காலையில் சென்னையில் பேருந்தில் ஏறும்பொழுதே நடத்துனரிடம் “எப்பொழுது மதுரை போய் சேரும்?” கேட்டேன். 8 மணிக்குள் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்தேன்.  “இரவு 7.30 மணிக்கு போய்விடும்” என்றார். 8 மணிக்குள் சென்றாலே போதும் என நினைத்துக்கொண்டேன்.

கொம்பன்
“பருத்திவீரன்ல நடிச்ச கார்த்தியோட புதுப்படம்”

பேருந்து கிளம்பும் நேரத்தில் வயதான பாட்டிகள் சுமார் 20 பேர் பேருந்தில் திமு திமு என ஏறினார்கள்.  அவர்களின் சலசலப்பான பேச்சு பேருந்து முழுவதும் பரவியது.  பகல் நேரத்தில் எல்லா இருக்கைகளும் நிரம்பியதில் நடத்துனருக்கும், ஓட்டுனருக்கும் அத்தனை ஆனந்தம்.

எல்லா பாட்டிகளிடமும் ஒரு ஒற்றுமையை கவனிக்க முடிந்தது. எல்லோரும் காதுவளர்த்து தண்டட்டி போட்டிருந்தார்கள். பக்கத்தில் அமர்ந்த பாட்டியிடம் பேச்சுக் கொடுத்ததில், “பருத்திவீரன்ல நடிச்ச கார்த்தியோட புதுப்படத்துல நடிச்சு, ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்ததாக” சொன்னார்.

“சென்னையை சுத்திப்பார்த்தீங்களா?” என்றதற்கு,

“நாங்க வந்து ஒரு வாரமாச்சு! வந்ததற்கும், போவதற்கும்  இரண்டு நாள் ஆயிருச்சு! நாலுநாள் தான் படமெடுத்தாங்க! ஒரு நாள் கடற்கரைக்கு கூட்டிப்போனாங்க!” என்றார்.

எம்.ஜி.ஆர் சமாதியை எப்படியாவது சுற்றி காண்பித்துவிடுகிறார்கள். எம்.ஜி.ஆர் விட்டாலும் சினிமாக்காரர்கள் மீண்டும் மீண்டும் அவரை நினைவுபடுத்துவதில் கவனமாக இருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன்.

மதிய நேரம். ஒரு பைபாஸில் இருந்த மோட்டலில் வண்டி நின்றது. போய் சாப்பிட்டதில் எல்லா மோட்டல்களை போலவே சாப்பாடு ரெம்ப சுமாராக இருந்தது.

கொம்பன்
சினிமா கம்பெனிகாரங்க சாப்பாட்டுக்கு கொடுத்ததே 50 ரூபாய் தான்!

எல்லா பாட்டிகளும் உள்ளே நுழைந்தவர்கள் சிறிது நேரத்திலேயே சாப்பிடாமலேயே எல்லோரும் பேருந்தில் ஏறிவிட்டார்கள்.  என்னவென்று விசாரித்தால், “கொஞ்சூண்டு சோறு வைக்கிறாங்க! அதுக்குப் போய் 70 ரூபாய் சொல்றாங்க! அநியாயம். சினிமா கம்பெனிகாரங்க சாப்பாட்டுக்கு கொடுத்ததே  50 ரூபாய் தான்!” என்று அங்கலாய்த்து சொன்னார்.

வண்டி கிளம்பிய அரைமணி நேரத்தில் பாட்டிகளிடம் சலசலப்பு.
“எப்பா காலையிலேயே நாங்க சரியா சாப்பிடலை! வேறொரு சாப்பாட்டுக் கடையப் பாத்து நிப்பாட்டுப்பா! பசி உயிர் போகுது. யாராவது மயக்கமாயிட்டா ரெம்ப தொல்லையாயிரும்!” என செல்லமாய் மிரட்டினார்கள்.

‘அய்யய்யோ இன்னொரு அரைமணி நேரமா!’ என்று மற்ற பயணிகள் எல்லாம் பதட்டமானார்கள்.

அந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய இரண்டு பாட்டிகளிடம் “இங்க எல்லா இடத்திலும் 70 ரூபாய் தான் சாப்பாடு” என ஓட்டுநர் சொல்லிப்பார்த்தார். மயக்கம் போட்டு விட்டால், மருத்துவமனைக்கு யார் அலைவது என யோசித்து, கெஞ்சியும் பார்த்தார்.

அந்த பாட்டிகளோ அதை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை.  ஓட்டுநருக்கு தர்மசங்கடமாகிவிட்டது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை.  புதிதாக திறந்திருந்த ஒரு மோட்டலில் நிறுத்தி, அதன் முதலாளியிடம் தன் நிலைமையைச் சொல்லி, (கெஞ்சி) 70 ரூபாய் சாப்பாட்டை 50 ரூபாய்க்கு பேசி முடித்தார்.

எல்லா பாட்டிகளும் இறங்கி போய் சாப்பிட்டார்கள். ”இவங்க தர்ற இத்துணூண்டு சாப்பாடு எவ்வளவு நேரத்துக்குப்பா தாங்கும்! 50 ரூபாயாம். அநியாயம!, கொள்ளையடிக்கிறாங்கப்பா” என்று புலம்பிக்கொண்டே வண்டியில் திரும்ப ஏறினார்கள்.

கொம்பன்
“நாலு நாள் ஷூட்டிங் எடுத்தாங்க! கடசியில பார்த்தா தலைக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்காங்க!”

ஓட்டுனருக்கு காதில் புகை வந்தது!

“சாப்பிட்டதற்கு பின்னாடி உங்களுக்குள்ள என்ன பிரச்சனை? காரசாரமாய் பேசிக்கிட்டு இருந்தீங்க!” எனக் கேட்டேன்.

“அது ஒண்ணுமில்லப்பா! நாங்க ஊர விட்டு கிளம்பி ஒருவாரம் ஆச்சு! நாலு நாள் ஷூட்டிங் எடுத்தாங்க! கடசியில பார்த்தா தலைக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்காங்க! எங்களை கூட்டிட்டு வந்த எங்க ஆளுங்க ஏதும் கூடுதலா வாங்கி நமக்கு கொடுக்காம விட்டுட்டாங்களோன்னு சண்டைபோட்டோம். அங்கேயே சொல்லியிருந்தா கம்பெனிகாரங்ககிட்ட கேட்டிருப்போம்! ஏமாத்திட்டாங்கப்பா!” என்றார் வருத்தத்துடன்!

அடப்பாவிகளா!  மதுரையிலிருந்து வயதானவர்கள் 20 பேரை அழைத்து வந்து, ஒருவாரம் ஆகியிருக்கிறது. எவ்வளவு அலைச்சல். ரூ 1000 மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.

கார்த்தி நடிக்கும் கொம்பன் படம் ஒன்றும் பட்ஜெட் படமில்லை. சிங்கம், சிறுத்தை, மெட்ராஸ் என பல வெற்றிப்படங்களில் காசு பார்த்த ஸ்டுடியோ ஞானவேல்ராஜா தான் தயாரிக்கிறார். இப்போதைக்கு கார்த்திக்கு சம்பளம் 6 கோடிக்கு மேல் என்கிறார்கள். இதில் தெலுங்கு டப்பிங்குக்கு சில கோடிகள் தனி! 6 மாதத்தில் படத்தை எடுத்து முடித்து விடுவார்கள்.  குறைந்தபட்சம் 6 கோடி சம்பளம் என வைத்துக்கொண்டால் கூட ஒரு நாள் கார்த்தியோட சம்பளம் 3.5 லட்சம்.

சமீபத்தில் ஒரு திரைவிழாவில் நடிகர் சந்தானத்தின் ஒருநாள் சம்பளம் ரூ 15 லட்சம் என ஆர்யா வெளிப்படையாக தெரிவித்தார். நம்ம வயதான பாட்டிகளுக்கு ஒரு நாள் ஊதியம் 250 ரூ.  மதிய சாப்பாட்டுக்கு ரூ 50 மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.

கொம்பன்
70 ரூபாய் சாப்பாட்டிற்கே வயிறு எரிந்த பாட்டிகளுக்கு தெரியாது, கார்த்தி மாதிரி நடிகர்கள் எத்தனை கோடிகள் கல்லா கட்டுகிறார்கள் என்று!

70 ரூபாய் சாப்பாட்டிற்கே வயிறு எரிந்த பாட்டிகளுக்கு தெரியாது, கார்த்தி மாதிரி நடிகர்கள் எத்தனை கோடிகள் கல்லா கட்டுகிறார்கள் என்று!
ஒருவழியாக பேருந்து 8 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது. தாமதமான நேரத்தையெல்லாம் ஓட்டுநர் கொஞ்சம் விரைவாக ஓட்டி, ஈடுசெய்திருந்தார்.
பேருந்திலிருந்து பாட்டிகள் எல்லோரும் தளர்வாக இறங்கினார்கள். மெல்ல மெல்ல அந்த இருட்டில் மறைந்துபோனார்கள். மாறியிருக்கும் ஏற்றத்தாழ்வான உலகம் அவர்களுக்கு தெரியாது.

அதனாலென்ன? எல்லா புள்ளிவிவரங்களையும் விரல்நுனியில் வைத்துக்கொண்டு நாம் மட்டும் என்ன செய்துவிட்டோம்?

- குருத்து

வினவு தளத்தில் 23/12/2014 அன்று வெளியானது!