> குருத்து

January 16, 2025

”ஜி.எஸ்.டி. (GST) குறித்து அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்!” - என்னுடைய உரை


”ஜி.எஸ்.டி. (GST) குறித்து அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்!” 

தொகுப்பாசிரியர் - செ. செந்தமிழ்ச்செல்வன்

புத்தக வெளியீட்டு விழா!

 

கடந்த சனிக்கிழமையன்று (11/01/2025) மாலையில் புத்தக அறிமுக விழா சென்னை இந்துஸ்தான் சேம்பரில் திரளான மக்களுடன் நிகழ்வு நடந்தேறியது.

 

15 நிமிட என்னுடைய உரையின் சுருக்கம்…!

 


“200 பக்கங்களில் பிழைத்திருத்தம் செய்தேன் என்பதற்காக கோவை பெருமாள் சாரோடு என்னையும் விமர்சன உரை என்ற பெயரில் அழைப்பிதழில் இணைத்திருக்கிறார்கள்.  உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்த வந்திருக்கிறேன் என சொல்லலாம்.

 


ஒரு புத்தகம் உருவாக்குவத்தில் பல படி நிலைகள் இருக்கின்றன. ஜி.எஸ்.டி சட்ட அறிவு, ஆங்கில அறிவு, தமிழ் அறிவு, பல ஆண்டுகளின் நடைமுறை அனுபவம், புத்தகத்தை கொண்டு வருவதற்கான பொருளாதாரம்,  வளர்ந்து வரும் ஆலோசகர்கள் மீதான அக்கறை, வணிகர்களுக்கும் சட்டம் புரிய வேண்டும் என்ற அடிப்படையில் தான் எளிமையான கேள்வி பதில் வடிவத்தில் தந்திருக்கிறார்.  இன்னும் முக்கியமானது இன்றைய தேதி வரைக்கும் அப்டேட் செய்திருக்கிறார். பதிப்பகத்தார் தட்டச்சு செய்து தரும் பிரதிகளை பல பகல் இரவுகள் தனது துணைவியாரின் உதவியுடன் பிழைத்திருத்தங்கள் பார்த்திருக்கிறார்.

 


இத்தனை உழைப்புக்கு பிறகு புத்தகங்களை விற்கும் சிரமத்தையும் அவருக்கு தந்துவிடக்கூடாது. நமது உறுப்பினர்களும், சக வரி ஆலோசகர்களும் முயற்சிகள் செய்தால், எளிதாய் உரியவர்களுக்கு கொண்டு சேர்த்துவிடலாம்

 

இதெல்லாம் மத்திய, மாநில அரசுகள்  செந்தமிழ்ச்செல்வன் போன்ற மூத்த வரி ஆலோசகர்களிடம்  சில லட்சங்களை கொடுத்து இந்த வேலையை செய்து வணிகர்களிடம் கொண்டு சேர்திருக்கவேண்டும்.  அரசுகள் செய்யவேண்டியதை தனிநபராக தனது சக வரி ஆலோசகர்களின் துணையுடன் கொண்டு வருகிறார் என்பது தான் முக்கியமானது.” என பேசினேன்.

 


நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.  


நன்றி

 

புத்தகங்கள் தேவைப்படுவர்கள் : தொடர்புகொள்ளுங்கள் 9551291721

 

December 9, 2024

வருங்கால வைப்பு நிதி (EPF) : ஓய்வு நிதியில் கவனம் மிக அவசியம்


வருங்கால வைப்பு நிதி திட்டம்: நிறுவனமும் தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் - அத்தியாயம் 11

 

வருங்கால வைப்பு நிதி (EPF) :  ஓய்வு நிதியில் கவனம் மிக அவசியம்

 







வருங்கால வைப்பு நிதியில் ஒரு பணியாளர் ஒரே நிறுவனத்திலோ, அல்லது சில நிறுவனங்களிலோ தொடர்ச்சியாக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்தால் (குறிப்பாக 9.5 ஆண்டுகளுக்கும் மேலாக) தான் ஓய்வு நிதி (Pension) பெறுவதற்கான தகுதியை பெற முடியும்.

 

சமீபத்தில் இரண்டு அனுபவம்

 

ஒரு பணியாளர் ஒரு நிறுவனத்தில் ஒருவர் 1996 ஆண்டிலிருந்து 2006 வரை பத்து ஆண்டுகள் வேலை செய்திருக்கிறார்.  அந்த காலத்தில் அவருக்கு பி.எப். பிடிக்கப்பட்டிருக்கிறது. வேலை செய்த காலத்தில் பி.எப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, பி.எப். ஓய்வுநிதிக்கான நிதியை பெற்றுக்கொள்ளாமல், பாதுகாப்பாக ஒரு சான்றிதழை (Scheme Certificate) பெற்றுக்கொண்டுவிட்டார்.  அதற்கு பிறகு 2010 துவங்கி 2013 வரை மூன்று ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் வேலை  செய்திருக்கிறார்.  அங்கும் பி.எப். தொகை அவருக்காக செலுத்தப்பட்டுள்ளது.

 

பிறகு 58 வயதை கடந்துவிட்டார்.  கடைசியாய் வேலைப் பார்த்த மூன்று ஆண்டுகளுக்கான பி.எப், பி.எப் ஓய்வு நிதி என இரண்டுக்கும் விண்ணப்பம் செய்து பணத்தைப் பெற்றுக்கொண்டுவிட்டார்.   தான் ஏற்கனவே பத்து ஆண்டுகளுக்கு ஓய்வு நிதிக்கான சான்றிதழ் வாங்கி வைத்திருந்த விசயத்தை சுத்தமாக மறந்துவிட்டார். இப்பொழுது ஏதோ ஒன்றை தேடும் பொழுது,   அந்த பி.எப். சான்றிதழ் கிடைத்ததை என்னிடம் கொண்டு வந்தார்கள்.

 

அவர் அந்த சான்றிதழ்படியே பத்து ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்த அடிப்படையில்  அவர் ஓய்வு நிதிக்கு விண்ணப்பிக்கமுடியும்.  ஆனால், ஏற்கனவே விண்ணபித்து பெற்ற மூன்று ஆண்டு காலத்தையும் இணைத்து விண்ணப்பித்து இருந்தால், அவருக்கு பணிக்காலமும் கூடியிருக்கும். ஓய்வுநிதியும் அதிகரித்து கிடைத்திருக்கும்.

 

பி.எப்  ஓய்வூதியத்தை. எப்படி கணக்கிடுகிறது? என்பதை புரிந்துகொண்டால் நமக்கு நன்றாக புரியும்.

 

தொழிலாளர்கள் ஓய்வூதியத்திற்கான கணக்கு

Formula = Pensionable Salary * Employee Service

                                                            70

ஒரு தொழிலாளி அவருடைய வாழ்நாளில் எத்தனை ஆண்டுகளுக்கு பி.எப். பிடித்தம் செய்து பி.எப் கணக்கில் செலுத்தினார்கள்  என்பது தான் அவருடைய ஓவ்யூதிய பணிக்காலம் (Pensionable Salary) ஆகும்.

 

Pensionable Salary என்பது  ஒரு தொழிலாளி அவருடைய  சம்பளத்தில் அடிப்படைச் சம்பளம் + பஞ்சப்படியைக் கொண்டு கணக்கிட்டு, அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு ஐந்து ஆண்டுகள் அவருடைய கணக்கில் எவ்வளவு செலுத்தினார்கள் என்பதை கணக்கிட்டு,  60 என்பதால் பெருக்கி, 60ஆல் வகுத்தால் கிடைத்துவிடும்.

 

இது தவிர ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல ஓய்வூதியம் பெற ஒரு தொழிலாளிக்கு  குறைந்தப்பட்சம் 10 ஆண்டுகள் பி.எப். பிடித்தம் செய்து செலுத்தியிருக்கவேண்டும்.  அதே போல அதிகப்பட்சம் 35 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்தால் கூட 35 ஆண்டுகள் தான் கணக்கிடப்படும். இதில் குறிப்பாக 20 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்தால் கூடுதலாக (Weightage Bonus) இரண்டு ஆண்டுகள் அதிகம் கணக்கிட்டு தருகிறார்கள்.

 

உதாரணத்திற்கு :

 

ஒரு தொழிலாளியின்  வேலை செய்த காலம் =  15 ஆண்டுகள்.

ஓய்வூதிய சம்பளம் என்பது  =  15000 * 60 =  15000

                                                                60

இதை வைத்துக்கணக்கிட்டால்

ஓய்வூதியம் : 15 * 15000  =  ரூ. 3214

                             70

 

மேலே குறிப்பிட்ட தொழிலாளி கடைசியாய் வேலைப் பார்த்த இடத்தில், பிடித்ததை பி.எப் நிதியை விட கடைசியாய்  வேலை செய்த காலத்தில் பி.எப் ஓய்வு ஊதிய நிதி அதிகமாக பிடித்திருப்பார்கள்.  இரண்டையும் இணைத்து வாங்கியிருந்தால்,  அவருக்கு பணிக்காலமும் அதிகமாகியிருக்கும்.   ஓய்வு நிதியை இப்பொழுது வாங்குவதை விட அதிகமாக கிடைத்திருக்கும்.  இப்பொழுது அவருக்கு குறைவாகவே ஓய்வூதியம் கிடைக்கும்.

 

இரண்டாவது அனுபவம்

 

நவம்பர் மாத ”தொழில் உலகம்”   இதழைப் படித்த கட்டுரையைப் படித்துவிட்டு, ஒரு தொழிலாளி திருவாரூரில் இருந்து அழைத்தார். மேலே சொன்னப் பிரச்சனை தான். ஆனால் இவர் எதிர்கொண்ட சிக்கல் கொஞ்சம் வித்தியாசமானது.  தொழிலாளி இப்பொழுது 58 வயதை கடந்துவிட்டார்.

 

பி.எப். திட்டத்தில் இருந்த முதல் நிறுவனத்தில் 8 வருடங்களும், இரண்டாவது நிறுவனத்தில் இரண்டாவது வருடங்களும் வேலை செய்திருக்கிறார். கடைசியாய் வேலை செய்த  இரண்டு வருடம் வேலை செய்ததற்கு விண்ணப்பித்து ஓய்வு ஊதிய நிதியை வாங்கிக்கொண்டுவிட்டார்.

 

இரண்டு வருடங்களுக்கான நிதியை பெற்றுவிட்டதால், இப்பொழுது அவருக்கான பணிக்காலம் என்பது 8 ஆண்டுகள் தான் மீதம் இருக்கின்றன. வயதும் 58ஐ கடந்துவிட்டார்.  ஆகையால் அவருக்கு ஓய்வுநிதி கிடைக்காது.  தான் வாங்கிய அந்த இரண்டு ஆண்டு பணத்தை திரும்ப செலுத்திவிடுகிறேன். எனக்கு ஓய்வு நிதி கிடைக்குமா என கேட்டார். அதற்கு பி.எப்.  விதிகள் அனுமதிப்பதில்லை.  ஆகையால் வாய்ப்பில்லை என தெரிவித்துவிட்டேன்.

 

இந்தியாவில் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் பல லட்சம் தொழிலாளர்கள் இருந்தாலும், பலருக்கும்  இந்தத் திட்டத்தின் அடிப்படை அம்சங்கள் கூட தெரியாமல் இருப்பது பல இழப்புகளை உண்டாக்குகிறது. ஓய்வு நிதி என்பது ஒருவருக்கு மிக முக்கியமானது.  பல துறைகளிலும்  பலருக்கும் ஓய்வுநிதி இல்லாத காலத்தில் விவரம் தெரியாத அறியாமையால், ஓய்வு நிதியை இழப்பது என்பது பெரியது.

 

ஆகையால் தொழிலாளர்கள் பி.எப். குறித்த அடிப்படை விவரங்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.   தெரியவில்லை என்றால், நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். இல்லையெனில் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.

 

இந்தப் பிரச்சனை என்பது எங்கு உருவாகிறது? இப்பொழுது இந்தப் பிரச்சனையை சரிசெய்ய பி.எப். நிர்வாகம் என்ன விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது?

 

முன்பு ஒரு பணியாளர்  ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால், அவருக்கென தனி கணக்கு எண்ணை ஒதுக்குவார்கள். அந்த எண்ணில் தான் அந்த தொழிலாளிக்கான பணத்தைச் செலுத்துவார்கள்.   அடுத்த நிறுவனத்திற்கு அந்த பணியாளர் மாறினால், அங்கும் அவருக்கு ஒரு கணக்கு எண்ணைத் தருவார்கள்

 

இப்படி ஒவ்வொரு நிறுவனத்திலும் தனித்தனியாக கொடுக்கப்படும் எண்களை அந்த தொழிலாளர் மெனக்கெட்டு அதற்குரிய விண்ணப்பம் கொடுத்தால் தான் இணைக்கமுடியும்.  இல்லையெனில் தனித்தனியாகவே நிற்கும்.  இப்படி இணைக்கப்படாத கணக்குகள் அதிகம். அதனால் தொழிலாளர்கள் இழந்ததும் அதிகம்.

 

இந்தப் பிரச்சனையை சரி செய்ய, பி.எப். நிறுவனத்திற்கு முதலில் தேவைப்பட்டது டிஜிட்டலாக சேவையை இணைப்பது என்பதை துவங்கியது. ஒரு தளத்தை உருவாக்கி, தளத்தின் வழியாக மாதம் மாதம் நிறுவனத்திடமிருந்து தகவல்களை பெறத்துவங்கினார்கள். ஒவ்வொரு தொழிலாளிக்கும் UAN (Universal Account Number) என அடையாள எண்ணை  உருவாக்கினார்கள். ஒரு தொழிலாளிக்கு ஒரு எண்ணை உருவாக்கிவிட்டால், அதற்கு பிறகு எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் அதே எண்ணை பயன்படுத்தவேண்டும் என்ற முறையை கடைப்பிடிக்க வலியுறுத்தினார்கள்.

 

இதே சமகாலத்தில் தான்  அரசு ஆதாரை அறிமுகப்படுத்தினார்கள். எந்த துறை ஆதாரை பிடித்துக்கொண்டதோ இல்லையோ, பி.எப். நிறுவனம் ஆதாரை இறுகப் பிடித்துக்கொண்டது. முன்பு போல ஒரு தொழிலாளிக்கு ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு எண் தரப்பட்டாலும், UANயுடன், ஆதார் எண்ணை இணைத்து தொடர்ச்சியைக் கொடுக்கமுடிந்தது. 

 

இப்பொழுது புதிதாக ஒரு தொழிலாளி வேலைக்கு சேரும் பொழுது, அவருக்கென UAN என்ற அடையாள எண்ணை, ஆதாரை அடிப்படையாக வைத்து தான் உருவாக்கமுடியும்.   அந்த சம்பந்தப்பட்ட தொழிலாளி தன்னுடைய UAN தனக்கு தெரியாது என சொன்னாலும், குறிப்பிட்ட ஆதார் எண்ணை தளத்தில் பதிவிட்டதும், அவருக்கு ஏற்கனவே UAN ஒதுக்கப்பட்டிருந்தால், காண்பித்துவிடுகிறது.  அதைப் பயன்படுத்தி தொழிலாளியின் பி.எப் நிதிக்கும், ஓய்வு நிதிக்கும் தொடர்ச்சி கொடுக்கமுடிகிறது.

 

ஆதாரை இறுகப் பிடித்துக்கொண்டது என சொன்னேன் அல்லவா! அதில் நேர்மறையான சில அம்சங்கள் இருந்தாலும், சில எதிர்மறையான அம்சங்களும் இருக்கின்றன.  ஒரு தொழிலாளிக்கான ஆதாரில் ஏதேனும் கோளாறு இருந்தால், இப்பொழுது பி.எப். திட்டத்திலேயே இணைய முடியாது என்ற சிக்கலில் வந்து இருக்கிறது.  அந்த தொழிலாளருடைய ஆதாரில் என்ன சிக்கல் உள்ளது என்பதை பி.எப். தளம் குறிப்பாக சொல்லவும் மறுக்கிறது.  ஆகையால் பி.எப். திட்டத்தில் ஒரு பணியாளரை இணைவதே சிக்கலாகி நிற்கிறது.   அவருடைய ஆதாரை சரி செய்து கொண்டு வாருங்கள் என சொன்னால், சில தொழிலாளர்கள் தங்களுக்கு பி.எப் பிடிக்கவேண்டாம் என நினைப்பவர்கள் தவறை சரி செய்யாமல் இழுத்தடிக்கிறார்கள்.  இதனால் நிறுவனத்திற்கு தான் சிக்கல் ஏற்படுகிறது.

 

பி.எப். தளம் மிகவும் மெல்ல இயங்குவது ஏன்?

 


இலட்சகணக்கான நிறுவனங்களின், பல கோடி தொழிலாளர்களின் பி.எப் கணக்கு வழக்குகளை பி.எப். தளத்தின் வழியாக கையாண்டு வருகிறார்கள்.  ஆனால்  நிறுவனங்களுக்கான தளமும், தொழிலாளர்களுக்கான தளமும் மிகவும் மெல்ல இயங்குகிறது. பல சமயங்களில் ஸ்தம்பித்து எந்த வேலையையும் செய்யவிடாமல் செய்துவிடுகிறது.  ஆகையால், பி.எப். தொழிலாளர்களின் நேரமும் வீணாகுகிறது. இதனால் இலக்குகளை நிறைவேற்றமுடியாமல் பி.எப். ஊழியர்கள் விருப்ப ஓய்வில் செல்கின்றனர். மருத்துவ விடுப்பில் செல்கிறார்கள்.   நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களின் நேரமும், கோடிக்கணக்கான தொழிலாளர்களின் நேரமும் வீணாகிவருகிறது.

 

இதற்கான காரணம் என்னவென்று தேடியபொழுது…. 2010க்கு முன்பு வரை ‘பாக்ஸ் ப்ரோ’ மென்பொருள் (சாப்ட்வேர்) பயன்படுத்தபட்டு வந்தது. 2011 முதல், ‘ஆரக்கிள் மற்றும் டெவலப்பரால்’ தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

அப்போதே, ‘எச்.பி.- திங்க் கிளைண்ட் டி-5630 டபிள்யூ’ எனும் வன்பொருளும், அதனுடன் சேர்ந்த ‘எச்.பி.’ சர்வரும் புதிதாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தகவல் பரிமாற்றத்திற்காக, அன்றைய தேதியில் புதிதாக சந்தைக்கு வந்த, 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட ‘கேட்-5 நெட்வொர்க்’ வடங்களும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

 

தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிவுரைப்படி வன்பொருளை (ஹார்ட்வேர்) பொருத்தவரை ‘எச்.பி., நிறுவனத்தின் திங்க் கிளைண்ட்’ வன்பொருளும், சர்வரை பொருத்தவரை ‘ஐபிஎம்’ நிறுவன சர்வரும், செயல்பாட்டில் சிறப்பாக இருக்கும் எனக்கூறப்பட்ட நிலையில் ஐபிஎம் சர்வருக்கு பதில், எச்பி சர்வர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதற்கு அப்போதே ஆட்சேபனை எழுந்தது. எனினும், எச்பி சர்வர் செயல்பாட்டில் ஓரளவு சிறப்பாக இருந்த நிலையில், 2016ல் அந்த வன்பொருளின் பயன்பாட்டுகாலம் (வாரண்டி) முடிவுற்றதாக, ‘எச்.பி’ நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது

 

உலகளவில் வன்பொருள் ஒன்றின் வாரண்டி காலம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டால், அதற்கடுத்த நிலையில் உள்ள நவீன வன்பொருளை பயன்படுத்த வேண்டுமென்பதே விதியாக உள்ள நிலையில், 8 ஆண்டுகளாகியும் 2011ல் அறிமுகப்படுத்தப்பட்டு காலாவதியான பழைய வன்பொருள்களாலேயே, வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் செயல்படுகின்றன. இன்றைய தேதியில் நாடு முழுவதும், 20 சதவீதம் வைப்பு நிதி அலுவலகங்கள் காலவதியான ‘எச்.பி. – திங்க் கிளைண்ட் டி-5630 டபிள்யூ’ வன்பொருள்களாலேயே இயங்குகின்றன.

 

தொழில்நுட்ப வளர்ச்சியால் வன்பொருளை பொருத்தவரை, ‘எச்.பி.- திங்க் கிளைண்ட் டி-740’ வரையும், தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் நெட்வொர்க் வடங்கள், 1000 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட ‘கேட்- 8 மற்றும் 9’ வடங்கள் வரையும், இன்றைய சந்தைக்கு வந்துள்ளன. இவ்வாறு வந்துள்ள வன் மற்றும் மென் பொருள்களை பயன்படுத்தி, வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் நவீனமயமாக்கப்படாததால் தான் தளமும் மிக மிக மெதுவாக இயங்குகிறது. ஆகையால், இதற்கு பொறுப்பான பி.எப். நிர்வாகமும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய், தொழிலாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்வோம்.

 

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்

9551291721


குறிப்பு : ”தொழில் உலகம்”  டிசம்பர் இதழில் இந்த கட்டுரை வெளிவந்தது.   இந்த இதழ் அரசு நூலகங்கள் அனைத்திலும் கிடைக்கிறது என்பது முக்கிய செய்தி.

 

November 28, 2024

நிறுவனத்தை வருங்கால வைப்புநிதி திட்டத்தில் எவ்வாறு பதிவு செய்வது?


ஒரு நிறுவனத்தை பதிவு செய்ய எங்கே அணுகுவது?

 

சில வருடங்களுக்கு முன்பு,  நிறுவனம் எந்த பகுதியில் இருக்கிறதோ, அதற்கு அருகில் உள்ள பி.எப். அலுவலகத்தில்,  பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதற்கு தேவையான அடிப்படை ஆவணங்களை நேரில் சென்று ஒப்படைக்கும் பொழுது, பி.எப். அலுவலகம் எல்லாவற்றையும் சரிப்பார்த்து, பதிவு எண்ணைத் தரும்.  அதில் சில நடைமுறைப் பிரச்சனைகளும் இருந்தன. சில நாட்கள் தாமதமும் ஆயின.

 

இந்தச் சிக்கலை சரி செய்வதற்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் Shram Suvidha (தொழிலாளர் வசதி என அர்த்தம்) என்ற பெயரில் (https://registration.shramsuvidha.gov.in/user/login) தனியாக ஒரு தளத்தை உருவாக்கினார்கள்.  அதில் பி.எப்., இ.எஸ்.ஐ மட்டுமில்லாமல் தொழிலாளர்கள் சம்பந்தமான மற்ற பதிவுகளையும் பதிவதற்கான வசதியை ஒருங்கிணைந்த முறையில் உருவாக்கினார்கள்.

 

இந்தத் தளத்தில் உள்ளே நுழைவதற்கு நிறுவனத்தின் மின்னஞ்சல், மொபைல் எண் கொண்டு பதியவேண்டும்.   அதற்குப் பிறகு ஒரு பதிவெண்ணையும், கடவுச்சொல்லையும் நமது மின்னஞ்சலுக்கு தளம் அனுப்பி வைக்கும். அதைப் பயன்படுத்தி உள்ளே நுழையமுடியும்.

 

நிறுவனத்திற்கான பி.எப். பதிவெண்ணை பதிவு செய்து பெறுவது எப்படி?


 

நிறுவனம் பதிவு செய்ய, நிறுவனத்தின் பான் (PAN) எண், தனிநபர் நிறுவனம் என்றால் தனிநபருடைய பான் எண்,  கூட்டாண்மை (Partnership) மற்றும் மற்ற நிறுவன (Pvt Ltd,) வகைகளாக இருந்தால், நிறுவனத்தின் பான் எண், பதிவு செய்யப்பட்டிருந்தால் அதற்குரிய ஆவணம்,  நிறுவனத்தின் பொறுப்பானவர்/பொறுப்பானவர்களின் பான் எண், ஆதார் எண், அவர்களுடைய அடிப்படை விவரங்கள், தொலைபேசி எண், மின்னஞ்சல் விவரங்கள்,  நிறுவனம் எப்பொழுது துவங்கப்பட்டது?அதற்கான ஆவணம்,  நிறுவனம் நடத்தும் இடம் சொந்தமாக இருந்தால், அதற்குரிய சொத்துவரி ரசீது,  வாடகைக்கு என்றால், அதற்குரிய வாடகை ஒப்பந்தம், வாடகைக்கு இடம் கொடுக்கும் நபரின்  அடிப்படை விவரங்கள், அவருடைய மொபைல் எண்,  தொழிற்சாலை சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்டிருந்தால் அதற்கான விவரங்கள், இந்திய அளவில் உள்ள நிறுவனம்/வெளிநாட்டு நிறுவனம் என்றால், நிறுவனத்தை நிர்வாகம் செய்கிற நிர்வாகியின் அடிப்படை விவரங்கள் என எல்லா தரவுகளையும் பூர்த்தி செய்யவேண்டும்.   சில அடிப்படை ஆவணங்களை தளத்தில் பதிவேற்றம் (Upload) செய்யவேண்டும்.

 

கூடுதலாக ஒரு தகவல் என்னவென்றால், இந்த தளத்தில் பி.எப்.க்காகவும் தனியாக பதிவு செய்யமுடியும். இ.எஸ்.ஐக்காகவும் தனியாக பதிவு செய்யமுடியும்.  ஒரே நேரத்திலேயே பி.எப்., இ.எஸ்.ஐ. என இரண்டையும் தேர்வு செய்வதன் மூலம் இரண்டையும் ஒரே நேரத்திலும் பதிவு செய்யமுடியும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

 

அடிப்படை விவரங்களை பதிவு செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்த பின், இறுதியாக பிரதான பொறுப்பானவரின் ஆதார் எண்ணில் பதிவு செய்த எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும்.  அதைப் பதிவு செய்த பின்,  விண்ணப்பம் முழுமையடையும்.   அந்த தளம் நாம் பதிவு செய்த அனைத்தையும் சரிப் பார்த்த பிறகு, தளத்திலேயே பி.எப். பதிவு எண்ணை சில மணி நேரங்களில் அல்லது அடுத்த நாள்  காண்பிக்கும்.

 

நிறுவனத்திற்காக தரப்படும் பதிவு எண் தான், பி.எப். நிறுவனங்களுக்காக இருக்கும் தளத்தில் உள்ளே நுழைவதற்கான அடையாள எண் (User ID) ஆகும்.  அந்த தளத்தில் கீழே கடவுச்சொல் மறந்து போனால், (Forgot password) என்பதை கிளிக் செய்தால், நிறுவனத்தின் பதிவு எண், மொபைல் எண் போன்ற தகவல்களை பதிந்தால், கடவுச் சொல்லை நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்.  அதன்வழியாக நாம் உள்ளே நுழைந்துவிடலாம்.

 

டிஜிட்டல் கையெப்ப சான்றிதழ் (Digital Signature Certificate)

 


தொழிலாளர்களின் அடிப்படை விசயங்களான ஆதார், வங்கி விவரம், பான் கார்டு (KYC) குறித்த விசயங்களை சரிப் பார்த்து, டிஜிட்டல் கீ கொண்டு ஒப்புதல் தரவேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு.  ஆகையால் ஒரு டிஜிட்டல் கீ மிகவும் அவசியம்.

 

நிர்வாகத்தின் பொறுப்பாக யாரை பிஎப்பை பதிவு செய்யும் பொழுது கொடுத்தோமோ, அவருடைய பான் எண், ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், அவருடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அதற்குரிய கட்டணத்தையும் சேர்த்து பதிந்து தருகிறவர்களிடம் கொடுத்தால், இப்பொழுதெல்லாம் டிஜிட்டல் கீயை பதிவு செய்து அடுத்த நாளே தந்துவிடுகிறார்கள்.

 

டிஜிட்டல் கையெப்ப சான்றிதழை பி.எப். தளத்தில் பதிவு செய்வது எப்படி?

 


டிஜிட்டல் கீயை பி.எப். தளத்தில் பதிவதற்கு.. நமது கணிப்பொறியில் சில அம்சங்களை இணையத்தில் இருந்து தரவிறக்கிகொள்ளவேண்டும்.  பையர்பாக்ஸ் (Firefox) குறிப்பிட்ட வெர்சன், ஜாவா (Java updated version), பி.எப் தளத்தில் DSC Signer Utility என ஒரு மென்பொருள் தருகிறார்கள். இதையெல்லாம் நமது கணிப்பொறியில் சரியாக (Installation) பொருத்திக்கொள்ளவேண்டும்.  இந்த வேலையை எப்படி செய்வது என்பதை இந்த சுட்டியில் உள்ள காணொளியைப் பாருங்கள்.  அவர் சொன்னதை கற்றுக்கொண்டு செய்யலாம். 

https://www.youtube.com/watch?v=4Pd_nbXkBOI

 

கூடுதலாக, டிஜிட்டல் கீ சம்பந்தமாக ஏதேனும் தொழில்நுட்ப உதவி வேண்டுமென்றால், தொழில்நுட்ப உதவி செய்வதாக பி.எப். தளத்தில் அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.  (நான் இதுவரை தொடர்புகொண்டதில்லை. என்ன சார் அவர்கள் போனை எடுக்கமாட்டேன் என்கிறார்கள் என எனக்கு போன் செய்து கேட்க கூடாது.)

Screen Reader Access – Technical Help – 18001 18005 (Toll free) Timing : 9.15 AM to 5.45 PM

 

பிறகு பி.எப் தளத்தில் உள்ளே நுழைந்ததும், Establishment என்ற தலைப்பின் கீழ் வரும் ஐந்தாவது இடத்தில் இருக்கும் DSC/ESign என்ற இடத்தை கிளிக் செய்யவேண்டும்.   அந்த பகுதியில் நாம் நிர்வாகத் தரப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் பெயரை, டிஜிட்டல் சான்றிதழில் கொடுக்கப்பட்ட பெயரை சரியாக எழுதவேண்டும். அவர் என்ன பொறுப்பு Proprietor/Partner/Managing Director  என்பதை குறிப்பிடவேண்டும். மொபைல் எண் கொடுக்கவேண்டும்.   அதற்கு பிறகு Register DSC என்பதை கிளிக் செய்து, மேலே சொன்னதன் அடிப்படையில் டிஜிட்டல் கீ கொண்டு பதிந்துவிடலாம்.

 

அதற்கு பிறகு, Request letter என்ற பிடிஎப் பைல் ஒன்று பி.எப் தளமே உருவாக்கித்தரும்.  அதை தரவிறக்கி, (Download) கொள்ளவேண்டும்.   அந்த கடிதத்தை நிறுவனத்தின் லெட்டர் பேடில் பிரிண்ட் எடுத்துக்கொள்ளவேண்டும்.  அந்த கடிதத்தில், நிறுவனத்தின் பொறுப்பாளர் தனிநபர் என்றால், அவரே மூன்று முறை (Specimen Signature) கையெழுத்திட்டு, கீழே நிறுவனத்தின் முத்திரையை (For seal) வைத்து, அதிலும் கையெழுத்திட்டு, நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட பி.எப் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்.  கூட்டாண்மை (Partnership firm) நிறுவனமாக இருந்தால், பொறுப்பானவர் மூன்று முறை கையெப்பமிட்டு, முத்திரை வைத்து, இன்னொரு பங்குதாரர் (Partner) கையெழுத்திடவேண்டும்.

 

நிறுவனத்தின் கடிதத்தை பெற்றுக்கொண்டு, அதில் உள்ள விவரங்களை சரிப்பார்த்து பி.எப் அலுவலகம் ஒப்புதல் தந்ததும் பி.எப் தளத்தில் அந்த குறிப்பிட்ட DSC - Signature status பகுதியில் ”Active” எனகாட்டும். அப்படி காட்டினால், முறையாக பதிவு செய்துவிட்டோம் என புரிந்துகொள்ளலாம்.  கடிதம் கிடைக்கப்பெற்று அவர்கள் ஒப்புதல் கொடுக்க அதிகப்பட்சம் ஏழுநாட்கள் வரை ஆகிவிடும். ஒருவேளை நிறுவனம் அனுப்பிய கடிதத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால், அவர்கள் ஒப்புதல் கொடுக்கமாட்டார்கள்.  அந்த பிழையை சரி செய்த பிறகே ஒப்புதல் தருவார்கள்.

 

ஆதார் E sign  பதிவை செய்வது எப்படி?

 

முன்பு DSC மூலமே பதிவு செய்வது என்கிற முறை இருந்தது. கடந்த சில வருடங்களில் DSCக்கு பதிலாக ஆதார் மூலமாகவும் பதிந்து ஒப்புதல் தருவது என்கிற முறையை அறிமுகப்படுத்தினார்கள்.  மேலே DSC க்கு பதிவது போலவே அதே பக்கத்தில் பார்த்தால், DSC க்கு கீழே… நிறுவனத்தின் பொறுப்பாளரின் ஆதாரில் உள்ளபடி பெயரை குறிப்பிடவேண்டும். அவருக்கு என்ன பொறுப்பு (Proprietor/Partner/Managing Director) என்பதை குறிப்பிடவேண்டும்.  ஆணா/பெண்ணா என்பதை குறிப்பிடவேண்டும். ஆதாரில் உள்ள பிறந்த தேதி, மாதம், வருடத்தை குறிப்பிடவேண்டும்.   கீழே உள்ள படிநிலைகளை செய்தால் போதுமானது.

 

Step 1: Login to Employer Interface of Unified Portal of EPFO. Link is given below: https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/

Step 2: Go to Establishment >> DSC/e-Sign Step

3: Click on e-Sign

Step 4: Enter Virtual ID and basic details of authorized signatory

Step 5: Click on view DSC/e-Sign registration (Top on right hand side) Step 6: Click on “Generate Request Letter”

Step 7: Mail the request letter to the concerned 

இதை செய்த பிறகு, ஆதார் பதிந்து வைத்துள்ள எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அதை பதிந்த பிறகு அந்த பதிவு முடிந்துவிடும். பிறகு டிஜிட்டல் கீக்கு செய்வது போலவே, அந்த கடிதத்தை லெட்டர் பேடில் பிரிண்ட் எடுத்து, பி.எப் அலுவலகத்துக்கு அனுப்பினால்,   அவர்களின் ஒப்புதலுக்கு பிறகு, Active என வந்துவிடும்.  இதில்  உள்ள நடைமுறை பிரச்சனை என்னவென்றால், பான் அடிப்படையில் டிஜிட்டல் கீயிலும் பெயர் இருப்பதால், பெயர் பொருந்திப்போகும்.  ஆதார் அடிப்படையில் பதிவு செய்யும் பொழுது, தளத்தில் பதிந்துள்ள நிறுவனத்தின் பொறுப்பாளரின் பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் இன்சியலோடு சரியாக பொருந்தியாக வேண்டியதாக இருக்கிறது.  ஏதேனும் மாற்றம் இருந்தால், ஆதாரில் பான் கார்டுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்த பிறகு தான் இதை செய்யமுடிகிறது.

 

இப்படி ஆதார் மூலமாக பதிவு செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல் என்னவென்றால், ஒவ்வொரு பணியாளர் தொடர்பான ஆவணங்களுக்கு ஒப்புதல் தரும்பொழுது,  நிறுவன பொறுப்பாளரிடமிருந்து ஆதார் ஓடிபி வாங்கி பதிய வேண்டிய தேவையாகிவிடும்.  ஆதார் தளத்தை இப்படி பல விசயங்களுக்கும் பயன்படுத்துவதால், சில பல சமயங்களில் ஆதார் தளம் பிசியாகி, ஓடிபி வர தாமதமாகிறது. டிஜிட்டல் கீ இருந்தால் இந்த பிரச்சனைகளை தவிர்த்துக்கொள்ளாம்.

 

நிறுவனத்தின் வங்கி குறித்த விவரம்

 

நிறுவன பதிவுக்கு பிறகு, டிஜிட்டல் கீயையும் பெற்றவுடன் உடனே செய்யவேண்டிய விசயம், தளத்திற்குள் சென்று Form 5A என இருக்கும்.  அதில் நிறுவனத்தை பதிவு செய்த பொழுது  கொடுக்கப்பட்ட நிறுவனத்தின் அடிப்படை விவரங்கள் வரிசையாக இருக்கும்.  அந்த வரிசையில் வங்கி குறித்த விவரங்களான கணக்கு எண், IFSC Code என்பதை பதிவு செய்து, நிறுவனத்தின் காசோலை ஒன்றை ஸ்கேன் செய்து அப்லோட் செய்து, Submit என்பதை கிளிக் செய்தால், நம்முடைய DSC/ஆதார் Esign மூலமாக அதற்கு ஒப்புதல் கொடுக்கவேண்டும்.

 

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்

9551291721