சின்ன வயதில் நாய் வளர்க்க ஆசைப்பட்டு அம்மாவிடம் சொல்கிற பொழுது, “உங்களை வளர்க்கிறதே பெரும்பாடாக இருக்கிறது! இதுல இன்னொரு ஜீவன் வேறயா!” என்பார். அது என்னவோ உண்மை தான். நானெல்லாம் தமிழ்நாடு முழுவதும் கடுமையான பஞ்ச காலத்தில் பிறந்தவன்.
மதுரையில் புற நகர் பகுதியில் அக்கா குடும்பம் வாழ துவங்கும் பொழுது, குடும்ப உறுப்பினர்கள் வேலைக்கு சென்ற பிறகு, பாதுகாப்புக்காக ஒரு நாய் அல்ல இரண்டு நாட்டு நாய்களை வளர்க்க துவங்கினார்கள். ஒன்று பைரவா. இரண்டாவது நரசிம்மா.
காட்டு விலங்குகளை வீட்டு விலங்குகளாக மாற்றியதில் பெண்களுக்கு பெரிய பங்குண்டு. மனிதனுக்கும் நாய்களுக்குமான உறவு நீண்ட நெடுங்காலமானது. விவசாயத்திற்கு முன்பிருந்தே, வேட்டை காலத்திலேயே மனிதனுக்கு உதவியாக இருந்துள்ளது. கால்நடை வளர்ப்பில் உதவி என துவங்கி, பிறகு நவீன காலங்களில் கூட மனிதனுக்கு தனிமையை போக்க, போரில் உதவி, போலீசுக்கு துப்பறிந்து சொல்ல என பல அம்சங்களில் நாய்களின் உறவு மிக அதிகம்.
அக்கா தன் பிள்ளைகளோடு பிள்ளைகளாக தான் அவைகளையும் அன்போடு வளர்த்தார். ஊருக்கு செல்லும் பொழுது, என்னை அறிமுகப்படுத்தும் பொழுது கூட, “மாமாடா!” என்பார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு பைரவா இறந்தது. வீட்டின் புகைப்படங்களில் இப்பொழுது பைரவாவும் இடம் பெற்றிருக்கிறது.
15 ஆண்டுகளாக குடும்பத்தில் ஒருவராக இருந்த நரசிம்மா இன்று காலையில் நரசிம்மாவும் உடல்நலமின்றி இறந்ததாக அக்கா அழுதுகொண்டே தெரிவித்தார். அக்கா சொல்லும் பொழுது, குடும்பத்தில் ஒருவர் இறந்ததாக தான் நானும் உணர்கிறேன்.

0 பின்னூட்டங்கள்:
Post a Comment