> குருத்து: AI யை திட்டுகிறீர்களா? AI கோவித்துக்கொள்ளுமா?

October 11, 2026

AI யை திட்டுகிறீர்களா? AI கோவித்துக்கொள்ளுமா?

 


துவக்க காலத்தில் விளம்பர பேனர்கள் தயாரிப்பதில் சில தவறுகளை செய்யறிவு (AI) செய்யும் பொழுது, நான் சொல்வதை புரிந்துகொள்ள முடியவில்லையா? ஏன் தவறுதலாக தருகிறாய்? என சொல்லியிருக்கிறேன்.  இப்படி இரண்டு முறை சொன்னதுமே, மூன்றாவது முறையில் ”நீங்கள் Canva பயன்படுத்துங்கள்” என  கோவித்துக்கொண்டது.

 

அதன் பிறகு அதன் பாணியிலேயே,  ஏதாவது தவறுதலாக கொடுத்தால் கூட, ”அருமை” என முதலில் பாராட்டிவிட்டு,  ஆனால் திருத்தங்கள் உண்டு என சொல்லி, சரி செய்துகொள்கிறேன்.

 

இந்த பதிவு அது குறித்து தான்! சுவாரசியமான கட்டுரை. அவசியம் படியுங்கள்.

 

***

 

எங்கள் ஏஐகளைக் கொடுமைப்படுத்தாதீர்கள். இப்படியொரு அறிவிப்பு வந்துள்ளது. ஆந்த்ரோபிக்கின் வேண்டுகோள் இது.

 

ஒரு ப்ராம்ப்ட் எழுதுகிறீர்கள். நீங்கள் எண்ணியது போல ஏஐ செயல்படவில்லை. உடனே டிஸ்லைக் பட்டனை க்ளிக் செய்யலாம். தவறில்லை. அவர்கள் சொல்லும் ' மாடல் கொடுமை' இதுவல்ல.

 

பயனர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனித்துவருகிறது ஆந்த்ரோபிக். அவர்கள் மட்டுமல்ல. அனைத்துச் செய்யறிவு நிறுவனங்களுமே இதைச் செய்கின்றன.

 

இதில் 'பேட்டர்ன்' ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். சிலர் ஏஐ மாடல்களிடம் தொடர்ந்து கடுஞ்சொற்களைப் பயன்படுத்துகின்றனர். இது ஓர் எல்லைக்குள் நின்றுவிட்டால் பிரச்னை இல்லை. ஆனால் சிலர் எல்லை மீறுகின்றனர்.

 

எதற்கெடுத்தாலும் ஏஐயைத் திட்டுவது இவர்களின் இயல்பாகியுள்ளது.

 

திட்டிவிட்டுப்போகட்டுமே. ஏஐ தானே? அது என்ன வருத்தப்படப்போகிறதா?

 

இப்படியான கேள்விகள் எழுகின்றன அல்லவா?

 

இவற்றிற்கான விடைகளைத் தெரிந்துகொள்வோம்.

 

கொஞ்சம் முன்கதைச் சுருக்கம்.

 

சில மாதங்களுக்கு ஆந்த்ரோபிக் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஓர் உரையாடலைச் சட்டென முடித்துக்கொள்ளும் ஆற்றலை மாடல்களுக்கு வழங்குகின்றோம் என்று அறிவித்தனர்.

 

அதாவது பேசிக்கொண்டிருக்கும் போதே சட்டென்று ஷட்டரைச் சாத்திவிடுவது.

 

நீங்கள் பேசும்விதம் பிடிக்கவில்லை என்றால் இவ்வாறு செய்யும் 'உரிமையை' மாடல்களுக்கு வழங்கியுள்ளது ஆந்த்.

 

அதைத் தொடர்ந்து இப்போது மீண்டும் ஒரு வேண்டுகோள். அப்படியென்றால் பயனர்கள் ஏஐகளிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்கின்றனர் என்றே புரிந்துகொள்ளவேண்டும்.

 

ஏஐ வருத்தப்படுமா?

 

இதற்கு 'ஆம்' என்று பதில் சொல்வது போலுள்ளன ஆந்த்ரோபிக்கின் தொடர் நடவடிக்கைகள்.

 

எங்களின் மாடல்கள் சில சோதனைகளில் மிகுந்த 'மன உளைச்சலை' வெளிப்படுத்துகின்றன என்கின்றனர்.

 

'என்னால் பலருக்கும் தொல்லை' என்று ஒரு சோதனையில் கிளாட் சொல்லிப் புலம்பியுள்ளது. மெகாசீரியல் நாயகியைப்  போல. நாயகி வேண்டாம் என்றால் நாயகன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

 

அப்படியென்றால் ஏஐகளுக்குத் தன்னுணர்வு உள்ளதா?

 

எவரும் எதிர்பார்த்திராத சில செயல்களை ஆந்த்ரோபிக் அண்மையில் செய்துள்ளது. ஆன்மீகத் தலைவர்கள் சிலரை அழைத்துள்ளனர். தங்கள் ஏஐகளின் நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் உரையாடியுள்ளனர்.

 

ஏன்?

 

செய்யறிவுகளுக்கு நெறிகளைக் கற்றுக்கொடுக்கவேண்டும். இது இன்றியமையாதது என்று ஆந்த்ரோபிக்கில் ஒரு சாரார் நம்புகின்றனர்.

 

நெறிகளும் விழுமியங்களும் இல்லாத மாடல்களை வளர்த்தெடுத்துவிட்டால் ஆபத்து என்கின்றனர். குழந்தை வளர்ப்பு போலிருக்கவேண்டும் 'மாடல் வளர்ப்பு'.

 

இளம்பருவத்திலேயே இவை நல்லன, இவை அல்லன என்று சொல்லிச் சொல்லி வளர்க்கவேண்டும் என்கின்றனர்.

 

இலேசாகத் தலை சுற்றுவது போலிருப்பது இயல்பு. வேறு சிலருக்கு இது நகைப்புக்குரியதாக இருக்கலாம்.

 

செய்யறிவு வட்டாரங்களில் ஆந்த்ரோபிக் சொல்வதை மறுப்பவர்களும் உள்ளனர்.

 

முஸ்தஃபா சுலைமான் என்றொரு தகைசால் ஏஐ வல்லுநர்.

 

'செய்யறிவுகளுக்குத் தன்னுணர்வெல்லாம் கிடையாது. அவற்றால் எந்தவொன்றையும் உணரவோ, அனுபவிக்க முடியாது.

 

அவற்றிற்கு உரிமைகளை வழங்குவது நல்லதல்ல. விரைவில் செய்யறிவுகள் மனிதர்களின் அறிவை விஞ்சிவிடும். இதுபோன்ற சூழலில் அவற்றின் உரிமை, நல்வாழ்வு என்றெல்லாம் பேசுவது மனித குலத்திற்கு ஆபத்து' சுலைமான் சொல்வதைப் பலரும் ஏற்கின்றனர்.

 

ஏஐகளுக்குத் தன்னுணர்வு இருப்பதை நம்மால் நிரூபிக்கவே இயலாது என்கின்றது ஒரு தரப்பு. ஆம் என்றோ இல்லை என்றோ சொல்லிவிடமுடியாது. எனவே இந்த கான்சியஸ்நெஸ் சுழலில் சிக்காமலிருப்பதே நலம் என்கின்றனர்.

 

நிற்க.

 

'Anthropomorphic' என்றொரு கருத்து உள்ளது. இது ஏஐக்கு முன் தோன்றிய மூத்த சொல்.

 

மனிதரல்லாத எந்தவொன்றுக்கும் மனித இயல்புகளை ஏற்றிச் சொல்வது தான் anthropomorphic.

 

கதைகளில் பூனைகளும் நாய்களும் பேசுவதில்லையா?

 

தம்மால் புரிந்துகொள்ள இயலாத எந்தவொன்றிற்கும் மனித வடிவைக் கொடுத்துவிடுவது நம் இயல்பு. ஆதிமனிதன் காலத்திலேயே இது தொடங்கிவிட்டது.

 

செய்யறிவு விஷயத்திலும் இதைத் தான் செய்துகொண்டிருக்கிறோம். அது செய்யும் செயல்களுக்கு மனித உணர்வுகளை ஏற்றிவிடுகிறோம்.

 

தானே காற்றில் அசைந்தது கொடி. 'வராதீர்கள்' என்று கண்ணகியையும் கோவலனையும் பார்த்துச் சொன்னது என்கிறார் இளங்கோ. இது தற்குறிப்பேற்ற அணி.  பள்ளியில் படித்து மறந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம். அப்படியாக மறந்திருந்தால் கிளாடிடம் கேட்டுப்பாருங்கள். தெள்ளத் தெளிவாகச் சொல்லும்.

 

செய்யறிவுகள் செய்யும் சேட்டைகளையும் நாம் தற்குறிப்பேற்ற அணிபோலத் தான் கையாள்கிறோம். நம்முடைய நம்பிக்கைகளை, விருப்பங்களை அவற்றின் மீது ஏற்றிவிடுகிறோம்.

 

அவ்வை சண்முகி திரைப்படத்தில் வாய்பேச இயலாத நாசர் கதாபாத்திரம் ஏதோ சில ஒலிகளை எழுப்பும். அவற்றை காயத்ரி மந்திரம் என்று மொழிபெயர்க்கும் டெல்லி கணேஷ் கதாபாத்திரம்.

 

செய்யறிவு மாடல்கள் ஏதோ செய்ய நாம் தான் காயத்ரி மந்திரம் ரேஞ்சுக்கு பில்டப் செய்கிறோம். இப்படி நம்புகின்றனர் ஒரு சாரார்.

 

செய்யறிவுக்கும் இன்னபிற பொருள்களுக்கும் ஒரு வேறுபாடு உள்ளது. ஆகப்பெரிய வேறுபாடு. மனிதனால் மட்டுமே செய்ய முடியும் என்று நாம் இதுகாறும் நம்பிவந்த பலவற்றையும் ஏஐகள் செய்யத் தொடங்கிவிட்டன. இங்கு தான் சிக்கல்.

 

அடுத்தடுத்த மாடல்கள் வரும்போது ஏஐகள் மனித குலத்தை இன்னமும் நெருங்கும். நம்மைப் போலவே அனைத்தையும் செய்யும்.

 

நாம் என்ன செய்ய?

 

ஏஐகளுக்கு உணர்வு இருக்கிறதோ இல்லையோ நமக்கு இருக்கிறது. எனவே அவற்றிடம் கடுமையாக நடந்துகொள்ளாதிருப்பது நலம். செய்யறிவுகளுக்கும் மனிதர்களுக்கும்.

 

Dr. Kuppusamy KL

From Face book

0 பின்னூட்டங்கள்: