> குருத்து: February 2013

February 28, 2013

'மானாட மயிலாட' ஆபாச கூத்தை உடனே நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்!

இன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம்

சன் - கலைஞர் - விஜய் டிவி போன்ற விசபாம்புகளே!
காமவெறியைத் தூண்டும் ஆபாச குத்தாட்டங்களையும்
விளம்பரங்களையும் உடனே நிறுத்து!

பாலியல் வன்முறையைத் தூண்டும்
"மானாட மயிலாட" ஆபாசக் கூத்தை உடனே நிறுத்தக் கோரி

கலைஞர் தொலைக்காட்சி முன்பு

ஆர்ப்பாட்டம்


பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை
தொடர்புக்கு – 9841658457







முற்போக்கு பெண்கள் அமைப்பினர் (அமைப்பு பெயர் சரியாக நினைவில்லை) பல ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் தீபா தியேட்டருக்குள் உள்ளே புகுந்து ஆபாச படத்தின் திரைச்சுருளை எடுத்து வந்து தெருவில் எரித்தார்கள். அந்த சமயத்தில் பெரிதாக பேசப்பட்டது.

அதற்கு பிறகு வீச்சாக தமிழ்நாட்டில் திரைப்பட, ஊடக ஆபாசத்தை கண்டித்து பெரிய போராட்டங்களும் எழவில்லை. புரட்சிகர இயக்கத்தில் பெண்கள் அமைப்பு பலமாக இல்லாததும் ஒரு காரணம்.

இப்பொழுது நாடு முழுவதும் நடக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தாக்குதல் ஒரு பொது விவாதத்திற்கு வந்திருக்கிறது.  பெண்கள் மீதான பாலியல் ரீதியான தாக்குதலை தனிப்பட்ட குற்றமாக (crime) பார்க்கும் பார்வை பலருக்கும் இருக்கிறது. அதனால், தூக்கில் போட வேண்டும், உறுப்புகளை வெட்ட வேண்டும் என பேசுகின்றனர்.

இப்படி கண்ணோட்டம் இருப்பதாலேயே, பலரும் பாலியல் மன வக்கிரங்களை தூண்டும் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளையும், பெண்ணை எளிதில் சோரம் போகும் இழிபிறவிகளாக காட்டும் விளம்பரங்களையும் கண்டிப்பதில்லை. எதிர்த்து போராடுவதில்லை.

பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பினரும், அதன் தோழமை அமைப்பினர்களும் தமிழகம் தழுவிய அளவில் கடந்த இரண்டு மாதங்களாக பெண்கள் மீதான பாலியல் வன்முறையை எதிர்த்து மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது. இந்த போராட்டம் பற்றி நாடு முழுவதும் பரவவேண்டும். இந்த ஆபாச நிகழ்ச்சிகள் எல்லாமும் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

போராடும் தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

February 19, 2013

இன்று நாங்கள் காட்டப்போவது "கண்ணாடியை!"


"பெண்களுக்கு எதிரான பாலியல் வெறியாட்டத்திற்கு எதிரான இயக்கம்" ‍ த்தை ஒட்டி நடந்த செங்குன்றம் பொதுக்கூட்டத்தில் மையக்கலைக்குழு தோழர் கோவன் கலைநிகழ்ச்சியை இப்படித்தான் ஆரம்பித்தார்.

"இத்தனை நாளா அம்பானியை, பிர்லாவை விமர்சனம் செய்வோம். நீங்க நல்லா கை தட்டினீங்க! முப்பது நாள். தமிழகம் முழுவதும் முப்பது பொதுக்கூட்டம். இந்த மாதம் முழுவதும், இன்றைக்கும் கைதட்டு எங்களுக்கு கிடைக்காது. ஏன்னா, இன்னைக்கு நாங்க‌ காட்டப்போறது 'கண்ணாடியை'! அதுல உங்க ஆணாதிக்க முகம் தெரியும்!"

நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கைதட்டல்களும் அதிகமாக இருந்தது. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்கள் அல்லவா!


ஓவியர் : மணிவர்மா

படத்திலிருப்பது : மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் தோழர் கோவன்

February 18, 2013

பாலியல் வல்லுறவும் நீதிமன்றம் தரும் மனஉளைச்சலும்!

- நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்

பாலியல் வன்முறையின் தன்மையை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. எப்பொழுதெல்லாம் ஒரு பெண்ணின் தன்னாட்சி நிலைக்கெதிராக ஒரு ஆண் உறவு கொள்கிறானோ அங்கே அந்தச் சம்பவம் நிகழ்கிறது. அங்கே பெண்ணின சமத்துவ உரிமை, அவளுடைய சுயமதிப்பு தாக்கப்படுகிறது.
கற்புடமை, கன்னித்தூய்மை போன்ற கருத்துப் படிவங்கள் கட்டமைக்கப்படுவதற்கு முன்பே எப்பொழுதெல்லாம் அவள் மேல் ஆண் பாலியல் அதிகாரம் செய்ய முனைந்தானோ அங்கே அந்தக் குற்றம் நடைபெற்றது.

ஆணாதிக்க சமூகத்தில் இந்தக் குற்றத்தை குடும்ப கெüரவம், மானம் என்ற சாயமும், புனிதம், தூய்மை என்ற வர்ணமும் பூசப்பட்டு அந்த வன்முறையின் உண்மைத் தன்மை மறைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நடைபெறும்பொழுது ஒரு கொடுங்குற்றம் நடைபெறுகிறது, இதற்கு அவள் பொறுப்பல்ல, அதற்கும் கெüரவத்திற்கும் இணைப்பும் இல்லை. அவள் எவ்விதத்திலும் களங்கப்படவுமில்லை. இதை முதலில் நாம் புரிந்து கொண்டால் தான் பெண்ணுக்கு நீதி கிடைக்கும், அவள் உரிமை பாதுகாக்கப்படும்.

இந்த உரிமைப் பறிப்பு அவளுடைய மனப்பக்குவத்தின் வளர்ச்சியையோ, எனது உடல் என்ற புலனுணர்வையோ சார்ந்ததில்லை. அவளுடைய சம்மதமின்றி நடக்கிறது. அவள் வாய் திறந்து வேண்டாம் என்று சொல்லாமல் மெüனமாக இருந்தால் அது சம்மதமாகாது. அவள் அச்சத்தால் ஆற்றலிழந்து போயிருக்கலாம், பலவந்தத்தால் அவள் கைகள் செயலற்றுப் போயிருக்கலாம், இந்தச் செயலின் தாக்கத்தை மனதளவில் புரிந்துகொள்ள முடியாத சிறுமியாக இருக்கலாம், மாற்றுத்திறனாளியாக இருக்கலாம், மனவளர்ச்சியடையாதவராக இருக்கலாம். எவ்வாராயினும் அது அப்பெண்ணின் மீது ஏற்பட்ட அதிகாரத்தாக்குதலே.

இப்பொழுது நம் தலைநகரில் நடந்த சம்பவம் இந்த வன்முறையின் அதிஉக்கிரமான வெளிப்பாடு. நம் நாட்டின் எல்லா மூலைகளிலும் ஏழைப்பெண்கள், தலித்பெண்கள், மலைவாழ்பெண்கள், வயதானவர்கள், பெண்குழந்தைகள், சிறுபான்மையினர், வெளிநாட்டவர்கள் என்று பாகுபாடில்லாமல் பெண்களுக்கெதிராக நடக்கும் அநீதி. அந்த ஆண் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்ததினால் நடந்த ஒன்றல்ல, அவன் தெரிந்தே பெண்ணைக் கட்டுப்படுத்தத் தொடுக்கும் வன்செயல்.

இந்த அதிகாரத் தாக்குதலை ஒரு பெண் எவ்வாறு விளக்குவாள்? பண்பாட்டுக் கூச்சத்தில் வாய் மெüனம் பேசும். கலக்கத்திற்குரிய பாலியல் வன்முறையை நினைவுகூர்வது எளிதில்லை. அவளுக்கு ஏற்பட்ட சம்பவத்தைப் புறக்காட்சியாகத் தீட்ட முடியாது; கோர்வையாகக் கதை சொல்வதுபோல யாராலும் அந்த அனுபவத்தை விவரிக்க முடியாது.

ஆனால், அந்தச் சம்பவத்தைப்பற்றி நேர்காணல் உரைபோல அந்தப்பெண் சொல்ல வேண்டும் என்று காவல்துறையும், நீதித்துறையைச் சார்ந்தவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

பாலியல் வன்முறையின் தாக்கம் என்ன, அதன் விளைவுகள் என்ன, அதன் பின்புலம் என்ன, அந்த வழக்குகளை எப்படி அணுக வேண்டுமென்று பயிற்சி ஒன்று நடக்கும்.

முதலில் நீதித்துறை அதிகாரிகளைக் கண்களை மூடிக்கொள்ளச் சொல்லுவோம். அவர்களின் முதல் காதலனுபவத்தை, மனதுக்கினிய மற்றொருவருடன் உறவுகொண்டதை நினைவுக்குக்  கொண்டு வாருங்கள் என்று சொல்லுவோம். ஐந்து நிமிடங்கள் சென்றபின் கண்களைத் திறக்கச் சொல்வோம். பின் ஒவ்வொருவரும் தன் அருகிலிருக்கும் நண்பரிடம் சன்னக்குரலில் அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளச் சொல்வோம்.
அனைவரும் அதிர்ச்சியும் கூச்சமும் நிறைந்த குரலில் அதெப்படி முடியும் என்பார்கள். அப்பொழுது கேட்போம் ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வை அந்தரங்கம் காரணமாக உங்களுக்குத் தெரிந்த நண்பருடன் பகிர்ந்துக்கொள்ளத் தயங்குகிறீர்கள்.

முன்பின் தெரியாத நபர்கள் அடங்கிய கோர்ட் ஹாலில் பாலியல் வன்முறைக்கு ஆளான அந்தப் பெண் வழக்குரைஞர்களுடைய மிரட்டும் குறுக்கு விசாரணைக் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பாள் என்று. உண்மை நிலை அப்பொழுதுதான் அவர்கள் முகங்களில் அதிர்ச்சியாய் உறையும்.
வன்முறை நிகழ்ந்தது ஒருமுறை என்றால், அதை திரும்பத்திரும்ப காவல் நிலையங்களில், நீதிமன்றங்களில் அவள் கூறவேண்டியக் கட்டாயம் அவளை வன்முறைத் தாக்குதலுக்கு ஆளாக்குகிறது. வன்முறைக் குற்றம் அவளுடலை மட்டும் பாதிப்பதில்லை. அவள் உணர்வுகளைப் பாதிக்கிறது. அவள் உளவியல் துன்பங்களுக்கு ஆளாகிறாள்.

உளவதிர்ச்சிக் கோளாறுகளால் அவளது மூளையில் வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. இது எனக்கு நடக்கவில்லை, எனக்கு நடக்கவில்லை என்று தனக்குள்ளே மறுப்பு மாயையை ஏற்படுத்திக்கொள்கிறாள். அழுகிறாள், கதறுகிறாள். கடிகாரம் பின்னோக்கிச் சென்று அந்த நிகழ்விற்கு முன்னிருந்த காலத்திற்கு போய்விட மாட்டோமா என்று பரிதவிக்கிறாள். மேலே கூறியுள்ளது அவள் உண்மை நிலையின் முழுமை பெறாத சித்தரிப்பே.
இதில் குடும்பத்தாருடைய ஆதரவும் எல்லாப் பெண்களுக்கும் கிடைப்பதில்லை. ஏனென்றால் நம் சமூகம் குற்றம் செய்யாத அந்தப் பெண் மீது குற்ற உணர்வையும் அவமானத்தின் சுமையையும் ஏற்றுகிறது.

எத்தனை எத்தனை பெண்கள், தினசரி தாக்கப்படுகிறார்கள். நாமும் தினமும் படிக்கிறோம். தாக்கியவர்கள் தெரிந்தவர்களாக இருக்கலாம், அதிகாரத்திலிருப்பவர்களாக இருக்கலாம், பாதுகாக்க வேண்டியவர்களாக இருக்கலாம். எவ்வளவு வன்முறைக்கொடூரங்கள்? ஏன் இப்பொழுது பெண்களும், ஆண்களும் நம் தலைநகரில் கடுங்குளிரில், லத்தியடியை வாங்கிக்கொண்டு, பெண்கள் மேல் வன்முறை ஒழிய வேண்டும்,

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கடுந்தவம் புரிந்தார்கள்?
இது ஒரு தனி நிகழ்விற்கு எதிரான போராட்டம் இல்லை, பல்லாண்டுகளாக சமூகத்தில் ஆட்சிபுரியும் நியாயப்படுத்த முடியாத கொடூரத்தை எதிர்த்து முதிர்ந்த பல்லாயிர உணர்ச்சிக் குவியல்களின் வெளிப்பாடு. இந்த உணர்ச்சிகளின் பிரதிநிதிகளாக பலர் சென்று நீதியரசர் ஜே.எஸ்.வர்மா குழுவிற்கு முன்னால் தங்களுடைய வாக்குமூலங்களை அளித்தார்கள். அமைதியாக, முறையாக, அழுத்தமாக உண்மைகளை விளக்கினார்கள்.
அந்த சிறப்புக்குழுவும் பல அரிய பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்தப் பரிந்துரைகளில் ஆதார சுருதியென்னவென்றால் பெண்ணின் சமத்துவ உரிமை, தன்னாட்சி நிலை, கண்ணியம் இவைகளை யாரும் பறிக்க முடியாது, ஏன் கணவனே கூட, என்பதுதான்.

நாம் பெண்ணைப் பார்க்கும் கண்ணோட்டமே மாற வேண்டும், அவளை ஒரு இரண்டாந்தர பிரஜையாக நடத்தக் கூடாது என்று பல்வேறு கோணங்களில் அரிய பரிந்துரைகளை முன் வைத்துள்ளது இந்தக் குழு. இவற்றை எவ்வளவு சீக்கிரமாக அரசு செயல்படுத்துகிறது என்று பார்க்க வேண்டும்.

இந்தப் பாலியல் வன்முறைக் குற்றத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், குற்றம் செய்தவன் தலைநிமிர்ந்து நடக்கிறான். தாக்குதலுக்கு ஆளானவளுக்கு வருகிறது சேதமும் அவப்பெயரும்!

சமூகநிலை மாறினால்தான் பெண்கள் குற்றங்கள் நடைபெறும்பொழுது தைரியமாக புகார் செய்ய வருவார்கள். அவளுக்கு நம்பிக்கை ஊட்டுவதான, தைரியம் ஊட்டுவதான சமூகநிலை வரவேண்டும்.

அந்தப் பெண் கேட்பதென்ன? ""என் குறையை, என் கண்ணியம் பாதிக்கப்படாமல் கேளுங்கள். தீர விசாரியுங்கள், கோர்ட்டிலும் என் கண்ணியம் பாதிக்கப்படாமல் வழக்கை நடத்த வேண்டும், எனக்கு நீதி வேண்டும், குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்'' இவ்வளவு தான்.
இது அவளுடைய அடிப்படை உரிமை. இந்த உரிமையை நிலைநாட்டத்தான் அவளே நூறாக, அவளே ஆயிரமாக அங்கே அந்தக் கடுங்குளிரில் மெழுகுவர்த்தியுடன் நின்றாள்.

போராட்டம் இன்னும் முடிந்தபாடில்லை. இப்போதுதான் பெண்மை வெகுண்டெழுந்து தன் உரிமையை நிலைநாட்ட, தர்மயுத்தத்தைத் தொடங்கி இருக்கிறது. சட்டம் பிறப்பிக்கப்படுவது மட்டுமே தீர்வாகிவிடாது. சமூக நிலை மாற வேண்டும். சமூகத்தின் கண்ணோட்டம் மாற வேண்டும். அதுவரை, வீறு கொண்டெழுந்திருக்கும் பெண்ணுரிமைக்கான போராட்டம் தொடரும்!
நன்றி : தினமணி

February 17, 2013

புரட்சிகர கலை நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை!

"கோயில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.  இதை தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே ரசித்து பார்க்கிறார்கள்.  இனி ஆபாசமான கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது!" என உத்தரவிட்டார் நீதிபதி சந்துரு.

"ஜொள் வடிச்சது தப்பாயா! இப்படி பப்ளிக்கா கண்டிச்சு அசிங்கப்படுத்திட்டாரே நீதிபதி!" என கொலைவெறியாகி, அப்பொழுதிலிருந்து காவல்துறை கலைநிகழ்ச்சி, நடனநிகழ்ச்சி என எதற்குமே அனுமதி தருவதில்லை.  இடையில் ஒருமுறை ஆளும்கட்சி அதிமுக கூட்டத்திலேயே கலைநிகழ்ச்சியை நடத்த விடாமல் தடுத்திருக்கிறார்கள்.

ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் கடந்த மாதத்திலிருந்து, மாநிலம் தழுவிய அளவில் "பெண்களுக்கு எதிரான பாலியல் வெறியாட்டத்தை எதிர்த்து" ஒரு பிரச்சார இயக்கத்தை உற்சாகமாய் நடத்தி வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியில், இன்று செங்குன்றம் பகுதியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி பொதுக்கூட்டம், புரட்சிகர கலை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்கள்.  அதற்கு காவல்துறையிடம் அனுமதிக் கேட்டால்  'கலை நிகழ்ச்சிக்கு தடை' இருப்பதால் நடத்த முடியாது என்றார்கள்.

விளம்பர ஆபாசம், நடன ஆபாசம், திரை ஆபாசம் என இப்படி எல்லா ஆபாசங்களையும் எதிர்த்து தான் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடத்துகிறோம் என விளக்கி சொன்னால், காது கொடுத்து கேட்க மறுக்கிறார்கள் அல்லது புரிந்து கொள்ளும் அறிவு இல்லாமல் "நடத்த கூடாதுன்னா நடத்தக்கூடாது" என பழைய பல்லவியையே பாடினார்கள்.

தோழர்கள் விடாது காவல்துறை உயரதிகாரிகளை சந்தித்து, பல்வேறு விளக்கங்கள் தந்து, போராடி ஒருவழியாய் நேற்று அனுமதி வாங்கிவிட்டார்கள்.

இன்று மாலை 6  மணியளவில் செங்குன்றம் பகுதியில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொருளாளர் காளியப்பன் சிறப்புரை ஆற்ற, ம.க.இ.கவின் மையகலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.  அவசியம் கலந்துகொள்ளுங்கள்.

February 16, 2013

வன்கொடுமை வழக்குகள் நிலவரம்!

இந்தியாவில் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் (2010 வரைக்கும்)

21 ஆண்டுகளில் பதிவு செய்த வழக்குகள் - 1,26.593
நிலுவை வழக்குகள் எண்ணிக்கை - 1,00,98
தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்குகள் - 25573
தண்டிக்கப்பட்ட வழக்குகள் - 8628 (6.8%) மட்டுமே!

இதுவே தமிழ்நாட்டில்

21 ஆண்டுகளில் பதிவு செய்த வழக்குகள் - 3635
வாபஸ் வழக்குகள் - 30
நிலுவை வழக்குகள் எண்ணிக்கை - 2839
தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்குகள் - 766
தண்டிக்கப்பட்ட வழக்குகள் - 189 (5.2%) மட்டுமே!

(ஆதாரம்: மைய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரத்துக்கான அமைச்சகம் வன்கொடுமைச் சட்டம் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை.)

- 'ஆதிக்க சாதி வெறி கும்பலின் அவதூறுகள்' - புதிய ஜனநாயகம் கட்டுரையிலிருந்து...


February 13, 2013

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம்! - பிரசுரம்



February 12, 2013

தோழி விநோதினிக்கு,

தோழி விநோதினிக்கு,

திராவக வீச்சால் பாதித்து, நிறைய போராட்டங்களுடன் முன்னேறி கொண்டிருந்த நீ, இன்று காலையில் மூச்சு திணறால் இறந்து போனதை அறிந்து, நிறைய வருந்தினேன்.  உன்னுடைய இயல்பான முகமும், திராவகம் ஊற்றிய முகமும் மாறிமாறி நினைவில் வந்து கொண்டே இருந்தன.

உன் சொந்த பந்தங்களில் முதல்தலைமுறை பட்டதாரி நீ.  ஒரு அடித்தட்டு குடும்பத்தில் பிறந்து, பட்டம் வாங்குவது என்பதை எத்தனை கடினமான பாதை என்பதை நானும் அறிவேன். உன்னைப்போல் தான் நானும். வாழ்க்கைப் பற்றிய கனவுகளும், தன் வாழ்நாள் முழுவதும் வறுமையில் உழன்ற பெற்றோரை கொஞ்சம் இளைப்பாற வைக்கலாம் என்ற கனவுகளும் இன்று கருகிப்போய்விட்டன.

உன்மீது திராவகம் வீசியவனை தூக்கில் போட இனி கோரிக்கைகள் வலுக்கும். மக்களிடமிருந்து திராவகத்தை ஒளித்து வைக்க உச்சநீதிமன்றம் ஆலோசனை சொல்லியிருக்கிறது.  இதை தனிப்பட்ட ஒரு குற்றச் செயலாக பலரும் பார்க்கிறார்கள். பார்ப்பார்கள்.   நான் அப்படி பார்க்கவில்லை.  இங்கு எல்லா ஆண்களுக்குள்ளும், பெண்ணை இழிவுப்படுத்தும் எண்ணம் சாதுவாகவோ அல்லது சுரேசை விட கொடூர மனமோ ஒளிந்துகொண்டு தான் இருக்கிறது. சுரேசை தண்டித்துவிடலாம்.  'நம்முடைய' சட்டத்திற்கு அது எளியது தான். ஆனால், இதை செய்ய தூண்டிய பலருக்கு என்ன தண்டனை!

"உன்னை காதலிக்க வைக்கிறேனா இல்லையா! பார்" என காலரை தூக்கிவிட்டு 'வீர வசனம்' பேசிய நாயகன்களுக்கும், படம் எடுத்தவர்களுக்கும் இங்கு என்ன தண்டனை?

ஒரு வீட்டிற்குள்ளேயே அண்ணன், தங்கையை பேதம் பிரித்து வளர்த்த பெற்றோர்கள் இதற்கு காரணமில்லையா!

அரைகுறை ஆடை பெண்களை தங்களின் ஊடகங்களில் காட்டி, பெண்ணை சக மனுசியாக பார்க்க தடுக்கும் இவர்களுக்கு என்ன தண்டனை?

தனது பொருட்களை விற்றுத்தீர்ப்பதற்காக, பெண்ணை துகிலுரியும் முதலாளிகளுக்கு என்ன தண்டனை?

தனது அடியாட்படைகளான இராணுவமும், காவல்துறையும் செய்யும் பாலியல் வல்லுறவுகளை அரசே வலிந்து காப்பாற்றுகிறது. அரசுக்கு என்ன தண்டனை?

ஆதிக்கசாதிகாரன் தலித் பெண்ணை தொடவே மாட்டான். எப்படி வல்லுறவு செய்வான் என சொல்லி நீதிமன்றம் வல்லுறவு செய்தவனை விடுவித்ததே! அந்த நீதிபதிகளுக்கு என்ன தண்டனை?

மீண்டும் சொல்கிறேன். சுரேசுக்கு கடுமையான தண்டனை தேவைதான். ஆனால், அவனை செய்ய தூண்டியது எது என்பதை சிந்திக்காமல் விட்டால், உன்னைப்போல பல விநோதினிகள் பலியாவதை தடுக்கவே முடியாது!

எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை.  அதனால் 'உன் ஆத்மா சாந்தியடைட்டும்' என சொல்ல முடியவில்லை. நீ சாந்தியடைய கூடாது. நீ ஒவ்வொருவருக்குள்ளும் புகுந்து குடைந்து, குடைந்து மனச்சாட்சியை உலுக்க வேண்டும்! போராட்டங்களை தூண்டிக்கொண்டே இருக்கவேண்டும்.

February 11, 2013

சென்னையின் 'அழகிய' சுவர்கள்!

//சென்ற வாரம் எழுதியிருந்தது போல போஸ்டர் ஒட்டுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு மாநகராட்சியின் பக்கத்திலிருந்து வெளிவந்த விஷயத்திற்கு பிறகு கண்ட் இன்னொரு நல்ல விஷயம் கோயம்பேடிலிருந்து, அசோக் நகர் வரை மெட்ரோ ரயில் மறைப்புகளின் மீது ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டிருந்ததுதான். தொடர்ந்து இதே போல சென்னையின் மேம்பால சுவர்கள் மீது ஒட்டப்படும் போஸ்டர்களின் மீதும் நடவடிக்கை எடுத்தால் சென்னை அழகுறும். செய்வீர்களா மேயர் சார்..?

- பதிவர் கேபிள் சங்கர்

*****

சென்னையில் முக்கிய வீதிகளில் இருக்கும் சுவர்களில் தமிழ் மன்னர்களின் 'கொடை வள்ளல்' மற்றும் இன்னபிற சிறப்புகள், தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் அழகிய ஓவியங்கள் 'அலங்கரித்து' இருக்கின்றன. சென்னையை அழகுப்படுத்தும் பணிகளில் இந்த பணியும் உள்ளடங்கியது. இனி, இந்த 'அழகான ' சுவர்களில் சுவரொட்டி ஓட்டக்கூடாது. மீறினால், கைது, சிறை என சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டே அறிவித்துவிட்டது.

சென்னையை 'அழகுப்படுத்துதல்' பற்றியே நாம் தனியாக பேச வேண்டும். இப்பொழுது நான் சொல்ல வருவது வேறு.

சுவர்களை வெறும் சுவர்களாக பார்த்தவர்களா நீங்கள்? எனக்கு சுவர்கள் அப்படி இல்லை. இந்த சமூகம் ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கின்றன? ஏன் இத்தனை கோளாறுகள்? இதை சரி செய்ய முடியாதா? சரி செய்வது என்றால் எப்படி என்று தேடுதலோடு திரிந்து கொண்டிருந்தேன். தேடுதலோடு திரிந்த என்னை, பாதைக்காட்டி அழைத்துச் சென்றது சுவர்கள் தான்.

நான் வாழ்ந்த பகுதியில், பட்டிமன்றமா? வழக்காடு மன்றமா? கலை நிகழ்ச்சியா அல்லது பொதுக்கூட்டமா? எல்லாவற்றையும் எனக்கு தெரிவித்தவை சுவர்கள் தான். தினம் ஒரு நிகழ்ச்சி. இன்றைக்கு ஒரு சரியான அமைப்பை வந்தடைய உதவியவை சுவர்கள் தான்.

சுவர்களை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள்? வாக்கு அரசியல் கட்சிகள். கொள்கை இல்லாது போனதால், தன் தலைவர்களின், வீரத் தளபதிகளின் மூஞ்சிகளை வரைந்து வைக்கிறார்கள். செத்துப்போன பிறகும், இன்று வரைக்கும் சுவரை கெட்டியாக பிடித்திருப்பது தொப்பி எம்.ஜி.ஆர். இன்னும், விளம்பர சுவரொட்டிகள் மற்றும் மாற்று அரசியலை மக்களிடையே கொண்டு செல்லும் ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர அமைப்புகள்.

இப்படி சுவர்களை தடை செய்வதின் மூலம், யாருக்கு உண்மையிலேயே இழப்பு? வாக்கு அரசியல் கட்சிகள் இப்பொழுது தனித்தனியாகவே தொலைக்காட்சி அலைவரிசையை சொந்தமாக வைத்திருக்கின்றன. அவ்வளவு வசதியில்லை என்றாலும், பத்திரிக்கைகளை சொந்தமாக வைத்திருக்கின்றன. தன் சரக்குகளை விற்பனை செய்யும் விளம்பரதாரர்கள் வேறு ஊடகங்களுக்கு எளிதாக நகர்ந்துவிடுவார்கள். பணம் கொஞ்சம் கூடுதலாக செலவழியும். அவ்வளவு தான். உண்மையில் பாதிப்பு என்பது முற்போக்கு, புரட்சிகர சக்திகளுக்கு தான்? தனது நிகழ்ச்சி நிரலை பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால், தேசிய நீரோட்டத்தில் கலந்து அவர்களோடு அந்த ஜனநாயக சகதியில் படுத்து உருண்டால் தான், சின்ன செய்திகளை கூட வெளியிடுவார்கள். இல்லையென்றால், இருட்டடிப்பு தான்.

இதனால் தான், அரசு, தன்னைப் பார்த்து கேள்வி எழுப்புகிற, குடைச்சலை தருகிற சுவர்களை, 'அழகிய' ஓவியங்கள் மூலம் தடை செய்கின்றன. இனி, மக்களை சென்றடைய புதிய 'சுவர்களை' நாம் கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால், பழைய 'அழகில்லாத' சுவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும்.

February 7, 2013

திராவகத்தை தடை செய்! - உச்சநீதிமன்ற நீதிபதி

பெண்கள் மீதான திராவக வீச்சு சம்பவங்கள் நிறைய நடப்பதற்கு, எளிதாக 'திராவகம்' கிடைக்கிறது. அதனால் மத்திய மாநில அரசுகள் திராவகம் விற்பனையை தடை செய்யவேண்டும் அல்லது முறைப்படுத்த வேண்டு என உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு வழக்கில் இரண்டு நாள்களுக்கு முன்பு கருத்து தெரிவித்துள்ளார்.

'சீப்பை எடுத்து ஒளித்து வைத்தால், திருமணத்தை நிறுத்திவிடலாம்' என்ற சொலவடை உண்டு. இந்த கருத்தை அந்த அளவுக்கு கீழிறக்க முடியாது என்றாலும், பெண்கள் மீதான தாக்குதலுக்கு காரணம் இப்படி பட்ட பல காரணங்களை பல சமயங்களில் பட்டியலிடுவது அயர்ச்சியை தருகிறது.

நிலவுகிற சமூக அமைப்பிற்குள்ளேயே தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கைகளை இப்படிபட்ட பட்டியல் மறைமுகமாக உதவி செய்கிறது.

"நிலப்பிரத்துவ தந்தை வழி சமூக அமைப்பு, மறுகாலனியாதிக்கம் - இந்த இரண்டையும் கட்டி காத்து வருகின்ற இன்றைய சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார அமைப்பை அடியோடு மாற்றியமைக்கும் திசையில், குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் சகல அரங்குகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டங்களை கட்டியமைப்பதும், இன்றைய அரசியலமைப்பு முறையை வீழ்த்திவிட்டு புதிய ஜனநாயக அரசியலமைப்பை நிறுவும் திசையில் போராட்டங்களை வளர்த்தெடுப்பதுமே ஒடுக்கப்பட்டுள்ள பெண்ணிணத்துக்கு விடுதலையையும் உரிமைகளையும் பெற்றுத்தரும்' என புதிய ஜனநாயகம் இதழில் படித்தது தான் நினைவுக்கு வருகிறது.

(படத்திலிருப்பவர் : திராவக வீச்சால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் பாண்டிச்சேரி விநோதினி)

February 6, 2013

''இந்தியா பணக்கார நாடு இந்தியர்கள் ஏழைகள்"

உலக மக்கள் தொகையில் வெறும் 0.6% உள்ள பணக்காரர்கள் மொத்த செல்வத்தில் 39.3% அனுபவிக்கின்றனர்.

உலக மக்கள் தொகையில் 8.1% உள்ளவர்கள் மொத்த செல்வத்தில் 82.3% ஐ தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்கின்றனர்.

உலக மக்கள் தொகையில் 4.46% உள்ள அமெரிக்கர்கள் மொத்த உற்பத்தி மதிப்பில் 21.56% அனுபவிக்கின்றனர்.

செல்வ வளத்தில் வளர்ந்த 10 நாடுகள் மொத்த உற்பத்தி மதிப்பில் 53.78% பெறுகின்றனர். இந்த நாடுகளின் மக்கள் தொகை 14.33% தான்.

உலக மக்கள் தொகையில் 17.73% உள்ள இந்தியா உலக செல்வத்தில் 2.64% அனுபவிக்கிறது.

அம்பானி மும்பையில் கட்டியுள்ள 27 மாடி பங்களாவின் மதிப்பு 5500 கோடிகளுக்கும் மேல். வீட்டை பராமரிக்க 600 முழு நேர ஊழியர்கள் தேவைப்படுகிறார்களாம்.

ஜெய்ப்பூர் ராயல் பேலஸில் உள்ள ஹோட்டலில் ஒரு சூட்டில் தங்க ஒருநாள் வாடகை சுமார் ரூ. 25 லட்சம்.

இதிலிருந்து தெரிவது 'இந்தியா பணக்கார நாடு. ஆனால் இந்தியர்கள் ஏழைகள்'

- பி.எம்.எஸ்.ராவ், தினமணி, 05/02/13

February 3, 2013

பேருந்து எண் : 678 - நீட்டினால் அறுத்துவிடு!

முன்குறிப்பு :   பேருந்தில் பாலியல் தொந்தரவு என்பது பெண்கள் தினசரி எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை.  பெருநகரங்களில் ரயிலிலும், பேருந்திலும் காலையும், மாலையும் எப்பொழுதும் பெரும் கூட்டத்துடன் தான் பயணிக்க முடிகிறது. தனக்கு நேரும் பாலியல் சீண்டல்களை எல்லாம் பெண்கள் சகித்துக்கொண்டு செல்வதால் தான், தில்லியில் நடந்த வல்லுறவுகள் வளர்ந்து நிற்கின்றன.  பெண்கள் இது போன்ற சீண்டல்களை அவ்வப்பொழுதே சக பயணிகளுடன் எதிர்த்து நின்றார்கள் என்றால் இது தொடராது. 

இப்பொழுது, மக்கள் கலை இலக்கிய கழகம், பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் அதன் தோழமை புரட்சிகர அமைப்புகள் 'பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டத்திற்கு எதிரான இயக்கம்' ஒன்றை தமிழகம் தழுவிய அளவில் நடத்தி வருகிறார்கள்.  பேருந்திலோ, வேலை செய்யும் இடத்திலோ பாலியல் தொந்தரவு ஏதேனும் ஏற்பட்டால், உங்களுக்கு உதவி தேவை என்றால், தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.   சென்னைக்கான தொடர்பு எண்: 98416 58457. வேறு பகுதிகளில் இருந்தீர்கள் என்றாலும், அந்த பகுதியில் இயங்கும் அமைப்பு தோழர்களை தொடர்புகொள்ளுங்கள்.

கடந்த பதிவில் 'மூன்று பெண்களின் பேருந்து பயணம்' என அறிமுகப்படுத்திய படம் பற்றி பதிவர் ஆனந்தன் தனது தளத்தில் விரிவான விமர்சனம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த படம் குறித்து பல்வேறு அம்சங்களில் விவாதங்களை தொடரலாம்.  படிக்க வேண்டிய விமர்சனம். படியுங்கள்.

****

ஒரு முறை மங்களூருக்கு சென்றிருந்த போது, ஆள் நடமாட்டம் அதிகமுள்ள ஒரு ரோட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் காட்டி, “இந்த இடத்தில் தான் ஒரு பெண்ணை எங்கிருந்தோ வந்த ஒருவன் அவள் மார்பகத்தை அழுத்திவிட்டு ஓடினான்” என்றார் என் அண்ணன் ஒருவர். வழக்கமாக அதே ரோட்டில் வரும் அவள் அதன் பிறகு எங்கு சென்றாள் என்றே தெரியவில்லை என்றும் சொன்னார்.

பல முறை பேருந்துகளில், ரயில்களில், ஷாப்பிங் மால்களில் சம்பந்தமே இல்லாமல்  சில பெண்கள் சில ஆண்களை முறைத்துக்கொண்டே போவதை தினம் தினம் பார்க்கிறோம். சம்பந்தமே இல்லாமல் சும்மா நின்று கொண்டிருக்கும் நம்மையும் சில பெண்கள் முறைப்பதையும், அதைப் பார்த்து நம் அருகில் நிற்கும் சிலர் விஷமச் சிரிப்பு சிரிப்பதையும் பார்க்கிறோம். இவை நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள்.

இது போன்ற சம்பவங்கள் நடக்காத நாடு என்று ஒன்று இருக்க முடியாது. அப்படியே இருந்தாலும், “கட்டுப்பாடுகள் அதிகம் நிறைந்த அரபு நாடுகளில் தான் அது சாத்தியம். ஏனென்றால் இது போன்ற பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டால் ‘அறுத்து’  விடுவார்கள்” என்று நினைத்திருந்தேன். ஆனால் அரபு நாடுகளில் தான் தினம்தினம் இவ்வகையான sexual harassment பிரச்சனைகளை பெண்கள் அதிகளவில் எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்தப் படத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்!

இந்நாடுகளில் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் ஒவ்வொரு பெண்ணும் தான் என்ன உடை அணிகிறோம், அது மற்றவர்களை ஈர்க்கும்படி வெளிப்படையாகவோ இறுக்கமாகவோ இருக்கிறதா, பேருந்தில் போகலாமா அல்லது நடந்தே போய்விடலாமா, ஆள் நடமாட்டமில்லாத ரோடுகளில் தனியாகப் போகலாமா, இல்லை துணைக்கு யாரையேனும் அழைத்துக்கொண்டு செல்லலாமா என்றெல்லாம் யோசித்து ஒரு முடிவிற்கு வந்த பிறகு தான் வேளியே காலெடுத்து வைக்கிறார்கள். காரணம் ரோட்டில் வக்கிர மிருகங்களின் கட்டவிழ்ந்து கிடப்பதனால் தான். கடும் விதிகள் நடப்பில் உள்ள இந்நாடுகளில் அவ்விதிகளே இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்குக் காரணம் என்று சொன்னால் ஒத்துக்கொள்ள முடிகிறதா? தன்னிடம் ஒருவன் கீழ்தரமாக நடந்து கொண்டான் என்று ஒரு பெண் வெளியில் சொன்னாலே அது அவள் குடும்பதிற்கும், நாட்டின் இறையான்மைக்கும் செய்யும் இழுக்கு என்றே இன்று வரை சொல்லி வந்து கொண்டிருக்கின்றன இந்து போன்ற நாடுகள்!

22-10-2008ல் தான் எகிப்தின் முதல் sexual harassment வழக்கு, Noha Roushdy (மேலே படத்தில் உள்ள பெண்) என்ற பெண்ணால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் பல்வேறு எதிர்ப்புகள், மிரட்டல்களுக்கிடையில் – குற்றவாளிக்குக் கிடைத்த தண்டனை மூன்று வருட கடுங்காவல். அவனது பெயர் - Sherief Gomaa Gibrial, கார் டிரைவர். அதே 2008 ஆண்டு Egyptian Center for Women's Rights என்னும் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் எகிப்தில் இதுவரை 98% சதவிகித வெளிநாட்டுப் பெண்கள், 83% சதவிகித எகிப்துப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறது! இந்தப் படத்தில் நடித்த ஒரு நடிகையே படப்பிடிப்பின் போது கூட்டநெரிசலில் இது போன்றதொரு வன்முறைக்கு ஆளானார் என்றால் நிலைமை அங்கு எப்படி இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

இறையான்மை, நாட்டின் பழம்பெருமை என்று பழையதைக் காட்டிக்காட்டியே இன்றும் பெண்களை அடிமைகளாகவும், கைபொம்மைகளாகவுமே நடத்திவருகின்றன் இந்நாடுகள். சமீபத்தில் எகிப்தின் முடிசூடா மன்னனான முபாரக்கிற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, பெருமளவிலான ஆண்கள் கூட்டத்தினால் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சனை வெளியில் தெரிய வந்ததற்குக் காரணம் அந்த சமயம் கூட்டத்தினரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு அடித்து உதைக்கப்பட்ட ஒரு அமெரிக்க CBS நியுஸ் சேனல் ரிப்போட்டரால்தான்.

எகிப்தின் வெவ்வேறு நிலைபாடுகளில் இருக்கும் மூன்று பெண்களைச் சுற்றித் தான் 678 படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. Noha Roushdyக்கு நடந்த உண்மைச் சம்பவங்கள் மற்றும் இன்றும் உண்மையில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த   கதாப்பாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அப்பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் என்ன என்பது தான் 678 படத்தின் கதை. இதில் படத்தின் பிரதான கதாப்பாத்திரமான ஃபைஸா (Fayza) தினம் செல்லும் பேருந்து எண் தான் 678!

ஃபைஸா (Fayza):

ஃபைஸா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான, அரசு வேலைக்கு தினம் கூட்ட நெரிசலான பேருந்தில் (No: 678) செல்லும் ஒரு சாதாரண பெண். பேருந்தில் தினம்தினம் பல்வேறு வகைகளில் பாலியல் துன்பத்திற்கு ஆளாகிறாள். வெளியில் சொன்னால் தீங்கு என்று தன் கணவனிடம் கூட இதைப் பற்றிச் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே வெந்து கொண்டிருக்கிறாள். தினம் முகம் தெரியாத பல்வேறு ஆண்களால் அவதிக்குள்ளாவதால் தன் கணவனுடனான தாம்பத்தியதிலேயே வெறுப்பு கொள்கிறாள். வேண்டுமென்றே அவனை ஒதுக்குகிறாள். தினம் கடுமையாக உழைத்து வீடு திரும்பும் அவளது கணவன் இதனால் கோபமடைகிறான்.

செபா (Seba):

டாக்டரை திருமணம் செய்த பணக்காரப் பெண் செபா. செப்புக்கம்பிகளால் அழகான நகைகள் செய்து விற்பது இவளது தொழில். ஒரு முறை கணவனுடன் எகிப்து விளையாடும் கால்பந்து போட்டிக்குச் செல்லும் செபா, வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரால் பல ஆண்களால் கும்பல் வன்மத்திற்கு ஆளாகிறாள். அதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் செபாவிடம் அவளது டாக்டர் கணவனும், “உனக்கு நடந்ததை என்னால் மறக்க முடியவில்லை. உன்னுடன் இனி என்னால் வாழ முடியாது” என்று சென்று விடுகிறான். விரக்தியில் இருக்கும் செபா, பாலியல் வன்முறையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதைப் பற்றிய கலந்துரையாடல்களை நடத்த ஆரம்பிக்கிறாள். பல பெண்கள் வருகிறார்கள், இவள் சொல்வதைக் கேட்கிறார்கள். ஆனால் யாரும் தாங்கள் பாலியல் துன்பதிற்கு ஆளாக்கப்பட்டதை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள், ஃபைஸா உட்பட.

நெல்லி (Nelly)

வளர்ந்து வரும் ‘Stand-Up Comedian’ நெல்லி. இவளது காதலன் எகிப்தின் முன்னனி ‘Stand-Up Comedian’. நெல்லியைத் திருமணம் செய்து கொள்ள அவளது பெற்றோர் விருப்பப்படி தனக்குப் பிடித்த இந்த வேலையை விட்டுவிட்டு பிடிக்காத வங்கி உத்யோகத்திற்கு செல்லத் தயாராக இருப்பவன். ஒரு முறை வீட்டில் வந்து இறங்கும் நெல்லியை டாக்ஸி டிரைவர் ஒருவன் அவளது சட்டையை பிடித்து இழுத்து அப்படியே காரையும் செலுத்தி கீழே தள்ளி விடுகிறான். அவனை விரட்டிப் பிடிக்கும் நெல்லி போலீஸில் ஒப்படைத்து sexual harassment என்று புகார் செய்கிறாள். ஆனால் போலீஸ் வேறு ஏதாவது கேஸில் இவனை உள்ளே வைக்கிறோம் ஆனால் பாலியல் கேஸ் போட முடியாது என்று சொல்கிறார்கள். நேரே நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்கிறாள் நெல்லி; செபாவின் ஆதரவுடன்.

 இம்மூன்று பெண்களும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிறார்கள். தங்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஃபைஸா அதனை ஏற்கனவே ஆரம்பித்து விட்டிருக்கிறாள். பேருந்தின் கூட்ட நெரிசலில் தன்னிடம் தவறாக நடக்க முயலும் ஒரு இளைஞனை கொண்டை ஊசி போன்ற ஒன்றை வைத்து அவனது ஆணுறுப்பில் ஓங்கி குத்தி விட்டு ஓடிவிடுகிறாள். 678 பேருந்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று நான்கு பேர் தொடையிடுக்கில் கையை வைத்து ரத்தசகிதம் அலறிக்கொண்டு கீழே விழுவதால் போலீஸும் உஷார் ஆகிறது. சிறப்பு அதிகாரியும் நியமிக்கப் படுகிறார். பிறகு என்ன நடந்தது என்பது தான் மீதிக் கதை.


எகிப்தில் வேலை இல்லாத, வறுமை கோட்டிற்கு கீழே பல ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் என்பது கனவில் மட்டும் தான். எனவே தங்களது இச்சைகளை இது போல பொது இடத்தில் தீர்த்துக்கொள்கிறார்கள் என்கிறார் இயக்குனர், Mohamed Diab. எகிப்தில் இருக்கும் அடக்குமுறை, வன்முறை, வறுமை, அறியாமை இவையெல்லாம் சேர்ந்து தான் பெண்களுக்கு எதிரான sexual harassment என்னும் பாலியல் வன்முறையைத் தூண்டுகிறது என்பது இவரது வாதம்!

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை அருமை என்றால் கடைசி பதினைந்து நிமிடங்கள் அதகளம். பொது இடத்தில் யாருக்கும் தெரியாமல் பெண்களை தீண்டும் காமுகர்களை அதே பொது இடத்தில் வைத்தே அறுக்க இந்த மூன்று பெண்களும் வெறிகொண்டு தேடுவதும், வெவ்வேறு சூழ்நிலைகளில் இருப்பதால் அந்த மூன்று பெண்களுக்குள்ளேயே பிரச்சனை வருவதும், போலீஸில் மாட்டும் போது அவரவர் பாணியில் பதில் சொல்வதும் என்று படத்தில் பல காட்சிகள் மறக்க முடியாதவைகளாக நிற்கின்றன.

செபா கதாப்பாத்திரம் நடிக்க வேண்டிய கால்பந்துப் போட்டியை காட்சியப் படுத்திய போதே அந்த நடிகை கும்பல் வன்மத்திற்கு ஆளாக்கப்பட்டாள் என்று சொல்லும் இயக்குனர், நிலைமை இவ்வளவு கேவலமாக இருக்கும் போது ‘இறையான்மை, கலாச்சாரம்’ என்று அரசாங்கம் பேசுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்கிறார்.

படத்தைப் பற்றிய ஒருவரி அறிமுகத்தை தனது ஏதோ ஒரு பதிவில் தந்து என்னைப்  பார்க்கத் தூண்டிய பதிவர் கருந்தேளுக்கு நன்றி. படத்தை எனக்குக் காட்டிய பெங்களூரு திரைப்பட விழாவிற்கு கோடான கோடி நன்றி.

படத்தின் Tagline
“Ask yourself three questions:
Have you been sexually harassed?
How many times?
How did you react?”

படத்தைப் பற்றி முழுமையாகச் சொல்லவந்ததைச் சொல்லிவிட்டேனா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இந்தப் படம் பார்க்க வேண்டிய ஒன்று. மொத்தத்தில் 678 என்னைப் பொறுத்த வரை

"நீட்டினால் அறுத்துவிடு!"

- பதிவர் பேபி ஆனந்தன்

February 2, 2013

மூன்று பெண்களின் பேருந்து பயணம்!

ஃபஸியா பஸ்ஸில் போய்க்கொண்டு இருந்தாள். பஸ்ஸில் அதிகமான பயணிகள் இருந்ததால் நெரிசல் மிகுந்திருந்தது. பின்னால் ஓர் ஆண் அவளை நெருக்கிக் கொண்டிருந்தான். ஃபஸியா மிகுந்த எரிச்சலில் இருந்தாள். அவள் வேலை பார்க்கும் ஃபாக்டரியில் சம்பளப் பணத்தைக் குறைவாகக் கொடுத்திருந்தார்கள்.

கவுண்டரில் பணம் பெற்றுக் கொண்டபோது- சம்பளப் பணத்தை எண்ணிப் பார்த்தாள். காரணம் கேட்டபோது, அவள் பல நாட்கள் வேலைக்குத் தாமதமாக வந்ததால் அதற்கான அபராதக் கட்டணத்தைக் கழித்துக் கொண்டு, மீதிப் பணத்தைக் கொடுத்திருப்பதாகச் சொன்னார்கள்.  வீட்டுக்குச் செலவுகள் பல இருந்தன. இவ்வளவு குறைவான சம்பளப் பணத்தை வைத்துக் கொண்டு எப்படி சரிக்கட்டப் போகிறோம் என்ற மன உளைச்சலில் அவள் இருந்தாள். பின்னால் இருந்த ஆண் அவளை சீண்டிக் கொண்டிருந்தான். பஸ்ஸில் இருக்கும் நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு அவன் இப்படிக் கேவலமாக நடந்துகொள்வது, அவள் கண்களில் நீர் சுரக்கச் செய்தது.

பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவன் பல்லை இளித்தான். இந்த அரக்கனை எப்படி சமாளிப்பது என்று குமுறினாள்...

சீபாவும் ஃபஸியாவும் நெருங்கிய தோழிகள். ஃபஸியா தன் மனக் குறைகளை எல்லாம் கொட்டித் தீர்க்க சீபாவின் வீட்டுக்குச் சென்றாள்.
"என்னம்மா உன் முகம் வாடி இருக்கிறதே!'' என்று கேட்டாள் சீபா.
"நான் போகும் பஸ்ஸில் அடிக்கடி ஓர் ஆண் எனக்குத் தொல்லை கொடுக்கிறான். நான் ஒன்றும் செய்ய இயலாதவளாக இருக்கிறேன்...'' என்று சொல்லிவிட்டு ஃபஸியா விம்மினாள்.
"இதைப் போன்ற அசுரர்களை சும்மா விடக்கூடாது. தகுந்த பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். நீ ஒரு உலோகத் தகடு வைத்துக் கொள். அவன் மீண்டும் தொல்லை கொடுத்தால் அவன் பேண்ட்டின் நடுப் பகுதியில் கீறிவிடு!''
"அப்படித்தான் செய்ய வேண்டும்...'' என்று ஃபஸியா ஆமோதித்தாள்.

அன்றும் பஸ்ஸில் நெரிசல் அதிகமாக இருந்தது. வழக்கம் போல் ஃபஸியாவின் பின்புறம் நெருக்கமாக நின்று கொண்டு அவன் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று அவன் "ஆ'வென்று அலறினான். பஸ்ஸில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். பஸ் சீக்கிரமே ஒரு நிறுத்தத்தில் நின்றது. ஃபஸியா வேக வேகமாக பஸ்ஸை விட்டு வெளியேறினாள்.

ஃபஸியாவுக்குத் தொல்லை கொடுத்த ஆசாமி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான். இன்ஸ்பெக்டர் ஒருவர் அவனிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.
"ஒரு பெண்தான் என்னை பேண்ட்டின் நடுப்பகுதியில் கீறிவிட்டு ஓடினாள்...''
"நீ என்ன தவறு செய்தாய்?''
"நான் ஒரு தவறும் செய்யவில்லை!'' என்று புளுகினான்.

சீபாவின் வீட்டுக்குச் சென்றாள் ஃபஸியா.
"நீ சொன்ன மாதிரியே அவனை உலோகத் தகட்டால் கீறிவிட்டேன்...''
"அந்த அசுரன் வலியால் கதறி இருப்பானே...! ''
"ஆமாம்'' என்றாள் ஃபஸியா.
நெல்லி - என்று ஒரு தோழி அறைக்குள் நுழைந்தாள்.
"ஃபஸியா! இவள் என் என் புதிய தோழி! என்று சீபா தன் புதிய தோழி நெல்லியை அறிமுகம் செய்துவைத்தாள்.''

சீபாவின் ஆலோசனைப்படி இன்னும் இரண்டு பெண்கள் இதேபோன்ற தண்டனையை அளித்தார்கள்.
பஸ்ஸில் தங்களிடம் வம்பு செய்த ஆண்களை உலோகத் தகட்டால், பேண்டின் மையப் பகுதியில் கீறிவிட்டார்கள்.
படக்கூடாத இடத்தில் கீறல் பட்டதால், தாங்கமுடியாத வலியில் துடித்த அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.
அவர்களிடமும் போலீஸ் புலன்விசாரணை செய்தது. பஸ்ஸில் பெண்களிடம் வம்பு செய்ததாக அவர்கள் ஒத்துக் கொள்ளவே இல்லை. தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அப்பாவி நபர்களான தம்மை சில அராஜகப் பெண்கள் கீறி காயப்படுத்திவிட்டார்கள் என்றும் புலம்பினார்கள்.

நெல்லி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தாள். பஸ்ஸின் நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு ஒருவன் அவளிடம் தகாத முறையில் நடந்து கொண்டான். உலோகத் தகட்டால் கீறினாள். "ஆ..' என்ற அலறல்.

சீபா-ஃபஸியா-நெல்லி மூவரும் சீபாவின் வீட்டில் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். "முப்பத்தி இரண்டாம் இலக்கமிட்ட பஸ்ஸில் நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு ராஸ்கல் என்னிடம் வம்பு செய்தான். கீறிவிட்டேன்!'' என்றாள் நெல்லி. மூவரும் சிரித்தார்கள்.

தகவல் வந்ததும் ஃபஸியா பதறிவிட்டாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் கணவனைப் பார்க்கப் பறந்தோடினாள். "முப்பத்தி இரண்டாம் இலக்கமிட்ட பஸ்ஸில் நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு ராட்சசி என்னை உலோகத் தகட்டால் கீறிவிட்டாள்!'' என்றான் ஃபஸியாவின் கணவன். தன் கணவனும் பெண்களிடம் வம்பு செய்யும் ஓர் அராஜகவாதிதான் என்ற கசப்பான உண்மை, உறைக்கத் தொடங்கியதும் ஃபஸியா பொங்கிப் பொங்கி அழுதாள்.
 
நெல்லி, பொதுச் சதுக்கத்தில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தாள். வேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. கார் ஓட்டி, நெல்லியின் பின்னழகைப் பார்த்ததும் காரின் வேகத்தை மட்டுப்படுத்தினான்.  மெல்லக் காரை ஓட்டிக் கொண்டு வந்தவன்- நெல்லியை நெருங்கியதும்- காரில் இருந்து கையை நீட்டி அவள் மார்புப் பகுதியைத் தொட்டான்.
நெல்லி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்... அவன் இளித்தான்...  நெல்லி எரிமலையாகப் பொங்கினாள். அவள் கத்திக் கூச்சல் போடத் தொடங்கியதும் காரை வேகப்படுத்த முயற்சித்தான்.  நெல்லி காரின் முன் பாகத்தின் மேல் படுத்துக் கொண்டாள். இதற்குள் கூட்டம் கூடிவிட்டது. குற்றவாளி தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டான்.

"இவன் மேல் கேஸ் போட்டால் உன் குடும்ப மானம் பறிபோகும். உன் பெயர் சந்திக்கு வந்துவிடும்!'' - என்று புகாரைப் பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் எச்சரித்தார்.
ஆனால் - எதற்கும் அஞ்சாமல் நெல்லி தான் பால்ரீதியாக தாக்கப்பட்டதற்கு நியாயம் வேண்டி நீதிமன்றத்தில் தனது வழக்கை எகிப்து நாட்டிலேயே முதன் முதலாக பதிவு செய்து வெற்றி கண்டாள். சட்டம் என்று ஒன்று இருந்தாலாவது - பலர் அஞ்சக் கூடும் இல்லையா?

படத்தின் பெயர்:678
வெளியான ஆண்டு: 2010;
இயக்குநர்: முகம்மது தியாப்.

நன்றி : தினமணி கதிர்

பலாத்கார விளையாட்டு!


சென்னை பீச் ஸ்டேஷனில் எப்பொழுதும் அந்தக் கடையில்தான் முக்கியமான உலகப் படங்களை வாங்குவது வழக்கம். வாடிக்கை நுகர்வோராக இருப்பதால் கடையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்களும்கூட எனக்கு நல்ல பரிச்சியம். எனினும் தீப்பெட்டியை அடுக்கி வைத்தது போலுள்ள எல்லா கடைகளையும் நோட்டம் விட்டுக் கொண்டே செல்வது என்னுடைய வழக்கம். “மேட்டர் CD வேணும்னாலும் கெடைக்கும்… வந்து பாருங்க” என முச்சந்தியில் நின்று, கைபிடித்து இழுக்கும் வேசி போல, தனது கடையில் வியாபாரம் செய்ய சிறுவர்கள் விரும்பி அழைப்பார்கள். அப்படித்தான் ஒரு சிறுவன் மெல்லிய குரலில் காதைக் கடித்தான். “பிட்டு படம் வேனுமாங்கண்ணா? என்றான். அவனுடைய கண்களையே உற்றுப் பார்த்தேன். மேலும் தொடர்ந்தவன் “ரேப்பிங் கேம்ஸ் வேணும்னாலும் இருக்கு! வாங்கிக்கிறீங்களா?” என்றான்.

“என்ன சொன்ன?” என்றேன்.

“ரேப்பிங் கேம்ஸ்” என சில குறுந்தகடுகளை என்னிடம் நீட்டினான். “பூங்கா, சுரங்கப்பாதை, கடற்கரை, தனி பங்களா, யாருமற்ற அலுவலகம்” என விதவிதமான இடங்களில் பெண்ணை பலாத்காரம் செய்யும் கேம்ஸ் என தன்னிடமிருந்த குறுந்தகடுகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தான். பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன். அவனிடமே குறுந்தகடுகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டு துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓட்டம் எடுத்தேன். இது நடந்து ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும். பின்னர் உட்கார்ந்து நிதானமாக யோசித்த பிறகுதான் ஞானோதயம் வந்தது. “அடடே… அந்த பலாத்கார விளையாட்டு குறுந்தகடுகளை வாங்கி, அதைப் பற்றி வலைப்பூவில் ஆதாரத்துடன் எழுதி இருக்கலாமே!” என்று. பின்னர் முயற்சி செய்து சில பலாத்கார விளையாட்டுக்களை வாங்கி, விகடன் மாணவ நிருபர் ஒருவருக்குக் கொடுத்து அதைப் பற்றி எழுதுமாறு பரிந்துரைத்தேன். ஏனோ தெரியவில்லை அவரால் முடியாமல் போனது. இந்த விளையாட்டை திறம்பட விளையாடுவதற்கு ஆறு மாதகாலப் பயிற்சி வேண்டும் என்பது வேறு விஷயம். “கற்பழிப்பதற்குக் கூட குறைந்தபட்ச உழைப்பு தேவைப்படுகிறது.” என்ற எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் வரிகள்தான் எனக்கு ஞாபகம் வருகிறது.  இந்த விளையாட்டுக்களை விளையாட எவ்வளவு நேரமும் உழைப்பும் விரயமாகிறது…

கணினியானது குழந்தைகளின் கணிசமான நேரத்தை விழுங்குகிறது. கணினியில் விளையாடுவதை குழந்தைகள் சந்தோஷமாக உணர்கிறார்கள் போல. அவர்களின் விருப்ப விளையாட்டுகளும் குரூரத்தை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டதாகவே இருக்கின்றன. இந்தப் புரிதலும் தெளிவும்,  பெற்றவர்களுக்கு இருக்கிறதா என்பது சந்தேகம்தான். பைக் திருட்டு, கார் திருட்டு மட்டுமல்லாமல், திருடிய வாகனத்தில் மூலம் பல்பொருள் அங்காடிக்குச் சென்று பொருட்களைத் திருடிவிட்டு போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்புவது என விளையாட்டின் பட்டியல் நீள்கிறது. மேலும் திருடிவிட்டு தப்பிச் செல்லும்போது, கையிலுள்ள துப்பாக்கி மூலம் எதிரில் வரும் எல்லோரையும் கண்மண் தெரியாமல் - கணினியில் விளையாடும் குழந்தைகள் சுட்டுத் தள்ளுகிறார்கள். எவ்வளவு கோரமான விஷயம் இது! இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போதுதான் பலாத்கார விளையாட்டை நாடிச் செல்கிறார்கள். இதுபோன்ற விளையாட்டுகளை இணையத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும் என்பது விழிப்புடன் கவனிக்க வேண்டிய ஒன்று.


விளையாட்டானது கணினியுடன் முடிவதில்லை. நவீன தொழில்நுட்பத்தின் தாக்கம் செல்பேசி வரை நீள்கிறது என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு எனது உறவுக்கார பையனை சந்தித்து உரையாட நேர்ந்தது. முன்னேறிய கிராமமான எங்களது ஊர் அடங்கிய தாலுக்காவில் பிரபல தனியார் பள்ளி ஒன்றுள்ளது. சுற்றிலுமுள்ள கிராமத்திலிருந்து ஏராளமான பிள்ளைகள் அதில் படிக்கிறார்கள். உறவுக்காரப் பையன் அந்தப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கிறான். தன்னுடன் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மற்றொரு பையனுடன் அவன் பேசிக் கொண்டிருந்தான். உறவுக்கார குழந்தைகளிடம் கோமாளி வேடமேற்று பழகுவது என்னுடைய வழக்கம். ஆகவே பல நேரங்களில் ஒளிவு மறைவில்லாமல் என்னை ஓட்டுவதாக நினைத்து பல உண்மைகளையும் சிறுவர்கள் கக்குவார்கள். அப்படித்தான் அன்றும் நடந்தது. இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இடையில் நான் புகுந்தேன்.

“ஹே… அந்த கேம்ஸ் எனக்கும் கொடுக்குறியாடா?” என்கிறான் பத்தாம் வகுப்பு மாணவன்.

“அப்புறம் நான் மாட்டிக்கிறதுக்கா? கெளம்புடா காத்து வரட்டும்” என்கிறான் உறவுக்காரப் பையன்.

“டேய்… கேம்ஸ்தான கொடேண்டா. அவனும் விளையாடட்டும்…” என்கிறேன் நான்.

“மேட்டர் தெரியாம பேசாத கிச்சா. அதெல்லாம் அவன் விளையாடக் கூடாது…” என்கிறான், பெரிய மனுஷத்தனமாக என்னுடைய உறவுக்காரப் பையன்.

“பெரிய மயிறு வெளையாட்டு… இவரு மட்டும்தான் வெளையாடுவாரு…. சும்மா குடுடா, அவனும் நாலு பேர சுட்டுத் தள்ளட்டும்” என்கிறேன் சிறுபிள்ளைத்தனமாக நான்.

“அய்யே! என்ன கேம்ஸ் தெரியுமா அது?” என்கிறான் உறவுக்காரப் பையன்.

“சொன்னாத்தான தெரியும்?” என்கிறேன் நான்.

“அந்த கேம்ஸ் Touch Screen-ல தான் வெளையாட முடியும். ஒரு பொண்ணு Dress போட்டுட்டு இருக்கும். ஒவ்வொரு parts-ஆ Touch பண்ணி தேச்சா… டிரஸ் எல்லாம் Disappear ஆகும். அதான் கேம்ஸ்…” என்றான் ஆங்கிலமும் தமிழும் கலந்து.

“டேய்… என்னடா இது…?” என்று கேட்டதற்கு, “நீயெல்லாம் வெத்து… இது தெரியாம அவனுக்கு கொடுக்கச் சொல்ற… அவன் மாட்டிக்கிட்டா என்னைய போட்டு மொத்தவா?” என கேலிசெய்து சிரிக்கிறான் உறவுக்காரப் பையன். பக்கத்திலிருந்த அவனுடைய நண்பனும் சிரிக்கிறான். “நாம வெத்துதான்” என்பதை நினைத்து நானும் விரக்தியுடன் சிரித்துக்கொண்டேன்.

மேற்கூறிய இரண்டு சம்பவங்களையும் நினைவுபடுத்தும் விதமாக, சமீபத்திய பேருந்து பயண அனுபவம் எனக்கு ஏற்பட்டது. இரண்டு மாணவர்கள் முன்னிருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பின்னிருக்கையில் அமர்ந்தவாறு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் பேசிய விஷயம் கவனத்தை திசை திருப்பியது. ஆகவே அவர்கள் மீது கவனம் சென்றது. இரண்டு மாணவர்களின் கழுத்திலும் பிரபல கல்லூரியின் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருக்கிறது. அடையாள அட்டையை தாங்கிக் பிடிக்கும் கழுத்துப் பட்டையில் கல்லூரியின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. இரண்டு மாணவர்களும் பேசிக் கொள்கிறார்கள்.

மாணவன் 1: “பக்கத்து வீட்டு ஆண்டிய கரக்ட் பண்ணா வீட்டுல மாட்டிக்க வேண்டி இருக்கு… லாட்ஜி போட்டு தங்கினா - ரெயிட்ல புடிச்சி அசிங்கப் படுத்துறாங்க! பஸ்ல போட்டு தாக்குனா நாடே சேர்ந்து காறித் துப்புது! அப்போ எப்புடி தாண்டா ஒருத்தன் என்ஜாய் பண்றது” (கவுண்டமணி தனது மனைவியை அடித்துக் கொண்டிருக்க. மாமியார் கேரக்டர் இடையில் வந்து தடுக்கும்பொழுது பேசும் பிரபல நகைச்சுவை துணுக்கு இது. நீண்ட நாட்களுக்கு முன்பு டிவியில் பார்த்த ஞாபகம். அந்த காமெடியின் ரீமேக்)

மாணவன் 2: “டேய்… கிளாஸ்மேட்-கிட்டையே ஒரு வார்த்த, ரெண்டு வார்த்த பேச முடியல… இதுல கரக்ட் பண்றதும், ரேப் பண்றதும்தான் ஒரு கேடா உனக்கு…”

மாணவன் 1: “எனக்குன்னு ஒரு சான்ஸ் கெடைக்காமையா போகும்… அப்ப என்னை ப்ரூவ் பன்றேண்டா மச்சி…”

மாணவன் 2: “என்னையும் கூப்பிட மறந்துடாதடா…!”

இருவரின் பேச்சும் எங்கோ ஆரம்பித்து, எங்கெங்கோ பயணப்பட்டுக் கொண்டிருந்தது. ‘திடீரென ஆசிரியரைப் பற்றிய எள்ளல். கெளதம் மேனனின் மொக்கை சினிமா பற்றிய விமர்சனம். உடன் படிக்கும் மாணவியைப் பற்றிய கேலி. ரோட்டில் செல்லும் ஆட்கள் - என சம்பாஷணை சுழன்று சுழன்று தொடர்பில்லாமல் சொற்கள் உதிர்ந்து கொண்டிருந்தன.

சம்பாஷணையின் மற்ற எல்லா இடங்களும்கூட ஒரு வக்கிர ஹாஸ்யம்தான். நேரத்தை ருசிகரமாகக் கடத்த மேற்கொள்ளும் வெகுளித்தனத்தின் வெளிப்பாடு என்ற அளவில்கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால் “கிளாஸ்மேட்-கிட்டையே ஒரு வார்த்த, ரெண்டு வார்த்த பேச முடியல” – என்ற இடம்தான் எனக்கு மிகவும் அபாயகரமான விஷயமாகத் தெரிந்தது. இங்குதான் சிக்கலும் ஆரம்பிக்கிறது. சக மனிதர்களிடம் பேசுவதையே ஜேப்படித் திருட்டு போல துரிதமாகவும், அதே சமயத்தில் யாரும் அறியாமலும் செய்ய வேண்டியது இருக்கிறது பெரும்பாலான கல்லூரி வளாகங்களில் இதுதான் நிலைமை. எவ்வளவு பெரிய துர்பாக்கியம் இது.

ஒருபுறம் குழந்தைகள் விளையாடும் குரூர விளையாட்டுக்கள், மற்றொரு புறம் அவர்களே வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் விளையாடக் கூடிய ஆபாச விளையாட்டுக்கள். இதன் இணைகோடு போல, சக மாணவியிடம் தோழமையுடன் பேசுவதையே கள்ளத்தனமாக யாரும் பார்க்காதபோது செய்ய வேண்டிய நிர்பந்தம்,  என சிறுவர்களையும் இளைஞர்களையும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறோம்.

இந்தியாவில் மட்டும் வருடத்தில் ஏறக்குறைய இரண்டரை லட்சம் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என புள்ளிவிவரம் தருகிறார்கள். கணக்கில் வராமல் இதுபோன்ற பத்து மடங்கு அதிக அளவில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு மன உளைச்சலில் வாழ்வார்கள் என்பதுதான் நிதர்சனம். ஒருமுறை என்னுடைய உறவுக்கார பெண் டாக்டரேட் (வேதியியல்) படிக்க பிரியப்படுவதாகவும், சென்னையின் ஒரு பிரசித்திபெற்ற பல்கலைக்கழகத்தில் யாரேனும் தெரிந்தவர் இருந்தால், அதைப் பற்றி விசாரித்துச் சொல்லும்படியும் கேட்டிருந்தார். எனவே, எனக்குத் தெரிந்து முனைவர் பட்டம் பெறுவதற்கு போராடிக் கொண்டிருக்கும் பலருடைய காதிலும் போட்டு வைத்தேன். ஒருவர் செல்பேசியில் அழைத்து எல்லா விவரங்களையும் கூறினார். மேலும் “யாருக்காக இதையெல்லாம் விசாரிக்கிறீர்கள்?” என்றார்.

“உறவுக்காரப் பெண் தான். என்னுடைய சகோதரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்!” என்றேன்.

“சொல்றேன்னு தப்பா நெனைக்காதிங்க… ரொம்ப தெரிஞ்சவங்களா இருந்தா, டாக்டரேட் சேர வேண்டாம்னு சொல்லிடுங்க… வேற மாதிரி டார்ச்சர் எல்லாம் இருக்கும்…” என்றார். பல பெண்களும் அதிகம் படித்து உயர்ந்த பதவிகளில் இருக்கும் சில பேராசிரியர்களின் பாலியல் வக்கிரங்களை எதிர்த்து போராடித்தான் வெற்றி பெற வேண்டியிருக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மை.

இதோ சென்ற வாரம் டெல்லியில் நடந்த பலாத்காரத்தை இந்தியாவே கூர்ந்து கவனிக்கிறது. ஜனாதிபதி மாளிகை முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக நீதிகேட்டு போராட்டம் நடத்துகிறார்கள். அந்த சகோதரியைப் பற்றிய தற்போதைய நிலவரங்களை நாளேடுகளும் தொடர்ந்து பிரசுரம் செய்து வருகின்றன. தொலைதூர கிராமங்களிலுள்ள பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதையும் நாளேடுகள் சமீப நாட்களில் பிரசுரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இவையெல்லாம் கவனத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டிய முக்கியமான சமூகப் பிரச்சனைதான் என்பதை மறுப்பதற்கில்லை.

அதே அளவுக்கு, பின்விளைவுகளை யோசித்துப் பார்த்தால் அதைவிட  முக்கியமான விஷயம், இளம் தலைமுறையினர் டிஜிடல் விளையாட்டு விளையாடுகிறார்கள் என்பதுதான். அதில் பலாத்கார விளையாட்டும் அடக்கம். “விளையாட்டுதான் வினையாகிறது” என்பது நம்மவர்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை.

- கிருஷ்ணபிரபு

நன்றி : சொல்வனம் ‍‍இதழ்