> குருத்து: July 2013

July 29, 2013

மூஞ்சிய பாரு போதும்!

கடந்த ஞாயிறு சரத்குமாரின் சமத்துவ கட்சி முப்பெரும் விழா ஒன்றை தீவுத்திடலில் நடத்தியது. சனிக்கிழமையன்று ஒரு தோழரைப் பார்க்க அம்பத்தூரில் துவங்கி திருவான்மியூர் வரை சமத்துவ கட்சி சுவரொட்டிகளை பார்த்துக்கொண்டே சென்றேன். முப்பெரும் விழா என்றால் என்ன? என ஒவ்வொரு சுவரொட்டியாக பார்த்துக்கொண்டே போனேன். சுவரொட்டியில் கட்சியின் தலைவர் சரத்குமார் பாதியை அடைத்திருந்தார். மீதியை சரத்தின் அன்பு தம்பிகளும், பெயர்களும், கட்சி பதவிகளும் நிரப்பி இருந்தன. கடைசி வரை முப்பெரும்விழா என்றால் என்ன அர்த்தமே தெரிந்துகொள்ள முடியவில்லை.

அடுத்தநாள் செய்திதாளில் விளம்பரம் பார்த்து தான் புரிந்துகொண்டேன்.  முப்பெரும் விழாவில் ஒரு விழாவிற்கான காரணம் காமராஜரின் பிறந்தநாள் ஒன்று.  அவர்கள் மதிப்பதாக சொல்லும் காமராஜரின் புகைப்படம் பெரும்பான்மையான சுவரொட்டிகளில் இல்லை.


மூஞ்சிய பாரு போதும்!  என்பதாக தான் வாக்கு அரசியலில் உள்ள கட்சிகளின் லட்சணம்  இருக்கிறது!

July 26, 2013

வேலம்மாள் மாணவன் பலி‍ - அறியாத செய்தி!

இரண்டு நாள்களுக்கு முன்பு, ஒரு பள்ளி மாணவன் வேனிலிருந்து தலையை நீட்டியதால் வேறு ஒரு வேன் மோதி பலி என் அனைத்து செய்திதாள்களிலும் வெளியானது.

அந்த மாணவன் திருவள்ளூர் மாவட்ட‌த்தில் மதனேஞ்சரி (கரடிபுத்தூர் - ஊத்துக்கோட்டை அருகே) ஊரைச் சேர்ந்தவர். மூன்றாவது வகுப்பு வரை அருகாமை பள்ளியில் படித்த மாணவன் திவாகரை, பள்ளி சரியாக சொல்லித்தரவில்லை, பையன் சரியாக‌ படிக்கவில்லை என இந்த ஆண்டு பொன்னேரி, பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். வீட்டுக்கும் பள்ளிக்கும் உள்ள தூரம் 55 கிமீ தூரத்துக்கும் மேல்!
அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து, கிளம்பி பள்ளிக்கு செல்கிறவன், இரவு 7.30 மணிக்கு வீடு வந்து சேர்ந்திருக்கிறான். பயணம் தரும் அசதியில் வேனில் தூங்கி கொண்டு தான் திவாகர் பயணம் செய்திருக்கிறான். உடன் பயணித்த மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இப்படி தூங்கி கொண்டே சென்றது தான் இப்பொழுது திவாகரின் உயிரை பறித்திருக்கிறது!

மாணவன் எங்கிருந்து வந்தால் என்ன, எனக்கு காசு தான் முக்கியம் என்று தான் வேலம்மாள் பள்ளி நினைத்திருக்கிறது. அதே போல பள்ளி வாகனத்தை அனுப்புகிறேன் என சொல்லி, காசு வாங்கி, ஒரு தனியார் டெம்போ வேனை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

இப்பொழுது மாணவன் திவாகர் இறந்துவிட்டான். பெற்றோர் தரப்பில் இருவர் போய் நீதி கேட்க போன‌தற்கு, பள்ளியின் உள்ளேயே அனுமதிக்கவில்லையாம். ஒரு லாரி நிறைய மக்களை திரட்டி, பள்ளியை முற்றுகையிட்ட பிறகு, விசயம் பெரிதாக ஆகிறது என புரிந்துகொண்டு, வேலம்மாள் நிர்வாகம் இரண்டாவது குழந்தைக்கு இலவச கல்வியும், இறந்ததற்காக‌ ஒரு தொகையும் பேசி  பிரச்சனையை அமுக்கிவிட்டது. இது ஒரு பச்சை படுகொலை என சொல்லலாம். இன்னும் எத்தனை குழந்தைகளை இந்த மோசமான சூழ்நிலை காவு வாங்கும் என தெரியவில்லை.
இது குறித்து தெரிந்தவர்களிடம் விவாதிக்கும் பொழுது, இவ்வளவு தூரம் படிக்க அனுப்பிய பெற்றோர்கள் மீது பிரதானமாக குறை சொல்கிறார்கள். மாணவனின் குடும்பம் விவசாய குடும்பம். மீதி நேரம் ஒரு பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.

பெற்றோர்களின் உலகம் ரெம்ப சிறியது.  அவர்களின் படிப்பறிவு மிக குறைவு. தம் பிள்ளைகள் சிரமபட்டாவது படிக்கவெண்டும் என நினைப்பார்கள்.  வேலம்மாள் பள்ளி என்பது ஒரு சென்னையிலும், தமிழகத்தின் இன்னும் சில மாவட்டங்களில் நிறைய கல்வி நிறுவனங்கள் நடத்துகிற நிறுவனம்.  ஒரு மாணவன் 50 கிமீக்கு மேல் பயணம் செய்வது சரியா? அவன் எப்படி வந்து படிப்பான்?  என்ற அடிப்படை அறிவு கூடவா இருக்காது. இவர்கள் எல்லாம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி சொல்லிக்கொடுத்து மாணவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள போவதை நினைக்கையில் பயமாய் இருக்கிறது.

அருகாமை பள்ளி, தரமான பள்ளி, அரசு இலவச கல்வி வேண்டும் என்ற புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வைத்த கோரிக்கைகள் தான் நினைவுக்கு வருகின்றன.

தொடர்புடைய சுட்டி :
 
http://www.dailythanthi.com/node/385610

லஞ்சம் ‍ - ஒரு அனுபவம்!

ந்த நிகழ்வு நடந்து சில நாள்களாகிவிட்டன.  யாரிடமாவது சொன்னால் தான் மனசு ஆறும் என தோன்றுகிறது. கற்பனை கதைகளை விட உண்மை சம்பவங்களுக்கு நிறைய மதிப்பு இருக்கிறது. நான் சொல்லப்போவது கூட அப்படி ஒரு உண்மைச் சம்பவம்தான்.
****
பணம்அன்று காலையில் 9 மணிக்கு அந்த நிறுவனத்தில் இருக்க வேண்டும் என அவசர அவசரமாய் கிளம்பிக்கொண்டிருந்தேன். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தணிக்கைக்கு தேவையான எல்லா பதிவேட்டுகளையும் தயார் செய்துவிட்டேன். இருந்தாலும், அதிகாரிகள் 10 மணிக்கு வருவதற்கு முன்பாக ஒருமுறை சரிபார்த்துவிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா!

முன்பெல்லாம் தணிக்கை என்றாலே உடலிலும், மனதிலும் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ளும். வருகிற அதிகாரிகளெல்லாம் காசு வாங்குகிற அதிகாரிகளாகவே இருப்பினும் இதில் ஒரு சிக்கலும் இருந்தது. திருவிளையாடல் தருமி போல, எவ்வளவு தவறு இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போல கூடுதலாகவோ, குறைச்சலாகவோ லஞ்சம் முடிவாகும். இதனால் முதலாளியின் மனம் வருந்தும். அதனால்,எந்த தவறும் கண்ணில் பட்டுவிடக்கூடாதே என இல்லாத கடவுளை வேண்டிக்கொண்டு கிளம்பினேன்.

பத்து மணிக்கு இரு கலால் (Excise) அதிகாரிகளும் சரியாக வந்துவிட்டனர். இப்படி தணிக்கைக்கு வருவதற்கு கண்டிப்பாக அலுவலகத்தில் போக்குவரத்து படி தந்துவிடுவார்கள். இருப்பினும் நம் செலவில் கார் ஏற்பாடு செய்துதர சொல்வார்கள். அதிகார பிச்சை என்பது இதுதான்.

மேலதிகாரிக்கு வயது 50 இருக்கும். கீழ் அதிகாரிக்கு வயது 45 இருக்கும். எப்பொழுதும் இப்படி தணிக்கைக்கு வரும் அதிகாரிகள் ஒருவித இறுக்கத்துடன் வருவார்கள். தோரணையுடன் பேசுவார்கள். அதாவது ரெம்ப கறாராக இருக்கிறார்கள் என புரிந்துகொள்ள வேண்டுமாம். இவர்கள் அந்த அளவுக்கு இறுக்கமாய் இல்லை.

தணிக்கை ஆரம்பித்தது. கீழ் அதிகாரி பதிவேடுகளையும் பில்களையும் ஒவ்வொன்றாக சோதனை செய்ய ஆரம்பித்தார். மேலதிகாரி மூன்றாண்டு நிதி நிலை அறிக்கையை நோட்டம் விட ஆரம்பித்தார். கீழதிகாரி எல்லா விற்பனை பில்களையும் சரிபார்த்துவிட்டார். கொள்முதல் பில்களையும் ஒரு ஆண்டுக்கு சரிபார்த்துவிட்டார். இரண்டு மணி நேரம் கடந்துவிட்டது. இருவராலும் தவறுகளை கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்கவில்லை என்றால், பணத்தை கறக்கமுடியாதே என்ற கவலை இருவர் கண்ணிலும் அப்பட்டமாக தெரிந்தது. இதற்கிடையில், மேலதிகாரியின் மூத்தப் பெண் அவ்வப்பொழுது போனில் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அவ்வப்பொழுது தன் கீழ் அதிகாரியுடன் தன் மகள் பற்றி பேசியதில் நாம் புரிந்துகொள்ள முடிந்தது.

மேலதிகாரி பல ஆண்டு காலம் சேவை வரித்துறையில் வேலை செய்து, சமீபத்தில் தான் கலால் துறைக்கு மாறி இருக்கிறார். அதனால், நிதி நிலை அறிக்கையில் சேவை வரியில் தவறு கண்டுபிடிப்பதிலேயே குறியாய் இருந்தார். ஒரு தவறை கண்டுபிடித்ததும் முகத்தில் பல்பு எரிந்தது. ஒரு குறிப்பிட்ட கணக்கிற்கு கிட்டத்தட்ட 30 லட்சத்திற்கு மேலான தொகைக்கு சேவை வரி கட்டவில்லை. அதற்கு வரி கட்டினால், 3 லட்சத்திற்கு மேல் கட்டவேண்டும் என பேச ஆரம்பித்தார். அதற்கு கட்ட தேவையில்லை என பதில் சொன்னாலும் என்னை கண்டு கொள்ளவேயில்லை. முதலாளியின் அறைக்கு போய் பேரம் பேச ஆரம்பித்தார். முதலாளியுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, அவ்வப்பொழுது வெளியே வந்து, அவருடைய பெண் தன்னுடைய கணவன் மோசமாக நடத்துவதை, கொடுமைப்படுத்துவதை சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தார். ‘

சாப்பிடுவதற்கான நேரம் நெருங்கியது. முதலாளி அதிகாரிகளை உணவகத்துக்கு தள்ளிக்கொண்டு போய், ஒன்றரை மணி நேரம் செலவழிக்க வைக்கலாம் என்ற திட்டத்தோடு பேசினார். அவர்களோ வாங்கிக்கொண்டு வரச்சொல்லுங்கள். இங்கேயே சாப்பிட்டுவிடலாம் என சொல்லிவிட்டனர். என்ன வேண்டும் என கேட்டதற்கு, ஆடு, மீன், கோழி என எதையும் விட்டுவைக்காமல், கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கேட்டனர். எல்லாம் இலவசம் தானே!

ஒரு புகழ்பெற்ற உணவகத்திலிருந்து அவர்கள் கேட்டது எல்லாம் சுடச்சுட வந்தது. அந்த நன்கு குளிரூட்டப்பட்ட சாப்பாட்டு அறையிலும் வேர்க்க விறுவிறுக்க பரம திருப்தியுடன் தின்று முடித்தனர். சிறிது நேரம் மொக்கை கதைகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
லஞ்சம்
லஞ்ச பரிமாற்றம்.

மீண்டும் காரியத்தில் கவனமானார்கள். மேலதிகாரி லஞ்ச பேரத்தை விட்ட இடத்திலிருந்து முதலாளியுடன் பேச துவங்கினார். இரண்டு லட்சம் கேட்டார். அதை ஒரு லட்சமாக குறைப்பதற்கு முதலாளி ஏதோதோ சொல்லிக்கொண்டிருந்தார். பேச்சிற்கு இடையிடையே வெளியே வந்து தன் பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, லேசாக கண்ணீர் சிந்தினார். கைக்குட்டையை எடுத்து யாரும் அறியாமல் துடைத்துக்கொண்டார். தன் பெண்ணிடம் நான்கு மணிக்கே வீட்டுக்கு வந்துவிடுகிறேன். மற்றவற்றை நேரில் பேசிக்கொள்ளலாம் என்றார். மீண்டும் உள்ளே போய் உனக்கும் பாதகம் வேண்டாம். எனக்கும் பாதகம் வேண்டாம் என 1.5 லட்சம் என ஒரு ஒப்பந்ததிற்கு வந்தார்கள்.

அதற்குப் பிறகு, எல்லாம் சுமூகமாய் முடிந்தது. அரசு சரியில்லை என அதிகாரியும், முதலாளியும் சிரித்து சிரித்து பேசினார்கள். இறுதியில் பணத்தை கவரில் போட்டு வாங்கி கொண்டு, கிளம்பும் பொழுது, முதலாளியிடம் கைகொடுத்து “உங்களுக்கு ஏதாவது சந்தேகம், உதவி என்றால் தயங்காமல் கேளுங்கள். உதவுகிறேன்!” என வாயெல்லாம் பல்லாக பேசினார்கள். என்னிடம் கைகொடுத்து, “எந்த தப்பும் இல்லாம, எல்லா பதிவேடுகளையும் (Registers) நீட்டா பராமரிக்கிறீங்க! வாழ்த்துக்கள்! ” என்றனர். நானும் சம்பிரதாயமாக புன்னகை செய்தேன்.

அவர்கள் போனதும், முதலாளியிடம் போய் “இல்லாத தவறை அவர் பில்டப் செய்து பணம் கேட்டால் நீங்களும் ஏன் இவ்வளவு பணம் கொடுக்கிறீர்கள்?” என்றேன். அவர் “முதல் தணிக்கையின் பொழுது, வந்த அதிகாரி ஒரு வருட தணிக்கைக்கு ஒரு லட்சம் வரை கேட்டான். மேலும் தாறுமாறா பேசி, திட்டவும் செய்தான். என்னை அவன் அலுவலகத்துக்கு நாலைந்து தடவை வரச்சொல்லி இழுத்தடிச்சான். ஒரு லட்சத்திலிருந்து கடைசி வரைக்கும் குறையவே இல்லையே! அந்த விதியை மீறிட்டீங்க! இந்த விதியை மீறிட்டீங்கன்னு என்னை மிரட்டினான். வேறு வழியில்லாமல் அவன் கேட்டதை கொடுத்தேன். இந்த ஆள் அப்படி இல்லையே! தொடக்கத்திலிருந்து கூலா தான் பேசினான். அவன் சொன்ன சேவை வரி விசயம் ஒன்னும் இல்லைன்னு நீங்க சொல்றீங்க! அது தப்புன்னு அவனிடம் நிரூபிச்ச உடனே அவன் கிளம்பிருவானா! மாட்டான். அடுத்து என்ன தப்பு இருக்குன்னு நோண்ட ஆரம்பிச்சிருவான். இந்த கம்பெனியை நானும் என் மனைவியும் நடத்துகிறோம். இன்னொரு கம்பெனியை என் பெயரில் நடத்துறேன். இன்னொரு கம்பெனியை என் மனைவி பெயரில் நடத்துறேன். அதையெல்லாம் நோண்டி , ஏதாவது பெரிய தப்பை கண்டுபிடிச்சான்னு அதற்கு அப்புறம் 3 லட்சம் கொடுன்னு அடம்பிடிப்பான். எதுக்கு வம்பு, ஒரு வருடத்திற்கு ரூ. 50,000 மூணு வருடத்திற்கு 1.50 லட்சம். ஒரு கணக்கு வைச்சுத் தான் கொடுத்தேன்.” என்றார். இவரும் ஒரு மனக்கணக்கு போட்டுத்தான் தணிக்கையை எதிர்கொண்டிருக்கிறார் என புரிந்தது.

எல்லாவற்றையும் எடுத்து வைத்து, கிளம்பும் பொழுது ஐந்தரைமணி. இருட்ட ஆரம்பித்தது. தென்மேற்கு பருவமழை காலம் இது. மழை பெய்ய துவங்கியது. இன்று நடந்த நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

நாம் தான் இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பார்க்கிறோம். எந்த தவறும் இல்லாத பொழுது, ஏன் இவ்வளவு லஞ்சம் தர தயாராய் இருக்கிறார்? அதில் அவருக்கு வருத்தமே ஏன் இல்லை என மனதில் கேள்வி எழுந்தது. வரி ஏய்ப்பு செய்வதற்காக மற்ற நிறுவனங்கள் துவங்கியது ஒரு காரணம்.. மறுபுறம், நமக்கு தெரியாமல், சரக்கு வாங்காமலே கொள்முதல் பில்கள் வாங்கி கலால் வரி ஏய்ப்பு செய்வார் போலிருக்கிறது. அதனால் தான் லட்சகணக்கில் லஞ்சம் தர தயாராய் இருக்கிறார் என புரிந்தது.

பொதுவாய் வி.ஏ.ஒ. வாங்கும் லஞ்சம், இ.பி. கனெக்சனுக்கு அதிகாரி வாங்கும் லஞ்சம் தான் அடிக்கடி பத்திரிக்கைகளில் கண்ணில்படும். இதனால் சாதாரண மக்கள்தான் லஞ்சம் கொடுத்து இந்தியாவை குட்டிச் சுவர் ஆக்குவதாக அண்ணா ஹசாரே கனவான்கள் துள்ளிக் குதிப்பார்கள். ஆனால் தொழிற்துறையில் சிறு முதலாளிகளில் துவங்கி பெரு முதலாளிகள் வரை அதிகார வர்க்கத்தினருக்கு பல லட்சங்கள்-கோடிகளில் தரும் லஞ்சம் பலரும் அறியாத செய்தி. இந்த லஞ்சம் எப்பொழுதுமே வெளியில் வராது.

வினவில் வந்த பாடி ஆஃப் லைஸ் எனும் ஹாலிவுட் திரைப்படத்தில் சிஐஏ மேலதிகரியாக நடிக்கும் ரசல் குரோவ் அமெரிக்காவில் தனது வீட்டில் மனைவி குழந்தைகளுடன் அன்னியோன்யமாய் வாழ்ந்து கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கும் போதே இடையில் தனது கீழதிகாரிகளுக்கு கொலை செய்யும் உத்திரவை இயல்பாக சொல்லுவார். இந்த சம்பவத்தில் மேலதிகாரி ஒருபக்கம் முதலாளியுடன் திறமையாக லஞ்ச பேரம் நடத்திக் கொண்டே மறுபுறம் மகளின் நிலை கண்டு கண்களில் கண்ணீர் விடுகிறார். இடையில் அவர் செட்டிநாட்டு சிக்கனையும், மட்டனையும் முழுங்குவதையும் இயல்பாக செய்கிறார். இந்தியாவில் இருப்பது போலி ஜனநாயகம் , முதலாளிகள் மற்றும் அதிகார வர்க்கம்தான் இங்கே கொள்ளையடிக்கிறது என்பதற்கும் வேறு சான்றுகள் வேண்டுமா என்ன?

- குருத்து

இந்த கட்டுரை வினவில் வெளிவந்தது.

July 23, 2013

தொழிலாளர்களுக்கு பிஸ்கெட் கட்!

நேற்று மாலை 6 மணி அளவில் ஒரு நிறுவனத்தில் தேநீர் தந்தார்கள். வழக்கமாய் தேநீருடன் 3 பிஸ்கெட்டுகள் தருவார்கள். ஏன் தரவில்லை என்றதற்கு, நிறுவனத்தின் மாத விற்பனை தொடர் சரிவால், "பிஸ்கெட் கட்" என்றார்கள்.

வருட விற்பனை 12 கோடியாய் இருந்த பொழுது, ஆப்பிள் ஜூஸ் ஏதும் தொழிலாளர்களுக்கு தரவில்லை. வருட விற்பனை 3 கோடியான பொழுது, பிஸ்கட்டை கூட வெட்டுகிறார்கள்.

உலக முதலாளிகளோ உள்ளூர் முதலாளிகளோ எல்லோரும் ஒரே மாதிரியாக தான் சிந்திக்கிறார்கள்.

# என்னுடைய தளத்தையோ/முகநூலையோ எனக்கு தெரிந்த‌ முதலாளிகள் யாரும் பார்ப்பதில்லை. பார்த்துவிட்டால், தேநீர் என்ன, நிறுவனத்திற்கு உள்ளேயே விடமாட்டார்கள். :)

July 21, 2013

அகதியென்றால் அவமானம் தாங்க பழக வேண்டும்?

life is beautiful, Schindler's List , The Pianist - நாஜிக்களின் வதை முகாம் பற்றிய படங்களில் இதுவும் முக்கிய படம் தான்

ஜெர்மனி. இரண்டாம் உலகப்போர் காலகட்டம். 9 வயது புரூனோ பள்ளி விட்டு சந்தோசமாய் நண்பர்களுடன் வீட்டை நோக்கி ஓடிவருகிறான்.  அப்பா இட்லரின் நாஜிப்படையில் ஒரு முக்கிய அதிகாரி.  பதவி உயர்வு கொடுத்து, வேறு ஊருக்கு மாற்றல் செய்யப்படுகிறார். பள்ளியை, நண்பர்களை விட்டு வர புரூனோவுக்கு மனம் வரவில்லை. அப்பா ஆறுதல் சொல்லி அழைத்துப்போகிறார்.

போனால், அது ஊருக்கு ஒதுக்குப்புறமான தனியான பங்களா. சுற்றிலும் வீடுகள் இல்லை. பள்ளி இல்லை.  புரூனோவின் அப்பா, புரூனோவிற்கும், அவனின் அக்காவிற்கும் வீட்டில் வந்து சொல்லித்தரும் ஒரு ஆசிரியரை ஏற்பாடு செய்கிறார்.  பள்ளி இல்லாமல், நண்பர்கள் இல்லாமல் அவனுக்கு எதுவும் பிடிக்கவேயில்லை. தனிமையில் வாடுகிறான்.

வீட்டை விட்டு கொஞ்சம் தள்ளி வேலியிடப்பட்ட நாஜிக்களின் வதைமுகாம் ஒன்று இருக்கிறது.  அங்கு சிறைப்பட்டிருக்கும் யூத மக்களுடன் ஒரு யூத சிறுவனும் வேலை செய்கிறான். அவனக்கும் புரூனோவின் வயது தான்.

வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் பின்பக்கமாக ஜன்னலேறி குதித்து, வெளியே செல்லும் புரூனோ முகாம் சிறுவனை எதைச்சையாக சந்திக்கிறான். தொடர்ச்சியாய் பேசி நெருங்குகிறார்கள்.  புரூனோ தின்பண்டங்கள் கொண்டு வந்து அவனுக்கு தருகிறான். நட்பு வளர்கிறது.

வீட்டில் ஒருவர் உதவியாளராக இருக்கிறார். அவர் ஒரு யூத டாக்டர். வீட்டிற்கு வரும் நாஜிஅதிகாரிகள் அவரை மிக மோசமாக நடத்துகிறார்கள்.  புரூனோ இதையெல்லாம் பார்க்கிறான்.  யூதர்கள் கெட்டவர்கள் அவர்கள் ஒழித்துக்கட்டப்பட வேண்டியவர்கள் என ஆசிரியர் பாடம் பயிற்றுவிக்கும் பொழுது, பரிதாபமான யூத மருத்துவரும், முகாம் நண்பனும் நினைவுக்கு வருகிறார். மனம் ஏற்க மறுக்கிறது.

முகாமில் தொடரும் யூத வதைகள், கொலைகள் புரூனோவின் அம்மாவிற்கு தெரியவர, அவள் பதட்டமாகிறாள். அங்கிருந்து சொந்த ஊருக்கு செல்ல கணவனை வற்புறுத்துகிறாள். கணவனோ மறுக்கிறான்.  தொடர்ந்து போராடுகிறாள்.

(வதை) முகாம்கள் யூதர்களை நல்லபடியாக தான் நடத்துகின்றன என்பதை உலகை நம்ப வைக்க (ராஜபக்சே சொல்லும் பொய்களை போல) ஒரு படம் எடுக்கிறார்கள். அந்த படம் பார்த்து புரூனோ சந்தோஷமடைகிறான். அம்மாவின் தொடர் வற்புறுத்தலால், புரூனோவின் அப்பா மூவரையும் ஜெர்மனுக்கே அனுப்ப முடிவு செய்கிறார்.

கிளம்புவதற்கு முதல்நாள், முகாம் நண்பன் தன் அப்பாவை காணவில்லை என கவலையுடன் தெரிவிக்கிறான். முகாமில் உடுத்தும் ஆடையை போல, எனக்கு ஒன்று நாளை எடுத்துவா! இருவரும் சேர்ந்து தேடலாம் என இருவரும் பேசிக்கொள்கிறார்கள்.

ஊருக்கும் கிளம்பும் நாள். கிளம்புவதற்கான பரபரப்பில், யாருக்கும் தெரியாமல் வெளியேறி நண்பனை சந்திக்க கிளம்புகிறான்.  வேலியை தாண்டி உள்ளே நுழையும் அவன், ஆடையை மாற்றிக்கொண்டு இருவரும் உள்ளே போகிறார்கள்.

அன்று கொல்வதற்காக கூட்டம் கூட்டமாக யூதர்களை நகர்த்தி ஒரு அறைக்கு கொண்டு செல்கிறார்கள். கூட்டத்திற்கு நடுவே இருவரும் மாட்டிக்கொள்கிறார்கள். இதற்கிடையில் புரூனோவை காணவில்லை என அனைவரும் தேட ஆரம்பிக்க, முகாமிற்குள் உள்ளே புகுந்ததை கண்டுபிடிக்கிறார்கள். வேகவேகமாய் உள்ளே வந்து பார்க்கும் பொழுது, எல்லாமும் முடிந்துவிடுகிறது.

இட்லர் வரலாற்றில் பல லட்சகணக்கான யூதர்களை கொன்றுகுவித்தான். அதன் ரத்த சாட்சிகளாய் நிறைய படங்கள், நாவல்கள் வெளிவந்திருக்கின்றன.  இன்னும் வரும்.  அப்படி எழுதப்பட்ட ஒரு நாவலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

வதை முகாமில் கூட்டம் கூட்டமாய் யூதர்களை கொன்று குவிக்கும் பொழுது, தன் பையனுக்காக அந்த அதிகாரி துடிக்கிற காட்சி எத்தனை முரண்!  உங்களுக்கு வந்தா ரத்தம்! எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா! என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

புரூனோவின் வழியே கதை பயணிப்பதால் வதை முகாம் சித்ரவதைகள் எதுவும் காண்பிக்கப்படவில்லை.  ஆனால், அதன் தீவிரத்தை படம் முழுவதும் நாம் உணரமுடியும். நாஜிக்களின் அதிகாரிகள், இளம் அதிகாரிகள் எல்லோரும் ஒருவித மன இறுக்கத்துடனே காணப்படுவார்கள்.

படத்தில் அனைவருமே அருமையாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக அந்த இரு சிறுவர்களும் இயல்பாக பொருந்தியிருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு எல்லாமும் பட்த்தின் சிறப்புக்கு உதவி செய்திருக்கின்றன.

படத்தில் ஒரு காட்சி.  முகாம் சிறுவன் வீட்டில் சாப்பாடு தட்டுக்களை சுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறான். புரூனோ அவனிடம் பேசிக்கொண்டிருக்கிறான். மேஜையில் தின்பண்டங்கள் நிறைய இருக்கும்.  வேண்டுமா என கேட்டு, புருனோ எடுத்துக்கொடுப்பான். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு நாஜி இளம் அதிகாரி திடீரென உள்ளே வந்து பார்த்துவிடுவான்.  திருடி தின்கிறாயா என மிரட்டுவான். புரூனோவை எனக்கு தெரியும் அவன் தான் கொடுத்தான் என்பான். புரூனோவோ பயத்தில் இவனை தெரியாது என சொல்லிவிடுவான். அந்த பையன் கடுமையாக தண்டிக்கப்படுவான்.

அடுத்த நாள் புரூனோ அவனை சந்திக்கும் பொழுது, பயத்தில் தெரியாது என சொல்லிவிட்டதற்காக மன்னிப்பு கேட்பான். அகதி என்றால் அவமானத்தை தாங்க பழகி கொள்ள வேண்டும் என்பான்.  உண்மையான வார்த்தைகள். ஈழத்தமிழ அகதிகள் கூட இங்கு தமிழ்நாட்டில் எத்தனையோ அவமானங்களை தாங்கித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 30 ஆண்டுகள் இங்கு குடியிருந்தால் கூட குடியுரிமை கிடைக்காது! எப்பொழுதும் சட்டவிரோத குடியேறிகள் தான். ஒரு குற்றப் பரம்பரையை போலத்தான் நடத்தப்படுகிறார்கள். அதனால், தான் உயிருக்கு துணிந்து ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்கிறார்கள்.

மற்றபடி, இந்த படங்கள் எல்லாம் இனத்தூய்மை, சாதித்தூய்மை பேசுபவர்களை எல்லாம் அரசியல் அரங்கில் இருந்து ஒழித்துக்கட்டவேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும் பாடங்கள். இதோ சிறுபான்மைகளை திட்டமிட்டு கொன்று குவித்த மோடி, இன்று பிரதம வேட்பாளராக முன்நிறுத்தப்படுகிறார்.  சாதித்தூய்மை பேசும் இராமதாசு அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களை சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்க முயல்கிறார். நாம் விரைந்து செயல்பட வேண்டிய காலமிது!

July 20, 2013

காப்பியடிப்பது ஒரு கலை!

இரண்டாம் வகுப்பு படிக்கும் என் மகள்

"நேத்து என் பிரண்ட் ஜீவிதா என்னைப் பார்த்து காப்பியடிச்சாப்பா!"

"சரி! நீ எவ்வளவு மார்க்? ஜீவிதா எவ்வளவு மார்க்?"

"நான் 6 மார்க். ஜீவிதா 7 (10க்கு)" :)

"உன்னைவிட அதிகமா மார்க் வாங்கியிருக்கு ஜீவிதா! நீ எப்படி காப்பியடிச்சான்னு சொல்ற?"

"மிஸ் ஏதோ தப்பா போட்டுட்டாங்க போலிருக்கு!"

"இனிமே ஜீவிதாவுக்கு காட்டுவியா?"

"அவ தான்ப்பா பார்த்து எழுதுறா! அவ தானே நிறுத்தனும்!"

"ரெண்டு பேரும் நல்லா படிச்சா காப்பியடிக்க வேண்டியதில்லையே! "

"அவளுக்கு வேகமா படிக்க, எழுத வரலப்பா!"

"அப்ப உன் பிரண்டுக்கு எழுத, படிக்க உதவி செய்!"


பின்குறிப்பு : எனக்கு ஆறாம் வகுப்பில் சரவணன்னு ஒரு பிரண்ட் இருந்தான். என் கணக்கு பேப்பரை பார்த்து புல்லா காப்பியடிப்பான். ஆனால், அவனுக்கு இங்கிலீஷ் நல்லா வரும். கொஞ்சம் காட்டுவான். பிறகு காட்டமாட்டான். முதல் ரேங்க் வந்துவிடக்கூடாதுல்ல! அதில கவனமாய் இருப்பான். கப்பி பய!

அதற்கு பிறகு எவனைப் பார்த்தும் காப்பியடிக்கும் பாக்கியம் கிடைக்கவே இல்ல! எல்லாம் நம்மள விட மக்கு பசங்களா நம்ம பக்கத்துல உட்கார்ந்தா எப்படி காப்பியடிக்க!

July 18, 2013

வினவு - தொடரட்டும் உங்கள் புரட்சிகர பயணம்!

வினவு தோழர்களுக்கு,

புரட்சிகர வணக்கங்கள். ஆறாம் ஆண்டு பிறந்தநாள் பதிவு ஐந்தாண்டு நினைவுகளை மேலேழும்ப வைத்துவிட்டன.

இணையத்தில் வினவின் வருகைக்கு முன்பு பல ம.க.இ.க தோழர்கள் தங்கள் தளங்களில் எழுதிக்கொண்டிருந்தார்கள். இவ்வளவு பேர் இருக்கிறார்களே என பலரும் பொறுமுவார்கள். பொறாமையில் ஒரு ஆள் தான் வேறு வேறு பெயர்களில் எழுதுகிறார்கள் என கிசு கிசு பேசுவார்கள்.

அந்த காலங்களில் பதிவர் தோழர் அசுரன் தான் எங்கள் தளபதி. இந்துத்துவவாதிகளுடன் கருத்து ரீதியாக அடிக்கடி கட்டிப்புரண்டு சண்டை போடுவார். செம ரகளையாக இருக்கும். அவரின் படையணியில் ஒரு சிப்பாயாக உடன் நிற்பதே அவ்வளவு கவுரவம்.

அச்சுத்துறையில் அரசியல் ஏடான புதிய ஜனநாயகம், பண்பாட்டு இதழான புதிய கலாச்சாரம் ஒரு அமைப்பாளனாய் செயல்பட்டது போல இணையத்தில் ஒரு கலககாரனாக, அமைப்பாளனாக வினவு களம் இறங்கியது. இனி எதிரிகளை வினவு பார்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை வந்தபிறகு, தோழர் அசுரன் களப்பணிகளுக்கு சென்றுவிட்டார்.

தொடக்க காலங்களில் வினவை தமிழ்மணத்திலும், மற்ற தளங்களிலும் பிரபலப்படுத்த எடுத்த தனிப்பட்ட முயற்சிகள் எல்லாம், இப்பொழுது வினவின் பரந்த பரப்பெல்லையை கண்டு வெட்கம் கொள்ள வைக்கின்றன. வினவை யாராவது விமர்சித்துவிட்டால் அவர்களோடு போய் மல்லுக்கட்டியது நினைவுக்கு வருகிறது.

வினவு பிரபலமாகும் பொழுது, பதிவுகளில் விவாதங்கள் களை கட்டியது. இணைய வசதி, வேலைப்பளு எல்லாம் விவாதங்களில் பங்கேற்பதை சாத்தியமில்லாத நிலையில் இருந்தேன். இருப்பினும் எல்லா வாதங்களையும் கொஞ்சம் தாமதமாய் ஆனாலும் வாசித்துவிடுவேன். கட்டுரைக் குறித்த என் கருத்தையும் முடிந்த அளவில் பதிவு செய்துவிடுவேன்.

விவாதங்களில் கேள்விக்குறி, என்கவுன்டர், கலகம், மா.சே, அரைடிக்கெட் என இன்னும் பலரும் பங்கேற்பார்கள். விவாதங்கள் நிறைய கற்றுத்தந்திருக்கின்றன. ஒரு சமயத்தில் தோழர் அசுரனைப் போல வினவு எல்லாம் பார்த்துக்கொள்ளும் என் களத்திற்கு போய்விட்டார்கள் என நினைக்கிறேன்.

முன்பெல்லாம் தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் இருப்பதினாலேயே, முதலாளித்துவ பத்திரிக்கைகளும், சானல்களும் நக்சல்பாரி அமைப்புகள் செய்யும் எழுச்சிமிக்க போராட்டங்களை இருட்டடிப்பு செய்துவந்தார்கள். தினமணியில் கூட அமைப்பு பெயர்களை வேண்டுமென்றே தப்பும் தவறுமாக எழுதுவார்கள். உங்கள் நிருபர்களுக்கு எழுத படிக்க தெரியாதா? என்று கூட கடிதம் எழுதி திட்டியிருக்கிறேன். களத்தில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் எழுச்சியான செயல்பாடுகளும் இணைய உலகில் வினவும் அந்த நிலைமையை மாற்றி இருக்கின்றன.

தொடர்ந்து வினவை வாசிக்கிற, ஆனால் மறுமொழி எதுவும் இடாத சில நண்பர்கள் சில ஆலோசனைகளை தெரிவித்தார்கள்.

* ரசிய புரட்சி, சீனப் புரட்சிகளை ஒரு வரலாற்று தொடர் போல வெளியிடவேண்டும்

*  மார்க்சிய ஆசான்கள், புரட்சியாளர்களின் வாழ்க்கையை தொடர்களாய் வெளியிடவேண்டும்.

* வாசகர்களின் கேள்வி பகுதி பகுதியை தொடர்ந்து செயல்படுத்தவேண்டும்.

*  கடைகளுக்கு சென்றால் நிறைய புதிய புத்தகங்கள் வரவேற்கின்றன. அதைப் படித்து நல்ல நூலை தேர்ந்தெடுப்பது சிரமமாக இருக்கிறது. புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

* பெண்களுக்காக கவனம் கொடுத்து, கட்டுரைகள், சிறுகதைகள் என எழுதவேண்டும். பகுதியில் வேலை செய்யும் பெண் தோழர்கள் அமைப்பு கட்ட இவை கண்டிப்பாக உதவும்.

*  இப்பொழுது படிக்கும் பழக்கம் குறைந்து, பார்க்கும் பழக்கம் அதிகமாகி இருப்பதால், நல்ல திரைப்படங்களை அறிமுகப்படுத்தவேண்டும்.

* மறுமொழிகளை ‘எடிட்' செய்யாமல், வினவு அனுமதிக்கிறது என பலரும் பாராட்டி உள்ளார்கள். ஆனால், விவாதம் சில சமயங்களில் வசவுகளாக மாறி, அடித்துக்கொள்கிறார்கள். அதை வினவு சரியான சமயத்தில் தலையிட்டு நெறிப்படுத்த வேண்டும்.

* நீங்களே செய்ய திட்டமிட்டு இருப்பதை பட்டியலிட்டு இருக்கிறீர்கள். அதை விரைவில் ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, புதிய கலாச்சார இதழுக்கு எழுதிய வாசகர் கடிதத்தில், இன்று மாத இதழாக வரும் இதழ், வருங்காலத்தில் மாதம் இரண்டாக, வாரம் ஒன்று, இரண்டாக, தினசரி இதழாக வரவேண்டும் என எழுதினேன். இதோ வினவின் வடிவத்தில் அந்த கனவு கொஞ்சம் கொஞ்சமாக நனவாகி கொண்டிருக்கிறது.

காலை பொழுது வினவில் தான் துவங்குகிறது. இரவு பொழுதும் வினவில் தான் முடிகிறது. வினவின் தாக்கம் குறித்து, வாசகர்களின் கருத்துக்களைப் பார்க்கும் பொழுது சந்தோசமாயிருக்கிறது.

தொடரட்டும் உங்கள் புரட்சிகர பயணம்!

‍- குருத்து

July 15, 2013

உடலுறவு கொண்டாலே கணவன் – மனைவியா ?

இரா.ஜவஹர்

பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் உருவாக்கி இருக்கிறது ஒரு தீர்ப்பு. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் சமீபத்தில் அளித்த தீர்ப்புதான் அது.

ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டாலே சட்டப்படி அவர்கள் கணவன் – மனைவிதான் என்று அவர் தீர்ப்பளித்து இருக்கிறார்.
இதன் விவரம் என்ன ?

ஆயிஷா என்று ஒரு பெண். கோயம்புத்தூர் குடும்ப நீதிமன்றத்தில் கடந்த 2000 வது ஆண்டில் அவர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கில் அவர் கூறியதாவது :

” எனக்கும் ஒசிர் ஹசன் என்பவருக்கும் 16.9.1994 அன்று முஸ்லிம் வழக்கப்படி ( custom – சம்பிரதாயம் ) திருமணம் நடந்தது. அதிலிருந்து நாங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. பிறகு என் கணவர் 1999 ம் ஆண்டில் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். மீண்டும் சேர்ந்து வாழ எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை.
எனவே எனக்கும் என் குழந்தைகளுக்கும் மாதந்தோறும் ஜீவனாம்சமாக 5000 ரூபாய், என் கணவர் தர வேண்டும் என்று இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். “ - என்று ஆயிஷா கோரினார்.

இது தொடர்பாக மருத்துவமனைப் படிவங்கள், ரேஷன் கார்டுக்கான விண்ணப்பம் உள்ளிட்டவற்றில் கணவன் என்ற இடத்தில் ஒசிர் ஹசன் கையெழுத்திட்டிருந்த பல்வேறு ஆவணங்களையும் நீதிமன்றத்தில் ஆயிஷா அளித்தார். சாட்சிகளையும் முன்னிறுத்தினார்.
இவற்றை ஒசிர் ஹசன் மறுத்தார். ஆயிஷா தனது மனைவி அல்ல; குழந்தைகள் தனக்குப் பிறந்தவை அல்ல என்று அவர் கூறினார். திருமணம் நடந்திருந்தால் மசூதியில் உள்ள ‘ நிக்காஹ் ‘ ( திருமணம் ) பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கும்; அப்படி ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஒசிர் ஹசனின் அப்பா சாட்சியம் அளித்தபோது “ திருமணம் நடக்கவில்லை. நாங்கள் முஸ்லிம்களில் உருது பேசக்கூடிய தக்கிலி பிரிவைச் சேர்ந்தவர்கள்; ஆயிஷாவோ ராவுத்தர் பிரிவைச் சேர்ந்தவர் “ என்று கூறினார்.

வழக்கை விசாரித்த குடும்ப நீதிமன்ற நீதிபதி 2006 ம் ஆண்டில் தீர்ப்பளித்தார். தீர்ப்பு வருமாறு :

”ஆயிஷாவுக்கும் ஒசிர் ஹசனுக்கும் திருமணம் நடந்ததற்கான ஆவணம் ஏதும் இல்லை. எனவே சட்டப்படி ஆயிஷா மனைவி அல்ல. எனவே அவருக்கு ஜீவனாம்சம் பெறும் உரிமை இல்லை. ஆனால் குழந்தைகள் ஒசிர் ஹசனுக்குப் பிறந்தவைதான் என்பதற்கு ஆவணங்களும் சாட்சியங்களும் உள்ளன. இவ்வாறு சட்டமற்ற வகையில் பிறந்த குழந்தைகளுக்கும் (illegitimate children) ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு. ஆகவே குழந்தைகள் இருவருக்கும் தலா 500 ரூபாய் வீதம் மாதந்தோறும் ஒசிர் தர வேண்டும். வழக்குச் செலவுக்காக ஆயிஷாவுக்கு 1000 ரூபாய் தர வேண்டும் “ என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆயிஷா மேல் முறையீடு செய்தார். நீதிபதி கர்ணன் இதை விசாரித்தார். ஒசிர் ஹசனோ, அவரது தரப்பிலோ யாரும் வரவில்லை. கடந்த ஜூன் 17 ல் நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்பு விவரம் வருமாறு :

இந்தத் திருமணம் முஸ்லிம் வழக்கப்படி ( custom ) நடக்கவில்லை. எனினும் மருத்துவமனைப் படிவங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களில் கணவன் என்ற இடங்களில் ஒசிர் ஹஸன் கையெழுத்திட்டு இருக்கிறார்.

ஆயிஷாவும் ஒசிர் ஹஸனும் திருமணம் செய்து கொள்ள சட்டத் தடை (சகோதர உறவு, ஏற்கனவே ஒரு கணவர் இருப்பது போன்றவை) ஏதும் இல்லை. இருவரும் கணவன் – மனைவியாக வாழ்ந்து இரண்டு குழந்தைகளும் பெற்றிருக்கிறார்கள்.

திருமணச் சடங்கு என்பது வழக்க முறைதானே ( custom ) தவிர, சட்டப்படி கட்டாயம் ( mandatory ) அல்ல.

எனவே இந்த இருவரும் கணவன் – மனைவிதான். குழந்தைகளும் சட்டமற்ற வகையில் பிறந்தவர்கள் ( illegitimate children ) அல்ல; சட்டப்படியான வகையில் பிறந்தவர்கள்தான் ( legitimate children ).

எனவே சட்டப்படியான மனைவி என்ற வகையில் ஆயிஷாவுக்கும், சட்டப்படியான குழந்தைகள் என்ற வகையில் அவரது குழந்தைகளுக்கும் தலா 500 ரூபாய் மாதந்தோரும் ஒசிர் ஹசன் அளித்து வர வேண்டும். குடும்ப நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட செப்டம்பர் 2000 முதல் மே 2013 வரை உள்ள பாக்கித் தொகையை இன்னும் மூன்று மாதங்களுக்குள் தர வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கர்ணன் தீர்ப்பளித்தார்.

இவ்வாறு ஆயிஷாவை மனைவி என்றும், குழந்தைகளை சட்டப்படியான குழந்தைகள் என்றும் அங்கீகரித்து, ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது மிகமிக வரவேற்கத்தக்கது.

இந்த இடத்தில் சில சட்ட விளக்கங்களைப் பார்ப்போம்.

கணவன் – மனைவி என்ற சட்டப்படியான உறவு, வாரிசு, சொத்து உள்ளிட்ட உரிமைகளைப் பெற வேண்டுமானல் ஏதேனும் ஒரு சட்டத்தின் விதிமுறைகளின்படி திருமணம் நடக்கவேண்டும். சட்டங்களுக்கு அப்பாற்பட்டு வேறுவகையில் திருமணம் செய்து கொண்டாலோ அல்லது திருமணமே செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தாலோ கணவன் என்றோ, மனைவி என்றோ உரிமை பெறமுடியாது.
ஜீவனாம்ச உரிமையைப் பொருத்தவரை, கணவனால் புறக்கணிக்கப்பட்ட மனைவிக்கு, அல்லது மணமுறிவு (Divorce) அளிக்கப்பட்ட மனைவிக்கு, அல்லது மணமுறிவு கேட்டுப்பெற்ற மனைவிக்கு மற்றும் குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் தரவேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-வது பிரிவில் உள்ளது.

எனினும் கடந்த 2005-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ’ குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் ‘ ஒரு விதிவிலக்கை அளித்துள்ளது.

“திருமண உறவு அல்லது திருமண உறவைப் போன்ற ஒரு உறவில் (a relationship in the nature of marriage) ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தாலோ, அல்லது வாழ்ந்திருந்தாலோ, அந்தப் பெண்ணுக்கும், அந்தக் குழந்தைகளுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-வது பிரிவு பொருந்தும். ஜீவனாம்சம் தரவேண்டும்” என்று குடும்ப வன்முறைச் சட்டம் கூறுகிறது.
எனினும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த பெண், மனைவி என்ற அங்கீகாரத்தையும், அதன் பேரில் சொத்து உள்ளிட்ட மற்ற உரிமைகளையும் பெறுவதற்கு எந்தச் சட்டமும் வகை செய்யவில்லை.
இந்த சூழ்நிலையில்தான் சட்டவிதிமுறைப்படி திருமணம் செய்யாமல், சேர்ந்து வாழ்ந்து, குழந்தை பெற்ற ஆயிஷாவுக்கு சட்டப்படியான மனைவி என்ற அங்கீகாரத்தையும், உரிமைகளையும் வழங்கி நீதிபதி கர்ணன் தீர்ப்பளித்துள்ளார். இது மிகமிக வரவேற்கத்தக்கதுதான்.
எனினும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து இதே உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்யப்பட்டால் இந்தத் தீர்ப்பு செல்லுமா ? செல்லாதா ?  உறுதியாகச் சொல்லமுடியாது !

ஏனென்றால் இது தொடர்பான பல வழக்குகளில் முரண்பட்ட தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது !

1999-ம் ஆண்டில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் “ சட்ட விதிமுறைப்படி திருமணம் செய்யாமல் கணவன் – மனைவி போல கணிசமான காலத்துக்கு (reasonably long time) சேர்ந்து வாழ்ந்தாலே, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125-ன் படி ஜீவனாம்சம் பெறும் உரிமை அந்தப்பெண்ணுக்கு உண்டு” என்று உத்தரவிடப்பட்டது.

2005-ம் ஆண்டில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் “உரிமை இல்லை” என்று உத்தரவிடப்பட்டது.

2010-ம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பில் “உரிமை உண்டு என்றுதான் நாங்கள் கருதுகிறோம். எனினும் இது பற்றி இந்த உச்சநீதிமன்றத்தில் மாறுபட்ட நீதியியல் கருத்துகள் உள்ளன. எனவே இந்த வழக்கை இரண்டு நீதிபதிகளுக்கு மேற்பட்ட நீதிபதிளைக் கொண்ட விரிவான பெஞ்சின் விசாரணைக்கு அனுப்புமாறு தலைமை நீதிபதியைக் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
விஷயம் இதோடு நின்றுவிட்டது ! புதிய தீர்ப்பு ஏதும் இன்றுவரை வரவில்லை !

மேலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும் “உரிமை உண்டு” என்ற தீர்ப்பிலும் கூட “ஜீவனாம்சத்துக்கு மட்டும்தான் உரிமை உண்டு. சட்டப்படியான மனைவி என்ற அங்கீகாரத்தையோ, அதன்பேரில் மற்ற உரிமைகளையோ பெறமுடியாது” என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனின் தீர்ப்பில் சட்டப்படியான மனைவி என்ற அங்கீகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. ஆயிஷா போன்ற நிலையில் உள்ள பெண்களுக்கு இது பாதுகாப்புத் தரும். இது மிகவும் வரவேற்கத்தக்கது.

எனினும் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டால் தீர்ப்பின் இந்த அங்கீகாரப்பகுதி செல்லாது என்று அறிவிக்கப்படும் என்பதே எனது கருத்து. ஏனென்றால் இதற்கு சட்ட ஆதாரமோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் ஆதாரமோ இல்லை.
எனவே “ உரிமை உண்டு “ என்ற வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்றே கருதுகிறேன்.

அடுத்து –

நீதிபதி கர்ணன் தனது தீர்ப்பில் “திருமணம் ஆகாத 21 வயது நிரம்பிய ஆணும், திருமணம் ஆகாத 18 வயது நிரம்பிய பெண்ணும் விரும்பி உடலுறவு கொண்டாலே அவர்கள் கணவன் – மனைவிதான். அவர்கள் வேறு யாரையாவது திருமணம் செய்வதாக இருந்தால் நீதிமன்றம் மூலம் மணமுறிவு பெற்ற பிறகே திருமணம் செய்யமுடியும்.” என்று கூறியிருக்கிறார்.

இது சரியாக இருக்குமா ?

திருமணம் செய்யும் எண்ணம் இல்லாமல் உடலுறவு கொள்வதும், பிறகு வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதும் நடக்கக் கூடியதுதான். இதில் தவறு ஏதுமில்லை.

பெரியார் சொன்னதைப்போல “ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்றும் மூன்றாம் நபர்கள் யாராயினும் பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது.”

நீதிபதி கர்ணன் சொல்வதை ஏற்றுக்கொண்டால், அதாவது உடலுறவு கொண்டாலே கணவன் – மனைவிதான் என்று முத்திரை குத்தப்படும் என்றால், ஒருவரை ஒருவரோ அல்லது மற்றவர்களோ ப்ளாக்மெயில் செய்து மிரட்டுவதற்கே வழிவகுக்கும்.
மேலும், ஒருவர் பலருடன் உறவு கொண்டால் யாரை கணவனாக அல்லது மனைவியாக ஏற்பது ?
இதற்கு விதி விலக்குகள் இருக்கலாம் என்று நீதிபதி கர்ணன் சொல்கிறார். ஆனால் எது விதி விலக்கு என்று அவர் சொல்லவில்லையே!
அடுத்து –

நீதிபதி மேலும் கூறுகிறார் : “சட்டப்படி திருமணம் செய்தாலும், ஒரு முறை கூட உடலுறவு கொள்ளவில்லை என்றால் அந்தத் திருமணம் செல்லாது.”

இது சரியா ?

வயது முதிர்ந்த இருவர் வாழ்க்கைத்துணை தேவை என்பதற்காக சட்டப்படி திருமணம் செய்துகொண்டு உடலுறவு இல்லாமல் வாழ்ந்தால் அதில் என்ன தவறு ? இளமையான இருவர் கூட உடலுறவு தேவையில்லை என்று விரும்பி வாழ்ந்தால் அதில் என்ன தவறு ? அந்தத் திருமணம் செல்லாது என்று கூறி அவர்களுடைய உரிமைகளை ஏன் பறிக்கவேண்டும் ?

நீதிபதியின் இந்தக் கருத்துகள் மேல்முறையீட்டில் செல்லாது என்று அறிவிக்கப்படும் என்றே நான் கருதுகிறேன். அது மட்டுமல்ல. இந்தக் கருத்துகள் சரியும் அல்ல.

திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, உடலுறவு கொண்டு, ஆண்களால் ஏமாற்றப்படும் அபலைப்பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே நீதிபதி கர்ணன் இவ்வாறு கூறியிருக்கிறார் என்றே கருதுகிறேன்.
எனினும் இந்தக் கருத்துகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால், ஏற்க இயலாது.
இது சரியல்ல என்றால், பிறகு எது சரி ?

“ஏமாற்றுபவர்களுக்கான தீர்ப்பு தண்டனையே தவிர, திருமணம் அல்ல. பெண்ணுக்கான நீதியும் அதுவாகத்தான் இருக்கமுடியும். ஏமாற்றிவிட்டு, பிறகு கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களில் எத்தனைபேர் அவர்களது இணையரை சரியாக நடத்துவார்கள் ? திருமணம் தரும் சமூக அந்தஸ்து காரணமாகத்தான் பெண்களும் அந்த முடிவை எடுக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். அப்படியான நிர்பந்தங்கள் இருக்கக்கூடாது” என்று என் மகள் கவிதா முகநூலில் எழுதியிருக்கிறார்.

இது மிகவும் சரி. பெண்ணின் சுயமரியாதையைப் பாதுகாப்பதாகவும், ஏமாற்ற நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இந்தத் தண்டனை இருக்கும். இதற்கான சட்டவிதிகளும், தீர்ப்புகளும் ஏற்கனவே உள்ளன.

எனவே “ ஏமாற்றியவனைத் திருமணம் செய்யாதே. அவனுக்குத் தண்டனை பெற்றுக்கொடு “ என்று, பாதிக்கப்பட்ட பெண்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்; உதவ வேண்டும்.

எனினும் ஏமாற்றியவனைத் தண்டித்து விட்டு, வேறு ஒருவனைத் திருமணம் செய்யவோ அல்லது திருமணமே செய்யாமல் வாழவோ வாய்ப்பில்லாத எளிய பெண்களுக்கு என்ன செய்வது ?

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கோவிலுக்குள் செல்லும் உரிமை வேண்டும் என்று போராடுகிறோம் அல்லவா ?
அதைப்போல, ஏமாற்றியவனைத் திருமணம் செய்யும் உரிமையைச் சட்டபூர்வமாக்க வேண்டும். இந்த உரிமையைப் பயன்படுத்துவதா இல்லை புறக்கணிப்பதா என்பதை பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பத்துக்கு விட்டுவிடவேண்டும்.

சரி, ஏமாற்றப்படும் ஆண்களுக்கு இந்த உரிமையை சட்டபூர்வமாக ஆக்கலாமா ? ஆக்கலாம் என்றே எனக்கு முதலில் தோன்றியது. எனினும் இன்றைய ஆணாதிக்க சமூகத்தில், இந்த உரிமையை ஆணுக்கும் அளித்தால், அது சரியாக பயன்படுவது விதிவிலக்காகவும், தவறாகப் பயன்படுவதே விதியாகவும் இருக்கும். எனவே இந்த உரிமையை ஆணுக்குத் தரத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.
ஆகவே –
உடலுறவு கொண்டாலே கணவன் – மனைவிதான் என்பது சரியா ?

சரி அல்லது தவறு என்று பொத்தாம் பொதுவாகப் பதில் சொல்ல முடியாது. சில சூழ்நிலைகளில் சரி. சில சூழ்நிலைகளில் தவறு.
எனவே ஒவ்வொரு வழக்கையும் தனித் தனியாகப் பரிசீலித்துத்தான் தீர்ப்பளிக்க வேண்டும்.

- பத்திரிக்கையாளர் ஜவஹர்

(தனிச்சுற்று இதழான 'தோழமை' ஜூலை இதழில் வெளிவந்தது)

சாப்பாடு இல்லை! வரவேண்டிய கோபம் சுத்தமாக வரவில்லை!

நண்பணின் நண்பன் திருமணம். இருவரும் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள். மாப்பிளை களையாக, கருப்பு நிறத்தில் இருந்தார். மணப்பெண்ணோ தேவயானி கலரில் இருந்தார். (நடிகையை சொல்கிறேன் என கோவித்துக்கொள்ளக்கூடாது. உங்களுக்கு எனக்கும் தெரிந்தவரை தானே சொல்லமுடியும்) மணமக்கள் மேடையில் உற்சாகமாய் இருந்தார்கள். கைகுலுக்கி, வாழ்த்துக்களைப் பெற‌, புகைப்படம் எடுக்க என பயங்கர பிசியாய் இருந்தார்கள். இறுதியில் புகைப்படம் எடுக்க மேடையேறிய மணமக்களின் பெற்றோர் முகத்தில் அத்தனை உற்சாகமில்லை. உறவினர்கள் கூட்டம் அலைமோதியது.

மக்கள் கூட்டத்தை பார்த்து, சுதாரித்து, பந்திக்கு முந்திவிடலாம் என போனால், மக்கள் முந்தவே விடவில்லை. நமக்கு அவ்வளவு திறமை பத்தாது! இறுதியில் இடம் கிடைத்து, கொஞ்சூண்டு சாம்பார் சோறும், ரசம் சோறும் தான் கிடைத்தது. "400 பேருக்கு ஆர்டர் கொடுத்து, 500 பேர் வரை நன்றாக சாப்பிட்டார்கள். அதுக்கு மேலேயும் 100 பேர் வந்தால், நாங்கள் எப்படித்தான் சமாளிப்பது?" என அலுத்துக்கொண்டார் சப்ளை செய்பவர்.

வழக்கமாய் சாப்பாடு இல்லையெனில் வரும் கோபம், நேற்று வரவில்லை. காரணம் இது ஒரு காதல் திருமணம்.

July 11, 2013

முதலாளித்துவ பயங்கரவாதம் என்றால்?

அம்பத்தூர் மார்க்கெட் அருகிலுள்ள ஜி.கே. கல்யாண மண்டபத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (புஜதொமு) நேற்று மாலை நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டேன். தலைமை, ஆவடி--அம்பத்தூர் பகுதி செயலாளர் மு. முகிலன். சிறப்புரையாற்றியவர் மாநில இணைச் செயலாளர், ம.சி. சுதேஷ்குமார். முதலாளித்துவப் பயங்கரவாதத்தை முறியடிக்க தொழிலாளி வர்க்கம் என்ன செய்யவேண்டும் என்பதுதான் கருத்தரங்கின் விவாதப் பொருள்.

கூட்டத்துக்குத் திரண்டு வந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். முதல் இரு வரிசைகளில் சில பெண்கள் அமர்ந்திருந்தனர். ஆயத்த ஆடை உற்பத்தியில் ஈடுபடுவர்கள், ஒப்பந்தப் பணியில் இருக்கும் தொழிலாளர்கள், எலெக்ட்ரிகல் பணியில் ஈடுபடுபவர்கள் என்று வெவ்வேறு பின்னணியில் இருந்து பார்வையாளர்கள் வந்திருந்தனர். இவர்களில் பலர் முதன்முறையாக இதுபோன்ற அரங்கங்களுக்கு வருபவர்கள் என்பதால் அனைவருக்கும் புரியும்படி எளிமையாக தோழர்கள் உரையாற்றினார்கள்.

மானேசர், மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சுனில்திமன் என்பவர் கலந்துகொள்வதாக இருந்தது. முடியவில்லை. அவர் உரையாற்றியிருந்தால், மாருதி போராட்டம் பற்றி விரிவாக அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும்.

முதலாளி, தொழிலாளி என்றால் புரிகிறது. முதலாளித்துவப் பயங்கரவாதம் என்பது என்ன? தொழிலாளி வர்க்கம் என்பது என்ன? ஹூண்டாய், மாருதி, டிவிஎஸ், நோக்கியா போன்ற பெரும் நிறுவனங்களில் இணைவதும் பணிபுரிவதும் பெருமைக்குரிய விஷயம் அல்லவா?

இப்படி நினைப்பவர்களுக்காக, தொழிற்சாலைகள் எப்படி இயங்குகின்றன, தொழிலாளர்கள் எப்படிச் சுரண்டப்படுகிறார்கள், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் ஏன் அளிக்கப்படுவதில்லை போன்ற அடிப்படையான விஷயங்கள் தகுந்த உதாரணங்களுடன் விவரிக்கப்பட்டன.

அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் பலவற்றில் டோக்கன் சிஸ்டம் நடைமுறையில் இருக்கிறதாம். கழிப்பறைக்குச் செல்லவேண்டுமானால்கூட டோக்கனை சூப்பர்வைஸரிடம் கொடுத்துவிட்டு, திரும்பவேண்டும். இரண்டு டோக்கனுக்கு மேல் ஒருவருக்குக் கிடைக்காது. உணவு நேரம் முடிந்தவுடன் உடனே பணிக்குத் திரும்பிவிடவேண்டும். கழிப்பறைக்குள்கூட கூடுதல் நேரம் செலவழிக்கமுடியாது.  ஒரே வேலைதான். என்றாலும் ஆண் தொழிலாளிக்கு ஒரு சம்பளம். பெண் என்றால் குறைந்த சம்பளம். என்னைக் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொண்டால் உடனே சம்பளத்தை உயர்த்துகிறேன் என்று பெண் தொழிலாளர்களிடம் பேரம் பேசும் சூப்பர்வைஸர்கள் அநேகம்.

17 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களைத் தேடிப்பிடித்து வேலையில் சேர்த்து முழுவதுமாகக் கசக்கிப் பிழிந்து சக்கையாக வெளியில் துரத்துகிறார்கள். மூன்றாண்டுகள் வேலை செய்தால் வேலை நிரந்தரம், கூடுதல் சம்பளம் என்றெல்லாம் ஆசை காட்டி, வேண்டிய மட்டும் வேலையை வாங்கிகொண்டு, அது சரியில்லை, இது சரியில்லை என்று ஏதாவது சாக்குபோக்குக் காட்டி வேலையைவிட்டு நீக்கிவிடுகின்றனர்.

தொழிலாளர்கள் தங்களுக்குள் சங்கம் அமைத்துக்கொள்ளலாம் என்கிறது சட்டம். ஆனால் நிஜத்தில் சங்கம் அமைப்பது எவ்வளவு சவாலான காரியம் என்பதைத் தெரிந்துகொள்ளமுடிந்தது. சங்கம் அமைக்க முயலும் தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவமானப்படுத்தப்படுறார்கள். அடியாள்களை வைத்து மிரட்டப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள். ஹெச்.ஆர் மேனேஜர்களை வீட்டுக்கு அனுப்பி, 'என்னம்மா உங்க வீட்டுக்காரர் ஒழுங்கா வேலை செய்யமாட்டாரா? எதுக்கு அவருக்கு சங்கம் வேலையெல்லாம்?' என்று உளவியல் தொந்தரவு கொடுக்கிறார்கள்.

இன்னும் சிலர், ஒர்க்கர்ஸ் கமிட்டி என்னும் பெயரில் தாங்களாகவே ஒரு அமைப்பை ஏற்பாடு செய்து, தொழிலாளர்களை அதில் இணைக்க முயன்றுவருகிறார்கள். இந்தக் கமிட்டியில் இணைபவர்களுக்குச் சில சலுகைகளை அளிப்பதன்மூலம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பலவீனப்படுத்துகிறார்கள்.

மொத்தத்தில் தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு இல்லை. எந்நேரமும் யாரும் வேலையில் இருந்து துரத்தப்படலாம். உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை. சங்கம் அமைக்கும் உரிமை இல்லை. பாதுகாப்பான வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை.

தொழிலாளர்கள் ஓர் அமைப்பாகத் திரண்டுவிடாதபடி தடுக்க அவர்கள் பலவாறாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர், தாற்காலிகத் தொழிலாளர், நிரந்தர ஊழியர், சீனியர், ஜூனியர் என்றெல்லாம் வகைப்படுத்தி அவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் பாதிப்புக்குள்ளாகும்போது நிரந்தரத் தொழிலாளர்கள் அவருக்குக் குரல் கொடுப்பதில்லை. தாற்காலிகத் தொழிலாளர்கள் கொத்துக் கொத்தாக வேலையில் இருந்து துரத்தப்படும்போது பிற தொழிலாளர்கள் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதில்லை. இந்தப் பிரிவினைகள் போக, சாதி, மதம், பாலினம் போன்ற பிரிவினைகளும் தொழிலாளர்களைத் தனித்தனிக் குழுக்களாகப் பிய்த்துப் போடுகின்றன. இவற்றையெல்லாம் மீறி ஒரு வர்க்கமாக ஓர் அமைப்பாகத் தொழிலாளர்கள் திரளவேண்டியிருக்கிறது. இது ஒரு வரலாற்றுத் தேவையும்கூட.

உடனடியாக மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யவேண்டும் என்பதையும் அரங்கில் பட்டியலிட்டார்கள்.

  • பணிநிரந்தரச் சட்டம், காண்டிராக்ட் முறை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்கள் கறாராக அமல்படுத்தப்படவேண்டும். 
  • தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 
  • புதிய தொழிற்சங்கம் தொடங்க விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் பதிவு செய்யவேண்டும். 
  • ஒர்க்கர்ஸ் கமிட்டி தடை செய்யப்படவேண்டும். 
  • எல்லாத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் 15,000 வழங்கப்படவேண்டும்.
  • பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும் ஊதிய சமத்துவமும் வழங்கப்படவேண்டும்.
எல்லாவற்றுக்கும் அடிநாதமாக உள்ள தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகிய மக்கள் விரோத கொள்கைகள் எதிர்க்கப்பட்டன. உணவு பாதுகாப்புச் சட்டம், ஆதார் அட்டை போன்றவற்றால் மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்பதும் வலியுறுத்தப்பட்டன.

பல பெரும் நிறுவனங்களில் எதிர்ப்புகளை மீறி தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி சங்கம் அமைத்த சம்பவங்கள் விவரிக்கப்பட்டன.

உழைக்கும் மக்களிடையே உள்ள மயக்கங்களைச் சுட்டிக்காட்டவும் உரையாற்றியவர்கள் தயங்கவில்லை. 'சிங்கம் 2 ஓடும் திரையரங்கங்களில் இளைஞர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். டிவி முன்னால் கிரிக்கெட் பார்க்கவும் சீரியல் பார்க்கவும் ஆண்களும் பெண்களும் திரண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது இந்த உந்துதல்? எந்த முதலாளித்துவம் அவர்களைக் கசங்கிப்பிழிகிறதோ அதே முதலாளித்துவம்தான் இந்த மயக்கங்களையும் அவர்களுக்கு அளிக்கிறது. இதில் அவர்கள் தங்களை இழக்கின்றனர். தலயோ, தளபதியோ அல்ல உங்கள் தலைவர். மார்க்ஸும் லெனினும் பகத் சிங்கும்தான் உங்கள் தலைவர்கள். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். ஒரு மகத்தான வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.'

- மருதன்
 

July 4, 2013

அம்பத்தூரில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தரங்கம்!

முதலாளித்துவம் கொல்லும்!  
கம்யூனிசமே வெல்லும்!

06/07/2013 - சனிக்கிழமை - மாலை 5 மணி


இடம் : GK மகால், அம்பத்தூர் மார்க்கெட், அம்பத்தூர், சென்னை


 தொழிலாளி வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்போம்! 
முதலாளித்துவப் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

சிறப்புரை

தோழர் ம.சி. சுதேஷ்குமார்,
மாநில இணைச்செயலாளர்,
பு.ஜ.தொ.மு

தோழர் சுனில்திமன்,
மாருதி சுசுகி தொழிலாளர் சங்கம்,
மானேசர், அரியானா

மத்திய – மாநில அரசுகளே,

பணிநிரந்தரச் சட்டம், காண்டிராக்ட் முறை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமல்படுத்து!

தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடு!

புதிய தொழிற்சங்கம் துவங்க விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பதிவு செய்! முதலாளிகள் கையாளுகின்ற “ஒர்க்கர்ஸ் கமிட்டி” என்கிற சதியினை தடை செய்!

எல்லாத் தொழில்களிலும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15,000 நிர்ணயம் செய்!

பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், ஊதிய சமத்துவமும் வழங்கு!

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மக்கள் விரோத, மறுகாலனியாக்கக் கொள்கைகளை கைவிடு!

மக்களை உளவு பார்க்கும் ஆதார் அடையாள அட்டையை ரத்து செய்!

தோழர் அ.முகுந்தன்
110/63, மாநகராட்சி வணிக வளாகம், என்.எஸ்.கே. சாலை
கோடம்பாக்கம், சென்னை – 600 024.
தொ.பே: 94448 34519