> குருத்து: September 2011

September 29, 2011

வாச்சாத்தி தீர்ப்பு - போராட்டமின்றி சுயமரியாதை வாழ்வு இல்லை!


ஒரு கிராமத்திற்குள் புகுந்து, குழந்தைகள், வயதானவர்கள் என பாராமல், அரசின் அடியாட்படைகளான காவல்துறை, வனத்துறை மற்றும் அதிகார வர்க்கங்களான வருவாய்த்துறை அதிகாரிகளும், கிராம நிர்வாக அலுவலர்களும் கொடூரமாக தாக்கி, கிராமத்தையே சூறையாடி இருக்கிறார்கள். பல பெண்களை பாலியல் வன்முறை செய்திருக்கிறார்கள். எப்பேர்பட்ட அநியாயம் இது!

அந்த பழங்குடி மக்களின் விடாப்பிடியான, நெஞ்சுறுதி மிக்க போராட்டம் 19 வருடங்களுக்கு பிறகு, இன்று அனைவரும் குற்றவாளிகள் என தண்டனை வழங்கி தந்திருக்கிறது.

ஒரு கிராமத்திற்கு நேர்ந்த அநியாயத்திற்கே தீர்ப்பு வழங்க 19 வருடங்கள் போராட வேண்டுமென்றால், ஒர் தனிநபருக்கு இந்த கதி ஏற்பட்டால், தண்டனை வழங்க எவ்வளவு காலம் இழுத்தடிப்பார்கள். அதற்கு நல்லகாமனின் போராட்ட கதை வரலாற்று உதாரணம். (கீழே சுட்டி உள்ளது)

போராட்டம் இல்லையெனில், சுயமரியாதையான வாழ்வு இல்லை என மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்துகிறார்கள்!

தொடர்புடைய சுட்டிகள் :

வாச்சாத்தி தீர்ப்பு விவரம் - தினமணி - 30/09/2011

வாச்சாத்தி சம்பவம்

தோல்வி நிலையென நினைத்தால்! - புதிய கலாச்சாரம்

September 28, 2011

தோழர் பகத்சிங் - பிறந்தநாள்


பகத்சிங் பிறந்த நாள் : 28/09/1907

தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல்நாள், சிறையின் இன்னொரு வார்டில் இருந்த புரட்சியாளர்களிடமிருந்து, அவருக்குக் குறிப்பு ஒன்று வந்து சேர்ந்தது. கடைசித் தருணத்தில் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யும் யோசனை அதில் இருந்தது. இந்தக் குறிப்புக்கு பகத்சிங் பதில் அனுப்பினார். தமது தோழர்களுக்கு எழுதிய கடைசிக் கடிதம் பின்வருமாறு.

தோழர்களே!

உயிருடன் இருக்கும் ஆசை என்னுள்ளிலும் இருப்பது இயல்பானதே. நான் அதனை மூடிமறைக்க விரும்பவில்லை. ஆனால், என் விசயத்தில், உயிருடன் இருப்பது என்பது நிபந்தனைக்கு உட்பட்டது. நான் ஒரு கைதியாகவோ அல்லது கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டோ, இருப்பதை விரும்பவில்லை.

என்னுடைய பெயர். இந்தியப் புரட்சிக் கட்சி (இந்துஸ்தானி இன்கலாப் பார்ட்டி)யின் ஒரு சின்னமாகிவிட்டது. புரட்சிக்கட்சியின் இலட்சியங்களும் தியாகங்களும் என்னை மிகவும் உயர்த்தியுள்ளன. நான் உயிருடன் இருந்தால் கூட ஒருக்கால் இந்த உயரத்தை எட்டியிருக்க மாட்டேன்.

இன்று என்னுடைய பலவீனங்கள் மக்களின் முன்னிலையில் இல்லை. தூக்கிலேற்றப் படுவதினின்றும் ஒருக்கால் நான் தப்பித்தால், அந்தப் பலவீனங்கள் வெளிப்படலாம். புரட்சிச் சின்னம் ஒளியிழக்கலாம், ஏன்? அது அறவே அழிந்தும் போகலாம். ஆனால் நான் துணிவுடனும், புன்னகையுடனும் தூக்குமேடை நோக்கிச் சென்றால் இந்தியத் தாய்மார்கள் தம் புதல்வர்கள் பகத்சிங் போல் விளங்கிட வேண்டும் என்று விரும்புவார்கள்; நாட்டின் விடுதலைக்காகத் தியாகம் செய்வோர்களின் எண்ணிக்கை, ஏகாதிபத்தியத்தின் அரக்கத்தனமான சக்தியினாலும் கூட புரட்சியைத் தடுத்து நிறுத்தச்செய்ய முடியாத அளவிற்குப் பெருகிவிடும்.

ஆனாலும் ஒரு விசயம் இன்றும் எனக்கு வேதனை தந்து கொண்டிருக்கிறது. இந்த நாட்டுக்காகவும், மனித குலத்துக்காகவும் என் இதயத்தில் சில ஆசைகளும் அபிலாஷைகளும் இருந்தன; ஆனால் அவற்றில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. நான் உயிருடன் இருந்திருந்தால், இந்த நோக்கங்களை எட்டும் வாய்ப்பு கிடத்திருக்கும்; என் ஆசைகளை நிறைவு செய்யவும் முடிந்திருக்கும்.

இதைத் தவிர, தூக்குமேடையிலிருந்து தப்புவதற்கான ஆசை என் இதயத்தில் இருந்ததில்லை. ஆகவே என்னை விடவும் பாக்கியசாலி யார்தான் இருக்க முடியும்? இப்பொழுதெல்லாம் நான் என்னைப் பற்றி பெருமையடைகிறேன். இறுதித் தேர்வுக்காக நான் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்; அந்தத் தேர்வு விரைவிலேயே நெருங்கி வந்திட வேண்டுமென்று விரும்புகிறேன்.

உங்கள் தோழன்,
பகத்சிங்.

September 25, 2011

வாச்சாத்தி வழக்கு! - இன்று தீர்ப்பு!

முன்குறிப்பு : தருமபுரி வாச்சாத்தி வழக்கு இன்று தீர்ப்பு வரும் நாள் என அறிவித்திருக்கிறார்கள். 19 வருடங்கள் முடிவடைந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நடந்த அத்துமீறலை பதிவு செய்யவே பல போராட்டங்கள் நடத்தி, தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடிவருகிறார்கள். 269 பேர் மீது வழக்கு தொடர்ந்து, 53 பேர் இயற்கை மரணமே அடைந்துவிட்டார்கள். மீதி பேரும் இறப்பதற்குள் தண்டனை வழங்கினால் நீதிமன்றத்தின் மானம் கொஞ்சமாவது தப்பிக்கும்!

*****

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுக்​காவில் இருக்கும் மலை அடிவாரக் கிராமம் வாச்சாத்தி. இந்தக் கிராமம் தொடர்பான வழக்கு ஒன்று, தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது... நடக்கிறது... நடந்து​கொண்டே இருக்கிறது!

முதலில், அந்த பயங்கர வழக்கைப் பற்றிய ஃப்ளாஷ் பேக்...
வாச்சாத்தி கிராமத்தில் சுமார் 300 வீடுகள். கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதியில், மனித உரிமையை மல்லாக்கப் புரட்டிப்போட்ட மிகப் பெரிய அத்துமீறல் அங்கு நடந்தது. இந்தக் கிராமத்தை ஒட்டியிருக்கும் சித்தேரி மலைகளில் அப்போது சந்தன மரங்கள் ஏராளம். இவற்றை அரூர் சரக வனத் துறை அதிகாரிகள் சிலரின் ஆசியோடு, மரக் கடத்தல் முதலைகள் சிலர் வெட்டிக் கடத்திக்கொண்டு இருந்தனர். அதிகக் கூலி கிடைக்கிறதே என்று கிராமவாசிகளில் சிலரும் மரம் வெட்டும் பணிக்குச் சென்றனர். சில தொல்லைகள் வரத் தொடங்கவே, மிரண்டுபோன மக்கள் மரம் அறுக்கும் வேலைக்குச் செல்ல மறுத்தனர். மேலும், கடத்தல் நடமாட்டம் குறித்த தகவல் அம்பலப்பட... அதிகாரிகள் பொங்கி எழுந்தனர். 'சந்தனம் உட்பட விலை மதிப்பு மிக்க வனச் செல்வங்களை, வாச்சாத்தி மக்கள் பெருமளவு கொள்ளை அடிக்கிறார்கள்...’ என்று பொய்யான தோற்றத்தை உருவாக்கி, ரெய்டு என்ற பெயரில் வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை ஆகியவை கிராமத்துக்குள் அன்றைய தினம் புகுந்தன.

அப்போது அதிகாரிகள் சிலர், ஊரில் இருந்த பருவம் அடைந்த, பருவம் அடையாத சிறுமிகள் 18 பேரை ஏரிக்குக் கடத்திச் சென்று... வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு மாபெரும் பாலியல் கொடூரத்தை அரங்கேற்றினர். அதோடு, வாச்சாத்தி மக்கள் 133 பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். இந்த விஷயம், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மூலம் வெளிச்சத்துக்கு வர... தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது.

பல்வேறு சட்டப் போராட்டங்​களுக்குப் பிறகே வழக்குப் பதிவு செய்யப்​பட்டு, பிறகு சி.பி.ஐ. விசார​ணைக்கும் உத்தரவு இடப்பட்டது. 269 குற்றவாளிகளைப் பட்டியல் இட்டு, இந்த வழக்கை தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. நடத்தி வருகிறது. 19 ஆண்டுகளாக இழுபறியாக இருந்த இந்த வழக்கின் விசாரணை, ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்ட நிலை​யில், தீர்ப்புக்கான நாட்கள் எண்ணப்​படுகின்றன.

வன்கொடுமை, அத்தியாவசிய உணவு ஆதாரங்களை அழித்தல், வன்புணர்ச்சி ஆகிய குற்றங்கள் நடந்ததற்கான வலுவான ஆதாரங்களோடு வழக்கை சி.பி.ஐ. நடத்துகிறது.

இந்த நிலையில், குற்றம் சாட்டப்​பட்டவர்​களில் ஏழு அரசு அதிகாரிகள், 'சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் பணியாற்றிய தர்மபுரி கலெக்டர் தசரதன், எஸ்.பி-யான ராமானுஜம், ஆர்.டி.ஓ-வான தெய்வ சிகாமணி ஆகிய மூவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும். மீண்டும் ஒரு முறை அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையோடு ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அது சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.

உடனே அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்​துக்குப் போனார்கள். கடந்த வாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி பாஷா, 'சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்த்த ஒரே காரணத்துக்காக, குறிப்பிட்ட அந்த அதிகாரிகளை வழக்கில் சேர்க்கக் கோருவது வினோதம். வழக்கை மேலும் தாமதப்படுத்த இதுபோன்ற குறுக்கு வழிகளைக் கையாள்வது கண்டிப்புக்கு உரியது. இந்தக் குற்றத்துக்காக மனுச் செய்த ஏழு பேரும் சென்னையில் உள்ள குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு, தலா 10,000 அபராதமாகக் கட்டவும்’ என்று 'ஷாக்’ கொடுத்ததோடு வழக்கு விசாரணையை துரிதமாக்கும்படி தர்மபுரி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

கிராமத்தைச் சேர்ந்த பரந்தாயியிடம் விசாரித்தபோது, கதறிக் கண்ணீர்விட்டு அழுதார். ''என் மகள் உட்பட 18 கன்னிப் பொண்ணுங்களோட வாழ்க்கையை நாசமாக்கினாங்க. ஊர் சனங்களையும் சொல்லவே வாய் கூசுற அளவுக்கு அசிங்கப்படுத்தி உதைச்சாங்க. நீதிமன்றம் மேல் நம்பிக்கைவெச்சு 19 வருஷமா உறுதியாப் போராடுறோம். இப்போ, மேலும் வாய்தாவை அதிகரிக்க இப்படி ஒரு புது தந்திரம் பண்ணப் பார்த்தாங்க. அதை அந்த நீதிபதியாலயே பொறுக்க முடியலை. இதே மாதிரி அந்த அக்கிரம அதிகாரிகளுக்கு விரைவிலேயே தண்டனை கொடுத்து எங்க மனக் காயத்துக்கு நீதிமன்றம் மருந்து தடவணும்!'' என்றார் கண்ணீரைத் துடைத்தபடி.

பாதிக்கப்பட்ட முருகன், ''எங்களை ஒரு ஜீவராசியாவே அன்னிக்கு அவங்க நினைக்கலை. பொண்ணுங்களை சூறை​யாடினாங்க... வீடுகளை அடிச்சு நொறுக்கினாங்க. கிணத்துல டீசல், ஆயிலை ஊத்துனாங்க. எங்க ஆடுகளையும் அடிச்சுத் தின்னாங்க. அதுகளோட குடலையும் எலும்புகளையும் கிணத்துல கொட்டினாங்க. அப்பப்பா... இப்போ நினைச்சாலும் உடம்பெல்லாம் நடுங்குது சார்!'' என்றார்.

மனித உரிமைக்கான 'குடிமக்கள் இயக்க’த்தின் சேலம் மண்டல பொறுப்​பாளரான செந்தில் ராஜா, ''எத்தனையோ குழுக்களின் விசாரணைகளில், வாச்சாத்​தியில் நடந்த மாபெரும் மனித உரிமை மீறல்களும் கொடுமைகளும் நிரூபணம் ஆகி இருக்கு. கோயில்களைவிட உயர்வானதா மக்கள் கருதுவது நீதிமன்றங்களைத்தான். அங்கேயும் இப்படித் தாமதம் என்றால், மக்களிடம் நம்பிக்கை குறைந்துவிடும். அதனால், விரைவாகத் தீர்ப்பையும் நிவாரணத்தையும் நீதித் துறை வழங்க வேண்டும்!'' என்றார்.

நன்றி : முத்துக்குமார்

September 15, 2011

நாடோ வல்லரசு! மக்கள் பட்டினியில் வாடுகிறார்கள்!

//"அமெரிக்காவில் என்னைப் போன்ற கோடீசுவரர்கள் யாருமே அதிகம் வரி செலுத்துவதில்லை. என் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் 33 சதவீதம் முதல் 41 சதவீதம் வரை வரி செலுத்தும் பொழுது, பல கோடிகளைச் சம்பாதிக்கும் எனக்கு 17 சதவீத வரிதான்" - என அமெரிக்காவின் 'ஜனநாயகத்தை'ப் புட்டு வைக்கிறார், மிகப்பெரிய பங்குச் சந்தை சூதாட்ட வியாபாரியான வாரன் பப்பெட்.

"அமெரிக்க கோடீசுவரர்கள் மீது வரி விதியுங்கள்; இல்லையென்றால், இந்த ஏற்றதாழ்வு அமெரிக்காவில் கலகங்களை உருவாக்கும்" எனக் கோடீசுவரர் பப்பெட் எச்சரிக்கும் பொழுது, ஒபாமாவோ, இழப்பதற்கு ஒன்றுமில்லாத அமெரிக்க மக்களிடம் தியாகம் செய்ய முன்வருமாறு உபதேசிப்பதைக் குரூரமான நகைச்சுவை என்றுதான் கூறமுடியும்.//

- அமெரிக்கக் கடன் நெருக்கடி : மைனரின் சாயம் வெளுத்தது! புதிய ஜனநாயகம் கட்டுரையிலிருந்து...
******

அமெரிக்காவில் வறுமை அதிகரிப்பு

வாஷிங்டன், செப்.14: அமெரிக்காவில் ஆறில் ஒருவர் வறுமையில் வாழ்வதாக சமீபத்தில் வெளியாகி உள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, சாதாரண மக்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை இந்தப் புள்ளிவிவரம் உறுதி செய்கிறது.

"அமெரிக்காவில் வருவாய், வறுமை, மற்றும் சுகாதாரக் காப்பீடு 2010' என்ற தலைப்பில் அமெரிக்க சென்சஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2010-ம் ஆண்டு அமெரிக்காவில் 4.62 கோடி பேர் (15.1%) வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். இதுவே, அதற்கு முந்தைய 2009-ம் ஆண்டில் 4.36 கோடி பேர் (14.3%) வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். கடந்த 4 ஆண்டுகளில் வறுமை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதை இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது. மேலும் வறுமையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, கடந்த 52 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2010-ம் ஆண்டில் சுகாதாரக் காப்பீடு இல்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை 4.9 கோடியாக (16.3%) அதிகரித்துள்ளது. 18 வயதுக்கு குறைந்தவர்களில் 1.6 கோடி (22%) பேரும், 18-லிருந்து 65 வயதுக்குள் உள்ளவர்களில் 2.6 கோடி (13.7%) பேரும் வறுமையில் வாடுகிறார்கள் என்று அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

அமெரிக்க அரசின் வறுமை கணக்கிடும் முறை: 4 பேர் உள்ள குடும்பத்தில் வருவாய் அளவு ஆண்டுக்கு ரூ.10 லட்சமாக (22,314 டாலர்) இருந்தால் அந்தக் குடும்பம் வறுமை கோட்டில் வரும். இதுவே தனிநபரின் வருவாய் ஆண்டுக்கு ரூ.5 லட்சமாக இருந்தால் அவர் வறுமையால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

தினமணி - 15/09/2011

September 11, 2011

தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலை இரண்டு மடங்காக அதிகரிப்பு!

சென்னை, செப். 10: தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சிகரமான தகவலை பத்திரிகையாளர் பி. சாய்நாத் தெரிவித்தார்.

சினேகா அமைப்பின் வெள்ளி விழா ஆண்டு நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. உலகத் தற்கொலை தடுப்பு நாள் நிகழ்வாகவும் நடந்த அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சாய்நாத் பேசியதாவது:

தற்கொலை மரணம் என்பது உலகெங்கிலும் அதிகரித்து வருகிறது. படித்தவர்கள் அதிகம் நிறைந்த நார்வே, ஸ்காண்டிநேவியா போன்ற நாடுகளிலும் தற்கொலை சம்பவங்கள் அதிகமாக உள்ளன. எனினும், எல்லா நாடுகளிலும் விளிம்பு நிலையில் வாழும் சமுதாயத்தில்தான் தற்கொலைகள் அதிகம் நிகழ்கின்றன.

இந்தியாவைப் பொருத்தவரை கடந்த பத்தாண்டுகளில் மக்கள் தொகை 18 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தற்கொலை மரணங்களும் 15 சதவீதம் அதிகரித்துள்ளன. குறிப்பாக விவசாயிகள் தற்கொலை என்பது மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ளது.

கடந்த 1997-ம் ஆண்டிலிருந்து நம் நாட்டில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 600 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முதல் 6 ஆண்டுகளில் ஒரு ஆண்டில் விவசாயிகளின் சராசரி தற்கொலை என்பது 16 ஆயிரத்து 267 ஆக இருந்தது. அதுவே, 2004-ல் இருந்து அடுத்த 6 ஆண்டுகளில் 17 ஆயிரத்து 105 ஆக அதிகரித்து விட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாட்டிலேயே விவசாயிகளுக்கு அதிக வசதிகள் செய்து கொடுக்கப்படும் மாநிலம் என்றும், முன்னோடியான விவசாய மாநிலங்களில் ஒன்று என்றும் கூறப்படுகிறது. ஆனால், இங்கேயே 2008-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது விவசாயிகளின் தற்கொலை என்பது இரண்டு மடங்காக அதிகரித்துள்ள அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

2008-ம் ஆண்டு தமிழ்நாட்டில் சுமார் 500 ஆக இருந்த விவசாயிகளின் தற்கொலை மரணம், அடுத்த ஆண்டிலேயே இரண்டு மடங்கு அதிகரித்து 1,260 ஆக உயர்ந்ததாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் விவசாயிகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதும், விவசாயத் தொழிலில் ஈடுபட பெரும் பணக்கார நிறுவனங்கள் ஊக்கப்படுத்தப்படுவதும், விவசாயத் துறை விவசாயிகளிடமிருந்து அந்நியமாக்கப்பட்டு, முழுமையாக வர்த்தகத் துறையாக மாற்றும் முயற்சிகளே விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கக் காரணங்களாக உள்ளன.

விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் விவசாயக் கொள்கைகள் மாற்றம் பெறாத வரை, இதுபோன்ற விவசாயிகளின் தற்கொலை மரணங்களையும் தடுக்க முடியாது. குறிப்பாக வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றார் சாய்நாத்.

தினமணி - 11/09/2011

September 2, 2011

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் விடுதலைக்குப் போராடுவோம்!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு - என்ற பாவேந்தரின் பாடலுக்கேற்ப ஓரணியில் திரள்வோம்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் விடுதலைக்குப் போராடுவோம்!

முன்குறிப்பு : மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய, தமிழகமெங்கும் மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள் என பரந்துபட்ட அளவில் மக்களின் போராட்ட அலைகள் ஓங்கியடித்தன! இடைக்கால வெற்றியும் கிடைத்துள்ளன. போராட்ட களத்தில் குறிப்பிட்ட தக்க சதவிகித முழக்கங்கள் அரசியலை தள்ளிவைத்து, வெறும் மனிதாபிமான அடிப்படையில் இருந்தன. அரசியலை தள்ளி வைப்பது மக்களை மழுங்கடிக்கும் செயலாகும். இதன் விளைவு தான் முத்துக்குமார், செங்கொடியின் சாவுகள்! இந்த துண்டறிக்கை சரியான அரசியலை முன்னிறுத்துகிறது. படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்!

****

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

குமுறிக்கொண்டிருக்கிறது தமிழகம். தமிழர்கள் உணர்ச்சிப் பிழம்பாய் கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள். இராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை 21 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வைத்து வதைத்தது போதாதென்று தூக்கிலிடுவதற்கும் நாள் குறித்துவிட்டது, இந்திய அரசு.

அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்க்கெதிராய் போர்க்குற்றங்கள் புரிந்தவர் தான் முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி. ஆகவே, இராஜீவ் கொலை என்பது அடிப்படையில் ஓர் அரசியல் நடவடிக்கை. இந்திய ஆளும் வர்க்கத்தின் தெற்காசிய பிராந்திய மேலாதிக்க - அம்பானி, டாடா, பிர்லா போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் சுரண்டல், ஆதிக்க - நோக்கத்திற்கு ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை, ஒரு கருவியாக பயன்படுத்த முயன்றது இந்திய அரசு. 'இந்திய இலங்கை ஒப்பந்தம்' என்ற அரசியல் சதித்திட்டத்தை ஈழத்தமிழ் மக்கள் மீது திணித்தது. தமது தன்னுரிமையை மறுக்கும் இந்த ஒப்பந்தத்தைப் புலிகளும் ஈழத்தமிழ் மக்களும் ஏற்க மறுத்தனர். இதையே ஒரு முகாந்திரமாக கொண்டு அமைதிப்படை என்ற பெயரில் இந்திய இராணுவம் ஈழத்தின் மீது ஓர் ஆக்கிரமிப்புப் போரை நடத்தியது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும், புலிகளும் கொல்லப்பட்டனர்; பாலியல் வன்முறை உள்ளிட்ட அனைத்து வெறியாட்டங்களையும் இந்திய இராணுவம் நடத்தியது; இறுதியில் தோல்வியுற்று அவமானப்பட்டு திரும்பியது.

இந்த ஆக்கிரமிப்புப் போரின் எதிர்விளைவுதான் இராஜீவ் கொலை. எனவே அது போர்க்க்குற்றவாளிக்கெதிரானதொரு நடவடிக்கை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் புனிதப்படுத்தப்பட்ட தமது ஆக்கிரமிப்பை ஒரு அரசியல் நடவடிக்கையாகச் சித்தரித்துக்கொள்ளும் இந்திய ஆளும் வர்க்கம், இந்த பதில் நடவடிக்கையை மட்டும் அரசியல் வகைப்படாத கிரிமினல் நடவடிக்கையாகச் சித்தரிப்பதும் அதன் அடிப்படையில் தண்டிப்பதும் மோசடியாகும். இந்த அடிப்படையில் தான் மூவரின் தண்டனையை ரத்து செய்யப்படவேண்டும் என்று கோருகிறோம்.

இராஜீவ் கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல, தடா சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது; தடா சட்டமும் காலாவதியாகிவிட்டது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும், அதற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட சாட்சியங்களும் வாக்குமூலங்களும் தடா கோர்ட்டில் பெறப்பட்டவைதான். மேலும், குற்றம் சாட்டப்பட்டோருக்காக வாதாடிய வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதங்களுக்கு விடை கூறாமலேயே கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை அளித்தது உச்சநீதிமன்றம். தீர்ப்பை மீளாய்வு செய்யக்கோரும் மனுவை பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளாமல் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்தது. தாங்களே புனிதம் என்று கூறும் சட்ட நடைமுறைகளைக் கூட உச்சநீதிமன்றம் அலட்சியப்படுத்தியுள்ளது. எனவே, சட்டரீதியாகச் செல்லத்தக்கதல்ல என்ற அடிப்படையிலும் இத்தண்டனை ரத்து செய்யப்பட வேண்டுமெனக்கூறுகிறோம்.

ஈழத்தில் இந்திய அரசு நடத்திய சதிகள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மோசடித்தன்மை, 'அமைதி'ப்ப்டையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை மூடிமறைத்து, இராஜீவ்காந்தி மீது அனுதாபத்தையும், இந்திய தேசிய வெறியையும் வைத்து செய்த இப்பொய்ப் பிரச்சாரம் தோற்றுவித்த உணர்ச்சியின் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பும், மத்திய மாநில அரசுகளின் முடிவுகளும் அமைந்திருக்கின்றன.

இலங்கை இனவெறிப் பாசிச அரசின் போர்க்குற்றங்கள் சர்வதேச அரங்கில் அம்பலப்பட்டு வரும் இன்றைய சூழலில், இராஜபக்சே அரசையும் பங்காளியான இந்திய அரசையும் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்றுவதற்கும், தமிழுணர்வாளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளுவதற்கும் இம்மூவரின் கருணை மனு நிராகரிப்பு இந்திய ஆளும் வர்க்கத்துக்கு தேவைப்படுகிறது. இராஜபக்சே நடத்தியது சொந்த நாட்டு மக்கள் மீதான ஆக்கிரமிப்புப் போர். இந்தியாவின் ஈழ ஆக்கிரமிப்பு அன்றுடன் முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் முடித்துப் புதைத்து வைக்கும் வரையில் இந்திய அரசு இலங்கை இராணுவத்துக்குத் துணை நின்றது. இன்னமும் நிற்கிறது. இராஜபக்சேயின் மீதான போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படுவதற்கும் இந்தியாதான் தடையாக நிற்கிறது. எனவே, மூவரின் மரண தண்டனை என்பது முள்ளி வாய்க்கால் படுகொலையின் தொடர்ச்சியே.

50000 ஈழத் தமிழ் உயிர்களைக் காவு கொண்ட பிறகும், இந்திய அரசின் தமிழர் மீதான வெறுப்பு அடங்கவில்லை. கச்சத்தீவு, சேது சமுத்திரம், காவிரி-முல்லைப் பெரியாறு என்று தொடரும் தமிழனின் மொழி, இனம், பண்பாடு, அரசியல் அடிப்படையிலான உரிமைகளைப் பறித்து தமிழனின் அடையாளங்களை அழிக்கும் பார்ப்பன ஆதிக்கவெறியின் வெளிப்பாடே மூவரின் மீதான் மரண தண்டனை.ஈழ, இந்திய தமிழர்கள் மீதான வெறுப்பு, வக்கிரம் அடிப்படையிலான தாக்குதல் நடவடிக்கையே!

* பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது.

* இந்தியா மற்றும் எந்த நாட்டுச் சட்டத்துக்கும் இயற்கையான நீதிக்கும் எதிரானது.

* மனிதத் தன்மைக்கும் மனித நேயத்துக்கும் எதிரானது.

* அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் செயல்.

* பேரறிவாளன், முருகன், சாந்தன் உருவத்தில் தூக்குமேடையில் நின்றுக்கொண்டிருப்பது ஒரு அரசியல் நியாயம். ஒரு ஆக்கிரமிப்புப் போர்க்குற்றவாளியைக் 'கொன்றதிற்கு' தூக்குத்தண்டனையா?

மக்கள் கலை இலக்கியக் கழகம்

விவசாயிகள் விடுதலை முன்னணி

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

தொடர்புக்கு: அ. முகுந்தன்,

110, 2 வது மாடி,

மாநகராட்சி வணிக வளாகம்,

63 ஆற்காடு சாலை,

கோடம்பாக்கம்,

சென்னை 24.

பேசி: 9444834519.