> குருத்து

June 5, 2025

How to make a killing (2024) பிரெஞ்சு


பிரான்ஸ். எங்கும் வெண்பணி சூழ்ந்த ஒரு மலைப்பிரதேசம்.  ஒரு மாபியா கும்பல் போதை மருந்தை கைமாற்ற வருகிறார்கள்.    இரண்டு இடங்களில் ஒரு ஒற்றைக் கரடி குறுக்கிட… சீட்டு கட்டுகளை கலைத்துப் போட்ட மாதிரி ஆகிவிடுகிறாது.   இரண்டு குழுக்களில் மூன்று பேர் இறந்துவிட… மீதி உள்ள ஆட்கள் போலீசில் மாட்டிக்கொள்கிறார்கள்.

 

தன் மகனுடன் வாழ்ந்து வரும் கணவன், மனைவி இருவரும் அந்த பகுதியில் மரம் வெட்டி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். மேலே நடந்த களேபரத்தில் அவர்களிடம் இரண்டு மில்லியன் யூரோ சிக்குகிறது.

 

இவர்கள் தடயங்களை அழிக்கிறேன் பேர்வழி என இருவரும் தடயங்களை விட்டுக்கொண்டே நகர்கிறார்கள்.

 

ஒரு பக்கம் போலீசு விசாரணை. இன்னொரு பக்கம் பணத்தை மீட்க கொலைகளுக்கு அஞ்சாத மாபியா கும்பல் முயல்கிறது. பிறகு என்ன நடந்தது என்பதை சுவாரசியமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

 

****


ஒரு மலைப்பிரதேசம். இயல்பான மனிதர்கள். மந்தமான போலீசு.  அங்கு தீடீரென ஒரு களேபரம் நடந்தால்… என்ன நடக்குமோ அதை சரியாக எடுத்திருக்கிறார்கள்.

 

படத்தில் மெல்லிய அளவில் நகைச்சுவை இழையோடுகிறது.  இன்னும் சரியான விகிதத்தில் கவனமாக கலந்திருந்தால்… இன்னும் அருமையாக வந்திருக்கும்.

 

கொலை விசாரணையில் சிக்கும் அந்த காரில் தன் காதலனுடன் இருந்த அதிகாரியின் மகள். அவளிடம் விசாரணையும் செய்யவேண்டும்.  ஆனால் ஒத்துழைக்கவும் மறுக்கிறாள். இதற்காக மருகும் அதிகாரி.

 

கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும்,  மனதளவில் விலகியிருப்பவர்கள். திடீரென பெரும் பணம் கிடைக்கிறது.  இப்பொழுது இருவரும் இணைந்து மிக கவனமாக செயல்படவேண்டும். ஆனால் தனித்தனியே சிந்தித்து இயங்கும் பொழுது ஏற்படும் கலாட்டாக்கள்.

 

கரடியைப் பார்த்ததும்.. அந்த மாபியா கும்பலில் “அய்யோ கரடி!” என தமிழில் பயந்து அலறுவார்.  பிரெஞ்சு படத்தில் தமிழா என பார்த்தால்… போதை மருந்தை கடத்தும் கும்பலில்… போதை மருந்தை கேப்ஸ்யூலாக முழுங்கி கடத்துபவராக தமிழர் ஒருவரை பயன்படுத்தியிருக்கிறார்கள்.  அடப்பாவிகளா!

 

”ஜூராவில் ஒரு கரடி” என பிரெஞ்சில் இருந்த பெயரை பிற மொழிகளில் பிரபலப்படுத்துவதற்காக “கொலை செய்வது எப்படி?” என  அதிரடி பெயராக மாற்றியிருக்கிறார்கள். 1990களில் தெலுங்கு படங்களை இங்கு மொழி மாற்று செய்து வரும் பொழுது இப்படித்தான் பெயர் வைப்பார்கள்.

 

ஆஹோ ஓஹோ படம் இல்லை. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்தால் உங்களுக்கும் பிடிக்கும்.

 

பிரைமில் இருப்பதாக இணையம் சொல்கிறது. பேசும் பொழி பிரெஞ்சு. இங்கிலிஷ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது.

June 1, 2025

சிறார் இலக்கியம்



வீட்டில் அம்மா தேநீர் வாங்க கடைக்கு அனுப்புவார். அங்கு கிடக்கும் தினத்தந்தியில் படக்கதையான சிந்துபாத்தை எட்டு வயதில் படிக்க துவங்கினேன்.  பிறகு பள்ளி விட்டு வீட்டுக்கு போகும் வழியில் அம்புலி மாமா, பாலமித்ரா, படக்கதைகள் என 25 பைசா கொடுத்து.. இருட்டும் வரை படித்துவிட்டு வீடு திரும்புவேன்.

 

ஒரு முடிவெட்டும் கடையில் எதைச்சையாய் இராஜேஷ்குமார் அறிமுகமாக,  ப.கோ. பிரபாகர், சுபா என துவங்கி… சுஜாதா, பாலகுமாரன், ஜானகிராமன் என நகர்ந்துகொண்டிருக்கும் பொழுது, இடது சாரி தோழர்கள் அறிமுகமானார்கள்.

 

ஜெயகாந்தன், கார்க்கி, டால்ஸ்டாய் என வாசிப்பு உலகம் விரிந்து பரந்தது.  இன்றைக்கும் என்னைப் பாதுகாப்பது, அறிவூட்டுவது எல்லாம் தேர்வு செய்து படிக்கும் புத்தகங்கள் தான். 

 

சமீபத்தில் சிறார் இலக்கியம் குறித்து எழுத்தாளர் விழியன் விரிவாக பேசிய உரையை கேட்டேன்.

 

காணொளி உலகமாக உலகம் மாறிவிட்ட பிறகு, குழந்தைகள் பள்ளிப் புத்தகங்களை மட்டுமே படிக்கவேண்டும் என்ற நிலை மாறிய பிறகு, ஓய்வு என இல்லாமல் நகரும் குழந்தைகள்.

 

சிறார் இலக்கியத்தின் வரலாறு, எப்பொழுது அதன் பொற்காலம், இப்பொழுது எப்படி இருக்கிறது? எத்தனைப் புத்தகங்கள் வெளிவந்தது. இப்பொழுது கணிசமாக குறைந்து போயிருக்கிறது. என்ன செய்யவேண்டும்? எழுதுவதில் எது உள்ளடக்கமாக இருக்கவேண்டும்? என அவர் பேசிய ஒரு மணி நேர உரை முக்கியமானது.

 


புத்தகங்கள் ஒருபக்கம் குறைந்திருக்கிறது. வாசிப்பது குறைந்திருக்கிறது என்றால்…  ஆண்டுக்கு சில நூறு படங்கள் வெளிவரும் நம் நாட்டில், சிறார்களுக்கான திரைப்படங்களும் மிகவும் குறைவு. அதுவும் நல்ல திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரியவர்களுக்கான படத்தைத் தான் குழந்தைகளும் தொடர்ந்து பார்த்துவருகிறார்கள் என்பது பெரிய துயரம்.

 

இந்த நிலைமை மாற நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் அந்த உரையில் சொல்லியிருக்கிறார் என்பது முக்கியமானது. அவசியம் கேளுங்கள். அந்த உரையின் சுட்டியை கீழே பகிர்ந்திருக்கிறேன்.

May 30, 2025

ஆப்பிரிக்க இலக்கியத்தின் ஜாம்பவான் நுகி வா தியாங்கோ காலமானார்!


”எதிர்ப்பு தான்

உயிருடன் இறப்பதற்கு சிறந்த வழி”

   -  நுகி வா தியாங்கோ

 

25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாவல் படித்தது இன்னும் நினைவின் இடுக்குகளில் தங்கியிருக்கிறது. அந்த நாவலின் பெயர் “சிலுவையின் தொங்கும் சாத்தான்”.  

 

ஏகாதிபத்தியங்கள் கென்யாவில் தங்களுக்கு ”சிறந்த” சேவை வழங்கும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வருகிறார்கள். அவர்களுக்கு முன்னால்   கென்யாவின் மக்களை எப்படியெல்லாம் திறமையாக ஏமாற்றினோம் என்பதை ஒவ்வொருவராக வந்து தங்களின் கடந்த கால செயல்பாடுகளை விளக்கி நான் தான் ”சிறந்த சேவகன்” என வாதாடுவார்கள்.

 


கடைசியில் மக்கள் எழுச்சிக்கொண்டு எல்லோரையும் துரத்தி அடிப்பது போல முடியும்.   சில நாவல்கள் தான் காலம் கடந்தும் நினைவில் தங்கும்.  அப்ப்டி இந்த நாவல் என் நினைவின் இடுக்குகளில் தங்கிவிட்டது.

 

கென்யாவிற்கு எழுதப்பட்ட இந்த நாவல், அதன் வடிவத்தை எடுத்துக்கொண்டு அப்படியே இந்தியாவிற்கு பொருத்தமுடியும். 1990களில் எளிமையான வடிவத்தில் சிறு சிறு நாடகங்களாக நண்பர்களோடு இணைந்து மேடையேற்றிக்கொண்டிருந்தோம்.   அதன் வரிசையில் இந்த நாடகத்தையும் நிறைவேற்ற முயன்றோம். ஆனால் இயலாது போனது.


”கார்டியன்” இதழில்  அவர் இறந்த செய்தி நேற்று வெளியாகியிருக்கிறது. 1995ல் புற்று நோய் தாக்கி, 2019ல் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். 87 87 வயதாகிறது. நேற்று அவர் இறந்ததாக அவருடைய மகள் அறிவித்துள்ளார்.


1938ல் கென்யாவில் பிறந்துள்ளார். அவருடைய அப்பாவிற்கு நான்கு மனைவிகள். 28 குழந்தைகளில் ஒருவர் இவர். ”கிகி”யூ தான் தாய்மொழி. ஒரு பல்கலை கழகத்தில்  ஆங்கில துறையில் விரிவுரையாளராக பணிபுரிந்திருக்கிறார்.  சிறுகதைகள், நாடகம், நாவல் என பல எழுதியுள்ளார்.   ஒரு நாடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றியதற்காக, சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.

 

ஓராண்டு காலம் தடுப்புக் காவல் சிறையில் இருந்த பொழுது தான் மலம் துடைக்கும் தாளில் ”சிலுவையில் தொங்கும் சாத்தான்” நாவலை எழுதியுள்ளார்.

 


1978ல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, 1982ல் நாடு கடத்தப்பட்டுள்ளார்.  இங்கிலாந்துக்கு சென்றவர் பிறகு அமெரிக்காவிற்கு இடம் பெயர்கிறார். அரசியல், பொருளாதார, பண்பாட்டு விடுதலைக்காக தொடர்ந்து சிந்தித்தவர். எழுதியவர், செயல்பட்டவர்.

 

அவருடைய பிற நாவல்கள் அழாதே குழந்தாய் (Weep not child), இடைப்பட்ட ஆறு (The river between), கோதுமை தானியமணி (Grain of Wheat), இரத்த இதழ்கள் (Petals of Blood).

 

உலக நாடுகளை தன் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகளால் ஆக்கிரமிப்பு செய்யும் ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்து நிற்கும் மக்கள் போராட்டங்களில் நிச்சயம் இவருடைய படைப்புகள் முக்கிய ஆயுதம்.

 

அவருக்கு நமது அஞ்சலி!

 

#Ngugi wa thiongo (1938 – 2025)

 


”சிலுவையில் தொங்கும் சாத்தன்” நாவலை அமரந்த்தா – சிங்கராயர் தமிழில் அருமையாக மாற்றம் செய்துள்ளார்கள். பக்கங்கள் 432.