கடைக்குட்டி என்பதால், என்னை துணைக்கு அழைத்துக்கொண்டு போய் நிறைய
படங்கள் அம்மா பார்ப்பார்கள். செகண்ட் ரிலீசில் நிறைய பழைய படங்கள் அப்படி
பார்த்ததுண்டு.
நிறைய படங்கள் பார்த்திருந்தாலும், சாவித்திரி
என்றாலே மிஸ்ஸியம்மாவும், எம்ஜிஆருடன் பரிசும், நவராத்திரியும் எனக்கு
சட்டென நினைவுக்கு வரும். பலரும் பாசமலர் என்பார்கள். என்னைப் பொறுத்தவரை
(சின்னவயதில்) பாசமலர் அழுகுணி படம். மிஸ்ஸியம்மாவில் தங்கவேலுக்கு பாடல்
சொல்லித்தரும் இடம் இப்பொழுது பார்த்தாலும் சிரிப்பு வரும்.
படத்தில் 46 வயதிலேயே இறந்துவிட்டார் என்ற செய்தி ஆச்சர்யமாய் இருந்தது. அலாவுதீனும் அற்புதவிளக்கில் கமலுக்கு அம்மாவாக பார்த்த பொழுது சாவித்திரியா இவர் என ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
படம் சாவித்திரி அவர்களின் வாழ்க்கையை உணர்வுபூர்வமான பகுதிகளுடன் சொல்லி செல்கிறது. மூன்று பொண்டாட்டிகாரன் இன்னொரு பெண்ணுடன் இருப்பதைப் பார்த்து, பிரிவது என்பதை விட, அவர்களுக்குள் பல பிரச்சனை. அது ஹைலைட்டாக ஆகிவிட்டது என்பதாக தான் புரிந்துகொள்கிறேன். படத்தின் நீளம் கருதி பல காட்சிகளை வெட்டிவிட்டார்கள் என நினைக்கிறேன்.
அதென்ன ஒரு படம், இருபடம் எடுத்தாலே எவ்வளவு வசதியிருந்தும் நடிகர், நடிகைகள் மொத்த பணத்தையும் தொலைத்துவிடுகிறார்கள் என ஆச்சர்யமாயிருக்கும். சாவித்திரியின் வாழ்வில் வருமான வரி சோதனையும் சேர்ந்து இருக்கிறது.
மிகுந்த நெருக்கடியிலும் ஜெமினியிடம் பேசாத உறுதி ஆச்சரியப்படுத்தியது. கணவன் மனைவி உறவு அப்படித்தான், மிகுந்த அன்பே, மிகுந்த வெறுப்புக்கும் காரணமாகிவிடுகிறது. நல்ல தயாள குணத்துடனும், பிடிவாதகாரராகவும் இருந்திருக்கிறார்.
இப்பொழுதெல்லாம் இருமொழி படமாக கவனம் கொடுத்து நிறைய படங்கள் வருகின்றன. தெலுங்கு தழுவி நிறைய எடுத்ததால், தமிழில் ஓடும் என்ற நம்பிக்கை இல்லாமல் தான் டப் செய்து வெளியிட்டு உள்ளார்கள் என நினைக்கிறேன்.