> குருத்து

February 18, 2021

Satan’s slave (2017)


சமீபத்தில் பார்த்த பேய் படங்களில் இந்தப் படம் பிடித்திருந்தது.

கதையெனப் பார்த்தால், ஏழு பேர் கொண்ட குடும்பம். அம்மா, அப்பா, அப்பாவின் அம்மா, ஒரு பொண்ணு (21), மூணு பசங்க (16, 12, 7). குழந்தைகளின் அம்மா மூன்று வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்து இறந்தும்விடுகிறார். அவருக்கு தொடர்ச்சியாக வைத்தியம் பார்த்ததால், வீடு அடமானத்தில் இருக்கிறது. மாற்று ஏற்பாடு செய்ய, தந்தை அவர்களை தனியாக இருக்க தைரியம் சொல்லிவிட்டு, நகரத்துக்கு சென்றுவிடுகிறார். வீட்டில் அடுத்தடுத்து அமானுஷ்ய சம்பவங்கள் பயமுறுத்த ஆரம்பிக்கின்றன. பாட்டி கிணற்றில் விழுந்து இறந்துவிடுகிறார். பக்கத்துவீட்டு இளைஞன் “உங்க மாடியில் உங்க அம்மா வயதில் ஒருவர் ஜன்னலருகே நின்றுக்கொண்டிருந்தார்” என சொல்கிறார்.

சில பல சம்பவங்களுக்கு பிறகு பேயாக வந்திருப்பது அம்மா தான் என அறிந்து அதிர்ந்து போகிறார்கள். ஒரு கட்டத்தில் அப்பா ஊரிலிருந்து வந்துவிடுகிறார். பிறகு என்ன ஆனது என்பதை சொச்சக்கதை.

பேய் படம் தான். ஆனால் பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல், அமானுஷ்ய காட்சிகள் எல்லாம் சின்ன சின்னதாய் அடுத்தடுத்து வருகிறது. பார்க்கவும், பயப்படவும் நன்றாக இருக்கிறது. படத்தில் குறைவான ஆட்கள் தான். எல்லோருமே நன்றாக பயந்திருக்கிறார்கள். ஏதும் கோரமான காட்சிகள் இல்லை. குடும்பத்தோடு பார்க்கலாம்.

இந்தோனேசியாவில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. பிறகு வெளிநாடுகளிலும் வெளியாகியிருக்கிறது. அமேசானில், நெட்பிளிக்சில் இருப்பதாக, கூகுள் சொன்னது. தேடிப்பாருங்கள்.

கயமை


 

புதிய அலை

எங்கள் பகுதியில்
நிறைய வீடுகளில்
"வாடகைக்கு" என
அட்டைகள் தொங்குகின்றன.



தெரு முனைகளில்
"வீட்டு பொருட்களை
பாதுகாப்பாக மாற்றித்தரப்படும்" என‌
புதிதாய் அட்டை தொங்குகிறது.

ஊரடங்கில் மூடப்பட்ட‌
பல உணவகங்கள்
இன்னும் திறக்கப்படவேயில்லை.

அரக்கோணத்திலிருந்து
தினமும் ரயிலில் பயணித்து
தேய்த்துக்கொண்டிருந்த‌
அயர்ன்காரரை காணவில்லை.

"தற்கொலை
செய்வதை தவிர‌
வேறு வழியில்லை!" என‌
நேற்று ஒரு சிறுமுதலாளி புலம்பினார்.
இன்னும் சில காலத்திற்கு
இவரை பார்க்ககூடாது என முடிவெடுத்தேன்.

கோயில்களில்
எப்பொழுதும் போல
கூட்டம் கூட்டமாய்
சுறுசுறுப்பாய்
சானிடசைர் அடித்து
வலம் வருகிறார்கள்.

முதல் அலையிலேயே
வெகுவாக களைத்து போய்விட்டோம்.
இரண்டாவது அலை
பொங்கி வரும் என‌
இப்பொழுது அலசிக் கொண்டிருக்கிறார்கள்.
பயமாக இருக்கிறது.