> குருத்து: October 2022

October 30, 2022

சர்தார் (2022)


நாயகன் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். ஒரு தேசதுரோகியின் மகன் என சிறுவயதில் இருந்தே அவமானப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அதை சரிசெய்வதற்காக சமூக வலைத்தளங்களில் போலீசையும் அவரையும் புகழ்பாடும்படி ஏதாவது மெனக்கெட்டு செய்துகொண்டேயிருக்கிறார்.


ஒரு நடுத்தர வயது அம்மா தன் பையனுடன் வாழ்கிறார். அவனுக்கு உடல்நலம் சிக்கலாகி, இன்னும் சில மாதங்கள் தான் வாழமுடியும் என்கிறார் மருத்துவர். காரணம் அறியும் பொழுது, பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் பயன்பாடு தான் பிரச்சனை என அறிகிறார்.

அதிலிருந்து தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பதை, தண்ணீர் தனியார்மயமாவதை தொடர்ந்து எதிர்க்கிறார். சின்ன சின்ன நிறுவனங்களை எதிர்ப்பது வரை பிரச்சனையில்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்த்து சில வேலைகளை செய்யும் பொழுது, படுகொலை செய்யப்படுகிறார்.

அரசு அவரை ஒரு தேசதுரோகி என அறிவிக்கிறது. அவரை நிரபராதி என நாயகன் அறிகிறார். தனக்கு ஏற்பட்ட அதே நிலை அந்த பையனுக்கும் என வருந்துகிறார். யார் செய்த படுகொலை என தொட்டு தொட்டு ஆராயும் பொழுது, அது இந்தியா முழுவதும் தண்ணீர் தனியார்மயமாவதின் மிகப்பெரிய வலையை புரிந்துகொள்கிறார்.

இந்த பெரிய சதியை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதை சண்டை, துரத்தல் என ஆக்சனுடன் சொல்லியிருக்கிறார்கள்.
***

இயற்கை தரும் நீரை கடந்த மூன்று பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் வியாபார பொருளாக்கிவிட்டார்கள். லாபம். மேலும் லாபம். லாப வெறி என்ற முதலாளித்துவ இலக்கணப்படி, பல நாடுகளில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தண்ணீரை தங்கள் வசமாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். ஏற்கனவே மூன்றாம் உலக மக்கள் அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கே அல்லல்படும் பொழுது, உயிர் வாழ்வதற்கு அடிப்படையான நீரையும் இவர்கள் காசாக்குகிற பொழுது, மக்கள் இன்னும் துன்பத்தில் மூழ்குகிறார்கள். இதை எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள். போராடிக்கொண்டே இருக்கிறார்கள். பல உயிர்களை இழந்திருக்கிறார்கள்.

தண்ணீர் பிரச்சனையை தான் இந்த வணிக ரீதியான படத்தில், வெகுமக்களை சென்றடையும் விதத்தில் பொருத்தியிருக்கிறார்கள். கார்த்தி, ராஷிக்கண்ணா, ரெஜிஜா, லைலா, முனீஷ்காந்த் என பலரும் நடித்திருக்கிறார்கள்.

ஒரு முக்கிய பிரச்சனையை கையாண்டு, சொந்த நாட்டில் தேச துரோகி என முத்திரை குத்தப்பட்டு, பல ஆண்டுகள் சிறையில் வாழும் பல திறனுடைய உளவாளி இந்தியாவில் என்ன நடக்கிறது என தெரியாமலே வாழ்வது பெரிய நெருடல். மற்றபடி, பார்வையாளர்களை ஈர்க்கும்படி சுவாரசியமாக எடுத்திருக்கிறார்கள்.

இது எங்கோ நடக்கிற கதை இல்லை. இதோ திருப்பூரிலும், கோயமுத்தூரிலும், சேலத்திலும் அந்த கார்ப்பரேட் ஆட்கள் கால்பதித்துவிட்டார்கள். படம் முடிந்து இறுதி காட்சிகளில் இந்த செய்தி அமைதியாக எழுத்தில் வந்து போகிறது. இதை படத்தில் வருகிற யாரோ ஒரு நாயகன் வந்து காப்பாத்துவான் என எதிர்பார்க்கமுடியாது. மோசமாக பாதிக்கப்படப் போகிற மக்கள் ஒன்றிணைந்து போராடினால் தான் அவர்களை விரட்டமுடியும் என மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

நானே வருவேன் (2022)


இரட்டையர்களான பத்து வயதிற்குள்ளான பையன்கள். மூத்தவன் ஒரு சிக்கலான மனநிலையில் வளருகிறான். கண்டித்த அப்பாவையே கொன்றுவிடுகிறான். மறைத்துவிடுகிறார்கள். இரட்டையர்கள் ஒன்றாக இருந்தால், நல்லதில்லை. அசம்பாவிதம் ஆகும் என ஜோசியர் சொல்ல, மூத்தவனை ஓரிடத்தில் விட்டுவிட்டு வந்துவிடுகின்றனர்.


தம்பி திருமணமாகி, பள்ளி செல்லும் வயதில் ஒரு மகளோடு வாழ்கிறார். வாழ்க்கை நல்லபடியாக போய்க்கொண்டு இருக்கிறது. திடீரென சில அமானுஷ்ய நடவடிக்கைகள் தென்படுகின்றன. மகளுக்குள் ஒரு ஆவி புகுந்து கொண்டு நிறைய தொல்லைகள் செய்கிறது. உள்ளே புகுந்த ஆவி ஒரு வில்லங்கமான கோரிக்கை ஒன்றை வைக்கிறது. அதை நிறைவேற்றவில்லை என்றால், மகளை கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறது.

அப்பாவி. ஆனால் தன் பாச மகளை மீட்க என்னவேண்டுமென்றாலும் (!) செய்ய தயாராக இருக்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
***

ஏற்கனவே செல்வராகனின் சமீபத்திய படங்கள் ஓடாததால், வித்தியாசமாக எல்லாம் இல்லாமல், ஒரு எளிய கதையை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். திரைக்கதைக்காகவும், காட்சிகளுக்காகவும் கூட பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. எடுத்து முடித்துவிட்டார்கள்.

ஆவி அப்பாவியின் மகளுக்குள் உள்ளே புகுந்து செய்ய சொல்வதை, அந்த வேலையை ஆற்றல் மிக்கதாக இருக்கும் ஆவியே செய்துவிடலாமே? கொல்லவேண்டிய நபர் சக்தி வாய்ந்த மந்திரவாதி அல்லவே! செல்வராகவனின் ஆவி ஏன் இப்படி ஒரு அப்பாவியை டார்ச்சர் செய்கிறது? இப்படி திரைக்கதை மிகவும் பலவீனமாக இருக்கிறது.

பலரும் சுட்டுவது போல, தனுசுக்கு நல்ல கதைகள் கொடுத்து நடிக்க வைங்கப்பா! வீணடிக்காதீங்க! என கேட்டுக்கொண்டு முடித்துக்கொள்கிறேன். படம் ஓடிருச்சு! வசூலாயிருச்சு! என சொல்லாதீர்கள். செல்வராகவன் மேலே ரெம்ப காண்டுல இருக்கேன். 🙂

ப்ரைம் வீடியோவிலும், அமேசானிலும் கிடைப்பதாக இணையம் சொல்கிறது.

October 28, 2022

மரகத நாணயம் (2017) (அ) கொல்லும் நாணயம் Fantasy comedy Tamil Movie


நாயகனுக்கு கடன் பிரச்சனை. நியாய வழியில் எல்லாம் சம்பாதித்து அடைத்துவிடமுடியாது. ஆகையால் நொடித்துபோன நிலையில் இருக்கும் ஒருவரிடம் சின்ன சின்ன கடத்தல் வேலைகளில் ஈடுபடுகிறான். இந்த சமயத்தில் ”மரகத நாணயம்”-த்தை எடுத்து தந்தால், பத்து கோடி என பேரம் வருகிறது. அந்த நாணயத்தை தேடியவர்கள், அடைந்தவர்கள் என வரிசையாக செத்துப்போயிருக்கிறார்கள். அதனால் விவரம் அறிந்தவர்கள் பயந்து ஒதுங்குகிறார்கள்.


மரகத நாணயத்தின் கதை என்னவென்றால் முன்பொரு காலத்தில் இரும்பொறை அரசன் ஒரு மன்னன். தவம் இருந்து, மரகத நாணயத்தை பெறுகிறான். அதை வைத்துக்கொண்டு நிறைய வெற்றிகளை அடைகிறான். 96 வயதில் சாகும் பொழுது கூட தன் வாரிசுகளுக்கு கூட கொடுக்க மனமில்லாமல், தனது கல்லறையில் வைத்து புதைக்க சொல்கிறான். அந்த நாணயத்தை யார் அடைய நினைத்தாலும், விரட்டி விரட்டி கொல்கிறான்.

நாயகனுக்கோ எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலை. ஆகையால், ஒரு ஜோசியரை சந்தித்து யோசனை கேட்கிறான். அவரும் சொல்கிறார். ஒரு பிணத்துக்கு உயிர் தந்து எழுப்பிவிடுகிறார்கள். அந்த குட்டிச்சாத்தானோ தன்னோட சகாக்கள் இருந்தால் தான் தனக்கு வசதி என அடம்பிடிக்கிறது. இன்னும் மூன்று பிணத்தை கண்டுபிடித்து, உயிர் தந்து… அங்கிருந்து கலாட்டாக்கள் ஆரம்பிக்கின்றன.

பல்வேறு முயற்சி, கலாட்டகளுக்கு பிறகு மரகத நாணயத்தை அடைந்தார்களா? இரும்பொறை மன்னன் என்ன செய்தான்? என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.
***

ஒரு இயல்பான படத்தில் லாஜிக் மீறினால் நமக்கெல்லாம் மனசு சங்கடப்படும். அதுவே பேண்டசி என எடுத்துக்கொண்டால், அந்த பிரச்சனை இல்லை. ஆனால் பல கற்பனை (Fantasy) படங்களில் கற்பனை வறட்சி நிறைய இருக்கும். இந்தப் படத்தில் அந்த பிரச்சனை இல்லை. புகுந்து விளையாடியிருப்பார்கள். செத்தவர்களை எழுப்புவது, அவர்களுக்கான விசேச குணங்கள். மரகத நாணயத்தை தேட ஆரம்பித்துவிட்டாலே, அதனால் செத்துப்போன அந்த பெருங் கூட்டம் அவர்களை பின்தொடர்ந்து கொண்டு இருப்பது; விரட்டி விரட்டி கொல்லும் அந்த பழைய லாரி. இதோடு நகைச்சுவையும் இணையும் பொழுது படம் அசத்தலாகிவிடுகிறது.
படத்தில் நடித்த அத்தனை பேருமே சிறப்பாக செய்திருப்பார்கள். இதில் ஒரு கூட்டத்துக்கு தலைவனாக வரும் ஆனந்தராஜின் நகைச்சுவை நன்றாக இருக்கும். தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது.
இந்தப் படத்தில் நடித்த நாயகன் ஆதியும், நாயகி நிக்கியும் இப்பொழுது தம்பதிகள். இந்தப் படத்தை இயக்கிய ARK Saravan என்ன ஆனார் என தெரியவில்லை. அவருடைய அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இந்தப் படத்தை பார்க்கவில்லை என்றால், தீபாவளி விடுமுறையில் குடும்பத்துடன் பாருங்கள். ஜாலியாக இருக்கும். யூடியூப்பிலேயே இலவசமாக கிடைக்கிறது. கூடுதலாக ஹாட் ஸ்டாரில், ஜீ5, சன் நெக்ஸ்டிலும் கூட கிடைப்பதாக இணையம் சொல்கிறது.

காந்தாரா – கன்னடம் (2022)


முன்பொருகாலம். ஒரு ஜமீன். மனநிம்மதியில்லாமல் அலைகிறார். பழங்குடிமக்கள் வழிபடும் ஒரு கல் தெய்வத்தைப் பார்த்து நிம்மதியடைகிறார். அந்த மக்களிடம் என்னிடம் தந்துவிடுங்கள். உங்களுக்கு எவ்வளவு நிலங்கள் வேண்டுமோ தந்துவிடுகிறேன் என்கிறார். மலைவாழ் சாமியாடியின் சத்தம் எவ்வளவு தூரம் கேட்கிறதோ, அந்த நிலங்களை தாருங்கள் என்கிறார்கள். அதே போல நிலங்களை தந்தும்விடுகிறார்.


வருடங்கள் நகர்கின்றன. ஜமீனின் வாரிசு வழி வந்தவர் ”இழந்த” நிலங்களை எப்படியாவது திரும்ப கைப்பற்ற முயல்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அதனால் ரத்தம் கக்கி சாகிறார்.

படம் நிகழ்காலத்திற்கு வருகிறது. மலைவாழ் மக்களை அவர்கள் வாழும் இடத்தில் இருந்து துரத்த அரசு இந்திரம் முயல்கிறது. ஜமீன்தாரரோ மலைவாழ் மக்களிலேயே நாயகன் உட்பட சிலரை பயன்படுத்தி மரங்களை வெட்டி கடத்துகிறார். தான் மூதாதையர் எழுதி வைத்த நிலங்களையும் எழுதி வாங்க சதித்தனமாய் முயல்கிறார்.
இறுதியில் என்ன ஆனது என்பதை ஆக்ரோசமாய் சொல்லியிருக்கிறார்கள்.

***

பழைய கள் தான். அதை புதிய மொந்தையில் தந்திருக்கிறார்கள். அனைவரின் நடிப்பு, வசனம், ஒளிப்பதிவு, இசை என எல்லாமும் கச்சிதமாய் இருக்கிறது. கேஜிஎப் படம் தயாரித்தவர் தான் இந்தப் படத்தையும் எடுத்திருப்பதாக தகவல் சொல்கிறார்கள். இதையும் ஒரு பான் இந்தியா படமாக எடுத்திருக்கலாமே என நாயகனும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டியிடம் கேட்டால், இது கன்னட மண்ணுக்குரிய கதை. ஆகையால், மற்ற மொழிக்காரர்கள் சப் டைட்டிலுடன் பார்க்கட்டும் என்றாராம். படம் அடைந்துள்ள பெரிய வெற்றி பல மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நாயகனை இதற்கு முன் எப்போதோ பார்த்திருக்கிறோமோ என யோசித்தால், ”பெல் பாட்டம்” என ஒரு படம். அதில் கொஞ்சம் கிறுக்குத்தனமான டிடெக்டிவ்வாக வருபவர் அல்லவா! என நினைவுக்கு வருகிறது.

துளு பேசும் மலைவாழ் மக்களின் நம்பிக்கை, சடங்கு. அவர்களுடைய பண்பாடு குறித்து படம் பேசியிருக்கிறது. சாதி, ஏற்றத்தாழ்வு என்பதையும் பேசியிருக்கிறது.

கதையின் ஒன்லைனைப் பொறுத்தவரை எனக்கு நாட்டுப்புற கதையாக தான் படுகிறது. ”மரகத நாணயம்” என நகைச்சுவைப் படத்தில், இரும்பொறை அரசன் ஒரு மன்னன். தவம் இருந்து, மரகத நாணயத்தை பெறுவான். அதை வைத்துக்கொண்டு நிறைய வெற்றிகளை அடைவான். 96 வயதில் சாகும் பொழுது கூட தன் வாரிசுகளுக்கு கூட கொடுக்க மனமில்லாமல், தனது கல்லறையில் வைத்து புதைக்க சொல்வான். அந்த நாணயத்தை யார் அடைய நினைத்தாலும், விரட்டி விரட்டி கொல்வான் என கதை போகும். இது தான் ஒரு அரசனின் இயல்பு.

ஒரு நாட்டில் மன்னனோ, ஜமீனோ எவ்வளவு நிலங்கள் தங்கள் வசம் இருக்கிறதோ அவ்வளவு சொத்து மட்டுமல்ல! அது சமூக அரசியல், ஆட்சி அதிகாரத்தையும் தரும். ஆகையால், ஒரு கல் தெய்வத்திற்கு தன் நிலங்களை தருவது என்பது இயல்புக்கு மீறியதாக இருக்கிறது. இந்த அடிப்படையில் தான் நாட்டுப்புற கதையாக தான் இருக்கிறது என்கிறேன். மாற்றுக்கருத்து இருந்தால் சொல்லுங்கள். பேசலாம்.

இறுதிக்காட்சிகளில் நாயகன் மிரட்டியிருப்பார். இன்னும் அந்த இசையும், அசைவுகளும் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றன.

நண்பர்கள் சொல்லும் செய்திகளை வைத்து பார்த்தால், தீபாவளி படங்களில் சர்தாரையும், பிரின்ஸையும் ”காந்தாரா” பின்னுக்கு தள்ளும் என்றே நினைக்கிறேன். காந்தாரா தமிழிலும் வெற்றி பெறட்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு தானே!

Mr. Harrigan's Phone (2022) American teen horror drama film


அமெரிக்காவில் ஒதுக்குப்புறமான சிறுநகரம். அந்த ஊரில் பங்குச் சந்தையில் பெரிய ஆளான ஒரு புள்ளி வாழ்கிறார். குடும்பம் இல்லை. என்னவாயிற்று என தெரியவில்லை. வேலைகாரர்களுடன் தனியாக வாழ்கிறார். அவருக்கு வயதாகிவிட்டது. அவருக்கு புத்தகங்களை வாசித்துக் காட்டுவதற்காக ஒரு பையன் வேண்டும் என விளம்பரம் தருகிறார். நிறைய பேர் வருவதில் இருந்து பத்து வயது பையனாகிய நாயகனை தேர்ந்தெடுக்கிறார்.


வாரத்திற்கு மூன்று நாள் அவருடைய வீட்டுக்கு வருகிறான். புகழ்பெற்ற புத்தகங்களை எல்லாம் ஒவ்வொன்றாக வாசித்து காண்பிக்கிறான். இப்படியே ஐந்து வருடம் ஓடிவிடுகிறது.

செல்போன் அறிமுகமாகிறது. அந்த பையன் அவருக்கு அறிமுகப்படுத்தி, அதன் செயல்பாடுகளையும் சொல்லியும் தருகிறான். ஆர்வமாக கற்றுக்கொள்கிறார். வழக்கம் போல ஒருநாள் வீட்டுக்கு வரும் பொழுது அவர் உட்கார்ந்தபடியே இறந்து கிடக்கிறார். அவருடைய இறுதி சடங்கின் பொழுது, அவருடைய போனை யாருக்கும் தெரியாமல், அவருடைய உடையில் வைத்துவிடுகிறான். அப்படியே புதைத்தும்விடுகிறார்கள்.

அவனுடைய மேற்படிப்புக்கு தேவையான பெரும்தொகையை அவர் தன் உயிலில் எழுதி வைத்திருக்கிறார். பள்ளியில் ஒரு பையன் இவனை சீண்டிக்கொண்டு இருக்கிறான். ஒருநாள் இருவருக்கும் கைகலப்பு ஆகிவிடுகிறது. கோபத்தில் செத்துபோய் புதைக்கப்பட்ட அவருக்கு செல்போனில் நடந்ததை சொல்லி, அவன் தண்டிக்கப்படவேண்டும் என்கிறான். அன்றிரவு அவன் மர்மமான முறையில் கொல்லப்படுகிறான். இவன் பதட்டமடைந்துவிடுகிறான்.

அதற்கு பிறகு என்ன ஆனது என்பதை சுவாரசியமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.
****

பொதுவாக படங்கள் நன்றாக இருக்கிறதா என்பதை நண்பர்கள் யாராவது பரிந்துரை செய்தால், யாராவது முகநூலில் எழுதினால், IMDB மதிப்பீடு ஏழாக இருந்தால் பார்க்கலாம் முடிவு செய்வேன். ஆனால் ஹாரர் படங்களுக்கு மட்டும் ஏழு வைத்தால், பெரும்பாலான படங்கள் தேறாது. அதற்கு மட்டும் ஆறு என குறைத்துக்கொண்டுள்ளேன். (பெரிய மனசு ) ஆறுக்கு குறைந்தால் வாய்ப்பில்லை. இந்தப் படம் ஆறு என்பதாலும், தமிழ் டப்பிங்கில் இருந்ததாலும் பார்க்க ஆரம்பித்தேன்.

நாவலை அடிப்படையாக வைத்து எடுத்திருக்கிறார்கள். மொத்தப் படமும் மிக மிக மெதுவாகத் தான் நகர்கிறது. மிக மிக சுமாரான படம். இந்தப் படத்தைப் பற்றி எழுதுவதற்கு காரணம் யாரும் என்னை மாதிரி ஏமாந்து அந்தப் பக்கம் போய்விடக்கூடாது என்பதற்காக தான்! 🙂

நெட்பிளிக்சில் இருக்கிறது.

கண் தெரியாத இசைஞன் - நாவல்18ம் நூற்றாண்டு. ரசியாவின் ஒரு பகுதியான் உக்ரைனில் ஒதுக்குப்புறமான ஒரு கிராமம். (இப்பொழுது பிரிந்து சண்டையிட்டு கொண்டு இருக்கிறார்கள்.)

அங்கு வசதிக்கு எல்லாம் குறைவில்லாத பண்ணை வீட்டில்.. ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. சில நாட்களில் அந்த குழந்தைக்கு கண் தெரியவில்லை என தாய் கண்டுப்பிடித்துவிடுகிறாள். மருத்துவரும் உறுதி செய்கிறார்.

அந்த குழந்தை மெல்ல மெல்ல வளர்கிறான். அவனின் தாயும், அவனின் தாய் மாமாவும் பார்த்து பார்த்து செய்கிறார்கள்.

நமது உலகம் காட்சிகளால் ஆனது. அவன் உலகமோ ஒலிகளால் ஆனது. வாசனைகளால் ஆனது.

தன் பண்ணையில் வேலை செய்யும் ஒருவரின் புல்லாங்குழல் இசை அவனுக்கு அத்தனை வசீகரமானதாய் இருக்கிறது.

புல்லாங்குழல் கற்கிறான். தாய் மூலமாக பியானோ கற்றுக்கொள்கிறான். அருகில் குடி வந்து இருக்கும் சிறுமி விரைவிலேயே நல்ல தோழியாகிறாள்.

இளைஞனாகிறான். எல்லாம் இருந்தும் கண் தெரியவில்லை என்கிற காரணத்தால் கழிவிரக்கத்தில் சிக்கி, தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறான். மெல்ல மெல்ல மேலே வந்து கொண்டிருந்தவன் வீழ்ச்சியை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறான்.

அதில் இருந்து மீண்டானா? தன் இசைத் திறமையை உலகு அறிய செய்தானா? என்பதை விரிவாக எழுதியிருக்கிறார்.

உலகப் புகழ் பெற்ற நாவல் இது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறது.

கண் தெரியாத ஒருவன் உலகை எப்படி உணர்கிறான் என்பதை அற்புதமாக எழுதியிருக்கிறார்.

குழந்தைகளை தங்கள் கைகளுள்ளேயே பொத்தி பொத்தி வளர்க்கிற, வளர்க்க நினைக்கிற பெற்றோர்கள் நிச்சயம் படிக்கவேண்டிய புத்தகம்.

இதன் ஆசிரியர் விளாதீமிர் கொரலேன்கோ. ஜார் மன்னன் ஆட்சியில் அராஜகத்தை எதிர்த்திருக்கிறார். அதற்காக சைபீரியாவிற்கு அனுப்பப்பட்டிருக்கிறார். அவருடைய சொந்த கதை இன்னும் ஈர்ப்பாய் இருக்கிறது.

வெளியீடு : விகடன்
பக்கங்கள் : 230
விலை : ரூ. 115

ரயில் : மாணவர்களின் சாகசங்களும் பலிகளும்!நான் வேலை விசயமாக வழக்கமாக செல்லும் ஒரு நிறுவனத்தில் இருந்து நேற்று தகவல் சொன்னார்கள். அங்கு வேலை செய்த இருபத்தியொரு வயது இளைஞர் தன் நண்பர்களுடன் கடற்கரைக்கு போய்விட்டு திரும்பும் பொழுது, ரயிலில் சாகசம் செய்திருக்கிறார். அடிபட்டு உடனே இறந்துவிட்டாராம். அந்த இளைஞரிடம் பேசியிருக்கிறேன். நல்ல உற்சாகமான இளைஞர். பெரிய இழப்பு தான்.


ஒரு வாரத்திற்கு முன்பு முகநூலில் ஒரு காணொளி பார்த்தேன். ஒரு இளைஞர் வேகமாக செல்லும் ரயிலில் வெளியே காலை நீட்டி ஏதோ சாகசம் செய்கிறார். அடுத்து வந்த ரயில் கம்பத்தை அவர் கவனிக்கவில்லை. அதில் பலமாக மோதி அடிபட்டு கீழே விழுகிறார். கண்டிப்பாக இறந்திருக்க வாய்ப்பு அதிகம். அடி அப்படி!

இரண்டு நாட்களுக்கு முன்பு, கொரட்டூர் ரயில் நிலையத்தில் ரயிலேறும் பொழுது, என்னுடன் ஒரு ரயில்வே போலீசும் ஏறினார். அங்கிருந்தவர்களை நோட்டம் விட்டார். ஐம்பது வயதுத்தக்க ஒருவர் “இவங்க இரண்டு பேர் தான் சார்” என்றார். அவர்கள் இருவரும் பள்ளி மாணவர்கள். பள்ளி யூனிபார்மில் இருந்தார்கள். இருவரையும் அழைத்துக்கொண்டு அடுத்து வந்த நிறுத்தத்தில் இறங்கினார். மிரட்டி அனுப்புவாரா? பெற்றோருக்கு தெரிவித்து வரவழைப்பார்களா? வழக்கு போடுவார்களா? தெரியவில்லை.

இளைய தலைமுறை யூடியூப் பார்த்து, பல சாசகங்களை ரயிலில் செய்கிற செய்திகள் அடிக்கடி வருகின்றன. அதே போல அடிப்பட்டு பலியான செய்திகளும் வந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு காலாண்டும் ரயில்வே சென்னை மின்சார ரயில்களில் அடிபட்டு இறந்தவர்களின் பட்டியலை வெளியிடும். இப்படி சாகசம் செய்தவர்கள், தண்டவாளம் கடக்கும் பொழுது அடிப்பட்டு இறந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் என அந்த பட்டியல் நீளும். 90 நாட்களுக்கு 90 பேர் சராசரியாக இறப்பார்கள் என்பது தான் இதில் கவனிக்கத்தக்கது.

இப்படி ரயிலில் சாகசம் செய்வது போலவே, பேருந்துகளிலும் சாகசம் செய்வது நடந்துகொண்டு தான் இருக்கிறது. பலியாகிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இப்பொழுது பல பேருந்துகளில் தானியங்கி கதவு போட்டு மூடிவிடுகிறார்கள். இப்படி மூடிவிடும் பொழுது சாகசம் செய்ய வாய்ப்பில்லை. இதை ஏன் போக்குவரத்து கழகம் இத்தனை ஆண்டுகள் கழித்து நடைமுறைப்படுத்துகிறது என்பது ஆச்சர்யமாக இருந்தது.

மின்சார ரயில்களில் செய்கிற சாகசம் மெட்ரோ ரயிலில் இல்லை தானே! ஏனென்றால், அங்கு கதவுகள் தாழிடப்படுகின்றன. அப்படி என்றால், மின்சார ரயில்களிலும் தானியங்கி கதவுகள் போட்டு மூடிவிடலாம் தானே? ஏன் தாமதப்படுத்துகிறார்கள்? விஞ்ஞான வளர்ச்சி எவ்வளவோ வளர்ந்துவிட்டது. செய்வதற்கு தான் அக்கறையில்லை.

ரயில்வே கார்டுகளின் தொழிற்சங்க தலைவர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ரயில் விபத்துக்களை எப்படி தவிர்ப்பது என நிறைய பரிந்துரைகளை கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் ”வந்த பின் தான் காப்போம்” என்பது போல, ஒவ்வொரு பெரிய விபத்து நடந்து, பல உயிரிழப்புகளுக்கு பிறகு தான் எங்களது பரிந்துரைகளில் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்துகிறார்கள் என நொந்துகொண்டார்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ரயில்வே துறையில் தனியார்மயத்தை விரைவுப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். சேவை என்கிற கண்ணோட்டம் காணாமல் போய், வியாபாரம், லாபம், மேலும் லாபம் என்கிற கண்ணோட்டம் தான் எஞ்சும். மக்கள் மீது எல்லாம் அக்கறை கொள்ள வாய்ப்பேயில்லை.

இளைஞர்களின் சாசகத்தை எப்படி பார்ப்பது? இளமைக்காலம் என்பது துடிப்பான காலம். எதையாவது உற்சாகமாக செய்ய தூண்டும் வயது அது. அவர்களுடன் கலந்துரையாடவேண்டும். அவர்களை ஆரோக்கியமான, சமூக அக்கறை கொண்ட செயல்களில் ஈடுபடுத்தப்படவேண்டும். அதற்கு ஆரோக்கியமான முற்போக்கு மாணவர் அமைப்புகள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இயங்கவேண்டும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அரசியலை காயடித்துவிட்டார்கள். எல்லா மாணவர் அமைப்புகளையும் தடை செய்து வைத்திருக்கிறார்கள். விளைவு. அவர்களின் துடிப்பான இளமைக் காலம் என்பது இப்படி அபாயங்களில் போய் மாட்டி தங்கள் உயிரை பலிகொடுக்கிறார்கள்.

மாணவ சமூகம் தான் வருங்கால சமூகம். அவர்கள் சரியான வழியில் கொண்டு வழிநடத்தப்படவேண்டும். அதற்கு மாணவர் அமைப்புகள் உற்சாகமாய் செயல்பட வைப்பதற்கான வேலைகளை செய்யவேண்டும்.

பெயரில் என்ன இருக்கிறது?பெரியார் இதை உடைப்பதற்கு முயற்சி செய்தார். குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லும் பொழுது “கும்பிடறேன் சாமி” என பெயர் வைத்தார். சுருக்கினாலும், ”கும்பிடறேன்” என அழைக்கவேண்டும். அல்லது ”சாமி” என அழைக்கவேண்டும்.

***

வழக்கமாக வேலைக்காக செல்லும் ஒரு அலுவலகத்தில் ஒரு புதிய பெண் ஊழியர் புதிதாக சேர்ந்திருந்தார். அறிமுகத்திற்காக பெயரை கேட்ட பொழுது, “குயிலி” என்றார். ஆனால், அதில் ஒரு சின்ன திருத்தம் இருந்தது. “குயிலியா?” என்றேன். “குயினி” என திருத்தினார். வித்தியாசமான பெயர், புரியாத பெயர் என்றால் பெயர் காரணம் கேட்பது வழக்கம். நினைவில் வைத்துக்கொள்ளவும் பயன்படும். மருத்துவம் பார்த்த மருத்துவரின் பெயர் ராசாத்தியாம். அவருடைய பெயர் வைக்கவேண்டும். அதை “நவீனப்படுத்தி” குயினி என வைத்துவிட்டார்களாம்.

சமீபத்தில் ஒரு பள்ளிக்கு போயிருந்தேன். எல்.கே.ஜி வகுப்பு அது. அங்கிருந்த கரும்பலகையில் இருபது பெயர்களை வரிசையாக எழுதிப்போட்டிருந்தார்கள். அக்‌ஷயா, சாதனா, சந்தோசிகா, தீப்ஷிகா, வருண்காந்த், பிரார்த்தனா, வித்யா, முக்தாஸ்ரீ என நீண்டு போய்க்கொண்டு இருந்தது. எந்த பெயரும் தமிழில் இல்லை. ஆச்சர்யமாக இருந்தது.

சில வீடுகளில் சிலருக்கு இரண்டு பெயர் இருக்கும். சான்றிதழில் ஒரு பெயர். அழைப்பது ஒரு பெயராக இருக்கும். பக்கத்து வீட்டு நண்பனை ”கண்ணா” என அழைப்போம். சான்றிதழில் ”முத்துக்கிருஷ்ணன்” என இருக்கும். அவனின் தங்கையை ”பாலா” என அழைப்போம். சான்றிதழில் ”நல்லதாய்” என இருக்கும்.

பெயர் வைப்பது என்பது தன் குடும்பத்தின் மூத்தவர்களின் பெயரை, தனது குலசாமிகளின் பெயரை, கடவுளர்களின் பெயரை வைத்த தமிழ் மக்களுக்கு என்ன ஆயிற்று? எப்பொழுதிலிருந்து இப்படிப்பட்ட ”நவீனத்திற்கு” மாறினார்கள் என தெரியவில்லை. குழந்தை பிறந்ததும், நேரத்தை, நாளைக் குறித்துக்கொண்டு, ஜாதகக்காரர்களிடம் போய் என்ன எழுத்தில் பெயர் வைப்பது என ”பொறுப்பாய்” கேட்கிறார்கள். எல்லா ஜோசியக்காரர்களும் சமஸ்கிருதமயமாதலுக்கு ஆதரவானவர்களாக எப்பொழுது மாறிப்போனார்கள் என தெரியவில்லை. அவர்கள் சொல்கிற முதல் எழுத்தே சிக்கலானதாக இருக்கிறது. அதன் வழி பெயர் வைப்பவர்களும் மேலே உள்ள பெயர்கள் போல வைக்கமுடியும்.

மலையாளத்தில் தொலைக்காட்சியில் ஒருவர் பிரபலம். உலகில் எங்கோ இருக்கும் ஒரு பிரபலத்தை நீங்கள் மனதில் நினைத்துக்கொள்ளவேண்டும். அவர் 25 கேள்விகள் கேட்பார். அதற்கு நீங்கள் ஆம், இல்லை என சொன்னால் போதும். 25 கேள்விகள் முடிவதற்குள் அவர் நீங்கள் யாரை நினைத்தீர்கள் என்பதை பெரும்பாலும் சரியாக சொல்லிவிடுவார். அப்படித்தான் பெயரும். பலரின் இயற்பெயரை சொன்னால், மூன்றே கேள்விகளில் அவர் எந்த மண்ணைச் சார்ந்தவர் என அடையாளப்படுத்திவிடலாம்.

சிவகார்த்திகேயன் நடித்த படம் ”எதிர்நீச்சல்”. படத்தில் நாயகனுக்கு பெயர் குஞ்சிதபாதம். (குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்டு, நடராஜருக்கு அணிவிக்கப்படுவது. இந்த குஞ்சிதபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன், மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை) அந்த பெயர் சொல்லப்படும் பொழுதெல்லாம் சுருங்குவான். சொல்ல தயங்குவான். பிறகு ஒரு சமயத்தில் பெயரையே மாற்றிக்கொள்வான். தனக்கென ஒரு அடையாளம் வேண்டுமென்பதற்காக பெருமுயற்சி செய்து, வெற்றி அடையும் பொழுது, எல்லா ஊடககாரர்களும் மைக்கை முன்னால் நீட்டும் பொழுது… தன்னுடைய இயற்பெயரையே சொல்லுவான். அதற்கு காரணம் சொல்லும் பொழுது ”பெயர் என்பது மற்றவர்கள் அழைப்பதற்கு மட்டுமல்ல! அது ஒரு தலைமுறையின் அடையாளம்” என்பான்.

எப்படி பெயர் வைக்கவேண்டும் என மனுதர்மம் சொல்கிறது என்றால்… பிராமண சாதியில் பெயர் மங்களகரமான பெயராக, சத்திரியர் என்றால் வீரம் கொப்பளிக்கிற மாதிரி, வைசியர் என்றால் செல்வம் கொழிப்பதாக, சூத்திரர் என்றால் அடிமைத்தனம் கொண்ட பெயராக இருக்கவேண்டுமாம். பஞ்சமர்களுக்கு முழுப்பெயரும் தாங்குகிற உரிமை கிடையாது என்கிறது.

இதெல்லாம் அந்த காலம். இப்பொழுது அப்படி இருக்கிறதா? எனக் கேட்டால்… குப்புசாமி என்றால், இப்பொழுதும் குப்பு என அழைக்கிறார்கள். இசக்கியம்மாள் என பெயர் வைத்தால்… இசக்கி என்று தான் அழைக்கிறார்கள். அது இயல்பாக வருவதில்லை. இப்படி அழைக்கும் வழக்கம் வருணாசிரமத்திலிருந்து வருகிறது. ஒடுக்கப்பட்டவரை பாதிப் பெயர் சொல்லித்தான் அழைக்கவேண்டும் என்கிறது மனு தர்மம்.

பெரியார் இதை உடைப்பதற்கு முயற்சி செய்தார். குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லும் பொழுது “கும்பிடறேன் சாமி” என பெயர் வைத்தார். சுருக்கினாலும், ”கும்பிடறேன்” என அழைக்கவேண்டும். அல்லது ”சாமி” என அழைக்கவேண்டும். ஆதிக்கசாதிக்காரர்கள் மரியாதை குடுத்து பழகட்டும் என்றார். ஆனால் ஆதிக்கச்சாதி புத்தி குரூரமானது. “கும்பிடறேன் சாமி”யை சுருக்கி ”கும்பிடு” என அழைத்தது.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு செத்த பிறகு சொர்க்கம் என போதிக்கும் இந்து மதம், வாழும் பொழுதே இந்த மண்ணில் அவர்களுக்கான “சொர்க்கத்தை” படைக்க பார்க்கிறார்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் காவி பாசிஸ்டுகள். காவி இருளை சாத்தியமான எல்லா வழிகளிலும் பரப்ப முயல்கிறார்கள். காவி இருள் மொத்தமாக சமூகத்தின் மீது கவிழ்ந்துவிட்டால், அதில் இருந்து மீள்வது பெரிய போராட்டமாகிவிடும்.

ஆக பெயரில் என்ன இருக்கிறது? நம்மைச் சுற்றி உள்ள அனைத்திலும் அரசியல் இருக்கிறது. பெயரிலும் அரசியல் இருக்கிறது. பெயரில் நமது பண்பாடு இருக்கிறது. நமது அடையாளம் இருக்கிறது. மொழியியலில் மக்களால் பேசப்படாத மொழியை ”செத்த மொழி” என்பார்கள், அப்படி செத்துப்போன மொழியான சமஸ்கிருத மொழிக்கு செம்மொழிக்கு சொந்தக்காரர்களான நாம் ஏன் உயிர்கொடுப்பானேன்.

ஆகையால் சமஸ்கிருத, வடமொழிப் பெயர்களை கவனமாக தவிர்ப்போம். அழகு தமிழில் நல்ல பெயர்களை நம் குழந்தைகளுக்கு சூட்டுவோம். அழைப்பதில் கூட முழுப்பெயரை சொல்லி அழைப்போம். பட்டப்பெயர் வேண்டாம். பெயர் வைப்பதிலும், அழைப்பதிலும் புதிய பண்பாட்டை கடைப்பிடிப்போம்.

பின்குறிப்பு : சில தகவல்கள் தந்து உதவிய அகத்தியலிங்கம் அய்யா அவர்களுக்கு நன்றி.

சாப்பாடு


நேற்று நானும் நண்பரும் சென்னை அண்ணாநகரில் இருந்த சங்கீதா உணவகத்தில் சாப்பிட சென்றிருந்தோம். சங்கீதா சாப்பாடு என ரூ. 155 என இருந்தது. இருவரும் ஆர்டர் செய்தோம்.


எதிரே 40+ல் ஒருவர் அமர்ந்தார். அவரும் அதே சாப்பாடு ஆர்டர் தந்தார். 5 நிமிடத்தில் வந்து சேர்ந்தது. "நெய் கிடைக்குமா?" என்றார். அதற்கு கூடுதல் கட்டணம் ரூ. 25 என்றார்கள். "உடனே வேண்டாம்" என்றார். மனசுக்குள் நெய் இல்லையென்றால், சாப்பிட்ட திருப்தி கிடைக்காது என ஓடியிருக்கும் போல! இரண்டு நிமிடங்களில் "நெய் கொடுங்க‌! நிறைய கொண்டு வாங்க!" என்றார். "அளவு தான் சார்" அடக்கமாய் அவர்.

"கூடுதல் சாம்பார் கொடுங்க!" என வாங்கி நெய் ஊற்றிச் சாப்பிட்டுக் கொண்டே... தன்னை கடந்த பணியாளரிடம் "ஜெயின் சாப்பாடு இங்கு கிடைக்குமா?" என்றார். "இதுவே ஜெயின் சாப்பாடு தான்!" என்றார். சாப்பிட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு கொஞ்சம் குழப்பமாகிவிட்டது.

எதிரில் இருந்தவரிடம் "ஜெயின் சாப்பாடுன்னா என்ன சார்?" என சந்தேகம் கேட்டோம். “காரம் மிக குறைவாக இருக்கும். பூண்டு, வெங்காயம் பயன்படுத்தமாட்டார்கள்” என்றார்.

“அது இருந்தா ஏன் சார்?” என விடாமல் கேட்டோம். "அது ப்ராணத்திற்கு கெட்டது" என்றார்.

"ஜெயின் உணவில் பாசிட்டிவ், நியூட்ரல் நெகட்டிவ் உண்டு" என்றார். எங்களிடம் பேசிக்கொண்டே..."கூடுதலாக பாயாசம், அப்பளம் வேண்டும். அதற்கு கூடுதலாக சார்ஜ் செய்ய மாட்டீர்கள் தானே!" என கேட்டார்.

பணியாளர் இல்லை என்றார். பல உணவகங்களில் கொடுக்கப்படும் இனிப்பு கடனுக்காக கொடுப்பார்கள். கொடுத்ததையே சாப்பிட முடியாத பொழுது.. கூடுதலாக எங்கே கேட்க?" 🙂

ஆனால் அவர்கள் தந்த சேமியா பாயாசம் நல்ல சுவையுடன் இருந்தது. நாமும் கேட்கலாமா என யோசனை வந்தது. உள்ளிருந்து ஒரு குரல் வேண்டாம் எனவும் சொல்லிவிட்டது. மனச்சாட்சி சொன்னால் கேட்டுத்தானே ஆகவேண்டும்.

இப்படி அவரிடம் பேசிக்கொண்டு இருந்ததில் கொஞ்சம் நெருக்கம் ஆகிவிட்டோம். அவர் உரிமையாய்... "எனக்கு தொண்டை சரியில்லை. இந்த தயிரையும், மோரையும் எடுத்து கொள்கிறீர்களா?" என்றார்.

நான் எப்பொழுதும் தயிர் சாப்பிடுவதில்லை. சாப்பிட்டால் இரண்டு நாட்கள் தும்மல்
வந்து என் ப்ராணத்தை சிக்கலாக்கிவிடும். ஆகையால் என் தயிரை நண்பரிடம் ஒப்படைத்து இருந்தேன். அதை சுருங்க சொல்லி, வேண்டாம் என மறுத்தோம். கொடுத்த கெட்டித் தயிரை பயன்படுத்த முடியாத சோகம் அவர் கண்ணில் தெரிந்தது.

கூடுதலாக ரசம் அவர் கேட்டு கொண்டிருந்த பொழுது, நாங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டோம். பணியாளர் "கூடுதலாக சாப்பாடு வாங்கிக்கொள்ளலாம் சார்" என்றார் எங்களிடம்.

போதும் என சொல்லி இருவரும் எழுந்தோம். எதிரில் இருந்தவர் மனதில் குறித்துக்கொண்டிருப்பார். கொடுத்த காசுக்கு திருப்தியாக சாப்பிடுகிற மனுசனிடம் இதை சொல்வது நமது கடமை. "சார் கூடுதலாக சாப்பாடு தருகிறார்களாம்" என்றேன். மகிழ்ச்சியாக தலையாட்டினார்.

October 22, 2022

ஆந்திர காரம்!


ஒரு பெண்ணை ஒரு இளைஞன் ரயிலில் தள்ளிவிட்டு கொடூரமாக கொன்றுவிட்டான் என நாம் இங்கும் பதறிக்கொண்டு இருக்கிறோம்.


ஆந்திராவில் கல்லூரியில் படிக்கும் பொழுது பையனும், பெண்ணும் காதலித்து இருக்கிறார்கள். வீட்டில் இருவரும் சொல்லியிருக்கிறார்கள். இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால் பெற்றோர்கள் ஏற்கவில்லையாம். விளைவு. ஜூன் 5ம் தேதி அன்று காதலி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

இந்த மாதம் 15ம் தேதி அந்த பையனை காணவில்லையாம். தேடினால், அந்த காதலியின் அப்பா அந்த பையனை கொன்று தன் பெண்ணின் சமாதி அருகே அவனையும் புதைத்துவிட்டாராம்.

படிக்க படிக்க டெரராக இருக்கிறது.

பாரசிட்டமாலும் பட்ஜெட்டும்!


பாரசிட்டமாலை ஹோமியோபதி மருத்துவர்கள் வெறுப்பார்கள். காரணம். அது மருந்தே இல்லை. செயற்கையாக உடலில் வியர்வை சுரப்பிகளை உருவாக்குகிறது என்பார்கள். ஜூரம் ஒருவருக்கு வருகிறது என்றால், அது பல காரணங்களால் வரலாம். அதன் ஜூரத்தின் தன்மை பொறுத்து எதனால் வருகிறது என்பதை கண்டறிந்து மருந்தை ஹோமியோபதிகாரர்கள் மருந்தை தருவார்கள். பாரசிட்டமால் என்ற கல்லைத் தூக்கி போட்டு ஜூரத்தை காணாமல் போக செய்தால் கோபம் வரத்தானே செய்யும்.


ஆனால் இந்த மாநிலத்தின் முதல் அமைச்சருக்கே ஜூரம் என்றால், எதனால் வருகிறது என டெஸ்ட்டுகள் மூலம் சோதித்து அறியாமல், தொலைபேசியிலேயே பாரசிட்டமால் கொடுங்க! என டாக்டர் சொன்னார் என்றால், பாரசிட்டமால் மீது ஒரு மரியாதை வருகிறது. 🙂

ஜெ. மரணம் குறித்த ஆறுமுகசாமி அறிக்கையை நிறைய விவாதிக்கிறார்கள். இந்த விசாரணை தொட்டு தொட்டு தமிழ்நாட்டை கொள்ளையடித்து ஒளித்து வைத்திருக்கும் பணத்தை, சொத்தை எல்லாம் கைப்பற்றினால் ஐந்து வருடத்திற்கு தமிழ்நாட்டில் வரியே இல்லாமல் பட்ஜெட் போடலாம். இவர்கள் செய்யமாட்டார்கள். சோகம்.

October 20, 2022

ரிஸ்க் எடு தலைவா! – சிபி. கே. சாலமன்


மனிதர்கள் தங்களது வாழ்க்கையில் தங்களுக்கென்று ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதை மீறி அவர்கள் பெரும்பாலும் வருவதில்லை. வரவிரும்புவதில்லை. அதையும் மீறி வருபவர்கள் ஜெயிக்கிறார்கள். புதிய பாதையை உருவாக்குகிறார்கள். ஆசிரியர் இந்த கருத்தைத் தான் ரிஸ்க் எடு தலைவா! உன்னுடைய ”பாதுகாப்பு எல்லையை” விட்டு வெளியே வா! என பல்வேறு சுவாரசிய உதாரணங்களுடன் விரிவாக எழுதியிருக்கிறார்.


துவக்கநிலையில் இருப்பவர்களுக்கு நன்றாக விளங்கும்படியும், விரிவாகவும் எழுதியிருக்கிறார். சிலர் படோபகரமாக வார்த்தை ஜாலங்களுடன் இருக்கும். இதன் ஆசிரியர் அப்படி எழுதவில்லை. படிப்படியான வளர்ச்சி என்கிற எதார்த்தமாக எழுதியிருப்பது சிறப்பு. ஓரிடத்தில் சொல்கிறார். “நாம் அடைய விரும்பும் மாற்றத்துக்கு ஏற்றவாறு நாமும் மாறவேண்டியிருக்கும்”. இன்னொரு இடத்தில் சொல்கிறார். ”ஒருவர் அவராகவே விரும்பி மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வரை அதே நிலையில் நீடித்திருப்பார். சுய விருப்பம் இல்லாமல் மாற்றம் நிகழாது.”

அனைத்து பன்னாட்டு நிறுவனங்களிலும் ”சேஞ்ச் மேனேஜ்மெண்ட்” துறை இருக்கிறது. புதிய மாற்றங்களை மேலிருந்து கடைநிலை வரை இருக்கும் ஊழியர்களை அதற்கு தயார்ப்படுத்துவது இதன் வேலை என்கிறார்.
ஜப்பானினின் கெய்சன் தொழிற்சாலையில் உற்பத்தியை பெருக்குவதற்கு பயன்படுத்துகிற ஒரு அணுகுமுறை. அதைப் படிக்க படிக்க இன்னும் தெரிந்துகொள்ளவேண்டும் என ஆர்வமாயிருக்கிறது.` கெய்சனின் பத்துக் கட்டளைகளில் ஒன்று. “ஏதாவது தவறு செய்தால் அதைத் திருத்திக்கொள்ளுங்கள். ஒரே தவறு மீண்டும் வரக்கூடாது. புதிய தவறுகளை செய்யலாம்.” ஒரே தவறை தவறு என உணர்ந்த பிறகும், வாழ்நாள் முழுக்க செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆச்சர்யமாய் இருக்கும்.
இந்த உலகில் எல்லாமும் மாறிக்கொண்டிருக்கின்றன. அதனால் தான் “ஒரே ஆற்றில் இரண்டு முறை யாராலும் குளிக்க முடியாது” ஜென் கூறுகிறது. மாற்றத்திற்கு தயாராவோம். இல்லையெனில் குளம் குட்டை என தேங்கிப்போய்விடுவோம்.

புத்தகத்தின் வடிவத்தில்… ஆசிரியரின் எழுத்து வெகுஜன இதழ்களில் பரவலான மக்கள் படிப்பதற்கான எழுத்தாக இருக்கிறது. புத்தகத்தை கையில் எடுத்து இரண்டு நாட்களில் முடித்துவிட்டேன். இவ்வளவு எளிமையாக எழுதுகிறார் என்றால், நன்றாக வாசிக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ளலாம். வாழ்த்துகள்.

பத்திரிக்கையில் இப்பொழுது எல்லாம் ஒரு நோய் இருக்கிறது. சரளமாக இங்கிலீஷ் வார்த்தைகள் கலந்து எழுத அனுமதிக்கிறார்கள். தமிழும் தெரியாத, இங்கிலீஷும் தெரியாத ஒரு தலைமுறை நம் சமூக அமைப்பில் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை மனதில் கொண்டு இப்படி எழுதுகிறார்கள். இதில் ஒரு கசப்பான உண்மை என்னவெனில், அவர்கள் யாரும் படிப்பதேயில்லை. அவர்கள் எல்லாம் காணொளி வடிவத்திற்கு மாறிவிட்டார்கள்.

புத்தகத்தில் பக்கத்திற்கு பக்கம் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள். முதல் பதிப்பிலேயே இத்தனை கோளாறுகள் இருக்ககூடாது. இது இரண்டாவது பதிப்பு எனவும் போட்டிருக்கிறார்கள். எப்படி இவ்வளவு அலட்சியமாக வெளியிட்டு இருக்கிறார்கள்? ஆச்சர்யம்.

இந்த நல்ல புத்தகத்தை Vinoth Meenu பிறந்தநாள் பரிசாக அனுப்பிவைத்தார். அவருக்கு நன்றி.

பக்கங்கள் : 110
ஆசிரியர் : சிபி. கே. சாலமன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

October 15, 2022

கூட்டு அரசாங்கம் - தோழர் மாவோ - நூல் அறிமுகம்

 


இட்லரை வீழ்த்திய ரசிய சோவியத் படைகள் ஜெர்மனிக்குள் நுழைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில், சீனாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போரிட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆளும் கோமிங்டாங் கட்சி ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களை விட்டுவிட்டு, போராடும் மக்களை ஒடுக்குவதால், அதனை எதிர்த்தும் போரிட்டுக்கொண்டு இருந்தார்கள்.
கோமிங்டாங் கட்சியின் தலைவராக சன்யாட்சென் இருந்தவரை ”ரசியாவுடன் ஒத்துழைப்பு, கம்யூனிஸ்ட் கட்சியினுடன் கூட்டுறவு, விவசாயிகள், தொழிலாளர்களுக்கு உதவி” என்ற கொள்கையை கடைப்பிடித்தார். அவர் இறந்த பிறகு கோமிங்டாங் கட்சி அப்படியே யூடர்ன் போட்டு பொதுவுடைமையாளர்களையும், போராடுகிற ஜனநாயக சக்திகளையும் ஒடுக்க ஆரம்பித்தது.
 
இப்பொழுது மக்களுக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒருவழி – பிற்போக்காளர்களின் ஒரு கட்சி ஆட்சி அதிகாரம், கைது, ஒடுக்குமுறை. இந்த வழி போனால் சீனா மிகவும் பின்தங்கும். இன்னொரு வழி – சீன கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை, சுதந்திர சீனா. நாடு மிகப்பெரியதாக வளர்ச்சியடையும்.
சீன பொதுவுடைமை கட்சியின் கொள்கை மிக தெளிவானது. பெரும் நிலப்பிரபுக்கள் பெரும் முதலாளித்துவ வர்க்கம் – இவர்களின் சர்வாதிகாரம் கூடாது. பழைய ரக ஜனநாயக சர்வாதிகாரத்தை – சுத்த தேசிய முதலாளித்துவ அரசை நிறுவுவது அசாத்தியம். ஒரு சோசலிச அரசிற்கு அவசியமான சமூக, பொருளாதாரச் சூழ்நிலைகள் இன்னும் இல்லாத தற்போதைய கட்டத்தில் சோசலிச அரசை நிறுவுவதும் அசாத்தியம். ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களை தோற்கடித்த பின்னர் பெரும்பான்மை மக்களை அடித்தளமாக கொண்ட ஒரு ஐக்கிய முன்னணி – ஜனநாயக கூட்டணி அரசு ஒன்றை நிறுவப்படுவது தான் சரி.
 
பொதுவுடைமையாளர்கள் உள் ஒன்று வைத்து வெளியே ஒன்றை பேசுவதில்லை. இதில் சந்தேகம் வேண்டாம் என அப்பொழுது உலவும் வதந்திகளுக்கு தெளிவான வாதங்களை முன்வைக்கிறார்.
பொதுவுடைமையாளர்களுக்கும் தெளிவுப்படுத்துகிறார். நாம் செய்யப்போவது சோசலிச புரட்சி அல்ல! புதிய ஜனநாயக புரட்சி தான். அதற்காக கவனம் கொடுத்து உழைப்போம் என்கிறார். கட்சிக்குள் அரசியல் கல்வியை பரப்புவோம். மக்களுடன் நெருக்கமாக இருப்போம். கடந்து வந்த போராட்ட பாதையில் எத்தனையோ பொதுவுடைமையாளர்கள் தங்கள் உயிர்களை தந்திருக்கிறார்கள். மக்களை அமைப்பாக்குகிற, அரசியல்படுத்துகிற பணிக்கு நம்மிடம் பொருத்தமில்லாத குணங்களை எல்லாம் கவனமாக களைந்துகொள்வோம் என்கிறார். பெரும்பாலான மக்களை, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைப்பது அவசியம் என்பதால் ஜனநாயக வேலை பாணியை வளர்த்து கொள்வோம் என்கிறார். இதன் வழியே போராடி 1949ல் மக்கள் சீனா மலர்ந்தது என்பது வரலாறு.
 
நமது நாடும் பல்வேறு ஏகாதிப்பத்தியங்களாலும், தரகு முதலாளிகளாலும் கடுமையாக சுரண்டப்பட்டு வருகிறது. தங்களுக்கு அடிபணிந்து சேவை செய்ய கடந்த எட்டு வருடங்களாக காவி பாசிஸ்டுகளை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இந்த ஹைபிரிட் கூட்டணி இந்தியாவின் பொதுச்சொத்துக்களை கணக்கு வழக்கில்லாமல் சூறையாடுகிறார்கள். இயற்கை வளங்களை அழிக்கிறார்கள். தங்களுக்குள் பங்குப்போட்டு கொள்கிறார்கள் எதிர்த்து போராடும் மக்களையும், ஜனநாயக சக்திகளையும், புரட்சிகர சக்திகளையும் கடுமையாக ஒடுக்கிறார்கள். சிறையில் தள்ளுகிறார்கள். நம்முடைய நாட்டுக்கும் தேவை ஒடுக்கப்படும் பெரும்பான்மை மக்கள் பங்கெடுக்கும் ஒரு ஜனநாயக கூட்டரசாங்கம் தான்.
ஜனநாயக சக்திகளை எல்லாம் ஒன்றிணைந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய 
 முன்னணி கட்டி அதன் மூலம் ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவது என்று மேலிருந்து செயல்படும் அதே வேளையில், அந்த திட்டத்தை பருண்மையாக அமுல்படுத்த கீழிருந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் மக்கள் முன்னணியைக் கட்டுவது, தற்காப்பு குழுக்களைக் கட்டுவது ஆகிய வேலைகளை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்லவேண்டியுள்ளது. இதுவே மேலிருந்து செயல்படும் ஜனநாயக கூட்டரசுக்கு குறிப்பான திட்டத்தை நிறைவேற்ற கீழிருந்து நிர்ப்பந்தத்தை கொடுக்கும்.
 
இந்தப் புரிதலின் அடிப்படையில் தான் இடைக்கால திட்டமாகவும், இந்திய பாட்டாளி வர்க்கத்தின் அரசியலின் திசை வழியாகவும், ”கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம்! ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவோம்” என்ற முழக்கத்தை முன்வைக்கிறோம்.
 
ஒடுக்கப்படுகிற அனைவரும் ஒன்றிணைந்து எதிரிகளை வீழ்த்துவோம்! நமக்கான ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்!
 
பதிப்பகம் : கீழைக்காற்று வெளியீட்டகம்
பக்கங்கள் : 130
விலை : 110
புத்தகம் வாங்க : +91 89256 48977

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை!

 இந்த மாதத்தின் முதல் வாரத்தில் பிறந்தநாள் ”வாசிப்பை நேசிப்போம்” உறுப்பினர்கள் பலர் புத்தகங்கள் அனுப்பி பிறந்தநாள்
வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.
 
பிறந்தநாள் முடிந்து எட்டு நாட்களை கடந்தும், புத்தகங்கள் மூலம்
வாழ்த்துகள்
 
வந்தவண்ணம் இருக்கின்றன. என் பிறந்தநாள் நன்றி பதிவைப் பார்த்து.. ”ஏதோ படிக்கிற மனுசன் போல! இன்னும் படிச்சு அறிவை தேத்தட்டும். சமூகத்துக்கும் பயன்படட்டும்” என புத்தகங்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறீர்கள்.
புத்தகங்கள் அனுப்பி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், வரலாற்றுப் புத்தகம், தத்துவம் என எல்லாமும் விதவிதமான புத்தகங்கள். எல்லாவற்றையும் படித்து ஒவ்வொன்றாக பதிவு எழுதுவதற்குள் அடுத்த பிறந்தநாள் வந்துவிடும் என நினைக்கிறேன். 🙂