> குருத்து

April 7, 2024

Damsel (2024)


ஒரு சின்ன தேசத்தின் இளவரசியாக இருக்கிறாள் நாயகி. அது ஒரு பெரும் பஞ்சகாலம். வருகிற பனிக்காலத்தை தனது மக்கள் கடந்துவிடுவார்களா என பெருங்கவலையுடன் இருக்கிறார் அந்த சிற்றரசர்.


அந்த இக்கட்டான சமயத்தில் பெரும் ராச்சியத்தின் இளவரசனுக்கு நாயகியைப் பெண் கேட்டு தூது வருகிறார்கள். அதற்காக கொடுக்கும் திருமண பரிசு அவர்களுடைய நெருக்கடியை தீர்க்கும் என நாயகியின் அப்பா நினைக்கிறார். சந்தோசமாய் ஒத்துக்கொள்கிறார்கள்.

சிற்றரசன், நாயகி, நாயகியின் தங்கை, நாயகியின் சித்தி என அனைவரும் திருமணத்துக்கு கிளம்பி போகிறார்கள். ராணி சிற்றரசரை தனியே அழைத்துப் போய் ஏதோ ரகசியம் சொல்கிறாள். முகம் வாடி வெளியே வருகிறார்.

அரண்மனையில் எளிமையாக திருமணம் நடக்கிறது. அன்றைக்கே ஊருக்கு வெளியே ஒரு குன்றில் திருமண சடங்கு இருப்பதாக மணமக்களை அழைத்துப் போகிறார்கள். அங்கு ஒரு இருக்கும் பெரிய குகைக்குள் நாயகியை தூக்கிப்போட்டு திரும்பி பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்துவிடுகிறார்கள். அடப்பாவிகளா!

உள்ளே ஒரு பெரிய கொடூர டிராகன் இருக்கிறது. அந்த பெரும் ராச்சியத்தின் மன்னனுக்கும் டிராகனுக்கும் ஏற்பட்ட பழைய பஞ்சாயத்தில் ஏற்பட்ட டீலில் இப்படி தொடர்ந்து செய்கிறார்கள்.

நாயகி டிராகனின் தாக்குதலில் இருந்து தப்பித்தாளா? என்பதை சுவாரசியமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
****


என் பொண்ணுப் பார்த்துவிட்டு, நீங்களும் பாருங்கப்பா! என பரிந்துரைத்தார். அதற்காகப் பார்த்தேன்.

ஒரு சர்வைவல் கதை தான். நாட்டுப்புற கதைகளில் ஒன்று போல தோற்றம் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் சுவாரசியப்படுத்தியிருக்கலாம்.

Stranger things ல் பதின் பருவத்து நாயகியாக வரும் மில்லி பேபி ப்ரெளன் தான் இதில் நாயகியாக வளர்ந்திருக்கிறார். குகைக்குள் வரும் டிராகனை நன்றாக வடிமைத்திருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லோரும் உப கதாப்பாத்திரங்கள் தான்.

நெட் பிளிக்சில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். இங்கிலீஷில் இந்தப் படத்தைப் பார்த்த என்னுடைய பெண், மன்னர் காலத்து படம் என்பதால், ”சிற்றன்னையே!” என தமிழில் அழைத்ததும், கொஞ்சம் பதட்டமாகி இங்கிலீஷிலேயே பாருங்கப்பா! என பரிந்துரைத்தார்.

குழந்தைகளுக்கு பிடிக்கும். வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

Falimy (2023)


குடும்பம் கலைந்து கிடந்தால் “Falimy” தான்!

நாயகன் ஒரு டப்பிங் ஸ்டுடியோவில் பணிபுரிகிறார். அப்பா ஒரு பழைய பிரிண்டிங் பிரஸை சும்மா வைத்துக்கொண்டு, தினமும் தண்ணியடிக்கிறார். அம்மா இன்னொரு பிரஸ்ஸில் சம்பளத்துக்கு வேலை செய்கிறார். தம்பி வெளிநாட்டில் படிக்க ஆசைப்படுகிறார். தாத்தா காசிக்கு செல்லவேண்டும் என்பது அவருடைய பெரிய ஆசையாய் இருக்கிறது. இவர்கள் எல்லோரும் ”குடும்பமாய்” வாழ்ந்தாலும், அவர்களுக்கிடையே உள்ள முரணால், “தனித்தனியே” வாழ்கிறார்கள்.

நாயகனுக்கு பெண் பார்த்து, அதில் ஏற்படுகிற தாமதத்தால், கடுப்பாக இருக்கிறார். தாத்தாவின் ஆசையையாவது நிறைவேற்றலாம் என காசிக்கு கிளம்புகிறார்கள். ஒற்றுமையான குடும்பமே பயணத்தில் அத்தனை சிரமங்களை எதிர்கொள்ளும். இந்த ”குடும்பம்” பல சிரமங்களை எதிர்கொள்கிறது.

காசிக்கு போன முதல் நாளே தாத்தா காணாமல் போகிறார். தேடுகிறார்கள். தேடி அலைகிறார்கள். அந்த ”குடும்பம்” ஒரு குடும்பமாக மாறினார்களா என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

*****


“American Beauty” என ஒரு அருமையான அமெரிக்கப் படம். ஆஸ்கார்களை வென்றபடம். அமெரிக்க குடும்பங்கள் எத்தனை அக சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது என்பதை இரண்டு குடும்பத்தை வைத்து, நமக்கு புரிய வைத்திருப்பார்கள்.

அது எங்கோ அமெரிக்காவில், நம்ம ஊரில் அப்படி இல்லை என நினைத்துக்கொண்டிருந்தால், அப்படியெல்லாம் இல்லை. நமது குடும்பங்கள் கூட அப்படித்தான் இருக்கின்றன என்பதை புரிய வைக்கும் படம் Falimy.

மாறிவரும் சமூக நிலைமைகள் பெரும்பாலான குடும்பத்துக்குள் ஏகப்பட்ட குழப்பங்களையும் புரிதலின்மையையும் உருவாக்கிவருகிறது. ”குடும்பம்” குடும்பமாய் வாழ்வதாக தெரிந்தாலும், குடும்பத்தில் தனித்தனியான நபர்களாக வாழ்கிறார்கள். பேசினால் சண்டை. பேசாமலேயே கூட பல நாட்கள் நகர்கின்றன. ஒவ்வொரு குடும்பத்தையும் கொஞ்சம் நிதானமாக கவனித்தால், இந்த உண்மை பளிச்சென புரிந்துவிடும்.

ஏன் இப்படி நிகழ்கின்றன? இதை அந்தந்த குடும்பத்து பிரச்சனையாக பார்ப்பதா? சமூகத்தில் இப்படி சிக்கல்கள் இருக்கின்றன. அது குடும்பத்தை பாதிக்கிறது என்பதாக புரிந்துகொள்வதா?

எப்படி இதை சரி செய்வது? என்பதை கொஞ்சம் யோசித்து சொன்னால் நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

மாத்திரைக்கு மேல் இனிப்பு தடவி தருவது போல, நகைச்சுவை கலந்து கலாட்டாவாக படத்தைத் தந்திருக்கிறார்கள். அப்படி தந்திருப்பதால், நம்மால் “ரசித்துக்கொண்டே” இறுதிவரை பார்க்கமுடிகிறது.

ஜய ஜய ஜய ஹே படத்தில் அடிவாங்கிய பசில் ஜோசப் நாயகனாக, “ குடியை இன்றோடு விட்டுவிட வேண்டும் என நினைப்பேன். ஆனால் முடியாது” என தன் மகனிடம் புலம்பும் அப்பாவாக ஜெகதீஷ், அதே ஜெய ஜெய படத்தில் வரும் நீதிபதியான மஞ்சு பிள்ளை இதில் அம்மாவாக வருகிறார். அந்த தாத்தா உட்பட எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நிதிஷ் சகதேவ் சிறப்பாக இயக்கியுள்ளார்.

டிஷ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. தமிழிலும் டப் செய்திருக்கிறார்கள். அவசியம் பாருங்கள்.

March 22, 2024

Attam (2023) மலையாளம்


கேரளாவைச் சார்ந்த ஒரு நாடகக் குழு. ஒரு மேடை நாடகத்தை நிகழ்த்துகிறார்கள். ஜெர்மனியிலிருந்து வந்த ஒரு தம்பதியினர் அந்த குழுவை பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு ஒரு விருந்து தர விரும்புகிறார்கள்.


ஒரு ரிசார்ட்டில் கூடுகிறார்கள். பெரும்பாலோர் தண்ணியடிக்க, விருந்து முடிகிறது. இரவு 2.30 மணியளவில் குழுவில் உள்ள ஒரு பெண் அறையின் சன்னலை திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்த பொழுது, குழுவில் உள்ள ஒருவர் பாலியல் சீண்டல் செய்துவிடுகிறார்.

இந்தப் பிரச்சனையை குழுவில் உள்ள தன் ’காதலனிடம்’ சில நாள்கள் கழித்து தெரிவிக்கிறார். குழுவில் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு சினிமா நடிகர் இருக்கிறார். அவர் போட்டிருந்த சென்ட், உருவத்தைக் கொண்டு அவராகத் தான் இருக்கும் என சந்தேகிக்கிறார். காதலன் குழுவின் ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவிக்கிறார்.

இந்தப் பிரச்சனையை குழுவிலேயே பேசி தீர்த்துவிடுவது நல்லது. வெளியே போலீசு, வழக்கு என போனால், குழுவின் பெயர் கெட்டுப்போய்விடும் என அஞ்சுகிறார்கள்.

குழு கூடுகிறது. அந்த நடிகரால் கலந்துகொள்ள இயலவில்லை. அவரைத் தவிர மற்ற குழு ஆட்கள் விவாதிக்கிறார்கள். பிறகு சம்பந்தப்பட்ட பெண்ணையும் அழைக்கிறார்கள்.

ஒரு வீட்டில் கூடி விவாதிக்கிறார்கள். விவாதிக்கிறார்கள் விவாதித்துக்கொண்டே இருக்கிறார்கள். இறுதியில் என்ன நடந்தது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
***


படம் எடுத்த விதத்தில் 1950களில் வெளிவந்த “12 Angry Men” படத்தை நினைவுப்படுத்துகிறது. ஒரு வழக்கு குறித்து, 12 ஜூரிகள் விவாதித்து ஒத்த கருத்துக்கு வரவேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துவிடும். அவர்கள் விவாதித்து ஒத்த முடிவுக்கு வருவது தான் முழுப்படமும். அருமையான படம்.

ஒரு முக்கியப் பிரச்சனை. கூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். காதலனுக்கு இருக்கும் ஒரு மறைமுக அஜண்டாவில் ஒரு முன்முடிவோடு துவங்கும் விவாதம், பிறகு ஒரு திருப்புமுனைக்கு பிறகு அவர்களின் மனநிலை எப்படி சாய்கிறது? எந்த திசையில் விவாதம் செல்கிறது? பெண்களைப் பற்றிய அவர்களுடைய பார்வை? எந்த முடிவுக்கு வருகிறார்கள் என்பதில் இருந்து நாம் நிறைய புரிந்துகொள்ள முடிகிறது.

படத்தின் இறுதியில் வர்க்க மனநிலை குறித்தும் விவாதிக்கப்படுகிறது. தங்களுக்கு வரும் பணபலன்கள், பிற பலன்களுக்கு ஏற்ப கருத்துகளை வளைப்பது, எளிய மக்கள் பெரும்பாலும் அப்படி செய்வதில்லை. நடுத்தர வர்க்கமும், மேல்தட்டு வர்க்கம் மனநிலை தான் பெரும்பாலும் ஊசலாட்டத்துடன் இருப்பதை நான் என் அனுபவத்திலேயே கவனித்திருக்கிறேன். சமூகம் குறித்த அறிவியலும் அதைத்தான் சொல்கின்றன.

ஒரு பெண் தனக்கு நடந்த அநீதிக்கு நீதி கேட்கும் பொழுது, அவளுடைய உடை, பழக்கவழக்கங்கள் என சிலர் கேள்விக்குள்ளாக்குவது அபத்தம். அப்பொழுதே சிலர் கண்டிக்கிறார்கள். படத்தின் கேரள பின்னணி என்பது இன்னும் சுவாரசியம். இப்படி ஒரு படம் தமிழில் வந்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பார்க்கிறேன்.

திரைப்பட நடிகர்கள், நிஜ நாடக நடிகர்கள் என கலவையோடு படத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். எல்லோருமே கொடுத்தப் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனந்த் ஏகர்ஷி இயக்கியிருக்கிறார்.

இது வழக்கமான படம் இல்லை. இந்த படம் திரைப்பட விழாக்களில் பாராட்டு பெற்று, இப்பொழுது அமேசான் பிரைம் ஓடிடியில் வெளிவந்துள்ளது.

வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.