> குருத்து: November 2013

November 22, 2013

இரயில் சிநேகம்!

தென்னிந்தியா முழுவதும் சுற்றி வந்து, இருபத்தைந்து வருடங்கள் லிப்ட் விற்பனை & சேவை பிரிவில் வேலை பார்ப்பவர் ஒருவர். 

சென்னையில் தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தில் நிர்வாக பிரிவில் வேலை செய்யும் ஒருவர்,

தேசிய வங்கியில் அலுவலக உதவியாளராக  வேலை செய்து ஓய்வு பெற்ற ஒருவர். இவர்களோடு நானும் ரயிலில் பேச துவங்கும் பொழுது இரவு 10 மணி.

அதில் சில..

"இனி விவசாயத்தை நம்பாதீர்கள்.  அதிலிருந்து வெளியே வாருங்கள்" என எப்பொழுது மன்மோகன் சொன்னாரே, அப்பொழுதே வெறுத்துவிட்டேன். இந்த ஆள் மகா திருடன்! என!"

"எங்க பகுதியில் விதை கிடைக்காத பயிர்கள் பயிரிட கிடைத்த பொழுது, பதறி போய்விட்டேன்.  நிலங்களை மலடாக்குகிறார்களே!" என!

"இரவெல்லாம் முழிச்சிருந்து, அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் நமது பெண்கள் வேலை செய்கிறார்களே! அவர்களுடைய உடல் என்ன ஆகும்?"

"எங்க அம்மாவை தவிர யாரையும் நம்பமாட்டேன் சார்!"

கர்மா, பாசிட்டிவ் சிந்தனை, ஓஷோ, கம்யூனிசம் தோற்றுப்போனதா, பா.ஜனதா மாற்று இல்லை என பல தளங்களிலும், உலகம் சுற்றி வந்த பொழுது, இரவு 12.30 மணி.

நாங்கள் இருந்தது 1 முதல் 8க்குள்.  32 எண்ணுள்ள படுக்கையிலிருந்து ஒரு பெரியவர் எழுந்து வந்து, நீங்க பேசறதுல எனக்கு தூக்கம் வரல்ல! ப்ளீஸ் என்றார்.  அதற்கு பிறகும் மெதுவாக விவாதித்து தூங்கும் பொழுது இரவு 1.30 மணி.

வள!வள! என பேசிக்கொண்டிருந்த ஒருவர் தான் விவாதத்தை துவக்கி வைத்தவர்.  நான் பேசினால் பேசுகிற ஆள்!

இந்த விவாதம் பயனுள்ளதாக இருந்தது. இப்படி விவாதித்து பல மாதங்கள் ஆயிற்று! என்றார்கள் இருவர். எனக்கும் தான்!


November 20, 2013

வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்! ‍ பொதுக்கூட்டம்!


November 11, 2013

’மைலார்ட்’ என அழைப்பதை தடை செய்யவேண்டும்!

நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதிகளை "மை லார்ட்' மற்றும் "யுவர் லார்ட்ஷிப்' என்று வழக்குரைஞர்கள் குறிப்பிடுவது அடிமைத்தனத்தைக் எடுத்துக் காட்டுகிறது போல் உள்ளதால் அந்த வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 75 வயதான வழக்குரைஞர் சிவ் சாகர் திவாரி தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழûற்ம விசாரணைக்கு வந்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், "எந்த அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும். இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த கூடாது என்று இந்தியாவில் எந்த நீதிமன்றமாவது நிர்பந்தித்துள்ளதா?' என்று கேள்வி எழுப்பினர்.

இந்த மனு மீதான விசாரணையில் பங்கேற்பதில் இருந்து நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகிக் கொள்வதாக கூறினார். (எனினும், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை).

அதையடுத்து, வேறு அமர்வுக்கு இந்த மனுவை மாற்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் உத்தரவிட்டார்.

மனுவின் விவரம்: ஆங்கிலேயர் காலந்தொட்டு பயன்படுத்தப்படும் "மை லார்ட் மற்றும் "யுவர் லார்ட்ஷிப்' என்ற வார்த்தைகளைப் பிரயோகம் செய்ய கூடாது என்று இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் 2006ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தாத காரணத்தால் உச்ச நீதிமன்றம் எனது மனுக்களை தள்ளுபடி செய்கிறது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-தினமணி, 12/11/2013


**** 
வழக்கினை விசாரித்த நீதிபதிகள், நீதிபதி 'மைலார்ட்' என அழைக்க வேண்டும் என நாட்டில் உள்ள எந்த கோர்ட்டும் வக்கீல்களை வற்புறுத்தவில்லை. இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தள்ளுபடி செய்தனர்.

- தினமலர்




November 8, 2013

முதலாளி ‍ - ஒரு குட்டி (உண்மை) கதை!

"ஷீ" கடை நடத்தி, லாபம் சம்பாதித்த ஒரு சிறுமுதலாளி, தோல் ஷீக்களை நாமே தயாரித்தால் என்ன என யோசித்து ஒரு தொழிற்சாலையை லீசுக்கு எடுத்து ஒரு சுயபோக சுபதினத்தில் துவங்கினார். 100 தொழிலாளிகள் வரை வேலைக்கு அமர்த்தினார்.

கணக்கு () வேலைகள் பார்க்க எங்கள் நிறுவனத்தை அமர்த்தினார். மாதம் இரண்டு முறை அல்லது மூன்று முறை அந்த நிறுவனத்திற்கு போய்வந்தேன். அப்பொழுது அந்த‌ சிறு முதலாளி அதுவும் புது முதலாளி காட்டிய பந்தா இருக்கிறதே! தாங்கமுடியவில்லை! பொதுவாக நான் பார்த்த வரையில் தொழில் துவங்குகிற‌ பொழுது, சிறுமுதலாளிகள் கொஞ்சம் சிநேகமாய் பழகுவார்கள்.  தொழில் வளர வளர நெருக்கத்தை குறைந்து கொண்டே வருவார்கள். ஆனால், இவரோ துவக்கத்திலேயே செய்த பந்தா கொஞ்சம் ஓவராய் இருந்தது.

துவக்கத்தில் சில மாதிரிகள் தயாரித்து ஐரோப்பாவில் இரண்டு நாடுகளுக்கு அனுப்பி வைத்தார். மீண்டும், இன்னும் சில மாதிரிகள் அனுப்ப சொன்னார்கள். அனுப்பினார்.  பொருளாதார மந்தத்தினால், பல நாடுகள் தள்ளாட, அவர் எதிர்ப்பார்த்த ஆர்டர்கள் வரவில்லை. 

கையில் உள்ள முதலீடு குறைய, குறைய முகம் வாட ஆரம்பித்தது. தொழிலாளர்களை குறைத்துப் பார்த்தார். உள்ளூரில் ஏதேனும் 'லேபர் வேலை' எடுத்து செய்ய ஆரம்பித்தார். கட்டுபடியாகவில்லை.

வங்கி கடன் அவரை நெருக்கியது.  குடியிருந்த சொந்த வீட்டை அடைமானம் வைத்தார். பந்தா கொஞ்சம் கொஞ்சமாய் ஆவியாக ஆரம்பித்தது.

நானும் எங்கள் எம்.டியும் போகிற பொழுதெல்லாம், தன் துயரங்களை கொட்ட ஆரம்பித்தார். இன்னும் இரண்டு மாதங்களில் இரு ஆர்டர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதாக சொல்லி, அந்த நிறுவனத்தில் பங்கு தாரராக இணைய சொல்லி கேட்டார். இல்லையில்லை. கெஞ்சினார். அடுத்த மாதத்திலிருந்து எங்கள் எம்.டி. வருவதை நிறுத்தினார்.

அடுத்த இரண்டு மாதத்தில் கவலை, துக்கம், சோகம் எல்லாம் சேர்ந்து, தாடி கூட வளர்க்க ஆரம்பித்தார்.  வீட்டை விற்றார்.  தங்கள் பிள்ளைகள் கூட தன்னை மதிப்பதில்லை என யாரிடமோ போனில் புலம்பிக்கொண்டிருந்தார்.

சரியாக ஒரு வருடம். எப்பொழுதும் போல், அங்கு போனால், நிறுவனம் மூடியிருந்தது. விசாரித்த பொழுது கடன்காரர்களின் நெருக்கடியால், முதலாளி தலைமறைவாகிவிட்டார் என்றார்கள்.