> குருத்து: நான் வித்யா - புத்தக அறிமுகம்!

February 10, 2010

நான் வித்யா - புத்தக அறிமுகம்!


நடந்து முடிந்த தமிழ்மண விருது போட்டியில்... பெண்கள்/திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல் பிரிவில்.. குருத்து தளத்திற்கு இரண்டாம் பரிசும், பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு முதல் பரிசு கிடைத்தது. பரிசுத் தொகைக்கு வாங்கிய புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று.

வாங்கிய இரண்டாவது நாளின் பின்னிரவிற்குள் படித்து முடித்துவிட்டேன். இந்த புத்தகம் 2007 டிசம்பரில் வெளிவந்த சமயத்தில் தமிழ்மணத்தில் விளம்பரம் பார்த்தும், பிறகு புத்தக கண்காட்சியில், கடைகளில் கண்ணில் பட்டும், கடந்து சென்றுவிட்டேன். காரணம் - கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் என்னை ஈர்ப்பதில்லை. புத்தக கண்காட்சிகளுக்கு வரும் வாசிப்பு பழக்கம் இல்லாத மக்களுக்காக எழுதப்படும் புத்தகங்களாக இருப்பது தான் பிரதான காரணம். சில புத்தகங்களை வாசித்த பொழுதும் இந்த கருத்து வலுப்பட்டிருக்கிறது.

"சொர்க்கம் வேண்டும் என்று நான் கேட்கவில்லை;
நரகம் வேண்டாமே என்று தான் மன்றாடுகிறேன்"


என...வித்யா புத்தகத்தின் இறுதி பக்கங்களில் வேண்டும் பொழுது...குஜராத்தில் இனப்படுகொலை நடந்த பொழுது... இந்து மத பயங்கரவாதிகளிடம் கைகூப்பி தன் உயிருக்காக.. கண்ணீர் மல்க... கெஞ்சி நிற்கும் அந்த முஸ்லீம் இளைஞரின் முகம் தான் நினைவுக்கு வந்து போனது.

வித்யாவின் இந்த கோரிக்கையை, பொதுமக்களுக்கு பரவலாய் சென்று சேர்க்கும் விதத்தில்.. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது மிகச்சரி என கருதுகிறேன்.

****

வித்யா கடந்து வந்த பாதையின் சரிதை இது. பால்ய காலம் தொட்டே தன்னை பெண்ணாய் உணர ஆரம்பித்தது முதல் எதிர்கொண்ட மனசிக்கல்கள், உறவின் உரசல்கள், சமூக சிக்கல்கள் என வித்யாவின் பாதையெங்கும் வலி தான். நமக்கும் நன்றாகவே வலிக்கிறது.

****

முதல் அத்தியாயமே 'நிர்வாணம்'. முன்பொருமுறை மேலை நாட்டில் நடந்த மாற்று பாலினம் மாறுவதற்கான அறுவை சிகிச்சையை யூ டியூப்-பில் பார்த்துவிட்டு கதிகலங்கி போனேன். அதை விட அதிர்ச்சியாக இருந்தது வித்யாவிற்கு நடந்த அறுவை சிகிச்சை. எந்த பரிசோதனையும் இல்லை. முறையான அறுவை தியேட்டர் இல்லை. கருவி இல்லை. 'நிர்வாணம்' - மறு ஜென்மம் என்றால் மிகையில்லை.

****

புத்தகத்தை வாங்கும் பொழுது... முகப்பு அட்டையில் உள்ள வித்யா படம் சரவணனும் + வித்யாவும் கலந்து இருப்பதை உணர முடிந்தது. படித்து முடித்ததும்... சரவணன் காணாமல் போய்... அறுவை சிகிச்சையின் பொழுது... பிடிவாதமாய் கழட்ட மறுத்த அந்த மெல்லிய மூக்கத்தியோடு வித்யாவாக மட்டும் கண்ணுக்கு தெரிந்தார். புத்தகம் அந்த ரசவாதத்தை அருமையாக செய்திருக்கிறது.

****

வெளியிட்ட ஆண்டில் புத்தக கண்காட்சியில் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறது. தமிழோடு, ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

"புரிந்து கொள்வீர்களா? எனில், நன்றி" யுடன் புத்தகத்தை நிறைவு செய்கிறார்.

புரிந்து கொள்ள முடிகிறது வித்யா.


தோழமையுடன்,

குருத்து


பின்குறிப்பு : சென்னையில் ஒரு பொது நூலகம் ஒன்றிக்காய்... படித்த புத்தகங்களை பொதுமக்களிடமிருந்து வாங்கி கொண்டிருக்கிறார்கள். என்னுடைய மற்ற புத்தகங்களை தருகிறேனோ இல்லையோ, வித்யாவின் புத்தகத்தை மட்டுமாவது நிச்சயம் அனுப்ப வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.

தொடர்புடைய இணைப்புகள் :

லிவிங்ஸ்மைல் வித்யாவின் தளம்

பொட்டை - ஒரு உண்மை நிகழ்வு

என்னை சக மனுசியாக பார்த்தார்கள் - குருத்து

6 பின்னூட்டங்கள்:

அகநாழிகை said...

நான், வித்யா புத்தகம் வெளியான போதே வாசித்ததுதான். அரவாணிகளின் உணர்வுகளை மிகச்சரியாக வெளிப்படுத்திய புத்தகங்களில் ஒன்று. எனது ‘போடா ஒம்போது‘ என்ற கட்டுரையை நேரம் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.

குருத்து said...

அகநாழிகை,

நீங்கள் குறிப்பிட்ட பதிவின் இணைப்பைத் தந்தால் நன்றாக இருக்கும்.

அகநாழிகை said...

எனது பதிவுகள்,

அரவாணிகள் வாழ்வும் தாழ்வும்
http://www.aganazhigai.com/2009/05/blog-post_08.html

போடா ஒம்போது
http://www.aganazhigai.com/2009/04/blog-post_10.html

Anonymous said...

good post

செங்கதிர் said...

அரவாணிகளின் உணர்வுகளை வெளிப்படுத்திய புத்தகங்களில் மிகச்சரியான ஒன்று.
விஜய் டி.வியிலும் ஒருமுறை அவரது நேர்காணலைப் பார்த்திருக்கிறேன்.

ஜோதிஜி said...

பல முறை நண்பர் இந்த புத்தகத்தைப் பற்றி சொல்லியுள்ளார். நீங்க சொல்லியுள்ள பல விசயங்கள் ஏற்புடையதே. மிகச் சுருக்கம்என்கிற ரீதியில் படைத்துள்ளீர்கள். வெற்றி பெற வாழ்த்துகள்.