உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவன். அவன் உணர்ச்சிவசப்பட்டால், காற்றில் பறக்கிறான். அதனால் அவனுடைய அம்மா கனமான பைகளை கொடுத்தனுப்புகிறார். அம்மா உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
விரைவிலேயே இன்னொரு மாணவியும் பள்ளிக்கு வந்து சேர்கிறார். அவளுக்கு காயம் ஏற்பட்டால் விரைவில் குணமாகும் சக்தி இருக்கிறது. நாயகனும், இந்த மாணவியும் நண்பர்களாகிறார்கள்.
பிறகு மெல்ல மெல்ல கதை விரிகிறது. இவர்களுடைய பெற்றோர்களுக்கு இருக்கிற விசேச சக்தி பிள்ளைகளுக்கு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரு தனிக்கதை இருக்கிறது. காதல், கல்யாணம், கலாட்டா என போகிறது.
கூடுதலாக அரசு, அரசியல், பக்கத்து நாட்டு எதிரி எல்லாமும் கலந்து கட்டி வருகிறது. பிறகு என்ன ஆனது என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.
***
அமெரிக்காவிற்கு சூப்பர் ஹீரோ கதைகள் இப்பொழுது மெல்ல மெல்ல பல நாடுகளில் பரவ துவங்கியிருக்கிறது. இது கொரியா வகை சூப்பர் ஹீரோ படம். ஆனால் அமளி துமளியாக சண்டை காட்சிகள், சாகசம் என்றில்லாமல் கொரியாக்காரர்களுக்குரிய அதில் குடும்பம், செண்டிமெண்ட் என சரியாக கலந்து கட்டி எடுத்திருக்கிறார்கள். முன்பு இதே வகையிலான Witch (2018) பாகம் ஒன்றை எடுத்திருந்தார்கள். அதுவும் நன்றாக இருக்கும்.
நம் நாட்டிற்கு எதிரியாக ஒரு நாட்டை வழக்கமாய் காட்டுவது போல, தென்கொரியா என்பதால், வடகொரியாவை எதிரியாக காட்டுகிறார்கள். வடகொரியாவை காட்டினாலே, இவர்களுக்கு குஷியாகிவிடுகிறது.
எல்லா நடிகர்களும் பொருத்தமாக இருக்கிறார்கள். சூப்பர் ஹீரோ படம் பிடிப்பவர்கள் பார்க்கலாம்.
20 அத்தியாயங்கள். ஒவ்வொன்றும் ஒரு மணி நேரம். ஹாட் ஸ்டாரில் ஆங்கில சப்டைட்டிலோடு இருக்கிறது. இப்பொழுது வரை ஏன் தமிழில் டப் செய்யாமல் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது
