> குருத்து

May 1, 2022

Gated Community வாழ்க்கை

 

 


பெரிய பெரிய அபார்மெண்ட்கள் கடந்த இருபது ஆண்டுகளில் உலகத்தின் பெருநகர பகுதிகளில் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. பல நூறு குடும்பங்கள் ஒன்றாக வாழ்வதால், தங்களுக்கு தேவையான பலவற்றையும் அவர்களது வளாகத்துக்குள்ளேயே உருவாக்கிகொள்கிறார்கள். தங்களை Gated Community என அழைத்துக்கொள்கிறார்கள்.

 
தனியார் செக்யூரிட்டிகளை வைத்துக்கொண்டு பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்கிறார்கள். வீட்டு உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல், யாரும் நுழைய முடியாது. பொது சமூகத்தில் இருந்து தங்கள் குடியிருப்பை துண்டித்துக்கொண்டு வாழ்வதின் தேவை என்ன? அதில் என்ன சிக்கல்கள் இருக்கின்றன? இதெல்லாம் சமூக ஆய்வுக்குரிய விசயம்.
 
உள்ளே செல்ல முடியாது என்றால், அவர்களின் வாழ்க்கையை எப்படி தெரிந்துகொள்வது? இது சென்னையில் இருக்கும் ஒரு தொகுப்பு வீட்டின் வாழ்க்கையை அதன் சில தன்மைகளை சுருக்கமாய் சொல்ல முயல்கிறது.
****
 
ஒரு உயர் அதிகாரியை சந்திப்பதற்காக அந்த அலுவலகத்தின் லாபியில் காத்திருந்தேன். ஒரு நேர்முகத் தேர்வுக்காக ஒரு இளைஞரும் காத்திருந்தார். இருவருக்குமே வந்த வேலை தாமதமாகி கொண்டு இருந்தது. சும்மா தானே இருக்கிறோம் என மெல்ல பேச்சு கொடுத்தேன்.
 
சென்னையில் மிக பிரபலமான கட்டுமான நிறுவனம் கட்டிய 300 வீடுகளுக்கும் மேலாக இருந்த அந்த குடியிருப்பில் பராமரிக்கும் பணியில் சூப்பர்வைசராக சில ஆண்டுகள் இருந்திருக்கிறார்.
 
”இப்படி பெரும் கூட்டமாக வாழ்வது என்பது சிறப்பான விசயம் தானே. வீடுகளின்! வகைகள் எப்படி சார்? விலை எல்லாம் அதிகமா இருக்குமா?”
 
“மூன்று, நான்கு படுக்கையறை கொண்ட வீடுகள். 2 கோடி, இரண்டு கோடிக்கும் மேலான விலையில் இருக்கும். இப்படி கட்டப்படுகிற வீடுகளில் மிடிஸ் கிளாஸ்சுக்கும் பட்ஜெட் வீடுகள் இருக்கவேண்டும் என்கிற விதி இருப்பதால், ஒரு பிளாக் அவர்களுக்காகவும் கட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு விலை 70 லட்சம் வரைக்கும் வரும்.”
 
”இப்படி அபார்மெண்ட் வீடுகளாக இருப்பது ஒரு பாசிட்டிவான விசயம் அல்லவா! சொந்தக்காரன் எங்கேயோ இருந்தாலும், அவசரத்திற்கு பக்கத்து வீட்டுக்காரர் தானே வரவேண்டும்? நல்லா பழகுவார்கள் தானே?
 
“எங்க சார்? அப்படி ஒரு ஸ்மூத்தான உறவு பெரும்பாலும் இல்லை. அவன் நிழல் கூட என் வீட்டு பக்கம் விழக்கூடாது என காரசாரமாய் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். பார்க்கிங் பகுதியில் வண்டியை நிறுத்துவதில் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். இங்கே ஒரு கம்யூனிட்டி ஹால் இருக்கிறது. வீடு அடுத்தடுத்து இருந்தாலும், வீட்டு விசேசங்களில் கூட அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைப்பதில்லை. வருவதுமில்லை. சொந்தக்காரர்கள் மட்டுமே வருவார்கள். முன்னாடி இருந்த வீட்டிற்கு பக்கத்தில் இருந்தவர்கள் அவ்வளவு நல்லா பழகுவார்கள். இங்கே பேசக்கூட முடியலை. பிறகு எங்கே பழகுறது? என எங்களிடம் வந்து சிலர் புலம்புவார்கள்.
 
”2 கோடி, மூன்று கோடி என்றால் அதை வாங்குபவர்களும் வசதியான ஆட்களாக தானே இருப்பார்கள்?”
 
”நிறைய அரசு ஊழியர்கள்; தொழில் செய்பவர்கள் என பலரும் கலவையாக இருக்கிறார்கள்.”
 
“24 மணி நேரமும் தண்ணீர் வசதி இருக்கும். முழுக்க வெளியில் இருந்து தண்ணீர் வரவழைக்கிறோம். எலக்ட்ரிசிட்டி இல்லாமல் போனால், ஜெனரேட்டர் மூலம் உடனடியாக மின்சாரம் தந்துவிடுவோம். கம்யூனிட்டி ஹால் உள்ளது. 100 பேர் வரை உள்ளே அமரமுடியும். விசேசம் என்றால் புக் செய்துகொள்ளலாம். சுத்தம் செய்வதற்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட தொகை வாங்கிகொள்வோம். இபி என்ன ரீடிங்கோ அதை கொடுத்துவிடவேண்டும். உள்ளே சகல வசதிகளுடன் சின்ன திரையரங்கு உள்ளது. 30 பேர் வரை ஒரே நேரத்தில் பார்க்கலாம். பார்க்கனும் நினைக்கிறவர்கள் எங்களிடம் பதிவு செய்துவிடுவார்கள். யார் முதலில் புக் செய்கிறார்களோ அவர்களுக்கு கொடுத்துவிடுவோம். உள்ளே நீச்சல் குளம் இருக்கிறது. ஜிம் இருக்கிறது. பிள்ளைகள் விளையாடுவதற்கு சின்ன பார்க் இருக்கிறது. சின்ன குழந்தைகளுக்கு கிரீச் இருக்கிறது.”
 
”என்னென்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?”
 
”ஒரு மரத்தோட கிளை ஒடிஞ்சா கூட நீங்க சரியா தண்ணிர் விடலை! கழிவு நீரை சுத்திகரிச்ச தண்ணீரை விடுவதினால் தான் மரமெல்லாம் டல்லா இருக்கு என்பார்கள். பார்த்து பார்த்து செய்ஞ்சா கூட புகார் வரும். கரண்ட் கட் ஆகி, ஜெனரேட்டரை ஆன் செய்வதற்கு மூன்று நான்கு நிமிடம் ஆகுமல்லவா! அந்த சில நிமிடங்களை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கரண்ட் போகுமா இல்லையா என கேட்டு முன்பே தெரிந்துகொண்டு தயாராக இருக்கமாட்டீர்களா என்பார்கள். மூடிக்கிடந்த ஒரு வீட்டிற்கு ரூ. 200 இபி பில் வந்தது. முறையாக தெரிவித்தோம். கண்டுகொள்ளவில்லை. இபி அலுவலகத்திலிருந்து பீஸ் கட்டையை பிடுங்கிக்கொண்டு போய்விட்டார்கள். அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் அரசு துறையில் அதிகாரத்தில் இருப்பவர்கள். செம கடுப்பாகி, அவர்கள் போன் செய்ததும், நடுநிசி இரண்டு மணியளவில் பீஸ் கட்டையை எடுத்துக்கொண்டு இபி அதிகாரி அலறியடித்து வந்து போட்டுவிட்டு போனார்.”
 
”நிதி, நிர்வாகம் எல்லாம் எப்படி?”
 
”சதுர அடிக்கு இவ்வளவு என கணக்கிட்டு பராமரிப்பு தொகை வாங்குகிறோம். வீட்டின் அளவிற்கு தகுந்தவாறு மாதம் ரூ. 4000 லிருந்து 8000 வரைக்கும் வரும். வருடத்திற்கு ஒரு முறை அங்கு குடியிருக்கும் வீட்டுக்காரர்கள் சிலரை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் தான் அந்த வருடம் முழுவதும் வேலையாட்களை நியமித்துக்கொண்டு, நிதியை கொண்டு நிர்வாகம் செய்வார்கள். அந்த டீம், இந்த டீம் என புகைச்சல் இருந்துகொண்டே இருக்கும்.”
 
பொதுவாக வீட்டு கட்டுமானம் குறித்து புகார்கள் எழும். கட்டியது மிகப்பிரபலமான நிறுவனம் என்பதால் அந்த பிரச்சனை இருக்காது அல்லவா?”
 
”இல்லை. படுமோசம். வீடுகளில் குடியிருப்பவர்களிடம் நிறைய புகார்கள் வந்தப்படியே இருக்கின்றன. வீட்டில் ஒரு ஆணியடிக்க கூட முடியவில்லை. பொல பொல உதிர்ந்து வரும். டிவியை மாட்டினால், ஸ்டாண்டோடு டிவியும் கீழே விழும். ஒரு குழந்தை ஒரு கேட்டில் விளையாடிக்கொண்டிருந்தது. அப்படியே மொத்தமாய் விழுந்துவிட்டது. நல்லவேளை. குழந்தை தப்பித்துவிட்டது.”
 
”சின்ன சின்ன விசயத்திற்கே கோபப்படுவர்கள் இதை எப்படி பொறுத்துக்கொள்வார்கள்?”
 
”வீடு இரண்டு கோடிக்கு மேல் என்றால், இவர்கள் 50 லட்சம், ஒரு கோடி வரை வீட்டிற்குள் இண்டீரியருக்கு செலவு செய்திருக்கிறார்கள். ரெம்ப மோசமாக கட்டி, ஏமாற்றியிருக்கிறார்கள் என நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார்கள். நடந்துகொண்டு இருக்கிறது. இதையே பிரச்சனையாக்கி, சில வீட்டுக்காரர்கள் பராமரிப்பு நிதி தரமாட்டார்கள்.”
 
அவருக்கு அழைப்பு வந்தது. அவருக்கு வேலை கிடைக்க வாழ்த்தினேன். விடைபெற்றுக்கொண்டார்.
 
அவர் சொன்ன அந்த வீடுகளின் ஏரியல் வியூ பார்த்தேன். மிக பெரிதாக இருந்தது. வீடுகளின் தன்மையையும், அங்குள்ள வசதிகளையும் உள்ளடக்கி ஒரு காணொளி போட்டிருந்தார்கள். பலரையும் ஈர்க்கும்படி இருந்தது.
 
அந்த பிராஜக்ட் பற்றிய குறிப்பான கூகுள் பின்னூட்டங்களை (Comments) படித்துப் பார்த்தேன். சில பின்னூட்டங்கள் அங்குள்ள வசதிகளை புகழ்ந்து இருந்தது. அந்த நிறுவனம் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் பொறுப்பாக நன்றி தெரிவித்திருந்தது. அதற்கு பிறகு சில பின்னூட்டங்கள் “பூச்சு வேலை சரியில்லை. கட்டுமானம் சரியில்லை. ஏமாற்றிவிட்டார்கள்” என இருந்தன. அந்த நிறுவனம் அதற்கு வருத்தம் தெரிவித்திருந்தது. ஒரு எண்ணைத் தந்து அழையுங்கள் என போட்டிருந்தது. அவர் சொன்னதை இந்த பின்னூட்டங்கள் உறுதி செய்தன.
 
படங்கள் உபயம் : இணையம்

பூனை குடும்பம்

 

"வீட்டை காலி செய்துட்டு கிளம்புறீங்களா?! போய்ட்டு வாங்க!
நாங்க இந்த வீட்டிலேயே
தான் இருப்போம்" என்கிறார்கள்.
இலக்கியாவின் கைவண்ணம்
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு...
May be an image of text that says "CAT FAMILY"
2 comments
Like
Comment
Share


April 28, 2022

பீஸ்ட் இயக்குநர் செக்யூரிட்டி தொழிலாளர்களை இழிவுப்படுத்துகிறார்.



”பாதுகாப்பு வேலைகளை செய்யும் செக்யூரிட்டி தொழிலாளர்களின் சம்பளம், வேலை நேரம், வேலை செய்யும் இடம் என எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்த வேண்டிய அரசுகள் கவலைப்படாமல் இருக்கிறார்கள். சிவில் சமூகமும் குறைவான சம்பளத்திற்கு ஆட்கள் கிடைத்தால் போதுமென கமுக்கமாய் பயன்படுத்திக்கொள்கிறது. சமூகத்தைப் பற்றி அறிவற்ற நெல்சன் போன்ற இயக்குநர்கள் கேலி, கிண்டல் செய்கிறார்கள். ”

*****

படத்தில் இந்திய உளவுத்துறையில் வேலைப் பார்த்து, வேலையை விட்டு வந்த நாயகனுக்கு செக்யூரிட்டி அலுவலகத்தில் வேலை வாங்கித்தர அழைத்துவருகிறார் நாயகி. அந்த முதலாளி வயதான தொழிலாளர்களை வைத்து நிறுவனத்தை நடத்துகிறார். நாலு வயதான தொழிலாளர்களைப் பார்த்து ”முதல்ல ஜிப்பை போடுங்கய்யா!” என்கிறார். வேலையை ஒழுங்காக செய்யவில்லை என விதவிதமாய் திட்டுகிறார். படத்தில் ஆங்காங்கே ஒரு வயதான செக்யூரிட்டியை வைத்து கேலி செய்துகொண்டே இருக்கிறார்.


இது என்ன வகையான மனநிலை? இயக்குநர் நெல்சனின் நகைச்சுவை குமட்டுகிறது. ஒரு மனிதன் வேலை செய்வதற்கான வயது என்பது 58 என சட்டம் தீர்மானித்திருக்கிறது. இந்தியர்களின் சராசரி வயது 70 என வரையறுக்கிறார்கள். 40லிலும் ஒரு மனிதன் சாகலாம். எங்க பாட்டி 95 வரைக்கும் வாழ்ந்தார். இறப்பவர்களின் வயதை, எண்ணிக்கையை கணக்கிட்டு தான் 70 வயதை சராசரி என்கிறார்கள்.

ஆக சராசரியாக ஒரு மனிதன் 20 வயதில் உழைக்க துவங்குகிற மனிதன் சமூகத்தில் ஏதோ ஒரு உற்பத்தி கண்ணியில் தன்னை இணைத்துக்கொண்டு 38 வருடங்கள் உழைக்கிறான். அதற்கு பிறகு அவனுக்கு கண் மங்கும். காது மங்கும். நோய்கள் வாட்டும். மருந்துகளின் கட்டுப்பாட்டில் இருப்பான். அதனால் செயல்படுவதின் வேகம் குறையும். ஆகையால், அதற்கு பிறகும் வேலை வாங்குவது சரியல்ல என்று தான் ஓய்வு தருகிறது. அவர் தனக்கு பிடித்தமான வேலைகளை செய்யட்டும் என அனுமதிக்கிறது. இப்படி சமூகத்திற்காக உழைத்த மூத்தவர்களை மதிப்பது தான் நாகரிக சமுதாயத்தின் அடையாளம்.

58 வயதுவரை வேலை என்பது அரசு வேலைகளுக்கும், பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு தான் இந்த கட்டுப்பாடு எல்லாம் நடைமுறையில் அமுலாகிறது. தங்கள் குடும்பத்தின் தேவைக்காக பெரும்பாலான உழைக்கும் மக்கள், சாகும்வரைக்கும் வேலை செய்யவேண்டியிருப்பது மிகப்பெரிய அவலம். அதற்காக இந்த மக்களை ஆளும் அரசு தான் வெட்கப்படவேண்டும்.

மற்ற வேலைகளை விட செக்யூரிட்டி வேலை என்பது கொஞ்சம் சிக்கலானது. சென்னையில் பல விளம்பரங்களை பார்த்து இருக்கிறேன். சில நிறுவனங்களின் செக்யூரிட்டி பில்லை பார்த்திருக்கிறேன். பெரும்பாலான செக்யூரிட்டி வேலை என்பது 12 மணி நேரம் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. என்ன ஒரு அநியாயம். இந்த வேலையில் மட்டும் இப்படி ஒரு மாற்றத்தை யார் ஏற்படுத்தியது? அதிலும் பெரும்பாலானவர்கள் ஏதொவொரு வேலைப் பார்த்து 58 வயதை கடந்திருப்பவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை வைத்து 12 மணி நேரம் வேலை வாங்குவது என்ன ஒரு நியாயம்? பகல் சிப்ட் என்றால் கூட சமாளித்துவிடுவார்கள். காலை 7 மணியிலிருந்து இரவு 7 வரை ஒரு சிப்ட். இரவு 7 துவங்கி காலை 7 மணி வரை ஒரு சிப்ட். பகலில் கூட சமாளித்துவிடலாம். இரவில் எப்படி 12 மணி நேரம் தூங்காமல் தொடர்ச்சியாக வேலை செய்யமுடியும்?

செக்யூரிட்டி வேலை செய்யும் நண்பர் ஒருவர் இருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களாக செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். ஒரு நிறுவனத்தில் இரண்டு மாதங்கள் வேலை செய்தார். தூங்காமல் இருப்பதை கண்காணிக்கிறேன் என ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு சிசிடிவி முன்பு தனது இருப்பை உறுதிசெய்யவேண்டும். செய்தார். இப்படி எல்லாம் வேலை செய்த பிறகு, இரண்டு மாதமும் சம்பளம் தரவில்லை. இழுத்தடித்துக்கொண்டே இருந்தார்கள். பிறகு நமக்கு தெரிந்த ஒரு வழக்கறிஞர் நண்பரை அழைத்துக்கொண்டு கேட்டதற்கு, ஒரு வாரத்தில் தருகிறோம் என்றவர்கள், அலுவலகத்தை மூடிவிட்டு காணாமல் போய்விட்டார்கள். இப்பொழுது அவர்களை தேடிக்கொண்டு இருக்கிறார்.

சென்னையில் எல்லா பகுதிகளிலும் கடுமையான கொசுத்தொல்லை உண்டு. அதிலிருந்து தப்பிக்க ஒரு பாதுகாப்பாக ஒரு வேலை செய்யும் இடத்தை உருவாக்கி தந்திருக்கிறார்களா? என்றால் இல்லை. பல இடங்களில் பார்க்கிறோம். ரெம்ப பெருந்தன்மையோடு ஒரு இரும்பு சேர் தந்துவிடுவார்கள். இப்படி எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் வேலை செய்வது, அவர்களின் ஆயுளை வெகுவாக குறைந்துவிடுகிறது.

இப்படி பார்க்கும் 12 மணி நேர வேலைக்கு பெரும்பாலோர் தரும் சம்பளம் 10000, 12000 தான் தருகிறார்கள். தொழிலாளர்களின் சமூக நலத் திட்டமான இ.எஸ்.ஐ, பி.எப் கூட பெரும்பாலோர் கட்டுவதில்லை. வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்தால், ஒருநாள் ஓய்வு தரவேண்டும் என சட்டம் சொல்கிறது. சட்டத்தை எல்லாம் இவர்கள் மதிப்பதேயில்லை. ஏழு நாளும் வேலை செய்யவேண்டும். மாதத்தில் ஒரு நாள் போகாவிட்டாலும், சம்பளத்தில் பிடித்துக்கொள்வார்கள்.

வங்கியில் துப்பாக்கியோடு காவல் இருக்கிறார்கள். பணத்தை ஏடிஎம் மிஷினில் உள்ளே பொருத்துகிறவர்கள் துப்பாக்கியோடு வருகிறார்கள். சில லட்சங்களை போட்டுவிட்டு, ஒரு செக்யூரிட்டியை எந்தவித ஆயுதம் இல்லாமல் நிறுத்திவிட்டு போவது என்ன லாஜிக்? இந்தியா முழுவதும் ஏடிஎம் கொள்ளை நடக்கும் பொழுதெல்லாம் செக்யூரிட்டிகள் கழுத்தை அறுத்தோ, தலையில் அடித்தோ கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். ஏடிஎம்மில் மட்டுமில்லை. பல இடங்களில் கொலை செய்யப்படுகிறார்கள். செக்யூரிட்டி கொலை என தேடிப்பாருங்கள். இணையம் கொட்டுகிறது. ஒவ்வொரு செக்யூரிட்டி சாகும் பொழுதும், ஒரு குடும்பம் ஆதரவு இல்லாமல் தெருவுக்கு வருகிறது.

செக்யூரிட்டி தொழிலாளர்கள் இப்படி இரவும் பகலும் அயராமல் உழைப்பதால் தான் பல பங்களாக்களிலும் பெரிய பெரிய அபார்ட்மெண்ட் வீடுகளிலும் நிம்மதியாக தூங்குகிறார்கள். நகரமும், நாடும் அமைதியாக உறங்குகிறது.

பாதுகாப்பு வேலைகளை செய்யும் செக்யூரிட்டி தொழிலாளர்களின் சம்பளம், வேலை நேரம், வேலை செய்யும் இடம் என எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்த வேண்டிய அரசுகள் கவலைப்படாமல் இருக்கிறார்கள். சிவில் சமூகமும் குறைவான சம்பளத்திற்கு ஆட்கள் கிடைத்தால் போதுமென கமுக்கமாய் பயன்படுத்திக்கொள்கிறது. சமூகத்தைப் பற்றி அறிவற்ற நெல்சன் போன்ற இயக்குநர்கள் கேலி, கிண்டல் செய்கிறார்கள். நமது வன்மையான கண்டனங்களை இங்கு பதிவு செய்வோம். இயக்குநர் நெல்சனை எங்குப் பார்த்தாலும், மூத்த தொழிலாளர்களை இப்படி இழிவுப்படுத்தலாமா என்ற கேள்வியை எழுப்புவோம்.