ரூ. 45.38-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல சமையல் எரிவாயு சிலிண்டர் விலை (14.2கி.கி) ரூ. 399. இது பாகிஸ்தானில் ரூ. 757.04, இலங்கையில் ரூ. 863.40, வங்கதேசத்தில் ரூ. 469.24, நேபாளத்தில் ரூ. 819.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
August 7, 2011
பிரணாப்-ன் ஒப்புதல் வாக்குமூலம்!

முன்குறிப்பு : கடந்த இரு பத்தாண்டுகளாக நடைமுறைப்படுத்தி வரும், மறு காலனியாதிக்க கொள்கைகளால், கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம் என பல துறைகளிலும் மோசமான பாதிப்புகளை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. அமுல்படுத்தும் பொழுது, புதிய பொருளாதார கொள்கைகளை ஆதரித்தவர்கள் கூட இன்று தங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்திருக்கிறார்கள்.
நிதிமந்திரி பிரணாப் இன்னும் விரைவுப்படுத்தி இந்தியாவை அதல பாதாளத்துக்குள் தள்ளிவிடப்போவதாக கீழே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு என்று சொல்வது முக்கியத்துவம் வாய்ந்த செய்தி. நிகழ்காலமும், வருங்காலமும் இனி போராட்ட காலங்களாக தான் இருந்தால் தான் இந்தியாவை இவர்களிடமிருந்து காப்பாற்ற முடியும்..
****
நிதி அமைச்சர் பிரணாப்-ன் பேட்டி
சீர்திருத்தங்கள் தொடரும்: பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் அவ்வளவுதான், இனி தொடராது என்று நீங்கள் (தொழில்துறையினர்) அச்சப்படத் தேவையில்லை. சீர்திருத்தங்கள் தொடரும். சில நேரங்களில் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக சீர்திருத்தங்களை அமல் செய்யும் நடவடிக்கைகளில் தேக்க நிலை ஏற்படலாம், நடவடிக்கை நின்றுவிட்டது, இனி இருக்காது என்ற முடிவுக்கு வரவேண்டாம்.
ஒத்துழைப்பு: சித்தாந்த வேறுபாடுகள் இருந்தாலும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல் செய்வதில் எல்லா அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்படும் மன நிலையிலேயே இருக்கின்றன. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை இனி திரும்பப் பெற முடியாது என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்திலாவது இந்த சீர்திருத்தங்கள் கைவிடப்படும் என்று யாரும் அஞ்ச வேண்டாம். இந்தப் பொருளாதாரச் சீர்திருத்தங்களையே இன்னமும் நிதித்துறையில் தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் அமைப்புகளில் ஏற்பட்டுள்ள இடைவெளியைச் சரி செய்ய வேண்டிய முக்கிய கடமையும் அரசுக்கு இருக்கிறது
- தினமணி, 07/08/2011 - நாளிதழிலிருந்து...
May 27, 2011
கல்லா கட்டும் எண்ணெய் நிறுவனங்கள்! நெருக்கடியில் தவிக்கும் மக்கள்!
****
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் இணையதளங்களில் சென்று பார்த்தால் கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக 4 அல்லது 5 இலக்க கோடிகளில் நிகர லாபம் அவற்றுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகர லாபம் மார்ச் 2008-ல் ரூ.6962.58 கோடி, 2009-ல் 2,949.55 கோடி, 2010 நிதி ஆண்டு இறுதியில் ரூ.10,220.55 கோடி. பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் லாபமோ பல மடங்காக உயர்ந்து வருகின்றன.
"கெய்ர்ன் இந்தியா லிமிடெட்' (சி.ஐ.எல்.) என்ற பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 10 மடங்கு உயர்ந்திருக்கிறது என்று அந்த நிறுவனமே பெருமை பொங்க அறிவித்திருக்கிறது.
ராஜஸ்தானில் நிலப்பகுதியில் (கடலில் அல்ல) எண்ணெய் வளத்தை அகழ்ந்து எடுத்து சுத்திகரித்து விற்பனை செய்கிறது இந்த நிறுவனம். கடந்த ஆண்டு இதே காலாண்டில் அதன் நிகர லாபம் ரூ.245.19 கோடி. இந்த ஆண்டு இது ரூ.2,457.79 கோடி. ஒரிரு ஆண்டுகளிலேயே நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 20% - அதாவது ஐந்தில் ஒரு பங்குத் தேவையை - பூர்த்தி செய்துவிட முடியும் என்று இந்தப் பன்னாட்டு நிறுவனம் அறிவித்திருக்கிறது.
ராஜஸ்தானில் பூமிக்கடியில் மிகப்பெரிய கடல்போல தேங்கியுள்ள எண்ணெயை அகழ்ந்தெடுக்கும் மிகப்பெரிய ஒப்பந்தத்தை இந்தப் பன்னாட்டு நிறுவனம் பெற்று நமக்கே விற்று லாபம் சம்பாதிக்கிறது.
- தகவல் - தினமணி தலையங்கத்திலிருந்து...26/05/2011
October 5, 2010
எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!

ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை. தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?'' படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்! ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்... வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'? நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு. மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்? ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன. சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை. இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம். படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம். தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா! "எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்! -
April 19, 2010
நம்மை நாமே ஏமாற்றுகிறோம்!
"ஏன் நீங்கள் இதை நம்பவில்லையா?' என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் -
""பிறகு ஏன் தெருவோரங்களில் பலர் உங்கள் நாட்டில் பிச்சையெடுக்கிறார்கள்? ஒரிசா மாநிலத்தில் பட்டினிச் சாவுகள் நிகழ்வதாகச் செய்தி வருகிறதே, அது எப்படி? பலர் பட்டினி கிடக்கும்போது உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டதாகவும், உணவு ஏற்றுமதி செய்வதாகவும் நீங்கள் கூறுவது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலைமை தொடருமானால், இந்தியாவில் தீவிரவாதம் அதிகரித்து உள்நாட்டுக் குழப்பம்தான் ஏற்படும்''.
1991-ல் இந்தியா பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் தாராளமயமாக்கல் கொள்கையை ஏற்றுக்கொண்டபோது அடுத்த பத்துஆண்டுகளில் நமது நாடு பூலோக சொர்க்கமாகப் போகிறது என்று உறுதியளித்தவர்களில் அன்றைய நிதி அமைச்சரும் இன்றைய பிரதமருமான மன்மோகன் சிங்கும் ஒருவர். பத்து ஆண்டுகளாகியும் சொர்க்கம் தென்படவில்லை என்பது இருக்கட்டும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு, எல்லோருக்கும் உணவு போன்ற அடிப்படைத் தேவைகள்கூட நிறைவேறவில்லை. பொருளாதாரச் சீர்திருத்தத்தின் பயன் இப்போதுதான் மேல்தட்டு மக்களிடமிருந்தும் பெருநகரங்களிலிருந்தும் மெல்ல மெல்ல கீழ்நோக்கி நகரத் தொடங்கியிருப்பதாகவும் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் வறுமையும், பசி பட்டினியும், வேலையில்லாத் திண்டாட்டமும் இருக்காது என்றும் ஆட்சியாளர்களும் பொருளாதார மேதைகளும் உறுதி அளித்தனர்.
அடுத்த பத்து ஆண்டுகளும் இப்போது உருண்டோடிவிட்டன. இன்றைய நிலைமை என்ன தெரியுமா? மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி மத்திய திட்டக்கமிஷனுக்கு அளித்திருக்கும் அறிக்கையின் 2004-05 ஆண்டுக்கான புள்ளிவிவரப்படி, இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கீழே வாழ்பவர்களின் எண்ணிககை 37.2 சதவிகிதம். அதாவது, ஏறத்தாழ 40.71 கோடி மக்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இது நிச்சயமாக அதிகரித்திருக்குமே தவிர, குறைந்திருக்காது.
மத்திய திட்டக்கமிஷனின் கடந்த மார்ச் 2007 புள்ளிவிவரப்படி, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 27.5 சதவிகிதம். அதாவது 30.17 கோடி. திட்டக்கமிஷனின் புள்ளிவிவரத்தை நம்புவதா இல்லை சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியின் புள்ளிவிவரத்தை நம்புவதா என்பதில் மத்திய அமைச்சரவைக்குக் குழப்பம் ஏற்பட்டு இபபோது பொது விநியோக முறையில் உணவுப் பொருள்களை வழங்க சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியின் புள்ளிவிவரத்தை ஏற்றுக்கொள்வது என்று தீர்மானித்திருக்கிறார்கள்.
வேடிக்கை இத்துடன் நின்றுவிடவில்லை. அனைவருக்கும் உணவுதிட்டத்தின்படி பயன் அடையப்போவது திட்டக்கமிஷனால் அடையாளம் காட்டப்பட்ட 30.17 கோடிப் பேரோ சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியால் குறிப்பிடப்படும் 40.71 கோடிப் பேரோ அல்ல. வெறும் 10 கோடிப்பேர் மட்டும்.
ஏன் என்று கேட்கிறீர்களா? இந்தப் பத்துக் கோடிப் பேருக்குத்தான் இருப்பிடம் என்று பெயருக்கு ஒரு குடிசையாவது, விலாசமாவது இருக்கிறது. ஏனையோர் தெருவோரங்களிலும் பொதுஇடங்களிலும் உண்ண உணவும், உடுக்க உடையும், செய்ய நிரந்தரத் தொழிலும் இல்லாமல் நாடோடி வாழ்க்கை வாழ்பவர்கள். இல்லையென்றால், காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள்.
மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் சரிதானா? இன்னொருபுறம் நடந்து கொண்டிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் தந்தேவாடா பகுதியில் ஆதிவாசிகள் வசிக்கும் சுமார் 258 கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்கள். இதேபோல, டெண்டுல்கர் கமிட்டியின் புள்ளிவிவரமும் பல ஆதிவாசிக் கிராமங்களைக் கணக்கில் எடுக்காமல் தானே தனது அறிக்கையைத் தயாரித்திருக்கும்?
உணவுப் பாதுகாப்பு என்கிற பெயரில் அனைவருக்கும் உணவு என்று திட்டம் தீட்டி பொது விநியோக முறை மூலம் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது என்பது அத்தியாவசியத் தேவை. இதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது. ஆனால், முறையாக நிறைவேற்றப்படாத நல்ல திட்டம் என்பது முறைகேடுகளின் ஊற்றுக்கண்ணாக மாறி, மக்கள் மனதில் கொந்தளிக்கும் எரிமலையாக மாறிவிடுமே என்பதுதான் நமது கவலை.
ஒருபுறம், வளர்ச்சி என்கிற பெயரில் காடுகள் மட்டுமல்ல, விவசாய நிலங்களும் கபளீகரம் செய்யப்படுகின்றன. இன்னொருபுறம் 60 ஆண்டுகளாகியும் இன்னும் இந்தியா முழுவதும் முறைகேடுகள் இல்லாத பொது விநியோக முறையை ஏற்படுத்தாமல் இருக்கிறோம். பல மாநிலங்களில் ரேஷன் கடைகள்கூட கிடையாது என்பதுதானே யதார்த்த உண்மை? அப்பழுக்கில்லாத பொதுவிநியோகச் சங்கிலியைக் கூட நம்மால் முறைப்படுத்தி நெறிப்படுத்த முடியாத நிலையில் அனைவருக்கும் உணவு எப்படிச் சாத்தியம்?
விலாசமே இல்லாத - ரேஷன் அட்டைக்கு அருகதையில்லாத - தெருவோரவாசிகள் இந்தியப் பிரஜைகள் அல்லாமல் போய்விடுவார்களா? அவர்களின் பசியை யார், எப்போது, எப்படிப் போக்குவது? அவர்களைப் பற்றிக் கவலைப்பட இங்கே யாருமே இல்லையா?
பொருளாதாரத் தாராளமயமாக்கல் என்று சொன்னபோது செல்வம் தாராளமயமாக்கப்படும் என்றும் குடிசைகள் கோபுரங்களாக மாறும் என்றும் கனவு கண்டோம். 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் புரிகிறது தாராளமயமாக்கப்படுவது செல்வம் அல்ல, வறுமை என்று. இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு மாவட்டங்கள் இந்திய அரசின் ஆளுமையில் இல்லை என்று. ஆண்டுதோறும் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று...
முன்னாள் பிரதமர் குஜ்ரால் வீட்டில் சந்தித்த வியட்நாமிய அமைச்சருடனான உரையாடல் ஏனோ நினைவை உலுக்குகிறது. நமது ஆட்சியாளர்கள் போடுவது தப்புக்கணக்கு என்று எச்சரிக்காமல் இருக்க முடியவில்லை!
19/04/2010 - தினமணி தலையங்கத்திலிருந்து...
January 29, 2010
ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது - இறுதி பாகம்!

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
தனியார்மயத்தின் கீழ் நீடித்த, நிலையான வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை துபாய் நெருக்கடி மீண்டும் நிரூபித்திருக்கிறது.
ஆனால், கடந்த ஓராண்டாகவே நெருக்கடிகள் முற்றி வந்தன. குடியிருப்புகளின் வாடகைகள் பாதியளவுக்குக் குறைந்த போதிலும், பெரும்பாலும் அவை காலியாகவே கிடந்தன. துபாய் மட்டுமின்றி, மத்திய கிழக்கு நாடுகளது மன்னர்கள்-அமீர்களது பொருளாதார நிலை பற்றி எந்த விவரமும் உலகுக்குத் தெரிவிக்கப் படுவதில்லை. இதனால் நெருக்கடியின் பரிமாணத்தை எவராலும் மதிப்பிட முடியவுமில்லை.
இந்தக் கூட்டமைப்பில் இன்று அபுதாபி மட்டுமே எண்ணெய் வளமும் பொருளாதார பலமும் கொண்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சியால் துபாய் திவாலாகி விழும் வரை உதவ மறுத்த அபுதாபி, இப்போது கடனளிக்க முன்வந்துள்ளது. துபாயைப் போல மேற்கத்திய கலாச்சாரத்தைக் கொண்டிராமல், இஸ்லாமிய அடிப்படைவாதக் கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் அபுதாபி, துபாய் பிராந்தியத்தை தனது இரும்புப் பிடி ஆட்சியின்கீழ் கொண்டுவந்து மேலாதிக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
1997-இல் தென்கிழக்காசிய நாடுகள் திவால், 2001-இல் அர்ஜெண்டினா திவால், கடந்த ஆண்டில் அமெரிக்கா திவால் என்று உலக முதலாளித்துவம் அடுத்தடுத்து குப்புற விழுந்து கிடக்கிறது. இது தொடக்கம்தான். ஆனால், இந்நெருக்கடிக்கான முடிவு எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை.
லெமென் பிரதர்ஸ் என்ற நிதி நிறுவனம் திவாலாகிச் சரிந்தபோது, அது துபாயைப் பாதிக்கவில்லை என்று கூறி, உலக முதலாளித்துவ நெருக்கடி என்பது வேறு, துபாய் வேறு என்று நம்பச் சொன்னார்கள். ஆனால், துபாய் நெருக்கடி கசியத் தொடங்கியதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிதிச் சந்தைகள் ஆட்டங்காணுகின்றன. ஐரோப்பிய வங்கிளும் குறிப்பாக, பிரிட்டனைச் சேர்ந்த ஹெச்.எஸ்.பி.சி. ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, பர்க்லேஸ், ஏ.பி.என்.அம்ரோ முதலான வங்கிகள் பல்லாயிரம் கோடிகளுக்கு மேல் பெருத்த இழப்பைச் சந்தித்துள்ளன. இந்தியாவின் பாங்க் ஆஃப் பரோடா 5,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இது தவிர, பல இந்தியக் கட்டுமான நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்துள்ளன. பிரிட்டனும் ஜெர்மனியும் கடன் பத்திரங்களைப் பெருமளவில் வாங்கியுள்ளதால், அவற்றின் நிதியமைப்புமுறையே கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. வீட்டு விலைகள் உயரும் என எதிர்பார்த்துக் கடனை வாரியிறைத்துவிட்டு, இப்போது என்ன செய்வது என்று புரியாமல் அவை தவிக்கின்றன.
அரசாங்கத்தின் தலையீடோ, கட்டுப்பாடோ இல்லாமல் தாராளமயம் சுதந்திரமாகச் செயல்பட்டால், முதலாளித்துவம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி, பொருளாதாரம் பூத்துக் குலுங்கும் என்று ஏகாதிபத்தியவாதிகள் உபதேசித்து, அதைத் தீவிரமாகச் செயல்படுத்தினர். ஆனால், கட்டுப்பாடற்ற நிதியாதிக்கக் கும்பல்களின் சூறையாடல், துபாயின் பொருளாதாரத்தையே மீளமுடியாத பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது. துபாய் மட்டுமின்றி இதர நாடுகளிலும் கட்டுமானத் துறையும் வீட்டுமனைத் தொழிலும் நொறுங்கிச் சரியும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. அதி விரைவில் கிரீசும் அயர்லாந்தும் சரிவது நிச்சயமாகிவிட்டது. அனைத்துலக முதலாளித்துவம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கி மரணப்படுக்கையில் முனகுகிறது.
கோடீஸ்வர நாடான துபாயே ஆடிக்காற்றில் அம்மியாகப் பறக்கும்போது, ஏழை நாடுகளின் கதி இனி என்னவாகும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. திவாலாகும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து முட்டுக் கொடுத்து முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்துவது என்ற கொள்கையைத்தான் அமெரிக்கா முதல் துபாய் வரை எல்லா அரசுகளும் பின்பற்றுகின்றன. நிதியாதிக்கக் கும்பல்களின் சூறையாடலை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி ஆதரிக்கும் இக்கேடுகெட்ட முதலாளித்துவக் கொள்கையால், எந்த நாடும் இனி மீளவே முடியாது என்பதைத்தான் துபாய் அனுபவமாக உணர்த்துகிறது.
- நன்றி - புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010
January 28, 2010
இந்திய ஐ.டி. துறைக்கு பாதிப்பு: வெளிப்பணி ஒப்படைப்புக்கு வரிச்சலுகை ரத்து!

வாஷிங்டன், ஜன.28: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கொண்டு வந்துள்ள புதிய மசோதாவால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை பெருமளவு பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
ஏற்கெனவே சர்வதேச தேக்க நிலை காரணமாக பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆள்குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்நிலையில் அதிபர் பராக் ஒபாமா தனது ஓராண்டு பதவி நிறைவை ஒட்டி நிகழ்த்திய உரையில் வெளிப்பணி ஒப்படைப்பு (பிபிஓ) மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வெளிப்பணி ஒப்படைப்பு (பிபிஓ) பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படும். காப்பீடு, மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ன் போன்ற பணிகளை பிபிஓ முறையில் நிறைவேற்றும் நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்புகள் குறையும்.
அமெரிக்காவில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதற்காகவே வரிச் சலுகை ரத்து செய்யப்படுகிறது என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேலை வாய்ப்பு தொடர்பான மசோதாவில் இப்புதிய கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் வேலையின்றி தவிப்பவர்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை. எனவே வேலைவாய்ப்பு மசோதா மூலம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க அரசு தீவிரமாக உள்ளது. இதைப் போல மேலும் சில பரிந்துரைகளை அளிக்குமாறு செனட் சபையை ஒபாமா கேட்டுக் கொண்டார்.
உலகிலேயே அதிக அளவில் வெளிப்பணி ஒப்படைப்புப் பணியை மேற்கொள்ளும் நாடாக இந்தியா விளங்குகிறது. அமெரிக்க அதிபரின் புதிய உத்தரவால் இத்துறை பெரிதும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
2008-09-ம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்கு 5.8 சதவீதமாகும். 1997-98-ம் நிதி ஆண்டில் இது 1.2 சதவீதமாக இருந்தது.
அமெரிக்க நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக பணிகளை வேறு நாடுகளுக்குக் கொண்டு சென்றன. இதில் ஆங்கிலப் புலமை மிகுந்த இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தகவல் தொழில்நுட்பம் பெற்றவர்களின் விகிதம் அதிகமாக இருந்ததால் இங்கு அதிக அளவில் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.
தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையால் உண்மையிலேயே கடந்த சில ஆண்டுகளில் இழந்த 70 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது என்றும் ஒபாமா குறிப்பிட்டார். தற்போதைய நடவடிக்கையால் ஏற்கெனவே 20 லட்சம் அமெரிக்கர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
2010-ம் ஆண்டில் அரசின் முன்னுள்ள பிரதான பிரச்னைகளில் முக்கியமானது வேலை வாய்ப்பை உருவாக்குவதே ஆகும் என்று ஒபாமா சொன்னார்.
புதிய வேலைவாய்ப்பு மசோதா மூலம் வால் ஸ்டிரீட்டில் உள்ள வங்கிகள் திரும்பச் செலுத்திய 3,000 கோடி டாலர் தொகையைக் கொண்டு சமுதாய வங்கிகள் உருவாக்கப்பட்டு சிறு வணிகத்துக்கு கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வர்த்தகத்தை பிரதானமாகக் கொண்டே புதிய மசோதா அமையும். அத்துடன் அரசும் வர்த்தகம் பெறுக தேவையான உதவிகளை அளிக்கும். இதன் மூலம் ஏராளமானோர்க்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்றும் ஒபாமா சுட்டிக் காட்டினார். மனித வள மேம்பாடு மற்றும் கல்வியில் அதிக முதலீடு செய்ய அரசு தீவிரமாக உள்ளது.
தற்போது வழங்கப்படும் உயர்நிலைப் பள்ளி கல்வியானது வேலை வாய்ப்பைப் பெறுவதற்கானதாக அமையவில்லை. அனைவரும் கல்லூரி படிப்பைத் தொடரும் வகையில் அளிக்க அரசு முயன்றுள்ளது. மக்கள் செலுத்தும் வரிப் பணம் வங்கிகளுக்கு மானியமாக அளிக்கப்பட்டு அது மாணவர்களுக்கு கல்விக் கடனாக வழங்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.
அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஏற்றுமதியை இரட்டிப்பாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஒபாமா கூறினார்.
இதன் மூலம் இறக்குமதியை மட்டுமே அமெரிக்கா நம்பியிருக்காது என்ற மறைமுக தகவலை சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமணி - 29/01/2010
January 20, 2010
துபாய் நெருக்கடி : ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது! பாகம் 3

பாகம் - 1
பாகம் - 2
தனியார்மயத்தின் கீழ் நீடித்த, நிலையான வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை துபாய் நெருக்கடி மீண்டும் நிரூபித்திருக்கிறது.
முன்குறிப்பு : 'முதல் நாள் வரை சொர்க்கம். அடுத்த நாள் நரகம்" என மாறி நிற்கிறது துபாய். வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை 50% தொடும் என்கிறார்கள். துபாயின் நெருக்கடியில் வேலை இழந்தவர்களின் கதி என்ன? 'சொர்க்கத்தை' எண்ணி வங்கிகளில் கடன் வாங்கியவர்களின் கதி என்ன? என்பதையும், "வாயை திறந்து உண்மையை பேசவே கூடாது" என ஊடகங்களுக்காக ஒரு சட்டமே போடப்பட்டிருப்பதையும் இந்த பகுதி விவரிக்கிறது.
****
எல்லாம் இன்று குப்புற விழுந்துவிட்டது. பல நூறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் அரைகுறையாக எலும்புக்கூடுகளாக நிற்கின்றன. ஆடம்பர வீடுகளுக்காக உருவாக்கப்பட்ட செயற்கைத் தீவுகள் பலவும் கடலுக்குள் கொட்டப்பட்ட குப்பை மேடுகளாகக் காட்சியளிக்கின்றன. இவையெல்லாம் கட்டி முடிக்கப்படுமா, அல்லது கைவிடப்படுமா என்று யாருக்கும் தெரியாது. ஆனால், கடன் கொடுத்த வங்கிகள் சும்மாயிருக்குமா? கடனை கட்டாமல் தப்பிக்க முடியாது என்று எச்சரித்து வசூல் வேட்டையைத் தீவிரப்படுத்துகின்றன.
மறுபுறம், குப்புற விழுந்துவிட்ட பொருளாதாரத்தால் துபாயில் வேலை இழப்பு தீவிரமாகியுள்ளது. இலட்சகணக்காணோர் வேலை இழந்துள்ளனர் என்று அதிகாரபூர்வமற்ற செய்திகள் வருகின்றன. துபாய் சட்டப்படி, வேலையிழந்தவர்களின் தொழில் விசா ரத்து

செய்யப்படும். ஒருமாத இடைவெளியில் அவர்கள் வேறு வேலை தேடிக்கொண்டால் அந்நாட்டில் இருக்க முடியும். இல்லையேல், வெளியேற்றப்படுவர். இதனால் இந்தியா, பாகிஸ்தான், வங்கத்தேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து நாடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் அரைச் சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர். பணி நிரந்தரம் என்ற நம்பிக்கையில் கட்டட வடிவமைப்பாளர், பொறியாளர் முதலானோர் வீடு வாங்கும் ஆசையில் வங்கியில் கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்த வழி தெரியாமல் தவிக்கின்றனர்.
துபாயில் கடனை அடைக்க முடியாதவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். வாழ்நாள் முடுவதும் அடிமையாக வெலை செய்துதான் கடனை அடைக்கவேண்டும். இதனால் கடனை அடைக்க வழிதெரியாத பலர் நாட்டை விட்டுத் தப்பியோடுகின்றனர். எஞ்சியிருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு, எவரிடமும் விற்கமுடியாத தமது விலையுயர்ந்த கார்களையும் உடைமைகளையும் அங்கேயே போட்டுவிட்டு ஓடுகின்றனர். துபாய் விமான நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில் கைவிடப்பட்டு யாரும் உரிமை கோராத கார்கள் மலை போல குவிந்து கிடக்கின்றன். வீடுகள் காலியாகி, வீட்டுமனை விலை சரிந்து ஆளரவமற்ற தெருக்கள் பெருகி வருகின்றன.
"இருப்பினும் இது தற்காலிக நெருக்கடி தான். நிலைமை படிப்படியாக மாறி வருகிறது. அபுதாபி அமீரகம் கடன் கொடுத்து மீட்டுவிட்டது. துபாயின் கனவுலகம் மீண்டும் ஒளிரும்" என்று ஊடகங்கள் ஆரூடம் கூறி வருகின்றன. துபாய் அரசாங்கம் புதிய ஊடக சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பதே இதற்குக் காரணமாகும். இச்சட்டத்தின்படி, துபாயில் பொருளாதார நெருக்கடி நிலவுவதாக எந்த ஊடகமும் செய்தியை வெளியிடக்கூடாது. மீறினால், இலட்சகணக்கில் அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும். எனவே, எல்லா ஊடகங்களும் வதந்திகளையே பரப்பி வருகின்றன.
தொடரும்..
நன்றி : புதிய ஜனநாயகம் - ஜனவரி 2010











