> குருத்து

May 13, 2019

A Perfect World (1993)


இரண்டு பேர் சிறையிலிருந்து தப்பிக்கிறார்கள். போகிற வழியில் நடந்த களேபரத்தில் ஒரு வீட்டிலிருந்து ஏழு வயது பையனை பயணக்கைதியாக தூக்கி சென்றுவிடுகிறார்கள். ஊர் முழுவதும் பரபரப்பாகிவிடுகிறது. தனிப்படை அமைத்து மும்முரமாய் தேடுகிறார்கள்.

இதில் இரண்டாம் ஆள் அந்த பையனிடம் தவறாக நடக்க முயல, முதலாம் ஆள் சுட்டுக் கொன்றுவிடுகிறார். அந்த பையனுக்கு அப்பா இல்லை. வறுமையில் வாடுகிற பையன். ஊர் சுற்றிக்கொண்டு, தேவையானவற்றை வாங்கித்தந்து, நட்பாய் பழகும் முதல் ஆளுடன் ஒட்டிக்கொள்கிறான்.
அந்த பையனை காப்பாற்றினார்களா என்பது முழு நீளக்கதை!

****

கதையின் நாயகன் கெவின் காஸ்ட்னர். இயக்குநரோ க்ளிண்ட் ஈஸ்ட்வுட். இருவருக்குமே முக்கியமான படமிது.

நாயகனின் கதை உருக்கமானது. சிறு வயதில் அம்மாவை தொந்தரவு செய்த ஒருவனை தான் கொலை செய்திருக்கிறார். சில வருடங்களுக்கு பிறகு, செய்த கொடூரம் தாங்க முடியாமல் பிறகு அப்பாவையும் கொலை செய்திருக்கிறார்.

படத்தின் சாரம் இது தான். உலகம் மோசமாக இயங்குகிறது. ஆனால், அதை திருத்தாமல், அதனால் பாதிக்கப்படுகிறவர்களை தண்டிப்பது தான் A Perfect World. இந்த முரணைத்தான் உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

பார்க்கவேண்டிய படம். தமிழிலும் கிடைக்கிறது.

அவர்கள் வீட்டுக்கு கதவுகளில்லை!


நரிக்குறவர் குடும்பம்!
கணவனும் மகனும் பாண்டிச்சேரிக்கு
ஊசிமணி பாசிமணி
விற்க கிளம்பிவிட்டார்கள்!


சென்னை ஆவடியில்
தாயும் மகளும் தனியாக இருந்தார்கள்!

நடுநிசியில்
உள்ளே புகுந்த இளைஞர்கள்
தூங்கிக் கொண்டிருந்த
அவர்களின் தலையில்
அம்மி கல்லை போட்டுக்
கொன்று விட்டார்கள்.
பச்சிளம் குழந்தையையும்
கொன்றுவிட்டார்கள்.
எல்லாம் பாலியல் வன்முறைக்காகத்தான்!

அவர்கள் வீட்டில்
கதவுகளில்லை!
தன் வீட்டில் உடமை இல்லை! - பிறகு
கதவுகள் எதற்கு என நினைத்தார்களோ?
மனித சமூகத்தோடு
வாழ்கிறோம்!
மனிதர்கள் இத்தனை இழிகுணத்தோடு
வாழ மாட்டார்கள் என அப்பாவியாய் நம்பினார்களா?

இரண்டு உறவுகள்!
மிகப் பெரிய இழப்புகள்!
நாளை அவர்கள் வீட்டுக்கு கதவுகள் பொருத்தப்படலாம்!!
அந்த கதவுகள்
சமூகத்தின் மீதான
நம்பிக்கை இல்லா தீர்மானம் அல்லவா!

சகோதரியே!
நாங்கள் வெட்கப்படுகிறோம்!
எங்களை ஒருபோதும் மன்னித்துவிடாதே!

Pretham 2 (2018) மலையாளம்


ஒரு லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட முகநூல் சினிமா குழு ஒன்று.

நேரடி அறிமுகம் இல்லாமல் அந்த முகநூல் குழு மூலமாக அறிமுகமான மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் ஒரு குறும்படம் எடுக்கலாம் என திட்டமிட்டு ஒரு வீட்டில் ஒன்றுகூடுகிறார்கள். அந்த வீட்டில் சின்ன சின்ன அமானுஷ்ய விஷயங்கள் நடைபெறுகின்றன. கலவரமடைகிறார்கள். அங்கு இருந்து கிளம்பும் முடியாது. விடாது துரத்தும் என்கிறார்கள்.
அங்கு வந்து தங்கி இருக்கும் மென்டலிஸ்ட் அதற்கான காரணங்களை ஆய்வு செய்கிறார்.

அந்த சினிமா முகநூல் குழுவில் உள்ள ஒரு நபரால் தவறாக வழிநடத்தப்பட்டதால் குழுவிலிருந்த ஒரு மாணவரின் அப்பா சிறைக்கு செல்ல நேரிடுகிறது. அந்த மன உளைச்சலில் மாணவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

யார் அந்த நபர் என தேடி அலைகிறது அந்த ஆத்மா. (கொடூரமாக நடந்து கொண்டால் பேய். சாப்ட்டாக நடந்துகொண்டால் ஆத்மா! சரி தானே! 🙂 )
அந்த குறும்படம் வாயிலாகவே அந்த நபருக்கு வலை விரிக்கிறார்கள். அதில் சம்பந்தப்பட்டவர் சிக்கினாரா என்பது முழு நீளக்கதை!

****

இது வழக்கமான பேய் படம் இல்லை. கொஞ்சம் அமானுஷ்யம் கொஞ்சம் புத்திசாலித்தனம் என படம் நகர்கிறது. முதல் படம் இதே சாயலில் எடுத்து வெற்றி பெற்றதால் இரண்டாவது பாகத்தையும் தைரியமாய் அதே ஸ்டைலில் எடுத்திருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் ஏற்படும் சிக்கல்கள் தினமும் செய்தி தாள்களில் பார்க்கமுடிகிறது. நான்கு நாட்களுக்கு முன்பு கூட ஒரு அப்பா, நாள் முழுவதும் தன் பெண் செல்போனிலேயே இருந்ததால் பெண்ணை எரித்து கொன்றுவிட்டார். திக்கென்று இருந்தது. இனி இப்படி கதைகள் நிறைய வரும்.

நாம வேற வெள்ளந்தியான ஆள் என்பதால் முகநூலில் சாட்டை (Chat) ஆப் செய்தே வைத்திருக்கிறேன். 🙂

படத்தில் mentalist ஆக வரும் ஜெயசூர்யா தான் மொத்த படத்தையும் தாங்கிப் பிடித்துள்ளார். மென்டலிஸ்ட் என்றால் டுபாக்கூர் என படத்திலேயே கலாய்க்கிறார்கள். தேடிப்படித்து பார்த்தால் கொஞ்சம் மேஜிக், மைண்ட் ரீடிங் என கலவையாக எழுதியிருக்கிறார்கள். டுபாக்கூர் தான் போல!
சென்னை ஈகாவில் ஆங்கில சப்டைட்டிலுடன் வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.