> குருத்து: பன்றிக் காய்ச்சல் - பன்றிகளை குற்றவாளியாக்காதீர்கள்!

August 11, 2009

பன்றிக் காய்ச்சல் - பன்றிகளை குற்றவாளியாக்காதீர்கள்!


முன்குறிப்பு: சமீப நாட்களில் இதழ்கள், தொலைக்காட்சி என எங்கு பார்த்தாலும், பன்றிக் காய்ச்சல் அடிக்கிறது. இந்தியாவில் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.சில மாநிலங்களில் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுவிட்டன. பன்றிக் காய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்? வந்தால் என்ன செய்ய வேண்டும்? - என விலாவாரியாக பேசப்படுகிறது? ஆனால், பன்றிக் காய்ச்சலுக்கு யார் காரணம் பன்றிகளா? பணத்தாசை பிடித்த முதலாளிகளா? என நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

****
புதிய ஜனநாயகத்தில் ஜூன் 2009ல் வந்து, வினவு-ல் வெளிவந்த கட்டுரை இது. சமகால அவசியம் குறித்து... மீள் பதிவு செய்கிறேன்.

****
கடந்த நூற்றாண்டில், உலகை ஆட்டிப்படைத்த பெரியம்மை, பிளேக், போன்ற கொள்ளை நோய்கள், அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் அவ்வப்போது தோன்றும் புதுப்புது கொள்ளை நோய்கள், உலகையே அச்சுறுத்தி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் பறவைக் காய்ச்சல், சிக்குன் குனியா என வகை வகையான நோய்கள் தோன்றிப் பரவின. இந்நோய்களால் பல்லாயிரக்கணக்காண மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த வரிசையில் வந்திருக்கும் புதுவித நோய்தான் பன்றிக் காய்ச்சல். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற வளர்ந்த நாடுகளை இந்த நோய் ஆட்டிப் படைக்கிறது. இந்நோய்க்குப் பயந்து பல நாடுகள் தங்களது எல்லைகளை மூடி வருகின்றன. பத்திரிக்கைகளும், இதர செய்தி ஊடகங்களும் இந்த நோய் குறித்து மக்களை எவ்வளவு பயமுறுத்த முடியுமோ அந்தளவுக்குப் பயமுறுத்தி வருகின்றன. அமெரிக்கா சென்று திரும்பிய சில இந்தியர்களுக்கு இந்தக் காய்ச்சல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

பன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகள் பரவியதால், மக்களிடையே பெரும்பீதி கிளம்பியுள்ளது. விமான நிலையங்களில் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணிக்கிறார்கள். அவர்களில் உடல் வெப்ப
நிலை அதிகமாக உள்ளவர்களைத் தனியறையில் (குவாரண்டைன்) தடுத்து வைத்து விடுகிறார்கள். சாதாரணமாக ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ, புளூக்காய்ச்சலாக இருக்குமோ எனும் அச்சத்திற்காளாகிறார்கள்.

பொதுவாக, இன்புளுயன்சா என்னும் வைரஸ் தாக்குவதால் மனிதர்களுக்குச் சாதாரணமாக ஏற்படும் நோய்தான் புளூ காய்ச்சல் . இது கடுமையான காய்ச்சலையும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தக் கூடிய தொற்றுநோயாகும். ஆண்டு தோறும் இது பல லட்சம் பேரைத் தாக்குகிறது. அவர்களில் குறிப்பாகக் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் ஆகியோரை இது கடுமையாகப் பாதிக்கிறது. இதனால் சிலர் இறந்தும் போகிறார்கள். ஆனால், பன்றிக் காய்ச்சல் எனப்படும் ‘ஸ்வைன் புளூ’ பன்றிகளிடையே தோன்றி, அவற்றிற்கு அருகில் வேலை செய்து, தொடர்ந்து அங்கேயே வசிக்கும் மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்நோய் மனிதனைத் தாக்கும் போது சுவாசத்தைப் பாதித்து மரணத்தை ஏற்படுத்துகிறது.

மெக்சிகோவின் கிழக்குப் பகுதி நகரான லா கிளோரியாவில்தான் முதன் முதலாக இந்த நோய் தோன்றியது. அந்நகரில் உள்ள பன்றிப் பண்ணை ஒன்றிலிருந்து நகருக்குப் பரவிய வைரஸ் மெக்சிகோ முழுவதும் பரவி, அண்டை நாடுகளான அமெரிக்கா, கனடா ஆகியவற்றுக்கும் பரவி, தற்போது ஐரோப்பாவிற்குள்ளும் ஊடுருவிவிட்டது.

முதலாளித்துவ நாடுகளின் நவீன பண்ணைகளில் பல லட்சம் பன்றிகள் ஒன்றாக அடைத்து வைத்து வளர்க்கப் படுகின்றன. லாப வெறியோடு, சிறிய இடத்தில் நகரக் கூட இடமில்லாமல் இவற்றை ஆண்டுக்கணக்காக வைத்திருக்கின்றனர். பன்றிகளைக் கொழுக்க வைப்பதற்கெனக் கொடுக்கப்படும் இரசாயனம் கலந்த உணவுகளும், அப்புறப்படுத்தப் படாமல் கிடக்கும் டன் கணக்கிலான கழிவுகளும், இத்தகைய பண்ணைகளை கிருமிகளின் உற்பத்திச் சாலைகளாக மாற்றியுள்ளன. மெக்சிகோவில் நோய் தோன்றிய பண்ணை ஸ்மித் பீல்டு நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்தப் பண்ணையிலிருந்து மட்டும் ஆண்டு தோறும் 10 லட்சம் பன்றிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனம் 2006ஆம் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக 2 கோடியே 60 லட்சம் பன்றிகளை ஏற்றுமதி செய்துள்ளது. தங்களது பண்ணையின் சுகாதாரத்தைப் பறைசாற்ற இந்த நிறுவனம் பல்வேறு தரச் சான்றிதழ்களைக் காட்டினாலும், சுகாதாரம் என்னவோ காகிதத்தில் மட்டுமே உள்ளது.

இந்த நிறுவனத்தைப் போல அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் கோடிக்கணக்கான பன்றிகள் இந்த லட்சணத்தில்தான் வளர்க்கப்படுகின்றன. பன்றிக்காய்ச்சலைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதும் பத்திரிக்கைகள் எதுவும் ‘இன்டென்சிவ் பார்மிங்’ எனும் அதிதீவிர உற்பத்திமுறையைப் பற்றியோ, அதனைக் கையாளும் முதலாளிகளின் லாப வெறிதான் இந்த நோய்க்குக் காரணம் என்பதைப் பற்றியோ எழுதுவதே இல்லை.

இந்நோய் தோன்றிய ஒரு சில வாரங்களிலேயே மெக்சிகோ முழுவதும் பரவி அந்நாட்டையே செயலிழக்க வைத்துவிட்டது. நாடு முழுவதும் அறிவிக்கப்படாத ஊரடங்கு நிலவுகிறது, எல்லா நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. மே 1 அன்று நடக்கும் தொழிலாளர் பேரணி கூட அங்கு நடைபெறவில்லை. அதே சமயம் இந்நோயைக் கட்டுப்படுத்த அரசால் முடியவில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கூட நோய்த்தடுப்பூசி போட முடியாத நிலையில்தான் மெக்சிகோ அரசு உள்ளது. மெக்சிகோவின் எல்லையைத் தாண்டி அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ள இந்தக் காய்ச்சலை அமெரிக்காவாலும் தடுக்க இயலவில்லை. அமெரிக்க அரசு ஏற்கெனவே எல்லா சமூக நலத் திட்டங்களையும் ஒழித்துக் கட்டிவிட்டதுடன், சுகாதாரத் துறையை முற்றிலும் தனியார் மயமாக்கிவிட்டது. நோயிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொறுப்பு மக்களிடமே விடப்பட்டுள்ளது. மக்களோ மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் பிடியில் உள்ளனர். ஏற்கெனவே பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க மக்களைத் தற்போது பன்றிக் காய்ச்சல் பாடாய்ப் படுத்துகிறது.

எல்லா அழிவுகளிலும் லாபம் தேடும் முதலாளித்துவம் பன்றிக்காய்ச்சலையும் விட்டு வைக்கவில்லை, புளு வைரஸிற்கு மருந்துகளை தயாரித்து விற்கும் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளுக்கு அடித்தது யோகம். அவை மருந்துகளையும், தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்து குவிக்கின்றன. ஊடகங்களைத் தங்கள் பக்கம் வளைத்துக் கொண்டு உலகம் முழுவதும் இந்நோய் தாக்குவது உறுதி என்று பீதியூட்டி தங்களது சந்தையை விரிவுபடுத்தி வருகின்றன. பன்றிக்காய்ச்சல் பரவத் தொடங்கியதும் இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு மதிப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதே இதற்குச் சாட்சி. கடந்த முறை பறவைக் காய்ச்சல் வந்த போதும் இவற்றின் மதிப்பு இதே போல உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஒருபுறம் மருந்துக் கம்பெனிகள் லாபம் ஈட்டினாலும், மற்றொருபுறம் பன்றி இறைச்சியினால் நோய் பரவும் என்ற பீதியின் காரணமாக, பன்றி இறைச்சி ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் பன்றி இறைச்சி ஏற்றுமதியாளர்களைக் காக்க உலக சுகாதார நிறுவனம் களத்தில் இறங்கியது. பன்றி இறைச்சியின் மூலம் காய்ச்சல் பரவாது என்று பிரச்சாரம் செய்தது. பன்றிக் காய்ச்சல் என்ற பெயரையே ‘மெக்சிகன் காய்ச்சல்’ என்று மாற்றிவிட்டது. இதன் மூலம் காய்ச்சல் பரவுவதற்குக் காரணம் மெக்சிகர்கள்தானே ஒழிய, பன்றிகள் அல்ல என்று மறைமுகமாகக் கூறுகிறது.

கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு பண்ணையில் 220 பன்றிகளுக்கு இந்தக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்தப் பண்ணை நிர்வாகமும், கனடா அரசும் பண்ணையில் வேலை பார்த்த ஒரு மெக்சிகத் தொழிலாளியிடமிருந்துதான் பன்றிகளுக்குக் காய்ச்சல் பரவியதாகக் கூறியது. ‘ஏன் பன்றிகளிடமிருந்து அந்தத் தொழிலாளிக்கு நோய் பரவியிருக்கக்கூடாது’ எனக் கேட்டால் கனடா பன்றிகளுக்குத் தானாக புளூ காய்ச்சல் வராது, அவற்றிற்கு தொழிலாளர்களிடமிருந்துதான் பரவியிருக்கும் எனக் கூறித் தொழிலாளியைப் பன்றியை விடக் கேவலமாகச் சித்தரிக்கின்றனர்.

பன்றிக் காய்ச்சல் பன்றிகளிடமிருந்து தோன்றி மனிதர்களுக்குப் பரவியதாகக் கூறினாலும், இது வல்லரசுகள் நடத்தும் உயிரியல் ஆயுதப் போருக்கானதொரு சோதனை எனவும் கூறுகின்றனர். தற்போது அனைத்து முதலாளித்துவ நாடுகளும் இச்சோதனைகளின் மூலம் பல்வேறு புதிய வைரஸ்களை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றன. அவற்றைச் சோதித்துப் பார்க்க அமெரிக்காவே கூட மக்களிடையே பரவச் செய்திருக்கக்கூடும். ஆனால் இது போன்ற சோதனைகளை தேச நலன் என்ற பெயரில் மூடி மறைத்துவிடுகின்றனர்.

மே 5ஆம் தேதி வரை உலகம் முழுவதும் 1500 பேர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். 30 பேர் இறந்திருந்தனர். அமெரிக்காவில் மட்டும் 109 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர், ஒருவர் உயிரிழந்திருந்தார். இப்போது இந்நோய் கட்டுப்படுத்த முடியாதபடி பரவி வருகிறது.

உலகப் பணக்கார நாடான அமெரிக்காவிற்கே இந்த நிலையென்றால், ஏழை நாடுகளை இந்நோய்த் தாக்கும்போது அம்மக்களின் கதி என்ன ஆவது? ஏற்கெனவே அமெரிக்கா தனது ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அத்துடன் மருத்துவக் கழிவுகளையும், ரசாயனக் கழிவுகளையும் அந்நாடுகளில் கொட்டி, சுற்றுச் சூழலையும் சுகாதாரத்தையும் மாசுபடுத்தி வருகிறது. தூத்துக்குடியிலும், சென்னையிலும் அமெரிக்காவிருந்து கொண்டுவந்து கொட்டப்பட்ட குப்பைகளில் வெடிமருந்துகளும், வெடிக்காத குண்டுகளும் பல ஆண்டுகளாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல, கொச்சி துறைமுகத்திலிருந்து கோவைக்குக் கொண்டுவந்து கொட்டப்பட்ட கழிவுகளில் பயன்படுத்தப் பட்ட ஊசி, குளுகோஸ் பாட்டில் உட்பட மருத்துவக் கழிவுகள் மலை மலையாகக் குவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு தனது கழிவுகளை ஏழை நாடுகளுக்குப் பரிசளித்துப் பழகிய அமெரிக்கா, பன்றிக் காய்ச்சலை மட்டும் அந்த நாடுகளுக்குப் பரவாமல் கட்டுப்படுத்தி விடுமா?

இந்தியாவில் சுகாதாரத்துறையை வேகமாகத் தனியார்மயப்படுத்தி வருகின்றனர். மக்களுக்கு கிடைத்து வந்த கொஞ்ச நஞ்ச மருத்துவ உதவிகளையும் அரசு திட்டமிட்டு நிறுத்திவருகிறது. அரசுதனியார் கூட்டுச் சுகாதாரத் திட்டம் என்ற பெயரில் அரசு மருத்துவமனைகள் கொஞ்சம் கொஞ்சமாக விற்கப்படுகின்றன. இந்நிலையில் இங்கு பன்றிக் காய்ச்சல் பரவினால் அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமானதாக இருக்கும். இந்திய சுகாதார அதிகாரிகள், பன்றிக்காய்ச்சலை இந்தியா எளிதில் எதிர்கொள்ள முடியும் என்றும், அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் பேட்டியளித்துள்ளனர். ஆனால் தமிழக மக்களைத் தாக்கிய சாதாரண சிக்குன் குனியா நோயையே தடுத்து நிறுத்த முடியாத இவர்கள்தான், பன்றிக் காய்ச்சல் போன்ற வெகு வேகமாகப் பரவும் நோய்களிலிருந்து மக்களைக் காக்கப் போகிறார்களாம்.

காற்று, நிலம், நீர் என அனைத்தும் மாசுபட்டு, சுற்றுச் சூழல் நாசமானாலும் பரவாயில்லை, புதிது புதிதாகக் கொடிய நோய்கள் உருவாகி மக்களெல்லாம் செத்து மடிந்தாலும் பரவாயில்லை. தங்களது லாபம் மட்டும் குறையாமல் இருந்தால் போதும் – என லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முதலாளித்துவம் இயங்கி வருகிறது. அரசும், முதலாளிகளின் நலனைக் காப்பதிலேயே குறியாய் உள்ளது, மக்களின் அழிவில் கூட முதலாளிகள் லாபம் சம்பாதிக்க உதவுகிறது.

இந்நிலையில் நாம் என்ன செய்யப் போகிறோம்? இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமான முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டப் போராடப் போகிறோமா? அல்லது இப்போதைக்குப் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொண்டு அடுத்து வரவிருக்கும் புது நோய் ஒன்றிற்காகக் காத்திருக்கப் போகிறோமா?

புதிய ஜனநாயகம், ஜூன்’2009

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test

Periyarmathi said...

Good Article.