> குருத்து

December 27, 2010

வாக்களித்த பதிவர்களுக்கு நன்றி!



தமிழ்மணம் நடத்துகிற போட்டியில், முதல் சுற்றில் குருத்து தளம் கலந்து கொண்ட கீழ்க்கண்ட மூன்று பதிவுகளும் தேர்வாகியிருக்கின்றன.

பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில்...

வாங்கப்படாத பிறந்தநாள் கேக்!

அரசியல், சமூக விமர்சனங்கள் பிரிவில்...

ஏழாம் நாளிலும் மார்ச்சுவரியில் காத்திருந்த ஜிதேந்தர்!

நூல் விமர்சனம், அறிமுகம் பிரிவில்...

நான் வித்யா - புத்தக அறிமுகம்!

குருத்து தளம் கலந்துகொண்ட மூன்று பதிவுகளிலும், ஒடுக்கப்பட்டவர்களாகிய தொழிலாளர்கள் மற்றும் திருநங்கை லிவிங் ஸ்மைல் வலி மிகுந்த வாழ்க்கை பதிவாகியிருக்கிறது. பல்வேறு தலைப்புகளில், பல்வேறு கருத்துகளில் எழுதிய பதிவுகள் போட்டியிடுகின்றன. பின்னாடி தள்ளப்பட்டுவிடுமோ என்ற எண்ணம் இருந்தது. ஆனால், முதல் சுற்றில் பதிவர்கள் வாக்களித்து அங்கீகாரம் தந்து இருக்கிறார்கள்.

வாக்களித்த பதிவர்களுக்கு என் அன்பு நன்றிகள். தேர்வாகியுள்ள மற்ற பதிவர்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,

குருத்து.

December 21, 2010

ஆத்தங்கரையோரம்! - நாவல் அறிமுகம்!


முன்குறிப்பு : சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாவலை எங்கள் பகுதியில் உள்ள நூலகத்தில் கிடைத்து படித்தேன். அரசு நூலகங்களில் அரைமணி நேரம் 300 புத்தகங்கள் தேடினால்...ஒரு நல்ல நாவலையோ, சிறுகதை தொகுப்பையோ கண்டுபிடிக்கலாம். இறையன்புவின் எழுத்து எழுதுகிற முறையில் நன்றாக ஈர்க்க கூடியது. இந்த நாவல் மக்கள் போராட்டத்தைப் பற்றிய நாவல் என்பதால் இன்னும் கூடுதல் ஆர்வம். எழுதியது ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தானே என புறந்தள்ளிவிட முடியாத படைப்பு. மகா நன்றாக அறிமுகப்படுத்தி இருக்கிறார். உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

****
"அருமையான நாவல் படியுங்கள்" என நண்பர் தந்தார். படிக்க துவங்கி, இரண்டு நாள்களில் முடித்துவிட்டேன். நான் வெகுவிரைவாக படித்த நாவல்களில் இதுவும் ஒன்று.

ஒரு ஆறு. அதன் குறுக்கே அணைக்கட்ட அரசு தீர்மானிக்கிறது. எழும் அணையால் பல கிராமங்கள் நீரில் காணாமல் போகும் நிலை. அரசு அங்கு வாழும் பழங்குடி கிராம மக்களை அப்புறப்படுத்த முயல்கிறது. பாதிக்கப்படும் மக்கள் அரசை எதிர்த்துப் போராடுகிறார்கள் என நகர்கிறது நாவல்.

பழங்குடி மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, அரசின் பிரதிநிதிகள் மக்களுக்கு மாற்று வாழ்வாதாரம் உருவாக்கி தருகிறோம் என ஏமாற்றி அப்புறப்படுத்துவது, ஏற்கனவே அங்கிருந்து நகர்த்தப்பட்ட மக்கள் நகரங்களில் அகதிகளாய் அலைவது, நகர மறுக்கும் மக்களின் எதிர்ப்பை அரசு எப்படி கடுமையாக ஒடுக்குகிறது என நாவல் பல விசயங்களை அழுத்தமாக, உணர்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறது.

என்.ஜி.ஓக்களுடன் இணைந்து மக்கள் போராடுகிறார்கள். ஓர் இடத்தில் ஒரு அரசு அதிகாரி சொல்வார் "இந்த போராட்டம் மட்டும் நக்சல்கள் கையில் போயிருந்தால்...போராட்டத்தின் திசை வேறு மாதிரி போயிருக்கும்". உண்மை தான். போலீசு, இராணுவம் என கொண்டிருக்கும் சர்வ அதிகாரம் கொண்ட மக்கள் விரோத அரசை எதிர்த்து போராடி, ஜெயிக்க வேண்டுமென்றால், சமரசம் செய்து கொள்ளாத, உழைக்கும் மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட, சமூக மாற்றத்தை நோக்கமாக கொண்டுள்ள ஒரு புரட்சிகர கட்சி இருந்தால் மட்டுமே சாத்தியம். நாவலை படித்து முடிக்கும் பொழுது, அந்த முடிவுக்கு நீங்கள் நிச்சயம் வந்தடைவீர்கள்.

படிக்கும் பொழுது, நர்மதா நதியின் குறுக்கே கட்டப்படும் அணைக்கு எதிராக பல ஆண்டுகளாக மக்கள் நடத்தும் போராட்டம் தான் நினைவுக்கு வந்தது.

சின்ன சின்ன வெளிச்சங்கள், கட்டுரை தொகுப்புகள் என இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். இந்த நாவலை தயங்காமல் அவருடைய 'மாஸ்டர் பீஸ்' என்பேன். நாவல் வெளிவந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. நியூ செஞ்சுரி புக ஹவுஸ் வெளியிட்டு இருக்கிறார்கள்.

பின்குறிப்பு : அணையோ, வளர்ச்சியோ வேண்டுமென்றால், சில ஆயிரம் மக்கள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள் என ஒற்றை வரியில் கடந்து போனீர்கள் என்றால்...சிரமம். நீங்கள் எழுப்புகிற பல கேள்விகளுக்கு நாவல் விடை தரும். நாவலை படித்துவிட்டு வாருங்கள். நாம் விவாதிக்கலாம்.


நன்றி : நந்தவனம்

December 18, 2010

இன்று ஸ்டாலினின் 131வது பிறந்த தினம்!


*****

தோழர் ஸ்டாலின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடலாம்?

தோழர் ஸ்டாலின் பிறந்தநாளை
எப்படிக் கொண்டாடலாம்?
யோசனையோடு நடந்து போனேன்,

இனிப்பு வாங்கி
இயன்றவரை கொடுக்கலாமா…

எஸ்.எம்.எஸ். அனுப்பி
நண்பர்களிடம் பகிரலாமா…

புத்தாடை உடுத்தி
சேர்ந்துண்டு மகிழலாமா…

ஒரு இசை…
ஒரு கவிதை…
ஒரு நிகழ்ச்சி…

ஏதாவது ஒன்று என்ற எனது நினைவுகளைக் கலைத்தது
கூவக்கரையோரம் பிய்த்தெறியப்பட்ட
குடிசைப் பகுதியிலிருந்து ஒரு குரல்;

“டேய் உழைக்காத உங்களுக்கு இவ்ளோன்னா,
எங்களுக்கு எவ்ளோ இருக்கும்.
அடிச்சா புடுங்குறீங்க… இப்படியே போயிடாது
உங்களுக்கு இருக்குடா ஒருநாள் வேட்டு!”

அடக்கும் லத்திக்கம்பை விலக்கித் தெறித்தது
அந்தப் பெண்ணின் குரல்

இப்போது கற்பனை குறுகுறுத்தது.
ஸ்டாலின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பது
அந்தப் பெண்ணின் எதிர்ப்பார்ப்பில்
மண்டையில் உரைத்தது.

தோழர் ஸ்டாலினுக்கு யாரைப் பிடிக்கும்?

தோழர் ஸ்டாலினை எனக்குப் பிடிக்கும்
என்பது சரிதான்,
ஆனால் ஸ்டாலினுக்கு யாரைப் பிடிக்கும்?

படிக்கும் மாணவப் பருவத்தில்
மதம்பிடிக்கும் கருத்துக்களை
நீங்கள் வெறுப்பவரா…

துடிக்கும் இளமையின் காதலை
நீங்கள்
போராடும் தொழிலாளி வர்க்கத்திடம் போய் சேர்ப்பவரா…

கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி
தன்னலம், தன்குடும்பம் என நெருக்கும்
தாய், தந்தை கண்ணீரையும் உடைக்கும்
சமூகபாசம் படைக்கும் நபரா நீங்கள்…

சாதியெனும் பரம்பரை அழுக்கை
முதலில்
தன்முதுகில் சுரண்டி எறிய
சம்மதிப்பவரா நீங்கள்…

பாட்டாளிவர்க்க விடுதலை லட்சியத்திற்காக
கூடவே வந்த பலர் பாதிவழி போனாலும்…
“ஊர்வம்பு நமக்கெதுக்கு, நம் வழியைப் பார்ப்போம்” என
சொல்லிப்பார்த்து உறவுகள் தள்ளிப்போனாலும்…
எதிர்ப்பின் ஏளனம், துரோகத்தின் கவர்ச்சி
உரிய வர்க்கமே இன்னும் உணராமல்… தனியாய் ஆனாலும்
உலகத்தின் மரியாதையே
தன் கையிலெடுப்பதாய் நினைத்து…
உழைக்கும் மக்களின் உயரிய வாழ்வுக்காய்
கம்யூனிச இதயமாய் துடித்து…
ஓயாமல் போராடும் மனிதரா நீங்கள்…

உங்களைத்தான்
அட! உங்களைத்தான்
தோழர் ஸ்டாலினுக்குப் பிடிக்கும்!

-துரை.சண்முகம்

நன்றி : வினவு

பின்குறிப்பு : முழுக்கவிதையையும் படிக்க இந்த இணைப்பை பாருங்கள்.