> குருத்து: April 2010

April 29, 2010

புதுச்சேரியில் மேதினம் - பேரணி, பொதுக்கூட்டம்!


மே நாள்! தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை போராடி வென்ற நாள். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்றைய தொழிலாளி வர்க்கம் நாளொன்றுக்கு 20 மணி நேரம் உழைக்கவேண்டும். முதலாளியிடம் கோரிக்கை வைக்கவோ, சங்கம் வைக்கவோ அவர்களுக்கு உரிமை கிடையாது. உழைப்பை விற்று உயிர் வாழலாம் அவ்வளவு தான்.

இந்த அடிமைத்தனத்திற்கு எதிராக 124 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சிகாகோ வீதியில் ஆயிரக்கணக்கில் வெகுண்டெழுந்தார்கள் தொழிலாளர்கள். அவர்களது போராட்டத்தை அடக்க துப்பாக்கி ஏந்திய படையை ஏவினார்கள் முதலாளிகள். இரத்தத்தையும் உயிரையும் சிந்தினார்கள் தொழிலாளர்கள். சிவந்தது சிகாகோ வீதி. அந்த சிவந்த மண்ணிலிருந்து மே நாளில் முளைத்ததுதான் 8 மணிநேர வேலை, 8 மணிநேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் என்கிற உரிமை. அமெரிக்க வீதியை மட்டுமல்ல, அகில உலகையும் பற்றிக்கொண்டது அந்த போராட்டத் தீ. அதன் பின் சிகாகோ வெற்றி உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒட்டுமொத்த உரிமையாக நிலைநாட்டப்பட்டது.

ஆனால் இன்றோ, பெற்ற உரிமைகள் அத்தனையும் இழந்து நிற்கிறது தொழிலாளர் வர்க்கம். கையில் செல்போன், கடன்வாங்கிக் கட்டிய வீடு, எந்நேரமும் பிடுங்கப்படலாம் என்கிற நிலையில் உள்ள இருசக்கர வாகனம் இவற்றையெல்லாம் காட்டி தொழிலாளர்வர்க்கம் முன்னேற்றம் அடைந்து விட்டதாக ஆளும் வர்க்கமும் பத்திரிக்கைகள் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களும் பொய்யான தோற்றத்தை உருவாக்குகின்றன. முன்னேற்றம் எனும் மயக்கத்தில் உரிமை என்கிற உரிமை என்கிற உணர்வு மறக்கடிக்கப்படுகிறது.

உலகமயத்தின் இன்றைய விளைவாக 20 மணிநேரம் வரைகூட உழைக்க வேண்டியுள்ளது. சென்னை கோவை திருப்பூர் போன்ற நகரங்களில் உள்ள ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிருவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் ஆண் பெண் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் சிறிநீர் கழிக்கக்கூடத் தடைவிதிக்கிறது முதலாளித்துவ அடக்குமுறை. கால்மணி நேரத்திற்கு மேல் சாப்பிடக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

நாடுமுழுவதும் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் பீகார், ஒரிஸ்ஸா, மேற்குவங்கம் போன்ற பிந்தங்கிய மாநிலத் தொழிலாளர்கள் ஓய்வு உறக்கம் இன்றி, ஓடிக்கொண்டிருக்கும் தானியங்கி எந்திரமாகவே மாற்றப்பட்டு விட்டார்கள்.

கொள்ளுப்பையை காட்டி குதிரையை ஓடவைப்பதைப் போல தாலியை காட்டி இளம் பெண்களின் உழைப்பையும், எதிர்காலத்தையும் உறிஞ்சும் ‘சுமங்கலித் திட்டம்’ இலட்சக்கணக்கான ஏழை இளம்பெண்களைக் கொத்தடிமைகளாய் பிணைத்துப் போட்டுக்கொண்டிருக்கிறது.

இப்படி, வேலைக்கும் சம்பளத்திற்கும், வாழ்க்கைக்கும் முதலாளிகளின் தயவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கூலி அடிமைகளாய் இன்று கோடிக்கணக்கில் தொழிலாளர்கள். உலகையே தனது வியர்வையால் கட்டியெழுப்பிய தொழிலாளி வர்க்கம், இன்று பெற்ற உரிமைகள் அனைத்தையும் இழந்து நிற்கிறது. விலை உயர்வுக்கேற்ற சம்பள உயர்வு, மருத்துவப்படி, போனஸ், ஓய்வூதியம், வாரிசுக்கு வேலை போன்று போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் தட்டிக்கேட்க சங்கம் அமைக்கக் கூட உரிமையில்லை. மொத்தத்தில் பெற்ற உரிமைகள் அனைத்தையும் சுனாமி போல் சுருட்டி 124 ஆண்டுகளுக்கு முந்திய நிலைக்கு இழுத்து தள்ளிவிட்டது முதலாளித்துவ பயங்கரவாதம்.

தொழிலாளர்களோ, புதிதாக எதையும் உரிமையாக கேட்கவில்லை. ஏற்கனவே போராடிப் பெற்ற உரிமைகளான சங்கம் கூடும் உரிமை, கோரிக்கைகளுக்காக போராடும் உரிமை இவற்றுக்காக போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தியா உட்பட உலகம் முழுவதும் சங்கம் வைக்க தொழிலாளர்களுக்கு உரிமையில்லை. குறிப்பாக சென்னையில் உள்ள தென்கொரிய நாட்டு ஹூண்டாய் கம்பனியில் சி.ஐ.டி.யு சங்கம் வைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. அதேபோல் பு.ஜ.தொ.மு செயல்படும் புதுச்சேரி லியோஃபாஸ்ட்னர்ஸ், மெடிமிக்ஸ் பவர் சோப், சென்னை நெல்காஸ்ட், கோவை எஸ்.ஆர்.ஐ, உடுமலை சுகுணா பவுல்ட்ரி ஃபார்ம் போன்ற கம்பனிகளில் சங்கம் வைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. மேற்கூறிய கம்பனிகளில் சங்கம் வைத்ததற்காகவே தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். மேலும் ஆலை மூடல் அடியாட்கள் மூலம் கொலை மிரட்டல், போலீஸை ஏவி பொய்வழக்கு- சிறைவைப்பு என அடுக்கடுக்காக தொழிலாளர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. தொழிலாளர்கள் உரிமை அனைத்தும் பறிக்கப்படுகிறது.

தொழிலாளர்களின் உரிமைகள் மட்டுமல்ல, விவசாயிகள், மீனவர்கள், பழங்குடிகள், மாணவர்கள், வழக்குறைஞர்கள் என அனைத்து பிரிவினரின் உரிமைகளும் பரிக்கப்படுகிறது. விவசாயிகள் பாரம்பரியமாக பயன்படுத்திவரும் விதைகளையும், விவசாயம் சார்ந்த அனுபவ அறிவையும் பயன்படுத்த தடை விதிக்கும் ‘தமிழ்நாடு வேளான்மன்ற சட்டம்’ எனும் கொடிய சட்டமும், அமெரிக்காவின் மான்சாண்டோ கம்பனியின் மரபணு மாற்று விதைகள் போன்றவற்றை எதிர்ப்போரை ஓர் ஆண்டு சிறையில் தள்ளவும், ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வகை செய்யும் ‘உயிரி தொழில் நுட்பவியல் ஒழுங்காற்று ஆணைய சட்டம்’ எனும் கருப்பு சட்டமும் மத்திய மாநில அரசுகளால் கொண்டுவரப்பட்டு விவசாயிகளின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது.

பன்னிரண்டு கடல் மைல்கள் தாண்டி மீன் பிடிக்கக் கூடாது என சட்டமியற்றி மீனவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. வெளிநாட்டு வழக்குறைஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் வாதாடலாம் என சட்டமியற்றி வழக்குறைஞர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. வெளிநாட்டு பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றப்பட்டு மாணவர்களின் கல்வி கற்கும் உரிமை பறிக்கப்படுகிறது.

மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் பலகோடி மதிப்புள்ள கனிமவளங்களுக்கு பாதுகாப்பாய் இருந்துவருகிறார்கள் பழங்குடி மக்கள் போஸ்கோ, வேதாந்தா போன்ற பன்னாட்டு கம்பனிகள் அந்த தாதுப் பொருட்களையும் கனிம வளங்களையும் கொள்ளையடிக்க அப்பழங்குடி மக்கள் மீது ‘காட்டு வேட்டை’ எனும் பெயரில் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஒரு லட்சம் துணை ராணுவ வீரர்களை ஏவி அம்மக்களின் வாழ்வுரிமையும் உயிரும் பறிக்கப்படுகிறது.

தங்களின் வாழ்வுரிமை பறிப்புக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் தனித்தனியாக போராடுகின்றனர். போராடும் அம்மக்கள் மீது போலீஸ் மற்றும் ராணுவத்தை ஏவி கொடூரமான யுத்தம் நடத்தப்படுகிறது. அதாவது பன்னாட்டு முதலாளிகள் நம் விவசாயத்தையும், விளை நிலங்களையும் அபகரித்துக் கொள்ளவும், நமது கடல் வளங்களை அள்ளிச் செல்லவும், காடு மற்றும் கனிம வளங்களை கொள்ளையடிக்கவும் பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது மத்திய மாநில அரசுகள். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் போராடினால் அந்த மக்கள் மீது போர் தொடுக்கப்படுகிறது. இவைகள் அனைத்தும் உலக வங்கி, உலக வர்த்தக கழகம் போன்றவற்றின் உத்தரவுப்படியே மத்திய மாநில அரசுகளால் நிறைவேற்றப்படுகிறது.

மக்களின் வாழ்வுரிமை பறிப்பும் தொழிலாளர்கள் மற்றூம் மக்கள் மீதான தாக்குதல்களும் ‘தேசத்தின் வளர்ச்சி’ என்ற பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது. பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக சொந்த நாட்டு மக்கள் மீதே நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக எந்த ஓட்டுக் கட்சிகளும், ஊடகங்களும் மூச்சு விடுவது இல்லை. காரணம் கொள்ளயடிக்கும் பணத்தில் ஓட்டுக் கட்சிகளுக்கும் ஊடக முதலாளிகளுக்கும் வாய்க்கட்டுப் போடுகின்றன பன்னாட்டு கம்பனிகள்.

தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தையும் பறிப்பது, பன்னாட்டு முதலாளிகள் மற்றும் அவர்களுக்கு தரகு வேலை பார்க்கும் உள்நாட்டு முதலாளிகளின் கொத்தடிமைகளாக தொழிலாளர்களை மாற்றுவது, மக்களின் வாழ்வாதாரங்களை பறிப்பது, எதிர்த்து போராடும் மக்களை வாழ்விடங்களிலிருந்தே விரட்டியடிப்பது, நாட்டையே பன்னாட்டு கம்பனிகளின் வேட்டைக்காடாக மாற்றுவது, இதைத்தான் மறுகாலனியாக்கம் என்கிறோம். வாழ்வுரிமையை இழந்து போராடும் மக்கள், நாடு மறுகாலனியாகிறது – நமது பிரச்சனைகளுக்கு அதுதான் காரணம் எனப் புரிந்து கொள்ளவில்லை. அவ்வாறு மக்களுக்கு புரியவைப்பதும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராக மக்களை ஓரணியில் திரட்டுவதும் தொழிலாளி வர்க்கத்தின் கடமை. ஏனெனில் தனது நலனுக்காக மட்டுமின்றி பிற வர்க்கங்களின் நலனுக்காகவும் போராடும் மரபை கொண்டது தொழிலாளி வர்க்கம்.

அனைத்து உழைக்கும் மக்களின் உரிமைகளை பறித்து நாட்டையே அடிமையாக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக போலீஸ், ராணுவம், நீதிமன்றம், சட்டமன்றம், பாராளுமன்றம், ஓட்டுக்கட்சிகள், ஊடகங்கள் அனைத்தும் ஓரணியில் நிற்கின்றன. ஆனால் உரிமைகளை இழந்து நிற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கோ, தங்களைப்போல் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு போராடும் பிற மக்களை தங்களுடன் இணைத்துக்கொள்வதும், சிதறிக்கிடக்கும் தொழிலாளர்களை அமைப்பாக அணிதிரட்டுவதையும் தவிர வேறு வழியில்லை. ஒற்றுமை உணர்வும் ஓங்கிய கைகளும் தோற்றதாக வரலாறு இல்லை. தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம்! முதலாளித்துவ பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்!

நிகழ்ச்சி நிரல்:

மே 1 – 2010


பேரணி துவங்கும் நேரம்: மாலை 4 மணி
இடம்: பாக்கமுடையான் பட்டு,
கொக்குப்பாலம், புதுச்சேரி.

பேரணி துவக்கிவைப்பவர்:
தோழர் காதர் பாட்ஷா, அமைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.

பொதுக்கூட்டம்
மாலை 6 மணி
சிங்காரவேலர் சிலை, ரோடியர் மில், புதுச்சேரி

தலைமை:
தோழர் அ. முகுந்தன், தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

“போராட்டக் களத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி”
நேருரைகள்: கோவை, ஓசூர், புதுச்சேரி தோழர்கள்

உலகமயமாக்கமும், தொழிலாளர் வர்க்கத்தின் மீதான அடக்குமுறையும்:
தோழர் சுப. தங்கராசு, பொதுச்செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

சிறப்புரை:

முதலாளித்துவ பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்!
மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!

தோழர் காளியப்பன், இணைச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

புரட்சிகரக் கலை நிகழ்ச்சி
மையக்கலைக்குழு, ம.க.இ.க., தமிழ்நாடு

April 22, 2010

இன்று லெனின் பிறந்த நாள்!



வாக்காளர்களாகிய பொதுமக்கள், தங்கள் பிரதிநிதிகள் அவர்களுடைய வேலைகளை செய்து முடிக்கும் திறமையுடையவர்களாக இருக்க வேண்டும் என கோரவெண்டும். அவர்கள்

லெனினைப் போல

அரசியல் ஊழியர்களாகப் பணியாற்ற வேண்டும்
தெளிவுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும்

போராட்டத்தில் பயமின்றியும்,
மக்களின் பகைவர்களிடம் ஈவிரக்கமின்றியும் இருக்க வேண்டும்.

லெனினைப் போல

நிலைமை சிக்கலாகும் பொழுது, கிஞ்சித்தும் பீதியின்றியும்,
பீதியின் சாயலின்றியும் இருக்க வேண்டும்.

பரிபூரணமான விவரமான கண்ணோட்டமும், சாதகமானவற்றையும்
பாதகமானவற்றையும் விரிவான முறையில் சீர்தூக்கி பார்க்கும் திறமையும்,
தேவையாயிருக்கும் அளவுக்கு சிக்கலான பிரச்சனைகளைப் பற்றி முடிவு
செய்வதில் நுண்ணறிவும் தீர்க்கமாக ஆலோசனை செய்யும் சக்தியும்
பெற்றிருக்க வேண்டும்

லெனினைப் போல

ஒழுக்கமும், நேர்மையும் பெற்றிருக்க வேண்டும்
மக்களை நேசிக்க வேண்டும்

- ஸ்டாலின் - உரையிலிருந்து


இன்று லெனின் பிறந்த நாள் - 22, ஏப்ரல் 1870.

April 19, 2010

நம்மை நாமே ஏமாற்றுகிறோம்!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் இந்திரகுமார் குஜ்ராலைச் சந்திக்க வியட்நாமிய அமைச்சர் ஒருவர் வந்திருந்தார். அவருடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது, இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருப்பதையும் நமது உணவுக்கிடங்குகள் நிரம்பி வழிவதையும் சொன்னபோது புன்னகைத்தார்.

"ஏன் நீங்கள் இதை நம்பவில்லையா?' என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் -

""பிறகு ஏன் தெருவோரங்களில் பலர் உங்கள் நாட்டில் பிச்சையெடுக்கிறார்கள்? ஒரிசா மாநிலத்தில் பட்டினிச் சாவுகள் நிகழ்வதாகச் செய்தி வருகிறதே, அது எப்படி? பலர் பட்டினி கிடக்கும்போது உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டதாகவும், உணவு ஏற்றுமதி செய்வதாகவும் நீங்கள் கூறுவது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலைமை தொடருமானால், இந்தியாவில் தீவிரவாதம் அதிகரித்து உள்நாட்டுக் குழப்பம்தான் ஏற்படும்''.

1991-ல் இந்தியா பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் தாராளமயமாக்கல் கொள்கையை ஏற்றுக்கொண்டபோது அடுத்த பத்துஆண்டுகளில் நமது நாடு பூலோக சொர்க்கமாகப் போகிறது என்று உறுதியளித்தவர்களில் அன்றைய நிதி அமைச்சரும் இன்றைய பிரதமருமான மன்மோகன் சிங்கும் ஒருவர். பத்து ஆண்டுகளாகியும் சொர்க்கம் தென்படவில்லை என்பது இருக்கட்டும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு, எல்லோருக்கும் உணவு போன்ற அடிப்படைத் தேவைகள்கூட நிறைவேறவில்லை. பொருளாதாரச் சீர்திருத்தத்தின் பயன் இப்போதுதான் மேல்தட்டு மக்களிடமிருந்தும் பெருநகரங்களிலிருந்தும் மெல்ல மெல்ல கீழ்நோக்கி நகரத் தொடங்கியிருப்பதாகவும் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் வறுமையும், பசி பட்டினியும், வேலையில்லாத் திண்டாட்டமும் இருக்காது என்றும் ஆட்சியாளர்களும் பொருளாதார மேதைகளும் உறுதி அளித்தனர்.

அடுத்த பத்து ஆண்டுகளும் இப்போது உருண்டோடிவிட்டன. இன்றைய நிலைமை என்ன தெரியுமா? மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி மத்திய திட்டக்கமிஷனுக்கு அளித்திருக்கும் அறிக்கையின் 2004-05 ஆண்டுக்கான புள்ளிவிவரப்படி, இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கீழே வாழ்பவர்களின் எண்ணிககை 37.2 சதவிகிதம். அதாவது, ஏறத்தாழ 40.71 கோடி மக்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இது நிச்சயமாக அதிகரித்திருக்குமே தவிர, குறைந்திருக்காது.

மத்திய திட்டக்கமிஷனின் கடந்த மார்ச் 2007 புள்ளிவிவரப்படி, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 27.5 சதவிகிதம். அதாவது 30.17 கோடி. திட்டக்கமிஷனின் புள்ளிவிவரத்தை நம்புவதா இல்லை சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியின் புள்ளிவிவரத்தை நம்புவதா என்பதில் மத்திய அமைச்சரவைக்குக் குழப்பம் ஏற்பட்டு இபபோது பொது விநியோக முறையில் உணவுப் பொருள்களை வழங்க சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியின் புள்ளிவிவரத்தை ஏற்றுக்கொள்வது என்று தீர்மானித்திருக்கிறார்கள்.

வேடிக்கை இத்துடன் நின்றுவிடவில்லை. அனைவருக்கும் உணவுதிட்டத்தின்படி பயன் அடையப்போவது திட்டக்கமிஷனால் அடையாளம் காட்டப்பட்ட 30.17 கோடிப் பேரோ சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியால் குறிப்பிடப்படும் 40.71 கோடிப் பேரோ அல்ல. வெறும் 10 கோடிப்பேர் மட்டும்.

ஏன் என்று கேட்கிறீர்களா? இந்தப் பத்துக் கோடிப் பேருக்குத்தான் இருப்பிடம் என்று பெயருக்கு ஒரு குடிசையாவது, விலாசமாவது இருக்கிறது. ஏனையோர் தெருவோரங்களிலும் பொதுஇடங்களிலும் உண்ண உணவும், உடுக்க உடையும், செய்ய நிரந்தரத் தொழிலும் இல்லாமல் நாடோடி வாழ்க்கை வாழ்பவர்கள். இல்லையென்றால், காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள்.

மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் சரிதானா? இன்னொருபுறம் நடந்து கொண்டிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் தந்தேவாடா பகுதியில் ஆதிவாசிகள் வசிக்கும் சுமார் 258 கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்கள். இதேபோல, டெண்டுல்கர் கமிட்டியின் புள்ளிவிவரமும் பல ஆதிவாசிக் கிராமங்களைக் கணக்கில் எடுக்காமல் தானே தனது அறிக்கையைத் தயாரித்திருக்கும்?

உணவுப் பாதுகாப்பு என்கிற பெயரில் அனைவருக்கும் உணவு என்று திட்டம் தீட்டி பொது விநியோக முறை மூலம் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது என்பது அத்தியாவசியத் தேவை. இதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது. ஆனால், முறையாக நிறைவேற்றப்படாத நல்ல திட்டம் என்பது முறைகேடுகளின் ஊற்றுக்கண்ணாக மாறி, மக்கள் மனதில் கொந்தளிக்கும் எரிமலையாக மாறிவிடுமே என்பதுதான் நமது கவலை.

ஒருபுறம், வளர்ச்சி என்கிற பெயரில் காடுகள் மட்டுமல்ல, விவசாய நிலங்களும் கபளீகரம் செய்யப்படுகின்றன. இன்னொருபுறம் 60 ஆண்டுகளாகியும் இன்னும் இந்தியா முழுவதும் முறைகேடுகள் இல்லாத பொது விநியோக முறையை ஏற்படுத்தாமல் இருக்கிறோம். பல மாநிலங்களில் ரேஷன் கடைகள்கூட கிடையாது என்பதுதானே யதார்த்த உண்மை? அப்பழுக்கில்லாத பொதுவிநியோகச் சங்கிலியைக் கூட நம்மால் முறைப்படுத்தி நெறிப்படுத்த முடியாத நிலையில் அனைவருக்கும் உணவு எப்படிச் சாத்தியம்?

விலாசமே இல்லாத - ரேஷன் அட்டைக்கு அருகதையில்லாத - தெருவோரவாசிகள் இந்தியப் பிரஜைகள் அல்லாமல் போய்விடுவார்களா? அவர்களின் பசியை யார், எப்போது, எப்படிப் போக்குவது? அவர்களைப் பற்றிக் கவலைப்பட இங்கே யாருமே இல்லையா?

பொருளாதாரத் தாராளமயமாக்கல் என்று சொன்னபோது செல்வம் தாராளமயமாக்கப்படும் என்றும் குடிசைகள் கோபுரங்களாக மாறும் என்றும் கனவு கண்டோம். 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் புரிகிறது தாராளமயமாக்கப்படுவது செல்வம் அல்ல, வறுமை என்று. இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு மாவட்டங்கள் இந்திய அரசின் ஆளுமையில் இல்லை என்று. ஆண்டுதோறும் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று...

முன்னாள் பிரதமர் குஜ்ரால் வீட்டில் சந்தித்த வியட்நாமிய அமைச்சருடனான உரையாடல் ஏனோ நினைவை உலுக்குகிறது. நமது ஆட்சியாளர்கள் போடுவது தப்புக்கணக்கு என்று எச்சரிக்காமல் இருக்க முடியவில்லை!

19/04/2010 -‍ தினமணி தலையங்கத்திலிருந்து...