> குருத்து: யோகா – அனுபவம் (2)

April 1, 2009

யோகா – அனுபவம் (2)


யோகா செய்ய ஆரம்பித்த பொழுது, இப்படி ஒரு “சிக்கலில்” சிக்கிக்கொள்வேன் என நினைத்து கூடப்பார்த்ததில்லை.

அது என்ன ‘சிக்கல்’? என்பதை விளக்க ஒரு குட்டி பிளாஷ் பேக் பிளாக் & ஒயிட்டில் சொல்லியாக வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, என் சொந்த ஊரில் பரபரப்பு துளியும் இல்லாமல், அமைதியாக ஓடும் ஓடையைப் போல வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது என சொல்ல முடியாவிட்டாலும், ஓடிக்கொண்டிருந்தது.

அப்பொழுதெல்லாம், எப்பொழுதும் மூக்கில் ஒருபக்க அடைப்பும், கொஞ்சம் தலைக்கனத்துடன் (!) சுற்றிக்கொண்டிருப்பேன். காரணம், நமக்கு அடிக்கடி ‘சல்ப்’ பிடிப்பது தான் காரணம். தொடக்க காலங்களில், இரண்டு மாதத்திற்கொருமுறை ஜலதோசம் பிடித்து.. பிறகு, மாதம், வாரம் என சுருங்கி, ஒரு கட்டத்தில்.... தீவிரமாகி யாராவது பேசும் பொழுது ‘ஐஸ்’ வைத்தால் கூட ஜலதோசம் பிடித்துக்கொண்டது. இந்த பிரச்சனையால், என் மூக்குக்கு வாசனை என்பதே தெரியாமல் போனது. அதிதீவிர வாசனை இருந்தால் மட்டுமே என் மூக்கால் உணரமுடியும்.

நிற்க. இதற்கொரு சுமூக முடிவு கான வேண்டும் என, காது மூக்கு தொண்டை சிறப்பு நிபுணரைப் பார்த்தேன். ஒரு வருடம் மருந்து, மாத்திரை, பீஸ் என அல்லல்பட்டேன். திடீரென மருத்துவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. பணப்பிரச்சனையா என்று தெரியவில்லை. உங்களுடைய மூக்கில் ஒரு குட்டி அறுவை சிகிச்சை செய்யவேண்டும் ரூ. 10,000 ஆகும். இரண்டு நாள் ஓய்வெடுத்து விட்டு, பிறகு வேலைக்கு போய்விடலாம் என்றார்.

இதேவேளையில், என் அலுவலகம் வளர்ச்சிப்படிகளில் தாவி, சென்னைக்கு இடம்பெயர்ந்தது. என்னையும் அழைத்தார்கள்.

சென்னைக்கு நகர்வது பற்றியெல்லாம், நான் என்றைக்கும் சிந்தித்தேயில்லை. பிறகு, தீவிரமாய் சிந்தித்து, சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.

அறுவை சிகிச்சை செய்யாதது எவ்வளவு நல்லதாக போய்விட்டது என நினைத்துக்கொண்டேன்.
கூவத்தைக் கடக்கும் பொழுது பலரும் மூக்கு சுழித்தார்கள். வேகவேகமாக கடந்தார்கள். நான் சளைக்கவேயில்லை. எப்பொழுதும் போல மித வேகத்துடனே கடந்தேன்.மணம் அறியாத மூக்கால், சென்னைக்காகவே என் ஊரில் தயாராகி வந்தது போல உணர்ந்தேன்.

இப்பொழுது யோகா செய்ய ஆரம்பித்த பிறகு, மூக்கடைப்பு கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. மூச்சுப்பயிற்சி செய்வதால், மூச்சு சீரானது. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக
மூக்கிற்கு மணம் தெரிய ஆரம்பித்தது. இப்பொழுது 5 மாதம் முடிவடைந்துவிட்டது. நன்றாகவே முன்னேற்றம்.
இப்பொழுது சென்னையில் பல இடங்களை கடப்பதற்கே பலரைப்போல நிறைய சிரமப்படுகிறேன். வர வர சென்னையில் இருப்பதே பிடிக்காமல் போய்கொண்டிருக்கிறது. இப்பொழுது, ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தால், சென்னையை விட்டு தப்பிக்க ஓட தயாராக இருக்கிறேன்.

இப்பொழுது மீண்டும் முதல் வரிகளை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன்.

யோகா செய்ய ஆரம்பித்த பொழுது, இப்படி ஒரு “சிக்கலில்” சிக்கிக்கொள்வேன் என நினைத்து கூடப்பார்த்ததில்லை.

உண்மை தானே!

8 பின்னூட்டங்கள்:

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துக்கள் குருத்து

இதுபோன்ற நல்ல அனுபவ பதிவுகள்
இன்னும் நிறைய வரவேண்டும்...

ராஜ நடராஜன் said...

எங்கே ஒரு பதிவோட ஆட்டையப் போட்டுட்டாரே என்று நேற்று நினைத்தேன்.வந்து விட்டீர்கள் இன்று:)

குருத்து said...

//இதுபோன்ற நல்ல அனுபவ பதிவுகள்
இன்னும் நிறைய வரவேண்டும்...//

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சில நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தான் எழுத தொடங்கினேன்.

தொடர்ந்து எழுதுவேன்.

குருத்து said...

//எங்கே ஒரு பதிவோட ஆட்டையப் போட்டுட்டாரே என்று நேற்று நினைத்தேன்.வந்து விட்டீர்கள் இன்று:)//

"ஆட்டையப் போட்டுட்டாரே" என்றால், காணாமல் போவது என்ற அர்த்தம் வருமோ!

தொடர்ந்து எழுதுவேன். ஒரு படம் பாத்த்துவிட்டாலே, ஒரு முழு நீளப்பதிவு போடுகிறார்கள்.

ஐந்து மாதத்திற்கும் மேலாக போகிறோம். நாம் எழுதலாம் என்ற துணிவோடு எழுதுகிறேன்.

தொடர்ந்து எழுதுவேன்.

வருகைக்கு நன்றி.

போராட்டம் said...

படிக்கத் தூண்டிய சுவாரசியமான படைப்பு என 'ஐஸ்' வைத்தால் பிரச்சினை இல்லையே?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இந்த இழையில் இருக்கும் பதிவையும் இணைப்புகளையும் பாருங்கள்..

நன்றி.

குருத்து said...

//இந்த இழையில் இருக்கும் பதிவையும் இணைப்புகளையும் பாருங்கள்..//

அறிவன் அவர்களுக்கு,

யோகா பற்றி முதல் பதிவு எழுதிய பொழுது, ஒரு பதிவர் சொல்லி, நான் படித்துவிட்டேன். நல்ல பதிவு.

இது போல, வேறு பதிவுகள் இருந்தாலும், சொல்லுங்கள். இன்னும் சில பதிவுகள் எழுதும் எண்ணத்தில் இருக்கிறேன். கண்டிப்பாக உதவும்.

தங்கள் வருகைக்கு நன்றி.

குருத்து said...

//படிக்கத் தூண்டிய சுவாரசியமான படைப்பு என 'ஐஸ்' வைத்தால் பிரச்சினை இல்லையே?//

போகிற போக்கில் பார்த்தால், என் வாழ்க்கை யோகா செய்வதற்கு முன்பு, யோகா செய்ததற்கு பின்பு என ஆகிவிடும் போல இருக்கிறது.