> குருத்து: December 2012

December 28, 2012

போராடும் மக்களை ஒடுக்க ஜெயாவின் ' போலீசு ஆட்சி' பிரகடனம்!

போராடும் மக்களை ஒடுக்க ஜெயாவின் ' போலீசு ஆட்சி' பிரகடனம்!

18 மணி நேர மின்வெட்டை எதிர்த்து சாலை மறியல் செய்தால் சிறை!
குடிகெடுக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து மறியல் செய்தால் பெண்களுக்கும் சிறை!
கல்வி கேட்டும் மாணவருக்கு சிறை!
உரிமை கேட்டால் தொழிலாளிக்கும் சிறை!
வழி நடத்தும் முன்னணியாளருக்கு குண்டர் சட்டம்!

போலீசுக்கு ஆள்காட்டி வேலை செய்ய இளைஞர் கூலிப்படை!
இணையத்தின் மூலம் அரசை விமர்ச்சித்தாலும் குண்டர் சண்டம்!

உழைக்கும் மக்களே!

ஜெயாவின் அடிமைகள், போலீசு தவிர நாம் அனைவரும் குண்டர்களா?

பாசிச ஜெயாவின் போலீசு ஆட்சியை முறியடிக்க அணிதிரள்வோம்!

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

December 27, 2012

தில்லி மாணவி பாலியல் வன்முறைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்!

தில்லி மாணவி மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக...

மாலை : 4.30 மணி அளவில்

அம்பேத்கர் சிலை அருகில்,
பல்லாவரம் பேருந்து நிலையம், சென்னை

அனைவரும் கலந்துகொள்ளுங்கள்!

*****

தில்லி மாணவி மீது கொடூர பாலியல் வன்முறை!
பாலியல் வெறியர்களை தூக்கில் போடு!

* தனியார்மய - தாராளமய கொள்கை பரப்பும் பாலியல் வக்கிரங்களே
பெண்கள் மீதான தாக்குதல் பெருகுவதற்கு காரணம்!

* பாலியல் வெறியை பரப்பும் சினிமாக்கள்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒழித்துக்கட்டப் போராடுவோம்!

* அரசு திட்டமிட்டே பரப்பும் நுகர்வுவெறி,
போதை சீரழிவுகளை வேரறுக்க அணிதிரள்வோம்!

- பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை

December 25, 2012

தில்லி மாணவி மீது கொடூர பாலியல் வன்முறை!


* தனியார்மய - தாராளமய கொள்கை பரப்பும் பாலியல் வக்கிரங்களே
பெண்கள் மீதான தாக்குதல் பெருகுவதற்கு காரணம்!

* பாலியல் வெறியை பரப்பும் சினிமாக்கள்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒழித்துக்கட்டப் போராடுவோம்!

* அரசு திட்டமிட்டே பரப்பும் நுகர்வுவெறி,
போதை சீரழிவுகளை வேரறுக்க அணிதிரள்வோம்!

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

December 24, 2012

டிசம்பர் 25 - கீழ் வெண்மணி நினைவு நாள்!

தலித் மக்கள் மீது பெருகி வரும்
ஆதிக்க சாதிவெறித் தாக்குதலை முறியடிப்போம்!


தமிழக அரசே!

* தருமபுரி தாக்குதலைத் தொடர்ந்து அடுத்து அடுத்து அரங்கேறுகின்றன
  சாதி வெறிக்கொலைகள்! சாதிவெறி கிரிமினல்களை பாதுகாக்காதே!

*  அனைவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்!

*  பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு இழப்பீடு உடனே வழங்கு!

*  அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களையும் தடை செய்!

உழைக்கும் மக்களே!

*  சாதிக்கட்சிகள் - சங்கங்களை விட்டு வெளியெறுங்கள்!
   உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்!

*  சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிப்போம்!

* புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!


மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

போலீசின் பொய் வழக்குகளையும், அடக்குமுறைகளையும் முறியடிப்போம்!

December 23, 2012

தருமபுரி : தலித் மக்கள் மீதான தாக்குதல்! - உண்மை அறியும் குழு அறிக்கை!

//"வீட்டுக்குள்ளாற  ரூம்ல ஒளிஞ்சிருந்தோங்க.
கொழந்தைங்க்கல்லாம்
ரெண்டுலேருந்து பத்து வயசுக்குள்ளாறதான்.
தீய கொளுத்திட்டுப் போட்டுடுப் போயிட்டாங்க.

ஒரே பொகைங்க. மூச்சு வேற அடச்சிகிச்சு.
கொழந்தை அணு தண்ணி...தண்ணின்னு கேட்டு
மயங்கிடுச்சு.  எங்களூக்கு என்ன செய்யிறதுன்னு தெரியல.
கத்தவும் பயமா இருந்துச்சு.

வேற வழியில்லாம மத்த குழந்தைங்கள
மூத்தரம் பேயச் சொல்லி
அதத்தாங்க குடிக்க வச்சு உசுர காப்பத்துனோம்."//

- தருமபுரி மாவட்டம் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி, செங்கல்மேடு ஆகிய தலித் மக்கள் வாழும் கிராமங்கள் மீது நவம்பர் 7, 2012 அன்று ஆதிக்க சாதியினர் நடத்திய தாக்குதல் குறித்து, மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு அமைத்த உண்மை அறியும் குழு, நவம்பர் 8,9,10,11, 24 ஆகிய தினங்களில் அக்கிராமங்களுக்குச் சென்று மக்களிடமும் அதிகாரிகளிடமும் நேரடியாக விசாரித்து வெளியிடும் அறிக்கை .


வெளியீடு :

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு

நன்கொடை ரூ. 20/-

31 பக்கங்கள்.

கிடைக்குமிடம் :

அலுவலகம் :

702/5, ஜங்சன் ரோடு,
விருத்தாச்சலம்,
கடலூர் மாவட்டம் - 606 001
9443260164

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை - 600 002.
பேச : 044-28412367

December 15, 2012

மாதவிடாய் - ஆவணப்படம்!

என் 20 வயதில் அலுவலகத்தில் உடன் வேலை செய்த பெண், வயிற்றைப் பிடித்து கதறிய பொழுது, பயந்தே போயிருக்கிறேன்.

சாதாரண நாட்களில் சாந்தமாய் இருப்பவர்கள் இந்த 'மூன்று நாட்களில்,  எரிச்சலும், கோபமாய் கடித்து குதறுபவராக 'வேறு ஒரு நபராய்' சிலரை பார்த்திருக்கிறேன்.

'மாதவிடாய்'  என்பது மனித இனத்தை மறு உற்பத்தி செய்வதற்கான ஒரு சுழற்சி முறை. ஒரு அருமையான விஷயம். குறித்த அறிவியல்பூர்வமான விளக்கம் அறிந்த பிறகு,  'தீட்டு'  கழிப்பதற்காக நடத்தப்படும் சடங்குகளுக்கு செல்வதை நிறுத்தியிருக்கிறேன்.

இந்த சடங்கில் கலந்து கொள்ளும் ஆண்கள்/பெண்கள் பலரும் தங்கள் குலசாமிகளுக்கு ஆகாது என சாப்பிடாமல் செல்வதை குறித்து, சாமிகள்/ஆசாமிகள் குறித்த பல கேள்விகள் மனதில் எழுந்திருக்கிறது.

'மாதவிடாய்' குறித்த ஆவணப்படம் பெரியார் திடலில் நேற்று திரையிட்டார்கள்.  போயிருந்தேன்.

****
இரு மாணவிகளிடம் 'மாதவிடாய்' என்றால் என்ன?' கேள்வி கேட்கப்படுகிறது.  கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் கூச்சத்தோடு சங்கடமாய் நெளிகிறார்கள்.  படம் துவங்குகிறது.

நகரங்களில், கிராமங்களில் மாதவிடாயின் பொழுது உடல்ரீதியான, உளரீதியான, சமூக ரீதியான பாதிப்புகளைப் பற்றி பல வர்க்கப் பெண்களும், பல துறை பெண்களும் தங்கள் அனுபவங்களை பகிர்கிறார்கள்.

மாதவிடாய் என்றால் என்ன? என்பதற்கு அறிவியல்பூர்வமான விளக்கம் படத்தில் தரப்படுகிறது.

இந்து, முஸ்லீம், கிறித்துவ பெண்கள் 'தீட்டு' என தள்ளி வைத்து பார்க்கும் நம்பிக்கைகளை, பழக்கவழக்கங்களை பகிர்கிறார்கள்.

நாப்கினில்  உள்ள வகைகள் என்ன?  அதில் உள்ள வசதிகள் என்ன? என்பதையும் விளக்குகிறார்கள்.

அரசு சமீப காலங்களில் பள்ளிகளில்  நாப்கின் தரும் இயந்திரத்தையும், எரிக்கும் இயந்திரத்தையும் அறிமுகப்படுத்துகிறார்கள்.

'மாதவிடாய்' குறித்த ஒரு தெளிவையும், சிரமப்படும் பெண்களின் மீது அக்கறை கொள்ளுங்கள் என்பதையும் முன்வைக்கிறது படம்.

****

படம் நமக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது.

ஒரு பெண் பருவம் எய்துவிட்டால், கவனமாய் 'பாதுகாக்கும்' சமூகத்தில் கழிப்பறை, தண்ணீர் வசதி இல்லாத பல பள்ளிகளில் இடைநிற்றல்கள் அதிகமாக இருக்கிறது.  படத்தில் கிராமப்புற பள்ளியைச் சேர்ந்த ஒருவர் இந்த தகவலை சொல்கிறார்.

பா.ஜ.க. தமிழிசை பள்ளியில் இயந்திரம் வைத்தற்காக ஜெ.வை மனம் உவந்து பாராட்டுகிறார்.  ஜெ. 91 லிருந்து கடந்த 21 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறார்.  ஒரு பெண்ணாகவும் இருந்து கொண்டு ஏன் இத்தனை தாமதமாய் செய்தார்? இன்னும் ஏன் பல பள்ளிகளில் இந்த வசதியை ஏற்படுத்தி தரவில்லை? ஆட்சியாளர்கள் எப்பொழுதும் ஆட்சியாளர்களாக நடந்துகொள்கிறார்கள்.

தலைமைச் செயலகம் துவங்கி அரசு மருத்துவமனைகள், பொதுக்கழிப்பறைகள் எல்லாம் ஏன் படுகேவலமாக இருக்கிறது?

'சுதந்திரம் பெற்று' 65 ஆண்டுகள் காலமாகி, இந்த நாட்டில் சரிபாதி பெண்கள் மாதந்தோறும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனையை மாநில அரசும், மத்திய அரசும் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன?

சென்னையில் மதுரவாயில் பகுதிகள் உழைக்கும் மக்களை திரட்டி ஒரு பொதுக்கழிப்பறை கட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும், பெண்கள் விடுதலை முன்னணியும் சில ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. குடிமக்களின் மீது இந்த அரசுக்கு அத்தனை அக்கறை!

*****

சமூக எதார்த்தத்தை படமாக முன்வைத்திருக்கிறார். மற்றபடி அரசியல் அம்சங்கள் படத்தின் இடையில் ஒளிந்திருக்கின்றன. பார்க்கும் நாம் தாம் அதை வெளிக்கொண்டுவரவேண்டும். பெண்கள் பிரச்சனை குறித்த ஆவணப்படங்கள், குறும்படங்கள் மிககுறைவு.  இந்த சூழலில் இந்த படம் அவசியமானது.

மாச மாசம் ரத்தப் போக்கு ஏலே லம்படி  ஏலோ,
மாதவிடாய் ஆனதுவே  ஏலே லம்படி  ஏலோ,
தீட்டு தீட்டு என்று சொல்லி ஏலே லம்படி  ஏலோ,
ஒதுக்கி வச்சி ஒடுக்குனாங்க ஏலே லம்படி  ஏலோ,

வயசுக்கு வந்துட்டாலே ஏலே லம்படி  ஏலோ,
வீட்டுக்குள்ளே அடைக்கணுமா ஏலே லம்படி  ஏலோ,
மாச தீட்டு ரத்தம் தானே ஏலே லம்படி  ஏலோ,
கரு வளர உதவும் தானே ஏலே லம்படி  ஏலோ,

மாச மாசம் ரத்தப் போக்கு ஏலே லம்படி  ஏலோ,
மாதவிடாய் ஆனதுவே  ஏலே லம்படி  ஏலோ,

- என படத்தில் சாலைச்செல்வம் பாடும் ஒருபாடல் படம் முழுவதும் வருகிறது. அருமையான பாடல்.  இசையும், ஒளிப்பதிவும், எடிட்டிங் எல்லாம் உறுத்தாமல் படத்திற்கு உதவி செய்திருக்கின்றன. படக்குழுவினருக்கு பாராட்டுகள்.

பார்க்கவேண்டிய, பகிர்ந்துகொள்ளவேண்டிய படம்.

****
'மாதவிடாய்'  - ஆவணப்படம்!

இது ஆண்களுக்கான பெண்களின் படம்!

படம் : 38 நிமிடங்கள்

இயக்கம் : கீதா இளங்கோவன்

விலை ரூ. 100

December 12, 2012

இது கூட தெரியலையே?

ஒன்றாம் வகுப்பு படிக்கும் இலக்கியாவுடன், பள்ளி செல்லும் வழியில்...

"படத்தில நடிக்கிறவங்க பேரை நான் சொல்றேன்பா!"

"சொல்லு!" என்றேன்.

"ரஜினி, ரஜினிகாந்த், விஜய், விஜய்காந்த், ஒல்லியா இருப்பாங்களே தனுஷ், சூர்யா".

"இப்ப லேடீஸ் ‍‍- திரிஷா (உடன் படிக்கும் பெண்ணின் பெயரென்பதால்)

(மேற்கொண்டு தெரியவில்லை) அதனால் ஒவ்வொரு போஸ்டராக பார்த்துக்கொண்டே....

"சிவாஜி படத்தில?"

"ஸ்ரேயா" என்றேன்.

"யானை படத்தில் (கும்கி)?"

"தெரியல" என்றேன்.

"மறந்துருவாங்களே" அந்த படத்தில்?" (நடுவுல கொஞ்சம் பக்கத்தை!)

"???????"

"ஈயிடா..ஈயிடா (பாட்டை பாடிக்காட்டி) படத்தில்?

"??????" (தீவிரமாக மூளையை கசக்கினாலும் நினைவுக்கு வரவில்லை)

"10 நிமிசம் டைம் தர்றேன். அதுக்குள்ளே சொல்லிறனும்!"

10 நொடிகளில், "சொல்லுப்பா"

"ஞாபம் வரலையேப்பா! கொஞ்சம் டைம் கொடு! நாளைக்கு சொல்றேன்!"

"என்னப்பா இதுகூட தெரியல!" என நொந்து கொண்டாள். அடுத்த நொடி, பட்டாம் பூச்சிகளை பார்த்து நிறங்களை சொல்வதில் கவனம் திருப்பினாள்.

ஏதோதோ வேலைகளில் மூழ்கி, இப்படி 'முக்கிய'மான கதாநாயகிகளின் பெயரை தெரியாமல் இருந்துவிட்டேனே! :(

December 11, 2012

பால் வெள்ளைக் காகிதம்!

காலைப் பனிபோல் தூய்மையாக இருந்த ஒரு வெள்ளைக் காகிதம் 'நான் ரொம்ப சுத்தமானவளாக்கும்' என்று அலட்டிக்கொண்டது ‍ 'நான் பிறக்கும் பொழுதுதே தூய்மையாகப் பிறந்தேன்; காலம் முழுவதும் நான் இவ்வாறே தூய்மையாக இருப்பேன்; என்னை எரித்துச் சாம்பலனாக்கிலும் பரவாயில்லை. பொறுத்துக்கொள்வேன். ஆனால் கறுமையின் இருள் கைகள் என்னைத் தொட அனுமதிக்கப்பட்டேன்.  தூய்மையற்றவர்கள் யாரும் என் பக்கத்தில் கூட வரமுடியாது.'

இந்தப் பேச்சைக் கேட்ட மைப்புட்டி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. அந்தக் காகிதத்தின் பக்கத்திலேயே செல்வதில்லை என்று முடிவுக்கட்டிக்கொண்டது.

பல வண்ண பென்சில்களும் இதைக் கேட்டன.  அவையும், அந்த காகிதத்தை நெருங்கவில்லை.

ஆகவே, அந்த பால் வெள்ளைக் காகிதம், அதன் ஆசைப்படி, என்றென்றும் தூய்மையோடும் கற்போடும் வாழ்ந்தது.

வெறுமையாகவும்!

‍கலீல் ஜிப்ரான், மிட்டாய் கதைகளிலிருந்து....

December 5, 2012

ரயிலில் இனி அடையாள அட்டை அவசியம்!

இனி ரிசர்வ் செய்யப்பட்ட டிக்கெட்களில் பயணிப்பவர்கள் அனைவரும் அடையாள வைத்திருக்கவேண்டும். இல்லாமல் பயணித்தால், டிக்கெட் இல்லாமல் பயணித்தவர் என முடிவு செய்து இரண்டு மடங்கு வசூலிக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்திருக்கிறது. இதை எதிர்த்து இப்பொழுது நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடுத்திருக்கிறார். - ‍ செய்தி

****


சரியான நபர்கள் தான் பயணிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த அறிவிப்பை செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், இந்த அறிவிப்பு மூலம் அடையாள அட்டை பெரும்பாலும் வைத்திருக்காத உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பலரையும் ரயிலில் ஏறவிடாமல் தடுத்திருக்கிறார்கள்.

என்னுடைய துணைவியார் டிகிரி முடித்தவர். சென்னையில் ஒரு நல்ல நிறுவனத்தில் பொறுப்பான வேலையில் பணிபுரிகிறார். ஸ்கூட்டி ஓட்டுகிறார்.. இப்பொழுது அவரே ரயிலில் ஏறமுடியாது.

காரணம் வாக்காளர் அட்டை ஒரிஜினல் தொலைந்து போய், ஜெராக்ஸ் வைத்திருக்கிறார். அவருடைய கொள்கை முடிவுப்படி தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை போய், பல ஆண்டுகளாக ஆனதால், வாக்களிக்கப்போவதில்லை. அதனால், தேவையில்லை என முடிவு செய்து, புதிய அட்டைக்காக விண்ணப்பிக்கவும் இல்லை.

அரசுக்கு வரி கட்டும் அளவுக்கு சம்பாதிக்கவில்லை. பான்கார்டையாவது (PAN Card) ஆசைக்காகவும், பயணங்களுக்கும் பயன்படும் என‌ வாங்கலாம் என்றால், அதிலும் சிக்கல். வாங்குவதற்கு ஒரு அடையாள சான்றிதழும், முகவரி சான்றிதழும் வேண்டும். இருக்கிற ஒரே அடையாள சான்றிதழ் வாக்காளர் அட்டை தான். ஒரிஜினலே தெளிவாக இருக்காது. ஜெராக்ஸ் சுத்தம். அதை வைத்து ஜெராக்ஸ் எடுத்தால், ஒரே இருட்டாக தான் இருக்கிறது. முகத்தை காணோம். குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் என்ற முறையில் என்னுடைய புகைப்படம் தான் இருக்கிறது.

சரி வேறு வாய்ப்பு இருக்கிறதா என தேடிப்பார்த்தால், பச்சை மையில் கையெழுத்திடுகிற ஒருவர் 'இவர் எனக்கு தெரிந்தவர்' என கையெழுத்திடவேண்டும். இதுநாள் வரை அப்படித்தான் இருந்தது. கடந்த மூன்று மாதங்களாக பச்சை மையில் பலரும் கையெழுத்திட்டு ஏமாத்திவிட்டார்கள் போலிருக்கிறது! அதனால் கையெழுத்திடுகிறவர் அவருடைய அடையாள அட்டையை ஜெராக்ஸ் எடுத்துதரவேண்டும் என்று நிபந்தனை விதித்துவிட்டார்கள்.

வசிக்கும் பகுதியில் கையெழுத்து இடுகிற மருத்துவர் ஜெராக்ஸ் தர மறுக்கிறார். "வேணும்னா, என்னோட ஓட்டு உரிமம் ஜெராக்ஸ் தருகிறேன்" என காமெடி பண்ணுகிறார்.

வண்டி ஓட்டியாவது ஓட்டுநர் உரிமம் பெற்றுவிடலாம் என நினைத்தால், எட்டு போடும்பொழுது, ஒரே ஒருமுறை கால் கீழே வைத்ததற்காக தர மறுக்கிறார்கள்.இவரை விட‌ மோசமாக ஓட்டுகிற ஆள்களுக்கெல்லாம் ஓட்டுநர் உரிமம் தந்துவிட்டதால், கடுப்பில் இருக்கிறார். இனி அடுத்தமுறை ஒருமுறை கால் வைக்காமல் ஓட்டவேண்டும். அப்பொழுது தான் ரயிலில் ஏற வாய்ப்பு இருக்கிறது.

ரயிலில் டிக்கெட் கிடைப்பதே அரிதாக இருக்கும் பொழுது, கிடைத்தாலும் என் துணைவியார் ரயிலில் ஏறமுடியாத நிலை தான்.

நம் நாட்டில் ஒரிஜினலை எடுத்துக்கொண்டு பயணிப்பது என்பது நிறைய ரிஸ்க். தொலைத்துவிட்டால், அதை வாங்குவதற்குள் நம் ஆயுளுக்கும் வருந்துகிற அளவுக்கு செய்துவிடுவார்கள். நிலைமை இவ்வாறு இருக்கையில் ஒரிஜினலை வைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என்ற அறிவிப்பு தவறு!

இந்த அறிவிப்பில் ஒரு சந்தேகம். ஒரு நபர் தனியாக போனால், அடையாள அட்டை அவசியம். அடையாள அட்டை இருக்கும் ஒரு நபரோடு ஒரே டிக்கெட்டில் இருக்கும் மற்ற நபர்களுக்கு அடையாள அட்டை தேவையா? இல்லையா?

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?