> குருத்து: EPF
Showing posts with label EPF. Show all posts
Showing posts with label EPF. Show all posts

September 22, 2026

ஒரு நம்பிக்கை கதை

 


நமது உறுப்பினர் ஒருவர் அந்த நிறுவனத்தின் அக்கவுண்ட் மேனேஜராக பொறுப்பேற்றார்.   நிறுவனத்திற்கு பி.எப்., இ.எஸ்.ஐ இருந்தது.   பணம் செலுத்தாதது, தாமதமாக செலுத்தியது என சில நோட்டிசுகள் இருந்தன.

 

நாம் சரியாக செலுத்துகிறோம். ஆனால் ஏன் இந்த நோட்டிசு வந்தன என கேட்ட பொழுது,  என் நினைவு உடனே வந்து, அணுகினார்.

 

கடந்த கால வரலாற்றை தேடிப் பார்த்தால், நிறுவனம் வரி ஆலோசகருக்கு சின்சியராக பணம் அனுப்ப, அவர் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு சாலனை செலுத்தாமல் விட்டிருக்கிறார். நிறுவனம் அவர் செலுத்தினாரா என சோதிக்கவும் இல்லை. விளைவு நோட்டிசுகள்.

 

பிறகு எந்தெந்த மாதம் செலுத்தவில்லை என சொன்ன பிறகு, அவரிடம் அந்த பணத்தைக் கேட்டார்கள்.   சில தொழிலாளர்கள்  இதனால் நம்பிக்கை இழந்து, ஒவ்வொருவராக பி.எப்., இ.எஸ்.ஐ திட்டத்தில் இருந்து விலகியிருக்கிறார்கள்.

 

மீண்டும் இணைய சொன்னால், உறுதியாய் மறுக்கிறார்கள். நிர்வாகம் ”தொழிலாளர்களிடம் நீங்கள் பேச முடியுமா” என கேட்டதற்கு, ”அவசியம். ஏற்பாடு செய்யுங்கள்” என்றேன்.

 

ஊழியர்கள் எல்லோரையும் அந்த ஹாலுக்கு வரவழைத்தார்கள். அரை மணி நேரம். திட்டத்தின் பலன்கள் குறித்து விளக்கினேன்.  மீதி அரை மணி நேரம் அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை அடுத்தடுத்து கேட்டார்கள். விளக்கினேன்.   குறிப்பாக ”மாதம் மாதம் செலுத்துகிறார்களா என நீங்களே பார்க்கலாம்” என்றேன். மேலும் “பி.எப். பணத்தை எடுப்பதற்கு இப்பொழுது நிர்வாகத்தின் அனுமதி தேவையில்லை. ஆதாரின் அடிப்படையில் நீங்களே க்ளைம் செய்யலாம்” என்றேன்.  அவர்களுக்கு ஒரு தெளிவு கிடைத்தது போல உணர்ந்தேன்.

 

நிர்வாகத்தின் பொறுப்பாளர் சில கேள்விகள் கேட்டார். அவருக்கும் விளக்கினேன். என்னுடைய கட்டணத்தைக் கேட்டுவிட்டு, முன்பு இருந்தவரை விட இன்னொரு மடங்கு கேட்கிறீர்கள் என்றார். நல்ல சேவைக்கு நல்ல கட்டணம் அவசியம் என்றேன். பழையை ஆலோசகர் செய்தது எல்லாம் நினைவுக்கு வந்து போயிருக்கும் போல.! புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டார்.

 

நோட்டிசுகளுக்கு கவனம் செலுத்தி , அதை முதலில் முடித்தேன்.  முதலில் தொழிலாளர்கள் எல்லோரும் முன்வரவில்லை.  வந்தவர்களை இணைத்தோம்.  பிறகு மெல்ல மெல்ல மற்ற தொழிலாளர்களும் நம்பிக்கை வந்து திட்டத்தில் இணைந்தார்கள்.

 

நான் போகும் பொழுது இருந்த தொழிலாளர்களை விட, இப்பொழுது மூன்று மடங்கு தொழிலாளர்கள் திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள்.

 

கடந்த சில மாதங்களாக, பி.எப். திட்டத்தில் முதன்முறையாக ஊழியர்களை புதிதாக இணைத்தால், தொழிலாளர்களுக்கு மானியம், நிர்வாகத்திற்கும் மானியம் என அறிவித்த திட்டத்தில் இவர்கள் தகுதி பெற்றார்கள்.

 

ஜூன் மாதத்தில் இரண்டு தவணைகளில் நிர்வாகத்தின் வங்கி கணக்கில் மொத்தம் ரூ. 45000 வரை பி.எப். மானியத்தை செலுத்தியிருந்தது.  மேனேஜரிடம் ”மானியம் வந்திருக்கிறது. ஒரு வார்த்தை சொல்லவில்லையே எனக் கேட்டால்…, “வரவில்லை சார்” என முதலில் தெரிவித்தார்.  குறிப்பாக தேதி,  தொகை குறித்து சொல்லி, தேடச்சொன்னால், ”ஆமாம் சார். எங்கிருந்து வந்தது என தெரியாமல்… சஸ்பென்ஸ் கணக்கில் வைத்திருக்கிறோம்” என்றார். நிர்வாகத்தின் பொறுப்பாளரிடம் தெரிவியுங்கள். நிச்சயம் மகிழ்வார் என்றேன்.

 

புதிதாக பி.எப். திட்டத்தில் இணைந்த தொழிலாளர்களுக்கும் இதே போல மான்யம் வந்திருக்கும். அதையெல்லாம் கேட்டுக்கொள்ளவேண்டாம். நிர்வாகம் கேட்டுவிடும் என்ற பயத்தில் வரவில்லை என்பார்கள் என்றேன். சிரித்தார்.

 

- இரா. முனியசாமி,

வரி ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721

15/09/2026

September 2, 2026

PF updates 2026 - Zoho Meeting - R. Muniasamy, Tax Consultant


அன்பு நண்பர்களுக்கு,


திரு. இராஜசேகரன் CMA அவர்கள் நடத்திய இன்றைய கூட்டத்தில் 75 பேருக்கு மேல் கலந்துகொண்டார்கள். பி.எப். சமீபத்திய மாற்றங்கள் குறித்து  25 நிமிடங்கள் பேசினேன்.  25 நிமிடங்களில் எதை சொல்வது, எதை விடுவது என்பதில் தான் சவால்கள் இருந்தன. இருப்பினும் முக்கிய மாற்றங்கள் குறித்து விளக்கினேன். 25 நிமிடங்களுக்கு மேலாக கேள்விகள் கேட்டார்கள். அதற்கும் பதிலளித்தேன்.


கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பி.எப். டிஜிட்டல்மயமாக்கத்தை விரைவுப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.  ஆனால் தொழிலாளர்கள் அதன் வேகத்தைப் புரிந்துகொண்டு தாங்களும் அப்டேட் ஆவதில் சுணக்கமாய் இருக்கிறார்கள்.  இந்த இரண்டுக்குமான இடைவெளியில் நிறைய குழப்பங்கள் நடைபெறுகின்றன.  


ஆகையால் தேவையின் பொருட்டு இனி வாரம் ஒரு கட்டுரை எழுதலாம் என இருக்கிறேன்.   நமது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தால், கூட்டம் எப்படி நடந்தது என்பது குறித்து உங்கள் கருத்துகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். தனிப்பட்ட முறையில் கூட தெரிவியுங்கள். 


நன்றி.


- இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721


August 24, 2026

PF பணத்தை பெறுவதில் (Claim) முக்கிய மாற்றங்கள் - 2026



புதிய Employees’ Provident Funds Scheme, 2026-ல் தொழிலாளர்களுக்கு மிகவும் முக்கியமான மாற்றங்களில் ஒன்று PF Claim / Withdrawal தொடர்பான விதிமுறைகள் ஆகும். குறிப்பாக, Partial Withdrawal, Final Settlement, Minimum Balance மற்றும் Claim filing ஆகியவற்றில் மாற்றங்கள் வந்துள்ளன.

 

1 ஜூலை 2026 முதல் புதிய Employees’ Provident Funds Scheme, 2026 நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் தொழிலாளர்கள் PF தொகையை Claim செய்வது தொடர்பாக சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 

1. PF பணத்தை முழுமையாக எடுத்துவிட முடியாது

வேலை செய்து கொண்டிருக்கும் காலத்தில்  பகுதி அளவில் எடுக்கும் பொழுது (Partial Withdrawal), பி.எப். கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை கட்டாயமாக மீதம் இருக்க வேண்டும்.

இந்த குறைந்தபட்ச தொகை (Minimum Balance), பணியாளர் மற்றும் நிறுவனம் செலுத்திய மொத்த தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகியவற்றின் அடிப்படையில் 25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மொத்த PF தொகை – 25% Minimum Balance = தகுதியான Withdrawal தொகை என்ற அடிப்படையில் கணக்கிடப்படும்.

 

2. பகுதியாக எடுக்கும் (Partial Withdrawal) விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன

 

மருத்துவச் செலவு, கல்வி, திருமணம், வீடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக இருந்த பழைய பல்வேறு விதிகள் எளிமைப்படுத்தப்பட்டு, புதிய Scheme-ல் விரிவான வகைப்படுத்தல் கொண்டு வரப்பட்டுள்ளது.  சில வகையான பணம் பெறுவதற்கு 12 மாத காலம் வேலை செய்திருக்கவேண்டும் போன்ற தகுதி நிபந்தனைகள் உள்ளன.

 

3. வேலை இழந்தால் PF தொகையைப் பெறுவதிலும் மாற்றம்

 

வேலை இழந்த உடனேயே முழு பி.எப் தொகையையும் மொத்தமாக (Final Settlement) ஆக எடுத்துக்கொள்ளும் பழைய நடைமுறைக்கு பதிலாக, புதிய திட்டத்தில் நீண்ட காத்திருப்பு காலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

பொதுவாக, வேலை முடிவடைந்த பிறகு 12 மாதங்கள் வேலை இல்லாத நிலையில் இருந்த பின்னரே முழுமையாக (Final Settlement) பெறுவதற்கான தகுதி ஏற்படும்.

 

4.  பணம் பெறுவதற்கு இணைய வழியில் (Claim Online) தாக்கல் செய்யலாம்

 

பணியாளர்கள் வேலையை விட்டு வெளியேறும் போது,  பி.எப். உறுப்பினர் தளத்தில் தாக்கல் செய்யலாம். தொழில்நுட்ப காரணங்களால் இணைய வழியில் சமர்ப்பிக்க முடியாத நிலையில், சில சூழ்நிலைகளில் நேரடியாக விண்ணப்பத்தை (Physical Claim) நிறுவனத்தின் (Employer) மூலம் சமர்ப்பிக்கவும் திட்டம் அனுமதிக்கிறது.

 

5. பணியாளர் கவனிக்க வேண்டியது

PF Claim செய்வதற்கு முன்பு, Aadhaar → UAN → Bank Account → KYC → Nomination ஆகிய விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம்.

 

இறுதியாக... புதிய பி.எப் விதிகளின் நோக்கம், தேவையான நேரத்தில் பணியாளர்களுக்கு பி.எப் தொகையைப் பெறும் வசதியை எளிமைப்படுத்துவதுடன், ஓய்வுக்கால சேமிப்பில் ஒரு பகுதி தொடர்ந்து பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வதாகும்.


இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721


July 13, 2026

Latest updates in ESI and EPF - R. Muniasamy, Tax Consultant

 



தெரிந்துகொள்ள தேவையுள்ளவர்கள், ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள்.


நன்றி.


- இரா. முனியசாமி,

வரி ஆலோசகர்,

9551291721

June 20, 2026

Employee Provident fund - Zoom Meeting - 23/06/2026



 Employee Provident fund குறித்து அறிமுக உரை பேச இருக்கிறேன்.   தேவையுள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள்.


நன்றி.


- இரா. முனியசாமி,

வரி ஆலோசகர்,

9551291721

April 23, 2026

நிறுவனத்தின் DSC ஒப்புதல் தாமதம் – சட்ட ரீதியான தீவிர விளைவுகள்

 


ஒரு நிறுவனம் தனது பணியாளர்களின் (Employees) விவரங்களை EPFO தளத்தில் பதிவு செய்யவும், திருத்தவும், உறுதிப்படுத்தவும், நிறுவனத்தின் பொறுப்பாளர் (Authorised Signatory) அவர்களின் DSC (Digital Signature Certificate) பதிவு மற்றும் அதன் ஒப்புதல் (Approval) அவசியமாக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய நடைமுறைகளின் படி, DSC Active நிலையில் இருந்தால் மட்டுமே… புதிய பணியாளர்களை சேர்க்க முடியும். பணியாளர் விவரங்களை திருத்த முடியும். KYC போன்ற அம்சங்களுக்கும் ஒப்புதல் தரமுடியும். மாதாந்திர நிதியை தாக்கல் செய்ய என அனைத்தையும் செய்ய முடியும்.

 

சட்ட ரீதியான கட்டுப்பாடுகள்

 

இந்த நடைமுறைகள், கீழ்கண்ட சட்டப் பிரிவுகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன:

 

Section 6 of EPF Act, 1952 -  பணியாளர்களின்  பி.எப். நிதி பங்களிப்பு கட்டாயம்

 

Paragraph 36(1) of EPF Scheme, 1952 - பணியாளர்களின் விவரங்களை சரியாக பராமரிக்கும் பொறுப்பு நிறுவனத்திற்கு இருக்கிறது.

 

Paragraph 38 of EPF Scheme, 1952 - மாதாந்திர நிதி செலுத்த வேண்டிய கடமை

 

Section 14B of EPF Act  - தாமதத்திற்கு அபராதம்

 

Section 7Q of EPF Act -  தாமதத்திற்கு வட்டி

 

நிறுவனங்கள் DSC பதிவு செய்த பின்னர், அந்த DSC-க்கு PF அலுவலக ஒப்புதல் பெற
1 மாதம் முதல் 2 மாதங்களுக்கும் மேலாக தாமதம் ஏற்படுகிறது.  இந்த தாமதம் காரணமாக - புதிய பணியாளர்களை EPF-ல் பதிவு செய்ய முடியவில்லை.  ECR தாக்கல் செய்ய முடியவில்லை  PF நிதியை செலுத்த முடியவில்லை

 

1.       சட்டப்படி தவறு (Statutory Default)

 

நிறுவனம் தவறு செய்யவில்லை என்றாலும், DSC அப்ரூவல் இல்லாததால் நிதியை செலுத்த முடியாத நிலை  சட்டப்படி செலுத்த மறுத்ததாக (default) கருதப்படும்

 

2. வட்டி &  அபராதத்தை தவிர்க்க முடியாது

 

  • Section 7Q –  வட்டி
  • Section 14B – அபராதம்

நிறுவனத்தின் மீது தவறே இல்லையென்றாலும், இப்பொழுது சட்டப்படி தவறாகிவிடுகிறது. இதை செலுத்தியே ஆகவேண்டும் என்ற நிலை உருவாகிறது.

 

3. பணியாளர் உரிமை பாதிப்பு

 

புதிய பணியாளர் EPF-ல் சேர்க்கப்படவில்லை என்றால், PF தொகை செலுத்த முடியாது போகும்.  இந்த காலத்தில் வேலை செய்யும் பொழுது பணியாளர் உயிர் துறந்தால், அவரது குடும்பத்தினருக்கு, PF நிதி, EPS ஓய்வூதியம், EDLI Insurance (₹7 lakh வரை)  இவற்றை பெற முடியாத நிலை உருவாகலாம்.

இதில் நிறுவனத்தின் தவறு இல்லாதபோது..  PF  தன்னுடைய அலுவலக தாமதத்தினால் காரணமாக ஏற்பட்ட விளைவுக்கு யார் பொறுப்பு ஏற்பது?

நடப்புச் சட்டப்படி- EPFO தாமதம் குறித்து வெளிப்படையான நிவாரண ஏற்பாடு இல்லை. நீதிமன்றத்திற்கு சென்று முறையிடவேண்டிய நிலை வரும்.   

 

நிர்வாக ரீதியான குறைபாடு என்பது ஒரு சாதாரண தொழில்நுட்ப தாமதம் அல்ல:

 

Statutory compliance பாதிப்பு, பணியாளருக்கான பலன்கள் (Social security) பாதிப்பு , நிறுவனத்தின் மீது தவறான பொறுப்பு (liability ) உருவாகிறது. இது அலுவலக ரீதியான தோல்வியாக (Systemic Failure) பார்க்கவேண்டும்.

 

இந்த நிலைமையில் நிறுவனங்கள், தங்களுக்கான பாதிப்புகளில் இருந்து தப்பிக்க..

 

  1. DSC பதிவு செய்த உடனே புகார் ஒன்றை (Grievance) பதிவு செய்ய வேண்டும்
  2. பி.எப் அலுவலகத்திற்கு எழுத்து மூலம் தெரிவிக்கவேண்டும். (email / letter)
  3. அதற்கான ஆதாரங்களை கவனமாக வைத்திருக்க வேண்டும்
  4. தாமதம் காரணமாக அபராதம் வந்தால்  நாம் தரப்பில் ஆதாரம் (representation) தர தயாராக இருக்க வேண்டும்

 

சமூக பாதுகாப்பு (Social Security) என்பது சட்டத்தின் நோக்கம்; தொழில்நுட்ப தடை காரணமாக அதை மறுக்கும் நடைமுறை ஏற்க முடியாது.  இந்த தாமதம் என்பது ஒரு தீவிரமான பிரச்சினை ஆகும்.

 

இந்த நிலைமைக்கு EPFO துறையிலிருந்து தெளிவான வழிகாட்டுதல் (clarification) அல்லது தற்காலிக தளர்வு (relaxation) வழங்கப்படுவது மிகவும் அவசியம்.


இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721

 

February 26, 2026

வருங்கால வைப்பு நிதி : புதிய அறிவிப்புகளும், சலுகைகளும் - அத்தியாயம் 25


பணியாளர்
பதிவு சலுகைத் திட்டம் 2025 (Employees’ Enrollment Campaign)

 

1. இந்தத் திட்டம் எதற்காக?

 

முன்னர் EPF பெற தகுதியுடையவர்களாக இருந்தும், கவனக்குறைவு அல்லது தவறுகளால் EPF-ல் பதிவு  செய்யப்படாமல் விட்டுவிடப்பட்ட தொழிலாளர்களை இப்போது பின்னடைவு காலத்துடன் பதிவு செய்ய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒருமுறை சலுகைத் திட்டமாகும்.

 

2. எந்த காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை பதிவு செய்யலாம்?

 

01.07.2017 முதல் 31.10.2025 வரை, EPF-க்கு தகுதியுடையவர்களாக இருந்து EPFO-வில் பதிவு செய்யப்படாமல் விட்டுவிடப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் நிறுவனங்கள் இப்போது அறிவித்து EPF-ல் பதிவு செய்யலாம்.

 

3. தொழிலாளரின் பங்கு (Employee’s share) – சலுகை 

 

பொதுவாக EPF-ல், தொழிலாளர் பங்கு – 12% நிறுவன பங்கு – 12% இரண்டும் கட்டாயமாக செலுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த Campaign-ன் கீழ், முன்பாக தொழிலாளரிடம் இருந்து பிடித்தம் செய்யப்படாத 12% தொகையை இப்போது தொழிலாளர்களிடமிருந்து  கேட்கவும், நிறுவனங்கள் கட்டவும் தேவையில்லை.  அதாவது,  தொழிலாளர் பங்கு முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது என்பது முக்கியமானது. இது நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல, தொழிலாளர்களுக்கும் மறைமுகமாக நன்மை தரும் அம்சமாகும்.

 

4. அபராதம் (Penal damages) – மிகப் பெரிய நிவாரணம்

 

சாதாரணமாக EPF பதிவு செய்யாமல் விட்டால், Section 14B – அபராதம் Section 7Q – வட்டி என்று கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இந்த திட்டத்தின் கீழ், அபராதம் ஒரு தொழிலாளருக்கு அதிகபட்சம் ₹100/- மட்டுமே பல ஆண்டுகள் பதிவு செய்யாமல் இருந்தாலும், அதற்கான அபராதம் மிகக் குறைந்த அளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை கருணை / மன்னிப்பு அடிப்படையிலான சலுகைத் திட்டம் என்று புரிந்துகொள்ளலாம்.

 

5. நிறுவனத்தின் பொறுப்பு என்ன?

 

சலுகைகள் இருந்தாலும், நிறுவன பங்கு – 12%, அதற்கான வட்டி (Section 7Q) இவை கட்ட வேண்டிய பொறுப்பாக தொடரும். வட்டிக்கு முழு தள்ளுபடி வழங்கப்படுவதாக
இதுவரை தனியான அறிவிப்பு இல்லை. அதனால், தற்போது உள்ள நிலவரப்படி
வட்டி செலுத்த வேண்டியது அவசியம் என கருதப்படுகிறது

 

6. யாருக்கு இந்தத் திட்டம் முக்கியமாக பயன்படும்?

 

இந்தத் திட்டம், PF தணிக்கையைப் பற்றி கவலைப்படுகின்ற நிறுவனங்களுக்கும்,  பழைய தொழிலாளர்கள் EPF-ல் விடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும்,  சட்டப்படி முறையாக நடக்க விரும்பும் நிறுவனங்களுக்கும், நோட்டீஸ் அல்லது விசாரணை வருவதற்கு முன் தன்னார்வமாக சரி செய்ய நினைக்கும் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

Employees’ Enrollment Campaign 2025 என்பது நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும்
முக்கியமான ஒரு சட்ட ஒழுங்குமுறை வாய்ப்பு ஆகும். பழைய தவறுகளை குறைந்த அபராதத்துடன் சரி செய்து, எதிர்கால சட்ட சிக்கல்களைத் தவிர்க்க இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.  தற்போதைய விளக்கம் EPFO வழங்கிய ஆரம்ப தகவல்களின் அடிப்படையில் மட்டுமே. விரிவான சுற்றறிக்கை அல்லது நடைமுறை வழிகாட்டுதல் வந்த பிறகு சில மாற்றங்கள் இருக்கலாம்.

 

பி.எப். பணத்தை பெற UPI வசதி

 


EPF கணக்கில் உள்ள பணத்தை இனி UPI வசதி மூலம் நேரடியாக வங்கிக் கணக்கில் பெறும் ஏற்பாடு கொண்டு வரப்படுகிறது. இந்த வசதி April 2026 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் EPF பணம் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை குறையும்; அலுவலகங்களுக்கு சென்று அலைவதும் தவிர்க்கப்படும். கைப்பேசியில் பயன்படுத்தும் UPI வழியாக பணம் நேரடியாக கணக்கில் சேருவதால், செயலாக்க நேரம் வேகமாகி, தொழிலாளர்களுக்கு இது ஒரு முக்கியமான மற்றும் பயனுள்ள வசதி மாற்றமாக இருக்கும். வரவேற்போம்.

 

EPFO பங்குச் சந்தை முதலீட்டு (equity)  சந்தையில் அதிகரிக்கும் திட்டம்

 

பி.எப். தன் முதலீட்டு முறையில் ஒரு முக்கிய மாற்றத்தை செய்துள்ளது. முதல்முறையாக, தனது பணத்தின் ஒரு பகுதியை equity market-இல் 10% வரை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு, சந்தையில் முதலீடு செய்யும் அளவு குறைவாகவே இருந்தது.

 

இதன் முக்கிய நோக்கம், PF கணக்கில் கிடைக்கும் வருமானத்தை (returns) நீண்ட காலத்திற்கு நிலைத்ததாகவும் அதிகமாகவும் வைத்திருப்பதுதான். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம், காலப்போக்கில் அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கருதி,  அதனால், தொழிலாளர்களின் PF சேமிப்பில் கிடைக்கும் வட்டி (PF interest rate) தேவையான அளவில் உயர்ந்த வருமானம் கிடைக்க உதவும் எனவும் கருதி, இதை செய்கிறது.  இதில் ஆபத்துகள் உண்டு.  நீண்ட கால முதலீடு என்பதால், ஆபத்துகள் குறைவு எனலாம். ஆனால் வருங்காலம் தான் வருமானம் அதிகரித்ததா, இழப்பானதா என பார்க்க முடியும்.

 

EPF Suvidha Providers என்ற உதவியாளர் அமைப்பு

 

EPFO அங்கீகாரம் பெற்ற EPF Suvidha Providers என்ற உதவியாளர் அமைப்பு அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இதனால், தொழிலாளர்கள் தங்களின் EPF கணக்கு தொடர்பான பிரச்சினைகள், விண்ணப்பங்கள், திருத்தங்கள், நிலுவைகள் போன்றவற்றை எளிதாக தீர்க்க உதவி பெற முடியும் என்கிறது.

 

இதனால் பி.எப் அலுவலகம் செல்வதில் உள்ள சிரமங்கள் குறைந்து, சேவைகளை அணுகுவது எளிமையாகும். தொழிலாளர்களின் திருப்தியை அதிகரிக்கும் வகையில் சேவை தரத்தை மேம்படுத்தும் முயற்சியாக இது மேற்கொள்ளப்படுகிறது. பார்க்கலாம்.

 

EPFO 3.0 –  பி.எப். உறுப்பினர்களுக்கான நவீன சேவை

 


EPFO, தொழிலாளர்களுக்கான சேவைகள் இன்னும் எளிதாகவும் வேகமாகவும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், EPFO 3.0 என்ற புதிய டிஜிட்டல் அமைப்பை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் EPF மற்றும் ஓய்வூதியம் தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே மைய கணினி அமைப்பில் செயல்படும். எந்த மாநிலத்தில் வேலை செய்திருந்தாலும், எந்த EPFO அலுவலகத்தில் கணக்கு இருந்தாலும், ஒரே PF கணக்கின் மூலம் எல்லா சேவைகளையும் பெறும் வசதி ஏற்படுத்தப்படுகிறது. வேலை மாற்றம் அல்லது இடமாற்றம் காரணமாக அலுவலகம் மாறினாலும், சேவைகள் தடைப்படாது. மேலும், புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தில் இயந்திர மொழிபெயர்ப்பு (AI language tools) வசதி இருப்பதால், உறுப்பினர்கள் தங்களுக்கு வசதியான மொழியில் சேவைகளைப் பயன்படுத்த முடியும்.

 

இதோடு, உறுப்பினர்களின் பதிவுகள் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கை நுண்ணறிவு (AI), பிளாக்செயின் (Blockchain), தன்னியக்க கற்றல் (Machine Learning) போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர், பிறந்த தேதி, ஆதார், வேலை விவரங்கள் போன்ற பதிவுகளில் உள்ள பிழைகள் குறைக்கப்பட்டு, சரியான தகவல்கள் உறுதி செய்யப்படும். பதிவு சரிபார்ப்பு வேகமாகவும் துல்லியமாகவும் நடைபெறுவதால், பணம் பெறுதல், திருத்தங்கள் மற்றும் ஓய்வூதிய சேவைகள் காலதாமதமின்றி கிடைக்க உதவும். நாமும் வரவேற்போம்.

 

ESIC : SPREE 2025 திட்டத்திற்கான கால எல்லை நீட்டிப்பு

 

கடந்த இரண்டு மாதங்களில் ESIC தொழிலாளர்களுக்குப் பயனுள்ள சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.  இதில் முக்கியமானது SPREE 2025 என்ற பதிவு திட்டம். இந்த திட்டத்தின் கால அவகாசம் இப்பொழுது 31.01.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை ESI-யில் பதிவு செய்யப்படாத நிறுவனங்களும் தொழிலாளர்களும், பழைய கால ESI பாக்கி, அபராதம், ஆய்வு போன்ற சிக்கல்கள் இல்லாமல் புதிதாக பதிவு செய்ய முடியும். இதனால் அதிகமான தொழிலாளர்கள் ESI மருத்துவ வசதி மற்றும் பணப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்த SPREE திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ஏற்கனவே பல நிறுவனங்களும், கோடிக்கணக்கான தொழிலாளர்களும் ESI பாதுகாப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக ESIC தெரிவித்துள்ளது. மேலும், இந்த திட்டம் தற்போது விழிப்புணர்வு மற்றும் பதிவு ஊக்குவிப்பு நோக்கத்திற்காக மட்டுமே செயல்படுகிறது என்றும், எதிர்காலத்தில் புதிய சமூக பாதுகாப்புச் சட்ட விதிகள் (Social Security Code) முழுமையாக அமலுக்கு வரும் வரை, கூடுதல் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது என்றும் ESIC தெளிவுபடுத்தியுள்ளது.

 

ESIC இன் இந்த சமீபத்திய மாற்றங்கள், பதிவு செய்யாத தொழிலாளர்களையும் ESI பாதுகாப்புக்குள் கொண்டு வந்து, மருத்துவ சிகிச்சை மற்றும் சமூக பாதுகாப்பு நன்மைகள் எளிதாக கிடைக்கச் செய்யும் ஒரு நல்ல முயற்சியாக பார்க்கப்படுகிறது.

 

DSC பதிவு – புதிய நடைமுறை

 

DSC-யை பழைய நடைமுறையில் பதிவு செய்ததும், PF தளம் தானாகவே ஒரு கடிதத்தை (Request Letter – PDF) உருவாக்கும். அந்தக் கடிதத்தை தரவிறக்கம் (Download) செய்து, நிறுவனத்தின் Letter Head-ல் Print எடுக்க வேண்டும்.

 


கையெழுத்து விதிமுறைகள்

தனிநபர் நிறுவனத்தில் முதலாளி மூன்று மாதிரி கையெழுத்து (Specimen Signatures) இட வேண்டும். நிறுவன முத்திரை (For Seal) வைத்து, அதன்மேலும் கையெழுத்து இடப்பட வேண்டும்.

கூட்டு நிறுவனம் (Partnership Firm), உரிய பங்குதாரர் மூன்று மாதிரி கையெழுத்திட வேண்டும். நிறுவன முத்திரை பயன்படுத்தப்பட வேண்டும். கூடுதலாக, மற்றொரு பங்குதாரரின் கையெழுத்தும் அவசியமாகும்.

 

Form 5A & Authorised Signatory Proof – மிக முக்கியம்

 


நிறுவனம் PF-ல் முதன்முறையாக பதிவு செய்யப்படும் போது Form 5A பூர்த்தி செய்யப்பட்டிருக்கும். அதன் பின்னர் வங்கி விவரங்களை பதிவு செய்யும் போதும், Proprietor / Partner / Director மாற்றம் ஏற்பட்டாலும், Form 5A-ஐ புதுப்பித்து (Update) செய்ய வேண்டும். நடைமுறையில் Form 5A புதுப்பிக்கப்படாத நிறுவனங்களில், தற்போது DSC பதிவு செய்யும் நேரத்தில், புதுப்பிக்கப்பட்ட Form 5A – தரவிறக்கம் செய்த நகல்,
அங்கீகரிக்கப்பட்ட கையெழுத்திடுபவரின் (Authorised Signatory) அடையாளச் சான்று,
மேலும் கையெழுத்திடுபவரின் ஆதார் நகல் ஆகியவற்றையும் இணைக்க PF அலுவலகம் வலியுறுத்துகிறது. இவ்வாவணங்கள் இணைக்கப்படாவிட்டால், DSC பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதோ அல்லது நிராகரிக்கப்படுவதோ நிகழும்.

 

இதுகுறித்து PF துறை இதுவரை தெளிவான சுற்றறிக்கை (Circular) வெளியிடாததும், நிறுத்தி வைக்கும் பொழுது காரணத்தை தெரிவிக்காததும், ஒரு முக்கியமான நடைமுறைச் சிக்கலாக இருந்து வருகிறது.

 

PF அலுவலக ஒப்புதல் & DSC நிலை

 


PF அலுவலகம் Request Letter மற்றும் இணைப்புகளை சரிபார்த்து ஒப்புதல் அளித்த பிறகு, PF Portal → DSC – Signature Status பகுதியில் “Active” என காட்டப்படும். அப்போது DSC பதிவு முழுமையாக நிறைவேற்றப்பட்டதாக உறுதி செய்யலாம். ஒப்புதல் பெற அதிகபட்சம் 7 நாட்கள் வரை ஆகலாம். கடிதத்தில் பிழை இருந்தால், அவை திருத்தப்பட்ட பின்னரே ஒப்புதல் வழங்கப்படும்.

 

இன்னும் வளரும்….!

 

வணக்கங்களுடன்,

 

- இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, பி.எப், இ.எஸ்.ஐ, எல்.ஐ.சி ஆலோசகர்,

9551291721

 குறிப்பு :  இந்தக் கட்டுரை  தொழில் உலகம் பிப்ரவரி 2026 இதழில்  வெளிவந்துள்ளது.