> குருத்து: April 2009

April 29, 2009

அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள் (தேர்தல் 2009)


குளிரூட்டப்பட்ட வெளிநாட்டு வாகனங்களில்
புழுதி பரந்திருக்கும்: பாவியகற்கள் பெயர்ந்திருக்கும்
சாக்கடை தேங்கி இருக்கும்; பன்றிகள் மேய்ந்திருக்கும்
உங்கள் தெருக்களில்; சந்துகளில்; முடுக்குகளில்
இருகரம் கூப்பி, எப்பக்கமும் தொழுது,
புன்முறுவல் தேக்கி,
உடன்பிறந்தவர்களைப் பார்க்க வரும்
தூரத்தேசத்து தமையன் போல...
அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஓகெனக்கல் குடிநீர்திட்டமா?
பொதுமருத்துவமனை திட்டமா?
எதுவேண்டும் வேண்டும் உங்களுக்கு?
வாரிவழங்குவார்கள்;
வாய் எனும் அட்சயப்பாத்திரம் கொண்டு!

68 கிரிமினல் குற்றவழக்குகள்
நிலுவையில் உள்ளவர்கள்
ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின்
மனைவிகள்; மைத்துனிகள்;
இனத்துரோகிகள்; மொழித்துரோகிகள்;
மக்கள் துரோகிகள்; நாட்டுத்துரோகிகள்
வந்துகொண்டு இருக்கிறார்கள்.

'கும்பி எரியுது; குடல் கருகுது;
குளுகுளு ஊட்டி ஒரு கேடா? - என
45 ஆண்டுகளுக்கு முன்பு முழங்கியவர்கள்
இன்று தாமே
கொடைக்கானலாக, ஊட்டியாக,
சிம்லாவாக; குலுமனாலியாக
நடமாடி வருகிறார்கள்.

ஆடிக்கொண்டும்; பாடிக்கொண்டும்;
மிமிக்ரி செய்துகொண்டும்
கலையுலக பழைய; புதிய
கலைத்தளபதிகள்
வந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஈழத்தமிழனுக்காக ஆதரவு கோஷம்
விண்ணைத்துளைக்க
அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்

ஆடு வெட்டிப் பந்தி வைக்க;
சீமைச்சாராயப் பந்தல் நடத்த
ஊதாநிறக் காந்தித் தாட்கள் வழங்க
குடம், குத்துவிளக்கு, தாலி,
தாம்பளம், தட்டுமுட்டுச் சாமான்கள் தானம்தர
அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

உண்ணா நோண்பு இருப்பார்கள்;
பேரணி நடத்துவார்கள்;
மனிதச்சங்கிலி கோப்பார்கள்;
ஆளுக்கு ஆஸ்கர் வாங்குமளவு நடிப்பதில்
திறமைசாலிகள்
வந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆம்...
வந்து கொண்டேயிருக்கிறார்கள்

- நாஞ்சில் நாடன்

'தீதும் நன்றும்' என்னும் தலைப்பில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆனந்தவிகடனில் தொடர் கட்டுரைகள் எழுதி வருகிறார். 22/04 - 29/04/09 இதழில் "அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்" என்ற உட்தலைப்பில் வெளிவந்த மூன்று பக்க கட்டுரையை சுருக்கி தந்துள்ளேன். அவருடைய சொந்த வார்த்தைகளிலேயே!

நன்றி : ஆனந்தவிகடன்

April 15, 2009

தேர்தல் - 2009


பொய்களின் கைப்பிடித்து
நெடுந்தொலைவு
வந்துவிட்டோம்.

ஒவ்வொரு மைல்கல்லிலும்
சுமைகளென
நம் செல்வங்கள்
அனைத்தையும்
இறக்கி வைத்துவிட்டோம்.

இலவசமாய் கிடைத்ததென
பல வண்ணப் பந்தல்களில்
நிறைய மூடநம்பிக்கைகளை வாங்கி
வயிறு முட்ட குடித்துவிட்டோம்.

பொய்கள்
கொழுத்துப்போய்விட்டன.
நாம் நிறைய
இளைத்து போய்விட்டோம்.

பொய்கள் அழைத்து செல்வது
மகிழ்ச்சியின் தேசத்திற்கு அல்ல!
மரணக்குழிக்குத்தான்!
உண்மை எச்சரித்துக்கொண்டே
உடன் வருகிறது.

பொய்கள் இதுவரை
உண்மையின் ஆடைகளை
உடுத்தியிருந்தன.

இப்பொழுது
தன் மூகமூடிகள்
உண்மையின் ஆடைகள்
எல்லாவற்றையும் களைந்தெறிந்து
தன்னை எவர் ஜெயிக்கமுடியும்
கோரப்பற்களைக் காட்டி
எக்காளச் சிரிப்புடன்
உண்மையைப் பார்த்து
கேலி செய்கிறது.

சாவின் விளிம்பிற்கு
வந்துவிட்டோம்.
இப்பொழுதாவது
உண்மையின் கைப்பிடிப்போம்.
கரங்களை ஒன்றிணைப்போம்.

உற்றுப்பாருங்கள்
பொய்யின் முகத்தில்
சவக்களை.

மாற்றம்... இன்னும்
தொலைவில் இல்லை

பின்குறிப்பு : நான் எழுதிய "சுதந்திரம் இன்னும் தொலைவில் இல்லை" என்ற தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்தது. அந்த கவிதையை மீண்டும் படித்துப்பார்த்தால்... இந்த தேர்தலுக்கும் பொருந்துவருகிறது. ஆகையால் மீள்பதிவு செய்திருக்கிறேன் சில மாற்றங்களுடன்.

April 13, 2009

இன்று அம்பேத்கார் பிறந்தநாள்!


சட்டங்களால்
இந்த சமூகத்தை மாற்றிவிடலாம்
என்று கனவு கண்டேன்.

இந்த சட்டங்களை எரிப்பவன்
ஒருவன் இருப்பான் என்றால்,
அதில்
நானே முதல் ஆளாக இருப்பேன்.

- டாக்டர் அம்பேத்கார்
சட்ட அமைச்சராக இருந்து விலகிய பொழுது

பிறந்த நாள் : ஏப்ரல் 14, 1891

April 8, 2009

ஜகதீஷ் டைட்லர் விடுதலையும்! சிதம்பரத்தின் மீது ஷு வீச்சும்!


1984ம் ஆண்டு, அக்டோபர் 31 ந்தேதி. இந்திராகாந்தியை இரண்டு சீக்கியர்கள் சுட்டுகொன்றனர். ஒருநாள் அமைதி. அந்த நாளில், காங்கிரசு முக்கிய பிரமுகர்கள் ஜகதீஷ் டைட்லர், சஜ்ஜன்குமார், எச்.கே.எல். பகத், தரம்தாஸ் சாஸ்திரி போன்ற காங்கிரசுகாரர்கள் தெளிவாக
திட்டமிட்டு, காங்கிரசு குண்டர்களை வைத்து, நவம்பர் 1,2,3 தேதிகளில் சுமார் 3000 சீக்கியர்களை தேடித்தேடி கழுத்தில் டயரை மாட்டி, கொடுரமான முறையில் இனப்படுகொலைகளை நடத்தினர். உலகமே காறித்துப்பியது.

இந்த படுகொலைகள் நடந்து, இரண்டு வாரத்திற்கு பிறகு, இந்திராகாந்தியின் பிறந்த நாளான நவம்பர் 19, 1984 அன்று அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி சொன்னது

“இந்திராஜியின் கொலைக்குப்பின் நாட்டில் சில கலவரங்கள் நடைபெற்றன. மக்கள் கோபமாக இருந்ததை நாம் அறிவோம். சில நாட்கள் வரை இந்தியாவே குலுங்கியது போலத் தோற்றமளித்தது. ஒரு பெரிய மரம் விழும் பொழுது அதைச் சுற்றியுள்ள பூமி அதிரத்தானே செய்யும்”.

எவ்வளவு திமிரான வார்த்தைகள். இந்த கலவரங்களுக்கான காரணகர்த்தாக்கள் என்று விசாரிக்கும் பொழுது, இந்த வார்த்தைகளுக்காகவே ராஜீவ்காந்தியையும் சேர்த்திருக்கவேண்டும். செத்துப்போவதால், சிலர் தப்பித்துவிடுகிறார்கள்.

இந்த படுகொலைகள் ஒரு அநியாயம் என்றால்... கடந்த 25 ஆண்டுகளில் இக்கொலைகளுக்கு கிடைத்த நீதி ஒரு பெரிய அநீதி. இதுவரை, சுமார் 2500 பேர் நேரடியாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். நானாவதி கமிசன் உட்பட 9 விசாரணை கமிசன் நியமிக்கப்பட்டிருக்கின்றன. கமிசன்கள் பக்கம் பக்கமாக நடந்த கொலைகளை விவரிக்கிறார்கள்.

“போலீஸ் குறித்த எந்த அச்சமும் இல்லாமல், இந்த குற்றங்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்கிற உறுதி கிடைத்தவர்களைப்போல (கொலைகாரர்கள்) செயல்பட்டனர்” என்கிறது நானாவதி கமிசன் அறிக்கை.

ஆனால், இந்த படுகொலைகளை நடத்தியதற்காக பரிசாக காங்கிரசு கட்சி அவர்களுக்கு அமைச்சர் பதவிகளும், இன்னபிற பதவிகளும் அள்ளித்தந்திருக்கிறது காங்கிரசு கட்சி.

சமீபத்திய சீக்கியர்களின் போராட்டத்திற்கு காரணம் சி.பி.ஐ. கடந்த வாரம் ஜெகதீஷ் டைட்லரை
போதிய ஆதாரமில்லை என விடுதலை செய்தது காரணம். இதுகுறித்து, உள்துறை அமைச்சர் என்ற அடிப்படையில் பத்திரிக்கையாளர் ஜர்னைல்சிங் சிதம்பரத்திடம் கேள்வி கேட்டு, நழுவுகிற பதில் தந்ததற்கு தான் இந்த ஷூ வீச்சு!

இந்த நிகழ்ச்சி எஸ்.எம்.எஸ்.ல் “சிதம்பரத்தின் மீது செருப்பு வீச்சு” என சுருக்கமாய் வந்த பொழுது, தமிழ்நாட்டில் தான் நடந்துவிட்டதோ என நினைத்தேன். பிறகு, செய்தி அறிந்தேன்.

இப்படியெல்லாம் தமிழ்நாட்டில் நடப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், ஓட்டுக்கட்சி தலைவர்கள் தமிழர்களை தீயிட்டு தற்கொலை செய்வதற்கு தான் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள். புதிய போராட்டமுறைகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதை ஈழப்பிரச்சனையில் துரோகம் செய்யும் தமிழக ஓட்டுக்கட்சிகளிடம் நாம் செய்துகாட்டவேண்டும்!

April 3, 2009

விடுதலை!



கடி ஜோக்ஸ் இல்லை!
குத்தாட்டங்கள் இல்லை!
அபத்த பேட்டிகள் இல்லை!
சகிக்க முடியாத படங்கள் இல்லை!

'உலக வரலாற்றிலேயே
முதன் முறையாக' என்ற
அலறல் இல்லை.

கள்ளக்காதல் இல்லை!
அள்ளிப்போட்ட மேக்கப்போடு
அழுகை இல்லை!

கரடியாரின்
காட்டுக்கத்தல் இல்லை!

புரட்சித்தலைவி என்ற
அழைப்பு இல்லை.

ரத்தக்கொதிப்பு இல்லை!

வீட்டில் - அப்படி
ஒரு அமைதி!

எங்க வீட்டில்
கேபிள் கனெக்சன் கட்!

April 1, 2009

யோகா – அனுபவம் (2)


யோகா செய்ய ஆரம்பித்த பொழுது, இப்படி ஒரு “சிக்கலில்” சிக்கிக்கொள்வேன் என நினைத்து கூடப்பார்த்ததில்லை.

அது என்ன ‘சிக்கல்’? என்பதை விளக்க ஒரு குட்டி பிளாஷ் பேக் பிளாக் & ஒயிட்டில் சொல்லியாக வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, என் சொந்த ஊரில் பரபரப்பு துளியும் இல்லாமல், அமைதியாக ஓடும் ஓடையைப் போல வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது என சொல்ல முடியாவிட்டாலும், ஓடிக்கொண்டிருந்தது.

அப்பொழுதெல்லாம், எப்பொழுதும் மூக்கில் ஒருபக்க அடைப்பும், கொஞ்சம் தலைக்கனத்துடன் (!) சுற்றிக்கொண்டிருப்பேன். காரணம், நமக்கு அடிக்கடி ‘சல்ப்’ பிடிப்பது தான் காரணம். தொடக்க காலங்களில், இரண்டு மாதத்திற்கொருமுறை ஜலதோசம் பிடித்து.. பிறகு, மாதம், வாரம் என சுருங்கி, ஒரு கட்டத்தில்.... தீவிரமாகி யாராவது பேசும் பொழுது ‘ஐஸ்’ வைத்தால் கூட ஜலதோசம் பிடித்துக்கொண்டது. இந்த பிரச்சனையால், என் மூக்குக்கு வாசனை என்பதே தெரியாமல் போனது. அதிதீவிர வாசனை இருந்தால் மட்டுமே என் மூக்கால் உணரமுடியும்.

நிற்க. இதற்கொரு சுமூக முடிவு கான வேண்டும் என, காது மூக்கு தொண்டை சிறப்பு நிபுணரைப் பார்த்தேன். ஒரு வருடம் மருந்து, மாத்திரை, பீஸ் என அல்லல்பட்டேன். திடீரென மருத்துவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. பணப்பிரச்சனையா என்று தெரியவில்லை. உங்களுடைய மூக்கில் ஒரு குட்டி அறுவை சிகிச்சை செய்யவேண்டும் ரூ. 10,000 ஆகும். இரண்டு நாள் ஓய்வெடுத்து விட்டு, பிறகு வேலைக்கு போய்விடலாம் என்றார்.

இதேவேளையில், என் அலுவலகம் வளர்ச்சிப்படிகளில் தாவி, சென்னைக்கு இடம்பெயர்ந்தது. என்னையும் அழைத்தார்கள்.

சென்னைக்கு நகர்வது பற்றியெல்லாம், நான் என்றைக்கும் சிந்தித்தேயில்லை. பிறகு, தீவிரமாய் சிந்தித்து, சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.

அறுவை சிகிச்சை செய்யாதது எவ்வளவு நல்லதாக போய்விட்டது என நினைத்துக்கொண்டேன்.
கூவத்தைக் கடக்கும் பொழுது பலரும் மூக்கு சுழித்தார்கள். வேகவேகமாக கடந்தார்கள். நான் சளைக்கவேயில்லை. எப்பொழுதும் போல மித வேகத்துடனே கடந்தேன்.மணம் அறியாத மூக்கால், சென்னைக்காகவே என் ஊரில் தயாராகி வந்தது போல உணர்ந்தேன்.

இப்பொழுது யோகா செய்ய ஆரம்பித்த பிறகு, மூக்கடைப்பு கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. மூச்சுப்பயிற்சி செய்வதால், மூச்சு சீரானது. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக
மூக்கிற்கு மணம் தெரிய ஆரம்பித்தது. இப்பொழுது 5 மாதம் முடிவடைந்துவிட்டது. நன்றாகவே முன்னேற்றம்.
இப்பொழுது சென்னையில் பல இடங்களை கடப்பதற்கே பலரைப்போல நிறைய சிரமப்படுகிறேன். வர வர சென்னையில் இருப்பதே பிடிக்காமல் போய்கொண்டிருக்கிறது. இப்பொழுது, ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தால், சென்னையை விட்டு தப்பிக்க ஓட தயாராக இருக்கிறேன்.

இப்பொழுது மீண்டும் முதல் வரிகளை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன்.

யோகா செய்ய ஆரம்பித்த பொழுது, இப்படி ஒரு “சிக்கலில்” சிக்கிக்கொள்வேன் என நினைத்து கூடப்பார்த்ததில்லை.

உண்மை தானே!