> குருத்து: 🦁 பன்னேருகட்டா தேசிய பூங்கா – ஒரு அருமையான அனுபவம்

May 8, 2026

🦁 பன்னேருகட்டா தேசிய பூங்கா – ஒரு அருமையான அனுபவம்

 


📅 பயணத் திட்டம்அவசரம் இல்லாமல் ஒரு நாள்


பெங்களூர் மூன்று நாட்களில் ஒரு நாள் இதற்காக ஒதுக்கினோம். ஏனெனில் இதுவரை விலங்குகளை வண்டலூரில் பார்த்திருக்கிறோம். கூண்டுக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் விலங்குகளை பார்த்திருக்கிறோம். காட்டுப் பின்னணியில் ஒரு வரம்புக்குட்பட்ட பரப்பளவில் சுதந்திரமாக சுற்றித்திரியும் விலங்குகளை பார்த்ததில்லை. ஆகையால் இது சிறப்பானது என தோன்றியது.

 

📌 சரியான நாள் தேர்வு


வாரவிடுமுறை எப்பொழுது என இணையத்தில் தேடிய பொழுது, செவ்வாய் என இருந்தது. ஆகையால் திங்களன்று முதல் வேலையாக போய்விட்டோம்.

 

🎟️ நுழைவு & கட்டணம்என்னென்ன அடங்கும்?


உள்ளே விலங்குகளைப் பார்க்க குளிர்சாதன வண்டி (சபாரி) மூலம் அழைத்து செல்ல, பட்டாம்பூச்சிக்கென ஒரு பூங்காவைப் பார்க்க, பெரிய கம்பி வலைக்குள் இருக்கும் விலங்குகளைப் பார்க்க எல்லாவற்றிற்கும் ஒரு தலைக்கு ரூ. 690 வசூல் செய்தார்கள். வெயில் என்பதால் சோர்வடைய செய்யும் என்பதால், ஏசி வண்டியை தேர்வு செய்தோம்.

 

🚐 சபாரி அனுபவம்அருகில் விலங்குகள்

முதல் சுற்றிலேயே போய்விட்டதால், கொஞ்ச நேரம் காத்திருந்தோம். உடனே சபாரி மூலம் அழைத்து செல்லப்பட்டோம்.

 

🐘🦁🐅 விலங்குகளின் உலகம்

யானைகள், சிங்கம், புலி, கரடி, மான்கள், குரங்கு, குதிரை என பல விலங்குகளைப் பார்த்தோம். ஏப்ரல் பாதியில் சென்றாலும், காலை என்பதால், எந்த விலங்கும் சோர்வாக எங்கும் படுத்து கிடக்காமல், சுற்றிக் கொண்டிருந்தன. உலாத்திக்கொண்டிருந்தன. வண்டியில் வந்த குழந்தைகள் உற்சாகமாய் குரல் கொடுத்து கொண்டிருந்தார்கள்.  ஊரில் விட்டு வந்த குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் லைவ்வாக மொபைலில் காண்பித்துக்கொண்டிருந்தார்.

 

🛑 பாதுகாப்பு ஏற்பாடுகள்

சிங்கம், புலி என விலங்குகளுக்கு மட்டும் கொஞ்சம் பாதுகாப்பு பலமாய் இருந்தன. அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும் சுற்றிவரலாம். மற்றபடி எல்லைத் தாண்டி வேறு எங்கும் போய்விடக்கூடாது என்பதில் கவனமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

 

😄 புலி புல்லை திங்குமா?

ஒரு புலி எல்லாம் வேட்டை வேலை இல்லாமல், நேரத்திற்கு சாப்பாடு தருகிறார்களே என அலுத்துக்கொண்டு, அசுவாரசியமாய் ஒரு புல்லை கடித்துக்கொண்டிருந்தது. பசித்தாலும் புலி புல்லைத் தின்னாது என சொல்லி ஏமாற்றியிருக்கிறார்கள் என நண்பர் கலாய்த்தார்.

 

🔄 சுற்றுப்பயணம் நிறைவு

பிறகு சுற்றி வந்து துவங்கிய இடத்திலேயே இறக்கிவிட்டுவிட்டார்கள். நல்ல அனுபவம்.

 

🦋 பட்டாம்பூச்சி பூங்காஅமைதியான பகுதி

பிறகு பட்டாம்பூச்சிகளுக்கென ஒரு இடத்தை உருவாக்கி, சில ஆய்வு வேலைகளை செய்துக்கொண்டிருக்கிறார்கள். இது சீசன் இல்லை என்பதாலோ, சில வகைப் பட்டாம்பூச்சிகள் எல்லாம் சுதந்திரமாய் மனிதர்களைப் பற்றிய கவலை இல்லாமல் சுற்றிவந்தன.


 

🔋 மின்சார வண்டி வசதி

விலங்குகள் கண்காட்சிக்கு, பேட்டரியில் இயங்கும் வண்டிகள் மூலம் அழைத்து செல்கிறார்கள். ஒரு ஆளுக்கு பெரியவர்களுக்கு ரூ. 100 வசூலிக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் சில விநாடிகள் நிறுத்தி, துவங்கிய இடத்தில் கொண்டு வந்து விட்டுவிடுகிறார்கள்.

 

📏 பரப்பளவுஆச்சர்யமான அளவு

இந்த பூங்காவின் மொத்த பரப்பு 104 ச.கிலோ மீட்டர் என்கிறார்கள். மிருக காட்சி சாலைக்கு 100 ஏக்கர். பட்டாம்பூச்சிக்கு 7.5 ஏக்கர். பெங்களூர் போன்ற பெருநகரத்திலிருந்து 25 கி.மீக்குள் இத்தனை பெரிய பூங்கா. ஆச்சர்யம்.

 

📆 கூட்டத்தை தவிர்க்க வேண்டுமா?

சனி, ஞாயிறுகளில் எப்பொழுதும் பெங்களூரில் கூட்டம் இருக்கிறது. ஆகையால் வார நாட்களில் திட்டமிடுங்கள். பெரியவர்கள், சிறியவர்கள், மாணவர்கள் என வகை வகையாய் டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறார்கள்.

 


🚫 பிளாஸ்டிக் தடைகவனம்

உள்ளே நுழையும் பொழுது, பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை தவிருங்கள். உள்ளே அனுமதிப்பதில்லை. அதற்கு பதிலாக கண்ணாடி பாட்டல்களை அங்கேயே 60க்கு விற்பனை செய்கிறார்கள். நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டியிருக்கும்.

 

🦓 விலங்குகள் வந்த வழி


இங்குள்ள விலங்குகள் எப்படி வந்தன? ஊருக்குள் சிக்கியவை, இந்தியாவின் வேறு பூங்காவில் இருந்து கைமாற்றாய் மாற்றிக்கொண்டவை, இனப்பெருக்கத்தின் மூலம் பெருகியவை, வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்தவை என இருக்கின்றன.

 

🚌 போக்குவரத்து வசதி

நேரடியாக பூங்காவிற்கு வர, திரும்ப என அரசு பேருந்துகள் இருக்கின்றன. தாமதமாக சென்றால், எல்லாவற்றிற்கும் வரிசையில் நிற்கவேண்டியிருக்கும்.

 

🍽️ பயணம் முடிந்து

எல்லாவற்றையும் சுற்றி வந்து நிற்கும் பொழுது, மதியமாகிவிட்டது. பசி வயிறை கிள்ளியது. அடுத்து ஒரு நல்ல சாப்பாட்டை தேடி நகர்ந்தோம்.

 

இறுதியாக...

சாதாரண மிருகக் காட்சி சாலை அனுபவத்தை விட, இயற்கை சூழலில் விலங்குகளை அருகில் காணும் அனுபவம் மிக வேறுபட்டதும் நினைவில் நிற்கக்கூடியதுமாக இருந்தது. வாரநாட்களில் திட்டமிட்டு சென்றால், மேலும் அமைதியான அனுபவத்தை பெற முடியும்




என்னுடைய  மொபைலில் (படங்கள் இணையத்தில் ஒரு தனிநபர் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. பெயரை குறித்து கொள்ள மறந்துவிட்டேன். அவருக்கு நன்றி.)

0 பின்னூட்டங்கள்: