> குருத்து: April 2013

April 23, 2013

ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்! மே நாளில் டிஜிபி அலுவலகம் முற்றுகை!

சிறப்பு அகதி முகாம் எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
 

அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!

மே நாள் பேரணி, டி.ஜி.பி. அலுவலகம் முற்றுகை.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,


சிங்கள இனவெறிப் பாசிஸ்டு ராஜபக்சேவுக்கு எதிராக தமிழக மாணவர் போராட்டம் தோற்றுவித்த பொதுக்கருத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்காக, தாங்களும் மாணவர் கோரிக்கைகளை ஆதரிப்பது போல எல்லா ஓட்டுக்கட்சிகளும் நடிக்கின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, “இலங்கையின் மீது பொருளாதாரத் தடை, போர்க்குற்ற விசாரணை, பொது வாக்கெடுப்பு” என்று அடுத்தடுத்து சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றி, நடிப்பில் மற்றெல்லா ஓட்டுக் கட்சிகளையும் விஞ்சுகிறார்.

இராஜபக்சேவுக்கு எதிராக இந்த சவடால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற இதே காலகட்டத்தில்தான், சிறப்பு முகாம் என்ற சிறையிலிருந்து தங்களை விடுதலை செய்யுமாறு ஈழ அகதிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். “கணவனைப் பார்க்க வேண்டும்” என்ற ஒரு மிகச்சாதாரணக் கோரிக்கைக்காக தனது இரு பிள்ளைகளுடன் சிறப்பு முகாம் எதிரில் உண்ணாவிரதம் இருக்கிறார் ஒரு ஈழத்தமிழ்ப் பெண். போராட்டம் நடத்திய குற்றத்துகாக பிள்ளைகளுடன் அவரைக் கைதுசெய்து சிறை வைக்கிறது ஜெ அரசு. மனைவிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து சிறப்பு முகாமிலிருந்த கணவன் தூக்கமாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.

எந்த விதக் குற்றமும் இழைக்காத ஈழத்தமிழ் அகதிகள், சிறப்பு முகாம்கள் என்ற பெயரிலான தமிழகத்தின் முள்வேலிச் சிறைகளில் ஆண்டுக்கணக்கில் அல்லல்பட்டு வருகிறார்கள். இவர்களை விடுவிப்பதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் கையொப்பமிட்ட ஒரு அரசாணையே போதுமானது. ஆனால், சிங்கள அரசிடமிருந்து ஈழத்தமிழர்க்கு விடுதலை வாங்கித்தருவதாக சட்டமன்றத்தில் தீர்மானம் போடும் ஜெயலலிதா, சிறப்பு முகாம்கள் எனும் இந்தக் கொடுஞ் சிறைகளிலிருந்து ஈழத்தமிழ் அகதிகளை விடுவிக்க மறுக்கிறார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் சிறப்பு முகாம்கள் எனும் இந்த சித்திரவதைக் கூடங்களை ஈழத்தமிழருக்காக உருவாக்கியது யார் தெரியுமா? இன்று ஈழத்தாய் வேடமேற்றிருக்கும் ஜெயலலிதாவின் அரசுதான்.

இன்று ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போர் பலருக்கு, கடந்த பல ஆண்டுகளாக ஈழ அகதிகளுக்கு இங்கே இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் பற்றித் தெரியாது. தற்போது தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் வாழ்கின்றனர். தமது உடைமைகளைத் துறந்து, ஏதிலிகளாக வந்திறங்கிய இம்மக்களில் சுமார் 70,000 பேர் தமிழகமெங்கும் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தம் சொந்தப்பொறுப்பில் வெளியே வீடு எடுத்து தங்கியிருக்கின்றனர்.

இலங்கையிலிருந்து இங்கே வந்திறங்கும் ஈழத்தமிழ் மக்களை தமிழக அரசின் அதிகாரிகளும் போலீசும் அனுதாபத்துக்குரிய அகதிகளாகக் கருதுவதில்லை. சந்தேகத்துக்குரிய குற்றவாளிகளாகவே நடத்துகிறார்கள். நக்சல்பாரி இயக்கத்தினரை உளவு பார்ப்பதற்கென்று தமிழக போலீசு உருவாக்கியிருக்கும் “கியூ பிரிவு” உளவுத்துறைதான் அகதிகள் அனைவரையும் கண்காணிக்கிறது, கட்டுப்படுத்துகிறது. ஈழ விடுதலை இயக்கத்தை நசுக்குவது என்ற இந்திய அரசின் நோக்கத்துக்கு ஏற்ற வகையில்தான் திமுக, அதிமுக அரசுகள் ஈழ அகதிகள் அனைவரையும் ஒடுக்கி வருகின்றன.

சிங்கள இராணுவத்தின் தாக்குதலுக்கு ஆளாகி காயம்பட்டவர்கள், குண்டடி, ஷெல்லடி பட்டவர்கள் யாராக இருந்தாலும், படகில் வந்து இறங்குபவர்களின் உடம்பில் காயம் இருந்தால், அவர்கள் மீது “புலி” என்று முத்திரை குத்தி சிறப்பு முகாமுக்கு அனுப்புகிறது கியூ பிரிவு போலீசு. இது மட்டுமல்ல, லஞ்சம் கொடுக்க முடியாதவர்களுக்கும், எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களுக்கும் போலீசு விதிக்கும் தண்டனை சிறப்பு முகாம். தமிழகத்தில் உள்ள ஆறு சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு, ஒரு சிறைக்கைதிக்குரிய உரிமைகள் கூட கிடையாது. வெளியுலகத் தொடர்பிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு, மனைவி மக்களைக் கூடப் பார்க்க முடியாமல் இவர்கள் தடுக்கப்படுகிறார்கள். மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும் அகதிகள், கை கால்களில் விலங்கிடப்பட்டு கொடிய கொலைக்குற்றவாளியைப் போலவே கொண்டு செல்லப்படுகிறார்கள். பல பத்தாண்டுகள் ஆனாலும் இந்த முகாம்களில் இருப்பவர்களுக்கு பிணை என்பது கிடையாது. வழக்கு, விசாரணை, விடுதலை எதுவும் கிடையாது. இது ஒரு வகை ஆயுள் தண்டனை.

சிறப்பு முகாம்களில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பிற முகாம்களில் உள்ள அகதிகளும் நிரந்தரமாகவே போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் கண்காணிப்பின் கீழ் தான் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு அகதி இரண்டு நாட்களுக்கு மேல் முகாமுக்கு வெளியே செல்வதென்றால், வட்டாட்சியரின் அனுமதியைப் பெற வேண்டும். அனுமதியின்றி சென்றால் முகாமிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்படுவர். அனுமதி வாங்க வட்டாட்சியரையே பார்க்க முடியாத காரணத்தினால், பிற முகாம்களில் தங்கியிருக்கும் தமது பெற்றோர் இறந்து போகும்போது, பிள்ளைகளால் இறந்தவர் முகத்தைக் கூடப் பார்க்க முடிவதில்லை. பெண்கள் வேறு முகாமில் இருக்கும் தம் பெற்றோர் வீட்டுக்கு பிரசவத்துக்காக சென்று திரும்பினால், முகாமிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். வேலைக்கு செல்பவர்கள் மாலை 6 மணிக்குள் முகாமிற்கு திரும்பவேண்டும் என்ற விதியின் காரணமாக, குறைந்த கூலிக்கு உள்ளூரில் மட்டும்தான் இவர்கள் வேலை செய்ய முடிகிறது. தொழில் திறமை இருப்பவர்கள் கூட நகரங்களுக்கு சென்று நல்ல ஊதியம் ஈட்ட முடியாது.

மண்டபம், புதுச்சேரி தவிர தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்கள் எதிலுமே முறையான வீடு கிடையாது. பத்தடிக்கு பத்தடி அளவில் தகரம் அல்லது, பாலித்தின் காகிதத்தினால் வேயப்பட்ட கூரை; பராமரிப்பில்லாமல் நாற்றமெடுத்த கழிவறைகள்; மின்கம்பங்கள் ஏதும் நிறுவப் படாததால், குறுக்கு நெடுக்காக தொங்கும் மின்சாரக் கம்பிகள்; பகல் முழுவதும் மின்வெட்டு, இரவு மட்டும்தான் மின்சாரம் என ராஜபக்சே அரசின் மேனிக் பார்ம் முள்வேலி முகாமோடு போட்டி போடுகின்றன தமிழகத்தின் அகதி முகாம்கள். முகாம்களில் பள்ளியோ ஆரம்ப சுகாதார நிலையமோ கூட கிடையாது. அருகாமையில் உள்ள போலீசு நிலையங்களின் போலீசார், தங்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம், ஏதாவது ஒரு வழக்கில் “குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைத்தண்டனை அனுபவிப்பதற்கு” முகாமிலிருந்து ஆள் அனுப்புமாறு மிரட்டுவார்கள். பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை இழைப்பார்கள். இவையெல்லாம் அகதிகளுக்கு எதிராக போலீசார் கேட்பாரின்றி இழைத்து வரும் குற்றங்கள்.

இத்தகைய கொடுமைகளைத் தாங்க முடியாமல்தான், உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் தப்பிச் செல்ல முயல்கிறார்கள் அகதிகள். அவர்களையும் மடக்கி கைது செய்து சிறையில் அடைக்கிறது தமிழக போலீசு. இவ்வாறு பயணம் மேற்கொண்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கடலிலேயே மூழ்கி மடிந்துள்ளனர். “தாய்த்தமிழகம்” ஈழத்தமிழ் அகதிகளுக்கு பேய்த்தமிழகமாக இருந்து வருகிறது. தொப்புள் கொடி உறவு என்று வசனம் பேசாத பிரான்சு, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள்தான் ஈழ அகதிகளை கவுரவமாக நடத்துகின்றன. 7 ஆண்டுகளுக்குப் பின்னர் விரும்புவோருக்கு குடியுரிமையும் வழங்குகின்றன.

ஆனால், இங்கோ எதுவும் கிடையாது. அகதிகள் பிரச்சினை எழுப்பப் படும்போதெல்லாம், அவர்களுக்கு வழங்கப்படும் புழுத்த அரிசியையும், உதவித்தொகையையும் கொஞ்சம் கூட்டிக் கொடுப்பதற்கு மேல் திமுக, அதிமுக அரசுகள் எதுவும் செய்வதில்லை. முக்கியமாக உரிமையும் சுயமரியாதையும் கொண்ட மனிதர்களாக அவர்களை அங்கீகரிப்பதில்லை. இந்திய அரசு அகதிகளுக்கான ஐ.நா உடன்பாட்டில் கையொப்பமிடவில்லை என்பதால், ஐநா அதிகாரிகளை அகதி முகாமுக்குள் நுழைய தமிழக அரசு அனுமதிப்பதில்லை.

ஒரு பேச்சுக்கு இங்குள்ள ஈழத்தமிழர்களை அகதி என்று அழைத்தபோதிலும், இந்திய அரசைப் பொருத்தவரை ஈழத் தமிழ் அகதிகள் அனைவரும் எல்லை தாண்டி ஊடுருவியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள். இந்த நிலைமை காரணமாக, இலங்கை மண்ணையே கண்ணால் பார்த்திராத, அகதி முகாமிலேயே பிறந்து வளர்ந்து படித்து பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு இங்கே அரசு நிறுவனமோ. தனியார் நிறுவனங்களோ வேலை தருவதில்லை.

அகதிகள் தமிழகத்தை சேர்ந்த ஒரு ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து கொண்டால், பிறக்கும் குழந்தைக்கு இரண்டு நாட்டின் குடியுரிமையும் கிடைக்காது. ஈழத்தவரையே திருமணம் செய்து குழந்தை பிறந்தால், இலங்கை துணை தூதரகத்திற்கு தெரிவித்து குடியுரிமைக்குப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

2009 இறுதிப் போருக்குப் பின் நாடு திரும்பிச் செல்ல விரும்பிய சிலர், ஈழம் சென்றனர். அங்கே தமது வீடோ, நிலமோ இல்லாத நிலை கண்டு அதிர்ச்சியுற்று மீண்டும் தமிழகம் திரும்பினர். ஆனால் அவர்கள் முகாமை விட்டு ஒரு முறை வெளியேறிவிட்டதால் மீண்டும் அகதியாக உள்ளே சேர்க்க முடியாது என்று கூறி, பதிவிலிருந்து அவர்கள் பெயரை எடுத்ததுடன் அவர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளையும் நிறுத்திவிட்டது ஜெ அரசு. முகாமிலுள்ள மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழக்கூட இவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இலங்கையில் போர் முடிந்த பின்னரும் ஈழத்தமிழ் மக்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது ராஜபக்சே அரசு. ஆனால், ஜெ அரசு ஈழ அகதி முகாம்களை ஏன் இன்னமும் போலீசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்? ஏனென்றால் ஈழத்தமிழர் அனைவரையும் சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகளாகவே கருதுகிறது ஜெ அரசு. ராஜீவ் கொலையைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஈழ அகதிகளை கட்டாயமாக இலங்கைக்கு கப்பலேற்றி அனுப்பியவர் ஜெயலலிதா. ஈழத்தமிழ் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் தடை விதித்தவர். இன்றைக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இங்கே குடியுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை எதிர்ப்பவர். ஜெயலலிதாவின் இந்த நிலைப்பாடும், இந்திய அரசின் நிலைப்பாடும் வேறல்ல.

நாம் ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைக்கு குரல் கொடுக்கும் அதே நேரத்தில், தமிழகத்தில் தஞ்சமடைந்திருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் உரிமைகளுக்கும் கண்ணியமான வாழ்க்கைக்கும் குரல் கொடுக்க வேண்டும். அகதிகளாக மேலை நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்கள் விரும்பினால் அந்நாட்டுக் குடியுரிமை பெறுகின்றனர். இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு, இலங்கைக் குடியுரிமையுடன், இந்தியக் குடியுரிமையும் வழங்கப் படவேண்டும். தஞ்சம் புகுந்த நாட்டின் குடிமகனாவதா, சொந்த நாட்டிற்குத் திரும்புவதா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இந்த உரிமையை இந்தியாவும் வழங்க நிர்ப்பந்திக்க வேண்டுமானால், இந்திய அரசை அகதிகளுக்கான ஐ.நா உடன்பாட்டில் கையொப்பமிடச் செய்ய வேண்டும். சிறப்பு முகாம்கள் எனும் சித்திரவதைக் கூடங்களிலிருந்து ஈழ அகதிகள் அனைவரையும் விடுவிக்கவும், பொய் வழக்குகளை ரத்து செய்யவும், அம்மக்களுக்கு கவுரவமான வீடுகள், வேலைவாய்ப்பு வழங்கவும் கோரி தமிழக அரசிடம் நாம் போராட வேண்டும். இந்தப் போராட்டங்கள் ஈழமக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் ஓட்டுக்கட்சிகளையும், அவர்களுக்கு காவடி தூக்கும் சந்தர்ப்பவாதிகளையும் அடையாளம் காட்டவேண்டும்.

இந்திய அரசுதான் ஈழ மக்களின் போராட்டத்தை கருவிலேயே சிதைத்தது. அந்தக் கொள்கையின் தொடர்ச்சிதான் அகதிகள் மீதான இந்த அடக்குமுறை. அவர்களுடைய உரிமைகளை உத்திரவாதம் செய்வது சர்வதேசப் பாட்டாளிவர்க்கம் என்ற முறையில் நமது கடமை.

சிறப்பு அகதி முகாம் எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!

ஈழத்தமிழ் அகதிகள் மீதான போலிசு கண்காணிப்பு கட்டுப்பாடுகளை நீக்கு!
கவுரவமான வேலைவாய்ப்பு, குடியிருப்பு வழங்கு!


இவண் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

April 22, 2013

இன்று லெனின் பிறந்தநாள்!நன்றி
விளாதிமிர் இல்யீச் உல்யானோவ்!
உனது பிறப்புக்கும்;
உனது போதனைகளுக்கும்;
உனது வழிகாட்டுதலுக்கும்;
உனது இல்யீச் விளக்குக்கும்!

உனது விரல் நீட்டிய திசையில்
கணக்கிலடங்கா இல்யீச் விளக்குகள்
உதித்துக்கொண்டேயிருக்கும்;
ஒளிர்ந்துகொண்டேயிருக்கும்.
எமை நம்பு
எமதருமை இல்யீச்…!

- புதிய பாமரன்

April 19, 2013

பெண் கல்வி!

தெரிந்த சூப்பர்வைசர் ஒருவர். அன்பான, அதிர்ந்து பேசாத ரொம்ப பொறுப்பான மனிதர் அவர். அவருடைய பெண் பிளஸ் 2 எழுதியுள்ள தன் மேற்படிப்புக்காக கடந்த ஒரு மாதகாலமாக ஒரே யோசனை.

பெண்ணுக்கு ஏர்ஹொஸ்டல்ஸ் படிக்கனும்னு ஆசை! படிப்புக்காக ஏற்பாடு செய்த நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் படிப்புச் சந்தையில் தெரிந்தவர் ஒருவர் விவரம் சொல்லியிருக்கிறார்.

"3 மொழிகள் தெரிந்திருக்கவேண்டும்.  ஸ்டைலா சிவப்பா/வெள்ளைத் தோலா இருக்கனும்.  உயரமா இருக்கனும்.  6 மாத கோர்ஸ் 1 லட்சம் ஆகும். 25 வயசுக்கு மேலே வேலை செய்யமுடியாது.அதற்கு மேலே வேறு படிப்பு படித்து, வேறு வேலைகள் தேடிக்கொள்ளவேண்டும்" என்று சொன்னதும், தலை கிர்ரென சுற்றி வேண்டாம் என முடிவு செய்து கிளம்பிவந்துவிட்டார்.

சொந்தங்கள் "நம்ம சாதியில எவனும் கல்யாணத்திற்கு பிறகு வேலைக்கு அனுப்ப மாட்டான். நீ லட்சத்தில் செலவு செய்து, தொழிற்கல்வி படிக்க வைச்சாலும் சுத்த வேஸ்ட். அதனால் ஏதாவது டிகிரி படிக்கவை!" என ஆலோசனை செய்கிறார்கள்.

"பெண்ணின் மனநிலையோ சிரமப்படாத எளிதான‌ வேலை. நல்ல சம்பளம்" என்பதாக சிந்திப்பாக கூறுகிறார்.

இன்னும் பல ஆலோசனைகள் வந்துகொண்டே இருக்கிறது. ஒரே யோசனையாக இருக்கிறது என கவலைப்பட்டார்.

ஒரு பெண்ணின் கல்வியை தீர்மானிப்பதில் எத்தனையோ காரணிகள் உள்வேலைகள் செய்கின்றன. இறுதியில் அந்த பெண் என்ன படிக்கும் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது.April 18, 2013

கிழக்கு தைமூர் - ஒரு தேசத்தின் மரணம்!

இயக்கம் : ஜான் பில்ஜெர்

போர்ச்சுக்கல்லின் காலனி ஆதிக்கத்தில் இருந்தும், இந்தோனோசியாவின் இராணுவ ஆதிக்கத்தில் இருந்தும் விடுபட்டு, இன்று சுதந்திர நாடாக இருக்கும் கிழக்கு தைமூரின் ரத்தக் கறை படிந்த வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டி பார்க்கும் ஆவணப்படம்.

ஆறு லட்சம் மக்கள் தொகை கொண்ட கிழக்கு தைமூரை பிரிட்டன் மற்றும் அமெரிக்க உதவியோடு 'கம்யூனிஸ்டுகள்' என்று முத்திரைக் குத்தி  எப்படி இந்தோனோசியா வேட்டையாடியது என்பதை புகைப்படங்கள்,  வீடியோக்கள் மூலம் விளக்கிப் பதறவைக்கிறார்கள். 

1970 முதல் 1997 வரை பிரிட்டனின் ஆயுதங்கள் மூலம் இந்தோனோசியா ராணுவம் இரண்டு லட்சம் மக்களை கொன்றதும், அது தொரபாக உலக நாடுகள் சாதித்த மெளனமும் தைமூரியர்க்ள் ஆயுதப் பாதைக்கு திரும்பியதும் மனம் கனக்கும் ரண வரலாறு.

பத்திரிக்கைச் செய்திகள், அரசு ஆவணங்கள், புகைப்பட வீடியோ தொகுப்பு, மக்களின் வாழ்க்கை முறை, கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்கள், போராளிகளின் பேட்டிகள் என ஓர் அடிமைப்பட்ட தேசத்தின் வரலாற்றைக் கடின உழைப்போடு தொகுத்திருக்கிறார் போர்முனை செய்தியாளார் ஜான் பில்ஜெர்.  அவசியம் காண வேண்டிய அபூர்வமான வரலாற்றுப் பதிவு!

நன்றி : ஆனந்தவிகடன்

வெளியீடு : விடியல் பதிப்பகம்

விலை ரூ. 100

நேரம் : 77 நிமிடங்கள்

பின்குறிப்பு : தமிழ் மொழிபெயர்ப்பு வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சில இடங்களில் மக்களின் பேச்சை அவர்களின் குரல் போல பேசுவதாக கம்மி குரலில் பேசுவதை தவிர்த்திருக்கலாம். 1994ல் வெளிவந்த படம். தமிழுக்கு கொண்டுவர இத்தனை ஆண்டுகள் நமக்கு தேவைப்பட்டிருக்கிறது.  இது மாதிரியான பல படங்கள் தமிழ்ச் சூழலில் மொழிப்பெயர்க்கப்படவேண்டும்.

வரலாறு நெடுக உலகம் முழுவதும் ஈழ இனப்படுகொலை போல நடந்துகொண்டே தான் இருந்திருக்கின்றன என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது!

April 15, 2013

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கு! - மே நாள் இயக்கம்!

சிறப்பு அகதி முகாம் எனும் முள்வேலிக்குள்
சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை
விடுதலை செய்!

அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டை குடியுரிமை வழங்கு!

ஈழத்தமிழ் அகதிகள் மீதான போலீசு கண்காணிப்பு
கட்டுப்பாடுகளை நீக்கு!

கவுரவமான வேலைவாய்ப்பு குடியிருப்பு வழங்கு!


மே நாள் இயக்கம் முழக்கங்களிலிருந்து....

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

சன் டிவி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!


April 13, 2013

இந்திய எம் பி க்கள் குழு இலங்கை பயணம்! - முகிலனின் கார்ட்டூன்


[ FICCI] பிக்கியின் [இந்திய தரகு முதலாளிகள் சங்கம் ] நலன்களுக்காக
இந்திய எம் பி க்கள் குழு இலங்கை பயணம்! - முகிலனின் கார்ட்டூன்April 9, 2013

காங்கிரசுகாரர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் யாருக்கு வேண்டும்?

முல்லைப்பெரியாறு, காவிரி, ஈழம் ‍என தேசிய பிரச்சனைகளில் தமிழக காங்கிரசுகாரர்கள் ஏதாவது சொல்லவேண்டுமே என கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். சொல்லிவிட்டு, இது தங்களது தனிப்பட்ட கருத்து என்கிறார்கள். 

நேற்று கூட மத்திய அமைச்சர் இலங்கைக்கு வணிகம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு இந்திய எம்.பி.க்கள் இலங்கை செல்லக்கூடாது என ஜெயந்தி நடராஜன் இப்படி பேசியிருக்கிறார்.

எதற்கும் பயன்படாத காங்கிரசுகார்களின் தனிப்பட்ட கருத்து யாருக்கு வேண்டும்? தங்களது தலைமையிடம் ஓரணியில் (!) நின்று போராடி தமிழகத்துக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்க வைத்தால் தான் தமிழகத்துக்கு பிரயோஜனம்.

இப்படி தனிப்பட்ட கருத்துக்களை கூட காங்கிரசுகாரர்கள் சொல்வதற்கு மக்கள் போராட்டங்கள் தான் நிர்பந்திக்கின்றன!

மக்களின் காத்திரமான போராட்டங்கள் தான் ஒரே தீர்வு!

April 8, 2013

"நிலா! என்கூடவே வருதுப்பா!"


சில மாதங்களுக்கு முன்பு

 ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் பெண்ணுடன் வண்டியில் போய்க்கொண்டிருந்தேன்.

"நிலா! என்கூடவே வருதுப்பா!" என்றாள் ஆச்சர்யமாய்!

"யாரையாவது பிடிச்சுப் போச்சுன்னா, நிலா கூடவே வரும் பாப்பா!" என்றேன்.

"அப்படியா!" என்றாள்.

நிலாவிற்கு தன்னைப் பிடித்துப்போனதில் ஏக சந்தோசம்.

****

நேற்று பள்ளியிலிருந்து திரும்பும் பொழுது...

"என் ப்ரெண்ட் ஜாஸ்மின், லில்லி புஷ்பம் கூடவும் நிலா வருதாம்பா" என்றாள்.

"நிலா மட்டும் தான் வருதா!"

"நிலா, சூரியன், நட்சத்திரம்" என்றாள்.

"குழந்தைகள்னா நிலா, சூரியன், நட்சத்திரம் மூன்றுக்கும் ரெம்ப பிடிக்கும்பா" என்றேன்.

'ஓ' என்றாள்.

எப்பொழுது பெரியவர்களிடம் கேட்கப் போகிறாளோ?! :)

****

தமிழர்களின் எண்ணிக்கை 16 கோடி!

பா.ம.க கடந்த சித்ரா பெளர்ணமிக்கு, "மாமல்லபுரம் 25 லட்சம் வன்னியர்கள் கூடும் விழா" என்றார்கள்.

இந்த முறை "கோடி வன்னியர் குடும்பங்கள் கூடும் விழா" என விளம்பரம் செய்கிறார்கள்.

குடும்பத்துக்கு நாலு பேர் வைத்தாலே, 4 கோடி பேர் 'வன்னியர்கள்' கணக்காகிறதே!

7 கோடி தமிழர்களில் 4 கோடி 'வன்னியர்களா?' கட்சி தாவுகிற மாதிரி மற்ற சாதிக்காரர்களையும் வன்னிய சாதிக்காரர்களாக மாற்றுகிறார்களா? அதற்கு இந்து மதத்தில் இடமில்லையே!

இப்படி எல்லா சாதி சங்க தலைவர்களும் சொல்கிற 'சாதி மக்கள் தொகை' கணக்கிட்டால், தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 16 கோடி வருவது தான் மெகா காமெடி! :)

April 6, 2013

நேற்று 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்'! இன்று 'தாமரை மலர்ந்தால் ஈழம் மலரும்'!

கடந்த முறை சட்டசபை தேர்தல். ஜெ. 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்றதும்,  பழ.நெடுமாறன் மற்றும் அவர் வகையறாக்கள் பரவசப்பட்டு ஆதரித்தார்கள். இன்றைக்கும் வரைக்கும் ஒரு சுண்டுவிரலை அசைக்கவில்லை. 'அம்மாவை' ஆதரித்த யாரும் விமர்ச்சிப்பதில்லை.

அடுத்து, இப்பொழுது பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. "தமிழீழம் விரைவில் அமையும்" என பா.ஜ.க யஷ்வந்த்சின்ஹா பேசியிருக்கிறார். பழ. நெடுமாறன் ஆதரித்து நிற்கிறார்.

இவங்க எப்பவும் இப்படித்தான் பாஸ்! :)யஷ்வந்த் சின்ஹா பேட்டிக்கான சுட்டி :

www.vanakkam.com/?p=18622#.UV8dIK3BX4U.facebook


*****

 நிறைய ஏ.டி.எம். இயந்திரங்களை திறந்துகொண்டே செல்கிறார்கள். ஒவ்வொருமுறையும் 20 லட்சத்திற்கும் மேல் குறையாமல் பணத்தை நிரப்புகிறார்கள்.

அதை பாதுகாக்க ரூ. 5000 க்கு ஒரு தொழிலாளியை எந்த பாதுகாப்புமில்லாமல் அம்போவென நிறுத்துகிறார்கள். கொள்ளையடிப்பவர்கள் முதலில் செக்யூரிட்டியை பலமாக தாக்குகிறார்கள் அல்லது அதிகபட்சம் கொன்றுவிடுகிறார்கள். இப்படி வருடத்திற்கு தமிழகத்திலேயே பலபேர் கொல்லப்படுகிறார்கள். அதற்குப் பிறகு, அவர்களின் குடும்பம் நிராதரவற்று போகிறது.

இவர்களின் மூலதனத்தை காக்க நம் தொழிலாளர்கள் தானா உயிரைக்கொடுக்க வேண்டும்?

http://www.dinamalar.com/news_detail.asp?id=682638


*****
 பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மீது இரண்டு இளைஞர்கள் கேஸ் போட்டிருக்கிறார்கள்.

"நாங்கள் மகேஷ்பாபு ரசிகர்கள். அவர் மது விளம்பரத்தில் நடித்தார். அதைப் பார்த்து பிடித்துப்போய் நாங்களும் குடிக்க ஆரம்பித்து, வேலையிழந்து, பொண்டாட்டியை இழந்து இப்பொழுது நடுத்தெருவில் நிற்கிறோம்.

மது குடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்ற வாசகமும் அந்த விளம்பரத்தில் வரவில்லை. ஆகையால், எங்களுக்கு மகேஷ்பாபு நஷ்ட ஈடு தரவேண்டும்."

- செய்தி.

மக்களின் சுகாதாரம் காக்கவேண்டிய அரசு வீதிக்கு 4 டாஸ்மார்க் கடைகளை திறப்பது தவறு என தமிழக அரசு மீது கேஸ் போடலாம். யாராவது வழக்கு போட்டு இருக்கிறார்களா?


******

வரிவிலக்கின் பலன் மக்களுக்கு இல்லையா?

சன் பிக்சர்ஸ் ஆசியுடன் என வெளிவந்ததால், 'சென்னையில் ஒரு நாள்' படத்திற்கு அரசு வரிவிலக்கு தரவில்லை என செய்தி வந்தது.

பதறிப்போய், சரத்குமார் - ‍ராதிகா உடனே பத்திரிக்கையாளர் சந்திப்பை கூட்டி, "அரசு வரிவிலக்கு தந்துவிட்டார்கள். இப்படியெல்லாம் ஏன் பொய்ச் செய்தியை எழுதுகிறீர்கள்?" என வருத்தப்பட்டார்.

- செய்தி.

எங்கள் பகுதியில் இருக்கும் திரையரங்கில் எப்பொழுதும் போல் தான் டிக்கெட் பணம் வாங்குகின்றனர்.எனக்கு ஒரு சந்தேகம்.

வரிவிலக்கு கொடுப்பது எதற்காக? படத்தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் என கூட்டுக்கொள்ளை அடிப்பதற்காகவா? நல்ல படம். குறைந்த கட்டணத்தில் நிறைய மக்கள் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் தானே வரிவிலக்கு கொடுக்கிறது அரசு.

இந்த திருட்டுத்தனத்தை யார் கேட்பது?


****

April 5, 2013

மதுரவாயில் போலீசார் ஆட்டோ ஓட்டுநரை அடித்தே கொலை!


April 3, 2013

ஆட்டிஸம் + என்கவுன்டர் = ஹரி + தாஸ்!


நேற்று 'உலக ஆட்டிஸம்' விழிப்புணர்வு நாள். மீண்டும் ஹரிதாஸின் நினைவுகளில் மூழ்கிப்போனேன். ஆட்டிஸம் பாதித்த பையனைப் பற்றிய படம்; அருமையான படம்; விருது வாங்கப்போகிற படம் என பலரும் பாராட்டி எழுதிவிட்டார்கள்.

ஆட்டிஸம் படத்தின் ஒரு பாதி தான்.  இன்னொரு பாதி என்கவுன்டர்.  அதைப்பற்றி பலரும் அக்கறை கொள்ளாததால் இந்தப் பதிவு எழுத தோன்றியது.

காவல்துறையில் சட்ட ஒழுங்கு, உளவுப் பிரிவு போல என்கவுன்டர் (மோதல் கொலை)  பிரிவு இருப்பது போல பார்வையாளனை பல படங்கள் நம்ப வைக்கின்றன.

என்கவுன்டர் என்று சொல்லப்பவைகளில் 99% 'போலி மோதல்கொலைகள்' தான். நாம் கடந்து வந்த வரலாறு நமக்கு சொல்லும் உண்மை
அதுதான்!  போலி மோதல் கொலை என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலான விசயம்.  அதை எப்படி பதிவர்களும், விமர்சகர்களும் மிக எளிதாக கடந்து போகிறார்கள் என்பது ஆச்சரியமான விசயம்.

அமெரிக்கா பின்லேடனை தனது தேவைக்கு உருவாக்கியது போல தான் ச‌மூக விரோதிகளை இந்த ஆளும் சமூக அமைப்பும், அரசியல்வாதிகளும் உருவாக்குகிறார்கள்.  அவர்களுக்குள் முரண்பாடு வரும் பொழுது சட்டபூர்வ மாபியாவான காவல்துறையை கொண்டு சட்டப்பூர்வமில்லாத மாபியா கும்பலை போட்டுத் தள்ளுகிறார்கள்.

படங்களில் நேர்மையான அதிகாரி Vs கொடூர சமூக விரோதி என முன்நிறுத்துவதன் மூலம் காவல்துறையே நீதிபதியை போல‌ மரணதண்டனை தருவதை நமது இயக்குநர்கள் நியாயப்படுத்திவிடுகிறார்கள்.

இதில் நடைமுறையில் சிக்கல் என்னவென்றால், யதார்த்தத்தில் நேர்மையான அதிகாரியை எங்கு போய் தேடுவது? 'நரகலில் நல்லதை தேடுவது' என பழமொழி சொல்வார்களே! அதைப் போன்றது.

தின, வார, மாத மாமூல் வாங்குவது , பலவகைகளில் ஆயிரக்கணக்கிலும், லட்சகணக்கிலும் லஞ்சம் வாங்குவது, அப்பாவிகளை மிரட்டி பொய்கேஸ்களை போடுவது, போலி எப்.ஐ.ஆர் தயாரிப்பது, விசாரணை கைதிகளை சித்ரவதை செய்வது; லாக்கப்பில் கொன்றுவிட்டு தற்கொலை என மாற்றுவது, கட்ட பஞ்சாயத்து செய்வது; கிரிமினல்களை காப்பாற்றுவது, பாலியல் பலாத்காரம் செய்வது என சகல சட்டவிரோத செயல்களையும் செய்வது எல்லாம் நமது மதிப்புமிகு காவல்துறை தான். இவ்வளவு சட்டவிரோத செயல்களை சமூக விரோதிகள் கூட செய்வதில்லை!

இப்படிப்பட்ட 'நேர்மையான' காவல்துறை சமூக விரோதிகளை மட்டும் சுடுவதில்லை. கம்யூனிச போராளிகளை, தொழிற்சங்க தலைவர்களை,  தேசிய இனப் போராளிகளை, ஜனநாயக சக்திகளையும் சுட்டுத்தள்ளுகிறார்கள்.

இப்படிப்பட்ட மோதல் கொலைகளை ஆதரிக்கும் படங்களை நாம் எப்பொழுதும் கடுமையாக விமர்ச்சிக்க வேண்டும்.

****

'காக்க காக்க' சூர்யா தான் இந்த படத்தின் ஹீரோவும். சூர்யாவிற்கு ஒரு ஆட்டிஸம் பாதித்த ஒரு பையன் இருந்திருந்தால்,  காதலி, ஆசிரியருமான ஜோதிகா தான் இந்த படத்தில் சினேகாவாக வருகிறார்.

இந்த படம் கொரிய மொழியில் வந்த "மாரத்தான்' கதையை தழுவியது என்கிறார்கள்.  அந்த படம் போல ஆட்டிஸம் குறித்த அப்பா, மகன் உணர்வுகளை கொண்ட‌ முழு நீளப்படமாகவே எடுத்திருக்கலாம். கருப்பு ‍ வெள்ளை, இன்பம் துன்பம் என்பது போல ஆட்டிஸம் -டல், என்கவுன்டர் - சுறுசுறுப்பு என இயக்குநர் யோசித்து எடுத்திருக்கிறார்.  (ஏன் இப்படி எடுத்திருக்கிறார் என பதிவர் உண்மைத் தமிழன் ஆச்சர்யப்பட்டிருக்கிறார். அதற்கான விடை இது தான்)

'தாரே ஜமீன் பர்' என்ற இந்திப்படத்தில் இயக்குநர் ‍தான் எடுத்துக்கொண்ட கதைக்கு சின்சியராக இருந்ததை போல, இந்த இயக்குநருக்கு ஆட்டிஸத்தின் மீதும் தன் மீதும் நம்பிக்கை இல்லை.  'நினைத்தாலே இனிக்கும்', 'யுவன் யுவதி' என ஏற்க‌னவே இரண்டு தோல்விப்படங்கள் பயத்தை கொடுத்திருக்கும்.

காவல்துறையில் இவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தும், ஆட்டிஸத்தை குறித்த விழிப்புணர்வே இல்லை.  இது போல ஆயிரக்கணக்கான, லட்சகணக்கான குழந்தைகள் இந்த மண்ணில் மனநிலை சரியில்லை என்ற பெயரில் தான் வதைக்கப்படுகிறார்கள்.

இதற்காக சிறப்புப் பள்ளிக்கூடங்களை திறந்திருக்கலாம். பாடத் திட்டத்தில் ஆட்டிஸம் குறித்த பாடங்களை வைத்திருக்கலாம். இந்த குழந்தைகள் மீது ஏன் அரசு அக்கறை கொள்ளவில்லை என கேள்வி எழுப்பியிருக்கலாம். எதுவுமில்லை.

அப்பா - மகன் என வெறும் செண்டிமெண்டை பிழிந்து கண்களை குளமாக்கி, 'அய்யோ பாவம் இந்த பையன்" என்று சொல்வதில் பெரிதாக என்ன பலன் இருக்கப் போகிறது. கல்லா கட்டத்தான் பயன்படும்.  விழிப்புணர்வை ஏற்படுத்தாது. அந்த குழந்தைகளுக்கு நல்லதோரு விடிவைத் தராது.

****

வதைக்கப்பட்ட மருத்துவரிடம் மன்னிப்பு கேள்! அதிகாரிகளை பணிநீக்கம் செய்!