> குருத்து: சமூகம்
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

July 15, 2026

"கடந்த கால அனுபவங்கள்…!"

 


மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு இளம் தொழில் முனைவோர் சந்தித்தார். முகத்தில் சிரிப்பு இருந்தது. ஆனால், அவர் சொன்ன அனுபவங்களைக் கேட்டதும், "தொழில் தொடங்குவது எளிது; தவறுகளைச் சரிசெய்வதே பெரிய தொழில்!" என்று தோன்றியது.

 

"ஆர்கானிக் பொருட்களை வாங்கி, இயந்திரத்தில் அரைத்து, அழகாக டப்பாவில் அடைத்து விற்கலாம் என்று நினைத்தோம். அதற்காக முதலில் ஸ்டிக்கர் அச்சிட வேண்டும். ஸ்டிக்கரில் GSTIN இருக்க வேண்டும். அதனால் அவசரமாக GST பதிவு வாங்கிவிட்டோம்.

 

பிறகுதான் கணக்கு போட ஆரம்பித்தோம்.

ஆர்கானிக் பொருட்களின் விலை...

இயந்திரங்கள்...

சோலார் ட்ரையர்...

தொழிலாளர்கள்...

பேக்கிங்...

சந்தைப்படுத்தல்...

எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால், லாபம் மட்டும் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு 'என்னைத் தேடிப் பாருங்கள்!' என்று விளையாடிக் கொண்டிருந்தது.

'இந்த தொழில் வேண்டாம்!' என்று முடிவு செய்து விட்டோம்.

 

அதுவரை நான்கு, ஐந்து மாதங்கள் Nil Return மட்டும் தாக்கல் செய்து வந்தோம். 'சரி... GST-யை சரண்டர் செய்து விடலாம்' என்று விண்ணப்பித்தோம்.

 

அங்குதான் கதை இரண்டாம் பாகம் ஆரம்பித்தது.

 

'ஆறு மாதமாக என்ன செய்தீர்கள்? வங்கி கணக்கு கொண்டு வாருங்கள்... ஆவணங்கள் கொண்டு வாருங்கள்...' என்றார்கள். இரண்டு முறை அலுவலகத்திற்குப் போனேன்.  இரண்டு முறையும் Assistant Commissioner மட்டும் இல்லை!

 

நான் போகும் நேரத்தைப் பார்த்து அவருக்கே வேறு வேலை வந்ததோ என்னவோ!" அதற்குள் வாழ்க்கை இன்னொரு திருப்பம் கொடுத்தது.

 

"₹35 லட்சம் கடன் வாங்கலாம் என்று வங்கி மேலாளரைச் சந்தித்தேன். அங்கிருந்தே ஒரு வரி ஆலோசகரை தொலைபேசியில் பேச வைத்தேன். அவர் சொன்னது ஒன்று.. ஆலோசகர் புரிந்துகொண்டது ஒன்று...

 

இறுதியில், வருட வருமானம் ₹4,90,000 என்று Income Tax Return தாக்கல் செய்து விட்டார்கள். அந்த ரிட்டனை எடுத்துக்கொண்டு வங்கிக்குப் போனால்...

'இந்த வருமானத்தை வைத்து இந்தக் கடன் தர முடியாது!' என்று ஒரே வரியில் தீர்ப்பு."

 

இதற்குப் பிறகாவது அமைதி வந்ததா?

எங்கே...

"எனக்குத் தெரிந்த வேலை Civil Contract தான். எங்கு டெண்டர் கேட்டாலும், 'GST இருக்கிறதா?' என்பதே முதல் கேள்வி.

 

சரி... மீண்டும் புதிய GST பதிவு வாங்கலாம் என்று நினைத்தோம்.

வாடகை ஒப்பந்தம் வீட்டு உரிமையாளர் பெயரில். மின்சார ரசீது அவருடைய துணைவியார் பெயரில். இரண்டையும் ஆலோசகரிடம் கொடுத்தேன்.

 

அவரும் அப்படியே பதிவேற்றிவிட்டார். இப்போது Portal-க்கு சந்தேகம். 'இரண்டு பெயரும் ஏன் வேறு?' என்று விளக்கம் கேட்டிருக்கிறார்கள்."

 

அதுமட்டுமல்ல...

"ஏற்கனவே ஒரு GST பதிவு சரண்டர் ஆகாமல் நிலுவையில் இருக்கிறது. முதலில் அதை முறையாக முடித்து, இறுதி ரிட்டன் எல்லாம் தாக்கல் செய்து வாருங்கள். அதற்குப் பிறகுதான் இதைப் பார்க்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள்."

 

அவர் பேசிப் முடித்ததும் நான் சிரித்தேன். அவரும் சிரித்தார்.

 

ஏனென்றால், தொழிலில் ஏற்பட்ட இழப்பை விட, தவறான ஆலோசனைகளால் ஏற்பட்ட சுற்றுலாப் பயணங்கள்தான் அவரை அதிகம் சோர்வடையச் செய்திருந்தன.

 

இறுதியில், அவர் எங்களிடம் வந்தார். ஒவ்வொரு முடிச்சாக இருந்த பிரச்சினையையும் அவிழ்த்தோம். எந்த விண்ணப்பம் எப்படி முடிக்க வேண்டும்... எந்த ஆவணம் திருத்தப்பட வேண்டும்... எந்த பதிவு முதலில் நிறைவு பெற வேண்டும்... எல்லாவற்றையும் வரிசைப்படுத்தி சரி செய்து கொடுத்தோம்.

அவர் கிளம்பும்போது சொன்ன ஒரு வரி மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது.

 

"சார்... தொழில் தொடங்குவது கஷ்டமில்லை. சரியான ஆலோசகரை முதல் நாளிலேயே தேர்ந்தெடுப்பதுதான் பெரிய முதலீடு போலிருக்கிறது!"

 

-          இரா. முனியசாமி

July 9, 2026

ஒரு ஜன்னல் இருக்கை... ஒரு வாழ்நாள் பாடம்...

 


கடந்த வாரம் டெல்லியிலிருந்து புனே செல்லும் விமானத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தேன். அந்தப் பயணத்தில் நடந்த ஒரு சிறிய சம்பவம், வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும் நினைவாக மாறிவிட்டது.

 

ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது ஏழு வயதுக்கு மேல் இருக்காத ஒரு சிறுவன், தன் தந்தையின் கையைப் பிடித்தபடி என்னருகில் நின்றான்.

 

"மாமா... உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால்... நான் ஜன்னலோர இருக்கையில் அமரலாமா?"

 

நான் பதில் சொல்லும் முன்பே அவன் தந்தை அவசரமாகப் பேசினார்.

 

"மிகவும் மன்னிக்க வேண்டும், ஐயா. அவனைத் தவறாக நினைக்க வேண்டாம். விமான நிலையத்துக்குள் வந்ததிலிருந்தே ஜன்னல் இருக்கை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறான். உங்களுக்கு விருப்பமில்லை என்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை."

 

நான் சிரித்தபடி, "இந்த இருக்கை இனி உன்னுடையது, தம்பி," என்றேன்.

 

அந்தச் சிறுவனின் முகம் உடனே மலர்ந்தது. அவன் உற்சாகமாக ஜன்னலருகே சென்று, கண்ணாடியில் கைகளை வைத்து வெளியே பார்த்தான். சில நிமிடங்கள் அந்தக் காட்சியில் மூழ்கியிருந்தான். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தந்தையின் தோளில் தலை சாய்த்து அமைதியாக உறங்கிவிட்டான். முழுப் பயணத்தையும் அவன் பெரும்பாலும் தூக்கத்திலேயே கழித்தான். தரையிறங்க இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கும்போது, அவன் தந்தை என்னைப் பார்த்து புன்னகைத்தார்.

 

"நீங்கள் கொடுத்த ஜன்னல் இருக்கையை அவன் பெரிதாகப் பயன்படுத்தவே இல்லையே."

 

"பரவாயில்லை. மிகவும் களைப்பாக இருந்திருப்பான்," என்றேன்.

 

சில நொடிகள் அமைதியாக இருந்தார். பிறகு மெதுவாகச் சொன்னார். "ஆமாம்... மிகவும் களைத்திருக்கிறான்."

 

"கடந்த எட்டு மாதங்களாக நாங்கள் டெல்லியில்தான் இருந்தோம். அவனுக்கு Severe Aplastic Anemia நோய்க்காக Rajiv Gandhi Cancer Institute and Research Centre மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பல நாட்களில் இப்படி வீட்டிற்குத் திரும்பும் நாள் வரும் என்பதே எங்களுக்குச் சந்தேகமாக இருந்தது. இன்று தான் மருத்துவர்கள் பயணம் செய்யலாம் என்று அனுமதி அளித்தார்கள்."

 

நான் மீண்டும் அந்தச் சிறுவனைப் பார்த்தேன். சில நிமிடங்களுக்கு முன்பு வரை, ஜன்னலோர இருக்கை கேட்ட ஒரு குழந்தையை மட்டுமே பார்த்திருந்தேன். இப்போது என் கண்முன் இருந்தது... பல மாதங்களாக உயிரோடு போராடி வெற்றி பெற்ற ஒரு சிறிய வீரன்.

 

அப்போது அவன் தந்தை என்னைக் கேட்டார். "அவனுக்கு ஏன் அந்த ஜன்னல் இருக்கை அவ்வளவு வேண்டும் தெரியுமா?" நான் தலையசைத்தேன். அவர் மெதுவாகச் சொன்னார். "அவன் என்னிடம் சொன்னான்...

 

'அப்பா... மேகங்களுக்கு மேலே போனால், நான் கடவுளுக்கு இன்னும் கொஞ்சம் அருகில் இருப்பேன். என்னை குணமாக்கியதற்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.'"

 

அந்த வார்த்தைகளுக்குப் பிறகு என்னால் எதுவும் பேச முடியவில்லை. என் முகத்தைத் திருப்பிக் கொண்டு, கண்களில் வழிந்த கண்ணீரை அமைதியாகத் துடைத்துக் கொண்டேன்.

 

விமான நிலையத்திலிருந்து வெளியே நடந்து செல்லும்போது, அந்தத் தந்தை திரும்பிப் பார்த்து சிரித்தபடி சொன்னார். "நன்றி, ஐயா. இன்று என் மகனின் நாளை நீங்கள் அழகாக்கிவிட்டீர்கள்."

 

ஆனால் உண்மை என்னவென்றால்... அன்று என் நாளை அழகாக்கியது அந்தச் சிறுவன்தான். அந்தப் பயணம் எனக்கு ஒரு பெரிய உண்மையை உணர்த்தியது.

 

நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் சில நிமிடங்களே அறிந்திருக்கலாம். ஆனால் அவர்கள் பல மாதங்களாகவோ, பல ஆண்டுகளாகவோ யாருக்கும் தெரியாத போராட்டங்களைச் சுமந்துகொண்டு இருக்கலாம்.

 

அவசரமாகப் பேசும் வாடிக்கையாளர்... கவனம் சிதறிய அலுவலகத் தோழர்... சோர்வுடன் இருக்கும் பெற்றோர்... ஜன்னலோர இருக்கை கேட்கும் அமைதியான ஒரு குழந்தை... நாம் பார்ப்பது அவர்களின் நடத்தையை மட்டுமே. அதன் பின்னால் இருக்கும் வாழ்க்கைப் போராட்டத்தை அல்ல.

 

பிறரைப் புரிந்துகொள்வது பெரிய உதவிகளால் மட்டுமே தொடங்குவதில்லை. தீர்ப்பளிப்பதற்கு முன் கருணையுடன் அணுகும் ஒரு மனநிலையில்தான் அது தொடங்குகிறது.

ஒவ்வொருவரும் நமக்குத் தெரியாத ஒரு கதையைச் சுமந்துகொண்டே வாழ்கிறார்கள். நாம் செய்யும் ஒரு சிறிய அன்புச் செயல், ஒருவரின் வாழ்நாள் நினைவாக மாறக்கூடும்.

 

சில நேரங்களில் அழகான காட்சி ஜன்னலோர இருக்கையில் கிடைப்பதில்லை. மனதை மாற்றும் ஒரு புதிய பார்வையில்தான் கிடைக்கிறது. அன்று நான் விட்டுக்கொடுத்தது ஒரு ஜன்னல் இருக்கை மட்டுமே.

 

ஆனால் நான் பெற்றது... வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு வாழ்க்கைப் பாடம்.

 

-        -   Anup Kumar Bedi 

-           

(இவர் வங்கி மற்றும் நிதித்துறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்டவர். தற்போது FIS நிறுவனத்தில் மூத்த பொறுப்பில் பணியாற்றுகிறார்.)

 

தமிழில் : இரா. முனியசாமி


June 30, 2026

மொபைல் அடிமைத்தனம் — உலக சுகாதார நிறுவனம் (WHO) என்ன சொல்கிறது?



இப்போது பலர் ஒரு கேள்வி கேட்கிறார்கள்: "மொபைல் அடிமைத்தனம் ஒரு நோயா?" சுருக்கமாகச் சொன்னால்... இன்னும் இல்லை.

 

உலக சுகாதார நிறுவனம் (WHO), "மொபைல் அடிமைத்தனம்" என்பதை தனி நோயாக இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. நோய்களின் சர்வதேச வகைப்பாட்டு பட்டியல் (ICD-11) யில் அதற்கென்று தனி இடம் இல்லை.

 

ஆனால் ஒரு சுவாரசியமான விஷயம் இருக்கிறது. 2018-ஆம் ஆண்டு WHO, Gaming Disorder என்ற கோளாறை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அதாவது ஒருவர் வீடியோ விளையாட்டுகளில் கட்டுப்பாட்டை இழந்து, வாழ்க்கையின் மற்ற பகுதிகளை புறக்கணிக்கும் நிலைக்கு சென்றால், அது ஒரு மருத்துவக் கவலைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது.

 

ஆனால்... காலை எழுந்ததும் WhatsApp பார்ப்பது, மதியம் Instagram ஸ்க்ரோல் செய்வது, இரவு YouTube பார்த்துக்கொண்டே தூங்குவதுஇவை அனைத்தையும் WHO இன்னும் தனி நோயாக அறிவிக்கவில்லை.

 

அதனால், "நோய் இல்லை என்றால் பிரச்சினையும் இல்லை" என்று அர்த்தமல்ல.

 

ஏன் பல நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள்?

 

ஒரு காலத்தில் புகையிலை பற்றியும் மக்கள் இதேபோலத்தான் நினைத்தார்கள். பின்னர் அதன் விளைவுகள் மெதுவாக வெளிப்பட்டன.

 

மொபைல் பயன்பாட்டிலும் அதே மாதிரியான சில அறிகுறிகளை ஆய்வாளர்கள் கவனிக்கிறார்கள். கையில் இல்லாவிட்டால் பதற்றம், ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை திரையைப் பார்க்கும் பழக்கம், நேரம் போவதே தெரியாமல் ஸ்க்ரோல் செய்துகொண்டிருப்பது

 

குடும்பத்தினருடன் பேசுவதைக் காட்டிலும் திரையுடன் அதிக நேரம் செலவிடுவது. "இன்னும் இரண்டு நிமிடம்" என்று சொல்லி ஒரு மணி நேரம் கழித்துவிடுவது இவை அனைத்தும் ஒரு நடத்தை சார்ந்த அடிமைத்தனத்தின் அம்சங்களாக சில மனநல வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

 

குழந்தைகள் விஷயத்தில் WHO மிகவும் தெளிவாக இருக்கிறது

 

பெரியவர்களுக்கு WHO குறிப்பிட்ட "தினசரி ஸ்க்ரீன் நேர வரம்பு" எதையும் நிர்ணயிக்கவில்லை. ஆனால் குழந்தைகள் விஷயத்தில் எச்சரிக்கை தெளிவாக உள்ளது.

 

  • 1 வயதுக்குக் கீழ்திரை பயன்பாடு வேண்டாம்
  • 2 முதல் 4 வயது வரைஒரு மணி நேரத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்

 

ஏன் தெரியுமா? அந்த வயதில் குழந்தைகளுக்கு உலகத்தை அறிமுகப்படுத்த வேண்டியது திரை அல்ல. மண், மரம், ஓட்டம், விளையாட்டு, உரையாடல், முகபாவனை, மனிதர்கள்.  நிச்சயம் திரை அல்ல; வாழ்க்கை.

 

"அடிமைத்தனம்" என்று எப்போது சந்தேகிக்கலாம்?

 

ஒரு எளிய சோதனை. இன்று மாலை 6 மணிக்கு மொபைலை அணைத்துவிட்டு இரவு 9 மணி வரை வைக்க முடிகிறதா? முடிந்தால் பிரச்சினை இருக்க வாய்ப்பு குறைவு.

 

முடியாமல், மனம் அமைதியிழந்து, அடிக்கடி மொபைலைத் தேடினால்... குறைந்தபட்சம் அந்தப் பழக்கத்தை கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பொருள்.

 

என்ன செய்யலாம்?

 

பெரிய மருத்துவ ரகசியம் எதுவும் இல்லை. சில எளிய பழக்க மாற்றங்களே போதும்.


இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு மொபைல் பயன்படுத்தாதிருத்தல்

பயன்பாட்டு நேரத்தை கண்காணித்தல்

தேவையற்ற அறிவிப்புகளை நிறுத்துதல்

சாப்பாட்டு மேசை, படுக்கையறை போன்ற இடங்களை "மொபைல் இல்லா பகுதிகள்" ஆக்குதல்

நடைபயிற்சி, வாசிப்பு, நேரடி சந்திப்பு போன்ற செயல்களில் ஈடுபடுதல்

கட்டுப்படுத்த முடியாத நிலை என்றால் மனநல ஆலோசகரின் உதவியை நாடுதல்

 

இறுதியாக...

 

WHO இன்னும் "மொபைல் அடிமைத்தனம்" என்பதை தனி நோயாக அறிவிக்கவில்லை. ஆனால் அதனால் ஆபத்து இல்லை என்று அர்த்தமில்லை.

 

நாம் மொபைலைப் பயன்படுத்துகிறோமா? அல்லது... மொபைல் நம்மைப் பயன்படுத்துகிறதா? என்ற கேள்வியை ஒவ்வொருவரும் தங்களிடம் கேட்டுப் பார்க்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.

 

-     இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721

 

#Mobile_Addiction_Article_Series_Part9