> குருத்து: இந்தியா
Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

March 4, 2023

லஞ்சம், ஊழலில் திளைக்கும் கர்நாடக பாஜக



கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ மதல் விருபக்சாப்பாவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக 7 கோடியே 22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

எம்எல்ஏ மதல் விருபாக்சப்பாவின் மகன் பிரசாந்த் பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் (BWSSB) தலைமை கணக்காளராக பணியாற்றி வருகிறார். பாஜக எம்.எல்.ஏ. மதல் விருபக்சப்பா மைசூர் சாண்டல் சோப்பு நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார். சோப்பு - டிடர்ஜென்ட் துறைக்கு தேவையான ரசாயன பொருட்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் டெண்டர் மூலமாக விடப்படுவது வழக்கம். இந்த டெண்டர் தொடர்பாக 81 லட்சம் ரூபாயை ஒப்பந்ததாரரிடம் எம்.எல்.ஏ மகன் பிரசாந்த் லஞ்சமாக கேட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள விருபக்சப்பாவின் அலுவலகத்தில் ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லோக்ஆயுக்தாவிடம் கையும் களவுமாக சிக்கினார்.

 

மேலும் விருபக்சாப்பாவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து 7 கோடியே 22 லட்சம் பணமும், பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும், வழக்கு தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ”சிக்கிய பணத்திற்கும் தன் குடும்பத்துக்கும் சம்பந்தமில்லை. இருந்தாலும், தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்கிறேன்” என அறிவித்துள்ளார்.

 

கீழே விழுந்தாலும்  மீசையில் மண் ஒட்டவில்லை கதையாய் “ஊழலில் ஈடுபடும் எவரையும், கட்சி வேறுபாடின்றி, எங்கள் அரசு காப்பாற்றாது.  பிடிபட்ட பணம் குறித்து விசாரணை நடத்தப்படும். மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு காங்கிரசு அரசால் மூடப்பட்டது.  நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் மீண்டும் தொடங்கினோம்.” என கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மையா  சவடால் அடித்துள்ளார். நியாயமாய் இவரும் ராஜினாமா செய்திருக்கவேண்டும். செய்யவில்லை.

 

கர்நாடகாவில் கர்நாடகத்தில் சட்டசபைக்கான தேர்தல் நெருங்குகிறது. ஏற்கனவே பா.ஜ.க. மந்திரிகள், எம்.எல்.ஏக்கள் பலர் ஊழல் புகார்களில் சிக்கி இருக்கும் பொழுது,  இந்த  ஊழலாலும் பா.ஜ.கவின் பெயர் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு போயிருக்கிறது.

November 29, 2022

500 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன!


உத்திரப்பிரதேசத்தில் முதல்வர் யோகியின் சொந்தக்காரர்களான இந்துத்துவ சாமியார்கள், கங்கா புத்திரர்கள், கரகர ஹரஹர மகாதேவ் ஆட்களில் பலரும் கஞ்சா குடித்து தான் எப்பொழுதும் போதையில் அம்மணமாக திரிகிறார்கள்.

****

உத்திரப்பிரதேசத்தில் 386, 195 கிலோ என இரண்டு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கிட்டத்தட்ட 600 கிலோ கஞ்சாவை போலீசு தங்களுடைய பாதுகாப்பு கிட்டங்கியில் பாதுகாத்து வைத்திருந்தார்கள். நான்கு நாட்களுக்கு முன்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் பொழுது, கஞ்சாவை சமர்ப்பிக்க சொல்லி நீதிபதி கேட்கும் பொழுது, காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “எலி தொல்லை இல்லாத இடமே அந்த காவல் நிலையத்தில் இல்லை. உருவத்தில் சின்னதாக இருந்தாலும், எலிகளுக்கு போலீஸ் என்ற பயமே (!) சுத்தமாக இல்லை. போலீசாராலும் எலித்தொல்லையை தீர்க்க முடியவில்லை. பெரும்பாலான கஞ்சாவை எலிகள் தின்று தீர்த்துவிட்டன. மிச்சமிருந்த கஞ்சாவை அதிகாரிகள் அழித்துவிட்டனர்” என்று வாதாடியிருக்கிறார்.

எலிகள் தின்று தீர்த்ததாக சொன்ன கஞ்சாவின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 60 லட்சம் என கணக்கிடுகிறார்கள். கஞ்சாவை எலிகள் தான் சாப்பிட்டன என்பதற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். எப்பொழுதும் போலீசு தொலைந்து போனதை கணக்கில் காட்ட, திருடுவதை தொழிலாக கொண்டவர்களை கைது செய்து, பொய் வழக்கைப் போட்டு கணக்கை தீர்த்துவிடுவார்கள். இப்பொழுது தங்கள் பாதுகாப்பில் இருந்த கஞ்சாவை விற்று தின்றதை மறைப்பதற்கு, எலிகள் மீது பழியை போட்டுவிட்டார்கள். பாவம் எலிகள்.

இப்படி பதில் அளிப்பது முதன் முறையல்ல! ஏற்கனவே 2020ல் இதே போலீஸ் ஸ்டேசனில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 400 கிலோ கஞ்சாவை இதே கிட்டங்கியில் வைத்திருந்தார்கள். நீதிபதி சமர்ப்பிக்க கோரும் பொழுது, இப்பொழுது சொன்னது போல அப்பொழுதும் ”எலிகள் தின்று தீர்த்துவிட்டன” என்ற பதிலை சொல்லியிருக்கிறார்கள். இப்படி எலிகள் தின்று தீர்த்தது உண்மை (!) என்றே வைத்துக்கொண்டாலும், அதற்கு பிறகாவது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கவேண்டும். செய்யவில்லை. யோகி ஆதித்யநாத் ஆள்கிற “புண்ணிய பூமி” அல்லவா! ஆகையால் இப்படி கூசாமல் பொய் சொல்ல துணிகிறார்கள். உத்திரப்பிரதேசத்தில் முதல்வர் யோகியின் சொந்தக்காரர்களான இந்துத்துவ சாமியார்கள், கங்கா புத்திரர்கள், கரகர ஹரஹர மகாதேவ் ஆட்களில் பலரும் கஞ்சா குடித்து தான் எப்பொழுதும் போதையில் அம்மணமாக திரிகிறார்கள். இப்பொழுது உத்திரப்பிரதேச அரசு கஞ்சாவை ஆய்வு செய்ய சொல்லி இருக்கிறதாம். ஒருவேளை அதில் மருத்துவ குணம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கவும் ஆலோசனை செய்யக்கூடும்.

இது போல இன்னொரு பிரபல வழக்கு ஒன்று உள்ளது. 2017ல் பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் முழு மது விலக்கு அமல்படுத்தப்பட்ட சமயம். அங்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை அவ்வப்போது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி பிடித்து வந்தனர். இந்த வகையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 9 லட்சம் லிட்டர் மதுவகைகளை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இவ்வாறு பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த பாட்டில்களைத் திறந்து மதுவை எலிகள் குடித்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். மாநில காவல்துறையினர் ஆலோசனை கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் சில மதுவகைகளை போலீசார் அழித்துவிட்டதாகவும், மீதமிருந்ததை எலிகள் குடித்துவிட்டன என்று பதில் அளித்தார்கள். இது குறித்து விசாரணை நடத்த பாட்னா மண்டல ஐஜி விசாரணை நடத்த உத்திரவிட்டார். பிறகு அந்த வழக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இது போல தென்னமெரிக்க அர்ஜெண்டினாவின் ஒரு சிறிய நகரத்தில், 6000 கிலோ கஞ்சாவை (Weed) கைப்பற்றி போலீசின் கிட்டங்கியில் பாதுகாத்ததில், 540 கிலோவை எலிகள் தின்றுவிட்டன என போலீசு பதில் அளித்திருக்கிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எட்டு அதிகாரிகளையும் கூண்டோடு வேலையிலிருந்து தூக்கிவிட்டனர்.

நம்ம இந்தியாவில் மட்டுமல்ல! உலகம் முழுவதுமே போலீசு பொய் கேசு எழுதுவதிலும் கதை சொல்வதிலும் பெரிய கேடிகளாகத் தான் இருக்கிறார்கள்.

August 8, 2022

ராஜஸ்தான் : புஸ்கர்


தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 150 கி.மீ தூரத்தில் இருக்கிறது. பிரம்மா மீது கோபத்தில் அவருடைய மனைவி சாவித்திரி கொடுத்த சாபத்தினால், அவருக்கு வேறு எங்கும் கோயில்கள் இல்லையாம். சாப விமோசனமாக மூலவராக ஒரு இடத்தில் இருக்கும் பிரம்மா கோயில் புஸ்கரில் தான் இருக்கிறதாம். அவரின் இன்னொரு மனைவியான காயத்ரி தேவியுடன் இருக்கிறார்.

பிறகு ராஜஸ்தானில் புஸ்கரைச் சுற்றி சுரங்கங்கள் தோண்டப்பட்டக்கொண்டே இருப்பதால், தார் பாலைவனம் கொஞ்சம் நீண்டுக்கொண்டே வருகிறதாம். ஆகையால் ஒட்டகம்/ஜீப் உதவியுடன் அங்கு மக்கள் செல்கிறார்கள்.
ஆரவல்லி மலைத்தொடரில் நல்ல உயரத்தில் இருக்கும் பிரம்மாவின் துணைவியார் சாவித்திரி கோயில் இருக்கிறது. நமது பழனி முருகன் கோயில் போல ரோப் கார் காலையிலிருந்து மாலை வரை இயக்குகிறார்களாம். தலைக்கு ரூ. 150 வசூலிக்கிறார்களாம்.
விரிவாக தெரிந்துகொள்ள பின்னூட்டத்தில் காணொளி பாருங்கள்.

#ராஜஸ்தான்

https://www.youtube.com/watch?v=gMVhplKt1xY

April 26, 2022

இராணுவச் செலவினத்தில் இந்தியா மூன்றாம் இடம்! ஏகாதிபத்திய ரசியாவே ஐந்தாம் இடம் தான்!

 


இராணுவச் செலவினத்தில் இந்தியா மூன்றாம் இடம்! ஏகாதிபத்திய ரசியாவே ஐந்தாம் இடம் தான்!

ஒருபக்கம் கல்வி, மருத்துவம், உணவு என அடிப்படையானவைகளுக்கு எல்லாம் மான்யங்களை வெட்டுகிற இவர்கள்தான், இராணுவம் போன்ற செலவினங்களுக்கு தாராளமாய் செலவழிக்கிறார்கள்.

****

ராணுவத்திற்கான செலவுகள் செய்வதில் அமெரிக்கா முதலிடம். சீனா இரண்டாமிடம். மூன்றாமிடத்தில் இந்தியா என சர்வதேச அமைதி ஆய்வுமையம் அறிவித்துள்ளது. கொரானா தொற்றிய நாடு, லட்சக்கணக்கான மக்களை பறிகொடுத்து கலகலத்த நாடுகள் என உலகம் நினைத்துகொண்டிருக்கிறது.

அமெரிக்கா ஒரு உலக ரவுடி. தன் கெத்துக்கு செலவு செய்யலைன்னா அழிஞ்சுபோவான்.  சீனா வளர்ந்துவரும் ரவுடி. அவன் உலகத்துக்கே பொருட்களை ஏற்றுமதி செய்றான். செலவழிக்கிறான்.

இந்திய ராணுவத்தில் 14 லட்சம் பேர் நிறைந்திருக்கிறார்கள்.  ”ஒழுங்கான சாப்பாடு இல்லை, அடிப்படை வசதி இல்லை” என கறார் விதிகளை எல்லாம் தூரப்போட்டு, காணொளியில் எல்லையிலிருந்து கதறுவது வைரலாகிறது. ”குளிரில் விறைத்துப்போய் நிற்கும் எல்லையோர இராணுவத்தினரை நினைத்துப் பாருங்கள்!” என அடிக்கடி சங்கிகள் கண்ணீர் வடிப்பார்களே! அவர்களின் வாழ்வை எல்லாம் உயர்த்திவிட்டார்களா? என நினைத்தீர்கள் என்றால் நாமெல்லாம் அப்பாவி!

சில அமெரிக்க பத்திரிக்கைகள், சில இந்திய பத்திரிக்கைகள் அவ்வப்பொழுது இந்திய இராணுவத்தின் ஏவுகணைகள், போர்விமானங்களின் நிலையை பக்கத்தில் இருக்கும் சீனாவுடனும், பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு, ஒப்பிட்டு உசுப்பேற்றுகிறார்கள். இராணுவ கொள்முதலில் நன்றாக காசு பார்க்கலாம் என முடிவு செய்து, ஏகாதிப்பத்திய ஆயத உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, கார்ப்பரேட்டுகளையும் கூட்டு சேர்ந்துகொண்டு, வகை தொகையில்லாமல் களவாடுகிறார்கள்.

மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி எட்டு ஆண்டுகளில் பக்கத்து பக்கத்து நாடுகளில் எல்லாம் வம்பிழுத்து நல்லா இருந்த உறவை கூட கெடுத்துதான் வைத்திருக்கிறார்கள்.

ஒருபக்கம் கல்வி, மருத்துவம், உணவு என அடிப்படையானவைகளுக்கு எல்லாம் மான்யங்களை வெட்டுகிற இவர்கள்தான், இராணுவம் போன்ற செலவினங்களுக்கு தாராளமாய் செலவழிக்கிறார்கள். நேரடியாக பாதிக்கப்படும் நாம் தாம் விழிப்புணர்வுடன் இருந்து கேள்வி கேட்கவேண்டும். தொடர்ந்து கேட்போம்.

April 17, 2022

மோடியின் நண்பராய் இருந்தால் பில்லினியர்களாகிறார்கள்


மோடியின் நண்பராய் இருந்தால் பில்லினியர்களாகிறார்கள்

எதிர்ப்பவர்கள் சிறையில் வதைபடுகிறார்கள்

ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த ருச்சி நிறுவனம் தொழில்முறை பிரச்சனைகளால் வீழ்ந்தது. மஞ்சகடுதாசி கொடுத்தது. பதஞ்சலி ஓடிவந்து ருச்சியை அடிமாட்டு விலைக்கு வாங்கியது. வாங்குவதற்கு வங்கிகளே கடன்களை சந்தோசமாய் தந்தார்கள். குறுகிய காலத்திலேயே வங்கிக் கடனை அடைத்துவிட்டதாக பதஞ்சலியை புகழ்கிறார்கள்.

பதஞ்சலியின் ஆராய்ச்சி நிறுவனத்தை துவங்க மோடி ஹெலிகாப்டரில் பறக்கிறார். ஒன்றிய அமைச்சர் யோகாவை ”வளர்க்க” ராம்தேவ்க்கு அந்தமான் அருகே தீவையே பரிசாக தருகிறார். இராணுவ கேண்டினில் நெல்லிக்காய்சாறு விற்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் ரேசன்கடையில் பதஞ்சலி பொருட்களை பொறுப்பாக விற்றுதருகிறார்கள்.

பதஞ்சலி ஆண்டுக்கு முப்பதாயிரம் கோடிகளுக்கும் மேலாக லாபமாக கொழிக்கிறார்கள். சர்வதேச சந்தைக்கு விரைவில் நகர இருக்கிறார்கள். ”எங்களுக்கு நடக்க தெரியாது. ஓடத்தெரியும்” என பஞ்ச் டயலாக் அடிக்கிறார்கள்.

இப்பொழுது தலைப்பை மீண்டும் படியுங்கள்.

பாஜனதாவின் ஊழல் சந்தி சிரிக்கிறது


கர்நாடகாவில் அரசு ஒப்பந்ததாரர் தற்கொலை!

பாஜனதாவின் ஊழல் சந்தி சிரிக்கிறது.

அரசு ஒப்பந்ததாரரான சந்தோஷ் பாட்டீல் பா.ஜனதா கட்சியிலும் இருக்கிறார். செய்து முடித்த நாலு கோடி வேலைக்கு, மாநில அமைச்சர் 40% கமிசன் லஞ்சமாக கேட்டதாக ஊடகங்களிடம் தெரிவித்தார். ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் வழியாக பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சருக்கும் புகார் அனுப்பினார்.

தீடீரென சந்தோஷ் ”காணாமல்” போனார். பிறகு ஹோட்டலில் ”தற்கொலை” செய்துகொண்டதாக போலீசு உடலை கண்டெடுத்தது. அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

ராஜினாமா செய்ய மறுத்தார் அமைச்சர். மக்களும், எதிர்கட்சிகளும் தொடர்ந்து போராடியதால் வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்துள்ளார்.

2018 மாநில தேர்தலின் பொழுது, காங்கிரசை ”10% கமிசன் அரசு” என மோடி கிண்டல் செய்தார். நான்கே வருடத்தில் 40% கமிசன் அரசாக வளர்ச்சியடைந்து பா.ஜனதா சாதனை படைத்திருக்கிறது.

December 3, 2021

வங்கி ஊழியர்கள் போராட்டத்தை பரந்துப்பட்ட மக்கள் இயக்கமாக மாற்றுவோம்!


பொதுத்துறை வங்கிகளை காப்பாற்றுவதில் நமது நலனும் அடங்கியிருக்கிறது.
வங்கி ஊழியர் போராட்டத்தை பரந்துப்பட்ட மக்கள் போராட்டமாக மாற்றுவோம்!

பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க அனுமதிக்கும் வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு, வரும் 16, 17ம் தேதிகளில், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காவி பாசிச கும்பல் பி.எஸ்.என்.எல், சிபிஐ, ரயில்வே, இந்திய ரிசர்வ் வங்கி என ஒவ்வொரு பர்னிச்சராக உடைத்து மதிப்பிழக்க செய்துவிட்டார்கள். அதன் தொடர்ச்சியில் கடந்த சில வருடங்களாக பொதுத்துறை வங்கிகளை குறிவைத்து தாக்க ஆரம்பித்துள்ளார்கள். அவ்வப்பொழுது ஒன்றிய அமைச்சர்கள் வங்கிகளை தனியார்மயமாக்குவது உறுதி என அறிவித்து வருகிறார்கள்.

இதனால் பொதுவங்கிகள் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்த்துவருகிறார்கள். தங்களுடைய வைப்புத்தொகையை வேகவேகமாக எடுப்பதும் நடந்தது. சில மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் 30 லட்சத்திற்கு புதியதாக வீடு வாங்கினார். எந்த வங்கி? எவ்வளவு கடன்? என விசாரிக்கும் பொழுது, உறவினர்களாக இருக்கும் சிலர் வங்கி எப்பொழுது வேண்டுமென்றாலும் திவாலாகும் என்ற எண்ணத்தில் வீடு வாங்குவதற்கு கொடுத்துள்ளார்கள். அப்படி கொடுத்த சில உறவினர்கள் அரசு பள்ளி ஆசிரியர்களாக, வங்கியில் பணிபுரிபவர்களாக இருப்பது தான் முக்கிய விசயம்.

கடந்த மே 13 லிருந்து 17 வரை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். ”கேந்திரமில்லாத அனைத்து துறைகளிலிருந்தும் அரசு வெளியேறும் என்றும், கேந்திரமுள்ள துறைகளில் குறைந்தபட்சம் ஒன்று, அதிகப்பட்சம் நான்கு வைத்துக்கொள்வோம்” என தெரிவித்துள்ளார். அப்படிப் பார்த்தால், கேந்திரமுள்ள துறையில் வங்கித்துறையும் உள்ளே கொண்டு வந்தார்கள் என்றால், அதிகப்பட்சம் நான்கு வங்கிகளை மட்டுமே வைத்துக்கொண்டு, மற்றவற்றை தனியாருக்கு தாரை வார்த்துவிடுவார்கள் என்பது தான் அவர்களின் திட்டம்.

1947க்கு பிறகான காலங்களில் வங்கிகள் தனியார்மயமாக தான் இருந்தன. 1947 – 1969க்கும் இடைப்பட்ட காலத்தில் 559 வங்கிகள் திவாலாகின. 1969க்கு பிறகு 23 வங்கிகள் திவாலாகின. பிறகு தான் அரசு மக்களின் வைப்புத்தொகையை காப்பாற்றுவதற்கும், இந்தியாவை தொழில்துறையில் முன்னேற்ற வேண்டுமென்றால், அரசு வங்கிகளின் அவசியத் தேவையை உணர்ந்து வங்கிகள் தேசியமயமாக்கபட்டன. இது தான் கடந்த கால வரலாறாக இருக்கிறது. சமீபத்தில் கூட யெஸ் வங்கி திவாலாகும் நிலையில் அரசு வங்கியான SBIயும், பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சிதான் காப்பாற்றின.

இந்தியாவில் உள்ள வங்கிகளின் கணக்கு

அரசு வசம் உள்ள வங்கிகள் 4
வைப்பு நிதி நிறுவனம் 8
மொத்தம் 12

தனியார் வசம் உள்ளவை

பேமண்ட் வங்கி 7
வங்கிகள் 22
பிரதேச வங்கி 3
வெளிநாட்டு வங்கி 46
வங்கியில்லாத வைப்பு நிதி நிதி நிறுவனங்கள் 80
மொத்தம் 168

அரசு வங்கிகளில் ஒன்றிய அரசின் பங்கு 51% என்பதால், அதற்குரிய கட்டுப்பாடுகளுடன் இயங்குவதால் திவாலாக வாய்ப்பில்லை. அப்படியே திவாலானால் கூட மக்கள் போட்ட பணம் அப்படியே கிடைத்துவிடும். இல்லையெனில் முறையாக வழக்கு தொடுத்து மீட்டுவிட முடியும்.

ஆனால், தனியார் வங்கிகளில் அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. மக்கள் எத்தனை லட்சம் வைப்புத்தொகையாக வைத்திருந்தால் கூட, அதிகப்பட்சம் ஐந்து லட்சம் மட்டுமே கிடைக்கும். (இந்த தொகை சமீப காலம் வரை ஒரு லட்சம் தான் இருந்தது.) சமீபத்தில் ஒரு தனியார் வங்கி, வாடிக்கையாளரின் வங்கி கணக்குப் புத்தகத்தில் ”ஐந்து லட்சம் மட்டுமே” என சீல் வைத்து கொடுத்ததினால், பரவலாக பேசுபொருளானது.

நாட்டின் வளர்ச்சியில், மக்களின் நலனில் அரசு வங்கிகளையும் தனியார் வங்கிகளையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.

அரசு வங்கிகள்

கிராமப்புற வங்கிகளின் பங்கு 35%
அடிப்படை கட்டுமானங்களுக்கு நிதி ஆதாரம் வழங்குகின்றன
குறுந்தொழில்களுக்கு எந்த பிணையும் இல்லாமல் 2லட்சம் வரை வழங்குகின்றன
விவசாய கடனுக்கு எந்த பிணையும் இல்லாமல் 3 லட்சம் வரை தருகின்றன.
கல்விக்கடனுக்கு எந்த பிணையும் இல்லாமல் 4 லட்சம் வரை வழங்குகின்றன.
ஏழை மக்களுக்கு மொத்த கடன் தொகையில் 40% முன்னுரிமை வழங்குகின்றன. அதில் விவசாய கடன்களில் 18% முன்னுரிமையும் வழங்குகின்றன.

தனியார் வங்கிகள்

கிராமப்புற வங்கிகளின் பங்கு 15%
அடிப்படை கட்டுமானங்களுக்கு நிதி ஆதாரம் வழங்குவதில்லை
குறுந்தொழில்களுக்கு பிணையுடன் தான் கடன் வழங்குகின்றன.
விவசாய கடனுக்கு பிணையுடன் தான் கடன் வழங்குகின்றன.
கல்விக்கடனுக்கு பிணையுடன் தான் கடன் வழங்குகின்றன.
கடன் வழங்குவதிலும் ஏழை மக்களுக்கு எந்தவித முன்னுரிமையும் இல்லை.

அரசு வங்கிகள் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குகின்றன. யார்வேண்டுமென்றாலும், ஆர்.டி.ஐ மூலம் விவரங்கள் கேட்கலாம். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். தனியார் வங்கிகளில் இம்மூன்றும் கிடையாது.

அரசு வங்கிகளில் சேவைக்கட்டணமும், அபாரதக் கட்டணமும் குறைவு. வங்கி கடன்களை வசூலிப்பதில் சட்ட ரீதியாகவும், மனிதாபிமானத்துடனும் நடந்துகொள்கின்றன. தனியார் வங்கிகளில் சேவைக்கட்டணமும், அபராதமும் அதிகம். கடன்களை வசூலிப்பதில் மிக மோசமான அணுகுமுறையை கையாள்கிறார்கள். இதனால், தற்கொலைகள் நிகழ்வதை செய்தித்தாள்களில் பார்த்து வருகிறோம்.

வேலை வாய்ப்புகளை பொறுத்த வரையில், அரசு வங்கிகளில் நிரந்தர வேலை வாய்ப்புகளை தருகின்றன. தலித், ஆதிவாசி, முன்னாள் இராணுவத்தினருக்கென இட ஒதுக்கீடு உண்டு. இதில் எதுவும் தனியார் வங்கிகளில் கிடையாது.

அரசு வங்கிகளை கண்காணிப்பதற்கென்று நிறுவன அமைப்புகள் உண்டு. கடன்களை வழங்குவதிலும் கட்டுப்பாடுகள் உண்டு. நிர்வாக இயக்குநருக்கென பதவிக்காலம் 3 வருடங்கள் மட்டுமே. தனியார் வங்கிகளில் இந்த கட்டுப்பாடுகள் இல்லை. ஐசிஐசிஐயின் முன்னாள் இயக்குநர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்து கைது செய்யப்பட்ட செய்தியை நாம் அறிவோம்.

இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் மீறித்தான், கார்ப்பரேட் முதலாளிகளும் தரகு முதலாளிகளும், அதிகாரத்தில் உள்ள காவி பாசிஸ்டுகளின் மூலம் ஏற்கனவே வங்கிகளிடம் ஏராளமாக கடன் பெற்று திரும்ப செலுத்தாமல், செலுத்தாத முதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யாமல் வங்கிகளை திவாலாக்கும் நிலைக்கு தள்ளுகிறார்கள். மொத்தமாய் தனியார்மயமாக்கிவிட்டால், கொள்ளையை தாராளமாய் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

2008ல் உலகம் முழுவதிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. பல நாடுகள் கலங்கிபோயின. அதிலிருந்து மீள்வதற்கே பல ஆண்டுகள் ஆயின. இன்னும் மீளாத நாடுகளும் உண்டு. வங்கிகளின் செயல்பாட்டில் அரசு தலையிடகூடாது என அடம்பிடித்து வால் ஸ்டீரிட்டில் இயங்கிகொண்டிருந்த பெரும் வங்கிகள் எல்லாம் அவர்கள் செய்த கோளாறுகளால் திவாலாகின. அரசிடம் கையேந்தி நின்றன. அமெரிக்க அரசு வேறுவழியில்லாமல் மக்கள் பணத்தை அள்ளித்தந்து காப்பாற்றியது. இந்த காலத்தில் இந்தியாவில் வங்கிகள் எல்லாம் அரசு வசம் இருந்ததால், அந்த பொருளாதார வீழ்ச்சி பெரிதாக பாதிக்கவில்லை.

ஆக இந்திய பொதுத்துறை வங்கிகளை காப்பாற்றுவது அவசர, அவசிய கடமையாகிறது. பொதுத்துறை வங்கிகள் எல்லாம் இருப்பதால் தான், பிணை இல்லாமல் கடன் பெற்று தொழில்கள் செய்துவருகிறோம். இல்லையெனில் ஐந்து வட்டிக்கும், பத்து வட்டிக்கும் வெளியில் கடன் வாங்கி கடனை கட்டுவதிலேயே நமது மொத்த உழைப்பும் தொலைந்துவிடும். ஆகையால், பொதுத்துறைவங்கிகளை காப்பாற்றுவதில் நமது நலனும் அடங்கியிருக்கிறது.

தரவுகளுக்கு நன்றி : தீக்கதிர்

May 30, 2021

அறிவிக்கின்ற கோவிட் சோதனை முடிவுகள் என்பது மூழ்கி இருக்கும் பனிப்பாறையின் ஒரு முனை மட்டுமே!


”அறிவிக்கின்ற கோவிட் சோதனை முடிவுகள் என்பது மூழ்கி இருக்கும் பனிப்பாறையின் ஒரு முனை மட்டுமே! மாநிலத்திற்கென்று சுகாதார துறை அமைச்சர் உடனே நியமிக்கப்படவேண்டும்”

- திரிபுரா பா.ஜனதா எம்.எல்.ஏ சுதீப் ராய் பர்மன்

மக்களிடையே பரந்துபட்ட அளவில் கோவிட் சோதனைகள் செய்யப்படவேண்டியது மிக அவசியம். தடுப்பூசி உரிய நேரத்தில் மக்களுக்கு பரவலாக போடப்படவேண்டும். உள்ளூர் ரயில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் பரவலை தடுப்பதற்கான எந்த வசதியும் செய்யப்படவில்லை. ஆகையால், உள்ளூர் ரயில் பயணத்தை உடனே ரத்து செய்யவேண்டும்.

கொரானா நோயாளிக்கு ஒரு நாளைக்கு உணவுக்கென ரூ. 380 ஒதுக்கப்படுகிறது. என்ன உணவு சாப்பிடுவது என வழிகாட்ட உணவு நிபுணர் இல்லை. உணவின் தரம் மிக மோசமானதாக இருக்கிறது. இதை எல்லாம் யாரும் அரசு தரப்பில் கண்காணிக்கப்படுவதும் இல்லை.

மாநிலத்தின் முக்கிய மருத்துவமனையான GB PANT மருத்துவமனை நரகத்திற்கான கதவு போல இருக்கிறது. உள்ளே நோயாளி போனதும் வெளியே போவோமா என சந்தேகம் வந்துவிடுகிறது.

இவ்வளவு சிக்கலான சூழலில் முதல்வரே சுகாதார துறையை கையில் வைத்திருக்கிறார். அவருக்கு இருக்கும் வேலை நெருக்கடியில் சுகாதார துறையை எப்படி முழுமையாக கவனிக்கமுடியும்? ஆகையால், சுகாதார துறைக்கு என ஒரு அமைச்சரை உடனே நியமிக்கவேண்டும்.

இதை சொல்பவர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ இல்லை. திரிபுராவில் ஆளும் பா.ஜனதா கட்சியில் எம்.எல்.ஏ சுதீப் ராய் பர்மன் தான் சொல்கிறார். பா.ஜனதா ஆளும் மத்திய அரசு எப்படியோ, அதன் வழியில் பா.ஜனதா மாநில அரசுகளும் எல்லா கோளாறுகளுடனும் மக்கள் உயிரில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். விளைவு மக்கள் கொத்தாய் கொத்தாய் செத்துக்கொண்டிருக்கிறர்கள். எரிப்பதற்கு கூட பல மணி நேரம் வரிசையில் நிற்கிறார்கள்.

சுதீப் ஐந்துமுறை எம்.எல்.ஏயாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். முன்னாள் எதிர்கட்சி தலைவரும் கூட! ஜூன் இவர் முன்னள் திரிபுரா முதல்வர் சமர் ரஞ்சனின் மகன். 2016ல் காங்கிரசை விட்டு திரிணமூல் காங்கிரசில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து அவரும், இன்னும் ஐந்து திரிணமூல் கட்சி எம்.எல்.ஏக்களும் பா.ஜனதாவில் இணைந்தனர்.

- Wire ல் 25/05/2021 அன்று வந்த கட்டுரையில் இருந்து....

https://thewire.in/politics/tripura-bjp-sudip-roy-barman-biplab-deb-covid-19-gb-pant-hospital

February 21, 2021

கேஸ் மானியம் : கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி போனது!


 #கேஸ் மானியம் : கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி போனது!

மானியத்தை அவரவர் வங்கி கணக்கில் போடுவதாக பிரதமர் சொன்னார்.
2018ல் ஜூனில் ரூ. 230.66 மானியம்
2021ல் ஜனவரியில் ரூ. 24.95 மானியம்.
அதையும் வங்கியில் வரவு வைக்கிறார்களா என நம்மில் பலரும் சரிபார்ப்பதுமில்லை!
மானியத்தை சொல்லி, சொல்லி ஆதாரை குறுக்கு வழியில் மக்கள் தலையில் கட்டினார்கள். எதிர்காலத்தில் மானியம் இருக்காது! ஆதாரை வைத்து நம்மை எல்லாம் நசுக்கப் போகிறார்கள் என்றோம்.
இதோ கேஸ் மானியத்தை இன்னும் சில மாதங்களில் அநேகமாக இல்லாமல் செய்துவிடுவார்கள்!

May 3, 2013

இ.பி.எஃப். ஓய்வூதியம் போதாது!


வருங்கால வைப்புநிதி திட்டத்தின் (இ.பி.எஃப்.ஓ.) கீழ் வரும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை இப்போதுள்ள தொகையிலிருந்து ரூ.1,000 ஆக உயர்த்துவது, இத் திட்டத்தில் சேருவதற்கான ஊதிய வரம்பை ரூ.15,000 வரை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் உத்தேச நடவடிக்கைகளால் ஓய்வூதியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை.
ஒருவருடைய மாத ஊதியம் 50,000 ரூபாயாக இருந்தாலும் அல்லது அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாயாகவே இருந்தாலும் அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,600 தான் அவரால் பெற முடியும்.
மாதாந்திர ஓய்வூதியத்தை நிர்ணயிக்கக் கடைப்பிடிக்கப்படும் சூத்திரத்தை நினைவுபடுத்திக்கொள்வோம். ஓய்வூதியம்பெற "தகுதியான' மாத ஊதியத்துடன், அந்த ஊழியர் எத்தனை ஆண்டுகள் பணி புரிந்தாரோ அத்தனை எண்ணிக்கையால் பெருக்கி, எழுபதால் வகுக்க வேண்டும். அப்படி வரும் ஈவுத்தொகைதான் அவருடைய மாதாந்திர ஓய்வூதியம்.
ஓய்வூதியம் கணக்கிட அனுமதிக்கப்படும் மாதாந்திர ஊதியம் ரூ.6,500 மட்டுமே. அதற்கு மேல் தொழிலாளர் எவ்வளவு ஊதியம் பெற்றாலும் அவருடைய ஊதியம் வெறும் 6,500 ஆக மட்டுமே அதிகபட்சம் கணக்கில் கொள்ளப்படும். இந்த அளவே 1952-இல் வெறும் 300 ரூபாயாக மட்டுமே இருந்தது. இதை படிப்படியாக உயர்த்தி 2001-இல் ரூ.6,500 ஆக உயர்த்தியிருக்கிறார்கள்! இந்த அடிப்படையில்தான் ஓய்வூதியத்துக்கு "சந்தா' வசூலிக்கப்படுகிறது. தொழிலாளர் அல்லது ஊழியர் தன் பங்குக்குச் செலுத்தும் தொகையுடன் ஆலை நிர்வாகமும் ஒரு பங்கைச் செலுத்த வேண்டும்.
இதில் நிர்வாகத்துக்கு ஒரு சலுகையும் தரப்பட்டிருக்கிறது. அதாவது, அவர்கள் தங்கள் பங்குக்குரிய குறைந்தபட்ச தொகையைக் காட்டிலும் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் அதிகமாகச் செலுத்தலாம். ஆனால் நடைமுறையில் எந்த முதலாளியும், ஆலை நிர்வாகமும் அரசு நிர்ணயித்தத் தொகையைவிட சல்லிக்காசு கூட அதிகம் தருவதில்லை. அதிகம் தருவது இருக்கட்டும், தொழிலாளர் ஓய்வூதியத்துக்குத் தர வேண்டிய சந்தாவையே பலர் ஒழுங்காகச் செலுத்துவதில்லை!
1995-இல் வேலைக்குச் சேர்ந்து, 35 முழு ஆண்டுகள் பணிபுரிந்து 2030-இல் ஓய்வு பெறும் ஊழியர்கூட, இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ.3,250 தான் ஓய்வூதியம் பெற முடியும். இப்போது மாதந்தோறும் ரூ.1,600 ஓய்வூதியம் பெறுவோரும் 2030-இல் ரூ.3,250 பெறுவோரும் எப்படி, யார் தயவும் இல்லாமல் காலம்தள்ள முடியும்? ஆனால் துயரம் என்னவென்றால் இப்போது பெரும்பாலானவர்கள் இந்த ரூ.1,600-ஐக் காட்டிலும் மிகக் குறைவாகவே பெற்றுவருகின்றனர்.
தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் சமீபத்தில் மாநிலங்களவையில் தெரிவித்த தகவல்களின்படி, ஓய்வூதியர்களில் 83 சதவீதம் பேர் மாதம் ரூ.1,000-க்கும் குறைவாகவும், அதிலும் 27 சதவீதம் பேர் மாதம் ரூ.500-க்குக் குறைவாகவும் பெறுகின்றனர்!
இப்போது இந்த மாதாந்திர ஓய்வூதியத் தொகையின் குறைந்தபட்ச அளவை 1,000 ரூபாயாக உயர்த்த உத்தேசித்திருக்கிறார்கள். இதை "ஓய்வூதிய அமல் குழு' பரிந்துரைத்திருக்கிறது. தொழிலாளர் வைப்புநிதியத்தின் மத்திய அறக்கட்டளை உறுப்பினர்களைக் கொண்ட துணைக்குழுதான் இந்த ஓய்வூதிய அமல் குழு. குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும், தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்துக்கான சந்தாவை மேலும் 0.63 சதவீதம் அரசு உயர்த்திச் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
ஓய்வூதியம் கணக்கிடுவதற்கான மாதாந்திர ஊதிய அதிகபட்ச அளவை இப்போதிருக்கும் ரூ.6,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
இப்படி உயர்த்தினால் மாதாந்திர ஓய்வூதியம் அதிகபட்சம் ரூ.7,500 கிடைக்கக்கூடும்.
அப்படியே இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டு மாதாந்திரம் ரூ.7,500 ஓய்வூதியம் அளித்தால்கூட இப்போதுள்ள விலைவாசியில் முதியவர்கள் அதைக் கொண்டு உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் ஆகிய செலவுகளைச் சமாளிப்பது கடினம்தான். தனக்கிருக்கும் நிதி நெருக்கடியில் இந்த அளவுக்கு ஓய்வூதியத்தை உயர்த்துவது இயலாதது என்று அரசு கை விரிக்கிறது.
ஓய்வூதியத்துக்கு தொழிலாளி அல்லது ஊழியர் மாதந்தோறும் தன்னுடைய ஊதியத்தில் 12 சதவீதத்தை "சந்தா'வாக அளிக்கிறார். ஆலை நிர்வாகம் அல்லது முதலாளி, ஊழியரின் மாதாந்திர ஊதியத்தில் 3.67 சதவீதம் அளவுக்கு மட்டுமே தன்னுடைய பங்காகச் செலுத்துகிறார். இவ்விதம் மொத்தம் 15.67 சதவீதம் "சந்தா'வாகச் செலுத்தப்படுகிறது. "ஓய்வூதிய நிதி'யத்துக்கு ஆலை நிர்வாகம் அல்லது முதலாளி சார்பில் 8.33 சதவீதம் செலுத்தப்படுகிறது. மத்திய அரசு 1.16 சதவீதம் செலுத்துகிறது. மொத்தம் 9.49 சதவீதம்.
(ஓய்வூதியச் சந்தா வேறு, ஓய்வூதிய நிதியம் வேறு என்பதை மனதில் கொள்ள வேண்டும்). மேலோட்டமாகப் பார்த்தால் ஓய்வூதிய நிதிக்கு தொழிலாளர் ஏதும் செலுத்துவதில்லை, ஆலை நிர்வாகம் அல்லது முதலாளி தரப்பும் அரசும்தான் செலுத்துகிறது என்று தோன்றும். ஆலை நிர்வாகம் சட்டப்பூர்வமாக, தான் செலுத்த வேண்டிய ஓய்வூதியப் பங்களிப்பைத்தான் இரண்டு பிரிவுகளாகப் பிரித்துச் செலுத்துகிறது. வைப்பு நிதிக்கு ஒரு பங்கையும் ஓய்வூதியத்துக்கு ஒரு பங்கையுமாக பிரித்துச் செலுத்துகிறது. ஓய்வூதியம் இல்லையென்றால் இந்தத் தொகையும் வைப்புநிதியிலேயே சேரவேண்டும். உண்மையில், இந்த ஓய்வூதியப் பிடித்தம் காரணமாகத் தொழிலாளர்தான் வைப்பு நிதியில் கணிசமான தொகையை இழக்கிறார்.
2009 முதல் 2012 வரையிலான மூன்றாண்டுகளுக்கு "வருங்கால வைப்பு நிதி'யில் 1.51 லட்சம் கோடி ரூபாய் சேர்ந்தது. "ஓய்வூதிய நிதி'யத்தில் 0.38 லட்சம் கோடி ரூபாய் சேர்ந்தது.
2012 மார்ச் வரையிலான காலத்தில் வைப்பு நிதி (பிராவிடண்ட் பண்ட்), ஓய்வூதிய நிதியம் (பென்ஷன் பண்ட்) ஆகியவை முறையே ரூ.2.37 லட்சம் கோடியாகவும் ரூ.1.62 லட்சம் கோடியாகவும் இருந்தன.
இதைப் பார்க்கும்போது பிரம்மாண்டமான தொகையாகத் தெரிகிறது. ஆனால் இப்போதுள்ள ஓய்வூதியர்களுக்கு நடப்புக் கணக்கில் ஓய்வூதியம் வழங்கவே பணம் பற்றாக்குறையாக இருக்கிறது!
ஓய்வூதிய திட்டத்தைப் பரிசீலித்த சில நிபுணர்கள், குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை - தொழிலாளர்கள் தங்களுடைய கடைசி பணியாண்டில் வாங்கிய கடைசி 12 மாத சராசரி ஊதியத்தின் பாதியளவு வரை உயர்த்தலாம் என்று கூறியுள்ளனர்.
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் 102-வது வழிகாட்டு நெறியின்படி, தொழிலாளரின் "வைப்புநிதி பிடித்தத்துக்குரிய' ஊதியத்தில் சரிபாதியை மாதாந்திர ஓய்வூதியமாகத் தரலாம் என்று கூறுகிறது. ஆனால் இதை ஏற்றால் நியாயம் கிடைக்காது.
ஏனென்றால் இந்தியாவில் "வைப்புநிதி பிடித்தத்துக்குரிய ஊதியம்' மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. உண்மையான ஊதியத்தின் சரிபாதியைவிட, வைப்பு நிதி ஊதியத்தின் சரிபாதி மிகமிகக் குறைவாக இருக்கிறது.
இ.பி.எப்.ஓ. அமைப்பு உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களைச் சந்தாதாரர்களாகவும் ஓய்வூதியதாரர்களாகவும் பெற்றிருப்பதாக பெருமை பேசுகிறது. இது ஓரளவுக்கு உண்மையும் கூட. 6.91 லட்சம் தொழில் அமைப்புகள் சந்தா செலுத்துகின்றன.
2012 மார்ச் 31 கணக்கின்படி 8.55 கோடி தொழிலாளர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். 41 லட்சம் பேர் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்றனர். செயல்படாத கணக்கில் மட்டும் ரூ.22,636.57 கோடி குவிந்து கிடக்கிறது!
எனவே தொழிலாளர் அல்லது ஊழியர் தனது பதவிக் காலத்தின் கடைசி கட்டத்தில் வாங்கும் ஊதியத்தில் சரிபாதியை ஓய்வூதியமாக அளிப்பதை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். "மக்கள் நல அரசு' தன்னுடைய கடமையைச் செய்யாமல் பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது. ஓய்வூதிய நிதியத்துக்கு அரசு இப்போது தரும் தொகையை மேலும் உயர்த்தவேண்டும். ஆலை நிர்வாகங்களையும் மேலும் அதிகம் சந்தா செலுத்தச் சொல்ல வேண்டும். பெரிய தொழில் நிறுவனங்களின் பங்களிப்பைக் கணிசமாக உயர்த்த வேண்டும். ஓய்வூதியர்கள் கெüரவமாக தலைநிமிர்ந்து வாழ்வதை உறுதி செய்வது சமுதாயக் கடமையாகும்.

- பி.எஸ்.எம். ராவ்
நன்றி : தினமணி

April 13, 2013

இந்திய எம் பி க்கள் குழு இலங்கை பயணம்! - முகிலனின் கார்ட்டூன்


[ FICCI] பிக்கியின் [இந்திய தரகு முதலாளிகள் சங்கம் ] நலன்களுக்காக
இந்திய எம் பி க்கள் குழு இலங்கை பயணம்! - முகிலனின் கார்ட்டூன்



April 9, 2013

காங்கிரசுகாரர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் யாருக்கு வேண்டும்?

முல்லைப்பெரியாறு, காவிரி, ஈழம் ‍என தேசிய பிரச்சனைகளில் தமிழக காங்கிரசுகாரர்கள் ஏதாவது சொல்லவேண்டுமே என கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். சொல்லிவிட்டு, இது தங்களது தனிப்பட்ட கருத்து என்கிறார்கள். 

நேற்று கூட மத்திய அமைச்சர் இலங்கைக்கு வணிகம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு இந்திய எம்.பி.க்கள் இலங்கை செல்லக்கூடாது என ஜெயந்தி நடராஜன் இப்படி பேசியிருக்கிறார்.

எதற்கும் பயன்படாத காங்கிரசுகார்களின் தனிப்பட்ட கருத்து யாருக்கு வேண்டும்? தங்களது தலைமையிடம் ஓரணியில் (!) நின்று போராடி தமிழகத்துக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்க வைத்தால் தான் தமிழகத்துக்கு பிரயோஜனம்.

இப்படி தனிப்பட்ட கருத்துக்களை கூட காங்கிரசுகாரர்கள் சொல்வதற்கு மக்கள் போராட்டங்கள் தான் நிர்பந்திக்கின்றன!

மக்களின் காத்திரமான போராட்டங்கள் தான் ஒரே தீர்வு!

March 26, 2013

ஈழம் : இராஜபக்சேவை தண்டிப்பது எப்படி? - தோழர் மருதையன்

முன்குறிப்பு : ஈழ தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு தமிழக தழுவிய அளவில் மக்கள் போராட்டங்கள் நடந்துவருகின்றன.  இந்த போராட்டம் குறித்தான பல்வேறு கேள்விகளுக்கு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் பதிலளித்தார். முன்பு ஆடியோவாக வெளிவந்த பேட்டி, இப்பொழுது "இராஜபக்சேவை தண்டிப்பது எப்படி?" என நூல் வடிவில் வெளிவந்திருக்கிறது. வாங்கிப் படியுங்கள்!

விலை ரூ. 10

39 பக்கங்கள்   

*****

 "ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு ‘எதிராக’ அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஒட்டி ஈழப்பிரச்சினை தமிழக அரசியல் அரங்கின் முன்களத்திற்கு மீண்டும் வந்திருக்கிறது. தேர்தல் அரசியலில் உள்ள கட்சிகள், இல்லாத அமைப்புகள், மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பேசியோ, போராடியோ வருகின்றனர். அங்ஙனம் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இலங்கை அரசை ஏதாவது செய்ய முடியுமா என்று முனைகின்றனர்.

    தோழர் மருதையன் இது தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் அளித்த நேர்காணலை இங்கே ஆடியோவாக வெளியிடுகின்றோம். இது யூ டியூபில் பொருத்தமான படங்களுடன் வீடியோ ஃபைலாக உங்கள் பார்வைக்கு வருகின்றது.

    ஒரு மணி நேரம் – இருபத்தி மூன்று நிமிடம் ஓடக்கூடிய இந்த நேர்காணலில் அமெரிக்காவின் நோக்கம், மனித உரிமையை ஆயுதமாக பயன்படுத்தும் ஏகாதிபத்தியங்கள், ஈழத்தை அங்கீகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படும் இந்தியா நண்பனா இல்லை எதிரியா, ஈழ விடுதலை குறித்த காரியவாதப் பார்வை, புலிகளின் அரசியல் தவறுகள், இது தொடர்பான முப்பதாண்டு வரலாறு, திமுக, அதிமுகவின் சவடால் அரசியல், தற்போது போராடும் தமிழக மாணவர்கள் என்று ஈழம் குறித்த அனைத்து பிரச்சினைகளையும் தோழர் மருதையன் விளக்குகிறார்.

    ஈழம் குறித்த வரலாற்றுப் பார்வையுடன் சரி, தவறு குறித்த வெளிப்படையான கருத்துக்கள், நடைமுறையில் செய்ய வேண்டியவை, புரிந்து கொள்ள வேண்டியவை என்று ம.க.இ.க.வின் அணுகுமுறை மற்றும் நடைமுறை, செல்ல வேண்டிய இலக்கை துல்லியமாக காட்டுகின்றதா என்பதை வாசகர்கள் முடிவு செய்யலாம்.

    தற்போதைய சூழலின் அவசரமான, பரபரப்பான தருணத்தில் சவடால்கள், வீராவேசமான முழக்கங்கள், இரத்த உறவு சென்டிமெண்டுகள் இன்னபிற ஜோடனைகள் ஏதுமின்றி வழிமுறையிலும், இலக்கிலும் கொள்ள வேண்டிய பாதை குறித்து எளிமையாக மட்டுமின்றி வலிமையாகவும் முன்வைக்கும் இந்த பார்வை ஈழம் குறித்த தொகுப்பான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

    இந்த நேர்காணலை உங்கள் நட்பு வட்டாரத்தில் விரிந்த அளவில் கொண்டு செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

******
வெளியீடு :

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை - 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை - 600 002.
பேச : 044-28412367

March 16, 2013

ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும், பங்காளி ஐ.நாவிற்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!

ஈழத் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு
ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும்,
பங்காளி ஐ.நாவிற்கும்
 காவடி தூக்குவதை நிராகரிப்போம்!

தமிழகத்தில் மீண்டும்
மக்கள் எழுச்சியை தோற்றுவிப்போம்!!


தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்

*இனப்படுகொலை குற்றவாளி இராஜபக்சே கும்பலை தண்டிக்க,
சிங்கள குடியேற்றம் இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட
இன அழிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க,
ஈழத் தமிழின மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட
குறுக்குவழித் தீர்வு ஏதுமில்லை.

*  தமிழகத்தின் வீதிகளில் 80களின்
மக்கள் எழுச்சியை மீண்டும் வெடிக்கச் செய்வோம்!

*அன்று முள்ளிவாய்க்கால் முதலைக் கண்ணீர்
2009 தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்கு!
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து
இன்று ஜெனிவாக் காவடி!

தமிழ் மக்களே!
*ஈழத்தின் துயரத்தை விலைபேசும்
ஓட்டுப் பொறுக்கிகளை நம்பாதீர்!

* இந்தியா, இனப் படுகொலையின் பங்காளி, கூட்டாளி,
ஈழத்தின் பகையாளி ‍என இன்றாவது
ஒப்புக்கொள்ளும் யோக்கியர்களே!
போர்க்குற்றாவளி இராஜபக்சேவை தண்டிக்க
இந்தியாவையே தாஜா செய்வது யாரை ஏமாற்ற?

* உலக பயங்கரவாதி அமெரிக்காவையும் அதன் எடுபிடி
நாடுகளையும் 'சர்வதேச சமூகம்' என்று கொண்டாடுவதும்,
அவர்களிடமே இனப்படுகொலைக்கு நீதி கேட்பதும்
கேலிக்கூத்தல்லவா!

*  பிரபாகரன் கொல்லப்பட்டது போர்க்குற்றமாகாதா?
இதை மறைக்கும் தமிழினப் போராளிகளே,
நீங்கள் காப்பாற்றுவது பிரபாகரனின் பிம்பத்தை அல்ல,
கிரிமினல் இராஜபக்சேவை!

*  ராஜபக்சே மீது ராஜபக்சேவையே விசாரணை நடத்தச் சொல்லும்,
எல்.எல்.ஆர்.சி எனும் ஐ.நா வின் கபட நாடகத்துக்கும்,
இனப்படுகொலையை வழிநடத்திய மன்மோகன் அரசிடமே
ஜெனிவாவின் தீர்மானம் கொண்டுவரக்கோரும்
ஓட்டுப் பொறுக்கிகளின் நாடாளுமன்றக் கூச்சலுக்கும்
என்ன வேறுபாடு?

* காங்கிரசு, பாரதிய ஜனதா, வலது ‍ இடது
போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட
தேசிய கட்சிகள் அனைத்தும்
என்றும் ஈழத்துக்கு எதிரானவர்களே!



மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி



தொடர்புக்கு:
அ. முகுந்தன்,
110, 2வது மாடி,  மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 24
பேச : 94448 34519

February 18, 2013

பாலியல் வல்லுறவும் நீதிமன்றம் தரும் மனஉளைச்சலும்!

- நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்

பாலியல் வன்முறையின் தன்மையை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. எப்பொழுதெல்லாம் ஒரு பெண்ணின் தன்னாட்சி நிலைக்கெதிராக ஒரு ஆண் உறவு கொள்கிறானோ அங்கே அந்தச் சம்பவம் நிகழ்கிறது. அங்கே பெண்ணின சமத்துவ உரிமை, அவளுடைய சுயமதிப்பு தாக்கப்படுகிறது.
கற்புடமை, கன்னித்தூய்மை போன்ற கருத்துப் படிவங்கள் கட்டமைக்கப்படுவதற்கு முன்பே எப்பொழுதெல்லாம் அவள் மேல் ஆண் பாலியல் அதிகாரம் செய்ய முனைந்தானோ அங்கே அந்தக் குற்றம் நடைபெற்றது.

ஆணாதிக்க சமூகத்தில் இந்தக் குற்றத்தை குடும்ப கெüரவம், மானம் என்ற சாயமும், புனிதம், தூய்மை என்ற வர்ணமும் பூசப்பட்டு அந்த வன்முறையின் உண்மைத் தன்மை மறைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நடைபெறும்பொழுது ஒரு கொடுங்குற்றம் நடைபெறுகிறது, இதற்கு அவள் பொறுப்பல்ல, அதற்கும் கெüரவத்திற்கும் இணைப்பும் இல்லை. அவள் எவ்விதத்திலும் களங்கப்படவுமில்லை. இதை முதலில் நாம் புரிந்து கொண்டால் தான் பெண்ணுக்கு நீதி கிடைக்கும், அவள் உரிமை பாதுகாக்கப்படும்.

இந்த உரிமைப் பறிப்பு அவளுடைய மனப்பக்குவத்தின் வளர்ச்சியையோ, எனது உடல் என்ற புலனுணர்வையோ சார்ந்ததில்லை. அவளுடைய சம்மதமின்றி நடக்கிறது. அவள் வாய் திறந்து வேண்டாம் என்று சொல்லாமல் மெüனமாக இருந்தால் அது சம்மதமாகாது. அவள் அச்சத்தால் ஆற்றலிழந்து போயிருக்கலாம், பலவந்தத்தால் அவள் கைகள் செயலற்றுப் போயிருக்கலாம், இந்தச் செயலின் தாக்கத்தை மனதளவில் புரிந்துகொள்ள முடியாத சிறுமியாக இருக்கலாம், மாற்றுத்திறனாளியாக இருக்கலாம், மனவளர்ச்சியடையாதவராக இருக்கலாம். எவ்வாராயினும் அது அப்பெண்ணின் மீது ஏற்பட்ட அதிகாரத்தாக்குதலே.

இப்பொழுது நம் தலைநகரில் நடந்த சம்பவம் இந்த வன்முறையின் அதிஉக்கிரமான வெளிப்பாடு. நம் நாட்டின் எல்லா மூலைகளிலும் ஏழைப்பெண்கள், தலித்பெண்கள், மலைவாழ்பெண்கள், வயதானவர்கள், பெண்குழந்தைகள், சிறுபான்மையினர், வெளிநாட்டவர்கள் என்று பாகுபாடில்லாமல் பெண்களுக்கெதிராக நடக்கும் அநீதி. அந்த ஆண் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்ததினால் நடந்த ஒன்றல்ல, அவன் தெரிந்தே பெண்ணைக் கட்டுப்படுத்தத் தொடுக்கும் வன்செயல்.

இந்த அதிகாரத் தாக்குதலை ஒரு பெண் எவ்வாறு விளக்குவாள்? பண்பாட்டுக் கூச்சத்தில் வாய் மெüனம் பேசும். கலக்கத்திற்குரிய பாலியல் வன்முறையை நினைவுகூர்வது எளிதில்லை. அவளுக்கு ஏற்பட்ட சம்பவத்தைப் புறக்காட்சியாகத் தீட்ட முடியாது; கோர்வையாகக் கதை சொல்வதுபோல யாராலும் அந்த அனுபவத்தை விவரிக்க முடியாது.

ஆனால், அந்தச் சம்பவத்தைப்பற்றி நேர்காணல் உரைபோல அந்தப்பெண் சொல்ல வேண்டும் என்று காவல்துறையும், நீதித்துறையைச் சார்ந்தவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

பாலியல் வன்முறையின் தாக்கம் என்ன, அதன் விளைவுகள் என்ன, அதன் பின்புலம் என்ன, அந்த வழக்குகளை எப்படி அணுக வேண்டுமென்று பயிற்சி ஒன்று நடக்கும்.

முதலில் நீதித்துறை அதிகாரிகளைக் கண்களை மூடிக்கொள்ளச் சொல்லுவோம். அவர்களின் முதல் காதலனுபவத்தை, மனதுக்கினிய மற்றொருவருடன் உறவுகொண்டதை நினைவுக்குக்  கொண்டு வாருங்கள் என்று சொல்லுவோம். ஐந்து நிமிடங்கள் சென்றபின் கண்களைத் திறக்கச் சொல்வோம். பின் ஒவ்வொருவரும் தன் அருகிலிருக்கும் நண்பரிடம் சன்னக்குரலில் அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளச் சொல்வோம்.
அனைவரும் அதிர்ச்சியும் கூச்சமும் நிறைந்த குரலில் அதெப்படி முடியும் என்பார்கள். அப்பொழுது கேட்போம் ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வை அந்தரங்கம் காரணமாக உங்களுக்குத் தெரிந்த நண்பருடன் பகிர்ந்துக்கொள்ளத் தயங்குகிறீர்கள்.

முன்பின் தெரியாத நபர்கள் அடங்கிய கோர்ட் ஹாலில் பாலியல் வன்முறைக்கு ஆளான அந்தப் பெண் வழக்குரைஞர்களுடைய மிரட்டும் குறுக்கு விசாரணைக் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பாள் என்று. உண்மை நிலை அப்பொழுதுதான் அவர்கள் முகங்களில் அதிர்ச்சியாய் உறையும்.
வன்முறை நிகழ்ந்தது ஒருமுறை என்றால், அதை திரும்பத்திரும்ப காவல் நிலையங்களில், நீதிமன்றங்களில் அவள் கூறவேண்டியக் கட்டாயம் அவளை வன்முறைத் தாக்குதலுக்கு ஆளாக்குகிறது. வன்முறைக் குற்றம் அவளுடலை மட்டும் பாதிப்பதில்லை. அவள் உணர்வுகளைப் பாதிக்கிறது. அவள் உளவியல் துன்பங்களுக்கு ஆளாகிறாள்.

உளவதிர்ச்சிக் கோளாறுகளால் அவளது மூளையில் வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. இது எனக்கு நடக்கவில்லை, எனக்கு நடக்கவில்லை என்று தனக்குள்ளே மறுப்பு மாயையை ஏற்படுத்திக்கொள்கிறாள். அழுகிறாள், கதறுகிறாள். கடிகாரம் பின்னோக்கிச் சென்று அந்த நிகழ்விற்கு முன்னிருந்த காலத்திற்கு போய்விட மாட்டோமா என்று பரிதவிக்கிறாள். மேலே கூறியுள்ளது அவள் உண்மை நிலையின் முழுமை பெறாத சித்தரிப்பே.
இதில் குடும்பத்தாருடைய ஆதரவும் எல்லாப் பெண்களுக்கும் கிடைப்பதில்லை. ஏனென்றால் நம் சமூகம் குற்றம் செய்யாத அந்தப் பெண் மீது குற்ற உணர்வையும் அவமானத்தின் சுமையையும் ஏற்றுகிறது.

எத்தனை எத்தனை பெண்கள், தினசரி தாக்கப்படுகிறார்கள். நாமும் தினமும் படிக்கிறோம். தாக்கியவர்கள் தெரிந்தவர்களாக இருக்கலாம், அதிகாரத்திலிருப்பவர்களாக இருக்கலாம், பாதுகாக்க வேண்டியவர்களாக இருக்கலாம். எவ்வளவு வன்முறைக்கொடூரங்கள்? ஏன் இப்பொழுது பெண்களும், ஆண்களும் நம் தலைநகரில் கடுங்குளிரில், லத்தியடியை வாங்கிக்கொண்டு, பெண்கள் மேல் வன்முறை ஒழிய வேண்டும்,

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கடுந்தவம் புரிந்தார்கள்?
இது ஒரு தனி நிகழ்விற்கு எதிரான போராட்டம் இல்லை, பல்லாண்டுகளாக சமூகத்தில் ஆட்சிபுரியும் நியாயப்படுத்த முடியாத கொடூரத்தை எதிர்த்து முதிர்ந்த பல்லாயிர உணர்ச்சிக் குவியல்களின் வெளிப்பாடு. இந்த உணர்ச்சிகளின் பிரதிநிதிகளாக பலர் சென்று நீதியரசர் ஜே.எஸ்.வர்மா குழுவிற்கு முன்னால் தங்களுடைய வாக்குமூலங்களை அளித்தார்கள். அமைதியாக, முறையாக, அழுத்தமாக உண்மைகளை விளக்கினார்கள்.
அந்த சிறப்புக்குழுவும் பல அரிய பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்தப் பரிந்துரைகளில் ஆதார சுருதியென்னவென்றால் பெண்ணின் சமத்துவ உரிமை, தன்னாட்சி நிலை, கண்ணியம் இவைகளை யாரும் பறிக்க முடியாது, ஏன் கணவனே கூட, என்பதுதான்.

நாம் பெண்ணைப் பார்க்கும் கண்ணோட்டமே மாற வேண்டும், அவளை ஒரு இரண்டாந்தர பிரஜையாக நடத்தக் கூடாது என்று பல்வேறு கோணங்களில் அரிய பரிந்துரைகளை முன் வைத்துள்ளது இந்தக் குழு. இவற்றை எவ்வளவு சீக்கிரமாக அரசு செயல்படுத்துகிறது என்று பார்க்க வேண்டும்.

இந்தப் பாலியல் வன்முறைக் குற்றத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், குற்றம் செய்தவன் தலைநிமிர்ந்து நடக்கிறான். தாக்குதலுக்கு ஆளானவளுக்கு வருகிறது சேதமும் அவப்பெயரும்!

சமூகநிலை மாறினால்தான் பெண்கள் குற்றங்கள் நடைபெறும்பொழுது தைரியமாக புகார் செய்ய வருவார்கள். அவளுக்கு நம்பிக்கை ஊட்டுவதான, தைரியம் ஊட்டுவதான சமூகநிலை வரவேண்டும்.

அந்தப் பெண் கேட்பதென்ன? ""என் குறையை, என் கண்ணியம் பாதிக்கப்படாமல் கேளுங்கள். தீர விசாரியுங்கள், கோர்ட்டிலும் என் கண்ணியம் பாதிக்கப்படாமல் வழக்கை நடத்த வேண்டும், எனக்கு நீதி வேண்டும், குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்'' இவ்வளவு தான்.
இது அவளுடைய அடிப்படை உரிமை. இந்த உரிமையை நிலைநாட்டத்தான் அவளே நூறாக, அவளே ஆயிரமாக அங்கே அந்தக் கடுங்குளிரில் மெழுகுவர்த்தியுடன் நின்றாள்.

போராட்டம் இன்னும் முடிந்தபாடில்லை. இப்போதுதான் பெண்மை வெகுண்டெழுந்து தன் உரிமையை நிலைநாட்ட, தர்மயுத்தத்தைத் தொடங்கி இருக்கிறது. சட்டம் பிறப்பிக்கப்படுவது மட்டுமே தீர்வாகிவிடாது. சமூக நிலை மாற வேண்டும். சமூகத்தின் கண்ணோட்டம் மாற வேண்டும். அதுவரை, வீறு கொண்டெழுந்திருக்கும் பெண்ணுரிமைக்கான போராட்டம் தொடரும்!
நன்றி : தினமணி

February 16, 2013

வன்கொடுமை வழக்குகள் நிலவரம்!

இந்தியாவில் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் (2010 வரைக்கும்)

21 ஆண்டுகளில் பதிவு செய்த வழக்குகள் - 1,26.593
நிலுவை வழக்குகள் எண்ணிக்கை - 1,00,98
தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்குகள் - 25573
தண்டிக்கப்பட்ட வழக்குகள் - 8628 (6.8%) மட்டுமே!

இதுவே தமிழ்நாட்டில்

21 ஆண்டுகளில் பதிவு செய்த வழக்குகள் - 3635
வாபஸ் வழக்குகள் - 30
நிலுவை வழக்குகள் எண்ணிக்கை - 2839
தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்குகள் - 766
தண்டிக்கப்பட்ட வழக்குகள் - 189 (5.2%) மட்டுமே!

(ஆதாரம்: மைய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரத்துக்கான அமைச்சகம் வன்கொடுமைச் சட்டம் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை.)

- 'ஆதிக்க சாதி வெறி கும்பலின் அவதூறுகள்' - புதிய ஜனநாயகம் கட்டுரையிலிருந்து...


February 6, 2013

''இந்தியா பணக்கார நாடு இந்தியர்கள் ஏழைகள்"

உலக மக்கள் தொகையில் வெறும் 0.6% உள்ள பணக்காரர்கள் மொத்த செல்வத்தில் 39.3% அனுபவிக்கின்றனர்.

உலக மக்கள் தொகையில் 8.1% உள்ளவர்கள் மொத்த செல்வத்தில் 82.3% ஐ தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்கின்றனர்.

உலக மக்கள் தொகையில் 4.46% உள்ள அமெரிக்கர்கள் மொத்த உற்பத்தி மதிப்பில் 21.56% அனுபவிக்கின்றனர்.

செல்வ வளத்தில் வளர்ந்த 10 நாடுகள் மொத்த உற்பத்தி மதிப்பில் 53.78% பெறுகின்றனர். இந்த நாடுகளின் மக்கள் தொகை 14.33% தான்.

உலக மக்கள் தொகையில் 17.73% உள்ள இந்தியா உலக செல்வத்தில் 2.64% அனுபவிக்கிறது.

அம்பானி மும்பையில் கட்டியுள்ள 27 மாடி பங்களாவின் மதிப்பு 5500 கோடிகளுக்கும் மேல். வீட்டை பராமரிக்க 600 முழு நேர ஊழியர்கள் தேவைப்படுகிறார்களாம்.

ஜெய்ப்பூர் ராயல் பேலஸில் உள்ள ஹோட்டலில் ஒரு சூட்டில் தங்க ஒருநாள் வாடகை சுமார் ரூ. 25 லட்சம்.

இதிலிருந்து தெரிவது 'இந்தியா பணக்கார நாடு. ஆனால் இந்தியர்கள் ஏழைகள்'

- பி.எம்.எஸ்.ராவ், தினமணி, 05/02/13

January 17, 2013

"பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டத்தை எதிர்த்து" -கண்டன ஆர்ப்பாட்டம்!



நாள்: 19/1/2013 - சனிக்கிழமை

நேரம்: மாலை 4.30 மணி அளவில்!

இடம்:பல்லாவரம் பேருந்து நிலையம் (அம்பேத்கர் சிலை அருகில்)

அனைவரும் வருக!

பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை
தொடர்புக்கு : 9841658457

பின்குறிப்பு : சென்ற மாதம் 27/12/2012 அன்று காவல்துறையின் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அனுமதி பெற்று இப்போது நடக்க இருக்கிறது.

December 25, 2012

தில்லி மாணவி மீது கொடூர பாலியல் வன்முறை!


* தனியார்மய - தாராளமய கொள்கை பரப்பும் பாலியல் வக்கிரங்களே
பெண்கள் மீதான தாக்குதல் பெருகுவதற்கு காரணம்!

* பாலியல் வெறியை பரப்பும் சினிமாக்கள்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒழித்துக்கட்டப் போராடுவோம்!

* அரசு திட்டமிட்டே பரப்பும் நுகர்வுவெறி,
போதை சீரழிவுகளை வேரறுக்க அணிதிரள்வோம்!

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

December 15, 2012

மாதவிடாய் - ஆவணப்படம்!

என் 20 வயதில் அலுவலகத்தில் உடன் வேலை செய்த பெண், வயிற்றைப் பிடித்து கதறிய பொழுது, பயந்தே போயிருக்கிறேன்.

சாதாரண நாட்களில் சாந்தமாய் இருப்பவர்கள் இந்த 'மூன்று நாட்களில்,  எரிச்சலும், கோபமாய் கடித்து குதறுபவராக 'வேறு ஒரு நபராய்' சிலரை பார்த்திருக்கிறேன்.

'மாதவிடாய்'  என்பது மனித இனத்தை மறு உற்பத்தி செய்வதற்கான ஒரு சுழற்சி முறை. ஒரு அருமையான விஷயம். குறித்த அறிவியல்பூர்வமான விளக்கம் அறிந்த பிறகு,  'தீட்டு'  கழிப்பதற்காக நடத்தப்படும் சடங்குகளுக்கு செல்வதை நிறுத்தியிருக்கிறேன்.

இந்த சடங்கில் கலந்து கொள்ளும் ஆண்கள்/பெண்கள் பலரும் தங்கள் குலசாமிகளுக்கு ஆகாது என சாப்பிடாமல் செல்வதை குறித்து, சாமிகள்/ஆசாமிகள் குறித்த பல கேள்விகள் மனதில் எழுந்திருக்கிறது.

'மாதவிடாய்' குறித்த ஆவணப்படம் பெரியார் திடலில் நேற்று திரையிட்டார்கள்.  போயிருந்தேன்.

****
இரு மாணவிகளிடம் 'மாதவிடாய்' என்றால் என்ன?' கேள்வி கேட்கப்படுகிறது.  கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் கூச்சத்தோடு சங்கடமாய் நெளிகிறார்கள்.  படம் துவங்குகிறது.

நகரங்களில், கிராமங்களில் மாதவிடாயின் பொழுது உடல்ரீதியான, உளரீதியான, சமூக ரீதியான பாதிப்புகளைப் பற்றி பல வர்க்கப் பெண்களும், பல துறை பெண்களும் தங்கள் அனுபவங்களை பகிர்கிறார்கள்.

மாதவிடாய் என்றால் என்ன? என்பதற்கு அறிவியல்பூர்வமான விளக்கம் படத்தில் தரப்படுகிறது.

இந்து, முஸ்லீம், கிறித்துவ பெண்கள் 'தீட்டு' என தள்ளி வைத்து பார்க்கும் நம்பிக்கைகளை, பழக்கவழக்கங்களை பகிர்கிறார்கள்.

நாப்கினில்  உள்ள வகைகள் என்ன?  அதில் உள்ள வசதிகள் என்ன? என்பதையும் விளக்குகிறார்கள்.

அரசு சமீப காலங்களில் பள்ளிகளில்  நாப்கின் தரும் இயந்திரத்தையும், எரிக்கும் இயந்திரத்தையும் அறிமுகப்படுத்துகிறார்கள்.

'மாதவிடாய்' குறித்த ஒரு தெளிவையும், சிரமப்படும் பெண்களின் மீது அக்கறை கொள்ளுங்கள் என்பதையும் முன்வைக்கிறது படம்.

****

படம் நமக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது.

ஒரு பெண் பருவம் எய்துவிட்டால், கவனமாய் 'பாதுகாக்கும்' சமூகத்தில் கழிப்பறை, தண்ணீர் வசதி இல்லாத பல பள்ளிகளில் இடைநிற்றல்கள் அதிகமாக இருக்கிறது.  படத்தில் கிராமப்புற பள்ளியைச் சேர்ந்த ஒருவர் இந்த தகவலை சொல்கிறார்.

பா.ஜ.க. தமிழிசை பள்ளியில் இயந்திரம் வைத்தற்காக ஜெ.வை மனம் உவந்து பாராட்டுகிறார்.  ஜெ. 91 லிருந்து கடந்த 21 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறார்.  ஒரு பெண்ணாகவும் இருந்து கொண்டு ஏன் இத்தனை தாமதமாய் செய்தார்? இன்னும் ஏன் பல பள்ளிகளில் இந்த வசதியை ஏற்படுத்தி தரவில்லை? ஆட்சியாளர்கள் எப்பொழுதும் ஆட்சியாளர்களாக நடந்துகொள்கிறார்கள்.

தலைமைச் செயலகம் துவங்கி அரசு மருத்துவமனைகள், பொதுக்கழிப்பறைகள் எல்லாம் ஏன் படுகேவலமாக இருக்கிறது?

'சுதந்திரம் பெற்று' 65 ஆண்டுகள் காலமாகி, இந்த நாட்டில் சரிபாதி பெண்கள் மாதந்தோறும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனையை மாநில அரசும், மத்திய அரசும் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன?

சென்னையில் மதுரவாயில் பகுதிகள் உழைக்கும் மக்களை திரட்டி ஒரு பொதுக்கழிப்பறை கட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும், பெண்கள் விடுதலை முன்னணியும் சில ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. குடிமக்களின் மீது இந்த அரசுக்கு அத்தனை அக்கறை!

*****

சமூக எதார்த்தத்தை படமாக முன்வைத்திருக்கிறார். மற்றபடி அரசியல் அம்சங்கள் படத்தின் இடையில் ஒளிந்திருக்கின்றன. பார்க்கும் நாம் தாம் அதை வெளிக்கொண்டுவரவேண்டும். பெண்கள் பிரச்சனை குறித்த ஆவணப்படங்கள், குறும்படங்கள் மிககுறைவு.  இந்த சூழலில் இந்த படம் அவசியமானது.

மாச மாசம் ரத்தப் போக்கு ஏலே லம்படி  ஏலோ,
மாதவிடாய் ஆனதுவே  ஏலே லம்படி  ஏலோ,
தீட்டு தீட்டு என்று சொல்லி ஏலே லம்படி  ஏலோ,
ஒதுக்கி வச்சி ஒடுக்குனாங்க ஏலே லம்படி  ஏலோ,

வயசுக்கு வந்துட்டாலே ஏலே லம்படி  ஏலோ,
வீட்டுக்குள்ளே அடைக்கணுமா ஏலே லம்படி  ஏலோ,
மாச தீட்டு ரத்தம் தானே ஏலே லம்படி  ஏலோ,
கரு வளர உதவும் தானே ஏலே லம்படி  ஏலோ,

மாச மாசம் ரத்தப் போக்கு ஏலே லம்படி  ஏலோ,
மாதவிடாய் ஆனதுவே  ஏலே லம்படி  ஏலோ,

- என படத்தில் சாலைச்செல்வம் பாடும் ஒருபாடல் படம் முழுவதும் வருகிறது. அருமையான பாடல்.  இசையும், ஒளிப்பதிவும், எடிட்டிங் எல்லாம் உறுத்தாமல் படத்திற்கு உதவி செய்திருக்கின்றன. படக்குழுவினருக்கு பாராட்டுகள்.

பார்க்கவேண்டிய, பகிர்ந்துகொள்ளவேண்டிய படம்.

****
'மாதவிடாய்'  - ஆவணப்படம்!

இது ஆண்களுக்கான பெண்களின் படம்!

படம் : 38 நிமிடங்கள்

இயக்கம் : கீதா இளங்கோவன்

விலை ரூ. 100