> குருத்து

July 11, 2009

விசாரணை கைதிகள் - சிறையில் சமையல்காரர்கள்!


மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சகோதர அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் "சிறையில் விசாரணை கைதிகள்" பற்றி ஒரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

"விருத்தாச்சலம் தாலூகா சட்டப்பணிகள் குழுத் தலைவரின் உத்தரவுப்படி, அங்குள்ள கிளைச் சிறையில் விசாரணை செய்தேன். விசாரணை கைதிகளிடம் விசாரணை நடத்தினேன். அப்பொது, அந்தக் கிளை சிறையில் உள்ள அனைத்துக் கைதிகளுக்காகவும், சில விசாரணை கைதிகள் சமையல் செய்வது தெரிய வந்தது. விருத்தாச்சலம் கிளைச் சிறையில் சமையல் செய்வதற்கு ஆட்கள் இல்லை. அவர்களே சமையல் செய்து சாப்பிடுகின்றனர். இது குறித்து விசாரித்த பொழுது, தமிழகத்தின் அனைத்து கிளைச் சிறைகளிலும் இதே நிலைமை தான் உள்ளது என தெரிய வந்தது. இது குறித்து அறிக்கை தயாரித்து சட்டப்பணிகள் குழுவின் தலைவரிடம் அளித்தேன். என் மனு உள்துறைத் செயலருக்கும் அனுப்பப்பட்டது"

சிறை கூடுதல் டி.ஜி.பி.யிடம் இருந்து இதற்கு பதில் வந்துள்ளது.

"கிளைச் சிறையில் 116 சமையல்காரர்கள் நியமிக்க அதற்கான கோப்பு உள்துறைச் செயலரிடம் நிலுவையில் உள்ளது. அவர் உத்தரவு பிறப்பித்த உடன் சமையல்காரர் நியமிக்கப்படுவர்"

மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

"கிளைச் சிறைகளில் தற்காலிக சமையல்காரர்களைக் கூட நியமிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சிறைக்கைதிகளின் வாழ்வுரிமை பாதிக்கப்படுகிறது. எனவே சிறை நடவடிக்கைகளில் விசாரணைக் கைதிகளை ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும். என் மனுவை பைசல் செய்ய உடனே செயலருக்கு உத்தரவிட வேண்டும். "

இதை விசாரித்த நீதிபதி பாஷா இதற்கான பதிலை "எட்டு வாரங்களில் அரசு பரிசீலித்து உத்தரவிட வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பின்குறிப்பு : சிறை திருந்துவதற்கான இடம் என ஏட்டுளவில் இருக்கிறது. ஆனால், கஞ்சா போன்ற போதை வஸ்துகள், மற்றும் செல்போன் என காசு கொடுத்தால் எல்லாம் கிடைக்கக்கூடிய இடங்களாக சிறைகளாக இருக்கின்றன. இது குறித்து சமீபத்தில் சட்டமன்றத்தில் விவாதத்துக்கும் வந்தது. ஆனால், மக்கள் நலம் நாடும் அரசு என்றால், சரியாக நடக்கும். இது தான் அராஜக அரசு ஆயிற்றே! சிறையில் தான் எல்லா அராஜகங்களூம், அட்டூழியங்களும் நடக்கின்றன. தோழர் ராஜூ விசாரணை கைதிகளை தொல்லைப்படுத்தும் வேலைகளிலிருந்து விடுபட வைக்க முயல்கிறார். பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று?

நன்றி : மாலைமலர் (10/07/2009), தினமலர் (11/07/2009)

July 4, 2009

இ.எஸ்.ஐ. இரண்டு மனைவிகள் இருந்தாலும் பாதுகாப்பு தருகிறது!


செய்தி ஆச்சர்யப்படுத்துகிறதா! இதோ ஆதாரத்தை ஸ்கேன் செய்து இணைத்துள்ளேன். தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இதுநாள் வரைக்கும் ஒரு குடும்பத்திற்கு தான் மருத்துவ பாதுகாப்பு கொடுத்து வந்தது. இப்பொழுது இரண்டு குடும்பங்கள் இருந்தாலும்... பாதுகாப்பு தருகிறது. இரண்டு பொண்டாட்டிகாரர்கள் இதுவரை பட்டபாட்டுக்கு விமோசனம் கிடைத்திருக்கிறது.

நேற்று ஒரு தொழிலாளிக்காக இ.எஸ்.ஐ. கார்டு வாங்க போனால்... இப்படி கையில் தருகிறார்கள்.

ஒரு தொழிலாளி வேலைக்கு சேர்ந்து, அவரிடம் போட்டோ வாங்கி, இ.எஸ்.ஐ-யிடம் விண்ணப்பம் செய்தால்... தற்காலிகமாக மூன்று மாதம் மருத்துவம் பார்த்துகொள்வதற்கு ஒரு ஸ்லிப் தருவார்கள். இந்த ஸ்லிப்பையே "பிறகு வா! அடுத்த வாரம் வா! அவர் லீவு! இவர் லீவு" என இழுத்து இழுத்து நம் கையில் தருவதற்கு மூன்று மாதம் ஓடிவிடும். பிறகு, நிரந்தர கார்டு வாங்க விண்ணப்பித்தால்... " ஸ்கேன் ரிப்பேர், மின்சாரம் இல்லை, கையெழுத்து போட வேண்டிய மேனேஜர் விடுமுறையில் இருக்கிறார். நிறைய சேர்ந்து விட்டதால்... தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளோம்!" என இழு இழு என இழுத்து... நம் கையி தருவதற்குள் இரண்டு மூன்று மாதம் ஆகிவிடும்.

ஆக, ஒரு தொழிலாளி வேலைக்கு சேர்ந்தால்... இ.எஸ்.ஐ. கார்டு தருவதற்கு 6 மாதம் இழுத்துவிடுகிறார்கள். இப்படி எல்லா கூத்துகளும் முடிந்து... நம் கையில் தரும்பொழுது... பல தொழிலாளிகள் வேறு நிறுவனத்திற்கு மாறிவிடுவார்கள். இதை தான் "ஆபரேசன் வெற்றி! நோயாளி செத்துபோயிட்டான் என்பார்கள்!"

இப்படி தருகிற நிரந்தர அட்டையை தான் மேலே பார்க்கிறீர்கள். அந்த குறிப்பிட்ட தொழிலாளி ஒரு மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் ஏகபத்தினிக்காரனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு இரண்டு பொண்டாட்டி இரண்டு பிள்ளைகள் என தப்பாக கார்டு தருகிறார்கள். இவர்கள் கார்டு தருகிற லட்சணம் இவ்வளவு தான்!

பின்குறிப்பு : தவறுகள் சகஜம் தானே! குறிஞ்சிப்பூ பூப்பது போல எப்பொழுதாவது தவறு செய்தால்..அதை பெரிசுபடுத்துவதா! என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது! ஆணை, பெண் என போட்டுவிடுவது, குடும்பத்தினர் பெயரையே அடிக்காமல் விட்டுவிடுவது, டிஸ்பன்ஸரி பெயர் போடாமல் தருவது என கார்டுகளில் இதுவரைக்கும் பல தவறுகள் செய்திருக்கிறார்கள். இரண்டு பொண்டாட்டி தவறு என்பது எவ்வளவு பெரிய விசயம்?! ஒரு நல்ல குடும்பத்தில் பூகம்பம் கிளம்பிவிடும் அல்லவா!

மேலும், இது ஒருவர் தயாரித்து, நேரடியாக தொழிலாளி கைக்கு வருவதில்லை. ஒருவர் தயாரித்து, ஒருவர் சோதித்து, அங்குள்ள கிளை அதிகாரி (மேனேஜர்) பச்சை மையில் கையெழுத்திட்டு தருவார்.

July 3, 2009

வட மாநில தொழிலாளர்களும், வாழ்க்கை நிலைமைகளும்!


//இது உலகமயக் காலக்கட்டம். கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி இந்தியாவிற்குள் நுழையும் வெளிநாட்டு மூலதனத்தைப் பாதுகாப்பதற்குப் புதிது புதிதாகச் சட்டங்கள் போடப்படுகின்றன. ஆனால், வேலை தேடி ஊரு விட்டு ஊரு செல்லும் தொழிலாளிக்கோ குறைந்தபட்ச பாதுகாப்புகூடக் கிடைப்பதில்லை. இந்த உலகமயத்திற்குச் சேவை செய்வதற்காகவே, தொழிலாளர்கள் வேலை உத்திரவாதம் பற்றிக் கேட்கக்கூடாது எனத் தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. இனி, தொழிலாளர்கள் பணியிடங்களில் உயிர் உத்திரவாதம் பற்றியும் கேட்கக் கூடாது என்றுகூடச் சட்டங்கள் திருத்தப்படலாம். எனவே, தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து இந்த அபாயத்திற்கு எதிராகப் போராடாவிட்டால், தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுவதை ஒழித்துக்கட்ட முடியாது.//

கூலித்தொழிலாளர்களை கொன்றது சுடுநெருப்பா? லாப வெறியா? என்ற கட்டுரையிலிருந்து...

புதிய ஜனநாயகம், ஜூன்’2009

வட மாநில தொழிலாளர்களும், வாழ்க்கை நிலைமைகளும்!

சமீப காலங்களில் சென்னையில் பார்க்கும் பல தொழிற்சாலைகளில் பிற மாநில தொழிலாளர்களின் முகங்கள் அதிகமாக தென்படுகின்றன. பல உணவகங்களில் அவர்கள் உணவு பரிமாறுகிறார்கள். சுத்தம் செய்கிறார்கள். சொந்த மாநிலம் எது என அவர்களிடமே கேட்டால்... பீகார், ஒரிஸ்ஸா, உத்திரபிரதேசம், நேபாளம் என்கிறார்கள்.

கடந்த வாரம் தினமலர் இதழில் இது குறித்து ஒரு செய்தி வெளிவந்திருந்தது. அந்த செய்தியில் இந்த தொழிலாளர்களுக்கு ரூ. 150 வரை சம்பளம் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அது அதிகம். நான் செல்லும் தொழிற்சாலைகளில் தினசரி கூலி ரூ. 100 தான் கொடுக்கப்படுகிறது.

முதலாளிகளும் இவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள மிக ஆர்வமாய் இருக்கிறார்கள். காரணம் - அவர்களுக்கு கொடுக்கப்படும் குறைந்த கூலிக்கு 8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். கூடுதலாக வேலை செய்யவும் தயாராக இருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் வேலை செய்கிறார்கள். முக்கியமாக தொழிலாளிக்குரிய உரிமைகள் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். இது போதாதா நம் முதலாளிகளுக்கு!

இந்த தொழிலாளர்களிடம் நெருங்கி விபரம் கேட்டால்.. வயது 16, 18, 20 என்கிறார்கள். கையெழுத்து போடும் அளவுக்கு இவர்களில் பலர் படித்திருக்கிறார்கள். இந்த ஒரு விசயத்திற்காக, சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகள் கழிந்த பிறகு, இந்தியா இப்படியொரு சாதனையை படைத்திருப்பதை பார்த்து, ஒரு "இந்தியனாக" மிகவும் நெஞ்சு நிமிர்த்தி கொள்ளலாம் நாம். இள வயதிலேயே திருமணம் முடிந்தவர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் எப்படி இங்கு வந்தீர்கள் என விசாரித்தால்.. சில ஆண்டுகளுக்கு முன்பு முதலில் குடிபெயர்ந்து இங்கு வேலை பார்த்த பலர் இப்பொழுது வேலை பார்ப்பதை விட்டுவிட்டு, ஊரில் உள்ளவர்களை இங்கு அழைத்துவந்து... பல நிறுவனங்களுக்கு ஆள் சப்ளை செய்து, லட்சகணக்கில் சம்பாதிக்கும் தரகனாக பரிணமித்துவிட்டார்கள்.

இவர்களைப் பற்றி... இப்படி கதைகளை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். அதில் சில கதைகள் நெஞ்சை உருக்குபவை. வரும் நாட்களில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சமீபத்தில் நாமக்கல்லில் தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு ஆலையில் தீவிபத்து ஒன்று ஏற்பட்டது. அதில் 17 தொழிலாளிகள் கருகி மாண்டார்கள். அதில் 16 தொழிலாளிகள் பீகார் தொழிலாளிகள். இது குறித்து விரிவாக வந்த புதிய ஜனநாயக கட்டுரையை நீங்கள் படித்திருக்க கூடும்.

இப்படி தனது சொந்த கிராமத்தை விட்டு, நாளும் இளைஞர்கள் பெரு நகரங்களை நோக்கியும், சிறு நகரங்களை நோக்கியும் வெளியேறிகொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட இந்திய ஆளும் வர்க்கத்துக்கு நேரமேயில்லை. அவர்கள் இந்தியாவை பன்னாட்டு நிறுவனங்களுக்கு எப்படியெல்லாம் விற்கலாம் என சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். வந்த உத்தரவுகளை நிறைவேற்றிவிட்டு விட்டு... தன் எஜமானமர்களிடமிருந்து வரும் அடுத்த உத்தரவுகளுக்கு ஆர்வமாய் காத்திருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில்... உத்திரபிரதேச தலித் முதல்வரான மாயாவதி.. மன்னிக்கனும் இந்திய அல்லது உலக தலித்களுக்கு தலைவரான மாயாவதி.. அரசு பணத்தில் ஆயிரம் கோடிகளில் சிலைகள் நட்டுக்கொண்டிருக்கிறார். இது ஆபாசத்தின் உச்சம்.