> குருத்து: August 2010

August 20, 2010

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!*


பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள், பல்வேறு மாநிலக் கட்சிகள் என்று விலைவாசிப் பிரச்னையில் ஆளும் கூட்டணிக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று வெற்றிகரமாக "பாரத் பந்த்' நடத்தியபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஒரு மாற்று ஏற்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை வெறும் கானல்நீர்தான் என்பதை சமீபத்திய நாடாளுமன்ற நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் தயவில் அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம், நடைபெறும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட்டுவிடும் என்று தெரிகிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அன்னிய முதலீடு, பொருளாதாரக் கொள்கை, அமெரிக்காவை மையப்படுத்தியுள்ள பிரச்னைகள், உலகமயமாக்கல் என்று வரும்போது காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் கைகோத்துச் செயல்படுவதைக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நாம் பார்த்து வருகிறோம்.
அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் முழுமையாக்கப்படும் என்பதுதான் நிலைமை.

நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய விஜயத்துக்குமுன் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி அமெரிக்க முதலீட்டாளர்களையும், அரசையும் மனம் குளிர்விக்க வேண்டும் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் குறியாக இருக்கிறார் என்கிறார்கள். மன்மோகன் சிங்கின் இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுப்பதில் காங்கிரஸýம், அதன் கூட்டணிக் கட்சிகளும் மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சியேகூட முனைப்புடன் செயல்படுகிறது என்பதுதான் குறிப்பிடவேண்டிய ஒன்று.

அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும், அணுஉலை எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பும் வலியுறுத்துகின்றன. அதற்கு அடிப்படைக் காரணம், அணுமின் நிலையங்களில் அணுக்கசிவோ, விபத்தோ ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அணுமின் நிலைய உரிமையாளர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால்தான் இந்த நிபந்தனை.

இழப்பீட்டுக்கு ஓர் உச்சவரம்பு விதிப்பதன் மூலம் அணுவிபத்தால் ஏற்படும் தலைமுறைகளைக் கடந்த பாதிப்புகளுக்கு அணுமின் நிலைய உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இருக்காது. அணுமின் நிலையங்களை அன்னிய முதலீட்டாளர்கள் மட்டுமே நிறுவ முடியும் என்பதால் தங்களது நாட்டு முதலீட்டாளர்களின் இழப்பைக் குறிப்பிட்ட வரம்புக்குள் நிறுத்த அணுஉலை எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பு விரும்புகிறது.

போபாலில் நடந்த விஷவாயுக் கசிவில் யூனியன் கார்பைடு நிறுவனம் முழுமையான இழப்பீடு கொடுக்காத நிலையில், இன்னமும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதும், நீதிமன்றப்படிகளில் ஏறி, இறங்கி சலித்துவிட்டிருப்பதும் இதுபோன்ற விபத்துகளில் இழப்பீட்டை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. ஆனால், அப்படிப்பட்ட இழப்பீட்டுக்கு உச்சவரம்பு விதிக்கப்படுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

அணுசக்தி என்பது ஆபத்தானது என்பதை ஏற்றுக்கொள்ளும்போது, அதனால் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு முழுமையான இழப்பீடு மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்கும் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படுவதும்கூட ஒரு நல்லரசின் கடமை.

கடந்த மக்களவையில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து வாக்களித்த பாரதிய ஜனதா கட்சி இப்போது இந்த இழப்பீட்டு மசோதாவில் அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது ஏன்? தங்களது நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாக பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். அது என்ன நிபந்தனைகள்?

முதலாவதாக, அணுசக்திக் கூடங்கள் தனியார் தரப்பில் விடப்படக் கூடாது என்பதும் அரசுதான் நடத்த வேண்டும் என்பதும். இரண்டாவதாக, அணுசக்தி நிறுவனங்களின் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை 500 கோடியாக இருந்ததை 1,500 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதும் தேவைப்பட்டால் மேலும் உயர்த்திக் கொள்ளும் அதிகாரமும் அரசுக்கு இருக்க வேண்டும் என்பதும்.

முன்பு தயாரிக்கப்பட்ட மசோதாவின்படி, அணுசக்தி உற்பத்தியாளர்களின் இழப்பீடு 500 கோடி என்றும், அதற்குமேல் இழப்பீடு தரப்பட வேண்டுமானால் அதை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் இருந்தது. இப்போது பாஜகவின் கோரிக்கையின்படி அரசு நிறுவனமாக மட்டுமே அணுசக்திக் கூடங்கள் அமைக்கப்படும் என்கிற நிலையில் இழப்பீடு எவ்வளவு இருந்தாலும் அதை அரசு ஏற்றுக்கொள்வது என்பதுதானே நியாயம். அரசே நடத்தும்போது உச்சவரம்பின் அவசியம் தேவையில்லையே!

இப்படி ஒரு மசோதாவை நிறைவேற்றி, அரசு நிறுவனமாக அணுசக்திக் கூடங்களை அமைத்து, பிறகு அவற்றைத் தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டிருப்பது இந்த மசோதாவிலிருந்தே பளிச்செனத் தெரிகிறதே. அப்படியானால் இது மக்களை முட்டாளாக்கும் மசோதாதானே?

சரி, மின்உலைகளில் தயாரிப்புக் குறைபாடுகள் இருந்தால் அதற்கு உலைகளை வழங்கிய பன்னாட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்குமா? அவர்களிடமிருந்து விபத்து ஏற்பட்டால் இழப்பீடு முழுமையாகப் பெறப்படுமா? இதுபோன்ற கேள்விகளுக்கு மசோதா பதில் சொல்லவில்லையே, ஏன்?

பாரதிய ஜனதாவும், காங்கிரஸýம் ஓரினப் பறவைகள். பொருளாதாரக் கொள்கையிலும், பன்னாட்டு நிறுவன ஆதரவிலும் இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்றம் இருக்காது என்பது உலகறிந்த ரகசியம். ஏனைய மாநிலக் கட்சிகள் இந்தப் பிரச்னையில் மௌனம் சாதிக்கின்றனவே, ஏன்? அவர்களைப் பொறுத்தவரை அணுவாவது.. உலையாவது.. விபத்தாவது.. இழப்பாவது..! உறுப்பினர்களின் சம்பள உயர்வுதான் இப்போதைய கவலை!
மக்களைப் பற்றியும் வருங்காலச் சந்ததியினரைப் பற்றியும் இவர்கள் எங்கே கவலைப்படுகிறார்கள்...?

நன்றி : தினமணி தலையங்கம் - 19/08/2010

பின்குறிப்பு : தினமணியின் தலையங்கத்தில் 'ஒரு மரத்து பறவைகள்" என சாந்தமாக தலைப்பு தந்திருந்தார்கள். பொருத்தமாக சொல்ல வேண்டுமென்றால்..."ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்" என்ற தலைப்பு தானே பொருத்தமாக இருக்கிறது. அதனால் தான் மாற்றி வைத்தேன்.

August 17, 2010

எழுத, படிக்க தெரியாத மாலைமலர்!

கடந்த 15/08/2010 அன்று மக்கள் கலை இலக்கிய கழகமும் அதன் தோழமை அமைப்புகளான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி - இணைந்து, "கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!" என முற்றுகை போராட்டம் நடத்தின. அதை பின்வருமாறு மாலைமலர் பதிவு செய்திருந்தது.

சென்னையில் கார்பைடு கம்பெனி அலுவலகம் முற்றுகை: 1000 பேர் கைது.
- சென்னை ஆக.15, 2010

சென்னையில் கார்பைடு கம்பெனி அலுவலகத்தை முற்றுகையிட சென்ற 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.

முற்றுகை போராட்டம்

போபால் விஷவாயு கசிவு சம்பவத்துக்கு தொடர்பபன கார்பைடு கம்பெனியின் அலுவலகம் ஈக்காடுதாங்கலில் உள்ளது. இக்கம்பெனியை மூடக்கோரி மக்கள் கலை இயக்கிய கழகம், ஜனநாயக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, ஜனநாயக புதிய முன்னாள் விவசாயிகள் விடுதலை முன்னணி - ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் அந்த அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

அதற்காக ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள் அசோக் பில்லரில் உள்ல ஜவஹர்லால் ரோட்டில் திரண்டு நின்றனர். பின்னர் போராட்டம் நடத்த சிறிது நேரம் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

1000 பேர் கைது

தகவல் அறிந்ததும், போலீஸ் இணை கமிஷனர் சக்திவேல், துணை கமிஷனர் சாரங்கன் மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தின் ஈடுபட்ட 1000 பேரை கைது செய்தனர். அவர்களில் 300 பேர் பெண்கள்.

இவர்கள் அனைவரும் இப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிக்கு 500 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

****
இந்த செய்தியை படிக்கும் பொழுது, இதை எழுதிய ரிப்போர்ட்டர் களத்திற்கு வந்ததாக தெரிகிறது. அங்கு நின்று போகிற வருகிற பொதுமக்கள் அனைவருக்கும் தோழர்கள் போராட்டம் தொடர்பான துண்டறிக்கையை விநியோகித்து கொண்டு இருந்தார்கள். அப்படி வாங்கிய துண்டறிக்கையில் அமைப்பு பெயர்கள் தெளிவாக இருந்தன. அப்படி இருக்கும் பொழுது, ஏன் தப்புத்தப்பாக அமைப்பு பெயரை போடுகிறார்கள்? மாலைமலருக்கு எழுத, படிக்க தெரியாதா என்ன?

புரட்சிகர அமைப்பு நடத்துகிற எந்த போராட்டங்களும் மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதில் பல பத்திரிக்கைகளும், சானல்களும் மிகுந்த கவனத்துடன் வேலை செய்கின்றன. அதனால் தான் இந்த போராட்ட செய்தியை கூட பல பத்திரிக்கைகளும், சானல்களும் கண்டும் காணாதது போல இருந்துவிட்டன.

'தேசிய நீரோட்டத்தில்' கலக்காமல் இருக்கும் எந்த அமைப்பு செய்திகளையும் இப்படித்தான் இருட்டடிப்பு செய்கிறார்கள். இருப்பினும், போராட்ட செய்திகளை எப்பொழுதாவது, வெளியிட்டால், இப்படித்தான் அமைப்புகளுக்கு அவர்களாகவே மேலே உள்ளது போல பெயர் சூட்டுவார்கள்.

சுதந்திரம் இன்னும் தொலைவில் இல்லை! - (மீள்பதிவு)


பொய்களின் கைப்பிடித்து
நெடுந்தொலைவு
வந்துவிட்டோம்.

ஒவ்வொரு மைல்கல்லிலும்
சுமைகளென
நம் செல்வங்கள்
அனைத்தையும்
இறக்கி வைத்துவிட்டோம்.

இலவசமாய் கிடைத்ததென
பல வண்ணப் பந்தல்களில்
நிறைய மூடநம்பிக்கைகளை வாங்கி
வயிறு முட்ட குடித்துவிட்டோம்.

பொய்கள்
கொழுத்துப்போய்விட்டன.
நாம் நிறைய
இளைத்து போய்விட்டோம்.

பொய்கள் அழைத்து செல்வது
மகிழ்ச்சியின் தேசத்திற்கு அல்ல!
மரணக்குழிக்குத்தான்!
உண்மை எச்சரித்துக்கொண்டே
உடன் வருகிறது.

பொய்கள் இதுவரை
உண்மையின் ஆடைகளை
உடுத்தியிருந்தன.

இப்பொழுது
தன் மூகமூடிகள்
உண்மையின் ஆடைகள்
எல்லாவற்றையும் களைந்தெறிந்து
தன்னை எவர் ஜெயிக்கமுடியும்?
கோரப்பற்களைக் காட்டி
எக்காளச் சிரிப்புடன்
உண்மையைப் பார்த்து
கேலி செய்கிறது.

சாவின் விளிம்பிற்கு
வந்துவிட்டோம்.

இப்பொழுதாவது
உண்மையின் கைப்பிடிப்போம்.
கரங்களை ஒன்றிணைப்போம்.

உற்றுப்பாருங்கள்
சாவின் முகத்தில்
சவக்களை.

சுதந்திரம்...இன்னும்
தொலைவில் இல்லை

- குருத்து


- 2003-ல் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்தது.

August 11, 2010

போபால் : ஆகஸ்டு 15ல் முற்றுகை! அனைவரும் வருக!


போபால் : நீதி வேண்டுமா?.. நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை..

போபால் – காலம் கடந்த அநீதி

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது போபால் நீதிமன்றம். முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது அமெரிக்க அரசு. 23,000 இந்திய மக்களை படுகொலை செய்து , 5,00,000 க்கும் மேற்பட்டோரை ஊனமாக்கியிருக்கும் அந்தப் பயங்கரவாதியை ஒரே ஒரு நாள் கூட கூண்டில் ஏற்றி விசாரிப்பதற்கு கூட விரும்பாத மன்மோகன் சிங் அரசு, மக்களுக்கு நிவாரணம் தருவதாகவும், மீண்டும் நீதி விசாரணை கோரப் போவதாகவும் நம்மிடம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

1984, டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவில் யூனியன் கார்பைடு ஆலையில் நடந்த நச்சுவாயுக் கசிவு எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல. அமெரிக்க நிறுவனம் தெரிந்தே செய்த படுகொலை. ஆபத்தான இந்த உற்பத்தியை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு தள்ளி விட்டது குற்றம். மெதில் ஐசோ சயனைடு என்ற நச்சு வாயுவிலிருந்து பூச்சிக் கொல்லி தயாரிக்கும் ஆலையை குடியிருப்பு பகுதியில் அமைத்தது குற்றம்.

அதே ஆலையில் பல விபத்துக்கள் நடந்த பின்னரும் இலாபத்தை கூட்டுவதற்காக நச்சுவாயுக் கிடங்கின் பாதுகாப்புச் செலவுகளை குறைத்தது குற்றம்.செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு மாற்று மருந்து கொடுத்து காப்பாற்ற முயன்ற மருத்துவர்களிடம் கூட சயனைடு வாயுவின் பெயரைக் கூறாமல் ஏமாற்றி, பல்லாயிரம் மக்களைத் துடித்துச் சாக விட்டது குற்றம். பூச்சிக் கொல்லி த்யாரிப்பதாக கூறிக் கொண்டு, இரகசியமாக இரசாயன ஆயுதங்களைத் தயாரித்தது தான் மேற்கூறிய குற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படையான கொலைக்குற்றம்.

தேடப்படும் குற்றவாளி ஆண்டர்சன்
குற்றவாளி யூனியன் கார்பைடு மட்டுமல்ல; ஆபத்தான இந்த ஆலைக்குத் தெரிந்தே உரிமம் வழங்கியவர் இந்திராகாந்தி. கைது செய்யப்பட்ட ஆண்டர்சனை விடுவித்து மன்னிப்பு கேட்டு, அரசு விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தவர் அன்றைய பிரதமர் இராஜீவ் காந்தி. ஒரு இந்திய உயிரின் விலை 12,414 ரூபாய் என்று 1989 இல் கார்பைடு நிறுவனத்துடன் கட்டைப் பஞ்சாயத்து பேசி முடித்தது இராஜீவ் அரசாங்கம்.

இந்தக் குற்றத்தை சாலை விபத்து போன்ற சாதாரணக் குற்றமாக குறைத்தது உச்ச நீதி மன்றம். வழக்கை சீர்குலைத்து குற்றவாளி ஆண்டர்சனைத் தப்பவைக்க முயன்றது சி.பி.ஐ. காங்கிரசு அரசின் எல்லா சதிகளுக்கும் உடந்தையாய் இருந்தது, அதன் பின் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு. இந்த குற்றவாளிகள் அனைவரும் எதுவுமே தெரியாதவர்கள் போல் நாடகமாடுகிறார்கள்.

26 ஆண்டுகளாக காத்திருந்த போபால் மக்களுக்கு இன்று இழைக்கப்பட்டிருப்பது அன்றைய படுகொலையைக் காட்டிலும் கொடிய அநீதி. இந்த அநீதி இந்தியாவின் சட்டமாகவே மாறவிருக்கிறது. “இந்திய அரசு அமெரிக்காவிடம் வாங்கவிருக்கும் அணு உலைகள் வெடித்து நாளை இலட்சக் கணக்கான இந்தியர்கள் செத்தாலும், அதற்காக் அமெரிக்க முதலாளிகளிடம் நட்ட ஈடு கூட கேட்க மாட்டோம்” என்கிறது மன்மோகன் சிங் அரசின் அணுசக்தி மசோதா. தற்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் டௌ கெமிக்கல்ஸ் , அன்று வியட்னாம் மக்களைக் கொல்வதற்கு நாபாம் தீக்குண்டுகளை அமெரிக்காவுக்கு தயாரித்து கொடுத்த நிறுவனம்.

இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு இந்தக் கொலைகார நிறுவனத்தை வருந்தி அழைத்துக் கொண்டிருக்கிறது மன்மோகன் அரசு. “பன்னாட்டு முதலாளிகளின் இலாபத்துக்காக இந்திய மக்களைக் கொல்வதும் மண்ணை விட்டு விரட்டுவதும் நம் தொழில்களை அழிப்பதும் உரிமைகளைப் பறிப்பதும் தான் நீதி: பன்னாட்டு முதலாளிகள் சொல்வது தான் சட்டம்; அவர்கள் கொழுப்பது தான் நாட்டின் முன்னேற்றம்” என்ற இந்திய அரசின் கொள்கையை அம்பலமாக்கியிருக்கிறது போபால் படுகொலை.

காலனியாதிக்கத்தின் கோர முகத்தை அம்பலமாக்கி, பகத்சிங் போன்ற விடுதலை வீரர்களை உருவாக்கியது ஜாலியன் வாலாபாக். இந்திய சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் பொய்முகங்களையும், மறுகாலனியாதிக்கத்தின் உண்மை முகத்தையும் உரித்துக் காட்டியிருக்கிறது போபால்.

நீதி வேண்டுமா?.
நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை!. இது போபால் படுகொலை நமக்கு கற்பிக்கும் பாடம்.
நீதி வேண்டுமா ?.. புரட்சி ஒன்று தான் பாதை ..

கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!
முற்றுகை

ஆகஸ்டு-15, காலை 10.30 மணி,

டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.
அனைவரும் வருக‌
-
மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
-

தொடர்பு கொள்ள:
ம.க.இ.க : 94446 48879
பு.ம.இ.மு : 94451 12675
பு.ஜ.தொ.மு : 94448 34519
பெ.வி.மு : 98849 50952
வினவு : 97100 82506
*****
நன்றி : படம் உதவி - கலகம்
நன்றி : வினவு

August 9, 2010

ரெட் சன் - நக்சல் பகுதிகளில் ஒரு பயணம்!


நன்றி : தினமணி - நூல் மதிப்புரை

நூல் ஆசிரியர் : சுதீப் சக்கரவர்த்தி,

தமிழில் : அ. இந்திராகாந்தி

*****

பத்திரிக்கையாளரான நூலாசிரியர் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளதாக கூறப்படும் பகுதிகளில் பயணம் செய்து பலரைச் சந்தித்து, அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டு எழுதப்பட்டுள்ள நூல். மாவோயிஸ்டுகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், அவர்களின் இன்றைய நிலையையும் மிக துல்லியமாக நூல் படம்பிடித்து காட்டுகிறது.

"மாவோயிசம் நமது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் மிகப் பெரிய பிரச்சனை அல்ல; மாறாக ஏழ்மை, சரியான ஆட்சியின்மை, மோசமான நீதி மற்றும் ஊழல் தான் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் ஆகும். ஒருநாடாக இந்திய அரசு செய்வதற்குத் தவறியவற்றைப் பிரதிபலிக்கும் வெறும் கண்ணாடி மட்டும் தான் இந்திய மாவோயிஸ்டுகள்" என்ற அடிப்படையில் பல விவரங்களை நூல் தருகிறது.

சம காலத்தில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிக முக்கியமான ஒரு பிரச்சனைப் பற்றிய விரிவான ஆய்வாக, தகவல் களஞ்சியமாகத் திகழும் குறிப்பிடத்தக்க நூல்.

பக்கம் : 424 விலை : ரூ. 250/-

வெளியீடு : எதிர் வெளியீடு, பொள்ளாச்சி - 1.

04259 - 226012

***

சென்னையில் புத்தகம் கிடைக்குமிடங்கள் :

கீழைக்காற்று பதிப்பகம், 10, ஔலியா சாகிப் தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 தொலைபேசி – 044 2841 23677

நியூ புக் லேண்ட், 52சி, வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர் சென்னை - 600017.
தொலைபேசி - 044 -2815 6006

August 6, 2010

பொம்மைகளும்! விளையாட்டு பொருட்களும்!


நூறு பொருட்கள் கேட்டால்
அவள் அழுது அழுது - அல்லது
நாங்கள் அழுது அழுது
ஒன்றைத்தான் வாங்கித்தர முடிகிறது!

பொம்மைகளின் வழியே
யார்? யார்? பரிசாய் தந்தது என
அடையாளம் சொல்லிவிடுகிறாள்!

பொம்மைகளை கொண்டு
புதியவர்களை - எளிதாய்
நண்பர்களாக்கிவிடுகிறாள்!

எத்தனைமுறை கண்டித்தாலும்
கண்டுகொள்ளாமல் - வீடு முழுவதும்
பொம்மைகளை பரப்பிவிடுகிறாள்!

உடைந்த வளையல் துண்டு,
நாலு சக்கரம் இழந்த கார் - என எல்லாமும்
விளையாட்டு பொருட்களாகிவிடுகின்றன!

பொம்மைகளோடு விளையாட வைத்து
சமயங்களில் எங்களையும்
குழந்தைகளாக்கிவிடுகிறாள்!

பொம்மைகள் வாங்கிவராத விருந்தினர்கள்
விளையாட்டு பொருட்கள் இல்லாத குழந்தைப்பருவம்
நினைவுகள் - அவ்வப்பொழுது
வந்துபோவதை தவிர்க்கவே முடியவில்லை!