> குருத்து: பேரழிவின் பனிக் கப்பல்

September 4, 2026

பேரழிவின் பனிக் கப்பல்

 


மூங்கில் இலை மேல் தூங்கும்

இந்தச் சின்னஞ்சிறு பனித்துளியிலிருந்துதான்

பிரளயம் ஒன்று தோன்றியதா?

 

ஒரு பனித்துளியின் வழியேதான்

யாவும் நிகழ்ந்தன.

இமயத்தின் உச்சியில் அந்தத் துளி

ஒரு பனிப் பூதமாகி வீற்றிருந்தது.

 

சூரியனின் தகிக்கும் கைகள்

மலையினைப் பற்றியிருந்த

பூதத்தின் கைகளை

மெல்ல விடுவித்தது.

 

பனிப் பூதம்

தன் பிரமாண்டமான உடலோடு

உச்சியிலிருந்து சரிந்து

ல்ஹெந்தேநதியின் குறுக்கே

ஒரு பெரும் அணையாக விழுந்து

தூங்கத் தொடங்கியது.

 

பனிப் பூதத்தின் துயிலைக் கலைக்க

தண்ணீர் பூதம் போர் முரசுடன்

தன் படைகளைத் திரட்டியது.

பிறகு எல்லாம் நிகழ்ந்தன.

 

சுனாமி நிகழ்ந்த அதிகாலையில்

தண்ணீர் பூதம் எவ்வாறு

கடலிலிருந்து எழுந்து வந்ததோ

அவ்வாறேதிரிசூலிநதியிலிருந்தும்

பத்தடி உயரத்தில் எழுந்தது.

நதி எழுந்து நிற்கும் காட்சியை

முதன் முதலாகக் கண்டார்கள்.

 

தண்ணீரின் படைகள்

நிலத்திலிருந்த எல்லாவற்றையும்

எடுத்துக்கொண்டன.

கட்டிடங்களை ஒரு 'கேக்' துண்டினை

உண்பது போல அவை உண்டன.

அந்தப் பனித்துளிக்குள்

காணாமல் போனவர்கள்

நதிகளின் ஆழத்தில்

தங்களை ஒரு மீனாக மாற்றிக்கொண்டார்கள்.

 

உடலாக மீட்கப்பட்டவர்கள்

கூட்டுப் புதைகுழிகளில்

கூட்டம் கூட்டமாக

வாழத் தொடங்கினார்கள்.

 

உயிருடன் திரும்பியவர்கள்

ஒருபோதும் மீள முடியாத

கொடுங்கனவின் கதையை

வாழ்நாளெல்லாம்

சொல்லத் தொடங்கினார்கள்.

 

ஒரு புனித யாத்திரைப் பயணம்

ஒரு நாளும் முடியாத

ஒரு பயணமாக

இருக்கப்போகிறது என

எந்தச் சகுனங்களும்

அவர்களுக்குக் காட்டவில்லை.

 

காய்ந்த சருகுகள் போல

மனிதர்கள் நீரில் மிதந்து சென்றார்கள்;

பணம் காகிதமாகி மிதந்தது.

வீடுகளுக்குள் சிக்கிக்கொண்டவர்கள்

செல்போன்களை இறுகப் பற்றியபடி

தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றார்கள்.

 

பாஸ்போர்ட் இல்லை,

விசா இல்லை,

எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் இல்லை;

நாட்டின் எல்லைக்கோடுகளைத்

தகர்த்துக்கொண்டு

பேரழிவின் பனிக்கப்பலில்

மனிதர்கள் விரைகிறார்கள்

 

காணாமல் போனவர்களின்

உறவினர்கள், நண்பர்கள் காத்திருக்கிறார்கள்.

நிலத்திலிருந்து காணாமல் போனவர்கள்

என்றாவது திரும்பி வர

ஏதேனும் ஒரு பாதை இருக்கிறது;

 

நீருக்கடியில் மறைந்துகொண்டவர்களைத்

தேடிப்போக என்ன பாதை இருக்கிறது?

பனிமலைகள் உருகி

நம் மேல் உடைந்து விழுகின்றன;

 

ஆறாத் துயரங்கள்.

மனிதர்களின் இதயங்கள்

அதைவிடவும் கனத்து உடைகின்றன.

கரையேறி வந்து மனிதர்களை உண்ட

நதிநீர் மட்டம்

இப்போதும்

உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது

ஆறாத் துயரத்தின் கண்ணீரால்.

 

கடைசி நம்பிக்கை ஒளியாய்

நான்கு நாட்களுக்குப்பின்

இடிபாடுகளிலிருந்து

ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்படுகிறது

நீரிலிருந்து தொடங்கிய அனைத்தும்

நீருக்கே திரும்புகின்றன.

 

1..9.2026

மாலை 5.00

மனுஷ்ய புத்திரன்

0 பின்னூட்டங்கள்: