> குருத்து

June 19, 2021

திரைப்படம் சார்ந்த குழு!


முகநூலில் திரைப்படங்களுக்கென்று சில குழுக்கள் தமிழில் சிறப்பாக இயங்குகின்றன. அதில் @world Movies Musuem குழு கடந்த நாலைந்து வருடங்களாக சிறப்பாக இயங்கி வருகிறது. உறுப்பினர்கள் 48 ஆயிரத்து சொச்சம் பெயர்கள் இருக்கிறார்கள்.


குழுவில் கலவையான ஆட்கள் இருக்கிறார்கள். வெரைட்டியாக எழுதக்கூடிய ஆட்களும் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு படம் குறித்த விவரம் தேவை என்றால், இந்த குழுவில் போய் தான் தேடுவேன்.

கடந்த இரண்டு வருடங்களாக நானும் குழுவில் இருக்கிறேன். கடந்த மே மாதத்தின் டாப் 10 பட்டியலில் நானும் இருக்கிறேன். (பார்க்க படம்.) எல்லாம் ஊரடங்கின் விளைவு. நான்கு படங்கள் பார்த்தால் ஒரு படத்தை அறிமுகம் செய்கிற ஆள் நான். ஊரடங்கு எனும் பொழுது பார்க்கிற பெரும்பாலான படங்களை அறிமுகப்படுத்துவதால், பட்டியலில் வந்துவிட்டேன்.

என் முகநூல் நண்பர்களில் பலருக்கு இந்த குழு அறிமுகமாகி இருக்கும். திரைப்படம் குறித்த அர்வம் உள்ளவர்கள் இந்த குழுவில் இணையுங்கள்.

Remember The Titans (2000) Biographical Sports Movie - அருமையான படம்


ஒடுக்கப்பட்ட வரலாறுகளில் கருப்பின அடிமைத்தளத்தின் வரலாறும் முக்கியமான ஒன்று. 1862ல் தான் அடிமைப்படுத்தப்பட்டிருந்த கருப்பினத்தை சார்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் விடுதலை அறிவிக்கப்பட்டது. விடுதலை அறிவிக்கப்பட்டாலும் அதற்கு பிறகும் சமூகம் இன்னமும் நிறவெறியுடன் தான் நடந்துகொள்கிறது. தொடர்ந்து வரும் செய்திகள் அதைத்தான் நிரூபிக்கின்றன.


கருப்பின அடிமைத்தள விடுதலையை முன்னிட்டு ஜூன் 19ந் தேதியை விடுமுறை தினமாக அமெரிக்கா இப்பொழுது அறிவித்திருக்கிறது. வரவேற்போம். தொடர்ந்து போராடுவதின் மூலம் தான் நிரந்தரமாக இனவெறி ஒழியும்.

****

1981ல் ஒரு ரக்பி வீரரின் இறப்பில் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள். 1971க்கு படம் நகர்கிறது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான விர்ஜினியா மாகாணம். அங்கு சமூகத்தில் நிறவெறி மிக அதிகமாக இருக்கிறது. அங்கு ஒரு Titans உயர்நிலைப்பள்ளியில் ரக்பி விளையாடும் குழு இருக்கிறது. அதில் உள்ள வீரர்களும், கோச்சும் வெள்ளையினத்தவராக இருக்கிறார்கள்.

கருப்பு, வெள்ளை மாணவர்களை இணைத்து ஒரு குழுவை உருவாக்கவேண்டும். அதற்கு தலைமை பயிற்சியாளராக ஒரு கருப்பினத்தைச் சேர்ந்த நாயகனை நியமிக்கிறார்கள். வெள்ளையின கோச்சே கருப்பினருத்தவருக்கு கீழே பணிபுரிய மறுக்கிறார். அவர் இல்லையென்றால், வெள்ளையின மாணவர்களும் விளையாட மறுக்கிறாரகள். அவர்கள் விளையாடாமல் போனால், அவர்களுக்கு கிடைக்க கூடிய உதவித்தொகை கிடைக்காமல் போகும் என்பதால், வெள்ளையின கோச் அவருக்கு கீழே வேலை செய்ய சம்மதிக்கிறார்.

பயிற்சியின் பொழுது மாணவர்களிடையே சண்டை வருகிறது. நாயகன் தன் அதிகாரத்தை பயன்படுத்தி, கருப்பின மாணவன், வெள்ளையின மாணவன் இருவரும் தங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்துகொள்ளவேண்டும். அதை தன்னிடம் வந்து தெரிவிக்கவேண்டும் என அறிவிக்கிறார்.
இப்படி பல சவால்களை எதிர்கொண்டு, அந்த ரக்பி குழு வெற்றிகளை ஈட்டியதா? என்பதை முக்கால்வாசிப் படத்தில் உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
*****

ஒரு விளையாட்டுக்குழுவில் ஏற்படும் மாற்றம் சமூகத்தில் என்னவித மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பார்க்கும் பொழுது ஆச்சர்யமாய் இருக்கிறது. குழுவில் உள்ள கேப்டன் மாணவன் தன் கருப்பின நண்பனை தன் காதலியிடம் அறிமுகப்படுத்துவான். அவன் கையை நீட்டுவான். அவள் கை கொடுக்கமாட்டாள். பின்னாட்களில், அவளே வந்து கைகொடுப்பாள். ஒரு கருப்பின மாணவன் அருகே அந்த போலீஸ் ரோந்து வண்டி நிற்கும். அந்த வெள்ளையின அதிகாரியைப் பார்த்து இவன் கொஞ்சம் தயக்கம் கொண்டு”ஆபிசர்?” என்பான். ”நேற்று
அருமையாக
விளையாடினீர்கள்.
வாழ்த்துகள்
” என்பார். இந்த நல்ல மாற்றத்திற்கு அடிப்படையானவர்கள், வெள்ளையினத்தைச் சேர்ந்த ஜனநாயக உணர்வு கொண்டவர்கள் தான்.

படத்தில் Denzel Washington தான் தலைமை பயிற்சியாளராக வருகிறார். ஆளுமையான,
அருமையான
நடிப்பு. உண்மைக் கதை என்பதால், படத்தில் பலருக்குமே நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். எல்லாருமே நன்றாக செய்திருக்கிறார்கள்.

நல்ல படம். பாருங்கள். Hot Starல் இருப்பதாக Just Watch சொல்கிறது.

Cure (1997) Japan - சைக்காலஜிக்கல் திரில்லர்



நகரில் ஆங்காங்கே சில கொலைகள் நடக்கின்றன. மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்கிறார். உடன் வேலை செய்கிறவரை ஒருவர் கொல்கிறார். இதற்கான காரணத்தை விசாரிக்கும் பொழுது மிகவும் மேலோட்டமாகவும், பொருத்தமில்லாமலும் இருக்கின்றன. அதற்கு பிறகான அவர்களின் நடத்தைகளும் வித்தியாசமாக இருக்கின்றன.


கொலைகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரி மிகவும் குழம்பி போய்விடுகிறார். ஏற்கனவே அவருடைய துணைவியார் மனநிலை சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார். நடக்கின்ற மர்மமான கொலைகளும் அவரின் மனநிம்மதியை குலைக்கின்றன.

சந்தேகப்படும் இளைஞர் ஒருவரை கைது செய்கிறார்கள். அந்த ஆளிடம் விசாரித்தால், தன்னை யார் என்றே அவருக்கு சொல்ல தெரியவில்லை. திரும்ப திரும்ப கேட்ட கேள்விகளை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்.

அவரைப் பற்றி விசாரித்தால், அவர் முன்னாள் மருத்துவ மாணவராக இருக்கிறார். மெஸ்மரிசம், ஹிப்னாட்டிசம் பற்றிய பல புத்தகங்களை படித்த ஆளாக இருக்கிறார். இவர் தான் நகரில் நடக்கும் கொலைகளுக்கு காரணம் ஆக தெரியவருகிறது.

அந்த ஆளோ சிறிது நேரத்திலேயே ஒரு ஆளை தன்வயப்படுத்திவிடுகிறான். ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் உள்ள விகாரங்களை தூண்டிவிட்டுவிடுகிறான். உடனேயே தனக்கு பிடிக்காதவர்களை கொலை செய்துவிடுகிறார்கள். கொலை செய்த பிறகு இவனை அவர்கள் சுத்தமாக மறந்துவிடுகிறார்கள்.

பிறகு அந்த சைக்கோ ஆளை எப்படி தண்டித்தார்கள் என்பது மீதிக்கதை
*****

பொதுவாக ஒரு படத்தை தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் பார்த்துவிடுவது தான் வழக்கம். ஆனால் இந்தப் படத்தை விட்டு விட்டு, நாலைந்து முறைகளில் பார்த்தேன். Most depressed Movie எனலாம். ஊரடங்கு முடியும்வரை இந்த இயக்குநர் பக்கமே எட்டி பார்ப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறேன்.

இந்தப் படத்தை IMDBயில் 12000 மக்கள் வாக்களித்து 7.4 தர மதிப்பிடு கிடைத்திருப்பது ஆச்சர்யம். மெஸ்மரிசம், ஹிப்னாடிசம் பற்றிய படங்கள் மிக குறைவு. சமீபத்தில் Get out படத்தில் ஹிப்னாடிசம் செய்திருப்பதை பார்த்திருக்கிறேன்.

படத்தில் அந்த சைக்கோ, விசாரணை அதிகாரி, அவருடைய துணைவியார், அவருடைய நண்பராக வரும் மருத்துவர் என முக்கிய பாத்திரங்கள் நன்றாக செய்திருக்கிறார்கள். படத்தை இயக்கியவர் Kiyoshi Kurosawa ஜப்பானிய இயக்குநர்களில் முக்கியமானவர் என்கிறார்கள்.

வித்தியாசமான படங்களை விரும்புவர்கள் பாருங்கள்.