> குருத்து: February 2012

February 21, 2012

படித்து முடித்தப்பின்! - தோழர் மருதையன் உரை!இன்று காலையில் 15 வதுமுறையோ, 16 வது முறையோ இந்த ஒலி நாடாவை கேட்டேன். அருமையான செய்திகளை உள்ளடக்கிய பேச்சு!

கடந்த 2010 டிசம்பரில் முற்போக்கு நூல்களுக்கு முகவரியாக இருக்கும் கீழைக்காற்று வெளியீட்டகம் " விடுதலைப் போரின் வீர மரபு" மற்றும் இன்னும் சில புத்தகங்களை வெளியிட்டது. அதற்காக ஒரு விழாவை ஏற்பாடு செய்தது. கீழைக்காற்று தன் நீண்ட புத்தக பயணத்தில் நடத்திய முதல் விழா என்று சொன்னது பலருக்கும் ஆச்சரியமாயிருந்தது.

அந்த விழாவில் மருத்துவர் ருத்ரன், ஓவியர் மருது, பதிவர் சந்தனமுல்லை கலந்து கொண்டு, புத்தகங்களை வெளியிட்டும், பெற்றுக்கொண்டும், சில நிமிடங்கள் பேசவும் செய்தார்கள். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுச்செயலாளரான தோழர் மருதையன் "படித்து முடித்தப்பின்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

எல்லாவற்றையும் தொகுத்து சில நாட்களில் ஒரு குறுந்தகடாக ரூ. 40/- விலையில் வெளியிட்டு இருந்தார்கள். கொஞ்சம் தாமதித்து விட்டேன். நான் போய் கேட்கும் பொழுது, தீர்ந்து போய்விட்டது என்றார்கள்.

இந்த வருட புத்தக திருவிழாவில் மீண்டும் இரண்டாம் பதிப்பாக வெளியீட்டு இருந்தார்கள். வாங்கினேன்.

தோழர் மருதையனின் உரை "கீழைக்காற்று வெளியீட்டகம் துவங்கிய காலம்; அதன் பயணம் எப்படி கடுமையாக இருந்தது? இப்பொழுது "முற்போக்கு நூல்களின் முகவரி" என சொல்லும் அளவுக்கு எப்படி வளர்ந்தது?

"விடுதலைப்போரின் வீர மரபு" தொகுப்பிற்காக ஓவியர் மருது வரைந்த அருமையான கோட்டு சித்திரங்களை புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறு தெரிந்திருக்கவேண்டும்.

இப்பொழுது படிப்பு என்றால் தொழிற்கல்விக்காக மட்டுமே என்ற நிலை. ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு ஓடும் உலகத்தில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி தயார்படுத்துகிறார்கள்? பதட்டத்தை உண்டாக்குகிறார்கள்? பிறகு கார்ப்பரேட் குருக்களின் முன்பு மண்டியிடுகிறார்கள்.

இப்பொழுதெல்லாம் ஆழ்ந்து சிந்திப்பது இல்லை என்பதல்ல! சிந்திப்பதே குறைந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் வருங்காலத்தில் மூளை என்ற பொருளே ம்ழுங்கிபோய்விடும். ஒரு புதியவகை பாப்கார்ன் தலைமுறை உருவாகி இருக்கிறது.

முதலாளித்துவம் மனிதர்களை எப்படி? எந்த பாதையில் சிந்திக்க கற்றுத்தருகிறது? நாம் எதற்காக படிக்க வேண்டும்? எதை நோக்கி படிக்க வேண்டும்?

- என பல தளங்களில் இந்த உரை ஆழமாக பயணிக்கிறது. நீங்களும் வாங்கி, ஒருமுறை கேளுங்கள். பிறகு மீண்டும் மீண்டும் கேட்பீர்கள். நண்பர்களுக்கும் பரிந்துரைப்பீர்கள்.

எப்பொழுதும் திருமணத்திற்கு மொய்யெல்லாம் செய்யும் பழக்கமேயில்லை. புத்தகம் தான் பரிசாக தரும் பழக்கம். இப்பொழுது சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த சிடியையும் சேர்த்து திருமண பரிசாக தர முடிவெடுத்து உள்ளேன்.
*****

மேலே உள்ள உரையின் உரை வடிவம் :

பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும்! ‍ தோழர் மருதையன்

நன்றி : வினவு

ஆபத்தான அணு உலை வேண்டாம்! - எம்.ஜி.ஆர் நகரில் பொதுக்கூட்டம்!


ஆபத்தான அணு உலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்!!

கடந்த 50 நாட்களாக மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் "முல்லை பெரியாறு அணையை பாதுகாப்போம்!" "நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலை வைக்கும் அணு உலையை இழுத்து மூடு" என்ற முழக்கத்தின் அடிப்படையில், தமிழக மக்கள் மத்தியில் பேருந்தில், ரயிலில், வீடு வீடாக, தெருமுனைக்கூட்டங்கள் வாயிலாக, பொதுக்கூட்டம் வாயிலாக, ஆலைகளின் வாயில்களில் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியில் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்துகொள்ளுங்கள். நன்றி.

தோழமையுடன்,

குருத்து.

*****

பொதுக்கூட்டம்
பிப்ரவரி 25, மாலை 6 மணி

இடம் : எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், சென்னை.

தலைமை

தோழர் அ. முகுந்தன், தலைவர், பு.ஜா.தொ.மு, தமிழ்நாடு

சிறப்புரை

தோழர் மருதையன், பொதுச்செயலாளர், ம.க.இ.க தமிழ்நாடு

தோழர் ராஜூ, வழக்குரைஞர், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்,தமிழ்நாடு

புரட்சிகர கலைநிகழ்ச்சி, ம.க.இ.க மையக் கலைகுழு

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு.

தொடர்புக்கு

முகுந்தன் – 944448 34519
வினவு – 97100 82506

நன்றி : வினவு

February 2, 2012

தோழர் மருதையன் திருமண வாழ்த்துரை!


கடந்த ஆண்டு ஜூலை இறுதியில் தோழர் ஒருவருக்கு 'வாழ்க்கை துணை நல ஏற்பு ' நடைபெற்றது. தாலி மறுத்து, சடங்குகள் மறுத்து எளிமையாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது. மணமக்களை வாழ்த்தி பேசியவர்களில் ம.க.இ.க.வின் பொதுச்செயலாளர் தோழர் மருதையனும் ஒருவர். 10 நிமிடங்கள் அவர் பேசியதில், நான்கு விசயங்கள் மிகவும் முக்கியமானவை. பகிர்ந்துகொள்ள வேண்டியதின் அவசியம் கருதி, சுருக்கமாய் எழுத்தில் பதிந்தேன்.

இப்பொழுது வாழ்த்துரை எம்.பி.3 வடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது! கேட்டுப்பாருங்கள்!

செல்பேசியில் பதிந்ததால், ஒலிப்பதிவு குறைவான தரத்தில் இருக்கிறது. இருப்பினும் கேட்ககூடிய அளவுக்கு இருக்கிறது.

*******

பொதுவாக இந்த மணவிழாவை போல புரட்சிகர திருமணங்கள் தமிழகமெங்கும் ம.க.இ.க அமைப்பாலும், அதன் தோழமை அமைப்புகளாலும் ஏராளமாக நடத்தப்படுகின்றன.

இந்த மணவிழாவை பொறுத்தவரை, மற்றவர்கள் குறிப்பிட்டது போல தோழருக்கு தாமதமான திருமணம். (பெண்) தோழருக்கு இது மறுமணம். இப்படி ஒரு சொல்லால் குறிப்பிடுவது என்பது இங்கு இருக்கிறது. மேலை நாடுகளில் இப்படி இல்லை. அது திருமணமா? மறுமணமா? என்ன வெங்காயமா இருந்தா உனக்கென்ன? இப்படி ஒரு அநாகரிகம் நம் சமூகத்தில் இருக்கிறது. அதனால் முதல் திருமணம், மறுமணம் என சொல்ல வேண்டியிருக்கிறது.

பொதுவில் திருமணம் என்பதை எப்படி பார்க்கிறார்கள், நடத்துகிறார்கள் என்றால், முழு வாழ்க்கையில் அது முக்கியமான சம்பவம். தன்னைப் பற்றிய ஸ்டேட்மெண்ட். தன்னை பிரகடனப்படுத்தி கொள்கிற நிகழ்வு. அதற்காக எல்லா பொருளையும், சிந்தனையையும், உழைப்பையும் செலவழிக்கிறார்கள்.

இந்த தோழர்களை பொறுத்தவரை அப்படி இல்லை. தோழருடைய வாழ்க்கை தான் ஒரு ஸ்டேட்மெண்ட். இந்த திருமணம் இப்படி நடத்த வேண்டிய அவசியம் கூட இல்லை. ஒரு பதிவு திருமணமாகவோ, சில நண்பர்களுக்கு வீட்டளவில் தேநீர் வழங்கியோ கூட முடித்து கொண்டிருக்கலாம். பிறகு ஏன் நடத்துகிறோம்? சுயமரியாதை திருமணம், சாதி மறுப்பு, தாலி மறுப்பு, இவற்றையெல்லாம் பிரபலப்படுத்த வேண்டும் என்பது ஒரு நோக்கம்.

ஒரு குறிப்பிட்ட வயது கடந்துவிட்டால், மாப்பிள்ளையாய் மேடையில் அமருவது கூச்சத்திற்குரிய விசயம் என்ற கருத்து நம்மிடம் இருக்கிறது. குறிப்பிட்ட வயதுக்கு மேலே போனால், மாப்பிள்ளை இல்லையா? அல்லது மறுமணம் என்றால் திருமணம் இல்லையா?! இதை முறிப்பதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

இப்படிப்பட்ட திருமணம் உறவினர்கள், நண்பர்கள் மத்தியிலே கொண்டு செல்லப்பட வேண்டும். (பெண்) தோழர் இருக்க கூடிய கிராமத்திலே, 25 இளம் கைம்பெண்கள் இருப்பதாக கூறினார்கள். அந்த கிராமத்திலே 500 தலைக்கட்டு (குடும்பங்கள்) இருக்குமா? அந்த ஊரிலே மணவயதில் 25 கைம்பெண்கள் இருப்பது கொடுமையில்லையா? அவர்கள் வாழ்நாள் முழுவதும் அப்படியே வாழ்வார்கள் என்பது எவ்வளவு பெரிய சமூக அநீதி.

இந்த மணவிழாவை உறவினர்கள், ஊர்க்காரர்கள் பார்த்து, இன்னும் ஒன்றிரண்டு திருமணங்கள் நடைபெற்றால் கூட மிகப்பெரிய வெற்றி என பார்க்கவேண்டும்.

தோழரின் பெற்றோர், உறவினர்களும் வந்திருக்கிறார்கள். தோழரின் தந்தைக்கு வருத்தம் இருக்கும். எந்த பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை பொது வாழ்க்கைக்கு அனுப்பிவிட்டு, மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்!

தன் குடும்பம், தன் பெண்டு என வாழ்வதை தான் முன்மாதிரியான வாழ்க்கை என பொற்றோர்கள் கருதுகிறார்கள். பிள்ளைகளையும் அப்படியே பயிற்றுவிக்கிறார்கள். பிற்காலத்தில் தன் பிள்ளை தங்களுக்கு சோறுபோட மாட்டேன் என்று சொல்லும் பொழுது கூட இப்படி சுயநலவாதிகளாக பயிற்றுவித்தது தப்பு என புரிவதில்லை. உரைப்பதில்லை. இது துரதிருஷ்டம்!

இந்த மணவிழாவில், மணமக்கள் உறுதிமொழி வாசிப்பார்கள். "பொதுநலனுக்கு உட்படுத்தி, எங்களது குடும்ப வாழ்க்கை வாழ்வோம்! மணமகன் ஆணாதிக்கம் இல்லாமல் நடந்துகொள்வேன் என சொல்வார். இந்த இரண்டு விசயங்களும் அமுல்படுத்துவது மிக சிரமமானது.

ஏனென்றால், ஆணாதிக்கம் என்பது கிட்டத்தட்ட இரத்தத்தில் ஊறி இருக்கிறது. ஆணாதிக்கம் என்றால் என்ன? என ஒரு ஆணைக் கேட்டால் அதிகபட்சமாக சொல்வது "போடி! வாடின்னு பேசக்கூடாது! கை நீட்டி அடிக்க கூடாது. இப்படி மூணு, நாலு சொல்வார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அவ்வளவு தான் ஆணாதிக்கம். மற்றபடி உட்கார்ந்தபடி கைநீட்டி டீ கேட்பது; காலாட்டி உட்கார்ந்து கொண்டு, மனைவி தான் தண்ணீர் தூக்கனும்; வேலை செய்ய வேண்டும் என நடந்து கொள்வது ஆணாதிக்கத்தின் வடிவம் என ஒரு ஆண் கருதுவதில்லை.

அதுபோல, பெண்ணும் கூட பெண்ணடிமைத்தனத்தை, ஜனநாயக உணர்வு கொண்ட பெண்கள் கூட இயல்பாக பல பெண்ணடிமை கருத்துக்களை, நடவடிக்கைகளை, வாழ்க்கை நடைமுறைகளை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் நுட்பமான முறையிலே கவனித்து, இரண்டு பேரும் அதை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆணாக இருக்கட்டும்! பெண்ணாக இருக்கட்டும்! கணவன், மனைவியருக்கிடையே அல்லது நண்பர்களுக்கிடையே எழும் முரண்பாடாகட்டும் அதில், எது அடிப்படையாக அமைகிறது என்றால், நம்மீது மனைவியோ, நண்பர்களோ ஒரு தவறை நம்மீது சுட்டி காட்டும் பொழுது, தவறு என தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மறுப்பது தான்! தவறு என தெரியாமல் இருந்தால் அது வேறு விஷயம். தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மறுப்பது; அதில் வீம்பாக நின்றுகொண்டு, நியாயப்படுத்தி வாதம் செய்வது! இதுதான் உறவுகள் சிதைவதற்கு அடிப்படை!

இதை நாம் எப்பொழுது களைந்து கொள்வோம்? இவையெல்லாம் களைந்து கொள்ள வேண்டிய தவறுகள் என ஒரு ஒப்புக்கொள்ள (Conviction) வேண்டும். இரண்டாவது, முக்கியமாக ஆண்களுக்கு, தன்னைத்தானே விமர்சனம் செய்து கொள்கிற, தான் இரட்டை வேடக்காரனாக இருக்கிறேன் என்று தன்னைத் தானே சிரித்துக்கொள்கிற பக்குவம் வேண்டும். மனைவி சொன்னால், தான் அப்படித்தான் இருக்கிறேன் என உணரவேண்டும். இப்படி இருக்கும் பொழுது தான் சமத்துவம் நிலைநாட்டப்படும்.

இரண்டாவதாக, தன்னுடைய சொந்த வாழ்க்கையை சமூக நலனுக்கு உட்படுத்துவது. அப்படி ஒரு பொதுவாழ்க்கைக்கு சொந்த வாழ்க்கையின் இன்பங்களை விட்டுக்கொடுக்க தயாராய் இருப்பது! இதை செய்வது மிக கடினம். சொந்த வாழ்க்கையில் தனக்கு வசதி, வாய்ப்பு சாத்தியமென்றாலும், அது வேண்டாம் என்று தள்ளுகிற பக்குவம் வரவேண்டும்.

பொதுநலனின் பொருட்டு இந்த வசதிகளை நாம் அனுபவிக்க கூடாது அது ஒரு அறம் கொன்ற செயல் என உணர வேண்டும். மக்கள் மிகவும் சிரமப்பட்டு வாழ்கிற ஒரு நாட்டில், வசதி வாய்ப்பு எல்லாம் இருக்கிறது என்றாலும், அனுபவிப்பது என்பது அநாகரிகம் என்று கருதுகிற பக்குவத்தில், அதை ஏற்றுக்கொள்கிற பக்குவத்தில், ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள துணிந்திருப்பது என்பது முக்கியமானது.

மேலும், குழந்தை இருக்கிறது என்றால், அதை எப்படி வளர்க்க வேண்டும்? அந்த குழந்தைக்கு செய்து கொடுக்க வேண்டிய அத்தியாவசிய தேவைகள் என்ன? எவற்றுக்கு அந்த குழந்தையை பயிற்றுவிக்ககூடாது? எவையெல்லாம் தவறானவை; ஆடம்பரமானவை; உழைக்கும் மக்கள் பண்பாட்டுக்கு விரோதமானவை என்பதை தீர்மானிப்பதிலும்; அமுல்படுத்துவதிலும் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. இது ஒவ்வொன்றும் ஒரு போராட்டத்தின் ஊடாகத்தான் தீர்க்கப்படும்.

இது உறுதிமொழியில் முடிந்துவிடாது. பல தோழர்களுக்கு அது முடிவதில்லை. நுகர்பொருள் மோகத்தை எதிர்க்க வேண்டும் என்று சொன்னாலும், அதன் மீது மோகம் இருக்கிறது; சபலம் இருக்கிறது. அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என தங்களை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். ஏன் ஒப்பிட வேண்டும்? அப்படி ஒப்பிடுவதென்றால், திருக்குறளுக்கு போகவேண்டும்.

தம்மினும் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென்றகமகிழ்க.

பிளாட்பாரத்தில் வாழ்கிறவர்களோடு நம்மை ஒப்பிடலாமே! ஏன் வசதி, வாய்ப்பு இருக்கிறவர்களோடு ஒப்பிடவேண்டும்? உழைக்கும் மக்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்து, தங்களுடைய குடும்ப வாழ்க்கையை அதற்கேற்ப எளிமையாக்கி கொள்வதும், சமூக விடுதலைக்காக போராட்டத்தில் ஈடுபடுத்துவதும், அந்த சிந்தனையை முன்நிறுத்துவதும் அவசியம்.

இவையெல்லாம் கணவன், மனைவி ஒத்த வாழ்க்கை வாழ அவசியம். தன் குடும்பம், தன் சுற்றம் என்று மட்டும் கணவன், மனைவி வாழத் துவங்குவார்களேயானால் குடும்ப முரண்பாடு தவிர்க்கவே முடியாதது! எங்கே ஆணாதிக்கம் இல்லாது, நாகரிகமான, ஆண், பெண் உறவு நிலவும் என்றால், எந்த குடும்பம் சமூக நலனை முன்நிறுத்தி அதற்கு உட்பட்டது தான் தனது குடும்ப நலன் என எந்த கணவனும், மனைவியும் உறுதியோடு ஈடுபாடு கொண்டிருக்கிறார்களோ அந்த குடும்பத்தில் சமத்துவமும், மகிழ்ச்சியும் நிலவும்.

தோழர்களின் வாழ்விலும் அப்படிப்பட்ட சமத்துவமும், மகிழ்ச்சியும் நிலவும் என்ற நம்பிக்கையை தெரிவித்து, வாழ்த்த வாய்ப்பு தந்தமைக்கு, நன்றி கூறி விடைபெறுகிறேன்!

****

http://www.zshare.net/audio/98979787d4529b3a/

அணுவிபத்து கடப்பாடு சட்டம் : மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்முன்குறிப்பு
: முந்தாநாள் காங்கிரசும், இந்து முன்னணியும் தான் யோக்கியசிகாமணிகள் போலவும், போராட்டக்குழுவினர் தேசத்துரோக கும்பல் போலவும் திருநெல்வேலி ஆட்சியர் முன்பு போராட்டக்குழுவினை தாக்கினர்.

இந்த கட்டுரை, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி போல கடுமையாக மோதிக்கொள்வது சீன் போடும் காங்கிரசும், பா.ஜனதாவும் எந்த அளவிற்கு ஏகாதிபத்திய விசுவாசிகளாக நடந்துகொள்கின்றனர் என கட்டுரை ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறது.

இந்த யோக்கியசிகாமணியினர் தான் அணு உலை எதிர்ப்பு குழுவினர் ஏகாதிபத்தியங்களிடம் காசு வாங்கி கொண்டு எதிர்ப்பதாக சவுண்டு விடுகின்றனர். இந்த தேசத்துரோகிகளை ஒழித்துக்கட்டினால் தான் இந்தியா உருப்படும்.

*****
அணு விபத்துக் கடப்பாடு மசோதாவை, பா.ஜ.க.-வின் ஆதரவோடு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றியிருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு. அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கையெழுத்தாகி, ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் ஒப்புதலைச் சதித்தனமான முறையில் பெற்றுவிட்ட அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தின் (123 ஒப்பந்தம்) இளைய பங்காளிதான் இந்த அணு விபத்துக் கடப்பாடு சட்டம்.

இச்சட்டத்தை நிறைவேற்றினால்தான், அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அணு உலைகளை இந்தியா இறக்குமதி செய்ய முடியும். ஏனென்றால், அமெரிக்காவோடு கூட்டுச் சேர்ந்து நிறுவப்படும் அணு மின் நிலையங்களில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அவ்விபத்திற்கு அணு உலைகளை/தொழில்நுட்பத்தை விற்ற அமெரிக்க நிறுவனங்கள் மீது நட்ட ஈடு கேட்டோ, கிரிமினல் குற்றம் சுமத்தியோ வழக்குத் தொடரக் கூடாது; அந்த அணு உலைகளை இயக்கும் நிறுவனங்கள்தான் விபத்திற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அமெரிக்கா விதிக்கும் நிபந்தனை. இச்சட்டம் இப்படிபட்ட பாதுகாப்பை அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, அணு உலை இயந்திர பாகங்களை இந்தியாவிற்கு விற்க முன்வரும் பிற நாடுகளின் நிறுவனங்களுக்கும், உள்நாட்டு நிறுவனங்களுக்கும் அளிக்கிறது.

மன்மோகன் சிங் இச்சட்டத்தை நிறைவேற்றிய கையோடு, “அமெரிக்காவின் நலன்களுக்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்படவில்லை” எனச் சத்தியம் செய்யாத குறையாக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். ஆனால், இப்படிபட்ட சட்டம் எதுவுமில்லாமல் ரசிய உதவியோடு கூடங்குளத்தில் நிறுவப்பட்டு வரும் அணு உலைகள், மன்மோகன் சிங்கின் புளுகுணித்தனத்தையும், இச்சட்டம் அமெரிக்காவின் நிர்பந்தத்தால்தான் கொண்டு வரப்படுகிறது என்பதையும் ஒருசேர நிரூபிக்கின்றன. இது மட்டுமல்ல, அமெரிக்க முதலாளிகளின் விருப்பத்தை நிறைவேற்ற காங்கிரசு அரசு அடுத்தடுத்து மேற்கொண்ட தகிடுதத்தங்கள் திருவாளர் மன்மோகன்சிங் கோட்டு சூட்டுப் போட்டு திரியும் ஒரு நாலாந்தர கிரிமினல் போர்ஜரி பேர்வழி என்பதை நிரூபித்துள்ளன.

அணு விபத்துக் கடப்பாடு மசோதா நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. பா.ஜ.க. உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இம்மசோதாவை எதிர்த்ததால், அம்மசோதா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

‘‘அணு உலையை விற்ற நிறுவனம் அல்லது அதன் ஊழியர்களின் திட்டமிட்ட கவனக்குறைவின் காரணமாக விபத்து நடந்திருந்தால், அணு உலையை இயக்கும் நிறுவனம் உலையை விற்ற நிறுவனத்திடமிருந்து நட்ட ஈடு கோரலாம்” என்ற விதி (17ஆ) அம்மசோதாவில் சேர்க்கப்பட்டிருந்ததால், அமெரிக்காவும் இம்மசோதாவை எதிர்த்தது. இந்த விதியை நிரூபித்து நட்ட ஈடு பெறுவது கடினம் என்ற போதிலும் அமெரிக்கா இந்த விதி சேர்க்கப்பட்டதை விரும்பவில்லை.

அமெரிக்கா முகஞ்சுளிப்பதை மன்மோகன் சிங்கால் பொறுத்துக் கொள்ள முடியுமா? அதனால் இந்த விதியை நீக்கக் கோரும் அறிக்கையொன்றைத் தயாரித்து, அதனை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைத்தார். உறுப்பினர்கள் இந்த நீக்கத்தை எதிர்த்தது ஒருபுறமிருக்க, மன்மோகன் சிங்கின் அமெரிக்க அடிவருடித்தனமும் அம்பலப்பட்டுப் போனதால், அவரது அரசு, “இது எங்களின் ஆலோசனைதான்” என்று கூறி இந்நீக்கத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

இம்மசோதா மீது நாடாளுமன்ற நிலைக்குழுவில் நடந்த விவாதத்தின் அடிப்படையில் அணு உலை மற்றும் இயந்திர பாகங்களை விற்கும் நிறுவனங்களிடமிருந்து நட்ட ஈடு பெறுவதற்கான விதி 17(ஆ)-வில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன. இதன்படி, தொழில்நுட்ப ரீதியாகக் குறைபாடுடைய சாதனங்களை, பழுதான சாதனங்களை விற்றதால் விபத்து நேர்ந்ததாக நிரூபிக்கப்பட்டாலும், அணு உலையை இயக்கும் நிறுவனம் இயந்திரங்களை விற்ற நிறுவனங்களிடமிருந்து நட்ட ஈட்டுத் தொகையைப் பெற முடியும் என்பது உள்ளட்ட 18 திருத்தங்களை முன்வைத்தது, நாடாளுமன்ற நிலைக்குழு. போலி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் தவிர, பா.ஜ.க. உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் இந்தத் திருத்தங்களோடு, மசோதாவைச் சட்டமாக்க ஒப்புக் கொண்டனர்.

இப்படி நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலைப் பெற்று விட்டு, அவ்வாறு ஒப்புதல் பெறப்பட்ட ஆவணத்தில் அந்தக் குழுவின் உறுப்பினர்களுக்கே தெரியாமல், ஒரு போர்ஜரி வேலை செய்தார் மன்மோகன் சிங். அம்மசோதாவில் தனித்தனியாக இருந்த 17(அ) என்ற விதிக்கும், 17(ஆ) என்ற விதிக்கும் இடையில் “மற்றும்” (and) என்ற விகுதியைச் சேர்த்து இரண்டையும் இணைத்தார். இதன் மூலம், அணு உலை இயந்திர பாகங்களை விற்கும் நிறுவனங்களிடம், அணு உலையை இயக்கும் நிறுவனம் 17(ஆ) பிரிவில் காணப்படும் அம்சங்கள் குறித்துத் தனியாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தால் மட்டுமே, நட்ட ஈடு பெற முடியும் என்ற நிபந்தனை நைச்சியமாக உருவாக்கப்பட்டது. நாடாளுமன்ற நிலைக்குழு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் “மற்றும்” (and) என்ற வார்த்தை மட்டும் அச்சிடப்பட்ட தாளை யாருக்கும் தெரியாமல் செருகியதன் மூலம் இந்த ஃபோர்ஜரி வேலையை நடத்தி முடித்தது, மன்மோகன் சிங் கும்பல்.

இந்த விசயத்தை இந்து நாளிதழ் அம்பலப்படுத்தியதன் விளைவாக மன்மோகன் சிங் அரசின் போர்ஜரி வேலை சந்தி சிரித்தது. இதனையடுத்து மசோதாவிற்கு ஆதரவளிக்கச் சம்மதித்திருந்த பா.ஜ.க. அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என அறிவித்தது. ஃபோர்ஜரி அம்பலமாகி மாட்டிக் கொண்ட மன்மோகன் சிங் கும்பலோ, அதற்காக வெட்கப்படாமல், ஏதோ நாணயஸ்தர்கள் போல,”உறுப்பினர்களுக்கு விருப்பமில்லையென்றால், அந்த வார்த்தையை விலக்கிக் கொள்கிறோம்” எனக் கூறி அந்த வார்த்தையை நீக்கியது.

ஆனாலும் அக்கும்பல் அசராமல் அடுத்த சதியில் இறங்கியது. நாடாளுமன்ற நிலைக்குழு முன்மொழிந்த திருத்தங்களைப் பரிசீலனை செய்வது என்ற பெயரில், “அணு விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அணு உலை உபகரணங்கள் வழங்கும் நிறுவனங்கள் அல்லது அதன் ஊழியர்கள் செயல்பட்டுள்ளனர் என அணு உலையை இயக்கும் நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும்” என்ற விதியை 17(ஆ) பிரிவில் சேர்த்தது மைய அமைச்சரவை. மன்மோகன் சிங் கும்பலால் முன்னர் புகுத்தப்பட்ட இடைச்செருகல்களைவிட அயோக்கியத்தனமானது இது. ஏனென்றால், ‘விபத்து’ நேரிடும் எனத் தெரிந்திருந்தும், தனது இலாபத்திற்காக பாதுகாப்பு விதிகள் அனைத்தையும் யூனியன் கார்பைடு நிறுவனம் திட்டமிட்டே புறக்கணித்தது என்பதை நிரூபிக்க ஏராளமான சாட்சியங்கள் இருந்தபோதும், அதனை வாரன் ஆண்டர்சன் மட்டுமல்ல, இந்திய உச்சநீதி மன்றம்கூட ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டது என்பதுதானே துரோக வரலாறு.

மன்மோகன் சிங் கும்பல் புகுத்திய இந்தப் புதிய விதியையும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்ததால், அந்த விதியையும் கைவிட்டு, பின் பா.ஜ.க.-வின் ஆதரவோடு இச்சட்டத்தை நிறைவேற்றிவிட்டது, காங்கிரசு. இந்தச் சட்டத்தை நிறைவேற்ற அடுத்தடுத்துப் பல மோசடிகளையும், சதிகளையும், பொகளையும் அவிழ்த்துவிட்டு அம்பலமாகி நிற்கும் மன்மோகன் சிங், அதற்காக யாரிடமும் மன்னிப்புக் கோரவில்லை. எதிர்க்கட்சிகளும் அவருடைய நாணயத்தைக் கேள்விக்குள்ளாக்கவில்லை. ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நிலவி வரும் இந்த ஒற்றுமைதான், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கி அமெரிக்காவிற்காக மாமா வேலை செய்யலாம் என்ற துணிவையும், திமிரையும் மன்மோகனுக்கு வழங்கயிருக்கிறது.

சி.பி.எம். கோரியதைப் போல் நட்ட ஈட்டு வரம்பை 10,000 கோடி ரூபாய்க்கு உயர்த்தியும் விபத்துக்கான முழு பொறுப்பை அணு உலைகளை விற்கும் நிறுவனங்கள் மீது சுமத்தியும் திருத்தங்கள் செய்யப்பட்டு இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் கூட, இச்சட்டத்தை நாட்டு நலனை விரும்புவோர் ஆதரித்துவிட முடியாது. ஏனென்றால், அமெரிக்க முதலாளிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவது மட்டுமல்ல இச்சட்டத்தின் நோக்கம். இந்திய அணுசக்தித் துறையின் சுயசார்பான வளர்ச்சியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான் அமெரிக்கா மற்றும் மன்மோகன் சிங் கும்பலின் நோக்கம்.

அணுஉலை விபத்துத் தொடர்பாக அமெரிக்கா உருவாக்கியுள்ள சர்வதேச உடன்படிக்கையொன்றில் கையெத்துப் போட சம்மதம் தெரிவித்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு. இந்த உடன்படிக்கை அணு விபத்திற்கு அணு உலை உபகரணங்களை விற்கும் நிறுவனங்களைப் பொறுப்பாக்குவதைத் தடை செய்கிறது; 2,100 கோடி ரூபாய்க்கு மேல் நட்ட ஈடு கோருவதைத் தடை செய்கிறது. அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டால், இந்தியச் சட்டம் வழங்கியிருக்கும் அற்ப பாதுகாப்புகளும் கொல்லைப்புற வழியில் ஒழித்துக்கட்டப்படும். அமெரிக்கக் கைக்கூலி மன்மோகன் சிங் ஆசையும் பிசகில்லாமல் நிறைவேறிவிடும்.

______________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010

நன்றி : வினவு