> குருத்து: Cure (1997) Japan - சைக்காலஜிக்கல் திரில்லர்

June 19, 2021

Cure (1997) Japan - சைக்காலஜிக்கல் திரில்லர்



நகரில் ஆங்காங்கே சில கொலைகள் நடக்கின்றன. மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்கிறார். உடன் வேலை செய்கிறவரை ஒருவர் கொல்கிறார். இதற்கான காரணத்தை விசாரிக்கும் பொழுது மிகவும் மேலோட்டமாகவும், பொருத்தமில்லாமலும் இருக்கின்றன. அதற்கு பிறகான அவர்களின் நடத்தைகளும் வித்தியாசமாக இருக்கின்றன.


கொலைகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரி மிகவும் குழம்பி போய்விடுகிறார். ஏற்கனவே அவருடைய துணைவியார் மனநிலை சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார். நடக்கின்ற மர்மமான கொலைகளும் அவரின் மனநிம்மதியை குலைக்கின்றன.

சந்தேகப்படும் இளைஞர் ஒருவரை கைது செய்கிறார்கள். அந்த ஆளிடம் விசாரித்தால், தன்னை யார் என்றே அவருக்கு சொல்ல தெரியவில்லை. திரும்ப திரும்ப கேட்ட கேள்விகளை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்.

அவரைப் பற்றி விசாரித்தால், அவர் முன்னாள் மருத்துவ மாணவராக இருக்கிறார். மெஸ்மரிசம், ஹிப்னாட்டிசம் பற்றிய பல புத்தகங்களை படித்த ஆளாக இருக்கிறார். இவர் தான் நகரில் நடக்கும் கொலைகளுக்கு காரணம் ஆக தெரியவருகிறது.

அந்த ஆளோ சிறிது நேரத்திலேயே ஒரு ஆளை தன்வயப்படுத்திவிடுகிறான். ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் உள்ள விகாரங்களை தூண்டிவிட்டுவிடுகிறான். உடனேயே தனக்கு பிடிக்காதவர்களை கொலை செய்துவிடுகிறார்கள். கொலை செய்த பிறகு இவனை அவர்கள் சுத்தமாக மறந்துவிடுகிறார்கள்.

பிறகு அந்த சைக்கோ ஆளை எப்படி தண்டித்தார்கள் என்பது மீதிக்கதை
*****

பொதுவாக ஒரு படத்தை தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் பார்த்துவிடுவது தான் வழக்கம். ஆனால் இந்தப் படத்தை விட்டு விட்டு, நாலைந்து முறைகளில் பார்த்தேன். Most depressed Movie எனலாம். ஊரடங்கு முடியும்வரை இந்த இயக்குநர் பக்கமே எட்டி பார்ப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறேன்.

இந்தப் படத்தை IMDBயில் 12000 மக்கள் வாக்களித்து 7.4 தர மதிப்பிடு கிடைத்திருப்பது ஆச்சர்யம். மெஸ்மரிசம், ஹிப்னாடிசம் பற்றிய படங்கள் மிக குறைவு. சமீபத்தில் Get out படத்தில் ஹிப்னாடிசம் செய்திருப்பதை பார்த்திருக்கிறேன்.

படத்தில் அந்த சைக்கோ, விசாரணை அதிகாரி, அவருடைய துணைவியார், அவருடைய நண்பராக வரும் மருத்துவர் என முக்கிய பாத்திரங்கள் நன்றாக செய்திருக்கிறார்கள். படத்தை இயக்கியவர் Kiyoshi Kurosawa ஜப்பானிய இயக்குநர்களில் முக்கியமானவர் என்கிறார்கள்.

வித்தியாசமான படங்களை விரும்புவர்கள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: