> குருத்து: June 2019

June 19, 2019

திரையிலிருந்து ஆறாவது வரிசை!

வளர்ந்து வரும் நடிகரின் படம்.
வெளிவந்த முதல்நாள்.
இரவுக்காட்சி!

எனக்கு முன்பு
நின்றிருந்த இளம்பெண்
"திரையிலிருந்து
ஆறாவது வரிசையில்
இரண்டு இருக்கைகள்" என்றார்.
ஆண் நண்பரும் அருகில்
நின்றிருந்தார்.
புன்னகைத்துக்கொண்டே
டிக்கெட் தந்தார்.

ஆறாவது வரிசை வரை
கூட்டம் வராது என்ற
ஆழ்ந்த நம்பிக்கையில்
கேட்கிறாளோ?

ஜெயலலிதாவிற்கு
ராசியான எண் இருப்பது போல
இவளுக்கு ராசியான எண்
ஆறாய் இருக்குமோ?

நமக்கு ஒரு காதலி இருந்தால்
எத்தனையாவது வரிசையில்
இடம் கேட்டிருப்போம்?

இடைவேளையில்
தற்செயலாய்
ஆறாவது வரிசை
நினைவுக்கு வந்தது!
ஆறாவது வரிசை வரை
மக்கள் வந்திருந்தார்கள்.

ஒருவேளை அவர்கள்
ஆறாவது வரிசையிலிருந்து
நாலாவது வரிசைக்கு
மாறியிருக்கலாம்!

நாம் வந்த வேலையை
பார்க்கலாம் என
படத்தில் மூழ்கினேன்.

சிசிடிவி - சில குறிப்புகள்

சாலைகளில்
அலுவலகங்களில்
பள்ளிகளில்
சூப்பர் மார்க்கெட்டுகளில்
தேநீர் கடைகளில்
எங்கும் கேமராக்கள்
குறுகுறுவென பார்க்கின்றன.

நாம் மறந்து போனாலும்
"சிசிடிவியால்
கண்காணிக்கப்படுகிறீர்கள்"
ஒட்டப்பட்ட வாசகங்கள்
தொல்லை செய்கின்றன.

மாநகரங்களில்
ஐம்பது மீட்டருக்கு
ஒரு சிசிடிவி லட்சியம் என்கிறார் காவல்துறை உயரதிகாரி.
தினந்தோறும்
புதுப்புது இடங்களில்
முளைத்துக்கொண்டே இருக்கின்றன.

சிசிடிவி அற்ற உலகம்
பாதுகாப்பற்றது என்ற போதனையை நம்பி
தனது சேமிப்பு பணம் மொத்தத்தையும்
புன்சிரிப்புடன்
ஒப்படைக்கிறாள்
ஒரு சிறுமி.

தீபாவளிக்குள்
திரையரங்குகளில்
சிசிடிவி பொருத்தப்படவேண்டும்.
இல்லையெனில்
புதுப்படம் கிடையாது
என அறிவிக்கிறார்
தயாரிப்பாளர் சங்க தலைவர்.

வழக்குக்கு சம்பந்தமில்லாத
அப்பாவியை
லாக்கப்பில் அடித்தே கொன்றுவிடுகிறது போலீசு.
மக்கள் கொதிப்படைந்ததும்
இரண்டே நாளில்
எல்லா லாக்கப்பிலும்
சிசிடிவி பொருத்தப்படவேண்டும் என்கிறார்
கேரள போலீசு உயரதிகாரி.

வழக்கை விசாரிக்க
துவங்கும் பொழுதே
சிசிடிவி ஏன் பொருத்தவில்லை? என 
கோபித்துக்கொள்கிறார் நீதிபதி.

ராம்குமார் சிறையில்
பத்தடி உயர
மின்கம்பி வயரை
கடித்து 'தற்கொலை'
செய்த பொழுது
மூன்றாவது கண்
குருடாகியிருந்தது.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் பொழுது
கவனமாய் தீ வைத்த
சமூக விரோத சக்திகள்
துவக்கத்திலேயே
மூன்றாவது கண்ணை
நோண்டிவிட்டனர்.

சமூக செயற்பாட்டாளர்
முகிலன்
ரயில் நிலையத்தில்
காணாமல் போன பொழுது
மூன்றாவது கண்
வேலை செய்யவில்லை என பொறுப்புடன் சொன்னார்கள்.

பாதுகாப்பு குறைபாடால்
இறந்தார் தொழிலாளி.
சிசிடிவி காட்சிகளை
கவனமாக அழித்துவிடுங்கள்
என பதட்டத்துடன்
போன் செய்கிறார்
முதலாளி.

சிசிடிவி வழியே
நமது மாநகரங்களை
அமெரிக்காவிலிருந்து கூட
ஹேக்கர்கள் மூலம்
கண்காணிக்க முடியும் என்கிறார்கள்.

திருடனை காட்டி
எங்கும்
எப்பொழுதும்
எல்லோரும்
திருடர்களைப்போல கண்காணிக்கப்படுகிறோம்.
ஏதோ
தப்பாகபடவில்லை?

அத்தை, பெரியப்பா வீடு!

ஊரை பிரிந்து வந்து பதினைந்து ஆண்டுகளாகிவிட்டன.

சென்னையிலிருந்து ஊரே தீபாவளிக்கு கிளம்பி போகும் பொழுது, நாங்களும் மூன்று நாட்கள் ஊர்ப்பக்கம் குடும்பத்தோடு போய், இருந்து வருகிறோம். மூன்று நாளும் வேகமாக போய்விடும்.

மற்றபடி, நெருங்கிய சொந்தங்கள் திருமணத்தின் பொழுதோ, இறப்பின் பொழுதோ தான் ஊர்ப்பக்கம் நான் மட்டும் போய் வருகிறேன்.

பொண்ணுக்கு நம்ம மண்ணு வாசம், சொந்தங்கள், பண்பாடு ஒட்டனுமே! அதற்காக கோடை விடுமுறையில் ஊருக்கு அனுப்பிவைக்கிறோம்.

அக்காவும், அண்ணனும் ஊரில் இருப்பதால், பதினைந்து நாட்களோ, இருபது நாட்களோ ஊருக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அவர்களுக்கும் மகிழ்ச்சி.

30 வருடங்களாக ஊரில் வாழ்ந்தாலும் என்னிடம் ஊரின் பேச்சு வழக்கு பெரிதாக ஒட்டிக்கொண்டதில்லை. பதினைந்து நாள் இருந்துவிட்டு வரும் என் மகளிடம் நன்றாகவே ஒட்டிக்கொள்ளும்!

சிறுவயதில் கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்றதேயில்லை. எல்லா சொந்தங்களும் உள்ளூரிலேயே இருந்ததும் ஒரு காரணம்.

The Pursuit of happyness (2006)

கதை. 1981ல் நிகழ்கிறது. நாயகன் மருத்துவமனைகளில் அலைந்து திரிந்து ஸ்கேனர் விற்று பிழைக்கிறான். மனைவியும் வேலைக்கு செல்கிறார். ஐந்து வயது பையனுடன், வீட்டு வாடகை கூட கொடுக்கமுடியாமல் தடுமாறுகிறார்கள்.

நன்றாக வாழ்வோம் என்ற நம்பிக்கை இல்லாமல் போக மனைவி பிரிகிறார்.

தொழிலை மாற்றலாம் என்றால்.. ஆறு மாதம் பயிற்சி. சம்பளம் இல்லை. 20 பேர் கொண்ட குழுவில், முதலிடத்தில் வந்தால்... நிரந்தர வேலை என்கிறார்கள்.

வீடு இல்லை. வருமானம் இல்லை. ஐந்து வயது மகனுடன் பல்வேறு சோதனைகளை எதிர்கொள்கிறான். எல்லாவற்றையும் மீறி ஜெயித்தானா என்பது முழு நீளக்கதை!

****
அமெரிக்கன் பியூட்டி என படம். அமெரிக்க குடும்பங்களின் அகம் எப்படி சிக்கலாக இருக்கிறது என அருமையாக பேசிய படம்.

உண்மை சம்பவங்களின் அடிப்படையான இந்த படமும் முக்கியமான படம் தான். உலக நாடுகள் முழுக்க தலையிட்டு ரவுடித்தனம் செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவில் ஒரு சராசரி மனிதனின் வாழ்வு எத்தகைய அழுத்தங்களுடனும், பதட்டங்களுடனும் நகர்கிறது என சொல்கிறது படம்.

அடிதடி நாயகனான ஸ்மித்தும், அவருடைய பையனும் பாத்திரங்களில் அத்தனை இயல்பாக நம்மை கொள்ளை கொள்கிறார்கள்.

எத்தனை துயரம் வந்தாலும், அய்யோ என நாயகன் நம்பிக்கை இழக்கவில்லை என்பது முக்கியமானது.

1980 காலத்தை விட 2008ல் நிகழ்ந்த முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி பல மடங்கு ஆழமானது. உலக புகழ்பெற்ற அமெரிக்க வங்கிகள் திவாலாகின. தனியார் வங்கிகளை அமெரிக்க அரசு மக்கள் பணத்தை வாரிக்கொடுத்து காப்பாற்றினார்கள். மக்களை?

மக்கள் கோடிகளில் வேலை இழந்தார்கள். வீடிழந்தார்கள். தெருவில் கூடாரம் அமைத்து வாழ்ந்தார்கள். தங்களது செல்ல பிராணிகளை வளர்க்க வழியில்லாமல் தூரமாய் விட்டுவந்தார்கள். ரத்தம் விற்றார்கள். விந்தணுவை கூட விற்றார்கள். வேறு நாடுகளில் சொந்தங்கள் இருந்தால், ஒன்வே டிக்கெட் தருகிறோம். கிளம்புங்கள் என்றது அரசு. நாங்கள் 99% என மக்கள் தொடர்ந்து போராடினார்கள்.

அந்த சமயத்தில் நிகழ்ந்த கதைகள் ஆயிரமுண்டு. அதையெல்லாம் எடுக்கலாம்.
ஹாலிவுட் திரையுலகம் உலக பிரச்சனைகளையெல்லாம் ஏற்கனவே தீர்த்துவிட்டதால், இப்பொழுது வேற்று கிரகவாசிகளின் பிரச்சனைகளை தீர்க்க கிளம்பிவிட்டார்கள். உள்ளூர் பிரச்சனைகளை அமெரிக்க மக்கள் தான் தீர்க்கமுடியும்.

இந்த படம் தமிழிலும் கிடைக்கிறது. குடும்பத்தோடு பார்க்கலாம். பாருங்கள்

June 1, 2019

Dial M for Murder (1954)

"ஒரு பர்ஃபெக்ட் கொலையை யாராலும் திட்டமிட முடியாது"

- ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் புகழ்பெற்ற திரில்லர்!

கதை. எளிய கதைதான். கணவன் மனைவி உறவில் வேறு ஒரு எழுத்தாளர் வருகிறார். கணவர் ஒரு வருடமாக திட்டமிட்டு தன் மனைவியை கொலை செய்ய பார்த்து பார்த்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து, கொலை செய்ய ஒரு ஆளையும் ஏற்பாடு செய்கிறார்.

திட்டமிட்ட நாளில், நேரத்தில் கொலை நடக்கிறது. ஆனால் அதில் ஒரு டுவிஸ்ட். இருப்பினும் கணவர் கொஞ்சமும் சளையாமல் அதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறான். கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டரா என்பது முழு நீள கதை.

****

ஒன்னே முக்கால் மணி நேரம் போனதே தெரியவில்லை. அருமையான திரில்லர்.

கொலை செய்ய சொல்லி, கன்வின்ஸ் செய்யும் இடம் அருமை.

நாடகத்திற்காக எழுதப்பட்ட கதை என்பதால் அதிகபட்சம் மூன்று இடங்களில் மட்டுமே காட்சிகள் நடைபெறுகின்றன. அதிலும் வீட்டின் வரவேற்பறையில் தான் பெரும்பான்மை காட்சிகள் நடக்கிறது. முக்கிய கதாபாத்திரங்கள் நான்கு தான். கதையை வலுவாக நம்பிக்கைக் எடுத்ததால் திரைக்காக எந்த மாற்றமும் செய்யவில்லை.

இந்த படத்திற்காக சில விமர்சனங்களை படித்த பொழுது பலரும் 'கள்ளக்காதலன்' என எழுதியிருந்தார்கள். மனைவி திருமண ஒப்பந்தத்தை மீறி விட்டாளே என்ற கோபத்தை விட மனைவி தன்னை விவாகரத்து செய்து விட்டால் தெருவுக்கு வந்து விடுவோம் என்கிற பதட்டம் தான் கணவனுக்கு அதிகம். அதை அவனே ஓரிடத்தில் சொல்வான்.

சத்யராஜை வைத்து சாவி என்ற பெயரில் தமிழில் எடுத்திருந்தார்கள். அந்த படம் எடுபடவில்லை என்றே நினைக்கிறேன்.

பார்க்க வேண்டிய படம் பாருங்கள். தமிழிலும் கிடைக்கிறது.

Non Stop (2014)

நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஒரு போயிங் விமானம் அமெரிக்காவிலிருந்து லண்டனை நோக்கி பயணிக்கிறது.

நாயகன் சிவில் உடையில் பயணம் செய்யும் விமான பாதுகாப்பு அதிகாரி.

விமானம் மேலேறியதும் அவருடைய செல்பேசிக்கு ”150 மில்லியன் டாலர் வேண்டும் இல்லையெனில் ஒவ்வொரு இருபது நிமிடத்திற்கும் ஒரு பயணி சாகடிக்கப்படுவார்” ஒரு குறுஞ்செய்தி வருகிறது.

சொன்னது போலவே தலைமை விமானி உட்பட இரண்டு பேர் மர்மமான முறையில் அடுத்தடுத்து இறக்கிறார்கள்.

பயணிகளின் உயிர் முக்கியம் என பணம் தர ஒப்புக்கொள்கிறார்கள்.

கடத்தல்காரர்கள் தருகிற வங்கி கணக்கோ நாயகனின் பெயரில் இருக்கிறது. இப்பொழுது

மொத்த சந்தேகமும் நாயகனின் மீது விழுகிறது. அவருடைய குழந்தை நோயினால் இறந்துபோகிறது. தொடர்ந்து குடிக்கிறார். மனைவியும் விலகி செல்கிறார். அவருக்கு நிறைய பொருளாதார தேவையும் இருக்கிறது என அவருடைய வாழ்க்கை (Track Record) மோசமாக இருக்கிறது.

இதனால் பயணிகளிடையே ஒளிந்து இருக்கும் கடத்தல்காரர்களை கண்டுபிடிக்க விமான நிறுவனமும், பணியாளர்களும் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். பயணிகளிடம் நிலவரத்தை சொல்லாவிட்டாலும் கலவரமாகிறார்கள். சொன்னால் இன்னும் கலவரமாகிறார்கள். நாயகன் நம்பும் சிலரும் சந்தேக வளையத்திற்குள் வருவது இன்னும் நிலைமை சிக்கலாகிறது.

இதற்கிடையில் அரை மணி நேரத்தில் வெடிக்கப்போகிற வெடிகுண்டையும் கண்டுபிடிக்கிறார். இதெல்லாம் துவக்க கதை தான்!

கடத்தல்காரர்களிடமிருந்து பயணிகளை காப்பாற்றினாரா என்பது முழுநீளக்கதை!

****
வழக்கமான கடத்தல் கதையாக இல்லாமல், நிறைய முடிச்சுகளுடன் ஆரம்பம் முதல் இறுதிவரை விமானத்தித்திலேயே பரபரவென செல்கிறது படம்.

அமெரிக்காவின் இரண்டு கோபுர தாக்குதலின் எதிரொலி தான் இந்த விமான தாக்குதலும்! யார் எப்படி போனால் என்ன? நம் வாழ்க்கையில் எதுவும் நடக்காது என்று தான் பலரும் சொந்த வாழ்க்கையில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். அப்படி வாழமுடியாது. சமூகத்தில் நடக்கும் பல விசயங்களும் எல்லோரையும் தாக்கிக்கொண்டுத்தான் இருக்கும் என்பதற்க்கு இந்த படமும் உதாரணமாக கொள்ளலாம்.

படத்தின் நாயகன் Liam Neeson கெவின் காஸ்ட்னரை நினைவுப்படுத்துகிறார். எல்லோரும் நன்றாக செய்திருக்கிறார்கள்.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள். தமிழிலும் கிடைக்கிறது.

உரையாடல்

தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்கள் விற்கும் ஒரு சிறிய கடை நடத்துகிறார் அவர். மாதம் ஒருமுறை/இருமுறை அவருடைய கடைக்கு வேலை நிமித்தமாக செல்வேன்.

சர்வதேச அளவில் பல விசயங்களை பேசக்கூடியவர். அடிப்படையில் வலதுசாரி சிந்தனை உடையவர். அவர் பேசும் பல கருத்துகளுக்கு எதிர் கருத்துக் கொண்டவன் நான்.

வேலை செய்யப் போகிற இடத்தில் அரசியல் பேசி சண்டையிடக் கூடாது என சீனியர் என்னிடம் வலியுறுத்திக் கொண்டே இருப்பார். கஸ்டமர் கைவிட்டு போய்விடுவார் என்கிற பயம். 🙂

"மரம் அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதில்லை"

நான்கு மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாதித்து காரசாரமாக போய்விட்டது. இனி விவாதிக்கவே கூடாது என்று இருவரும் தனித்தனியாக முடிவு செய்யும்படி ஆகிவிட்டது.

நேற்றும் போயிருந்தேன். தேர்தல் காலம். எப்படி பேசாமல் இருப்பது?ஆரம்பித்தார். என் வேலையை செய்து கொண்டே, எதிர்த்துப் பேசாமல் அவர் சொல்லிய சில விஷயங்களைப் பற்றி மட்டும் சில கேள்விகள் மட்டும் எழுப்பிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற முடிவில் இருந்தேன். சில உதாரணங்கள்.

"அதிமுக, திமுகவை எப்படி பார்க்கிறீர்கள்? - அவர்.

"ரெண்டையும் ஒண்ணா பார்க்க முடியாது. திமுகவை விட அதிமுக ரொம்ப மோசமானது சார்!" - நான்.

"பாமக சாதி கட்சி என பேசுகிறார்கள். அதே மாதிரி தானே விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சாதி கட்சி தானே சார்!" - அவர்.

ஆதிக்க சாதியும், ஒடுக்கப்படுகிற சாதியும் வைத்திருக்க அமைப்பையும் சமமா பாக்க முடியுமா சார்?" - நான்.

கருணாநிதிக்கு மூணு பொண்டாட்டி. கண்ணதாசனுடைய வனவாசம், உலகத்திலேயே பெரிய பணக்காரங்க கருணாநிதி சன் டிவி குடும்பம், வாரிசு அரசியல் என பல விஷயங்களை தொட்டுக்கொண்டு பேசிக் கொண்டே இருந்தார். கீறல் மட்டும் போட்டுக்கொண்டே வந்தேன்.

"தலித்துகளைப் பற்றி பெரியார் இழிவாக பேசி இருக்கார்" - அவர்.

"அப்படி நான் படிச்சது இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை. அப்படி இருந்தா காமிங்க!" - நான்

அவரிடத்தில் அமைதி.

இறுதியில்... சாதி வாரி வாக்கு வங்கி, கட்சிக்கு உள்ள வாக்கு வங்கி என எல்லாவற்றையும் கணக்கிட்டு...

"இந்த தேர்தல்ல 40 க்கு 20 அதிமுக அணியும், 20 திமுக அணியும் வாங்குவாங்க! என்னோட தனிப்பட்ட விருப்பம் அதிமுக கூட்டணியே 40 வாங்கனும்" - அவர்

"ஒரு தேர்தலில் அதிமுக பெரும்பான்மையா ஜெயிக்கும். அடுத்த தேர்தலில் திமுக பெரும்பான்மையா ஜெயிக்கும். அதிமுக - மோடி எதிர்ப்பு தமிழகத்தில் அலை அதிகமா இருப்பதால திமுக கூட்டணி பெரும்பான்மையா ஜெயிக்கும். என் விருப்பம் மோடி - அதிமுக ஒரு சீட் கூட ஜெயிக்ககூடாது!"

குறிப்பு : இன்னமும் அவரிடம் உரையாட முடிவதற்கு காரணம் அவர் இன்னும் முழுசா சங்கீயா மாறல!

எனக்கும் அவருக்கும் இருக்கிற ஒரே ஒற்றுமை. இருவரும் பொருளாதார ரீதியா நிறைய சிரமத்தில் இருக்கோம்! 🙂

Se7en (1995)

பெருந்தீனிக்காரன் ஒருவன் கொலை செய்யப்படுகிறான். அதை ஆராயும் டிடெக்டிவ் இன்னும் ஒரு வாரத்தில் ஓய்வு பெறப்போகிறோம். இதில் தலையிட வேண்டாம் என நினைக்கிறார்.

அவருடைய மேலதிகாரியோ அவரை கேஸை எடுத்துக்க சொல்லி நெருக்குகிறார். புதிதாக வந்த இளைய டிடெக்டிவ் அலட்டிக்கொள்கிறார்.
அடுத்தும் கொலை நடக்கிறது. மூத்த டிடெக்டிவ் கொலைகளுக்கான தடயங்களை ஆய்வு செய்கிறார்.

கிரேக்கத்தில் இருந்த இவாக்ரியஸ் என்பவர் எட்டு பாவங்களை வகுத்தார். அவை gluttony, lust, avarice, sadness, anger, acedia, vainglory, and pride. இந்த பாவங்களின் அளவை பின் போப் க்ரிகோரி என்பவர் ஏழாக குறைத்தார். மேலே இந்த பட்டியலில் இருந்து vainglory என்பதையும் pride-னுள் அடக்கி ஏழாக்கினார். அந்த ஏழு பாவங்களாவன.

gluttony - இதை பெருந்தீனிக்காரன் என சொல்லலாம். அஃதாவது தேவையுள்ளவர்களுக்கு அளிக்காமல் தனக்கே என்று தின்பவன்.

lust - பணம், சாப்பாடு, புகழ், அதிகாரம் மற்றும் குறிப்பாக காமம் ஆகியவற்றின் ஒரு வார்த்தை. பெருவாரியாக தவிர்க்க முடியாத காம இச்சைகளுக்கே இதை சொல்வார்கள்.

avarice(greed) - இதுவும் இச்சை சார்ந்தது தான். அடுத்தவர்களின் பொருட்கள் மேல் கொள்ளும் இச்சை.

(acedia, sadness) sloth - ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வேலைகள் பிறவிப்பயனாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வேலைகளை செய்யாமல் சோம்பேறியாய் இருத்தல்.

wrath - வெறுப்பாலும் கோபத்தாலும் பொங்கி எழும் வெறி.

envy - இதையும் அடக்கவியலாத இச்சை என்கிறார்கள். பிறரின் கௌரவம் மேல் கொள்ளும் பொறாமை.

pride - இதை ஏழு பாவங்களிலேயே முக்கியமாக கருதியிருக்கின்றனர். பிறரின் நன்முயற்சிகளை பொருட்படுத்தாமல் தன்னையே பிறரை காட்டிலும் மேலோங்கியவன் என்று எண்ணிக் கொள்ளுதல்.

இதன் அடிப்படையில் கொலைகள் தொடரும் என அவருக்கு புரிகிறது.
எதிர்பாரா சமயத்தில் கொலைகாரனே சரணடைகின்றான்.

மீதி கொலைகளையாவது தடுத்து நிறுத்தினார்களா என்பது முழு நீளக்கதை!

****
இந்து மதத்தில் அந்நியன் அம்பி போல, கிறித்துவ அம்பி தான் கொலைகளை செய்கிறார். சமூகத்தை திருத்துகிறேன் என்று தான் விளக்கம் தருகிறார். மதம் இருக்கும் வரையில் இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளும் தொடரும்.

இந்த கதையை சொன்ன விதத்தில் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள்.

இளைய டிடெக்டிவ் வேகமாக இருக்கிறார். மூத்தவரோ விவேகத்துடன் இருக்கிறார். இருவருக்குமான அணுகுமுறை நன்றாகவே வெளிப்படுகிறது.

"ஆபத்து என்றால் " காப்பாற்றுங்கள்" என்று கத்தினால், அக்கம் பக்கத்தில் இருந்து ஒருத்தனும் வரமாட்டான். "நெருப்பு"ன்னு கத்துங்க! நம்மை வீட்டையும் பத்திக்குமேன்னு! உடனே ஓடிவருவான்!"

- இப்படி ஓரிடத்தில் பேசிக்கொள்கிறார்கள். தனி உடைமை சமூகத்தின் சாம்பிள் இது!

ஒரு சுவாரசியமான திரில்லர். பார்க்க கூடிய படம். பாருங்கள். தமிழில் கிடைக்கிறது.
நன்றி : ஏழு பாவங்கள் பற்றி குறிப்புகள் தந்து உதவியவர் பதிவர் கிருஷ்ணமூர்த்தி