> குருத்து: புத்தகம்
Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

July 9, 2026

I Am a Cat - புத்தக அறிமுகம்


 I Am a Cat  என்பது Natsume Sōseki எழுதிய மிகப் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று. 


இது 1905–1906 காலகட்டத்தில் தொடர்கதையாக வெளியாகி, பின்னர் நூலாக வெளிவந்தது. இந்தப் படைப்பே சோசேகியை ஜப்பானின் தலைசிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக உயர்த்தியது.


நாவலின் தனிச்சிறப்பு


இந்தக் கதையைச் சொல்வது ஒரு பெயரற்ற வீட்டுப் பூனை. அது தன்னைப் பற்றி முதல் வரியிலேயே இவ்வாறு அறிமுகப்படுத்துகிறது:


> "நான் ஒரு பூனை. இன்னும் எனக்குப் பெயரே இல்லை."


இந்த ஒரு வரியே உலக இலக்கியத்தின் மிகவும் புகழ்பெற்ற தொடக்க வரிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


கதை என்ன?"


ஒரு பள்ளி ஆசிரியரின் வீட்டில் வசிக்கும் பூனை, அங்கு வரும் மனிதர்களையும், அவர்களது பேச்சுகளையும், பழக்கவழக்கங்களையும் அமைதியாகக் கவனிக்கிறது.


அதன் பார்வையில்:


மனிதர்களின் தற்பெருமை


அறிவுஜீவிகளின் ஆணவம்


சமூகத்தின் போலித்தனம்


மேற்கத்திய நாகரிகத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் மனப்போக்கு


மனிதர்களின் முரண்பாடுகள்


= ஆகியவை நகைச்சுவையுடனும் கூர்மையான விமர்சனத்துடனும் சித்தரிக்கப்படுகின்றன.


ஏன் பூனை?


சோசேகி மனிதனின் குறைகளை நேரடியாகச் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, எந்தப் பக்கச்சார்பும் இல்லாத ஒரு பூனையின் கண்களைத் தேர்ந்தெடுத்தார்.


பூனை:


யாரையும் மகிழ்விக்க முயல்வதில்லை.


எதையும் மறைக்காமல் கவனிக்கிறது.


மனிதர்களின் செயல்களில் உள்ள முரண்பாடுகளை எளிதில் கண்டுபிடிக்கிறது.


இதனால் வாசகர்கள் சிரித்துக்கொண்டே தங்களைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குகிறார்கள்.


நாவலின் மையக் கருத்து


இந்த நாவல் பூனையைப் பற்றியதல்ல; மனிதர்களைப் பற்றியது.


ஒரு பூனையின் பார்வையில் மனித சமுதாயத்தைப் பார்த்தால், நாம் இயல்பாகக் கருதும் பல விஷயங்கள் எவ்வளவு விசித்திரமாக இருக்கின்றன என்பதை இந்த நூல் உணர்த்துகிறது.


உலக இலக்கியத்தில் இடம்


இந்த நாவல்:  ஜப்பானிய நவீன இலக்கியத்தின் அடித்தளப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இன்று வரை பல பல்கலைக்கழகங்களில் இலக்கியப் பாடமாகப் படிக்கப்படுகிறது.


இறுதியாக...


I Am a Cat என்பது பூனையை மையமாகக் கொண்ட நகைச்சுவை நாவல் மட்டுமல்ல. மனிதர்கள் தங்களைப் பற்றி சிந்திக்கச் செய்யும் நையாண்டி நிறைந்த தத்துவப் படைப்பு. ஒரு சிறிய பூனையின் அமைதியான பார்வையின் மூலம், மனித சமுதாயத்தின் பெரும் முரண்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் அபூர்வமான இலக்கியமாக இது இன்றும் வாசகர்களை ஈர்த்துக்கொண்டே இருக்கிறது.


- இரா. முனியசாமி

June 29, 2025

Destroy the old you, before it destroys you

 


சத்தியமான வார்த்தைகள். நம்முடைய "பழைய Version " ஒழித்து "புதிய Version " உருவாக்காவிட்டால் அந்த பழைய Version நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும்.

 

நம்முடைய பழைய வர்ஷனை ஒழித்து புதிய வெர்சன் உருவாக்குவது பயிற்சியாலும் முயற்சிகளும் மட்டுமே முடியும். அதற்குத் தேவையான முக்கியமான கருவி புத்தகம்.

 

நம்மை, நம் வாழ்க்கையை மாற்றும் புத்தகங்களை தொடர்ந்து படிக்க வேண்டும். நான் தொழில் முனைவராக முயற்சித்த காலத்தில் தொடர்ந்து புத்தகங்கள் படிக்கும் வழக்கம் இருந்தது. இன்று தொழில் வளர்ந்த பின்பு அது குறைந்து போய் உள்ளது. இதனை நான் மாற்ற வேண்டும். மீண்டும் தொடர் புத்தக வாசிப்பு செய்ய வேண்டும். இம்முறை நான் புரிந்து கொண்டது புத்தக வாசிப்பு என்பது விடக்கூடிய ஒன்றாக இல்லாமல் என்றென்றும் உடன் இருக்கக்கூடிய பழக்கமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் என்னால் என்னை புதுப்பித்துக் கொள்ள முடியும் ஒவ்வொரு நாளும் என்னுடைய மேம்பட்ட வர்ஷனை நான் உருவாக்க முடியும்.

 

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது தான் இயற்கையின் தத்துவம். அறிவியல் கூட்றின்படி பூமி சூரியனை சுற்றும் போது ஒரு வருடத்திற்கு பின்பு அதே இடத்தை அடைவதில்லை. அதாவது அது வட்டமாக சுற்றினாலும் ஒரு ஸ்ப்ரிங் சுருளைப் போல் இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒன்றும் அதன் இடத்தில் இருப்பதில்லை. நகர்ந்து கொண்டே இருக்கின்றது.

 

நகர்தலும் தன்னை புதுப்பித்துக் கொள்ளுதலும் தான் முன்னேற்றத்தின் அடையாளம். தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் இதுதான் உண்மை.

 

-          - கார்த்திகேயன்

June 1, 2025

சிறார் இலக்கியம்



வீட்டில் அம்மா தேநீர் வாங்க கடைக்கு அனுப்புவார். அங்கு கிடக்கும் தினத்தந்தியில் படக்கதையான சிந்துபாத்தை எட்டு வயதில் படிக்க துவங்கினேன்.  பிறகு பள்ளி விட்டு வீட்டுக்கு போகும் வழியில் அம்புலி மாமா, பாலமித்ரா, படக்கதைகள் என 25 பைசா கொடுத்து.. இருட்டும் வரை படித்துவிட்டு வீடு திரும்புவேன்.

 

ஒரு முடிவெட்டும் கடையில் எதைச்சையாய் இராஜேஷ்குமார் அறிமுகமாக,  ப.கோ. பிரபாகர், சுபா என துவங்கி… சுஜாதா, பாலகுமாரன், ஜானகிராமன் என நகர்ந்துகொண்டிருக்கும் பொழுது, இடது சாரி தோழர்கள் அறிமுகமானார்கள்.

 

ஜெயகாந்தன், கார்க்கி, டால்ஸ்டாய் என வாசிப்பு உலகம் விரிந்து பரந்தது.  இன்றைக்கும் என்னைப் பாதுகாப்பது, அறிவூட்டுவது எல்லாம் தேர்வு செய்து படிக்கும் புத்தகங்கள் தான். 

 

சமீபத்தில் சிறார் இலக்கியம் குறித்து எழுத்தாளர் விழியன் விரிவாக பேசிய உரையை கேட்டேன்.

 

காணொளி உலகமாக உலகம் மாறிவிட்ட பிறகு, குழந்தைகள் பள்ளிப் புத்தகங்களை மட்டுமே படிக்கவேண்டும் என்ற நிலை மாறிய பிறகு, ஓய்வு என இல்லாமல் நகரும் குழந்தைகள்.

 

சிறார் இலக்கியத்தின் வரலாறு, எப்பொழுது அதன் பொற்காலம், இப்பொழுது எப்படி இருக்கிறது? எத்தனைப் புத்தகங்கள் வெளிவந்தது. இப்பொழுது கணிசமாக குறைந்து போயிருக்கிறது. என்ன செய்யவேண்டும்? எழுதுவதில் எது உள்ளடக்கமாக இருக்கவேண்டும்? என அவர் பேசிய ஒரு மணி நேர உரை முக்கியமானது.

 


புத்தகங்கள் ஒருபக்கம் குறைந்திருக்கிறது. வாசிப்பது குறைந்திருக்கிறது என்றால்…  ஆண்டுக்கு சில நூறு படங்கள் வெளிவரும் நம் நாட்டில், சிறார்களுக்கான திரைப்படங்களும் மிகவும் குறைவு. அதுவும் நல்ல திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரியவர்களுக்கான படத்தைத் தான் குழந்தைகளும் தொடர்ந்து பார்த்துவருகிறார்கள் என்பது பெரிய துயரம்.

 

இந்த நிலைமை மாற நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் அந்த உரையில் சொல்லியிருக்கிறார் என்பது முக்கியமானது. அவசியம் கேளுங்கள். அந்த உரையின் சுட்டியை கீழே பகிர்ந்திருக்கிறேன்.

April 25, 2025

காதல் திருமணம்! புத்தகப் பரிசு!!




தஞ்சைத் தமிழ் பையன் அருணும், வங்கத்தைச் சேர்ந்த தெப்லீனா பெண்ணும் பெங்களூரில் MBA படிக்கும் பொழுது காதல் கொண்டார்கள்.


இருவரும் இப்பொழுது நல்ல வேலையிலும் இருக்கிறார்கள்.

பெற்றோர்கள் ஒப்புதலுடன் திருமணம் வங்க மண்ணில் ஆட்டம், பாட்டத்துடன் நடந்து... இன்று (09/03/25) தஞ்சையில் வரவேற்பு சிறப்பாக நடைபெறுகிறது.

வந்து கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசாக அஸ்வகோஷ் அவர்கள் எழுதிய "கடவுள் என்பது என்ன?" புத்தகம் பரிசாக தரப்படுகிறது.

புத்தகங்களை பரிசாக தரும் வேலையை எனக்கே ஒதுக்கியிருக்கிறார்கள். மகிழ்ச்சி.

பையனின் அப்பாவும், அம்மாவும் ஆசிரியர்கள். அப்பா இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர். அதனால் இந்தப் புத்தகங்கள்.

இப்படி எல்லா திருமணங்களிலும் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

நான் திருமண பரிசாக கடந்த 30 ஆண்டுகளாக கொடுத்து வருகிறேன். (இப்ப சொல்லாமல் எப்பொழுது சொல்வது!
🙂

மணமக்கள் வாழ்க!

February 2, 2025

ஒரு புத்தகத்தின் உருவாக்கத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?


ஒரு புத்தகத்தின் உருவாக்கத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?

 

வணக்கம். விமர்சன உரை அல்ல! உறுப்பினர்கள் சார்பாக என் உரை.

 

தேவையில் இருந்து தான் ஒன்று உருவாகிறது.  இந்த புத்தகத்தின் தேவை?

 

நஜ்முதீன் அய்யா – ஜி.எஸ்.டி  எளிமைப்படுத்துவதற்காக வந்தது என சொல்லிக்கொண்டாலும், இடியாப்பத்தை போல சிக்கலானது.  இந்த சூழ்நிலையில் தான் இந்த புத்தகம் வெளிவந்துள்ளது.

 

ஒரு புத்தகத்தின் உருவாக்கத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?

 


ஹாரி பார்ட்டர் எட்டு பாகங்கள். அதை படமாகவும் எடுத்தார்கள். அதில் வரும் பிரதான பாத்திரம் வோல்ட் மார்ட்.  தன் உயிரை பாதுகாக்கும் விதமாக ஆறு இடங்களில் ஒளித்து வைத்திருப்பார்.

 

ஒரு புத்தகம் என சாதாரண நிலையில் பார்க்கிறோம்.  புத்தக உருவாக்கமும் பல படிநிலைகள் கொண்டது. அது உருவாகும் பாதை கடினமானது.

 

சட்ட அறிவு அவசியம்.  அதை புரிந்துகொள்வது மிக அவசியம். ஒன்றை காட்டும் பொழுது மூன்று பேர் மூன்று விதமான கருத்துகளை மெல்லிய மாற்றத்துடன் சொல்வார்கள்.  அதனால் தான் தனது உரையில் இது என்னுடைய புரிதல் என்பதை வலியுறுத்துவார்கள்.

 

ஆங்கில அறிவு அவசியம்.   அதுவும் சட்ட வார்த்தைகளை புரிந்துகொள்வது இன்னும் சிக்கலானது.  புரிவது போல இருக்கும். குழப்பும். தெளிவுபெற கற்றல் அவசியம்.

 

தமிழ் தெரிந்திருக்கவேண்டும்.  அதுவும் எழுதுவதற்கென ஒரு தொடர் வாசிப்பு இருக்கவேண்டும்.  அது போல தமிழ் தெரிந்த எல்லோராலும் எழுதிவிடமுடியாது.   தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கும் பயிற்சி வேண்டும்.  

 

ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பதும் எளிதல்ல.  அதன் சாரம் குறையாமல், செய்வது அத்தனை எளிதல்ல.  பல பிரபலமான புத்தகங்களை தமிழில் மோசமாக மொழிபெயர்த்து அதன் சாரத்தை இழக்க வைத்திருக்கிறார்கள்.

 

ஒரு விசயம் நடைமுறையில் தான் உரசிப் பார்க்கப்படும்.  சாருக்கு பல ஆண்டுகள் ஒரு வரி ஆலோசகராய் வேலை செய்த அனுபவமும்,  பல கூட்டங்களில் ஆசிரியராய் வகுப்பு எடுத்த அனுபவமும், பலர் எழுப்புகிற கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லிய அனுபவம் உண்டு.

 

மாதம் மாதம் என்ன வேலை இருந்தாலும், குறிப்பிட்ட தேதிக்கு கட்டுரை தருவதற்கு தன்னளவில் இராணுவ ஒழுங்கு இருக்கவேண்டும். பத்திரிக்கையாளர் சமஸ் சொல்லிய அனுபவம்.


 

ஏன் எழுதவேண்டும்? என்பதற்கு ஒரு உந்துதல் அவசியம்.   முதல் பட்டதாரியாக எழுந்து நிற்கும், மொத்த குடும்பத்தையும் தாங்க தன் தொழிலை நம்பும், ஆங்கில பரிச்சயம் நிறைய இல்லாத  ஒரு தலைமுறைக்கு தமிழில் தந்து உதவவேண்டும் என்ற மன உந்துதல் வேண்டும்.

 

ஒரு புத்தக உருவாக்கத்தில் நம்முடைய பொது புரிதல் என்பது நாம் எழுதியதை கொடுத்துவிடுவோம். பதிப்பகம் அச்சிடும். விற்கும். எழுதியவருக்கு ராயல்டி  தரும்.  இந்தப் புத்தகம் அப்படியில்லை.   சார் தான் பணம் கொடுத்திருக்கிறார். அதை அச்சிட்டு, அதை மக்களிடம் புத்தக சந்தை மூலம் கொண்டு சேர்க்கும் வேலையை செய்கிறார்கள்.

 

மாறிவரும் சமூக சூழ்நிலையால், வாசிப்பது குறைந்துவிட்டது. புத்தகம் விற்பது குறைந்துவிட்டது என்ற சமூக நடைமுறை தெரிந்தாலும், கைக்காசை போட்டு புத்தகம் அடித்து தருவோம் என்ற  பெருந்தன்மை வேண்டும். 

 

ஐம்பது பக்கங்கள் கூட புதிதாய் எழுதிவிடலாம். தப்பில்லாமல் தரவேண்டும் என தப்பும், தவறுமாய் (First Copy) தட்டச்சு செய்து  தருவதை… நாட்கள் குறைவாக இருந்ததால், பல நாட்கள் இரவும், பகலும் சரிப்பார்க்கும் பொறுமையும், அதை பிழையில்லாமல்… நேர்த்தியாய் தரவேண்டும் என்ற அடம் வேண்டும்.

 


வெளியிடும் நாள் குறித்த பிறகு , புத்தகத்தை வரிக்கு வரி பொறுமையாக படித்து சேர்க்க வேண்டியதை சேர்த்து, நீக்க வேண்டியதை நீக்கி தருவதற்கு கோவை பெருமாள் அவர்களைப் போல ஒருவருடைய அருமையான நட்பு வேண்டும்.

 

அதே போல தமிழ் சூழலில் எழுதியவருக்கு பணம் எல்லாம் வராது.  அந்தப் புத்தகத்தின் அச்சுக் கூலியை தான் பணம் தருகிறோம் என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

 

ஆக இப்படி  பல அம்சங்களை கடந்து தான் நம் கைக்கு ஒரு புத்தகம் வருகிறது.

 


ஆகையால், நமக்காக எழுதியவருக்கு, நமக்கு வழிகாட்டுபவருக்கு; நாளைய விழாவில் நன்றி தெரிவிப்போம். அவருக்கு நம்முடைய அன்பு வாழ்த்துக்களையும் தெரிவிப்போம். அவர் தொடர்ந்து நமக்காக எழுதவேண்டும்.  அதையும் புத்தகங்களாக நமக்கு தரவேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருப்போம்.


புத்தகங்கள்


சென்னையில் நடக்கும் புத்தக திருவிழாவிற்கு இரண்டு முறை சென்றேன்.  ஒருமுறை சென்னையில் இயங்கும் GST Professionals societyயின் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் ”ஜி.எஸ்.டி குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்” என்ற புத்தகத்தை எளிய கேள்வி பதில் வடிவத்தில் 567 பக்கங்களுக்கு எழுதி தொகுத்திருந்தார்.  மணிமேகலை பிரசுரம் அச்சிட்டு வெளியீட்டு விழாவும் வைத்திருந்தது.  கடந்த 05/01/2025 அன்று நிகழ்வில் கலந்துகொண்டு,   சில புத்தகங்களையும் வாங்கி வந்தேன்.

 

புத்தக திருவிழாவின் கடைசி நாளன்று இலக்கியாவையும் அழைத்துக்கொண்டு சென்றேன்.  சில புத்தகங்களை வாங்கினேன்.   இலக்கியாவும் ஆர்வமாய்  இரண்டு நாவல்களை வாங்கினார்.  எவ்வளவு புத்தகங்கள் வேண்டுமென்றாலும் படி! நான் வாங்கித்தருகிறேன் என எப்பொழுதும் சொல்லிவருகிறேன்.

 

ஒரு இரும்பு பீரோ நிறைய புத்தகங்கள் நிறைந்து இருந்தாலும், (புத்தகங்களின் கணம் தாங்காமல் பீரோவின் கால் ஒருபக்கம் ஒடிந்துவிட்டது) படிக்க வேண்டிய புத்தகங்கள் என ஒரு பெரிய பட்டியலே வைத்திருந்தாலும், அந்தந்த காலக்கட்டத்தில் என்ன மனநிலையோ அது தான் புத்தகத்தை தேர்வு செய்கிறது என்பதை அனுபவத்தில் தெரிந்து கொண்டுள்ளேன்.

 

இருப்பினும் இது காணொளிகளின் காலம் என்பதால், படிப்பதும் குறைந்துகொண்டே வருகிறது என்பதை என் வாசிப்பை வைத்தே உணரமுடிகிறது.  இருப்பினும் தொடர்ந்து வாசிக்க முயன்று வருகிறேன்.

 

புத்தகங்களினால் பெற்றதை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது.  தினம் இரவு கொஞ்சம் படிப்பதோ, இலக்கிய கூட்டங்களின் உரைகளை கேட்டோ தான் உறங்குகிறேன்.

 

நேற்று ஒருவர் புத்தக திருவிழாவிற்கு வந்து சென்றவர்களை கூர்ந்து கவனித்தேன். 500 நபர்களில் பத்து பேர்களிடம் மட்டும் தான் புத்தக பைகளைப் பார்த்தேன் என வருத்தப்பட்டிருந்தார்.  அதற்காகவே வாங்கிய புத்தகங்களின்  புகைப்படத்தை  இங்கு பகிர்ந்துள்ளேன்.

 

கொஞ்சம் படத்தை உற்றுப்பார்த்தால், ஒரே புத்தகத்தையே சிலவற்றை வாங்கியிருக்கிறேன்.   இத்தனை வருடங்களில் திருமணங்களில் மணமக்களுக்கு பரிசாக புத்தகங்களைத் தான் தருகிறோம். சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு பரிசாக கொடுக்கும் பொழுது,  அந்த மணமகன் என் திருமண பரிசுகளில் புத்தகங்களாக தருவது நீங்கள் மட்டும் தான்! என்றார்.

 

படித்தவற்றில் துவக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாசிப்பதற்கு வசதியாக சில புத்தகங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வைத்து, வாங்கித் தருகிறோம்.

 

- பேஸ்புக்கில், 14/01/2025

January 16, 2025

”ஜி.எஸ்.டி. (GST) குறித்து அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்!” - என்னுடைய உரை


”ஜி.எஸ்.டி. (GST) குறித்து அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்!” 

தொகுப்பாசிரியர் - செ. செந்தமிழ்ச்செல்வன்

புத்தக வெளியீட்டு விழா!

 

கடந்த சனிக்கிழமையன்று (11/01/2025) மாலையில் புத்தக அறிமுக விழா சென்னை இந்துஸ்தான் சேம்பரில் திரளான மக்களுடன் நிகழ்வு நடந்தேறியது.

 

15 நிமிட என்னுடைய உரையின் சுருக்கம்…!

 


“200 பக்கங்களில் பிழைத்திருத்தம் செய்தேன் என்பதற்காக கோவை பெருமாள் சாரோடு என்னையும் விமர்சன உரை என்ற பெயரில் அழைப்பிதழில் இணைத்திருக்கிறார்கள்.  உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்த வந்திருக்கிறேன் என சொல்லலாம்.

 


ஒரு புத்தகம் உருவாக்குவத்தில் பல படி நிலைகள் இருக்கின்றன. ஜி.எஸ்.டி சட்ட அறிவு, ஆங்கில அறிவு, தமிழ் அறிவு, பல ஆண்டுகளின் நடைமுறை அனுபவம், புத்தகத்தை கொண்டு வருவதற்கான பொருளாதாரம்,  வளர்ந்து வரும் ஆலோசகர்கள் மீதான அக்கறை, வணிகர்களுக்கும் சட்டம் புரிய வேண்டும் என்ற அடிப்படையில் தான் எளிமையான கேள்வி பதில் வடிவத்தில் தந்திருக்கிறார்.  இன்னும் முக்கியமானது இன்றைய தேதி வரைக்கும் அப்டேட் செய்திருக்கிறார். பதிப்பகத்தார் தட்டச்சு செய்து தரும் பிரதிகளை பல பகல் இரவுகள் தனது துணைவியாரின் உதவியுடன் பிழைத்திருத்தங்கள் பார்த்திருக்கிறார்.

 


இத்தனை உழைப்புக்கு பிறகு புத்தகங்களை விற்கும் சிரமத்தையும் அவருக்கு தந்துவிடக்கூடாது. நமது உறுப்பினர்களும், சக வரி ஆலோசகர்களும் முயற்சிகள் செய்தால், எளிதாய் உரியவர்களுக்கு கொண்டு சேர்த்துவிடலாம்

 

இதெல்லாம் மத்திய, மாநில அரசுகள்  செந்தமிழ்ச்செல்வன் போன்ற மூத்த வரி ஆலோசகர்களிடம்  சில லட்சங்களை கொடுத்து இந்த வேலையை செய்து வணிகர்களிடம் கொண்டு சேர்திருக்கவேண்டும்.  அரசுகள் செய்யவேண்டியதை தனிநபராக தனது சக வரி ஆலோசகர்களின் துணையுடன் கொண்டு வருகிறார் என்பது தான் முக்கியமானது.” என பேசினேன்.

 


நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.  


நன்றி

 

புத்தகங்கள் தேவைப்படுவர்கள் : தொடர்புகொள்ளுங்கள் 9551291721