> குருத்து

August 4, 2021

The Perfection (2018) அமெரிக்க உளவியல் திகில் படம்


 "Perfection is not attainable, but if we chase perfection we can catch excellence"

- Vince Lombardi, Foot Ball Coach

வயலின் குடும்பத்தைச் சேர்ந்த Cello என்ற கருவியை வாசிப்பவர்களை Cellist என அழைக்கிறார்கள். இந்த கருவியை உட்கார்ந்து தான் வாசிக்கமுடியும். அதில் திறமை வாய்ந்த இருவரைப் பற்றிய கதை தான் இது!

செல்லோ கருவியை திறன்பட வாசிக்கும் பெண் பிள்ளைகளை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பான பயிற்சியும், உதவித்தொகையையும் கொடுத்து, தன் செல்வாக்கால் பெரும்புகழ் அடைய செய்கிறது ஒரு பாரம்பரிய பள்ளி.

நாயகி அந்த பள்ளியில் படிக்கும் பொழுது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போக பாதியில் வெளியேறுகிறாள். இவளுக்கு பிறகு பள்ளியில் சேர்ந்த கருப்பின பெண் ஒருத்தி பெரும்புகழடைகிறாள்.

அந்த பள்ளி புதியவர்களை தேர்ந்தெடுக்க ஒரு நிகழ்ச்சி நடத்துகிறது. இருவரும் நடுவராக சந்திக்கிறார்கள். இருவரும் பேசி, பழகி நெருக்கமாகிறார்கள்.

தனக்கு இருக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு நாயகியை அழைக்கிறாள். இருவரும் கிளம்புகிறார்கள். அந்த மோசமான பேருந்தில் பயணம் செய்யும் பொழுது கருப்பின பெண்ணுக்கு உடல்நலம் முடியாமல் போகிறது. அதற்காக சாப்பிடும் மருந்தோ அவளை அநேகமாக பைத்தியமாக்கிவிடுகிறது. எழும் விபரீத கற்பனைகளால், அதிகபட்சமாக போய் தன் கையை வெட்டிக்கொள்கிறாள்.

ஏன் இப்படி நடந்துகொண்டாள்? நாயகி ஏன் அப்படிப்பட்ட மருந்துகளை இவளுக்கு கொடுத்தாள்? என்பதின் பின்னணியை மீதி முக்கால்வாசி கதையில் சொல்லிமுடிக்கிறார்கள்.
****

ஒன்றரை மணி நேர கதை தான். தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது போல எனக்கு தோன்றியது. இந்தப் படத்தின் கதையைப் பற்றி, அது பேசிய விசயம் குறித்து இன்னும் பேசினால் ஸ்பாயிலராகிவிடும் என்பதால் சுருக்கமாய் முடித்துக்கொள்கிறேன்.

முக்கிய கதாப்பாத்திரங்களான இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் இரண்டு திருப்பங்கள் முக்கியமானவை. ஒன்று அதிர்ச்சியானது. இன்னொன்று தண்டனைக்கானது.

படம் நெட்பிளிக்சில் இருப்பதாக இணையம் சொல்கிறது. பாருங்கள்.

Payback (1999)


மெல்கிப்சனை "Brave Heart" படத்தில் சிறந்த நடிகராகவும், "Apocalypto" படத்தில் ஒரு இயக்குநராகவும் தெரியும். வேறு படங்கள் பார்த்ததில்லை. அதனாலேயே இந்தப் படம் பார்த்தேன்.

***

நாயகனும் இன்னொருவனும் கூட்டுச் சேர்ந்து கொண்டு கொள்ளையடிக்கிறார்கள். அதில் பங்கு பிரிக்கும் பொழுது, பார்ட்டனர் நாயகனின் காதலியை கைக்குள் போட்டுக்கொண்டு நாயகனைச் சுட்டுவிடுகிறார். செத்துப்போய்விட்டான் என நம்பி நகர்ந்துவிடுகிறான்.

நாயகனோ ஒரு மருத்துவரைப் பார்த்து, உயிர்பிழைத்துவிடுகிறான். தன் பங்குப் பணத்தை வாங்க துரோகம் செய்த பார்ட்டனரை தேடிப்போகிறான். அவனோ அந்தப் பணத்தை நகரத்தை ஆளும் ஒரு மாபியா கும்பலிடம் வைப்புத்தொகையாக கொடுத்துவிட்டு அவர்களிடம் வேலை செய்துகொண்டிருக்கிறான்.

அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு புதிய வாழ்க்கையை துவங்கலாம் என்பது நாயகனின் திட்டம். அந்த மாபியா கும்பலிடம் பணத்தை கேட்டால், "ஓடிப்போயிரு! கொன்றுவிடுவோம்" என மிரட்டுகிறார்கள். பணத்தை வாங்கியே தீருவது என முடிவெடுக்கிறான். பிறகு என்ன ஆனது என்பது பர பர மிச்சக்கதை!
****

"The Hunter" என்ற நாவலை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். எளிய கதை. பெரிய ட்விஸ்ட் எல்லாம் இல்லை. எடுத்தவிதத்தில் கொஞ்சம் கவனம் ஈர்க்கிறார்கள். படம் நன்றாகவும் ஓடியிருக்கிறது. மெல்கிப்சனுக்காக தான் பார்த்தேன். கொஞ்சமாய் பிடித்தது. நீங்களும் வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

Under the Dome (2013 -2015)




3 சீசன்ஸ் ஒவ்வொரு சீசனும் 13 அத்தியாயங்கள்

ஒவ்வொரு அத்தியாயமும் 35 நிமிடங்கள்.

அமெரிக்காவில் ஒரு சிறு நகரத்தின் பெரும்பகுதியை உயரமான ஒரு அடர்த்தியான பொருளால் ஆன ஒரு டூம் திடீரென மூடிவிடுகிறது. அந்த டூம் கண்ணாடி போல இருப்பதால், உள்ளிருப்பவர்களை வெளியே இருப்பவர்களாலும், வெளியே இருப்பவர்களை உள்ளே இருப்பவர்களாலும் பார்க்க முடிகிறது. ஆனால், உள்ளிருப்பவர்கள் வெளியேவோ, வெளியே இருப்பவர்கள் உள்ளேயோ நுழைய முடியாது. அந்த ஊர்க்காரர்கள், வெளிமாகாணங்களிலிருந்து வந்தவர்கள் என 2000 பேருக்கு மேலாக மாட்டிக்கொள்கிறார்கள்.

உள்ளே உள்ள மக்கள் செத்துப்போனால் கூட பரவாயில்லை என அந்த டூமை அழிக்க அரசு அணுகுண்டை வீசிப்பார்க்கிறது. எதுவுமே ஆகாமல் அது உறுதியாக நிற்கிறது. அரசு குழம்பிபோகிறது. மூடப்பட்டதால் மக்கள் குழம்பி போகிறார்கள். பதட்டமாகிறார்கள். வெளி உலக தொடர்பு இல்லாததால், தண்ணீர், உணவு, காலநிலை மாற்றம் என ஒவ்வொன்றாக பிரச்சனையாக எழுகிறது. எல்லோரும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்வோம் என எதிர்கொள்கிறார்கள். அதில் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

காட்டில் ஒரு இடத்தில் ஒரு முட்டை கிடைக்கிறது. அந்த முட்டை தான் அந்த டூமின் இதயம் போன்றது என புரிந்துகொள்கிறார்கள். அந்த முட்டையை ஆய்வு செய்கிறார்கள். அந்த சூழலை தமக்கு சாதகமாக சிலர் மாற்றிக்கொள்ளப் பார்க்கிறார்கள். அந்த டூமில் நிறைய சோதனைகள் வருகின்றன. அந்த டூம் உடைந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறினார்களா? அல்லது உள்ளேயே செத்துப் போனார்களா? என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.
****

அமெரிக்க சீரிஸில் நான் பார்த்த மூன்றாவது சீரிஸ் இது. தொலைக்காட்சி தொடர்களாக வெளிவந்திருக்கின்றன. ”ஸ்டீபன் கிங்” எழுத்தாளர் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். நிறைய கற்பனை, கொஞ்சம் அறிவியல் என எழுதி இருக்கிறார். நம்மூர் எழுத்தாளர் சுஜாதா போல!

முதல் சீசன் மிக சுறுசுறுப்பாக செல்கிறது. இரண்டாவது சீசன் சுறுசுறுப்பாக செல்கிறது. மூன்றாவது சீசன் எங்கெங்கோ இழுத்து சென்று முடிவு தெரியவேண்டுமே என்பதற்காக பார்க்க வேண்டியிருக்கிறது. எதற்கும் இருக்கட்டும் என நாலாவது சீசனுக்கான ஒரு வாய்ப்பை தந்து முடித்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் அதற்கான அறிவிப்பு வரவில்லை. மூன்றாவது சீசனே சுமாராக இருப்பதால் நாலாவது சீசனுக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும் என கருதுகிறேன்.

முன்னாள் இராணுவ வீரன், ஒரு பெண் பத்திரிக்கையாளர், ஒரு இளம் ஜோடிகள், ஒரு அரசியல்வாதி, உள்ளூர் போலீஸ் என கலவையான மனிதர்கள். காதல், அதிகாரம், நட்பு, துரோகம் என கலவையான உணர்வுகளோடு செல்கிறது. எல்லா பாத்திரங்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

நல்ல தமிழில் டப் செய்திருக்கிறார்கள். MX Playerல் இருக்கிறது. பாருங்கள்.