
மதியம் 2 மணி.நல்ல பசி. அலுவல் வேலை தொடர்பான பயணத்தில் இருந்தேன்.கையில் சாப்பாடு இருந்தாலும், சாப்பிட முடியாது. இன்னும் சாப்பிட ஒருமணி நேரமாவது ஆகும். தற்காலிகமாக பசியை அடக்க வேண்டுமே! என யோசித்த பொழுது... ஒரு பேக்கரி கண்ணில்பட்டது. உள்ளே நுழைந்து.. ஷோகேசில் வரிசையாக இருந்த அயிட்டங்களை நோட்டம் பார்த்த பொழுது.. இரண்டு நாளைக்கு முந்திய (13/07/2010) தேதியிட்ட ஒரு பிறந்த நாள் கேக் தென்பட்டது. பிறந்த நாள் வாழ்த்துடன், 'சுஜிதா' என பெயர் எழுதியிருந்தது. அன்று முழுவதும் அந்த கேக்கும், கேக்குரிய குழந்தையைப் பற்றிய நினைவுகளும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தன.
ஆர்டர் கொடுத்த கேக்கை ஏன் வாங்கவில்லை? அந்த குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போயிருக்குமோ? நான் பார்த்திருந்த பிறந்த நாள் கேக்குகளிலேயே அளவில் ஆக சிறியதாக இருந்தது. அங்கிருந்த மற்ற கேக்குகளை விடவும் சிறியதாக இருந்தது. ஆகையால், அது வசதியில்லாத ஒரு தொழிலாளி வீட்டுக் குழந்தையுடையதாக இருக்க நிறைய வாய்ப்புண்டு.நம்முடைய இந்த மோசமான வாழ்க்கை சூழலில் பிறந்த நாள் கொண்டாட்டம் தேவை தானா என பெற்றோர்களிடையே சண்டை வந்திருக்குமோ? அல்லது கொண்டாடுவதற்காக ஏதும் பணம் எதிர்ப்பார்த்து... வராமல் போயிருக்குமா?
சென்னைக்கு வந்த புதிதில்... என் நண்பர் ஒருவர் "தன் உறவினர் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் சும்மா தானே இருக்கிறாய்! வா போய் வரலாம்" என அழைத்தார். நெருங்கிய சொந்தங்கள் கலந்து கொள்கிற எளிமையான பிறந்தநாள் நிகழ்வாக இருக்கும் என நினைத்து தான் போனேன்.
ஒரு தரமான ஹோட்டலில் வண்டியை நிறுத்தும் பொழுது கேட்டேன். "இங்க என்ன?" "வா இங்க தான் நிகழ்ச்சியே!" என்றான். திருமணமே நடத்துவதற்கான விசாலமான அறையாக இருந்தது. அந்த ஹாலில் 125 லிருந்து 150 பேர் வரை கூடியிருந்தார்கள். அறை நிறைய அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருமணத்திற்கு வருவதற்கான முஸ்தீபுகளுடன் அங்கு வந்திருந்தவர்கள் இருந்தார்கள். ஆளுக்கொரு கனமான பரிசு பொருளுடன் இருந்தார்கள். ஒரு வயது குழந்தை என்பதால்.. ஒரு விளையாட்டு பொருளை வாங்கி கையில் வைத்திருந்தேன். அந்த கூட்டத்திலேயே என்னுடைய பரிசு தான் ஆக சிறியதாக இருந்தது.
சாப்பாடு தடபுடல் தான். பபே சிஸ்டம். விசாரித்தால்.. ஒரு சாப்பாடு ரூ. 125/ யாம். வந்திருந்தவர்களின் எண்ணிக்கை குத்துமதிப்பாக 125 என எண்ணிக்கை வைத்துக்கொண்டால் கூட...ரூ. 16000/- ஆகிவிடும். இந்த பணம் இருந்தால்.. எங்க பகுதியில் மூன்று வகை கூட்டு, பொரியலுடன், 600 பேருக்கு சாப்பாடு போட்டு ஒரு கல்யாணத்தையே முடித்துவிடலாமே என எண்ணினேன்.
இப்படி அப்பாவித்தனமாய் (!) நினைப்பதற்கு நான் வளர்ந்த வந்த பின்னணியும் ஒரு காரணம். நான் தென் தமிழகத்தில் ஒரு முக்கிய நகரம் சார்ந்தவன். இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழும் பகுதியில் பிறந்து வளர்ந்தவன். அங்கு எந்த தொழிலாளி வீட்டிலும் எந்த குழந்தைக்கும் பிறந்த நாள் கொண்டாடி பார்த்தது இல்லை. கேள்விப்பட்டது கூட இல்லை. கேக் என்பது கூட அவர்கள் வாழ்வில் எங்கும், எப்பொழுதும் கடந்து சென்றது இல்லை. அந்த பகுதியில் ஒரு பேக்கரி கூட கிடையாது. திரும்பிய பக்கமெல்லாம் தேநீர் கடைகள் உண்டு. அங்கு வடை சுடுவார்கள். ஆமை (கடலைப்பருப்பில் செய்யும் ) வடை என்போம். தொழிலாளர்கள் ஒரு வடை சாப்பிட்டு, தேநீர் குடித்தால்.. வேலை நேரத்தில் இரண்டு மணி நேரத்தை எளிதாக கடந்துவிடுவார்கள். மெது(உளுந்த)வடை குறைவாக தான் சுடுவார்கள். பக்கத்து ஏரியா நடுத்தர மக்கள் வாழும் பகுதி. அங்கு நண்பனை பார்க்கும் பொழுது, அங்குள்ள தேநீர் கடைகளில் கவனித்திருக்கிறேன். அங்கு ஆமை வடை குறைவு. மெதுவடை அதிகமாக சுடுவார்கள். வடையில் கூட வர்க்கம் இருக்கத்தான் செய்கிறது.
அங்குள்ள குழந்தைகள் பிறந்த நாள் கேக் எல்லாம், படங்களில் பார்த்தது தான். அங்கு வாழும் யாருக்கும் பிறந்த நாள் என்பதே மறந்து போன ஒன்று. வயது கேட்டால் கூட... குத்துமதிப்பாக தான் சொல்வார்கள். அங்கு வாழும் ஒரு தொழிலாளிக்கு ஒரு நாள் வாழ்வே சிரமமாய் நகரும்பொழுது, பிறந்த நாள் ஏது? கொண்டாட்டம் ஏது? வசதி, வாய்ப்பு உள்ளவர்களுக்கு தான் வாழ்க்கையை சந்தோசமாக நகர்த்த கொண்டாட்டங்கள் தேவைப்படுகின்றன.
கடைசியாய் ஊருக்கு சென்ற பொழுது எங்கள் பகுதியில் பேக்கரி ஒன்றைப் பார்த்தேன். காரணம் அவலமானது. எங்கள் பகுதியில் இருந்த லட்சகணக்கான கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் தொழில் நசிந்து போனதால்.. கரூர், ஈரோடு, வெள்ளக்கோவில், சென்னிமலை என இடம் பெயர்ந்துவிட்டார்கள். இப்பொழுது எங்கள் பகுதி, நடுத்தர மக்களும், கந்துவட்டிக்காரர்களும் வாழும் பகுதியாகிவிட்டது. வசதியுள்ளவர்கள் வந்துவிட்டதால், பேக்கரியும் வந்துவிட்டது.
இப்படி பல லட்சகணக்கான மக்கள் பிறந்ததற்காக வாழ்ந்து தொலைத்துக் கொண்டிருக்கும் நாட்டில் தான், பிரமாண்டமான பிறந்த நாள் கொண்டாட்டங்களும், மிக ஆடம்பரமான திருமண நிகழ்ச்சிகளும் எந்தவித கூச்சமும், அருவருப்பும் இல்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன.
18 பின்னூட்டங்கள்:
very good post.
மன ஓட்ட்த்தின் ஆற்றொழுக்குடன் கூடிய பதிவு.
//வடையில் கூட வர்க்கம் இருக்கத்தான் செய்கிறது.//
//வசதி, வாய்ப்பு உள்ளவர்களுக்கு தான் வாழ்க்கையை சந்தோசமாக நகர்த்த கொண்டாட்டங்கள் தேவைப்படுகின்றன.//
செறிவுடன் கூடிய வரிகள். தொடர்ந்து எழுதுங்கள் தோழர்.
அருமை !
அருமையானதொரு அனுபவக் கட்டுரை. தொடர்ந்து இது போல வாழ்க்கையின் பல்வேறு வர்க்கப் பரிணாமங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளை எழுதுங்கள்.
வாழ்த்துக்களுடன்,
அசுரன்
கருத்துக்களை பகிர்ந்து கொண்ட குமார் அவர்களுக்கும், போராட்டம், வினவு, அசுரன் தோழர்களுக்கும் என் நன்றிகள்.
கட்டுரையில் வெளிப்படுத்திய வர்க்க பார்வை அருமை.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
தோழர், அருமையான கதை கட்டுரை, உண்மை கேக்குகளால் சண்டை போடும் குடும்பங்கள் எத்தனையோ உள்ளது. தந்தையின் வருமான சூழல் புரியாது குழந்தையோ அடம் பிடிக்க அதற்கு தாய் சப்போர்ட் செய்ய என ரணகளமே நடக்கும். வர்க்கமற்றது என்று எதாவது இருக்கிறதா என உங்களின் பதிவு கேட்கிறது?
கலகம்
kalagam.wordpress.com
வெறுமனே வாழ்த்துகள் என்று சொல்ல மனம் இல்லை. பல முறை இதை நினைத்துப் பார்த்துக் கொள்வதுண்டு. நிறைய யோசிக்க வைத்து இரண்டு முறை உள்ளே வரவழைத்தாலும் படித்தாலும் ஆற்றாமையாக இருக்கிறது.
இங்கு கேக் கடையில் கூடியிருக்கும் மக்களைப் பார்க்கும் போது நீங்கள் சொன்ன கணக்கைத்தான் நானும் போட்டுக் கொள்வதுண்டு
தோழர் உங்களுக்குத்தான் நல்லா எழுத வருதே, தொடர்ச்சியா எழுங்களேன்
நெகிழ்வான, யதார்த்தங்கள் நிரம்பிய கட்டுரை.
//வசதி, வாய்ப்பு உள்ளவர்களுக்கு தான் வாழ்க்கையை சந்தோசமாக நகர்த்த கொண்டாட்டங்கள் தேவைப்படுகின்றன.//
யதார்த்தம் அப்படி..நல்ல பதிவு.
கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அம்ருதா, வேலு, ஜோதிஜி, ராஜாராம், கண்ணகி அவர்களுக்கும், தோழர்கள் கலகம், கேள்விக்குறி அவர்களுக்கும் என் நன்றிகள்.
சில தொழில்கள் சில காலங்களில் அதிக வேலை தரக்கூடியவை. கடந்த் மூன்று மாதங்களில் என் வேலையும் மிகுந்த வேலைகளுக்கிடையில் ஓடிக்கொண்டிருக்கிறேன். இனி, தொடர்ந்து எழுதுவேன் என நினைக்கிறேன். நன்றி.
சிறப்பான பதிவு தோழர்,
இந்த வாழ்த்துக் கேக்குகள் என் வாழ்விலும் தொடர்புடன் இருந்ததுண்டு. பிறந்த நாள் பேர்வைத்த நாள், திருமண நாள் என்று மாதத்திற்கு ஒருமுறை ஏதாவது காரணம் காட்டி கேக் அனுப்பிக்கொண்டிருந்தேன். உணர்ந்தபின் இப்போது கேக் கேட்பவர்களிடம் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறேன் தொலைபேசியில்.
செங்கொடி
This article is a 'Melancholy' that slams the Economic inequalities in a Country like India. Very good one. The words used by the author are impactful. This serves as a phenomenal voice raised against spending enormous money on celebrations in a country where crores of people starve for food. Really made an impact in me.
Regards
S.Gopalakrishnan
பிறந்த நாள் பற்றிய இதே எண்ணம் தான் எனக்கும் உண்டு. நாம் என்ன செய்து விட்டோம் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு என்று தான் தோன்றும். நல்ல பதிவு! நன்றி. கவுண்டமணி ஜோக் தான் நினைவுக்கு வருகிறது. "இந்த சினிமா காரங்கதான் விளம்பரம் பண்ணிக்கிறாங்கன்னா.. அட ஒண்ணுமே இல்லன்னா பொறந்த நாள் கொண்டார்றாங்க... நாம வாங்கிற அஞ்சிக்கும் பத்துக்கும் இது தேவையா?"
- சிவகுமார்.
தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...
நன்றி யோவ்! வாக்களித்த எல்லோருக்கும் நன்றி சொல்லி பதிவிட்டுள்ளேன்.
Post a Comment