> குருத்து: மனிதர்கள்
Showing posts with label மனிதர்கள். Show all posts
Showing posts with label மனிதர்கள். Show all posts

May 28, 2025

தோழர் ஜவஹர்


கடந்த ஒரு வார காலமாக அவரது நினைவு மலரில் பல ஆளுமைகள், மனிதர்கள் எழுதியதை மீண்டும் வாசித்ததன் மூலம் அவரது நினைவலைகள் மனதில் ஓயாது அடித்துக்கொண்டே இருக்கின்றன.

 

இனியனுக்கு புருஸ்லீயை அறிமுகப்படுத்தி… மறவாமல் சிடிக்களையும் வாங்கி மகிழ்வித்திருக்கிறார். இனியன் ஓரிடத்தில் “சிறுவர்களை கூட தனக்கு சமமாக நடத்துவார்” என குறிப்பிடுகிறான்.

 

”ஜவஹர் தாத்தாவின் முத்தம் – தாத்தாவின் முத்தம் அலாதியானது. அவ்வளவு அன்பு மிகுந்தது. அவ்வளவு வாஞ்சையானது. நரைத்த மீசை குத்தும். ஆனாலும் இன்னொரு முத்தத்திற்காக ஏங்கும்” என்கிறார் பேத்தி வானவில்.

 

ஒருமுறை இராஜீவ்காந்தி போகும் பாதையில் கையசைப்பதற்காக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை நிற்க வைத்திருக்கிறார்கள். அவர் வர தாமதமாகிறது.  ஆனால் உட்கார வைக்கவில்லை. ஏன் என கேட்டால், வரும் பொழுது அவசரமாக எழ சொல்லமுடியாது என மடத்தனமாய் பதில் சொல்லியிருக்கிறார்கள். பத்திரிக்கையாளர் சுப்பு சண்டையிட கிளம்புவதைப் பார்த்து… உடன் இருந்த ஜவஹர் தோழர் அவர்களிடம் போய் ஒன்றை சொல்ல… குழந்தைகளை அமர வைத்திருக்கிறார்கள்.   ”என்ன சொன்னீங்க?” என கேட்டதற்கு “நாங்க காங்கிரஸ் தான். தலைவர் வருவதற்கு தாமதமாகும்.” என சமயோசிதமாக சொன்னாராம். ஜவஹர் பொய் சொல்லமாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தியையும் பதிவு செய்கிறார்.

 

ஒரு விசயம் குறித்து கேட்கும் பொழுது… குடும்ப உறுப்பினர்களிடம் பேசுவதை போல உண்மையைத் தான் தோழர் பகிர்ந்துகொள்வார்.    அதை பலமுறை நானே உணர்ந்திருக்கிறேன். அதனாலேயே சில விசயங்களை அவரிடம் கேட்காமல் தவிர்த்திருக்கிறேன்.

 

தொழிலாளர் தோழர்கள் மீது எப்பொழுதும் அவருக்கு பிரியமும் தோழமையும் உண்டு.  “பொதுவாக தோழர் தன்னுடைய வேலைகளை ஒழுங்குபடுத்தும் எண்ணத்தில், வாருங்கள் என சொல்வார்.  ஆனால், எங்கள் இருவருக்கு மட்டும் விதிவிலக்கு.  இருவரும் இருபத்து நான்கு மணி நேரமும் தன் வீட்டுக் கதவைத் தட்டலாம், வந்து பேசலாம் என்பார்.  அதே போல வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தோழரைச் சந்தித்துப் பேசிவிட்டு வருவோம்” என்கிறார் தோழர் வெள்ளமுத்து.

-  

ஜவஹர் தோழர் மீதான அன்பும், தோழமையும் எனக்கு அதிகம் தான்.  ஆனால் அதை வெளிப்படையாக செயலிலோ, வார்த்தைகளிலோ காட்டிக்கொண்டதில்லை. ஆனால் அதை அவர் உணர்ந்திருந்தார். அவரிடம் இருந்து கற்றதும், பெற்றதும் அதிகம்.  அந்த அன்பில் ஏதும் சின்ன முரண் கூட வந்துவிடக்கூடாதே என்பதற்காகவே மிகுந்த நெருக்கம் கொள்ளாமல், தள்ளியே இருந்து… நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவரை சந்தித்து பேசிவருவதுண்டு.   அப்படி செய்திருக்க வேண்டியதில்லை என இப்பொழுது தோன்றுகிறது. 

 

பொதுவுடைமை தோழர்கள், திராவிட இயக்க தோழர்கள்,   தொழிலாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தோழமை குடும்பத் தோழர்கள் என எல்லோரிடத்திலும் அன்பும், தோழமையும் பாராட்டி வந்திருக்கிறார்.   அதற்கு அத்தனை மனிதர்களுடைய பல்வேறு அனுபவங்கள் பதிவாகியிருக்கின்றன. அந்த நினைவு மலரை இப்பொழுது கையில் எடுத்தாலும், மணம் வீசுகிறது.

 

கொரானா இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கிக்கொண்டிருந்தது.  மரணம் எங்கும் அலைந்து திரிந்துகொண்டிருந்த காலமிது. தோழர் மரணித்த நாளில், இடுகாட்டுக்கு போயிருந்தோம்.   எப்பொழுதும் புன்னகையுடன் “என்னப்பு!” என பிரியத்துடன் அழைக்கிற தோழர், அன்று ஒரு ஸ்டிரச்சரில் வெளியே படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரை எரியூட்டுகிற காட்சியை பார்க்கிற தெம்பு மனதில் இல்லை. கிளம்பி வந்துவிட்டோம். 

- 

- 28/05/2021 - இன்று அவரது நான்காம் நினைவு நாள்

August 13, 2024

ஆப்பிள் போனும், அவரும்!


50 வயதை கடந்த அந்த மனிதர். சிறிய தொழில் ஒன்றை செய்துவருகிறார். என்னுடைய சீனியர் அலுவலகத்தில் அவரை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எப்படியும் கண்ணில்பட்டுவிடுவார்.


அவர் ஆட்களைப் பார்த்துவிட்டால், சில அங்க சேஷ்டைகளை செய்து… குரலை ஏற்றி, இறக்கி எல்லோரையும் சிரிக்க வைக்க முயல்வார். சிலர் மெல்லியதாய் புன்னகைப்பார்கள். சிலர் வாய்விட்டே சிரிப்பார்கள்.

இப்படி ஏதோ ஒருநாளில், பலரும் கூடி இருக்கும் பொழுது, ஆட்டமும் போட அதை யாரோ காணொளி எடுத்து நண்பர்கள் வட்டத்தில் சுற்றுக்கு வர, பலரும் பாராட்ட நிறைய மகிழ்ந்து போனார்.

அந்த காணொளிக்கு கிடைத்த உற்சாக சுவை அவருடைய நாவில் இருந்துகொண்டே இருந்திருக்கிறது. நிறைய கனவுகள் கூட வந்திருக்கும் என நினைக்கிறேன்.

அடுத்த நாள் சீனியர் அலுவலகத்தில் அங்கிருந்த இளைஞர்கள் ” உங்களுக்கு நல்ல திறமை இருக்கிறது. எவனவனோ மொக்கையா காணொளி வெளியிடுகிறார்கள். நீங்கள் வெளியிடலாமே!” என இன்னும் கிடைத்த நேரத்தில் ஏத்திவிட்டுள்ளார்கள்.

இப்படி பேசிப் பேசி, அதற்கு அடுத்த நாளில், அதைச் செயல்படுத்துவதற்கு ஒரு கூட்டமாய் உட்கார்ந்து அதற்கான சாத்தியப்பாடுகளை விவாதித்திருக்கிறார்கள். ஒரு ஆப்பிள் போன் மட்டும் வாங்கிவிட்டால்… அப்படியே எடுக்கலாம். அப்படியே அப்லோட் செய்யலாம் என ஒரு “கிரேட்” ஐடியாவை கொடுத்திருக்கிறார்கள்.

அவர் கஞ்சனுக்கும் சிக்கனக்காரனுக்கும் நடுவில் உள்ளவர். தன்னுடைய இயல்பில் ஐபோன் எல்லாம் அவர் வாழ்வில் வாங்கியிருக்க வாய்ப்பேயில்லை. இளைஞர்கள் குழு உற்சாகப்படுத்த, ஒரு உந்துதலில் ரூ. 60000த்துக்கு வாங்கிவிட்டார்.

வாங்கியதற்கு பிறகு, உற்சாகப்படுத்திய அந்த இளைஞர்கள் கூட்டம் தங்களுடைய சொந்த வேலை நிலைமைகளால் மெல்ல மெல்ல கலைந்து போனார்கள். ஆனால், ஆப்பிள் போன் மட்டும் இவரிடம் தங்கிவிட்டது.

பிரகாசமாய் சமூக வலைத்தளங்களில் வலம் வருவோம் என நிறைய கனவு கொண்டிருந்த ஒரு மனிதர், அந்த “நட்சத்திர” வாய்ப்பு பறிபோனது குறித்து எவ்வளவு வருந்தியிருப்பார். சோகம்.

நாளாக நாளாக போனின் எடை குறைவு தான் என்றாலும், விலை அதிகம் என்பதால், அவருக்கு மனதில் கனத்துக்கொண்டே போனது. அந்த போனை ஒரு நல்ல விலைக்கு விற்க முயன்றாலும், முடியவில்லை.

அன்றைக்கு சந்தித்த பொழுது, பேச்சின் இடையே என்னிடம் புலம்பினார். ”இந்தப் போனை வைத்துக்கொண்டு, கீழே கூட குனிந்து எதையும் எடுக்க முடியவில்லை. விழுந்துவிடுமோ! டேமேஜாகி விடுமோ என பயப்படவேண்டியிருக்கிறது.”

இன்னொரு முறை, (அவருக்கு இரண்டு பசங்க! இருவருமே இளைஞர்கள் தான்) “என் பசங்க இந்த போனை கேட்பாங்கன்னு நினைச்சேன். அவங்களும் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை” என்றார்.

இன்னும் அந்த போன் அவருக்கு எவ்வளவு மன உளைச்சலை கொடுக்கப்போகிறது என தெரியவில்லை.

May 19, 2023

ராஜா என்கிற பிச்சைக்காரன்


என் சொந்த ஊரின் உறவுகளில் ஒன்றுவிட்ட மாமா ஒருவர் இருந்தார். அவர் செய்த தொழிலில் செல்வ செழிப்புடன் இருந்த பொழுது முதல் பையன் பிறந்தான். அவன் ராஜாவாக வாழவேண்டும் என ஆசைப்பட்டு ”ராஜா” என பெயர் சூட்டினார். அதற்கு பிறகு மூன்று பெண்பிள்ளைகள்.


செல்வ செழிப்பு நல்ல விசயங்களையும் கொண்டுவரும். கோளாறுகளையும் கொண்டுவரும். மாமா இன்னொரு பெண்ணையும் சேர்த்துக்கொண்டார். அவருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள். சண்டைகள் இருந்தாலும், அவரது சொந்தங்கள் அந்த குடும்பத்தையும் ஏற்றுக்கொண்டார்கள். சொந்தங்களின் விசேசங்களில் அவரையும், குழந்தைகளையும் பார்க்கமுடியும்.

செய்த தொழில் நொடித்து போகும் பொழுது குடியையும் சேர்த்துக்கொண்டார். எப்பொழுதும் மிதக்க ஆரம்பித்தார். ஏதோ ஒரு விசேசத்திற்காக காவிரி ஆறு மிக மிக குறுகலாய்... ஆனால் நல்ல வேகத்துடன் ஓடும் கொடுமுடி ஊரில் தண்ணியைப் போட்டு மப்பில் நின்ற பொழுது, ஆற்றில் ஒரு தக்கையைப் போல இழுத்து செல்லப்பட்டார். தொடர்ந்து சில நாட்கள் தேடியும் மாமாவின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. காவிரியுடன் கலந்துவிட்டார்.

பிறகு திடீர் திடீரென "உங்க அப்பாவை ஈரோட்டில் பார்த்தேன். சேலத்தில் பார்த்தேன்" என யாராவது சொன்னால்... அவரது மகன் ராஜா இரண்டு நாட்கள் அங்கு போய் தேடிவிட்டு வருவான். பிறகு அவரைப் பற்றிய புரளிகளும் அடங்கிவிட்டன.

இப்பொழுது மாமாவின் வாரிசான ராஜாவிற்கு வருவோம். பள்ளி படிப்பு பெரிதாக இல்லை. இளைஞனான ராஜா பள்ளிகளின் வாசலில் ஐஸ் விற்க ஆரம்பித்தான். ”ஐஸ் ராஜா” என பெயர் பெற்றான்.

சீசனுக்கு சீசன் தொழிலை மாற்றுவான். வெயில் காலங்களில் ஐஸ் விற்பவன், கார்த்திகை, மார்கழியில்.. மீனாட்சியம்மன் கோயில் வாயில்களில் நின்று... ஐயப்ப பக்தர்களிடம் மாலைகள், கவரிங் நகைகள் விற்பான். பழனியின் அடிவாரத்தில் வியாபாரம் செய்வான்.

டல்லான ஆளெல்லாம் இல்லை. நன்றாக உழைக்க கூடிய, நன்றாக பேசக்கூடிய, திறமை கொண்டவன் தான். உதிரி தொழில் செய்பவர்களிடம் நன்றாக காசு புழங்கும். ஆனால் அவர்ளின் தொழிலின் தன்மையைப் போல ஏற்ற இறக்கங்களுடன் இருப்பார்கள்.

ராஜா அப்படித்தான். காசு இருந்தால் தண்ணி தான். நல்ல சாப்பாடு தான். இல்லையென்றால் அமைதியோ அமைதி.

அத்தனைத் தங்கைகள் இருந்த பொழுதும், அவன் ஒழுங்காய் இருந்தால் போதும். என பெண் பார்த்து மணம் முடித்தார்கள். ஒரு பெண் குழந்தை பிறந்தது. குடும்பம் கோருகிற ஒழுங்குக்கு கட்டுப்பட மறுத்தான். சில ஆண்டுகளிலேயே உறவு முறிந்தது.

இன்னும் மோசமானான். குடி. குடி. பார்க்கும் சொந்தங்களிடம் தயங்காமல் பணம் கேட்பான். வேலைக்கு போவது குறைந்தது.

சென்னைக்கு நான் இடம் பெயர்ந்ததும்… அவனைப் பற்றிய செய்திகள் எப்பொழுதாவது யாராவது சொல்வார்கள். அப்படி இந்த முறையும் செய்தி ஒன்றைச் சொன்னார்கள். இந்தச் சித்திரைத் திருவிழாவில் திருவோடு ஏந்தி பிச்சை எடுப்பதை சொந்தங்கள் சிலர் பார்த்திருக்கிறார்கள்.

அவனை அந்த நிலையில் பார்த்த உறவுக்கார பெண் "உழைக்காமல்... குடும்பத்தை கேவலப்படுத்துற மாதிரி சொந்த ஊரிலேயே இப்படி பிச்சை எடுக்குகிறேயே!" எனத் திட்டியதும் ஒரு புன்சிரிப்புடன் கடந்து சென்றுவிட்டானாம்.

உறவுகளில் பல மனிதர்கள் பொருளாதாரத்தின் பல படிக்கட்டுகளில் வாழ்ந்தாலும்.. நகரம் எங்கிலும் நிறைய மனிதர்கள் கையேந்துவதை பார்த்துக் கொண்டிருந்தாலும். முதன்முறையாக 40+ல் நம்மோடு வாழ்ந்த சக வயது மனிதன் ஒருவன் பிச்சை எடுக்கிறான் என கேள்விப்பட்டதும் பெரும் துக்கத்தை தருகிறது.

ஒரு மனிதனின் வீழ்ச்சி பல சிந்தனைகளை கிளர்ந்தெழ செய்கிறது.

July 19, 2021

ஒரு உறவின் மேல் கத்திமுனையில் எப்படி நடப்பதென அஞ்சுகிறவரா நீங்கள்?


ஒரு உறவின் மேல்

கத்திமுனையில் எப்படி நடப்பதென
அஞ்சுகிறவரா நீங்கள்?

வாருங்கள்
நான் உங்களுக்கு
கத்திமுனையில் நடக்க
கற்றுத்தருகிறேன்

இனியதோ கசப்பானதோ
பழையதெதையும்
நினைவுபடுத்தக்கூடாது

பழைய உரிமைகளை
புதிய காலத்தில்
புதுப்பிக்க முயலக்கூடாது

நமது எல்லா சாகசங்களும்
ஒருவருக்கொருவர்
நன்கு தெரியும் என்பதால்
அவற்றை மீண்டும்
நிகழ்த்தகூடாது

ஒருமை பன்மை அழைப்புகளை
அனாவசியமாய்
குழப்பிக்கொள்ளக்கூடாது

அந்தரங்கமான ஒரு சொல்
அல்லது ஒரு ரகசிய அறையை
திறப்பபதற்கான சொல்
அதை ஒருபோதும்
பயன்படுத்தலாகாது

சம்பிரதாயமான
அல்லது நம்மைப்பற்றியல்லாத
எவ்வளவோ இருக்கின்றன
இந்த உலகில் உரையாட
அதைத்தான் நாம் பேசவேண்டும்
சந்திப்புகள் உரையாடல்கள்
எவ்வளவுகெவ்வளவு
குறைவான நேரத்தில் இருக்கிறதோ
அவ்வளவுக்கவ்வளவு நல்லது

பெரும்பாலும் பரிசுகளை
தவிர்ப்பது நல்லது
அவை உள்ளூர விரும்பப்படுவதில்லை

கடந்த காலம்போலவே
எதிர்காலம் பற்றியும் பேசாமலிப்பது நல்லது
மாறாக
நாம் அருந்திக்கொண்டிருக்கும்
காஃபியைப்பற்றிப் பேசலாம்
அல்லது புதிதாக வாங்கிய ஷீவின் விலைபற்றி
ஏன் ரூமியைப்பற்றிக்கூட பேசலாம்
நாம் ஏற்கனவே
கத்திமுனையில் நடந்துகொண்டிருப்பதால்
எதைப்பற்றியும்
கூர்மையான அபிப்ராயங்களை
தவிர்ப்பது நல்லது

எதைப்பற்றிப் பேசினாலும்
அதை மழுங்கடிப்பது நல்லது
அதை நீர்த்துபோகச் செய்வது நல்லது

எவ்வளவு எச்சரிக்கையாக நடந்தாலும்
நாம் நடப்பது கத்திமுனையில் அல்லவா
ஒரு எதிர்பாராத தருணத்தில்
குறுவாளின் பிடி நழுவி
நம் நெஞ்சில் இறங்கும்
நாம் ரத்தம் சிந்துவதைக் காட்டிக்கொள்ளக்கூடாது

வலி பொறுக்காமல்
கண்ணில் தளும்புவதை
ஒருபோதும் வெளிப்படுத்தக்கூடாது
ஒரு உறவில் கத்தி முனையில் நடக்கும்போது
அந்தப்பாதை
அவ்வளவு நீளமாக இருக்கிறது
ஓரடி எடுத்து வைப்பதற்குள்
ஒரு பருவம் போய்விடுகிறது
ஒரு வயது போய்விடுகிறது

24.6.2021
இரவு 10.52
மனுஷ்ய புத்திரன்

அன்புள்ள அப்பாவிற்கு,


தங்கள் அன்பு மகன் எழுதிக்கொள்வது, உங்களுக்கும் கடிதம் எழுதிவிட்டால் இப்போதைக்கு என் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்துவிடும். உங்களுக்கு முதல் கடிதமாக எழுத எனக்கு விருப்பமில்லை. அதற்கு இரண்டே காரணங்கள்தான்.

ஒருவேளை இக்கடிதம் பெரிதாக, நீண்டு செல்லலாம்.
இக்கடிதம் உங்களுக்கு முதல் கடிதம் அல்ல.

நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஏற்கனவே நான் உங்களிடம் இரு கடிதங்கள் கொடுத்திருக்கிறேன். பத்திரமாக இருக்கும் என நம்புகிறேன். இன்னும் 2 கடிதங்கள் எழுதினேன். அவை உங்களை வந்து சேரவில்லை.

சரி. பழந்கதைகளை விட்டுவிட்டு இப்போது கடிதத்தைத் தொடர்கிறேன். உங்களிடமும் சில எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள ஆவல். அவ்வளவே!
என்னைச் சிறப்பானவனாக வளர்த்தெடுக்க நீங்கள் விருப்பம் கொண்டிருப்பீர்கள். அதன்படியே என்னையும் வளர்த்திருக்கிறீர்கள். நான் அவ்வாறே வளர்ந்தேனா? என்பதெல்லாம் தனி.

கொஞ்சம் வருத்தம் என்னுள்ளும் தொக்கி நிற்கிறது அப்பா! நீங்கள் பெருமிதம் கொள்கிறபடி ஏதாவது நிகழ்த்தவேண்டும் என்கிற ஆவல் மட்டும் பல ஆண்டுகளாக என் மனதுள் கொதித்து எழுந்து அடங்கவே மறுக்கிறபடி, திமிறுகிறது.

என்ன வார்த்தைகளையெல்லாம் இன்னும், இன்னும் இட்டு என் நிலையை உங்களிடம் சொல்வதெனத் தெரியவில்லை. ஆனாலும் என் நிலை உங்களுக்கு கொஞ்சமேனும் புரிந்திருக்கும்.

என் வாயிலிருந்து சில வார்த்தைகளாவது வெளியே கேட்காதா? என நீங்கள் எண்ணும்படியாக பலவேளைகளில் நான் (மௌனம் சாதித்தபடி ) நடந்துகொண்டிருக்கிறேன். பொறுத்தருளவும்.

ஆனால் உங்களிடம் நான் பேச நினைக்கும் எல்லாவற்றையும் உங்கள் எதிரில் பேச இயலவே இல்லை. உங்கள் மேல் எனக்கு பயமா? என்றால் இல்லை. இல்லவே இல்லை என உறுதியுடன் கூறிக்கொள்வேன்.

என் அப்பாவின் மேல் எனக்கு பயம் கிடையாது. மற்றவர்களை விட மரியாதை உங்கள் மேல் எனக்கு அதிகம். நான் உங்களிடம் அதிகம் பேசாமல் இருந்தாலும், உங்கள் அறிவுரைகளை நீங்கள் தந்துகொண்டேதான் இருக்கிறீர்கள். அதை நான் ஒருபோதும் மறந்ததில்லை. ஆனால் செயல்படுத்த முடியாமல் பலவேளைகளில் திணறியிருக்கின்றேன். நீங்கள்தான் என்னை அதிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

உங்கள் வளர்ப்புமுறை குறித்து பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். காரணம் எனது அணுகுமுறையாக இருக்கலாம். எனது நடத்தையாக இருக்கலாம்.
எப்போதெல்லாம் எனக்கு கண்டிப்பு தேவைப்பட்டதோ, அப்போதெல்லாம் வழங்கினீர்கள். எனது திறமையின் எல்லைவரை மட்டுமே உங்கள் கண்டிப்பு சென்றது. வீணாக உங்கள் விருப்பங்களை என் மேல் நீங்கள் திணித்ததே இல்லை. எனவே நீங்கள் உன்னதமானவர்.

தம்பிக்கு அதே அளவு அறிவுரை சரியான தருணத்தில் கிடைக்கவில்லையென்று நினைக்கிறேன். உங்களுக்கு இன்னும் தருணம் இருக்கிறது. அவன் இன்னும் உயரம் எட்ட நீங்களும் அவசியம்.
என் மேல் நானே கொள்ளாத நம்பிக்கை கொண்டிருக்கிற மனிதர் இந்த உலகத்தில் உண்டென்றால், அது நீங்களாகவே இருக்கமுடியும். நான் எப்படி என்னை வடிவமைக்கவேண்டும் என நானே சிந்திக்க நீங்கள்தான் காரணமாய் இருந்துள்ளீர்கள்.

உங்களை உங்கள் அப்பா (என் பாட்டனார்) எப்படி வளர்த்தார் என்பதை நீங்கள் கூறவும், உங்களைவிட வயதில் மூத்தவர்களான பலரும் கூறக் கேட்டிருக்கிறேன். உங்கள் வளர்ப்புமுறைகள் அதன் காரணமாகவே என்னை ஆச்சர்யப்படுத்துகின்றன.

யாராவது பேசிக்கொண்டிருந்தால், அவர்களின் வார்த்தைகளைக் கொண்டே அவர்களை மடக்கினால் அவர்களிடம் உங்கள் தொழில் குறித்தும், இன்னாரின் மகன் நான் என்றும் வார்த்தைகள் விழும். எனக்குத் தெரியும். நீங்கள் எந்த தொழில் செய்திருந்தாலும், உங்கள் நாவின் வன்மை அப்படித்தான் இருந்திருக்கும்.

நான் என்ன மாதிரியான புத்தகங்கள் படிக்கவேண்டும் என தீர்மானித்தீர்கள். எனக்கு சிறந்த வாசிப்பு அனுபவங்களைத் தந்தீர்கள். எப்போதும் அதை நான் மறக்கவே மாட்டேன்.

நான் நாளிதழ்களை எழுத்துக் கூட்டி படித்துப் பழகுகிறபோது எனக்கு தெரிந்து நான் 2 அல்லது 3-ம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பேன். இப்போதும் ஆச்சர்யமாக இருக்கிறது.

ஒரு நாளிதழின் எந்த செய்தியை ஆழமாகப் படிக்க வேண்டும்? எதை கவனிக்க வேண்டும்? எதை ஒதுக்க வேண்டும்? செய்திகளின் உள் அர்த்தம் என்ன? எதுதான் நடுநிலைத்தன்மை? எப்படி ஒரு செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும்? ஒரு வார இதழை எப்படி படிக்க வேண்டும்? எதை நினைவில் கொள்ளவேண்டும்? எதை தூர ஓட்ட வேண்டும்? வியாபார உத்திகள், சமகால அரசியல், வாழ்வியல், சமூகம் ……ம்ம்ம்ம் இன்னும் இன்னும் எவ்வளவோ…?? சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். சாதாரணமாக எந்த பிள்ளைக்கும் ஒரு தந்தை இப்படியெல்லாம் சொல்லமாட்டார் என நினைக்கிறேன்.
இதை எளிதாக சில ஆண்டுகளுக்கு முன் உணர்ந்தேன். சிலருக்கெல்லாம் ஏன் நாளிதழ்களைப் படிக்க வேண்டுமென்றே தெரியவில்லை. சிலரோ தேவையற்ற செய்திகளில் நாட்டம் கொண்டு நேரம் போக்கியதைக் கண்டிருக்கிறேன். அந்த வகையிலும் உங்களுக்கு நன்றி. நீங்கள் யார்க்கும் வாய்க்காத ஒரு அப்பா!

உங்கள் அரசியல் கொள்கைகள் யாவையும் என்னை பத்தாம் வகுப்பு படிக்கிறவரையில் நெருங்கவே இல்லை. அதன்பின் நான் படித்த புத்தகங்கள்தான் என்னை மாற்றியிருக்கும் என நினைக்கிறேன். நன்றி. எப்போதுமே இந்த புத்தகத்தைப் படி/வாங்கு என நீங்கள் சொன்னதே இல்லை.
எனக்கான சுதந்திரத்திற்கான எல்லைகளை என் வயது ஏற, ஏற அதிகரித்துக்கொண்டே போனீர்கள். அதேஅளவு என் வயது ஏற, ஏற உங்கள் மீதான எனது விருப்பமும் அதிகரித்துக் கொண்டேதான் இருந்தது.
நான் என் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறபோதெல்லாம் உங்கள் முகம் போல் எனக்கு தோன்றுகிறதே இல்லை. எனக்குத் தெரிய, என் நடவடிக்கைகள் உங்களைப் போல இல்லவே இல்லை. ஆனாலும் உங்களைப் போல நான் உருவத்தில் இருக்கிறேன் என்றும், உங்களை என் செய்கைகளினால் நான் பிரதிபலிக்கிறேன் என்று ( உங்களை நன்கு அறிந்த ) பிறர் கூறுகையில் வியப்பைத் தவிர எனக்கு வேறேதும் தோன்றுவதே இல்லை.
உன் தந்தையால் தான் இன்று சிறப்பாக இருக்கிறேன் எனக் கூறுகிறவர்களைக் கண்டிருக்கிறேன். பேசியிருக்கிறேன். அதனால் ஆச்சர்யப்பட்டும் போயிருக்கிறேன். எத்தனை விதமான ஆட்களைப் பழகி வைத்துள்ளீர்கள்? எத்தனை எத்தனை அனுபவங்களைக் கொண்டிருக்கிறீர்கள்? எனக்கெல்லாம் அப்படி அமையுமா? என காத்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் என்னோடு பேசுகிற பொழுதும் ஆச்சர்யம்தான்! உங்களோடு பதினைந்து நிமிடங்கள் பேசினால் ( அதாவது நான் உங்கள் பேச்சைக் கேட்டால்!! ) என்னால் குறைந்தபட்சம் 5-6 பதிவுகள் எழுத முடியும். அவ்வளவு பேசியிருக்கிறீர்கள். அவ்வளவு தெரிந்து வைத்துள்ளீர்கள்.
என் ஆவலெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நான் உங்களை விட அதிக புகழ் பெற வேண்டுமென்று உங்கள் விருப்பம் இருக்கும். அது இயற்கைதான். ஆனால் எனக்கோ உங்கள் அளவாவது அனுபவங்களும், நண்பர்களும், புகழும் கிடைக்க வேண்டும். அதற்கு நான் உழைக்க வேண்டும்.
நம் சுற்றத்தார் எல்லோரையும் கணக்கில் எடுத்தால் நீங்கள் மட்டும் தனித்து தெரிவீர்கள்! உங்கள் கொள்கைகள் மீது மற்றவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், உங்கள் மேல் யாரும் குறை சொன்னதாக அறியவில்லை. ஏனெனில் உங்களின் குணத்தால், மனத்தால் அந்த பெயரை ஈட்டியிருந்தீர்கள். நான் உங்கள் அளவிற்கு கடவுள் மறுப்பு கொள்ளவில்லை என்றாலும் மூட நம்பிக்கைகளை வெறுக்கிற அளவில் நானும் உங்கள் பாதையில் செல்கிறேன்.
பணத்தை விட குணத்தில் சிறந்த மனித மனங்கள்தான் வாழ்க்கைக்குத் தேவை என புரியவைத்திருக்கிறீர்கள். எனக்கு கிடைத்த தோழர்களை எண்ணி மகிழ்கிறேன்.

இன்னும் இன்னும் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் உங்களிடம் பகிர்வதற்கு என்னிடம் எண்ணங்கள் இருக்கின்றன. தந்தை-மகன் (உறவின் மேன்மை) குறித்து வள்ளுவரும் சில குறள்களைக் கூறியுள்ளார். அதையெல்லாம் இங்கே இட்டு நிரப்பி உங்களை மேலும் புகழ்ந்து……ம்ம்ம்ம். போதும். அதெல்லாம் தேவையே இல்லாதவை. அதைவிட மோசமானதாக வேறேதும் இல்லை. நான் அதிகம் உங்களுக்கு எழுதுவதைவிட, உங்களிடம் பேசுவதற்கே விரும்புகிறேன். அதைத்தான் நீங்களும் விரும்புவீர்கள் என எனக்கும் தெரியும். உங்களோடு மனம்விட்டு, அச்சம்விட்டு, உள்ளத்தில் எழுகிற சொற்களையெல்லாம் வெளித்தள்ளிப் பேசுகிற அந்த நாள் எந்நாளோ? தெரியவில்லை. ஆனாலும் நாம் இருவரும் பேசித்தான் ஆகணும்!
இதிலுள்ளவையெல்லாம் கொஞ்சம்தான். எழுத நினைத்தவை இன்னும் அதிகம். உங்கள் பதில் கடிதம் நான் எதிர்பார்க்கமாட்டேன். நீங்கள் என்னிடம் தொலைபேசியிலேயே பேசினால் பொதும் உங்கள் குரல் என்னை எந்நாளும் வழிநட்த்தும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனக்கு அதுவே போதும்.
இப்படிக்கு,

உங்கள் அன்பு மகன்

- இணையத்தில் இருந்து.... 

April 29, 2020

அறிவின் சாபம்


குவாண்டம் மெக்கானிக்ஸ் பற்றி அரை மணி நேரம் விவரித்த பின்னரும் கேட்டவருக்கு ஒரு எழவும் புரியவில்லை என்றால் ‘இது கூட புரியாதா’ என்று பேசியவருக்கு கோபம் வருகிறது. எக்ஸல் ஷீட்டில் போன மாத விற்பனை டேட்டாவை ஏற்றி கம்பெனி யின் டீலர்கள் செயல்பாட்டை டிசெண் டிங் ஆர்டரில் தயாரிக்கும் விதத்தை எக்சல் தெரியாத ஊழியரிடம் விளக்கி அதை அவர் சரியாய் செய்யாத போது அவரை பெஞ்சில் நிற்க வைத்து பிரம்பால் அடிக்கத் தோன்றுகிறது.

இந்த கோபங்களுக்குக் காரணம் ஒரு சாபம். கேட்டவர்களுக்கு அல்ல. கூறியவர்களுக்கு. பெயர் ‘அறிவின் சாபம்’ (Curse of Knowledge).

நமக்குத் தெரிந்த ஒன்று மற்றவருக்குத் தெரியாமல் இருக்கும் போது அதைப் பற்றி நமக்குத் தெரியாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை மறக்கிறோம் பாருங்கள், அதுதான் அறிவின் சாபம். இந்த வியாதியினால் உங்களுக்கு தெரிந்த ஒன்றைப் பற்றி மற்றவரின் கோணத்திலிருந்து பார்க்க மறுக்கிறீர்கள். அதை அவருக்கு புரியும்படி கூற தவறுகிறீர்கள். அறிவின் சாபத்தால் உங்களுக்குத் தெரிவது மற்றவருக்கும் தெரிந்திருக்கும் என்று கருதி நீங்கள் சொல்வது அவருக்குப் புரியும், புரிந்துவிடும் என்று முடிவு செய்கிறீர்கள். அவருக்குப் புரியாத போது அவர் மீது கோபம் கொண்டு சபிக்கிறீர்கள். சாபம் உங்கள் அறிவைத் தான் பீடித்திருக்கிறது என்பதை மறந்து!

காலின், ஜார்ஜ் மற்றும் மார்டின் என்ற பொருளாதார நிபுணர்கள் தான் ‘Journal of Political Economy’ என்ற ஜர்னலில் ‘The Curse of Knowledge in Economic Settings’ என்ற கட்டுரையில் இக்கோட்பாட்டை முதலில் படைத்தார் கள். தங்கள் பொருளின் அதிக தரத்தை அறிந்திருக்கும் கம்பெனிகள் அதன் தரத்திற்கேற்ப அதிக விலை நிர்ணயிக் கிறார்கள். தங்களுக்குத் தெரிந்திருக்கும் தரம் வாங்குபவர்களுக்கும் தெரியும், சொன்னால் புரியும் என்று நினைக் கிறார்கள். ஆனால் அதை உணராது விலை அதிகம் என்று அப்பொருளை வாடிக்கையாளர்கள் ஒதுக்கும் போது கம்பெனிக்காரர்கள் கோபப்படுவதை அறிவின் சாபம் என்று வர்ணித்தார்கள்.

அதே போல் தரம் குறைந்த பொருளை விற்கும் போது கம்பெனிகள் விலையை குறைத்து விற்பதும் அறிவின் சாபத்தால். பொருள் விலை அதன் தரத்தையும் அதை தெரியாதவர்கள் அறியாமையையும் சார்ந்து அமைகிறது என்கிறார்கள்.
மனதில் ஆழமாய் பதிந்த உண்மை நிகழ்வை உணர்ச்சி பொங்கும் கதை யாக்கி, உணர்வோடு திரைக்கதை எழுதி ஒவ்வொரு சீனையும் செதுக்கி சிலை போல் வடித்து பெரும் எதிர் பார்ப்புடன் திரையிட்ட படத்தை மக்களும் விமர்சகர்களும் ஒதுக்கித் தள்ளும் போது படத்தின் இயக்குனருக்கு ஏற்படும் கோபமும் அறிவின் சாபமே.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்ட பின் அது தெரியாமல் இருந்த மன நிலையை மீண்டும் நினைத்துப் பார்க்க முடிவதில்லை. இதுவே அறிவின் சாபத்திற்கு ஆதாரம்!

இதை ஆய்வு மூலம் விளக்கி பிஎச்.டி பெற்றார் ஸ்டான்போர்டு பல் கலைக்கழகத்தின் ‘எலிசபெத் நியூடன்’. ஆய்வில் கலந்துகொண்டவர்களை ‘தட்டுபவர்’, ‘கேட்பவர்’ என்று இரண் டாகப் பிரித்தார். தட்டுபவரிடம் பிரபல பாடல் ஒன்றை மனதிற்குள் பாடிக் கொண்டே டேபிளில் அதற்கேற்ப தாளம் போடச் சொன்னார். கேட்பவரிடம் தட்டப் படும் தாளத்தை கொண்டு அது எந்த பாடல் என்பதை கூறுங்கள் என்றார். பாடல் என்றால் பாடாவதி படத்தில் யாருக்கும் தெரியாத பாடல் அல்ல. ரொம்பவே பாப்புலரான பாடல்கள்.
ஆய்வில் கலந்துகொண்டவர்கள் மொத்தம் 120 பேர். அனைவரும் மனதில் பாடலை பாடிக்கொண்டே டேபிளில் தாளம் போட அது எந்த பாடல் என்று சரியாய் கூறியவர்கள் மூன்று பேர் மட்டுமே! 120க்கு மூன்று. அதாவது 2.5% முறை தான் சரியான விடையளிக்கப்பட்டது.

தாளம் போடும் போது அதற்கான பாடல் தட்டுபவர் மனதில் மட்டுமே ஒலிக்கிறது. கேட்பவருக்குத் தாளம் தான் கேட்குமே ஒழிய பாடல் கேட்பதில்லை. டேபிளில் தட்டும் ஓசை அவருக்கு யாரோ கதவை தட்டுவது போல்தான் இருக்கிறது. மிஞ்சிப் போனால் ‘யாருப்பா வாசல்ல’ என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் மனதில் பாடிக்கொண்டே தட்டுபவருக்கு இத்தனை ஈசியான பாட்டு தெரியாதா என்று கோபம் வருகிறது. ‘செவிட்டுப் பொணமே, நான் தட்ற பாட்டு தெரியல? உன் மூஞ்சியில தொங்கறது காதா, காஞ்சு போன கருவாடா’ என்று கத்தத் தோன்றுகிறது.

இது ரொம்பவே குழந்தைத்தனமான ஆய்வு போல் தெரிகிறதா? யாராவது உங்களிடம் சிக்கினால் நீங்களும் மனதில் பாடிக்கொண்டே தாளம் போட்டு பாருங்கள். கேட்டவர் என்ன பாடல் என்று தெரியாமல் முழிக்கும் போது உங்களுக்கும் அசாத்திய கோபம் வருவதை உணர்வீர்கள்.

பாடலை மனதில் பாடும் நமக்கு அது என்ன பாடல் என்று தெரியவில்லை என்றால் மற்றவருக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பதில்லை. நினைத்துப் பார்க்கவும் முடிவதில்லை. நம் அறிவே நமக்கு சாபம் இடுகிறது. நமக்குத் தெரிந்த அறிவை மற்றவருடன் பங்கிட முடிவதில்லை. ஏனெனில் நம் மனநிலையை அவர் மனதில் உருவாக்க நம்மால் முடிவதில்லை.
இந்த தட்டுபவர்-கேட்பவர் கதை தினம் நம் வாழ்க்கையிலும் வியாபாரத் திலும் வெகு விமரிசையாக நடக்கிறது. பள்ளியில் டீச்சர் தட்டும் தாளம் மாண வர்களுக்கு புரிவதில்லை. விளம்பரத் தில் மார்க்கெட்டர் தட்டும் ஒசை வாடிக்கையாளர்களுக்குப் புரிவ தில்லை. அலுவலகத்தில் மேலாளர் தட்டும் ஒலி ஊழியர்களுக்குப் புரிவதில்லை. இவ்வளவு ஏன், வாராவாரம் இப்பகுதியில் நான் தட்டுகிறேன், உங்களுக்கு ஏதாவது புரிகிறதா!

இக்கோட்பாட்டை இன்னமும் கூட எளிமையாக விளக்குகிறார் உளவியாளர் ‘டாம் ஸ்ட்ரேஃபோர்ட்’. ‘உங்கள் மனதின் எழும் எண்ணங்களை எழுதி விட்டு அதை சரி பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் எழுதிய வார்த்தைகளில் தவறு இருந்தால் அது உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. ஏனெனில் நீங்கள் எழுதியதை படிக்கும் போது அதன் அர்த்தம் மட்டுமே உங்கள் அறிவில் படுகிறதே ஒழிய வார்த்தைகளில் இருக்கும் தவறுகள் கண்ணில் படுவதில்லை.!

வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் வெறுமனே டேபிளில் தட்டிக்கொண்டே இருந்தால் பத்தாது. கேட்பவரின் காதுகளாக உங்கள் காதுகளை பாவியுங்கள். அறிவின் சாபத்திலிருந்து மீள நம் அறிவை சாபம் பீடித்திருக்கும் என்பதை உணருங்கள்.

போதையில் இருப்பவனை ஸ்டெடியாய் இருக்கிறோம் என்று எப்படி அவன் போதையே அவனை தவறாய் நினைக்க வைத்து வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு போய் சேரும் அசட்டு தைரியத்தை தந்து அவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கிறதோ அதே போல் நம் அறிவும் அதை பீடித்திருக்கும் சாபமும் நம் கண்களை மறைக்கும் என்பதை உணருங்கள். இதை உணர்ந்தாலே பாதி சாப விமோசனம் கிடைக்கும். மீதிக்கு மட்டுமே கொஞ்சம் மெனெக்கெட வேண்டியிருக்கும்!

- சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

July 12, 2018

அதிகாலை – சில குறிப்புகள்


அதிகாலையில் உணரும் குளிர்ச்சி

இரவு கூட உணரமுடிவதில்லை!
சில ஆண்கள் கூட
வாசல் தெளித்து கோலமிடுகிறார்கள்!

அதிகாலையில் உணரும் குளிர்ச்சி

ஐந்து மணிக்கும் மனிதர்கள்
செல்பேசுகிறார்கள்!
தங்கள் கனத்த உடல்களை தூக்கிகொண்டு
மெதுமாய் ஓடுகிறார்கள்!
சத்தமாய் அரசியல் பேசிக்கொண்டே
நடைபயில்கிறார்கள்.

இன்றைக்கு என்ன குழம்பு,
என்ன காய்கறி வாங்குவது
போன்ற சிரமம் ஏதுமில்லை.
எந்த குழம்பு வைத்தாலும்
என் பொண்ணு
’என்னப்பா’ என அலுத்துக்கொள்கிறாள்.

இன்றைய செய்தித்தாளில்
பொம்மை அரசனின் சிரிப்பும்
சில கைது நடவடிக்கைகளும்
இருக்க கூடாது என எதிர்ப்பார்ப்புகளுடன்
எனது காலை துவங்குகிறது!

June 19, 2018

மோடி நான்காண்டு சாதனைகள் : நம்பிக்கை!

ஒரு வயதான தாய். கணவனை இளம் வயதிலேயே இழந்தவள். அண்ணனின் பராமரிப்பில் வாழ்ந்தாள். அண்ணன் இறந்த பிறகு. அண்ணனின் மகன் தன் வருமானத்தில் தன் குடும்பத்தையே கவனிக்க முடியாத நிலையில்... அத்தை சுமையாகிறாள். தன் வாழ்வை, தன் சாவை தானே பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதை உணர்கிறாள்.

அருகில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்கிறாள். தன் தேவையை சுருக்கிகொண்டு சிறுக சிறுக சேமிக்கிறாள்.

ஒரு மழைநாள் இரவில் மோடி 500, 1000 நோட்டுக்களை செல்லாது என தொலைக்காட்சியில் அறிவிக்கிறார். மருமகன் போய் நிலைமையை விளக்கி சேமித்து வைத்த பணத்தை மாற்றித்தர கேட்கிறார்.

நம்பிக்கையற்ற நிலையில் மருமகன் பொய் சொல்வதாக நினைத்து தர மறுக்கிறார். தன் வாழ்நாளில் செல்லாது என அறிந்ததேயில்லை அந்த தாய். பிரதமரை நம்புகிறார்.

பனி விழும் ஒரு நாளில் அந்த தாய் மரித்துப்போகிறார். அந்த தாயின் சுருக்குப் பையில் 63 - ஐநூறு தாள்களும் அவள் உடலில் உள்ள சுருக்கங்களை விட அதிக சுருக்கங்களோடு இருந்தன.

காலம் கடந்துவிட்டதால்... அந்த பணத்தாள்கள் வெற்றுதாள்களாகிவிட்டன!

இறுதியில் பிரதமரும் அந்த தாயை ஏமாற்றிவிட்டார். நல்லவேளை அந்த உண்மையை அறிய அந்த தாய் உயிரோடு இல்லை! 

#உண்மை சம்பவம்



😢

Eight Below (2006) - மரண போராட்டம்!

எங்கு பார்த்தாலும் உறைபனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகா மலைப் பிரதேசம். அங்கு ஆராய்ச்சிக்கு வருபவர்களுக்கு, ஜெரி உதவுகிற வேலை. அங்கு போய்வர வண்டி எதுவும் பயன்படுத்த முடியாத நிலை. ஆகையால், ஜெரியால் பயிற்சி கொடுக்கப்பட்ட, சுறுசுறுப்பான எட்டு நாட்கள் போய்வர உதவுகின்றன.

மெர்க்குரியிலிருந்து விழுந்த கல்லைத்தேடி, ஆய்வுக்கு வருகிறார் ஒரு விஞ்ஞானி. காலநிலை சரியில்லை என ஜெரி தயங்குகிறான்.. நிர்வாகம் அழுத்தத்தால், வேறு வழியில்லாமல் அரைகுறை மனதோடு அழைத்து செல்கிறான். அந்த பயணத்தின் பொழுதே, புயல் வந்து கொண்டிருப்பதாகவும் உடனே திரும்பும்படியும் உத்தரவிடுகிறார்கள்.. ரிஸ்க் எடுக்காமல் எதுவுமில்லை என ஜெரியிடம் பேசி, அரைநாளில் கல்லைத் தேடி எடுத்துவிடுகிறார். இந்த பயணத்தில் இரண்டுமுறை விஞ்ஞானியின் உயிரை, ஜெரியும், நாய்களும் காப்பாற்றுகிறார்கள். தட்டுத்தடுமாறி வந்து சேருகிறார்கள். புயல் நெருங்கிவிட, அங்கிருந்த அத்தனை பேரையும் அழைத்துக்கொண்டு செல்ல விமானம் தயாராய் நிற்கிறது. நாய்களுக்கு விமானத்தில் இப்பொழுது இடமில்லை. பிறகு வந்து கூப்பிட்டுக்கொள்ளலாம் என ஆறுதல் சொல்கிறார்கள். நாய்களோடு தானும் அங்கிருப்பதாக சொல்கிறான். அது உயிருக்கு ஆபத்து என அவனை அழைத்து செல்கிறார்கள்.

இதுவரை வராத புயல் இப்பொழுது தாக்க, காலநிலை மிக மோசமடைகிறது. நாய்களை அழைத்துவர விமானம் கேட்கிறான். போய்வருவதற்கு சாத்தியமேயில்லை என சொல்லிவிடுகிறார்கள். நாய்களை காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சியில் நிம்மதியில்லாமல் அலைகிறான். மீட்டு வர பல்வேறு வகைகளில் முயன்றும். எதுவும் பலனனிக்க வில்லை. நாட்கள் மெல்ல மெல்ல நகருகின்றன. அந்த உறைபனி குளிரில், புயலில் நாய்கள் வாழ்வதற்காக போராடுகின்றன. 

அந்த நாய்கள் உயிர் பிழைத்தனவா? ஜெரி நாய்களை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெற்றானா என்பது மீதி முழுநீள கதை!

***
பாதிப்படத்திற்கு மேலாக பனிப்பிரதேசத்தில் தான். நம்மால் அந்த கடுங்குளிரை உணரமுடிகிறது. அந்த குளிரில் நாய்களின் உழைப்பு, போராட்டம் என மொத்த படத்தையும் அந்த எட்டு நாய்கள் தாங்கி நிற்கின்றன. ஜெரிக்கு அந்த நாய்களுடான பிணைப்பையும் அருமையாக நம்மால் உணரமுடிகிறது. 

அவர்கள் விட்டு சென்ற பிறகு, வீசும் காற்றில் அவர்களின் கொடி அறுந்து கீழே விழும். ஒரு நாய் ஓடி சென்று, அதை கடித்து குதறும். "உங்களுக்காக நாயா உழைச்சமே, அந்த நன்றி உணர்வு கொஞ்சம் கூட உங்களுக்கு இல்லையேன்னு!" சொல்வது போல தோன்றும்.

சிறு வயதில் பக்கத்துவீட்டில் ராணி என்றொரு அருமையான நாய் ஒன்று இருந்தது. என் மொத்த வாழ்விலும் அதோடு மட்டும் தான் எனக்கு நெருக்கம் இருந்ததாக உணர்கிறேன். மற்றபடி, நாய்கள் என்றால் எப்பொழுது எனக்கு பயம் உண்டு. காரணம். கடித்தால், வயிற்றைச்சுட்டி 16 ஊசி போடவேண்டும் என சுற்றி உள்ளவர்கள் எப்பொழுதும் பயமுறுத்திக்கொண்டே இருந்திருக்கிறார்கள். நமக்கு ஊசின்னா ரெம்ப பயம். 

எங்கள் வீட்டில் எப்பொழுதும் நாய் வளர்த்ததில்லை. அம்மாவிடம் ஆவலாய் எப்போதாவது சொன்னால், உங்களை வளர்க்கிறதே பெரும்பாடா இருக்கு! இதில் நாய் வேற! என்பார்.

இந்தப்படத்தைப் பற்றி நாய் வளர்ப்பவர்கள் எழுதியிருந்தால் இன்னும் உணர்வுபூர்வமாக எழுதியிருப்பார்கள் என நம்புகிறேன்.

இது உண்மையில் நடந்த கதை என்கிறார்கள். 1983-ல் அண்டார்டிகா என்ற பெயரில் ஜப்பானிய படம் ஒன்று வந்திருக்கிறது. அதுவும் இணையத்தில் கிடைக்கிறது. மற்றபடி அந்த படத்தில் இறுதியில் உயிரோடிருந்த நாய்களின் எண்ணிக்கையும், இந்த படத்தில் உயிரோடிருந்த நாய்களின் எண்ணிக்கையும் வித்தியாசப்படுகிறது.

நான் தமிழில் பார்த்தேன். குழந்தைகளோடு பார்க்ககூடிய படம். பாருங்கள்.

January 21, 2016

நினைவுகள் தொலைகிற பொழுது!

உறவினர் ஒருவர் சிங்கப்பூர் நிறுவனத்தில் முதன்மை கண்காணிப்பாளராக (Chief Supervisor) சில ஆண்டுகளாக பணிபுரிகிறார்.  சென்னையை விட பல மடங்கு பரபரப்பான ஊர் சிங்கப்பூர்.   அவருக்கான வேலை கூட பத்து மணி நேரத்திற்கும் மேலே!  அவருக்கு கீழே பல பணியாளர்களை கண்காணிக்கிற வேலை!  எல்லாமும் சேர்ந்து ஒரு நாள் காலையில், வேலைக்கு கிளம்பும் பொழுது, மயங்கிவிழுகிறார். நினைவு திரும்பும் பொழுது, தன் துணைவியாரையே அடையாளம் தெரியவில்லை.   சிங்கப்பூரில் தங்க வைக்க அனுமதி, படிக்க வைக்க, பராமரிக்க என எல்லா சிரமங்களும் சேர்ந்து, அவருடைய எட்டு வயது பையனை தாத்தா பாட்டி தான் வளர்த்து வருகிறார்கள்.  சட்டென தனது பையன் நினைவுக்கு வந்து, ஊருக்கு போய் உடனே பார்க்கவேண்டும் என பரபரக்கிறார்.  பிள்ளையை பிரிந்து இருக்கும் ஏக்கம் நினைவு அடுக்குகளில் இருந்து மேலே வந்துவிட்டது!

மருத்துவமனையில் சேர்த்து சில நாட்கள் இருந்தார்.  ஊரில் இருக்கும் பரபரப்பு சிங்கப்பூர் மருத்துவத்தில்  இல்லை.  விமான பயணத்தில் ஏதும் பயமில்லை என மருத்துவரின் ஆலோசனை பெற்று சென்னைக்கு கடந்த ஞாயிறு வந்து சேர்ந்தார்.  மருத்துவர் சத்யாவிடம் இந்த பிரச்சனை குறித்து ஆலோசனை கேட்டதற்கு, சென்னை பொது மருத்துவமனை, வேலூரி சிஎம்சி, பாண்டிச்சேரி ஜிப்மர் என பரிந்துரைத்தார்.  உறவினரின் நண்பர்களோ  அப்பல்லோவை பரிந்துரைத்து, சேர்த்து நேற்றுவரை அங்குதான் இருந்தார்.

ஒருநாள் மருத்துவர் நயந்தாரா புகைப்படத்தை காட்டி யாரென கேட்கும் பொழுது, “இவளை நல்லா தெரியுமே! ரெம்ப பிடிக்குமே!” என சொல்கிறார். ஆனால் பெயர் நினைவுக்கு வரவில்லை. அடுத்தநாள், டி.ராஜேந்தர் புகைப்படத்தை காண்பிக்கும் பொழுது, “டி.ராஜேந்தர்” என நொடி கூட தாமதிக்காமல் சொல்லிவிடுகிறார். என்ன ஒரு சோகம் இது! நயந்தரா பெயர் மறந்துவிடுகிறது! டி.ராஜேந்தர் பெயர் நினைவில் நிற்கிறது.

பல விசயங்களையும், செய்திகளையும் சொல்லி அவரிடம் நிறைய விவாதிக்கவேண்டும் என மருத்துவர் ஆலோசனை சொல்லியிருக்கிறார். அவரின் இயல்போ பேசுவதை விட, செயல்படுவதில் தான்  ஆர்வமாய் உள்ளவர். நகைமுரண் தான்!

நினைவுகள் தான் வாழ்க்கை.  நினைவுகள் மூளையில் ஒரு மூளையில் ஒளிந்து கொள்கிற பொழுதோ, தொலைந்து போகிற பொழுதோ, முதலில் இருந்து துவங்க வேண்டுமோ?! எவ்வளவு பெரிய துயரமிது!

- சாக்ரடீஸ்

March 8, 2014

உழைக்கும் மகளிர் தினம் - அம்மா!

”என்னிடம் ஏதாவது நல்ல குணம் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அவைகள் என் அம்மாவிடமிருந்து வந்தவை!”

- என் திருமண ஏற்புரையில்!

அம்மாவோடு உடன்பிறந்தவர்கள் நாலு சகோதரிகள். அம்மா தான் மூத்தவர். தனது கணவனுடன் போட்ட சண்டையில் அம்மாவின் அம்மா ஒரு நாள் மருந்தை குடித்துவிட்டு செத்துப்போய்விட்டார்.  அம்மாவும், நான்கு சகோதரிகளும் பெரியம்மா வீட்டில் தான் வளர்ந்தார்கள்.

நெசவாளி குடும்பம்.  அம்மாவுக்கு 12 வயது இருக்கும் பொழுது அம்மாவின் அப்பாவும் உடல்நலக்குறைவில் இறந்துவிட்டார். நெசவுத் தொழிலை நம்பி, உழைத்து வளர்ந்தது அம்மாவின் குடும்பம்.

அம்மாவிற்கு திருமணம் முடியும் பொழுது வயது 18.. அப்பாவும் நெசவு தொழிலாளி தான்.  இரண்டு ஆண்டுகளில் தன் அம்மா வேலை பார்த்த மில்லில் வாரிசு அடிப்படையில் அப்பாவிற்கு வேலை கிடைத்தது.

சொத்தில்லை. எதுவும் சேமிப்பும் இல்லை. உழைத்தால் சோறு என்பது தான் யதார்த்தம்.  10 ஆண்டுகளில் 5 பிள்ளைகள்.  மூன்று பெண் பிள்ளைகள். இரண்டு பையன்கள்.(நான் கடைக்குட்டி)அப்பாவிற்கு குடிப்பழக்கம் தொற்றிக்கொண்டது. வேலைப்பார்த்த சம்பளத்தை குடித்தே செலவழித்துவிடுவார்.

அம்மாவின், அக்காகளின் உழைப்பில் வளர்ந்தது எங்கள் குடும்பம்.  எவ்வளவு சிரமம் வந்தாலும் சொந்தங்கள் வீட்டில் போய் அம்மாவும் உதவி கேட்டதில்லை. எங்களையும் நிற்க வைத்தவரில்லை.  பல நெருங்கிய சொந்தங்கள் யாரென்றே பல காலம் நாங்கள் அறிந்ததில்லை.

அபூர்வமாய் விசேச வீட்டிற்கு போனால், முக ஜாடையை வைத்து “ஜானகி பிள்ளையா நீ” என அடையாளம் காண்பார்கள்.  அம்மாவின் அடையாளத்தில் அறிமுகமாவதில் எனக்கும் சந்தோசம்.

எவ்வளவோ சிரமங்கள். அம்மா ஒருநாளும் புலம்பியதில்லை.  அழுததில்லை. சொந்தங்களின் விசேச வீட்டிற்கு போனால், அம்மாவின் வருகைக்காக காத்திருப்பார்கள்.  உழைப்பாளிகளின் வீடுகள் என்பதால், வேலைகளுக்கு யாரையும் வைக்கமுடியாது.  சொந்தங்களிடம் வேலை வாங்குவது என்பது சிக்கலான விசயம்.  அம்மா பலரையும் உழைப்பில் ஈடுபடுத்துவதை லாவகமாக செய்வார்கள். அம்மாவின் சொல்லுக்கு கட்டுப்படுவார்கள்.

எப்பொழுதும் உழைப்பை முழு மனதுடன் நம்பினார். அப்பா லாட்டரி வாங்கினால், உழைக்காத காசு உடம்பில் ஒட்டாது என்பார்! அம்மா கண்டிப்பானவர். அம்மாவின் அதட்டலுக்கே எல்லோரும் அடங்கிப்போவோம்.  எங்களை சுதந்திரமாகவும் இருக்கவும் அனுமதித்தார். நாங்கள் அறியாதவாறு கண்காணிப்பில் வைத்துக்கொள்வார்.

அம்மாவின் பட்டறிவில் அருமையாக விவாதிப்பார்.  அம்மாவிற்கும் எனக்கும் பொதுவான பல விசயங்கள் குறித்தும், பல நல்ல விவாதங்கள் காரசாரமாய் நடந்திருக்கின்றன.  அதனாலேயே அம்மாவிற்கும் எனக்கும் புரிதல் அதிகம்.  அப்பாவின் இறுதி நாட்களில் அப்பாவை மருத்துவமனையில் அருகில் இருந்து கவனித்துக்கொண்டேன்.  அப்பா இறந்த பிறகு நான் சடங்குகள் செய்ய மறுத்து சொந்தங்களுடன் விவாதித்துக்கொண்டு இருந்த பொழுது, அம்மா “அவனை விட்டுருங்கப்பா!  அப்பா முடியாம இருந்த பொழுது பார்த்தான்ல!” என்றார்.

ஒரு கட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் தான் முடிப்பேன் என சொல்லும் பொழுது அம்மாவிற்கு உடன்பாடு இல்லையென்றாலும், என்னை, என் கொள்கைகளை புரிந்து கொண்டு சரி என ஏற்று, என் திருமணத்தை நடத்திவைத்தார்.

எனக்கு அம்மாவை பிடித்ததைப் போலவே, சர்க்கரைக்கும் அம்மாவை பிடித்துபோய்விட்டது!  20 வருடங்கள். அம்மாவை உலுக்கி எடுத்துவிட்டது!  எதற்கும் கலங்காத அவரை, சர்க்கரை கலங்கவைத்துவிட்டது!  இருப்பினும் தன் துன்பங்களை எதிர்த்து போரிட்டதை போலவே, தன் நோயை எதிர்த்தும் இன்றைக்கும் போராடிக்கொண்டிருக்கிறார்.

அம்மாவின் உழைப்பிலும், உறுதியிலும் ஐந்து பிள்ளைகளில் என் பங்கான இருபது சதவிகிதத்தை பெற்றால் கூட நான் பெரும் பலசாலியாக என் வாழ்நாள் முழுக்க கம்பீரமாய் வாழ்வேன்!

எல்லோருக்கும் உழைக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்!

December 8, 2013

பெயர் தெரியாத பாட்டி!

எங்கள் வீட்டிற்கு நேர் எதிர்வீடு.  எங்கள் வீட்டு சாவியை அவர்களிடம் தான் கொடுப்பதும் வாங்குவதுமாய் அவர்கள் உதவுவார்கள்.

அவர்களுடைய வீட்டின் கதவுக்கு அருகே கால்மிதி போடும் இடத்தில் ஒரு பாட்டி பரிதாபமாக அமர்திருப்பார். வயது எப்படியும் 75ஐ தாண்டும். கழுத்தில் பெரிய கட்டி.  அவர் பேசி நான் பார்த்ததில்லை. முகத்தில் ஒருவித இறுக்கத்தோடு இருப்பார்.  எவ்வளவு வெயில் அடித்தாலும் அந்த வெட்கையில் அதே இடத்தில் அமர்ந்திருப்பார்.  வீட்டிற்குள் போக அனுமதியில்லை.

பழகுகிற பக்கத்து வீட்டுக்காரர்கள் உரிமையோடு பெத்த அம்மாவை இப்படி பாடாய்படுத்தாதீர்கள்! என திட்டுவதை கவனித்திருக்கிறேன்.  அந்த வீட்டுக்காரரோஅதையெல்லாம் சட்டையே செய்வதில்லை.  திடீரென அந்த பாட்டி சில மாதங்கள் காணாமல் போய்விடுவார்.  கேட்டால், அண்ணன் வீட்டில் இருக்கிறார் என்பார்கள்.  அண்ணன் ஆறுமாதம்.  தம்பி ஆறுமாதம் கணக்கு போல!

எங்கள் வீட்டில் அப்பாவின் தாயார் 95 வயதுவரை இருந்தார்.  அவருடைய நடுத்தர வயதில் காசு இருந்த பவுசில் ஒரு மோசமான மாமியாராக அம்மாவை நிறைய தொல்லை செய்திருக்கிறார். தன் பெண் பிள்ளைகளுக்கு நிறைய செய்முறைகள், பண உதவி செய்திருக்கிறார்.  ஆனால், அப்பாவிற்கு பெரிதாய் செய்யவில்லை.  அதற்கு பிறகு பெண் பிள்ளைகள் யாரும் வசதியாய் இல்லை. அதனால், வயதான பிறகு மகன் வீட்டில் இருக்க வேண்டிய நெருக்கடி நிலை. கடந்த முப்பது ஆண்டுகளாக எங்கள் வீட்டில் தான் இருந்தார். அம்மா மாமியாரை பாதுகாத்தாலும், இளவயதில் அனுபவித்த தொல்லைகளால் தன் மாமியாரை திட்டிக்கொண்டே இருப்பார். அப்பொழுதெல்லாம் அம்மாவிடம் பழசையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு இப்படி நடக்காதீர்கள் என கடுமையாக சண்டையிடுவேன். அம்மா அமைதியாகிவிடுவார். அதற்கு பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார்.

நம் வீடுகளில் வயதாகிவிட்டால் அவர்களுடைய இருப்பு நமக்கு பயன்படுவதில்லை. தொல்லையாகிவிடுகிறார்கள். பெரும்பாலும் வசதி இருந்தால் தான் மதிக்கிறார்கள். வயதானவர்களுக்கு என்று சமூக பாதுகாப்பு என்று எதுவும் இல்லை. பென்சன் இல்லை. எல்லாம் காசு என்ற இந்த சமுதாயத்தில் உறவுகள் சிக்கலாகிவிடுகின்றன. வயதான பிறகு சுயமரியாதை இல்லாமல் வாழ்வது என்பது பெரிய உளரீதியான சிக்கல் தான்.

இரண்டு நாள்கள் ஊருக்கு போய்விட்டு திரும்பி வந்து சாவி கேட்கும் பொழுது, அந்த பாட்டி இறந்துபோன செய்தியை அவர் மகன் சொன்னார்.  ஒரு வாரம் முடியாமல் இருந்தாராம்.  கடைசி இரண்டு நாள் சாப்பாடு எதுவும் சாப்பிடவில்லையாம். பிள்ளைகள், பேரன்,பேத்திகள் எல்லோரும்  வந்து பார்த்தார்கள்.  இறந்த இறுதிநாளில் பால் தருகிறோம் என எவ்வளவு வறுபுறுத்தினாலும், அந்த பாட்டி குடிக்கவேயில்லையாம். மறுத்துவிட்டார்களாம்.  இறந்துவிடலாம் என முடிவு செய்துவிட்டார் போல!

நீங்கள் எத்தனை பிள்ளைகள் என்றேன்? மொத்தம் 6 பிள்ளைகள். பசங்க மூவர். பெண்கள் மூவர் என்றார்.   இத்தனைப் பிள்ளைகளை பெற்றுமா, கால்மிதி போடும் இடத்தில் உட்கார வைத்திருக்கிறார்கள் என நினைத்த பொழுது, ஓங்கி மூக்கில் குத்தலாம் போல இருந்தது. 

பாட்டிக்கு எனது அஞ்சலிகள்! 

December 4, 2013

மருத்துவர் கோவன்!

நேற்று பாடியில் இருக்கும் ஹோமியோபதி மருத்துவர் சத்தியநாராயணனை பார்க்க போயிருந்தேன். தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வரும் அப்ரோச்‍-சின் ஆண்டு விழாவிற்கு அழைப்புவிடுத்தார்.

அதில் ஒரு நிகழ்ச்சியாக, மக்களுக்கு இல்வசமாக ஹோமியோபதி மருத்துவம் பார்த்துவரும் மக்கள் மருத்துவர்களை கண்டறிந்து கெளரவிக்கிறோம். இந்த ஆண்டு ஒரு விவசாயியாக இருக்கும் ஒருவர் களத்துமேட்டிலேயே தன்னைத் தேடிவரும் விவசாய மக்களுக்கு இலவசமாக ஹோமியோபதி மருத்துவம் பார்த்துவருகிறார். அவரை அழைத்து வந்து கெளரவிக்கிறோம் என்றார்.

அடுத்த ஆண்டு திருச்சியில் 9 ஆண்டுகளாக உழைக்கும் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வரும் மருத்துவர் கோவனை கெளரவிக்க இருக்கிறோம் என்றார். அவரிடம் மருத்துவம் பார்த்த மக்களில் சிலர் எங்களிடம் தெரிவித்தனர் என்றார்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக்கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியை பார்த்திருக்கிறீர்களா என்றேன். நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை என்றார். அந்த குழுவின் மையப்பாடகர் தான் தோழர் கோவன் என்றேன். ஆச்சர்யப்பட்டார்.

சில மைய வேலைகளின் பொழுது கோவன் தோழரிடம் மருந்து வாங்கி குணமானவர்களில் நானும் ஒருவன்!

நாம் அறிந்த தோழரை வேறொரு ஆளுமையாக நமக்கே அறிமுகப்படுத்துவதில் சந்தோசம் தான்!

July 15, 2013

சாப்பாடு இல்லை! வரவேண்டிய கோபம் சுத்தமாக வரவில்லை!

நண்பணின் நண்பன் திருமணம். இருவரும் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள். மாப்பிளை களையாக, கருப்பு நிறத்தில் இருந்தார். மணப்பெண்ணோ தேவயானி கலரில் இருந்தார். (நடிகையை சொல்கிறேன் என கோவித்துக்கொள்ளக்கூடாது. உங்களுக்கு எனக்கும் தெரிந்தவரை தானே சொல்லமுடியும்) மணமக்கள் மேடையில் உற்சாகமாய் இருந்தார்கள். கைகுலுக்கி, வாழ்த்துக்களைப் பெற‌, புகைப்படம் எடுக்க என பயங்கர பிசியாய் இருந்தார்கள். இறுதியில் புகைப்படம் எடுக்க மேடையேறிய மணமக்களின் பெற்றோர் முகத்தில் அத்தனை உற்சாகமில்லை. உறவினர்கள் கூட்டம் அலைமோதியது.

மக்கள் கூட்டத்தை பார்த்து, சுதாரித்து, பந்திக்கு முந்திவிடலாம் என போனால், மக்கள் முந்தவே விடவில்லை. நமக்கு அவ்வளவு திறமை பத்தாது! இறுதியில் இடம் கிடைத்து, கொஞ்சூண்டு சாம்பார் சோறும், ரசம் சோறும் தான் கிடைத்தது. "400 பேருக்கு ஆர்டர் கொடுத்து, 500 பேர் வரை நன்றாக சாப்பிட்டார்கள். அதுக்கு மேலேயும் 100 பேர் வந்தால், நாங்கள் எப்படித்தான் சமாளிப்பது?" என அலுத்துக்கொண்டார் சப்ளை செய்பவர்.

வழக்கமாய் சாப்பாடு இல்லையெனில் வரும் கோபம், நேற்று வரவில்லை. காரணம் இது ஒரு காதல் திருமணம்.

May 14, 2013

ராஜூ என்றழைக்கப்பட்டவர்

றேழு மாதங்களுக்கு முன் அண்ணன் வீட்டில், மாத்திரை சாப்பிடுவது சம்பந்தமாக அண்ணன் கூறிய கடுமையான வார்த்தைக்கு கண்களில் நீர் கோர்க்க அப்பா கூறிய வார்த்தைகளை இங்கே எழுத விரும்பவில்லை. 'எப்படி வாழ்ந்தவன் நான்' என்று அவர் நினைத்திருக்கக் கூடும். அதனால் தான் வேளாவேளைக்குச் சாப்பாடும் இரவில் இன்சுலினும் மருந்து மாத்திரைகளும் கிடைத்தாலும் அவரால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. அவருக்குத் தேவைப்பட்டது கொஞ்சம் மரியாதையான சுதந்திரம். சட்டென்று ஒருநாள் ஆட்டோ ஏறி அவனியாபுரம் சென்று விட்டார். அங்கே சற்று வசதிக் குறைவிருந்தாலும் நிம்மதியாக இருந்திருப்பார். ஏனென்றால் அவனியாபுரம் வீட்டில் தம்பி சொல்வதை அவர் சட்டை செய்பவரல்ல.

அவர் அவனியபுரத்திலிருந்த நாட்களில் நான் அவரைப் பார்க்கப் போகவேயில்லை. ஒரு வசதியும் இல்லாத இடத்திலிருந்து கொண்டு சங்கடப்படுத்துகிறார் என்ற கோபம். நான் என்ன நினைத்தால் என்ன, அவர் மூர்த்தியின் மடியில் உயிர் பிரியும் வரையில் அவர் நினைத்ததையே செய்தார். பணம், கவனிப்பு, வசதி போன்றவற்றினால் கட்டுபடுத்தப் படாது உயிர் பிரியும் வரையிலும் தான் நினைப்பதைச் செய்யும் சுதந்திரமே ஒருவருக்கு தேவை போல.

அவர் அவனியாபுரம் செல்வதற்கு முந்தைய மாதங்களில், இரவுகளில் அவருக்குப் பணிவிடை செய்தது எனது குற்ற உணர்ச்சியை சிறிது குறைக்கிறது. இரவு ஆறேழு தடவை சிறுநீர் கழிப்பார். 'யப்பா' என்றவுடன் எழுந்து கொண்டுபோய் கழிவறையில் விடவேண்டும். இல்லையென்றால் படுக்கையில் போய்விடுவார். மீறிப் போய் விடும் தருணங்களில் காலை எழுந்ததும் பார்த்து  மிகவும் வெட்கமாய்ப் போய்விடும். அசிங்கமாகவும் உணர்ந்தார். விஷயம் கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது என்ற உணர்வே முதுமையின் துன்பம். வெட்கமும் இறுக்கமும் கொண்டவர்க்கு சாவே விடுதலை.

ஆனால் அப்பா அதை மருந்துகளின் துணை கொண்டு வெல்ல நினைத்தார். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவர் ஏதேனும் ஒரு மாத்திரையை தினந்தோறும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எனது சிறு வயதில் LIV 52, Digene, Gelusil போன்றவையோடு பிரச்சினைக்குத் தக்க வேறு மருந்துகளும் தொடர்ந்து எடுத்து வந்தார். டாக்டர் சொன்னதை ஒழுங்கு பிறழாது செய்தார். கடைசி நாட்களில், சிறுநீரகம் பழுதாகிவிட்டது என்றும் மருந்துகளால் இனி பலனில்லை என்றும் டாக்டர் சொல்ல, இவர் டாக்டரையே மாற்றிவிடலாம் என்றார். அதே பிடிவாதம் தான் நான் 3 வயதில் போலியோ தாக்கி நடக்க முடியாமல் போனபோது அவரைப் பல  இடங்களுக்கும் என்னைச் சுமக்க வைத்திருக்கிறது. டாக்டர்கள் கைவிரித்த போதும் சோராமல் பலனே அளிக்காத பலவிதமான எண்ணைகளையும் எனது மெலிந்த கால்களில் இரவு தூங்காமல் தேய்த்து விட்டிருக்கிறார்.

மாத்திரைகள் பொய்க்காது என்ற தீவிர நம்பிக்கை அவருக்கு கடைசிவரை இருந்தது. அல்லது நம்பிக்கை கொள்ள ஏதேனும் அவருக்குத் தேவைப் பட்டிருக்கலாம். மருந்துகளால் பலனில்லை என்றால் உபாதைகளை என்ன செய்வது என்ற பயங்கரம் அவரைச் சூழ்ந்திருக்கும். அலோபதியினால் அதைக் கடக்க முயன்றார். சிறிய மாத்திரை டப்பா பெரியதாகி அவர் இறக்கும் போது அது மாத்திரைப் பட்டைகளால் நிரம்பிக் கிடந்தது.

அப்பாவுக்கு இரு மனைவிகள். பெரியம்மாவுக்கு குழந்தை இல்லாததால், பெரியம்மாவின் தங்கையை மனம் செய்தார். அக்காலகட்டத்தில் பணம் கொழித்திருக்கிறது. மாமனாருடைய நிலங்களை மீட்டிருக்கிறார். புதிதாக நிலங்கள் வாங்கியிருக்கிறார். சகலைகளுக்கு உதவியிருக்கிறார். அப்போது அவருடைய பரோபகாரம் வயல்சேரியிலும் அவனியாபுரத்திலும் பிரசித்தம். பலருக்கும் படிக்க உதவியிருக்கிறார். அம்மாவின் சகோதரி பிள்ளைகளுக்கு மணம் செய்வித்திருக்கிறார். இதில் அம்மாவின் முனைப்பும் அதிகம். அப்போதெல்லாம் வீட்டில் உலை கொதித்தபடியே இருக்கும். சோற்றுச் சட்டி கழுவிக் கவிழ்த்தப் பட்டதேயில்லை. வெவ்வேரளவான பானைகளில் சுடுசோறோ பழையதோ இல்லாமல் போகாது.

அப்பா செல்வத்தின் வனப்பையும் வறுமையின் கோரத்தையும் எங்களுக்குக் காட்டினார். மூத்த அக்காவின் பூப்புனித நீராட்டு விழா ஒரு கல்யாணத்தைப் போல பெரும் செலவில் நடத்தப் பட்டது. கடைசித் தம்பியின் பிறந்த நாளன்று, 31 வருடங்களுக்கு முன், தொழில் சகாக்களின் பரிசுகளாக அவனுக்கு ரெடிமேட் ஆடைகள் குவிந்தது நினைவில் உள்ளது. இன்னொருபுறம் 90களில் அன்றாட உணவுக்கே பெரும் சிரமம். நான் பத்தாவது படித்த காலத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் உணவு இருக்கும் என்பது நிச்சயமில்லை. அப்பா இரவு வீட்டிற்கு வந்த பிறகே சாப்பாடு. ஆனாலும் எக்காலத்திலும் எந்தச் சூழலிலும் மனதை விட்டவரல்ல. தனக்கு முன்னைப் போல பணமீட்டித் தராத தொழிலையே தினந்தோறும் ஒரு தவம் போலச் செய்தார். பட்டதாரி மூத்த பிள்ளைகளின் பொறுப்பின்மையையும் சகித்தவாறே அதைச் செய்தார். ஒருபோதும் மூத்த பிள்ளைகளை வேலைக்குச் செல்லக் கடிந்ததில்லை. என்னால் முடிந்த அளவு நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற தோரணையிலேயே இருந்தார். அந்தக் காலகட்டத்தில் செல்வம் அக்காவே ஒரு தாயைப் போல எங்களைப் பராமரித்தார். அவர் மணமாகிச் சென்ற 1998 வரையிலும் நான் எனது துணிகளைக் கூட துவைத்ததில்லை.இறப்பதற்கு கொஞ்ச காலம் முன்பு வரையிலும் கூட சம்பாதிக்க முடியும் என்று நம்பினார். ஆனால் 90கள் 70 கள் அல்ல என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஆட்ட விதிகள் வேகமாக மாறிக்கொண்டிருந்ததை அவர் உணர மறுத்தார். அல்லது தன் வழியே சிறந்தது என்று நம்பியிருக்கலாம்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக அம்மாவின் பிரிவு அவரைப் பாதித்தது. அதை ஒருபோதும் அவர் வெளிக்காட்டிக் கொண்டதில்லை என்றபோதும். 1989 என்று நினைக்கிறேன். அம்மா எங்களைத் தனியே விட்டுச் சென்றார். மனைவியற்று 6 பிள்ளைகளுடன், வயது வந்த இரண்டு பெண்களோடு, அப்பா தனியே நின்றார். அதிலிருந்து அம்மா இறந்த 2007 வரைக்கும் பிரிவு பற்றிய உளைச்சல் எதுமற்றவராகவே காட்டிகொண்டார். ஒருவேளை அம்மாவின் இறப்பு அவருக்கு ஆசுவாசத்தைக் கொடுத்திருக்கக் கூடும். அதன் பிறகே அவனியாபுரத்தில் தனது சொந்த வீட்டில் கால் வைத்தார்.

தனது சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து தனியே வாழ்ந்து ஒரே ஒரு தங்கையை மணம் செய்வித்திருக்கிறார். இளம் வயதில் பேபி என்ற பெண்ணைக் காதல் மணம் செய்திருக்கிறார். பதிவுத் திருமணமா என்று தெரியவில்லை. அந்த உறவு சிறிது காலமே நீடித்தது. பிரிவின் காரணம் தெரியவில்லை. வாழ்க்கை முழுவதுமே பெண்களுடனான அவரது உறவு நீடிக்காத வகையில் அவர் சபிக்கப் பட்டிருந்தார். பிரிவுகளை உள்ளூர ரசித்தாரா என்று தெரியவில்லை.

புத்தகம் படிக்கும் பழக்கமோ சினிமா, இசை போன்றவற்றைச் சிலாகித்துப் பார்க்கும் வழக்கமோ இருந்ததில்லை. நீண்ட காலத் தோழர் என்று யாருமில்லை. தனியான பொழுதுகளில் என்ன செய்திருப்பார் என்று யோசிக்கிறேன். இளம் வயதில் அவர் நாடகங்களில் நடித்திருக்கிறார் என்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.

யாருடைய வழிகாட்டுதலோ குறைந்தபட்சக் கட்டுப்பாடுகளோ ஏதுமின்றியே அவர் வளர்ந்தார். எங்களையும் அப்படியே வளர்த்தார். பாவனை மிகுந்த தாயின் பாசமோ தந்தையின் கண்காணிப்போ இல்லாமலே நாங்கள் வளர்ந்தோம். சக நண்பர்களின் வீட்டில் அவர்களது பெற்றோர் அவர்கள் மீது காட்டும் கரிசனமும் சுமத்தும் கட்டுப்பாடுகளும் எனக்கு மிக அந்நியமாகத் தோன்றும். நானோ ஒரு காட்டுச் செடியைப் போல வளர்ந்தேன்.
அவர் வளர்ந்த விதம் அவரை எப்போதும் தனியனாக உணரச் செய்தது போலும். நானும் சில சமயம் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையிலும் தனியனாகி விடுகிறேன். சட்டென்று தொடர்பறுந்தது போல.

சில வருடங்களுக்கு முன் அப்பாவின் நில விவகாரம் தொடர்பாக வயல்சேரி சென்றபோது அப்பாவின் இன்னொரு பரிமாணத்தை அங்கிருந்த பெரியவர்கள் சொல்லக் கேட்டேன். அவரது இளம் வயது அந்தரங்க வாழ்க்கையின் சில கீற்றுகள் தெறித்துப் பறந்தன. கிராமத்துச் சனங்கள் சம்பவங்களை மென்று மென்று சீரணிக்கத் தோதாக்கி விடுகிறார்கள்.

கிறிஸ்துமஸ் தினம் அதிகாலை 3.30 மணிக்கு மூர்த்தி மொபைலில் கூப்பிட்டபோது அப்பா இறந்து விட்டாரென்று மனம் சொல்லியது. அனால் அவருக்கு சர்க்கரை குறைந்து உடல் மயங்கியதே பிரச்சினை. பிறகு சர்க்கரை தண்ணீர் கொடுக்கச் சொல்லி எல்லாம் சரியாகி விட்டாலும் மனம் அமைதியற்றுக் கிடந்தது. அவரது இறப்பை மனம் வேண்டியதா? பிறகு பத்தரை மணியளவில் மீண்டும் பிரச்சினையாகி மூர்த்தி மருத்துவமனை செல்ல ஆட்டோ கூப்பிட முனைய அவர் வேண்டாம் என்றிருக்கிறார். 'இது வேற மாதிரி இருக்கு' என்றவர் கழிப்பறை கூட்டிச் சென்று வந்த பிறகு இறந்துபோனார்.

சென்னையிலிருந்து விரட்டிக்கொண்டு இரவு 7 மணிபோல அவனியாபுரம் சேர்ந்தபோது, தான் வாங்கிக் கட்டிய வீட்டின் முன்னறையில் குளிர் பெட்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். பெற்றோரின் அண்மையின்றி வளர்ந்து சம்பாதித்து, ஒரு தங்கையை மனம் செய்வித்து, செல்வமீட்டி, காதல் புரிந்து, பிள்ளைகள் பெற்று, மனைவியைப் பிரிந்து, ஒரு கொந்தளிப்பான வாழ்கையைத் தனியே எதிர்கொண்ட மனிதனின் உடல். எந்த உணர்வும் அற்றதாக நான் அக்கணத்தை உணர்கிறேன். அமைதி கொள்ளுங்கள் அப்பா, இந்த அபத்த வெளியில் நீங்கள் செய்யக்கூடியது இனி ஏதுமில்லை.  

- வரதராஜன்,

விடயங்கள் தளத்திலிருந்து...